30 Jun 2018


போராடுனா நாடு சுடுகாடாயிடும். உளறாதீங்க பாஸ்! போராட்டமே சுடுகாட்டுக்குத்தான்.
*****


நாமெல்லாம் டிரான்ஸ்பர் என்றால் சாக்லெட் கொடுத்துக் கொண்டாடுவார்கள். பகவான் பாவம். சாக்லேட் கிடைக்கவில்லை.
*****

அப்பாவின் பரிட்சயங்கள்

அப்பாவின் பரிட்சயங்கள்
டாஸ்மாக் இடம் மாற்றப் பட்டதில்
அப்பாவிற்கு ஆரம்பத்தில் சிரமம் இருந்தது
இப்போது பழகி விட்டார்
அவராகவே பேருந்திலேறி
போய் விட்டு வந்து விடுகிறார்
ஆஸ்பத்திரிக்கு செல்லும் போது மட்டும்
அக்காவின் துணை தேவையிருக்கிறது
பேருந்துக்காகக் காத்திருக்கும் நாட்களில்
பைக்கில் செல்பவர்கள்
அழைத்துச் செல்லும் அளவுக்கு
சகாக்கள் கிடைத்து விட்டதாகவும்
நடத்துநர்களோடு நல்ல பரிட்சயம்
ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லிச் சிரிக்கிறார்
குடிக்க ஆரம்பித்த நாள்களிலிருந்து
அவரோடு பேச்சை நிறுத்திய அம்மா
மெளன சாட்சியாய் கேட்டு வறுபட்ட படியே
எல்லாருக்குமான இரவு உணவை
வறுத்துக் கொண்டிருக்கிறார்.
*****

29 Jun 2018


சோறு முக்கியம் பாஸ்! வாஸ்தவம்தான். சுகர் வந்த நாளிலிருந்து சப்பாத்திதான் சுட்டுப் போடுகிறார்கள்.
*****

எப்படிச் சாவது என்பது எவரெவர் விருப்பம்?

எப்படிச் சாவது என்பது எவரெவர் விருப்பம்?
இட்டிலி சாப்பிட்டுச் சாவதா
இடியாப்பம் சாப்பிட்டு சாவதா
பிரசவ வார்டில் எத்தனை மணிக்கு
குழந்தை பிறக்க வேண்டும் என்பது போல
எட்டு மணிக்குச் சாவதா
பத்து மணிக்குச் சாவதா
சாதாரணக் காய்ச்சலா
சாவுக்கானக் காய்ச்சலா
படம் பிடித்தால் ஆயுசுக் குறையுமென்று
சிசிடிவி கேமிராப் பதிவுகளின்றிச் சாவதா
நோய்த் தோற்று ஆகி விடுமென்று
நான்கு பேர் பார்க்கக் கூட பாக்கியமில்லாமல் சாவதா
உள்நாட்டு மருத்துவர்கள் பார்த்த பின் சாவதா
வெளிநாட்டு மருத்துவர்கள் பார்த்த பின் சாவதா
என்பதையெல்லாம் மருத்துவமனைகள் தீர்மானிக்கும்
அட்மிட் ஆகி விட வேண்டியது அவரவர் கடமை
அட்மிட் பண்ணியவர்கள் அடுத்தடுத்தப் பார்த்துக் கொள்வார்கள்
இழுத்துப் பிடித்துக் கொண்டு
மூன்று மாதத்திற்குள் சாவதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டியது
உள்ளே புகுந்தவரின் பொறுப்பு அன்றியும்
உயிர் காக்கும் கருவிகள் இருந்தும்
உயிர் காணாமல் போனால்
மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்காது
*****

தேடுவதற்கு கூகுள் இருக்கிறது. உனக்கு ஏன்? என்றதும் ஞானம் பிறந்தது.
*****

28 Jun 2018

கவிதைக் காவியங்கள் எழுதும் முறைகள் அறிவீர்களா?


