வீட்டில் சமைப்போம்! ஆரோக்கியமாய் இருப்போம்!
‘வீட்டில் சமைப்போம்! ஆரோக்கியமாய்
இருப்போம்!’ – இது ஒரு முழக்கமாகத் தோன்றலாம். வீட்டில் சமைப்பது இப்படி ஒரே ஒரு முழக்கத்தோடு
முடிந்து விடாது.
‘வீட்டில் சமைப்போம்! செலவைக்
குறைப்போம்!’ என்ற அடுத்த முழக்கத்தையும் வீட்டில் சமைப்பது குறித்து உருவாக்கலாம்.
இப்படி ஆரோக்கியத்திற்காகவும்,
செலவைக் குறைப்பதற்காகவும் வீட்டில் சமைப்பதில் ஏகப்பட்ட நன்மைகள் மட்டுமல்லாது திறன்
வளர்ப்பு சங்கதிகளும் அற்புத நல்விளைவுகளும் அடங்கியிருக்கின்றன.
வீட்டில் சமைப்பது என்று
முடிவெடுத்து விட்டால் உங்களுக்குக் கீழ்காணும் திறன்கள் தானாகவே வளர்வதோடு கீழ்காணும்
அற்புத விளைவுகளும் தாமாக ஏற்பட்டு விடும். சமைப்பது ஒரு வரப்பிரசாதம். சாதமும் வரப்பிரசாதமும்
இதில் மட்டும்தான் கிடைக்கும்.
மேற்படி நான் சொன்ன அந்தத்
திறன்கள் மற்றும் விளைவுகள் என்னவென்று பார்ப்போமே!
1. திட்டமிடல்
இதென்ன இவ்வளவு பெரிய வார்த்தை
என்று பயந்து விட வேண்டும்.
சமைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள்,
பொருட்கள் இல்லாமல் எப்படிச் சமைக்க முடியும்? வெறுங்கையில் முழம் போட முடியாத மற்றும்
வாயினால் சர்க்கரைப் பந்தல் போட முடியாத காரியம் இது. ஆகச் சமைப்பது என்று முடிவெடுத்து
விட்டால் நீங்கள் திட்டமிட்டாக வேண்டும். பட்டியல் போட்டுத் தேவையான பொருட்களைத் திட்டமிட
வேண்டும். ரோக்காவைச் சோக்காகப் போட்டுத்தான் ஆக வேண்டும். ஆகவே இந்த மிகப்பெரிய வார்த்தையுடன்
சமையல் தொடங்குகிறது என்பது எவ்வளவு பெரிய பெருமை.
2. ஒருங்கிணைத்தல்
திட்டமிட்ட பொருட்களை நீங்கள்
ஒரு குடையின் கீழ் அதாவது சமையலறையில் கொண்டு வர வேண்டும். வீட்டில் சமைப்பது என்று
திட்டமிட்டு விட்டால் சமைப்பதற்கான அமைப்புகளையும் பொருட்களையும் நீங்கள் ஒருங்கிணைத்தாக
வேண்டும். சமையற்கட்டைக் கட்டமைக்க வேண்டும். மளிகைக் கடையிலிருந்து மளிகைப் பொருட்கள்,
காய்கறிக் கடையிலிருந்து காய்கறிகள், பாத்திரக் கடையிலிருந்து தேவையான பாத்திரங்கள்
என்று வாங்கி நீங்கள் ஒருங்கிணைத்துதானே ஆக வேண்டும்.
3. செயலாக்கம்
ஆயிரம் திட்டங்கள் போட்டாலும்
செயலாக்கம் இல்லாவிட்டால் போட்ட திட்டமெல்லாம் வீண். திட்டமும் செயலாக்கமும் ஒன்றிணைந்து
ஒருங்கிணைய வேண்டும். சமையலில்தான் அப்படிப்பட்ட வாய்ப்பு இருக்கிறது. இங்குத் திட்டமில்லாமல்
செயலில்லை. செயலில்லாமல் திட்டமில்லை. சமையல் ஒன்றே வாய்ச்சொல் வீரர்களைச் செயல் வீரர்களாக
ஆக்குகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. சாப்பாட்டு ராமன்கள் என்ற பட்டத்திற்குப்
பின் இருப்பது திட்டமும் செயலாக்கமும்தான். அந்தப் பட்டமும் சாதாரணமில்லை. ரசமான திட்டமும்
சுவையான செயலாக்கமும் இல்லையென்றால் அந்தப் பட்டத்தை வாங்குவதற்குப் பதிலாக ஒல்லிப்பிச்சான்
பட்டத்தை வாங்குவதிலேயே குறியாக இருப்பார்கள் நம் சனங்கள்.
4. திறன் வெளிப்பாடு
உங்கள் திட்டம், செயலாக்கம்
ஆகியவற்றை உடனடியாக வெளிக்கொணரும் வாய்ப்பு வேறெந்த கலைக்கு இருப்பதை விட சமையல் கலைக்கே
அதிகமாக இருக்கிறது. அதிகபட்சம் நீங்கள் திட்டமிட்டுச் செயலாக்கம் செய்து சில மணி நேரங்களுக்குள்
உங்கள் திறனை அனைவரது பார்வைக்கும் அவர்களது சொந்த அனுபவத்திற்கும் கொண்டு வந்து விடலாம்.
