30 Mar 2024

கவிதைக்காரனின் குறிப்புகள்

கவிதைக்காரனின் குறிப்புகள்

அவன் வீட்டுக் கட்டில் மரம்

ஜன்னல்கள் கதவுகள் மரம்

நாற்காலிகள் மரம்

பிளாஸ்டிக் ஏதுமில்லை

பீரோக்கள் மரம்

இரும்பில் ஏதுமில்லை

மேசைகள் மரம்

அலமாரிகள் மரம்

மரந்தான் எல்லாம் மரந்தான்

மறந்தான் மறந்தான்

எல்லாம் மரம் என்பதை மறந்தான்

சுற்றி நின்ற எட்டு மரங்களை வெட்டிதான்

இந்த வீட்டைக் கட்டினான்

பக்கத்திலிருந்த அத்தனை மரங்களையும் வெட்டி விட்டுதான்

ப்ளாட் போட்டான்

அதிலிரண்டில் வாடகை வீடும்

ஒரு தங்கும் விடுதியும் கட்டி விட்டான்

காற்றடித்தால் முறிந்து விழுகிறது

புயலடித்தால் வேரோடு விழுகிறது என்று

சாலையில் இருந்த இரண்டு மரங்களையும்

திராவகம் ஊற்றித் தீய்த்தான்

மரங்களை வெட்டித் தயாரிக்கப்பட்ட மரக்கூழில்

தயார் செய்யப்பட்ட தாளில்

மரங்களின் மகத்துவம் குறித்த கவிதையை எழுதிக் கொண்டிருக்கிறான்

அதை பிடிஎப்பாகப் போடாமல்

தாள்களில் அச்சடித்துக் கவிதைப் புத்தமாக

விநியோகித்துக் கொண்டிருக்கிறான்

*****

29 Mar 2024

கிராமத்துச் சொலவமும் வள்ளுவரும் புத்தரும் பெரியாரும்!

கிராமத்துச் சொலவமும் வள்ளுவரும் புத்தரும் பெரியாரும்!

“கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்கிறவன் கேனையனா?” என்பது கிராமத்துச் சொலவம்.

எதையும் மெய்யா, பொய்யா என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும்என்பதே அச்சொலவம் உணர்த்த வரும் செய்தி.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.”         (குறள், 423)

என்று திருவள்ளுவர் சொல்வதை அவ்வளவு எளிமையாகச் சொல்லும் கிராமத்து மொழி அது என்றும் கூறலாம்.

“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.” என்று அனுபவஸ்தர்கள் சொல்வதும் அதை ஓட்டியே வருகிறது.

புத்தரும் அதைத்தான் சொல்கிறார்.

“காதால் கேட்பதால் மட்டுமே எதையும் நம்பி விடாதே.

பல தலைமுறைகளாகப் போற்றப்பட்டு வருபவை என்ற காரணத்தினாலேயே மரபுகளை நம்பாதே.

பல பேராலும் பேசிப் பரப்பப்படுகிறது என்ற காரணத்தினாலேயே எதையும் நம்பாதே.

உன் மத நூல்களில் எழுதப்பட்டிருக்கிறது என்ற காரணத்தினாலேயே எதையும் நம்பாதே.

உன் ஆசிரியர்களும் மூத்தோரும் சொல்கிறார்கள் என்பதனாலேயே எதையும் நம்பாதே.

வெளித்தோற்றத்திற்கு உண்மையாகத் தெரிகின்ற தர்க்கத்தையும், பழக்கத்தினால் உன்னிடம் சேர்ந்து விட்ட மனச்சாய்வையும் நம்பாதே.

யாவருக்குமான நன்மைக்கும் ஆதாயத்திற்கும் ஏற்ற ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கு முறையான காரணத்தை நீ கண்டறியும் போது, ஆழ்ந்து சிந்தனை செய், ஆய்வு செய், பிறகு ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்.”

புத்தர் சொல்வதை ஒட்டியே பெரியாரும் சொல்கிறார். பெரியார் அதை பகுத்தறிவு என்கிறார். பெரியாரின் மொழியைப் பார்த்தால் அதுவும் அப்படியே இருக்கிறது. “நான் சொல்வதற்காக நம்ப வேண்டாம், தீர யோசித்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.” என்கிறார்.

கிராமத்துச் சொலவத்திலிருந்து, அனுபவஸ்தர்கள் – திருவள்ளுவர் – புத்தர் – பெரியார் வாக்கு வரை ஒரு பொருளை வலியுறுத்துகிறது என்றால் அதுதான் மெய்ப்பொருள். அறிவால் மெய்ப்பொருள் காண்பதே எதிலும் சரியானது.

*****

28 Mar 2024

எதார்த்தம் இறந்து போய் எத்தனையோ நாட்கள் ஆகின்றன!

எதார்த்தம் இறந்து போய்  எத்தனையோ நாட்கள் ஆகின்றன!

இந்த மனிதர்கள் எதார்த்தமாக எதையும் காட்ட மாட்டார்களா? எதார்த்தமாக எதையும் சொல்ல மாட்டார்களா?

ஒன்றைக் கொடுக்க விருப்பம் இல்லாத போது தாங்க முடியாத அழுத்ததைக் கொடுக்கிறார்கள். செய்ய முடியாத இலக்கைக் கொடுக்கிறார்கள். கொடுப்பதற்கு அதுதான் இருக்கிறது அவர்களிடம். அது எதுவும் எதார்த்தம் என்ற வகையறாவில் வராது. வரக் கூடாது என்பதுதான் அவர்களின் நினைப்பு போலும். எல்லாம் எதார்த்தம் மீறியதாக இருக்க வேண்டும்.

எதார்த்தத்தைப் பிசகுவதற்கு இவர்கள் அறிவுரையை வைத்திருக்கிறார்கள். முடிந்திருந்தால் அது நிகழ்ந்திருக்கப் போகிறது. முடியாத ஒன்றை எதார்த்தத்தை மீறியும் முடித்து விட வேண்டும் இவர்களுக்கு. வேறு வழி? அறிவுரையைக் கையில் எடுத்து நாலா பக்கமும் சுழற்ற ஆரம்பித்து விடுவார்கள்.

இந்தக் காலத்தில் யார் அறிவுரையைக் கேட்டுத் திருந்துவார்கள். அது முடிகிற காரியமே கிடையாது. எல்லாருக்கும் மனம் போன போக்குதான் வசதியானது. ஒரு சிலருக்கு மனம் போன போக்கு அறிவுரையின் போக்காக இருக்கும். அது அவர்கள் அதிர்ஷ்டம். எல்லாருக்குமா அந்த அதிர்ஷ்டம் கிடைத்து விடும்?

பேரைப் பாருங்கள் அறிவுரை. மனவுரை, உளவுரை என்றிருக்கக் கூடாதா?

அறிவுரை சொல்வதற்கும் வயது பேதமில்லாமல் போய் விட்டது. யார் வேண்டுமானாலும் அறிவுரை சொல்லலாம் என் ற நிலை. கேட்பதற்கு யாருமில்லை என்றாலும் கவலையில்லை. பார்ப்பதற்கு குழந்தையைப் போல இருக்கிறார்கள். பாட்டனைப் போல அறிவுரை சொல்கிறார்கள்.

இப்படியெல்லாம் நிகழ்கிறதென்றால் எதார்த்தம் செத்துப் போய் எத்தனையோ நாட்களாகி விட்டன என்றுதானே பொருளாகிறது.

*****

திரை நியாயங்கள்

திரைப்படங்கள்தான் ஒரு மோசமான மன கற்பிதத்தை உருவாக்கி விட்டன. ஒரு பாட்டு இருந்தால் போதும் எல்லாவற்றையும் மாற்றி விட முடியும் என்று. ஒரு பாட்டு பில் கேட்ஸாக்குகிறது, வாரன் பப்பெட்டாக்குகிறது, எலான் மஸ்க்காக்குகிறது, ராக்பெல்லராக்குகிறது, தாமஸ் ஆல்வா எடிசனாக்குகிறது இன்னும் என்னென்னமோவாக ஆக்குகிறது.