கவிதைக் காவியங்கள் எழுதும் முறைகள் அறிவீர்களா?
            தமிழின் சம கால நிகழ்வுகள் அனைத்தையும் கவிதைகளாக்கி விட்டால் என்ன? ஒரு கவிதைக் காவியம் ஆகி வடும். படிப்பதற்கு ஆள் இருப்பார்களா என்று உள்ளூர எழும் பயத்துக்குப் பதிலில்லை.
            கடந்த சில பத்தாண்டுகளாக கவிதைக் காவியங்கள் உருவாகவில்லை என்ற பழியும் போய் விடும். கவிஞர்களாக இருப்பவர்கள் ஏதோ துண்டு துண்டாக எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.
            வாசகர்களும் இந்த விசயத்தில் கொஞ்சம் மனசு வைக்க வேண்டும். நவீன கவிதைகளை அச்சடிக்கப்பட்ட பக்கங்களை அப்படியே கடந்து நகைச்சுவைத் துணுக்குகளில் போய் நிற்கிறார்கள். மேலும் கொஞ்சம் நாவல் படிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். இதெல்லாம் நடக்கின்ற காரியமா தெரியவில்லை.
            கடைசியாக கண்ணதாசன், முடியரசன் போன்றோர் கவிதைக் குறுங்காவியங்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வேறு யாரேனும் எழுதியிருந்தார்கள் என்றால் நினைவூட்டுங்கள். விவரங்களின் உண்மைத் தன்மை பொய்யாகி விடக் கூடாது பாருங்கள்.
            கவிதைகள் வாசிப்பதில் பல செளகரியங்கள் இருக்கிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஒரு நாவலுக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் நூறில் ஒரு பங்கு நேரத்தில் வாசித்து விடலாம். அத்துடன் வெகு விரைவாக ஒரு கவிதை ஜனனம். அதை வாசித்தத் தாக்கத்தில் வாசகரும் ஒரு கவிதை எழுதி போஸ்ட் கார்டில் போஸ்ட் செய்து விடலாம். அல்லது தொழில்நுட்பம் தெரிந்த வாசகர் என்றால் பேஸ்புக்கில் பேஸ்ட் செய்து விடலாம்.
            அத்துடன் வாசகர்களுக்கு கவிஞர்களாக இருப்பவர்கள் பல நல்ல கவிதைகளை அறிமுகப்படுத்தி நாவல்கள் எழுத வேண்டும். ஏனென்றால் வாசகர்கள் நாவல்தானே படிக்கிறார்கள்.
            இப்படித்தானே வாசகர்களே! கவிஞர்களாக இருந்தவர்கள் நாவல் எழுதப் போய் விடுகிறார்கள். ஏதோ சில கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நாவல் எழுத அலுப்புப்பட்டுக் கொண்டு கவிஞர்களாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள்.
            கவிஞர்களிடமும் பல நல்ல பழக்கங்கள் வந்து விட்டன. யாரும் எகனை மொகனைக்காக மெனக்கெடுவதில்லை. அதை திரைப்படப் பாடல்களில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டு விட்டார்கள்.
            நிஜமாகவே இப்போது நிறைய கவிதைகள் வெளிவர ஆரம்பித்து விட்டன. அவைகள் கவிதைகள்தான் என்பதை வாசகர்களுக்குப் புரிய வைப்பதில்தான் சிரமம் நிலவுகிறது.
            அப்புறம் இதற்கு மேலும் எப்படி கவிதைகள் எழுதுவது என்றால் பேஸ்புக்கை எப்போதும் நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருங்கள். என்னைக் கேட்டால் பேஸ்புக்கை விட டிவிட்டர் பெட்டர். செம சார்ப்பாக அடிக்கிறார்கள்.
*****

27 Jun 2018

சினிமா பார்க்கும் கலையைக் கற்றுக் கொள்வீர்களா?


