வெறுப்பின் அரசியல்
ஒருவர் மேல் கொள்ளும் வெறுப்பு தன் மீதே
கொள்ளும் வெறுப்பாக திரும்புகிறது. இதை நேற்று எஸ்.கே.யுடன் நிகழ்த்திய உரையாடலிலிருந்து
தெரிந்து கொண்டேன்.
எஸ்.கே.வுக்கு தன்னுடைய உறவினர் ஒருவரைப்
பிடிக்கவில்லை. கண்டபடி திட்டித் தீர்த்தார். அவரைப் பிடிக்காததனால் அவர் மேல் வெறுப்பைக்
காட்டுவதற்காக சந்தர்ப்பத்தைத் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
பேசிய இரண்டு மணி நேரமும் தான் யாரை வெறுக்கிறாரோ
அவரைப் பற்றியே மூச்சு கூட விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.
எஸ்.கே.யின் மண்டை முழுவதும் அவர் வெறுக்கின்ற
அந்த மனிதரே நிறைந்திருந்தார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு எஸ்.கே.யின்
பேச்சானது அவரை எப்படியெல்லாம் வெறுக்கிறார் என்ற கற்பனைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டது.
அவர் தன்னுடைய எண்ணங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி தனக்குள் வெறுப்பவரை மேலும் வெறுக்குமாறு
தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்.
எஸ்.கே.யின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்க
கொண்டிருக்க அவர் யாரை வெறுக்கிறாரோ அவரை நாமும் வெறுக்கும் நிலைக்கு ஆளாகி விடலாம்.
ஆனால் எனக்கு எஸ்.கே.யின் மீதுதான் வெறுப்பாக இருந்தது.
ஒரு மனிதரை வெறுக்கும் அளவுக்குத் தூண்டும்
இவர் என்ன வகை மனிதர்?
ஒரு மனிதரை நாம் வெறுக்கும் போது அவரைப்
பற்றிய வெறுப்புகளைத் தூண்டி விட ஆரம்பித்து விடுகிறோம்.
நாம் ஒருவரை வெறுத்தால் உலகமே அவரை வெறுக்க
வேண்டும் என்று ஆசைபடுகிறோம். ஆழ்மனதின் வன்முறைகள் இப்படித்தான் தோற்றம் பெறுகின்றன.
உங்களால் யாரையும் வெறுக்காமல் இருக்க
முடியுமானால் அது பாக்கியமே. வெறுப்போடு வாழ்வதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டவர்களைப்
போல நாம் வாழ நினைக்கும் போது நாம் யாரையும் வெறுக்கவில்லை, நம்முடைய அழகான வாழ்க்கையையே
வெறுப்புக்கு உள்ளாக்குகிறோம்.
*****
No comments:
Post a Comment