தட்டையாக ஒரு கோணத்தை மட்டும் எத்தனை காலம் மாற்றி மாற்றி காட்டி விட்டார்கள். ஹீரோயிசம் என்ற ஒரு கோணத்தைத் தவிர வேறு கோணங்கள் இருக்கின்றனவா? குறுங்கோணம், விரிகோணம், செங்கோணம், நேர்க்கோணம், பூச்சியக்கோண்ம, பின்வளைவுக் கோணம் போன்றவை எல்லாம் அவ்வளவு மட்டமா?

எந்தெந்த கூறுகளில் எல்லாம் கதையடித்து, படம் எடுத்து, ஜல்லியடித்துக் கல்லா கட்டலாம் என்று பார்க்கிறர்கள்.

ஒவ்வொன்றும் எவ்வளவு அறிவு சார்ந்தது. எல்லாவற்றையும் உணர்வு சார்ந்ததாக மட்டும் மாற்றி விட்டார்கள். அவ்வளவு செயற்கைத்தனத்தோடு உணர்வு சார்ந்து ஒரு கையை நீட்டித் தொடர்வண்டியை நிறுத்துகிறார்கள். சுண்டுவிரலால் ஒரு வாகனத்தைத் தூக்கி கிறுகிறுவென்று சுற்றித் தூக்கி எறிகிறார்கள். கோபம் வந்தால் நூறு, இருநூறு பேரையாவது சண்டையில் பறக்க விடுகிறார்கள். பாதி உடல் பூமிக்குள் போகும் அளவுக்கு ஒருவரைத் தலைகீழாகப் போட்டு குத்துகிறார்கள். இவ்வளவு செயற்கைத்தனத்தோடா வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

அறிவார்ந்த நாய்கள் உருவாக வேண்டும் என்று யாருக்கு அக்கறை? எல்லாம் காலைச் சுற்றிக் கொண்டிருக்கும் உணர்ச்சி நாய்களாக இருக்க வேண்டும். பொடுகிற பருக்கைகளைத் தின்று காலைச் சுற்றி வரும் நாய்களாக இருந்தால் போதும். அதில் உருவாகும் ஒரு புரட்சிகர நாய்தான் ஹீரோவாகி விடுகிறது. நடுரோட்டில் அசிங்கம் செய்வது போலக் குடித்து விட்டுக் கூத்தாடுகிறது. நான்கு பேர் நாற்பது பேர் பார்க்கிறார்கள் என்ற லஜ்ஜையில்லாமல் புணரும் நாய்களைப் போலக் குத்தாட்டம் போடுகிறது.

இவ்வளவு செய்தது போதாது என்று ஒரு ஹீரோ ஏன் மற்ற பாத்திரங்களை அவ்வளவு டம்மியாக்குகிறது? அந்த ஏதேச்சதிரகாரம்தான் பிடிக்க மாட்டேன்கிறது. அதை எதிர்த்துதான் வில்லன் போராடுகிறான். அவனை யார் கவனிக்கிறார்கள்? அவனைத் திட்டித் தீர்த்து விடுகிறார்கள். நியாயத்துக்காகப் போராடுவதுதான் முக்கியம் என்று நினைக்கிறார்கள் எதார்த்தத்தில் அத்தனை அதர்மங்களுக்கும் துணை போகுபவர்களும் துணை நிற்பவர்களும்.

என்னவோ அநியாயத்துக்கு எதிராகவும் அதர்மத்துக்கும் எதிராகவும் போராட வேண்டும் என்று சொல்கிறார்களே. நிஜத்தில் மனிதர்களை எதிர்த்துதானே போராட வேண்டியிருக்கிறது.

இப்படி ஒரு ஹீரோ சண்டை போட முடியும் என்றால் நியாயத்தைக் காப்பாற்றலாம். மற்றவர்கள் எல்லாம் எப்படி நியாயத்தைக் காப்பாற்ற முடியும்? அந்த ஹீரோ சண்டை போட வரும் வரை நாம் பொறுத்திருப்பதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது? ஹீரோ வரும், சண்டை போடும், நியாயத்தை நிலைநிறுத்தும். நாமெல்லாம் முன்பதிவு செய்து பார்த்துவிட்டு வரலாம். அதற்கு மேல் பார்க்க வழியில்லை. அங்கு பார்த்தால்தான் உண்டு.

*****

26 Mar 2024

உறங்கிக் கொண்டிருக்கும் எரிமலை மனது!

உறங்கிக் கொண்டிருக்கும் எரிமலை மனது!

ஓர் இரவைத் தூங்க முடியாமல் கழிப்பது எவ்வளவு துர்பாக்கியமானது? மனதுக்குள் ஒரு முடிவுக்கு வராத முடியாதபடி குழப்பமான நிலையில் சஞ்சரிப்பது எவ்வளவு கொடுமையானது? எல்லாருக்கும் ஒரு நேரத்தில் அப்படி ஓர் இரவும், அப்படி ஒரு மனதும் உண்டாகி விடுகிறது. தூக்கம் வராமைக்கும், மனம் குழம்பி விடுவதற்கும் ஆயிரம் காரணங்கள் அல்லது அதையும் தாண்டி நூறாயிரம் காரணங்கள் இருக்கலாம். அதற்கான அடிப்படை காரணம் விருப்பமின்மை என்ற புள்ளியில் சுழன்று கொண்டிருக்கும். உங்களை உங்களுக்கும், உங்கள் வாழ்க்கையை உங்கள் மனதுக்கும் பிடித்திருந்தால் நீன்றாக உறங்கிக் கொண்டிருப்பதுதெரியாமல் உறங்கிக் கொண்டிருப்பீர்கள். மனம் என்ற ஒன்று இருக்கிறது தெரியாமல் இயங்கிக் கொண்டிருப்பீர்கள்.

நீங்கள் விரும்பிய ஒன்றே ஒரு நாள் விருப்பமின்மை எனும் புள்ளியை நோக்கி நகரலாம். அது புளித்துப்  போவதால் அன்று. சலித்துப் போவதாலும் அன்று. அதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாமர்த்தியத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வேலை குறித்து நீங்கள் அறிந்து கொண்டாக வேண்டும். அது குடும்ப வேலையாக, அலுவலக வேலையாக, சமூக வேலையாக அல்லது வேறெந்த வேலையாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் வேலை பார்க்கவும் வேண்டும், அதே நேரத்தில் எந்த அளவுக்கு வேலை பார்க்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு முன்பாக வேலைகள் எப்படி நடக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் நீங்கள்.

அங்கே வேலைகள் நடக்கின்றன!

வேலைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. அவரவர் வேலைகளை அவரவர் செய்வதைத் தவிர்க்கிறார்கள். வேலைகள் நிறைவேற்றப்பட வேண்டியதாக இருக்கின்றன. நிறைவேற்றப்படாத வேலைகள் வேலைகளை நிறைவேற்றியவர்களை நோக்கி நகர்கின்றன. வேலைகளை நிறைவேற்றியவர்கள் கூடுதல் வேலைகளைச் சுமக்கிறார்கள். வேலைகள் சுமத்தப்படுகின்றன. எந்த வேலைகளையும் செய்யாதவர்கள் வேலைகளைச் செய்யாமல் தவிர்ப்பதை வேலையாகச் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு திறமையான மேலாளர் வேலைக்கு அமர்த்தப்பட்ட அத்தனை வேலையாட்களையும் திறமையாக வேலை வாங்க வேண்டும். சாமர்த்தியமானவர்களையே மேலிடங்கள் விரும்புகின்றன. சாமர்த்தியமான மேலாளர்கள் வேலை செய்பவர்களைக் கண்டறிந்து மீண்டும் மீண்டும் வேலை வாங்குகிறார்கள். வேலை செய்யாதவர்களை வேலை செய்யாமல் இருக்க பழக்குகிறார்கள்.