சினிமா பார்க்கும் கலையைக் கற்றுக் கொள்வீர்களா?
            திரைப்பட விமர்சனங்களை நீங்கள் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள் என்பது தெரிகிறது.
            நாட்டில் வருகின்ற வாத, மாத இதழ்களிலும் அதுதான் மண்டிக் கிடக்கிறது. அவைகளில் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக துணுக்குகளாக இலக்கியம் இருந்தால் ஆச்சரியம்.
            அதற்காகத்தான் திரைப்படங்களை இலக்கியமாக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறேன். போராடக் கூட்டம்தான் வருவேனா என்கிறது?தியேட்டர்களிலும் கூட்டம் அப்படித்தான் இருக்கிறது.
            விசயத்துக்கு வருவோம்! இன்றைய திரைப்படங்களைப் பொறுமையாக எங்கே பார்க்க முடிகிறது? பாஸ்ட் பார்வேர்டில் போடு என்றால் தியேட்டர்காரர்கள் கேட்கிறார்களா?
            பாட்டு, பைட்டு, சென்டிமென்ட் என்று அடிக்கடி கேண்டீன் பக்கம் போய் வந்தால் பர்சேஸ் டார்கெட் கிழிந்து தொங்குகிறது.
            திருட்டு டிவிடியில் படம் பார்க்கக் கூடாது, டோரன்டில் டவுன்லோட் செய்வதும் சட்டப்படி குற்றம் என்றால் அப்புறம் எப்படித்தான் படம் பார்ப்பது? பிறகு இப்போது மக்கள் சினிமா பார்ப்பதில்லை, சீரியல்கள்தான் பார்க்கிறார்கள் என்ற குறைபட்டுக் கொள்கிறார்கள்.
            சீரியல்களில் இந்தப் பிரச்சனை இல்லை. திருட்டு டிவிடி, டோரன்ட் போன்ற சட்டப்படியான தடைகள் எதுவும் இல்லை. விளம்பரம் போடும் போது சாப்பிட்டுக் கொள்ளலாம். மற்றும் வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம். பிடிக்காவிட்டால் இன்னொரு சீரியலுக்கு மாறிக் கொள்ளலாம்.
            தியேட்டரில் அப்படியா? மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் கூட எந்தப் படத்துக்கு டிக்கெட் எடுத்திருக்கிறோமோ அந்தப் படத்தைத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. படம் பிடிக்கவில்லை என்றால் அதே டிக்கெட்டில் வேறு படத்துக்கு மாற முடிகிறதா?
            அதனால் இப்போதெல்லாம், போஸ்டர்களில் படம் பார்ப்பதோடு சரி.
            அதை வைத்துக் கொண்டே விமர்சனம் எழுதுவது கஷ்டம்தான்.
            சில நேரங்களில் வேறு வழியில்லாமல் என்ன செய்வது என்று புரியாமல் அதை வைத்துக் கொண்டே விமர்சனம் எழுதப்படுவது எங்கே நிற்கிறது? அந்த விமர்சனமே சரியாக கனக்கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. இருட்டில் சாப்பிட்டாலும் கை சரியாக வாய்க்குச் சென்று விடுகிறது.
            ஒட்டிய போஸ்டரை அங்கங்கே பசியோடு திரியும் மாடுகள் மட்டும் கிழித்துத் தின்னாமல் இருந்தால், இப்போதெல்லாம் ஒரு செகண்டில் படம் பார்த்து விடலாம். போஸ்டரில் பார்த்தாலே அகம் பிரம்மாஸ்மி.
*****

