இனிப்பு நோயும் உணவுக் கட்டுபாடும் – சில குறிப்புகள்
எங்கெங்கு காணினும் இனிப்பு
நோய் (சுகர்) என்று சொல்லும் அளவிற்கு அது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. சிறிய
குழந்தைகளிலிருந்து பெரிய மனிதர்கள் வரை யாரையும் அது விட்டு வைக்கவில்லை. கருவிலிருக்கும்
குழந்தைகளைக் கூட அது விட்டு வைக்கவில்லை.
கருத்தரித்த தாய்மார்களுக்கு
இனிப்பு நோய் சோதனை (சுகர் டெஸ்ட்) கட்டாயம் செய்யப்படும் அளவுக்கு அது கோர தாண்டவம்
ஆடுகிறது.
இதென்ன இனிப்புக்கு வந்த
சோதனை என்று பார்த்தால் இந்தியாவின் தெருவுக்குத் தெரு இனிப்புக் கடைகள் இருக்கின்றன.
கூடவே மருந்துக் கடைகளும் இருக்கின்றன என்பது வேறு ரகம். இந்தியாவில் இனிப்பு நோயால்
பாதிக்கப்பட்டவர்கள் 11 சதவீதம் இருக்கிறார்கள். அதாவது பத்துக்கு ஒருவர் இனிப்பு நோயால்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
17 சதவீதம் மக்கள் இனிப்பு
நோய் வருவதற்கான அறிகுறிகளால் சூழப்பட்டிருக்கிறார்கள். ஆக 11 + 27 = 38 கிட்டதட்ட
40 சதவீத அளவுக்கு மொத்த மக்கள் தொகையில் இனிப்பு நோய் பாதிப்பிற்குள் இந்தியா இருக்கிறது.
அதாவது பத்தில் நான்கு பேர் இனிப்பு நோயோடோ அல்லது இனிப்பு நோய் அறிகுறிகளோடு இருக்கிறார்கள்.
சற்றுத் தோராயமாகச் சொன்னால் இந்தியாவில் நீங்கள் சந்திக்கும் இருவரில் ஒருவர் இனிப்பு
நோய் உடையவராக இருப்பார் அல்லது இனிப்பு நோய்க்கான அறிகுறிகளோடு இருப்பார்.
இனிப்பு நோய்க்கான பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிகம் என்கிறார்கள். இதுதான் தென்னாட்டிற்கு வந்துள்ள
சோதனை போலும். இதனுடன் இரத்த அழுத்த நோய் உடையவர்கள் இந்தியாவில் 35 சதவீதம் இருக்கிறார்கள்.
இந்த நோயாளர்களில் நோய்களினின்று தடுத்தாட்கொள்ளும் உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுபாட்டைக்
கடைபிடிப்பவர்கள் 10 சதவீதம்தான் என்கிறார்கள்.
இதை மேலும் புரிந்து கொள்ள,
சற்றுத் தோராயமாகக் கணக்கிட்டால் அதாவது இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடி எனக் கொண்டால்
40 கோடி பேர் இனிப்பு நோயோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். இந்த 40 கோடி பேரில்
வெறும் 4 கோடி பேர்தான் இனிப்பு நோயைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் உடற்பயிற்சி
மற்றும் உணவுக் கட்டுபாட்டைக் கைக்கொள்கிறார்கள். மீதி இருக்கும் 36 கோடி பேர் இனிப்பு
நோயிருந்தும் இனிப்பு நோய் குறித்த அலட்சியத்தோடு இருக்கிறார்கள் அல்லது உடற்பயிற்சி
மற்றும் உணவுக்கட்டுபாட்டில் கவனம் இல்லாமல் மருத்துவம் செய்து கொள்வதில் மட்டும் குறியாக
இருக்கிறார்கள். இந்த அலட்சியம் அவர்களுக்கு மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, புற்றுநோய்
போன்ற அடுத்தக்கட்ட பாதிப்புகளுக்கு இட்டுச் செல்வதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இனிப்பு நோயாளர்கள் என்றில்லை,
பொதுவாக அனைவரும் கடைபிடிப்பதற்கான உணவுக் கட்டுபாடு ஏதேனும் உள்ளதா? அப்படியே இருந்தாலும்
அந்த உணவுக் கட்டுபாட்டைக் (டயட் கன்ட்ரோல்) கடைபிடிப்பது எப்படி?