நாட்கள் நகர்கின்றன.

வேலை செய்பவர் மேலதிக வேலைகளைக் செய்து களைத்துப் போகிறார். வேலை செய்யாதவர் வேலை செய்யாமல் வந்து போகிறார். வேலை செய்யாமல் இருப்பதே அவர்களுக்குச் சில நேரங்களில் களைப்பைத் தருகிறது, சலிப்பை உண்டு பண்ணுகிறது.

வேலை செய்பவர்கள் வேலைகளைச் செய்து செய்து வெடித்துப் போகிறார்கள். துண்டு துண்டாகிச் சிதறிப் போகிறார்கள். மனிதர்கள் கண் முன்னே வெடித்துச் சிதறுவதை எவரும் கண்டு கொள்வதாகத் தெரிவதில்லை. எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் வேலை செய்யாதவர்கள் வேலை செய்யாமையைத் தொடர்கிறார்கள். சாமர்த்தியமான மேலாளர்கள் வேலை செய்பவர்களை மட்டும் வேலை வாங்குகிறார்கள். வேலை செய்யாதவர்களுக்குச் சம்பளத்தை வாங்கித் தருகிறார்கள். வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

வேலைக்காரர் ஏன் இப்படிப் பேசுகிறார்?

வேலைக்காரர் இப்படிப் பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா? அதை யாரும் கேட்டிருக்க முடியாது. அவர் இதை யாரிடமும் பேசுவதில்லை. பேசாததை எப்படிக் கேட்க முடியும்? கேட்க முடியாது என்றில்லை, கேட்க முடியும். அவர் மனதுக்குள் பேசிக் கொண்டிருக்கிறார். மனதோடு பேசுவதை எப்படிக் கேட்க முடியும்? கேட்க முடியாது என்றில்லை, கேட்க முடியும். கேட்க விரும்பாதவர்கள் அதிகம் சூழ்ந்திருக்கும் போது மனதோடு பேசுபவர்கள் அதிகரித்துப் போகிறார்கள். கேட்பவர்கள் வரும் போது மனம் பேசத் தொடங்கும்.

ஒரு வேலைக்காரர் பேசுவதை அவசியம் கேளுங்கள். அவர் இப்படிப் பேசுகிறார்.

வேலைகளை என் மேல் சுமத்துகிறார்களோ என்று நான் நினைக்கிறேன். சமீப நாட்களாக அலைச்சல் சார்ந்த வேலைகள், கோப்புகள் சார்ந்த வேலைகள், பதிவேடுகளுக்கும் பதிவேற்றங்களுக்கும் இடையிலான தொழில்நுட்ப வேலைகள், வேலைகளைக் கொடுத்தாக வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்படும் வேலைகள், புதிது புதிதாக உருவாக்கி வழங்கப்படும் வேலைகள், வேலைகளை உருவாக்குவதற்கென்று இருக்கும் உயர்மட்ட ஆய்வுக்குழு உருவாக்கித் தரும் வேலைகள் – இவற்றுக்கு மத்தியில் சிறுநீர் கழிப்பதும், தாகத்திற்கு நீர் பருகுவதும் வேலைகளாகி விடுகின்ற. சிறுநீரை அடக்கிக் கொண்டு பார்த்த வேலைகள் ஆயிரம் இருக்கும். தாகத்தைத் தவிர்த்து விட்டு பார்த்த வேலைகள் சில நூறு இருக்கும். புதிய பொறுப்புகளுக்காகப் பழைய பொறுப்புகள் விட்ட பாடில்லை. செல்லரித்துப் போன பழைய பதிவேட்டையும் அடிக்கடிப் பார்த்து விவரங்களை நினைவில் கொண்டே இருக்க வேண்டும். பணிக்கு வரும் இதர அலுவலர்கள் எனக்கென்ன என்பது போலத்தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க அவர்கள் செய்யாமல் விட்ட பணிகளையும் தாங்குவது என்றால்… முதுகெலும்பு உள்ளவர் செய்கிற காரியமா? முதுகெலும்பு உடைந்து நாட்களாகி விட்டதால், உடைந்த முதுகெலும்பில் எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றலாம் என்ற சித்தாந்ததை உருவாக்கியவர்கள் அதையே செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாயாய் உழைப்பவர்கள் பேயாய் மாறுவார்கள்!

நிறைவேறாத ஆசையுடன் இறப்பவர்கள் பேயாய் மாறுவார்கள் என்று கிராமத்தில் சொல்லக் கேட்டவர்கள்தானே நாம். அதெல்லாம் மீமெய்யியல் என்று ஒதுக்கினாலும் நாயாய் உழைப்பவர்கள் பேயாய் மாறுவார்கள் என்பதை எப்படி அப்படி ஒதுக்க முடியும்?

நாயாய் உழைப்பவர்கள் என்றால் லொள் லொள் என்று குரைத்துக் கொண்டு உழைப்பவர்களா? இப்படியா புரிந்து கொள்வது மொன்னையாக. அவர்கள் விசுவாசமாக உழைப்பவர்கள், உழைக்கிறவர்கள், உழைத்துக் கொண்டே இருப்பவர்கள். நாயின் விசுவாசத்துக்கும் உழைப்புக்கும் என்ன கிடைக்கும்? பணக்கார வீட்டு நாய்களுக்குப் பலதும் கிடைக்கலாம். மனித நாய்களாகக் கருதப்படுபவர்களுக்கு ஒரு பதவி உயர்வுதான் ஒரு குச்சு மிட்டாய்.

குச்சு மிட்டாய் சுலபமாகக் கிடைக்கும் சமுதாயத்திலா நாம் இருக்கிறோம்? குச்சிகள் கிடைக்கலாம், குச்சி மேலிருக்கும் மிட்டாய்கள் கிடைக்காது. அதை உங்கள் கைக்கு வரும் முன்னே வேலை செய்யாத ஒருவர் சப்பிச் சாப்பிட்டிருப்பார். அவருக்கு அது ஒன்றுதான் வேலை. தேனெடுப்பவர் ஒருவர், புறங்கையை நக்கி சாப்பிட்டிருப்பவர் வேறொருவர்.

ஊரார் கோப்பைப் பார்த்து சரி செய்து கொடுத்த உங்கள் கோப்பில் இருக்கும் ஓட்டைகள் அப்போது தெரிய வரும். ஒரு ஓட்டையா? இரண்டு ஓட்டைகளா? ஆயிரம் ஓட்டைகள் உள்ள ஓட்டைக் குடையில் நீங்கள் எந்த ஓட்டையை அடைப்பீர்கள்? குடை பிடித்திருக்கிறோம் என்ற கௌரவத்துக்கு நீங்கள் மழையில் நனைந்து கொண்டே போகலாம். கேட்பீர்களா நீங்கள்? உங்களுக்கு ரோஷம் வந்து விடும்.

சிலரிடம் சொல்லி வைப்பீர்கள். சிபாரிசுக்காகக் காலணி துடைப்பீர்கள். நீங்கள்தான் உழைத்து உழைத்து எல்லாவற்றையும் உழைப்பாக்கி விட்டீர்களே? காலில் விழுவதும் உழைப்புதான், அடி மற்றும் உதைகளை வாங்கிக் கொள்வதும் உழைப்பதும், அவமானத்தை அடிமனதில் தாங்குவதும் உழைப்புதான்.