ஐந்து பெண் பிள்ளைகளின் தகப்பன்

ஐந்து பெண் பிள்ளைகளின் தகப்பன்
ஒரு ஆண் பிள்ளைக்கு ஆசைப்பட்டு
ஐந்து பெண் பிள்ளைகளைப்
பெற்றெடுக்க வைத்தார் அப்பா
அதற்கு மேலும் முயன்று பார்க்க ஆசைதான் அவருக்கு
தர்மாஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையை
அவரைக் கேட்காமலே
அம்மாவுக்கு முடித்து வைத்திருந்தார்கள்
ஐந்து பெண் பிள்ளைகளில் ஒன்றுக்காவது
ஆண் பிள்ளைப் பிறக்குமென்று
எதிர்பார்ப்பு இருந்தது அவருக்கு
ஐந்தும் இரண்டிரண்டு பெண் பிள்ளைகளைப்
பெற்றெடுத்துக் கொஞ்சக் கொடுத்த போது
தன் கண் முன்னே தன் வம்சத்தின்
கடைசி ஆணாக சாவதாக உருவகித்து
உருகிச் செத்துப் போனவரின் ஈமச் சடங்கிற்கு
ஐந்து பெண்களால் நடத்தப்படும்
முதியோர் இல்லத்திலிருந்து
அனைவரும் வந்திருந்தனர்.
*****

26 Jun 2018

அரிச்சந்திர நாடகத்தின் மற்றுமொரு பாடம்


அரிச்சந்திர நாடகத்தின் மற்றுமொரு பாடம்
உண்மை பேசி ஆட்சியை இழந்த அரிச்சந்திரனும்
பொய் பேசி ஆட்சியைப் பிடித்த அமைச்சனும்
மூவாயிரம் ஆண்டு கால இடைவெளியைக் கடந்து
சந்தித்துக் கொண்டார்கள்
"மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்
பொய் சொன்னோம் என்று
உண்மையைப் பேசுவது அபூர்வம்!" என்று
சிலிர்த்துப் போனான் அரிச்சந்திரன்
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
உண்மை சொன்னால் ஆட்சி பறிபோகும் என்ற
உண்மையை உணர்த்திய
அரிச்சந்திரனுக்கு நன்றி சொன்னான் அமைச்சன்
ரூபாய் நோட்டில் இருந்த காந்தி
அரிச்சந்திரனின் கால ஊர்வல நாடகத்திலிருந்து
மற்றுமொரு பாடத்தைக் கற்றுக் கொண்டார்
*****

25 Jun 2018

சாத்தானின் பிரார்த்தனை

சாத்தானின் பிரார்த்தனை
வரவர் மனதில் அடைத்து வைத்திருக்கும்
சாத்தானை அவிழ்த்து விடுங்கள்
அவன் விடுதலை வேண்டி பிரார்த்திக்கிறான்
அடைத்து வைப்பது கொடுமையானது என
அவன் வாதிடுகிறான்
தப்பி விடும் சாத்தானோ
விடுதலை அடையும் சாத்தானோ
எதுவும் செய்ய முடியாது
குற்றச் செயல்களுக்கான வாய்ப்புகள் இல்லாத போது
என்ற போதும்
சாத்தானை அடைத்து வைப்பதில்
சாமர்த்தியம் பேசுகிறோம்
குற்றச் செயல்களுக்கான வாய்ப்புகள்
பெருகிக் கொண்டிருக்கின்றன
சாத்தான் மீண்டும் மீண்டும்
மனதுக்குள் அடைந்து கிடக்கிறான்
உடைக்க முடியாத அளவுக்கு
சிறைச்சாலைகள் பலமானவையல்ல என்பதை
சாத்தான் உணரத் தொடங்கும் போது
பூட்டுகளின் சாவிகளுக்காக
அவன் கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டான்
அன்பானக் கரங்கள் தழுவிக் கொள்ளும் போது
தேவனின் கரங்களில் குழந்தையாகவும்
அவன் தயங்க மாட்டான்
*****

24 Jun 2018

அனுபவங்கள் கொலை செய்யும்!


