எங்கேயோ ஒளிந்திருக்கும் தவறுகள்
எஸ்.கே. சரியில்லை என்பது உண்மைதான். அதற்காக
அவரைத் திருத்தும் முயற்சிகளில் இறங்க வேண்டியதில்லை. ஒருவரைத் திருத்த வேண்டும் என்று
நினைக்கும் மனதைத் திருத்திக் கொண்டால் போதும்.
உலகை மாற்றுவது கடினமாகவும், தம் மனதை
மாற்றிக் கொள்வது சுலபமாகவும் இருக்கிறது.
நாம் பொதுவாக பொதுக்கூட்டத்தில் தலைமையை
எதிர்த்து மிகக் கடுமையாகப் பேசி விடலாமா என நினைக்கலாம். அது ஒரு வகை முட்டாள்தனமே.
அதன் மூலம் நம்மை மதிக்கும், நம் பேச்சைக் கேட்கும் சூழ்நிலை ஏற்படும் என நினைக்கிறோம்.
அப்படி ஒரு நிலை ஏற்படாது.
நம்மை யார் மதித்து என்னவாகப் போகிறது?
நம் பேச்சை யார் கேட்டு என்னவாகப் போகிறது? நமக்குரிய காரியங்கள் நடக்க வேண்டும்.
அப்படி நடந்தால் மரியாதை தானாக வரப் போகிறது. நம் பேச்சைக் கேட்க ஆயிரம் பேர் நிற்கப்
போகிறார்கள்.
நமக்குரிய காரியங்கள் ஆக வேண்டும் என்றால்
மெளனமாக இருக்க வேண்டும். அநாவசியமாகப் பேசாமல் இருக்க வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக
நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமலே இருந்தாலே நமக்குரிய காரியங்கள் ஆகி விடும்.
மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள
வேண்டும் என்ற உணர்வு அகந்தை என்ற உணர்வை வளர்க்குமே தவிர, காரியத்தை சமத்தாக ஆற்ற
வேண்டும் என்ற உணர்வைப் பின்னுக்குத் தள்ளி விடும்.
ஆகையால்தான் இவ்வாறு சொல்லப்படுகிறது,
காரியங்கள்தான் முக்கியம். காரியங்கள் நிறைய நடைபெறும் போது நம்மைக் குறித்த பிம்பங்கள்
பெரிதாகும். வெற்றுப் பேச்சு வெறும் சவடால் என்பது சில நாட்களிலே புரிந்து பட்டு விடும்.
இந்த விசயத்தில் நாம் மிக எளிமையாக நடந்து
கொண்டிருக்க வேண்டும். நாம் அநாவசியமாக எதையும் பெரிதுபடுத்தி விடக் கூடாது. வழக்கமாக
நாம் அநாவசியங்களைக் கண்டு கொள்ளக் கூடாது. இன்றைய நிலைமையின் கீழ் நாம் அநாவசியமாக
பல விசயங்களைக் கண்டு கொள்கிறோம். அதனால் நமக்கு எந்த பயனும் இல்லை என்பது வேறு.
தேவையில்லாத மன உளைச்சல்களையும் நமக்குள் உருவாக்கிக் கொள்கிறோம் என்பது மற்றொன்று.
உலகைப் புரிந்து கொள்வதற்கு நம்மைச் சுற்றியுள்ள
எஸ்.கே.க்களைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எஸ்.கே.க்களைப் புரிந்து கொள்ளலாமே
தவிர எஸ்.கே.க்களுக்குப் பிரதிவினை ஆற்றி விடக் கூடாது என்பது இதிலிருந்து அறிந்து
கொள்ளப்பட வேண்டிய விசயம்.
*****
No comments:
Post a Comment