குச்சி மிட்டாய் கனவுக்காகப் பலரிடம் பேசுவீர்கள். அவர்கள் கதைக்கு உதவாத விதிகளைச் சொல்வார்கள். காரியத்தை ஆக்காத ஆணைகளை நீட்டுவார்கள். ஆணாக நீங்கள் இருந்தால் ஆண் என்பதற்கான சான்றினைக்  கேட்பார்கள், பெண் என்றால் பெண் என்பதற்கான சான்றினைக் கேட்பார்கள். முடிவில் அது நீங்கள் அதாவது நீங்கள் நீங்கள்தான் என்பதற்கான சான்றினைக் கேட்பார்கள். நான் யார் என்ற கேள்வியைக் கேட்டு ரமண நிலைக்குச் செல்ல வைப்பார்கள். முற்றும் துறந்த முனியாகி விட்டால் அதன் பின் குச்சு மிட்டாய் உயர்வு உங்களைப் பாதிக்காது. விட மாட்டார் கருப்பு என்று தொடர்ந்தால் சட்ட விதிகள் சும்மா இருக்குமா? உங்களுக்காக மனநல மருத்துவர் காத்திருப்பார். அவரிடம் முன்கூட்டியே பணம் செலுத்தி நேரம் வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

இதற்கு மேல் என்ன நடக்கும் என்று கேட்கிறீர்களா? எல்லாவற்றையும் ஓர் எழுத்தாளர் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? அப்படிச் சொன்னால் உங்கள் வேலையை அவர் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருப்பதாக அர்த்தமாகும். நீங்களே அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள். எழுத்தாளர் கொஞ்ச நேரம் ஓய்வு நேரத்தில் இருக்கட்டும். தமிழில் எழுதுபவர்களுக்குப் பதவி உயர்வும் கிடையாது, நீங்கள் எப்படி இரட்டை அர்த்தத்தில் பார்த்தாலும்.

*****

25 Mar 2024

பயணத்தின் முடிவிலி

பயணத்தின் முடிவிலி

நீளமாக ஒரு ரயில் பயணம்

ரயில் பயணம்தான் போக வேண்டுமா

மனதில் எவ்வளவு வேண்டுமானாலும் போய்க் கொள்ளலாம்

முன்பதிவுகள் இல்லை

கட்டணங்கள் இல்லை

போகத் தெரிந்திருக்க வேண்டும்

தெரியாமல் போனால் பயணித்துக் கொண்டே இரு

*****

 

எசமானரும் அவரே

இப்படி ஒரு மனது

எங்கிருந்துதான் வருகிறதோ

இது முடித்து விட்டுதான் அது

அது முடித்து விட்டுதான் இது

அதுவாகப் போட்டுக் கொள்கிறது

போட வைத்த எசமானர் யாரோ

போட வைத்த மனதே

*****

 

சொல்லாமல் சொல்

மனதை விடவா ஒரு பேய்

எப்போதும் ஒரு பூ பூக்கும்

எப்படியும் ஒரு நம்பிக்கை பிறக்கும்

சொத்தைப் பல்லும் ஒரு நாள் விழும்

போலீஸ்களுக்குத் திருடர்கள் தேவை

சாதாரண ஒன்று எப்போதும் அசாதாரணம் ஆகலாம்

நீங்கள் செய்யாமல் இருக்கலாம்

மற்றவர்களும் அப்படி இருக்க மாட்டார்கள்

நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம்

யாருக்கோ அது பிடித்திருக்கும்

இப்படித்தான் என்று சொல்ல முடியாது

ஆனால் சொல்லித்தானே ஆக வேண்டும்

*****

24 Mar 2024

ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ – ஓர் எளிய அறிமுகம்!

ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ – ஓர் எளிய அறிமுகம்!

ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலை அண்மையில் படித்தேன். மிக மெதுவாக நான் படித்த நாவல் என்று இதைச் சொல்லலாம். நாவல்களை ஒரே மூச்சில் படித்து முடித்து விடும் பழக்கமுள்ள எனக்கு இந்த நாவலை மிக மெதுவாகப் படித்தது ஆச்சரியமான அனுபவமாக இருந்தது. சில நாட்களில் ஐந்து பக்கங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். ஒரு சில நாட்களில் நூறு பக்கங்களும் படித்திருக்கிறேன். இப்படி சில நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக, சில நேரங்களில் மிக அதிகமாக என்று கலவையாக இந்த நாவலைப் படித்து முடிக்க மூன்று வார காலமாயிற்று.

நாவலின் கதைக்களம் என்றால் ஆண் – பெண் மனதின் இணைவுச் சிக்கல்தான். ரங்கசாமி என்கிற ரங்கா பத்திரிகையாளர். கல்யாணி நாடக நடிகை. அண்ணாசாமி நாடகக்குழுவின் ஒருங்கிணைப்பாளர். இந்த மூன்று பாத்திரங்களும்தான் நாவலின் பிரதான பாத்திரங்கள். நாவலின் பெரும்பாலான உரையாடல்கள் இவர்களைச் சுற்றித்தான் நடக்கின்றன.

ரங்காவுக்கு முதல் திருமணம் நடந்து ஒரு குழந்தையும் பிறந்து மனைவி இறந்து விடுகிறாள். கல்யாணி முப்பதைக் கடந்த மணமாகாத கன்னியாக இருக்கிறாள். ரங்கா அண்ணாசாமி நடத்தும் நாடகங்களின் தீவிர விமரிசகர். அந்த விமரிசனமே ரங்காவின் மீது ஓர் ஈர்ப்பைக் கல்யாணிக்கு ஏற்படுத்துகிறது. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடும் போது அவர்களைத் திருமணத்தை நோக்கி நகர்த்துகிறார் அண்ணாசாமி.

திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் ரங்காவுக்கு கல்யாணியின் காதலின் மீது ஒரு ஓர் உணர்வுரீதியான திருப்தியின்மை தோன்றுகிறது. மற்றபடி இருவருக்கும் சண்டைகளோ, சச்சரவுகளோ இல்லை. கல்யாணியும் அதற்கு இடம் தருபவள் அல்லள். அவரவர் கருத்துகளும் நிலைபாடுகளும் எதிராகப் போகின்றன. அப்படி எதிராகப் போகும் இடத்திலும் இருவரும் நாகரிகமாகப் பிரிவதை ஏற்றுக் கொள்கின்றனர். ரங்காவுக்குத்தான் அப்படி ஒரு பிரிவு தேவைப்படுகிறதே தவிர கல்யாணி இணைவு மற்றும் பிரிவு இரண்டுக்கும் தயாராகவே இருக்கிறாள்.

ரங்காவுக்கு காதலில் உணர்வு சார்ந்த பந்தம் அவசியமாகப் படுகிறது. அவனே ஓர் அறிவு ஜீவிதான் என்ற போதிலும் உணர்வு சார் போதாமையை உணர்கிறான். கல்யாணி அறிவுப்பூர்வமாகக் காதலைக் காண்கிறாள். அவள் தான் வெளிப்படுத்தும் காதலில் எவ்வித போதாமையையும் காட்டுவதும் இல்லை. புரையோடிப் போன குடும்ப வாழ்க்கையில் காதல் என்பது தியாகமும் விட்டுக் கொடுத்தலுமாக இருப்பதை மனதளவில் பிடித்துக் கொள்ளும் ரங்கா தனக்காகக் கல்யாணி எந்த அளவு விட்டுக் கொடுத்துத் தியாகியாக இருப்பாள் என்பதை யோசிக்கும் இடத்தில் இருவருக்குமான விரிசல் துவங்குகிறது.

ரங்காவின் முதல் திருமண வாழ்வு என்பது அவன் எதிர்பார்த்த அளவுக்கு உணர்வு சார்ந்த திருப்தியைத் தருகிறது. அப்படி ஓர் உணர்வு சார்ந்த காதல் வாழ்வை அவன் வாழ்ந்தான் என்பதை யோசித்துப் பார்க்கக் கூட தோன்றாத அளவுக்கு அந்த வாழ்வு துவங்கி முதல் மனைவியான தேவகியின் மரணத்துடன் அது முடிந்து போகிறது. ரங்காவுக்காகத் தேவகியின் தங்கை சுமதி காத்திருக்கிறாள். ரங்கா அதை தீவிரமாக மறுதலித்து விட்டு மனம் நாடும் கல்யாணியைத் திருமணம் செய்து கொள்கிறான்.