அனுபவங்கள் கொலை செய்யும்!
விழுந்து கொண்டிருக்கும் ஒருத்தருக்கு
உதவுவது தள்ளி விட்ட
கைகளாகவும் இருக்கலாம்
நீளும் கரங்களை இழுத்து விடுவது
காப்பாற்றிய கரங்களாகவும் இருக்கலாம்
நம்பிக் கரங்களைக் கொடுப்பதற்கு முன்
இரண்டு முறை யோசிக்க வேண்டியிருக்கிறது
கரங்களைக் கொடுக்கத்தான் வேண்டுமா
என்று முதல் முறையும்
கரங்களைக் கொடுக்காமல் இருக்கக் கூடாதா
என்று இரண்டாம் முறையும் யோசித்து
கரங்களைக் கட்டிக் கொள்வது
பொறுமையைக் காட்டும்
மூழ்கிக் கொண்டிருப்பவன் செத்துக் கொண்டிருப்பான்
முன்பு கை கொடுத்த அனுபவம்
மோசமாக அமையும் போது
தத்தளிப்பவர்களுக்கு சாவு சர்வ நிச்சயம்
முன்அனுபவங்கள் கொன்று போடும்
அளவுக்குப் பயங்கரமானவை என்பதைச்
சொன்னால் நம்புங்கள்.
*****

23 Jun 2018

வெறுப்பின் அரசியல்


வெறுப்பின் அரசியல்
            ஒருவர் மேல் கொள்ளும் வெறுப்பு தன் மீதே கொள்ளும் வெறுப்பாக திரும்புகிறது. இதை நேற்று எஸ்.கே.யுடன் நிகழ்த்திய உரையாடலிலிருந்து தெரிந்து கொண்டேன்.
            எஸ்.கே.வுக்கு தன்னுடைய உறவினர் ஒருவரைப் பிடிக்கவில்லை. கண்டபடி திட்டித் தீர்த்தார். அவரைப் பிடிக்காததனால் அவர் மேல் வெறுப்பைக் காட்டுவதற்காக சந்தர்ப்பத்தைத் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
            பேசிய இரண்டு மணி நேரமும் தான் யாரை வெறுக்கிறாரோ அவரைப் பற்றியே மூச்சு கூட விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.
            எஸ்.கே.யின் மண்டை முழுவதும் அவர் வெறுக்கின்ற அந்த மனிதரே நிறைந்திருந்தார்.
            சிறிது நேரத்துக்குப் பிறகு எஸ்.கே.யின் பேச்சானது அவரை எப்படியெல்லாம் வெறுக்கிறார் என்ற கற்பனைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டது. அவர் தன்னுடைய எண்ணங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி தனக்குள் வெறுப்பவரை மேலும் வெறுக்குமாறு தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்.
            எஸ்.கே.யின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்க கொண்டிருக்க அவர் யாரை வெறுக்கிறாரோ அவரை நாமும் வெறுக்கும் நிலைக்கு ஆளாகி விடலாம். ஆனால் எனக்கு எஸ்.கே.யின் மீதுதான் வெறுப்பாக இருந்தது.
            ஒரு மனிதரை வெறுக்கும் அளவுக்குத் தூண்டும் இவர் என்ன வகை மனிதர்?
            ஒரு மனிதரை நாம் வெறுக்கும் போது அவரைப் பற்றிய வெறுப்புகளைத் தூண்டி விட ஆரம்பித்து விடுகிறோம்.
            நாம் ஒருவரை வெறுத்தால் உலகமே அவரை வெறுக்க வேண்டும் என்று ஆசைபடுகிறோம். ஆழ்மனதின் வன்முறைகள் இப்படித்தான் தோற்றம் பெறுகின்றன.
            உங்களால் யாரையும் வெறுக்காமல் இருக்க முடியுமானால் அது பாக்கியமே. வெறுப்போடு வாழ்வதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டவர்களைப் போல நாம் வாழ நினைக்கும் போது நாம் யாரையும் வெறுக்கவில்லை, நம்முடைய அழகான வாழ்க்கையையே வெறுப்புக்கு உள்ளாக்குகிறோம்.
*****

22 Jun 2018

தமிழில் ஹைக்கூக்கள் அதிகம் வெளிவரவில்லையா?


