30 Jul 2018

கல்லை வீசி விடாதீர்கள்!


கல்லை வீசி விடாதீர்கள்!
            சொற்களை அதிகார பலத்துடன் சொல்லும் போது அதற்கு உயிர் இருக்கிறது. கெஞ்சினால், காலில் விழுந்து கதறினால், நியாயமாகச் செய்யுங்கள் என்று வேண்டினால் சொற்கள் செத்து விடுகின்றன.
            சான்றுக்கு ஒன்று சொல்கின்றேனே,
            மயக்கம் வரும் நிலையில் மயங்கிக் கிடக்க ஒரு பொது இடத்தில் அனுமதி மறுக்கிறார்கள். இங்கே இப்படியெல்லாம் படுக்கக் கூடாது என்கிறார்கள். சொகுசாகப் படுப்பதற்காக இடம் கேட்கிறோம். மயங்கி எங்கேயாவது விழுந்து கிடக்கலாம். அப்போது யோசிக்கிறார்கள். மயக்கத்தைப் போக்கிக் கொள்ள கொஞ்ச நேரம் இடம்  என்றால் கஷ்டமாகி விடுகிறது.
            கை, கால் வலி என்று அமர்வதிலும் கஷ்டம் இருக்கிறது.
            மண்டையில் அடிபட்டு பெருங்கட்டு கட்டியிருந்த ஒரு நபர்தான் இதற்கு வழிகாட்டினார். அவர் பாட்டுக்கு வலி தாங்க முடியாமல் நொந்துப் போய் படுத்துக் கிடந்தவரை சீருடைப் பணியாளர்கள் எழுப்புகிறார்கள்.
            எழுந்தவர் என்ன என்று கேட்கிறார்.
            இங்கே படுக்கக் கூடாது என்கிறார்கள்.
            அதற்கு என்ன செய்வது என்பது போல பார்க்கிறார் அவர்.
            எழுந்து எங்கேயாவது போ என்று விரட்டுகிறார்கள்.
            முடியாது என்பது போல திரும்பப் படுகிறார்.
            கம்பால் அவரை லேசாகத் தட்டி மிரட்டுகிறார்கள்.
            மண்டை வலி தாங்க முடியாமல் செமையான மண்டைக் கொதிப்பில இருக்கேன். மரியாதையா அந்தாண்டப் போயிடுங்க. இல்லேன்னா பக்கத்துல கிடக்குற கல்லை எடுத்து அடிச்சிப்புடுவேன். அப்புறம் என்னைய மாதிரியே கட்டு கட்டிக் கொண்டு வந்து இங்க படுக்க வேண்டியிருக்கும் என்கிறார் அவர்.
            சீருடைப் பணியாளர்கள் போன இடம் தெரியவில்லை.
            அவர் நிம்மதியாகப் படுத்து உறங்குகிறார்.
            உங்களுக்கான அமைதியை ஒருவர் பறித்தால், அவர் எங்கே பயப்படுகிறாரோ அங்கே தட்ட வேண்டும் போலிருக்கிறது. உங்களுக்குப் பயமுறுத்தத் தெரியாவிட்டால் நீங்கள் நிம்மதியாகப் படுத்து உறங்குவது கஷ்டம். வேறு வழி இல்லையா என்றால் நீங்கள் பயப்படாமல் இருந்தால் எதையும் எப்படியும் எதிர்கொள்வீர்கள். அதுதான் சுலபமான வழி. ஏனோ அதுதான் கஷ்டமான வழியாகத் தெரிகிறது பலருக்கும். விசித்திரம்தான். நீங்கள் பயப்படாமல் இருந்தால் கல்லை எடுத்து உங்களுக்கு மிரட்டத் தெரியும். பயந்தால் கல்லை எவர் மேலாவது வீசி விடுவீர்கள். ஆகவே பயப்படாதீர்கள். கல்லை எடுத்து வீசுவது போல மிரட்டினாலே போதும். பயந்து ஓடி விடுவார்கள். இந்த உலகமும் விசித்திரம்தான். நீங்கள் மிரட்டினால் உங்களுக்காக எதையும் செய்து தரும். நல்ல உலகம்.
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...