நாடகத்தில் தபேலா வாசிக்கும் கலைஞன் தாமுவும் கல்யாணிக்கு உதவியாக இருக்கும் பட்டம்மாளும் நாவலின் துணைப் பாத்திரங்கள். அவர்களுக்கான திருமணத்தை முன்னின்று செய்து வைப்பது ரங்காவும் கல்யாணியும்தான். உணர்வு சார்ந்த காதலில் எதார்த்தத்தில் நேரிடும் பிரச்சனைகள் மற்றும் வலிகளை அந்தப் பாத்திரங்கள் மூலமாக ஜெயகாந்தன் காட்டுகிறார்.

ரங்கா விவாகரத்தை விரும்பும் போது ரங்காவும் கல்யாணியும் சந்திக்கும் வழக்கறிஞர் பாத்திரமான ராகவனின் பாத்திரம் நாவலின் கௌரவப் பாத்திரம் எனலாம். திருமண பந்தத்திலிருந்து விலகுவதற்குச் சட்டத்தைப் போருத்த வரை யில் வலுவான காரணம் தேவை என்பதை ராகவன் எடுத்துச் சொல்கிறார். அவர்களிடம் உரையாடிய பிறகு அவர்கள் இருவரும் பிரியக் கூடிய ஜோடிகள் இல்லை என்பதையும் தன்னுடைய அபிப்ராயமாகச் சொல்கிறார் ராகவன்.

ராகவனின் வாக்கு பலிக்கிறது. சில மாதங்கள் ரங்கா கல்யாணியைப் பிரிந்திருக்கிறான். அந்த நிலையில் கல்யாணிக்கு ஏற்படும் எலும்புருக்கி நோயின் பாதிப்பால் கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையாக ஆகி விடுகிறாள். அண்ணாசாமி ரங்காவிடம் செய்தியைச் சொல்லி அழைத்து வருகிறார். ரங்காவுக்கு இப்போது அவளை விட்டுப் பிரிய மனமில்லை. பத்திரிகை பணியிலிருந்து ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு கல்யாணியைக் கவனித்துக் கொள்கிறான். இனி கல்யாணியைப் பிரிவதில்லை என்ற முடிவை எடுக்கிறான்.

நாவலின் முன்னுரையில் இக்கதையின் முக்கிய பாத்திரங்கள் அனைத்துமே தான்தான் என்கிறார் ஜெயகாந்தன். தன்னையே ஆணாகாவும் பெண்ணாகவும் படைத்து மனச்சிக்கல்களை இந்த நாவலில் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்.

மனப்போக்குகளும், மனதில் இருக்கும் கருத்துகளும் அதற்கான நிலைப்பாடுகளும் மனிதர்களுக்கு இடையே எத்தனை வேறுபாடுகளை, பிரிவுகளை உண்டாக்குகின்றன என்பதை ஜெயகாந்தன் வாழ்க்கைக் காட்சிகளாக நாவல் முழுவதும் விரிய விடுகிறார். மனம் தன் நிலைபாடுகளுக்கு சமூக சம்பிரதாயங்களை எவ்வளவு வலுவாகப் பிடித்துக் கொள்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். ஆண் மனதைப் பெண் புரிந்து கொள்ளவும், பெண் மனதை ஆண் புரிந்து கொள்ளவும் இரண்டு பக்கமாகவும் நின்று நாவலின் பல இடங்களில் ஒரு நாவலாசிரியாக ஜெயகாந்தன் பேசுகிறார்.

ஓர் உறவில் ஒருவருக்கொருவர் எந்த அளவுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கிலே இந்த நாவலை ஜெயகாந்தன் படைத்திருக்கிறார். அந்த நோக்கத்தை மிகவும் வெளிப்படையாகவும் நாவலில் புலப்படுத்துகிறார்.

சொல்லாமல் விட வேண்டிய பல இடங்களைப் பொட்டுத் தெரித்தாற் போலச் சொல்லிச் செல்கிறார் ஜெயகாந்தன். இதுதான் அவருடைய எழுத்துப் பாணியும் கூட. இப்படித்தான் என்ற வாசக அனுமானத்திற்கு இடமில்லாமல் அனைத்தையும் நாவலில் வெளிப்படுத்தி விடுகிறார். அவர் சொல்ல வரும் வாழ்க்கைத் தத்துவத்தை மிக அழுத்தமாகக் காட்டும் வகையில் இந்த நாவல் அமைகிறது. இருவர் மனமும் இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று ஊகிக்க இடம் தர வேண்டிய இடங்களையும் அப்பட்டமாகப் பேசி விடுவதன் மூலமாக தான் விரும்பும் ஒரு குடும்ப வாழ்க்கை என்ன என்பதை படம் போட்டுக் காட்டி விடுகிறார் ஜெயகாந்தன்.

ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப வாழ்க்கையை ஒரு நாடகம் போல சாட்சி பாவமாக நின்று பார்க்கும் போது ஒருவரை ஒருவர் மதித்து உண்மையாகவும் நேர்மையாகவும் உணர்வு ரீதியாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பு செலுத்த வேண்டியதன் அவசியம் புரிய வரும் என்பதுதான் இந்த நாவல் மூலமாக ஜெயகாந்தன் சொல்ல வரும் சங்கதி எனலாம்.

*****

22 Mar 2024

இனிப்பு நோயும் உணவுக் கட்டுபாடும் – சில குறிப்புகள்

இனிப்பு நோயும் உணவுக் கட்டுபாடும் – சில குறிப்புகள்

எங்கெங்கு காணினும் இனிப்பு நோய் (சுகர்) என்று சொல்லும் அளவிற்கு அது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. சிறிய குழந்தைகளிலிருந்து பெரிய மனிதர்கள் வரை யாரையும் அது விட்டு வைக்கவில்லை. கருவிலிருக்கும் குழந்தைகளைக் கூட அது விட்டு வைக்கவில்லை.

கருத்தரித்த தாய்மார்களுக்கு இனிப்பு நோய் சோதனை (சுகர் டெஸ்ட்) கட்டாயம் செய்யப்படும் அளவுக்கு அது கோர தாண்டவம் ஆடுகிறது.

இதென்ன இனிப்புக்கு வந்த சோதனை என்று பார்த்தால் இந்தியாவின் தெருவுக்குத் தெரு இனிப்புக் கடைகள் இருக்கின்றன. கூடவே மருந்துக் கடைகளும் இருக்கின்றன என்பது வேறு ரகம். இந்தியாவில் இனிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 11 சதவீதம் இருக்கிறார்கள். அதாவது பத்துக்கு ஒருவர் இனிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

17 சதவீதம் மக்கள் இனிப்பு நோய் வருவதற்கான அறிகுறிகளால் சூழப்பட்டிருக்கிறார்கள். ஆக 11 + 27 = 38 கிட்டதட்ட 40 சதவீத அளவுக்கு மொத்த மக்கள் தொகையில் இனிப்பு நோய் பாதிப்பிற்குள் இந்தியா இருக்கிறது. அதாவது பத்தில் நான்கு பேர் இனிப்பு நோயோடோ அல்லது இனிப்பு நோய் அறிகுறிகளோடு இருக்கிறார்கள். சற்றுத் தோராயமாகச் சொன்னால் இந்தியாவில் நீங்கள் சந்திக்கும் இருவரில் ஒருவர் இனிப்பு நோய் உடையவராக இருப்பார் அல்லது இனிப்பு நோய்க்கான அறிகுறிகளோடு இருப்பார்.

