28 Jun 2018

கவிதைக் காவியங்கள் எழுதும் முறைகள் அறிவீர்களா?


கவிதைக் காவியங்கள் எழுதும் முறைகள் அறிவீர்களா?
            தமிழின் சம கால நிகழ்வுகள் அனைத்தையும் கவிதைகளாக்கி விட்டால் என்ன? ஒரு கவிதைக் காவியம் ஆகி வடும். படிப்பதற்கு ஆள் இருப்பார்களா என்று உள்ளூர எழும் பயத்துக்குப் பதிலில்லை.
            கடந்த சில பத்தாண்டுகளாக கவிதைக் காவியங்கள் உருவாகவில்லை என்ற பழியும் போய் விடும். கவிஞர்களாக இருப்பவர்கள் ஏதோ துண்டு துண்டாக எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.
            வாசகர்களும் இந்த விசயத்தில் கொஞ்சம் மனசு வைக்க வேண்டும். நவீன கவிதைகளை அச்சடிக்கப்பட்ட பக்கங்களை அப்படியே கடந்து நகைச்சுவைத் துணுக்குகளில் போய் நிற்கிறார்கள். மேலும் கொஞ்சம் நாவல் படிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். இதெல்லாம் நடக்கின்ற காரியமா தெரியவில்லை.
            கடைசியாக கண்ணதாசன், முடியரசன் போன்றோர் கவிதைக் குறுங்காவியங்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வேறு யாரேனும் எழுதியிருந்தார்கள் என்றால் நினைவூட்டுங்கள். விவரங்களின் உண்மைத் தன்மை பொய்யாகி விடக் கூடாது பாருங்கள்.
            கவிதைகள் வாசிப்பதில் பல செளகரியங்கள் இருக்கிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஒரு நாவலுக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் நூறில் ஒரு பங்கு நேரத்தில் வாசித்து விடலாம். அத்துடன் வெகு விரைவாக ஒரு கவிதை ஜனனம். அதை வாசித்தத் தாக்கத்தில் வாசகரும் ஒரு கவிதை எழுதி போஸ்ட் கார்டில் போஸ்ட் செய்து விடலாம். அல்லது தொழில்நுட்பம் தெரிந்த வாசகர் என்றால் பேஸ்புக்கில் பேஸ்ட் செய்து விடலாம்.
            அத்துடன் வாசகர்களுக்கு கவிஞர்களாக இருப்பவர்கள் பல நல்ல கவிதைகளை அறிமுகப்படுத்தி நாவல்கள் எழுத வேண்டும். ஏனென்றால் வாசகர்கள் நாவல்தானே படிக்கிறார்கள்.
            இப்படித்தானே வாசகர்களே! கவிஞர்களாக இருந்தவர்கள் நாவல் எழுதப் போய் விடுகிறார்கள். ஏதோ சில கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நாவல் எழுத அலுப்புப்பட்டுக் கொண்டு கவிஞர்களாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள்.
            கவிஞர்களிடமும் பல நல்ல பழக்கங்கள் வந்து விட்டன. யாரும் எகனை மொகனைக்காக மெனக்கெடுவதில்லை. அதை திரைப்படப் பாடல்களில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டு விட்டார்கள்.
            நிஜமாகவே இப்போது நிறைய கவிதைகள் வெளிவர ஆரம்பித்து விட்டன. அவைகள் கவிதைகள்தான் என்பதை வாசகர்களுக்குப் புரிய வைப்பதில்தான் சிரமம் நிலவுகிறது.
            அப்புறம் இதற்கு மேலும் எப்படி கவிதைகள் எழுதுவது என்றால் பேஸ்புக்கை எப்போதும் நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருங்கள். என்னைக் கேட்டால் பேஸ்புக்கை விட டிவிட்டர் பெட்டர். செம சார்ப்பாக அடிக்கிறார்கள்.
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...