உணவுக் கட்டுபாடு என்றதும்
அதுவே பலருக்கு ரத்த அழுத்தத்தை அதிகமாக்கி விடுகிறது. அதை ஒரு கடினமான ஒன்றாகப் பார்க்கிறார்கள்.
அவர்களுக்காக கொஞ்சம் மனதைத் தளர்வாக்கும் முறையில் சிலவற்றைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
என்ன பெரிய உணவுக் கட்டுபாடு
(டயட் கன்ட்ரோல்)?
பசித்தால் சாப்பிடுங்கள்.
பசிக்கவில்லையா? சாப்பிடாமல்
இருங்கள்.
தேநீர் (டீ), குளம்பியை
(காப்பி) முகர்ந்து கூட பார்க்காதீர்கள்.
நொறுக்குத் தீனிகளைத் திரும்பி
கூட பார்க்காதீர்கள்.
மது மற்றும் போதை பொருட்களை
எட்டிக் கூட பார்க்காதீர்கள்.
ஒரு வேளை உணவு பழ உணவாக இருக்கட்டும்.
மற்ற இருவேளை உணவிலும் காய்கறிகள்
மிகுந்திருக்கட்டும்.
தவித்தால் தண்ணீர் குடியுங்கள்.
ரசாயன குளிர்பானங்களைத் தள்ளி
விடுங்கள்.
இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு,
கார்ப்பு மட்டுமா உணவு.
கசப்பும் துவர்ப்பும் சேர்ந்ததே
உணவு.
மூலிகைகள் கசப்பு.
நீங்கள் உண்ணும் மாத்திரைகள்
கசப்பு.
இன்னும் சில மருந்து பொருட்கள்
துவர்ப்பு.
ஆக கசப்பையும் துவர்ப்பையும்
உணவின் சுவை பட்டியலுக்குள் சேருங்கள்.
நாளொன்றுக்கு நாற்பது நிமிடம்
நடை போடுங்கள்.
யார் வீட்டிற்குச் சென்றாலும்
உணவு உபசரிப்பை நாசுக்காக மறுங்கள்.
வாரத்தில் ஒரு வேளை பட்டினி
இருங்கள்.
மற்றபடி எப்போதும் மகிழ்ச்சியாக
இருங்கள்.
மகிழ்ச்சியாக இருப்பதற்குக்
காரணங்களைத் தேடாதீர்கள்.
காரணம் இல்லாமலே மகிழ்ச்சியாக
இருங்கள்.
உணவு கட்டுபாடு என்பது உணவில்
கட்டுபாடாக இருப்பது மட்டுமல்ல, மனதில் மகிழ்ச்சி தட்டுபாடு இல்லாமல் இருப்பதும் ஆகும்.
உங்கள் மனம் மகிழ்ச்சியாக இல்லை என்றால் நீங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ உண்ணலாம். உங்கள்
மகிழ்ச்சிக் குறைவு உங்கள் வயிற்றுக் கோளாறுகளுக்குக் காரணமாக அமையலாம். உணவு கட்டுபாடு
என வரும் போது உணவையும் பார்த்துக் கொள்ளுங்கள். மனதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
உணவை உண்ணும் போது உணவைப் பாருங்கள். தொலைக்காட்சியையோ அலைபேசியையோ பார்க்காதீர்கள்.
அடுத்த உடற்பயிற்சி குறித்து
மேலும் கொஞ்சம் கூறுங்கள் என்கிறீர்களா? அதை நான் முன்பே ஒரு பத்தியில் கூறியிருக்கிறேனே!
*****
No comments:
Post a Comment