இனிப்பு நோய்க்கான பாதிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிகம் என்கிறார்கள். இதுதான் தென்னாட்டிற்கு வந்துள்ள சோதனை போலும். இதனுடன் இரத்த அழுத்த நோய் உடையவர்கள் இந்தியாவில் 35 சதவீதம் இருக்கிறார்கள். இந்த நோயாளர்களில் நோய்களினின்று தடுத்தாட்கொள்ளும் உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுபாட்டைக் கடைபிடிப்பவர்கள் 10 சதவீதம்தான் என்கிறார்கள்.

இதை மேலும் புரிந்து கொள்ள, சற்றுத் தோராயமாகக் கணக்கிட்டால் அதாவது இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடி எனக் கொண்டால் 40 கோடி பேர் இனிப்பு நோயோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். இந்த 40 கோடி பேரில் வெறும் 4 கோடி பேர்தான் இனிப்பு நோயைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுபாட்டைக் கைக்கொள்கிறார்கள். மீதி இருக்கும் 36 கோடி பேர் இனிப்பு நோயிருந்தும் இனிப்பு நோய் குறித்த அலட்சியத்தோடு இருக்கிறார்கள் அல்லது உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுபாட்டில் கவனம் இல்லாமல் மருத்துவம் செய்து கொள்வதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள். இந்த அலட்சியம் அவர்களுக்கு மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, புற்றுநோய் போன்ற அடுத்தக்கட்ட பாதிப்புகளுக்கு இட்டுச் செல்வதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இனிப்பு நோயாளர்கள் என்றில்லை, பொதுவாக அனைவரும் கடைபிடிப்பதற்கான உணவுக் கட்டுபாடு ஏதேனும் உள்ளதா? அப்படியே இருந்தாலும் அந்த உணவுக் கட்டுபாட்டைக் (டயட் கன்ட்ரோல்) கடைபிடிப்பது எப்படி?

உணவுக் கட்டுபாடு என்றதும் அதுவே பலருக்கு ரத்த அழுத்தத்தை அதிகமாக்கி விடுகிறது. அதை ஒரு கடினமான ஒன்றாகப் பார்க்கிறார்கள். அவர்களுக்காக கொஞ்சம் மனதைத் தளர்வாக்கும் முறையில் சிலவற்றைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

என்ன பெரிய உணவுக் கட்டுபாடு (டயட் கன்ட்ரோல்)?

பசித்தால் சாப்பிடுங்கள்.

பசிக்கவில்லையா? சாப்பிடாமல் இருங்கள்.

தேநீர் (டீ), குளம்பியை (காப்பி) முகர்ந்து கூட பார்க்காதீர்கள்.

நொறுக்குத் தீனிகளைத் திரும்பி கூட பார்க்காதீர்கள்.

மது மற்றும் போதை பொருட்களை எட்டிக் கூட பார்க்காதீர்கள்.

ஒரு வேளை உணவு பழ உணவாக இருக்கட்டும்.

மற்ற இருவேளை உணவிலும் காய்கறிகள் மிகுந்திருக்கட்டும்.

தவித்தால் தண்ணீர் குடியுங்கள்.

ரசாயன குளிர்பானங்களைத் தள்ளி விடுங்கள்.

இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு மட்டுமா உணவு.

கசப்பும் துவர்ப்பும் சேர்ந்ததே உணவு.

மூலிகைகள் கசப்பு.

நீங்கள் உண்ணும் மாத்திரைகள் கசப்பு.

இன்னும் சில மருந்து பொருட்கள் துவர்ப்பு.

ஆக கசப்பையும் துவர்ப்பையும் உணவின் சுவை பட்டியலுக்குள் சேருங்கள்.

நாளொன்றுக்கு நாற்பது நிமிடம் நடை போடுங்கள்.

யார் வீட்டிற்குச் சென்றாலும் உணவு உபசரிப்பை நாசுக்காக மறுங்கள்.

வாரத்தில் ஒரு வேளை பட்டினி இருங்கள்.

மற்றபடி எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்களைத் தேடாதீர்கள்.

காரணம் இல்லாமலே மகிழ்ச்சியாக இருங்கள்.

உணவு கட்டுபாடு என்பது உணவில் கட்டுபாடாக இருப்பது மட்டுமல்ல, மனதில் மகிழ்ச்சி தட்டுபாடு இல்லாமல் இருப்பதும் ஆகும். உங்கள் மனம் மகிழ்ச்சியாக இல்லை என்றால் நீங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ உண்ணலாம். உங்கள் மகிழ்ச்சிக் குறைவு உங்கள் வயிற்றுக் கோளாறுகளுக்குக் காரணமாக அமையலாம். உணவு கட்டுபாடு என வரும் போது உணவையும் பார்த்துக் கொள்ளுங்கள். மனதையும் பார்த்துக் கொள்ளுங்கள். உணவை உண்ணும் போது உணவைப் பாருங்கள். தொலைக்காட்சியையோ அலைபேசியையோ பார்க்காதீர்கள்.

அடுத்த உடற்பயிற்சி குறித்து மேலும் கொஞ்சம் கூறுங்கள் என்கிறீர்களா? அதை நான் முன்பே ஒரு பத்தியில் கூறியிருக்கிறேனே!

*****

21 Mar 2024

வீட்டில் சமைப்போம்! ஆரோக்கியமாய் இருப்போம்!

வீட்டில் சமைப்போம்! ஆரோக்கியமாய் இருப்போம்!

‘வீட்டில் சமைப்போம்! ஆரோக்கியமாய் இருப்போம்!’ – இது ஒரு முழக்கமாகத் தோன்றலாம். வீட்டில் சமைப்பது இப்படி ஒரே ஒரு முழக்கத்தோடு முடிந்து விடாது.

‘வீட்டில் சமைப்போம்! செலவைக் குறைப்போம்!’ என்ற அடுத்த முழக்கத்தையும் வீட்டில் சமைப்பது குறித்து உருவாக்கலாம்.

இப்படி ஆரோக்கியத்திற்காகவும், செலவைக் குறைப்பதற்காகவும் வீட்டில் சமைப்பதில் ஏகப்பட்ட நன்மைகள் மட்டுமல்லாது திறன் வளர்ப்பு சங்கதிகளும் அற்புத நல்விளைவுகளும் அடங்கியிருக்கின்றன.

வீட்டில் சமைப்பது என்று முடிவெடுத்து விட்டால் உங்களுக்குக் கீழ்காணும் திறன்கள் தானாகவே வளர்வதோடு கீழ்காணும் அற்புத விளைவுகளும் தாமாக ஏற்பட்டு விடும். சமைப்பது ஒரு வரப்பிரசாதம். சாதமும் வரப்பிரசாதமும் இதில் மட்டும்தான் கிடைக்கும்.

மேற்படி நான் சொன்ன அந்தத் திறன்கள் மற்றும் விளைவுகள் என்னவென்று பார்ப்போமே!

1. திட்டமிடல்

இதென்ன இவ்வளவு பெரிய வார்த்தை என்று பயந்து விட வேண்டும்.

சமைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள், பொருட்கள் இல்லாமல் எப்படிச் சமைக்க முடியும்? வெறுங்கையில் முழம் போட முடியாத மற்றும் வாயினால் சர்க்கரைப் பந்தல் போட முடியாத காரியம் இது. ஆகச் சமைப்பது என்று முடிவெடுத்து விட்டால் நீங்கள் திட்டமிட்டாக வேண்டும். பட்டியல் போட்டுத் தேவையான பொருட்களைத் திட்டமிட வேண்டும். ரோக்காவைச் சோக்காகப் போட்டுத்தான் ஆக வேண்டும். ஆகவே இந்த மிகப்பெரிய வார்த்தையுடன் சமையல் தொடங்குகிறது என்பது எவ்வளவு பெரிய பெருமை.

