கவிதைக்காரனின் குறிப்புகள்
அவன் வீட்டுக் கட்டில் மரம்
ஜன்னல்கள் கதவுகள் மரம்
நாற்காலிகள் மரம்
பிளாஸ்டிக் ஏதுமில்லை
பீரோக்கள் மரம்
இரும்பில் ஏதுமில்லை
மேசைகள் மரம்
அலமாரிகள் மரம்
மரந்தான் எல்லாம் மரந்தான்
மறந்தான் மறந்தான்
எல்லாம் மரம் என்பதை மறந்தான்
சுற்றி நின்ற எட்டு மரங்களை
வெட்டிதான்
இந்த வீட்டைக் கட்டினான்
பக்கத்திலிருந்த அத்தனை மரங்களையும்
வெட்டி விட்டுதான்
ப்ளாட் போட்டான்
அதிலிரண்டில் வாடகை வீடும்
ஒரு தங்கும் விடுதியும் கட்டி
விட்டான்
காற்றடித்தால் முறிந்து விழுகிறது
புயலடித்தால் வேரோடு விழுகிறது
என்று
சாலையில் இருந்த இரண்டு மரங்களையும்
திராவகம் ஊற்றித் தீய்த்தான்
மரங்களை வெட்டித் தயாரிக்கப்பட்ட
மரக்கூழில்
தயார் செய்யப்பட்ட தாளில்
மரங்களின் மகத்துவம் குறித்த
கவிதையை எழுதிக் கொண்டிருக்கிறான்
அதை பிடிஎப்பாகப் போடாமல்
தாள்களில் அச்சடித்துக் கவிதைப்
புத்தமாக
விநியோகித்துக் கொண்டிருக்கிறான்
*****
No comments:
Post a Comment