தமிழில் ஹைக்கூக்கள் அதிகம் வெளிவரவில்லையா?
            அண்மையில் ஹைக்கூக்கள் பற்றிய ஒரு புத்தகத்தைப் படித்த போது தமிழில் அதிகம் ஹைக்கூக்கள் வெளிவரவில்லை என்ற வாசகத்தைப் படிக்க நேர்ந்தது.
            தமிழில் எழுதி குவிக்கப்பட்ட ஹைக்கூக்கள் மாநகரத்து மழை வெள்ளம் போல் அதிகம்.
            பிறகு ஏன் ஒரு நூலை அப்படித் தொடங்குகிறார்கள்?
            அந்த வாசகம் ஒர் ஈர்ப்பைத் தருகிறது.
            தமிழில் அதிகம் ஹைக்கூக்கள் வெளிவரவில்லை எனும் வாசகத்தைப் படிக்கும் போது, அந்த நூலைப் படித்து முடித்து நாமாவது அதிகமாக ஹைக்கூக்களை எழுதி தமிழை வளப்படுத்துவோம் என்ற உணர்வு ஏற்படுவது இயல்பானது.
            நூலை விறுவிறுப்பாகப் படிப்பதற்கு அந்த ஒரு வாசகமே போதும்.
            நானும் அப்படித்தான் நூலை விறுவிறுப்பாகப் படித்தேன்.
            படித்து முடித்து பத்து நாள்கள் ஆகி விட்டன.
            ஒரு ஹைக்கூ கூட தோன்றவில்லை.
            தமிழில் அதிகம் ஹைக்கூக்கள் வெளிவராமல் போனதற்கு நானும் ஒரு காரணமாகி விட்டேனோ என்ற குற்றவுணர்வு இப்போது என்னை வருத்துகிறது.
*****

21 Jun 2018

அழுகையின் சந்தோசத்தைச் சொல்!


அழுகையின் சந்தோசத்தைச் சொல்!
பள்ளத்தாக்கில் பிடித்துத் தள்ளுகிறாய்
விழுவதைப் பார்த்து சிரிக்கிறாய்
விழுந்து முடித்ததும்
வீர வணக்கம் வைக்கிறாய்
அதை ஏற்றுக் கொண்டு
பறக்கத் தொடங்குகிறேன்
கைதட்டி விசிலடிக்கத் தொடங்குகிறாய்
எப்படி இது சாத்தியம் என்பவர்களுக்கு
காதலில் எல்லாம் எதிர்மாறானது என்பதை
நேர்மாறாக எப்படி புரிய வைப்பது?
அழுகையின் சந்தோசத்தை நீயே சொல்.
சந்தோசத்தின் வலியை நான் பகிர்கிறேன்.
*****

20 Jun 2018

இட்டிலி தின்பதில் பொய் சொல்வது சகஜம்

இட்டிலி தின்பதில் பொய் சொல்வது சகஜம்
இரண்டு இட்டிலிகளைச் சாப்பிட்டு விட்டு
நான்கு என்பான்
இட்டிலி பிடிக்காத தம்பி
பத்து இட்டிலிகளை முழுங்கி விட்டு
நான்கு என்பாள்
டயட்டில் இருப்பதாகச் சொல்லும் அக்கா
இரண்டு சப்பாத்தியோடு
இட்டிலி எதுவும் சாப்பிடவில்லை என
இரண்டு இட்டிலிகளை
யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுச் செல்வார்
சுகர் மாத்திரை போடும் அப்பா
எள்ளுப் பொடிக்கு நல்லெண்ணெய் விட்டு
இருபது இட்டிலிகள் சாப்பிடலாம் என்பாள்
மீந்த அஞ்சோ ஆறோ இட்டிலிகளை
தின்னும் அம்மா
தமிழ் நாட்டில் இட்டிலி தின்பதில்
பொய் சொல்வது சகஜம்
பிதாவும்வும் தன் கடைசிக் காலத்தில்
இரண்டு இட்டிலிகள் தின்றார்
சுமிதாவும்வும் தன் கடைசிக் காலத்தில்
இரண்டு இட்டிலிகள் தின்றார்
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...