2. ஒருங்கிணைத்தல்

திட்டமிட்ட பொருட்களை நீங்கள் ஒரு குடையின் கீழ் அதாவது சமையலறையில் கொண்டு வர வேண்டும். வீட்டில் சமைப்பது என்று திட்டமிட்டு விட்டால் சமைப்பதற்கான அமைப்புகளையும் பொருட்களையும் நீங்கள் ஒருங்கிணைத்தாக வேண்டும். சமையற்கட்டைக் கட்டமைக்க வேண்டும். மளிகைக் கடையிலிருந்து மளிகைப் பொருட்கள், காய்கறிக் கடையிலிருந்து காய்கறிகள், பாத்திரக் கடையிலிருந்து தேவையான பாத்திரங்கள் என்று வாங்கி நீங்கள் ஒருங்கிணைத்துதானே ஆக வேண்டும்.

3. செயலாக்கம்

ஆயிரம் திட்டங்கள் போட்டாலும் செயலாக்கம் இல்லாவிட்டால் போட்ட திட்டமெல்லாம் வீண். திட்டமும் செயலாக்கமும் ஒன்றிணைந்து ஒருங்கிணைய வேண்டும். சமையலில்தான் அப்படிப்பட்ட வாய்ப்பு இருக்கிறது. இங்குத் திட்டமில்லாமல் செயலில்லை. செயலில்லாமல் திட்டமில்லை. சமையல் ஒன்றே வாய்ச்சொல் வீரர்களைச் செயல் வீரர்களாக ஆக்குகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. சாப்பாட்டு ராமன்கள் என்ற பட்டத்திற்குப் பின் இருப்பது திட்டமும் செயலாக்கமும்தான். அந்தப் பட்டமும் சாதாரணமில்லை. ரசமான திட்டமும் சுவையான செயலாக்கமும் இல்லையென்றால் அந்தப் பட்டத்தை வாங்குவதற்குப் பதிலாக ஒல்லிப்பிச்சான் பட்டத்தை வாங்குவதிலேயே குறியாக இருப்பார்கள் நம் சனங்கள்.

4. திறன் வெளிப்பாடு

உங்கள் திட்டம், செயலாக்கம் ஆகியவற்றை உடனடியாக வெளிக்கொணரும் வாய்ப்பு வேறெந்த கலைக்கு இருப்பதை விட சமையல் கலைக்கே அதிகமாக இருக்கிறது. அதிகபட்சம் நீங்கள் திட்டமிட்டுச் செயலாக்கம் செய்து சில மணி நேரங்களுக்குள் உங்கள் திறனை அனைவரது பார்வைக்கும் அவர்களது சொந்த அனுபவத்திற்கும் கொண்டு வந்து விடலாம். ஏன் சுற்றி வளைத்துச் சொல்ல வேண்டும்? நீங்கள் சமைத்ததைப் பரிமாறுவதுதான் இதில் திறன் வெளிப்பாடு. இதற்கென நீங்கள் எந்த ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி மையங்களுக்கும் செல்ல வேண்டாம். சமைத்தாலே போதும். அதை யாரையாவது சாப்பிட வைத்து எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உங்களை அறியாமல் ஆர்வம் நெட்டித் தள்ளி விடும். நான்கு பேர் வாயில் புகுந்து புறப்பட்டு வந்தால்தான் சமைத்தற்கு ஒரு திருப்தி உண்டாகும்.

5. நல்விளைவாக்கம்

உடல் ஆரோக்கியம்தான் இதில் கிடைக்கும் நல் விளைவாக்கம். எந்த ஒரு திட்டமிடலிலும் செயலாக்கத்திலும் இது முக்கியமானது. தவறான குயுக்தியான ஒன்றுக்காகக் கூட திட்டமிடலாம், செயலாக்கத்தில் இறங்கலாம். சரியாகத் திட்டமிட்டு செயலாக்கம் செய்து தவறாகவும் முடியலாம். ஆனால் வீட்டுச் சமையலில் அது போன்ற பாதகங்கள் ஏற்படப் போவதில்லை. வீட்டில் சமைப்பது என்பதைப் போன்ற நல்விளைவாக்கம் வேறு எதிலும் கிட்டாது. நீங்கள் சுவையின் அடிப்படையில் மிக மோசமாகச் சமைத்தாலும் வெளியில் வாங்கித் தின்னும் பண்டங்களை விட அது மிகுந்த ஆரோக்கியமானதே. நீங்களே சமைப்பது என முடிவெடுப்பதே உருவாகும் மூன்றாம் உலகப் போரை நிறுத்துவது போன்றது. முடிவெடுத்ததோடு காரியத்தில் இறங்கி விடுவது நான்காம் உலகப் போருக்கே வாய்ப்பே இல்லாமல் பண்ணி விடுவதாகும்.

6. பொழுதாக்கம்

வீட்டில் சமைப்பது என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால் அதற்காக நேரம் ஒதுக்கியாக வேண்டும். சமையலுக்கு நேரம் ஒதுக்கினால் உங்களது தேவையற்ற தொலைக்காட்சி மற்றும் அலைபேசி சார்ந்த பொழுது அழிப்புகள் ஒரு முடிவுக்கு வந்து விடும். அங்கே சுற்றலாம், இங்கே சுற்றலாம் என்று நினைத்துச் சுற்றக் கொண்டிருக்க முடியாது. பசி உங்களை வீட்டிற்குப் போ, சமைத்துச் சாப்பாட்டைத் தயார் செய் என்று உந்தித் தள்ளும். சமையல் என்று ஒன்று இருந்தால்தான் அப்பப்படா வீட்டில் எவ்வளவு வேலைகள் இருக்கின்றன என்ற பொறுப்பும் உங்களுக்கு வரும். பெண்கள் பொறுப்பாக இருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம். ஆண்களும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றால் அவசியம் அவர்களும் சமையலில் இறங்க வேண்டும். இந்த உலகில் பொறுப்பற்ற ஆண்கள் இருப்பதற்குக் காரணம் சமைக்காத ஆண்கள் நிறைந்திருப்பதுதான் என்று நினைக்கிறேன்.

உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக நீங்கள் சமைப்பதால் சமையலில் செலவிடும் நேரம் அற்புதமான பொழுதாக்கம் ஆகும். வேறு எதில் பொழுதைக் கழித்தால் முடிவில் உங்களுக்குச் சுவையான பண்டம் கிடைக்கும் சொல்லுங்கள்? பாற்கடலைக் கடைந்ததும் விஷமின்றி வருவதெல்லாம் அமுதமாக நிகழும் அற்புதம் இந்த சமையல். இதைக் கடையாமல் குடையாமல் இருந்தால் வருவதெல்லாம் விஷமாகிப் போய் விடும்.

இப்படி அற்புதமான திறன்களும் விளைவுகளும் இருப்பதால் வீட்டில் சமைப்பதை நான் ஆதரிக்கிறேன். இதில் ஆணும் பெண்ணும் இணைந்து அளவளாவிக் கொண்டு சமைத்தால் சொர்க்கத்தை நீங்கள் வானில் தேட வேண்டாம், பூமியிலே இருப்பதைக் கண்டு கொள்வீர்கள்.

சமையல் ஒன்றுதான் தூய்மையில் தொடங்கி தூய்மையில் முடிகிறது. வீட்டைப் பத்து நாளுக்குப் பெருக்காமல் போட்டு விடலாம். துணிமணிகைளைத் துவைக்காமல் நான்கைந்து நாட்களுக்குப் போட்டுக் கொள்ளலாம். சமையல் பாத்திரங்களை அப்படி முடியாதே. சமைக்கத் துவங்கும் போதும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும், சமைத்துச் சாப்பிட்டு முடித்த பின்பும் சுத்தம் செய்தாக வேண்டும். சுத்தம் சோறு போடும் என்று சும்மாவா சொன்னார்கள். இல்லையென்றால் உணவு நஞ்சாகி விடும் (புட் பாய்சன் ஆகி விடும்) என்று அனுபவித்துதான் சொல்லியிருக்கிறார்கள்.

*****

20 Mar 2024

வாழ்க்கையின் அதி உன்னத வழி!

வாழ்க்கையின் அதி உன்னத வழி!

வாழ்க்கையில் நாம் செய்யும் மிகப் பெரிய தவறு என்றால் எல்லாவற்றிலும் அவசரப்படுவது. மனம் அப்படிப்பட்ட ஒன்று. எல்லாவற்றையும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று அவசரப்படும் தன்மையது. ஏன் இந்த அவசரம் என்றால் அவசர அவசரமாக முடித்து விட்டால் பிறகு சாவகாசமாக உட்கார்ந்து இருக்கலாமே என்கிற அலுப்பு காத்த எண்ணம்தான்.

ஏனிந்த அவசரம்? முடியாமல் போய் விடுமோ என்ற எண்ணம் ஒரு காரணம். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் மற்றொரு காரணம்.

எதுவும் முடியவில்லை என்றெல்லாம் இல்லை. அதற்காக நேரம் செலவழிக்க வேண்டும். மெனக்கெட வேண்டும். விசயம் அவ்வளவுதான். இந்த இரண்டையும் செய்யாமல் எதையும் செய்ய முடியாது.

மனதின் ஒரு சுபாவமும் இருக்கிறது. எப்போதும் ஒரு வித எதிர்மறை உணர்வை உருவாக்குவது. உங்களுக்கு வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை, அது இரவில் தூங்கும் போது வேலை கிடைக்காது என்ற கனவை உருவாக்கிச் சமன்படுத்தும்.

எதிர்மறை உணர்வைப் பொருத்த மட்டில் அதிலும் சில தாத்பரியங்கள் இருக்கின்றன. எதிர்மறை உணர்வை உண்டாக்கும் அம்சத்தை பரப்புவதும் முயன்றால்தான் முடியும். அதிலும் ஊக்கமான ஒரு விசயம் அப்படி இருக்கத்தான் செய்கிறது. ஒரு கெட்ட விசயம் என்றாலும் அதையும் முயன்று பரப்பினால்தான் உண்டு.

இயல்பாக மனதில் உண்டாகும் எதிர்மறை உணர்வானது இன்னொரு நினைவில் நீங்கள் கலந்து விடும் போது மறைந்து விடும். நீங்களாக உருவாக்கிக் கொண்டு மனதை வருத்திக் கொள்ளும் எதிர்மறை உணர்வானது அப்படி மறையாது. அது திரும்ப திரும்ப மனதில் தோன்றி உங்களை வருத்திக் கொண்டிருக்கும்.

எதிரும் புதிரும் கலந்ததுதான் வாழ்க்கை. கூட்டலும் கழித்தலும் இணைந்ததுதான் கணக்கு. நேர் மின்னூட்டமும் எதிர் மின்னூட்டமும் கலந்ததுதான் மின்சாரம். எதிர்மறை இணைவு இல்லாமல் உலகில் எதுவும் இல்லை. இரவென்றால் பகலும், பகலென்றால் இரவும் இருக்கத்தான் செய்கிறது.

கோடைக்காலம் வந்த பின் மழைக்காலமும், மழைக்காலம் வந்த பின் கோடைக்காலமும் மாறி மாறித்தான் வருகின்றன. அவை இயல்பாக வந்து இயல்பாகக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றன. அதற்காகக் கோடைக்காலத்தில் இப்படித்தான் எல்லா காலமும் இருக்கப் போகிறது என்று கவலையுற வேண்டியதில்லை. மழைக்காலத்தைப் பார்த்து இப்படித்தான் மழையானது காலம் முழுவதும் கொட்டித் தீர்க்கப் போகிறது என்று நினைக்க வேண்டியதில்லை.

வாழ்க்கைக்கும் இது அப்படியே பொருந்திப் போகிறது.

எல்லாம் முடிகிறது. எதுவும் முடியாமல் இல்லை. முடியும் வரை, முடிக்கும் காலம் வரும் வரைப் பொறுமையாக இருக்க வேண்டியதாக இருக்கிறது. வாழ்க்கையில் பெரிதாக யோசிக்க எதுவுமில்லை. உங்களைச் சுற்றியே ஏகப்பட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. ஒவ்வொன்றிலிருந்து உங்களுக்கான பாடங்கள் ஒளிந்திருக்கின்றன. அவற்றை உற்றுக் கவனித்தாலே போதும், நீங்கள் நிறைய விசயங்களை அதீத யோசனை இல்லாமலே புரிந்து கொள்ள முடியும்.

வாழ்க்கையை நீங்களாக அதாவது இன்னொருவராக மாற முயற்சிக்காமல் வாழும் போது பயம், பதற்றம், அவசரம், தவறான வழிநடத்தல்கள் இல்லாமல் அருமையாக வாழலாம்.

உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அப்படி இருக்கலாம். அப்படியே வாழலம். எதற்கு வாழ்கிறோம் என்று தெரியாமல் எப்படியோ வாழ்வதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது. வாழ்க்கை என்பது உங்களிலிருந்து வெளிப்படுவதாகவே இருக்க வேண்டும். யாரோ ஒருவர் வாழ்வதைப் போல வாழ நீங்கள் எதற்கு?

 உங்களிலிருந்து இந்த உலகிற்கு வெளிப்பட வேண்டிய சங்கதிகள் இருக்கத்தானே செய்கின்றன. அதை நீங்கள் வாழ்ந்தால் போதும். கண்டவர்கள் காட்டியபடி வாழ வேண்டியதில்லை. மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையாவது எப்படியாவது வாழ்ந்து தொலைக்க வேண்டியதில்லை. பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்தால் அதுவாக வரும். 

ஒவ்வொன்றிலும் அதன் சாராம்சத்தைச் செய்தியாக்கி அறிந்து கொள்ள முடியும். அதிலிருந்து நிறைய விசயங்களைச் செய்யவும் உணரவும் முடியும். மனதுக்குள் இருக்கும் அவசரம் உங்களை தவறாகவே வழிநடத்திக் கொண்டு இருக்கலாம். முடியுமோ முடியாதோ என்ற சந்தேகம் உங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது. அந்த சந்தேகத்துக்கு ஆட்பட்டு முடிக்க வேண்டுமே என்ற பயத்தில் நீங்கள் என்னென்னவோ செய்து கொண்டிருக்கலாம்.

அடிப்படை இதுதான். உங்களுக்குள் இருக்கும் உங்களைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்காக நீங்கள் வாழுங்கள். அடுத்தவர்களுக்குத் துன்பம் தராமல் வாழ வேண்டியது தவிர, அடுத்தவர்களுக்காக வாழ வேண்டியது இல்லை. அடுத்தவர்கள் காட்டும் வழியில் வாழ வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் இன்னொருவராக வாழ முயற்சித்தால் நிச்சயம் நீங்கள் அவசரம், பயம், தவறான வழிநடத்தல்களால் பீடிக்கப்படுவீர்கள்.

இந்த உலகில் புழுக்கள், பூச்சிகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தும் சொந்த சுயத்தில்தான் வாழ்கின்றன. எதுவும் இன்னொன்றைப் பார்த்து நகலெடுப்பது இல்லை எனும் போது மனிதர்களாகிய நீங்கள் சுயத்தோடும் துணிவோடும் வாழ்வதற்கு எந்த விதத்தில் தகுதி குறைந்து போனீர்கள்?

நீங்கள் நீங்களாக இருந்தால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. உங்களும் குறையேதும் இல்லை. இந்தப் பூமியில் இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஒவ்வொருவரும் அருமையாகவும் பெருமையாகவும் வாழலாம்.

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...