ஏன் சுற்றி வளைத்துச் சொல்ல வேண்டும்? நீங்கள் சமைத்ததைப் பரிமாறுவதுதான் இதில் திறன்
வெளிப்பாடு. இதற்கென நீங்கள் எந்த ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி மையங்களுக்கும் செல்ல
வேண்டாம். சமைத்தாலே போதும். அதை யாரையாவது சாப்பிட வைத்து எப்படி இருக்கிறது என்பதை
அறிந்து கொள்ள உங்களை அறியாமல் ஆர்வம் நெட்டித் தள்ளி விடும். நான்கு பேர் வாயில் புகுந்து
புறப்பட்டு வந்தால்தான் சமைத்தற்கு ஒரு திருப்தி உண்டாகும்.
5. நல்விளைவாக்கம்
உடல் ஆரோக்கியம்தான் இதில்
கிடைக்கும் நல் விளைவாக்கம். எந்த ஒரு திட்டமிடலிலும் செயலாக்கத்திலும் இது முக்கியமானது.
தவறான குயுக்தியான ஒன்றுக்காகக் கூட திட்டமிடலாம், செயலாக்கத்தில் இறங்கலாம். சரியாகத்
திட்டமிட்டு செயலாக்கம் செய்து தவறாகவும் முடியலாம். ஆனால் வீட்டுச் சமையலில் அது போன்ற
பாதகங்கள் ஏற்படப் போவதில்லை. வீட்டில் சமைப்பது என்பதைப் போன்ற நல்விளைவாக்கம் வேறு
எதிலும் கிட்டாது. நீங்கள் சுவையின் அடிப்படையில் மிக மோசமாகச் சமைத்தாலும் வெளியில்
வாங்கித் தின்னும் பண்டங்களை விட அது மிகுந்த ஆரோக்கியமானதே. நீங்களே சமைப்பது என முடிவெடுப்பதே
உருவாகும் மூன்றாம் உலகப் போரை நிறுத்துவது போன்றது. முடிவெடுத்ததோடு காரியத்தில் இறங்கி
விடுவது நான்காம் உலகப் போருக்கே வாய்ப்பே இல்லாமல் பண்ணி விடுவதாகும்.
6. பொழுதாக்கம்
வீட்டில் சமைப்பது என்று
நீங்கள் முடிவெடுத்து விட்டால் அதற்காக நேரம் ஒதுக்கியாக வேண்டும். சமையலுக்கு நேரம்
ஒதுக்கினால் உங்களது தேவையற்ற தொலைக்காட்சி மற்றும் அலைபேசி சார்ந்த பொழுது அழிப்புகள்
ஒரு முடிவுக்கு வந்து விடும். அங்கே சுற்றலாம், இங்கே சுற்றலாம் என்று நினைத்துச் சுற்றக்
கொண்டிருக்க முடியாது. பசி உங்களை வீட்டிற்குப் போ, சமைத்துச் சாப்பாட்டைத் தயார் செய்
என்று உந்தித் தள்ளும். சமையல் என்று ஒன்று இருந்தால்தான் அப்பப்படா வீட்டில் எவ்வளவு
வேலைகள் இருக்கின்றன என்ற பொறுப்பும் உங்களுக்கு வரும். பெண்கள் பொறுப்பாக இருப்பதற்கு
இது ஒரு முக்கியக் காரணம். ஆண்களும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றால் அவசியம் அவர்களும்
சமையலில் இறங்க வேண்டும். இந்த உலகில் பொறுப்பற்ற ஆண்கள் இருப்பதற்குக் காரணம் சமைக்காத
ஆண்கள் நிறைந்திருப்பதுதான் என்று நினைக்கிறேன்.
உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக
நீங்கள் சமைப்பதால் சமையலில் செலவிடும் நேரம் அற்புதமான பொழுதாக்கம் ஆகும். வேறு எதில்
பொழுதைக் கழித்தால் முடிவில் உங்களுக்குச் சுவையான பண்டம் கிடைக்கும் சொல்லுங்கள்?
பாற்கடலைக் கடைந்ததும் விஷமின்றி வருவதெல்லாம் அமுதமாக நிகழும் அற்புதம் இந்த சமையல்.
இதைக் கடையாமல் குடையாமல் இருந்தால் வருவதெல்லாம் விஷமாகிப் போய் விடும்.
இப்படி அற்புதமான திறன்களும்
விளைவுகளும் இருப்பதால் வீட்டில் சமைப்பதை நான் ஆதரிக்கிறேன். இதில் ஆணும் பெண்ணும்
இணைந்து அளவளாவிக் கொண்டு சமைத்தால் சொர்க்கத்தை நீங்கள் வானில் தேட வேண்டாம், பூமியிலே
இருப்பதைக் கண்டு கொள்வீர்கள்.
சமையல் ஒன்றுதான் தூய்மையில்
தொடங்கி தூய்மையில் முடிகிறது. வீட்டைப் பத்து நாளுக்குப் பெருக்காமல் போட்டு விடலாம்.
துணிமணிகைளைத் துவைக்காமல் நான்கைந்து நாட்களுக்குப் போட்டுக் கொள்ளலாம். சமையல் பாத்திரங்களை
அப்படி முடியாதே. சமைக்கத் துவங்கும் போதும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும், சமைத்துச்
சாப்பிட்டு முடித்த பின்பும் சுத்தம் செய்தாக வேண்டும். சுத்தம் சோறு போடும் என்று
சும்மாவா சொன்னார்கள். இல்லையென்றால் உணவு நஞ்சாகி விடும் (புட் பாய்சன் ஆகி விடும்)
என்று அனுபவித்துதான் சொல்லியிருக்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment