24 Mar 2024

ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ – ஓர் எளிய அறிமுகம்!

ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ – ஓர் எளிய அறிமுகம்!

ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலை அண்மையில் படித்தேன். மிக மெதுவாக நான் படித்த நாவல் என்று இதைச் சொல்லலாம். நாவல்களை ஒரே மூச்சில் படித்து முடித்து விடும் பழக்கமுள்ள எனக்கு இந்த நாவலை மிக மெதுவாகப் படித்தது ஆச்சரியமான அனுபவமாக இருந்தது. சில நாட்களில் ஐந்து பக்கங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். ஒரு சில நாட்களில் நூறு பக்கங்களும் படித்திருக்கிறேன். இப்படி சில நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக, சில நேரங்களில் மிக அதிகமாக என்று கலவையாக இந்த நாவலைப் படித்து முடிக்க மூன்று வார காலமாயிற்று.

நாவலின் கதைக்களம் என்றால் ஆண் – பெண் மனதின் இணைவுச் சிக்கல்தான். ரங்கசாமி என்கிற ரங்கா பத்திரிகையாளர். கல்யாணி நாடக நடிகை. அண்ணாசாமி நாடகக்குழுவின் ஒருங்கிணைப்பாளர். இந்த மூன்று பாத்திரங்களும்தான் நாவலின் பிரதான பாத்திரங்கள். நாவலின் பெரும்பாலான உரையாடல்கள் இவர்களைச் சுற்றித்தான் நடக்கின்றன.

ரங்காவுக்கு முதல் திருமணம் நடந்து ஒரு குழந்தையும் பிறந்து மனைவி இறந்து விடுகிறாள். கல்யாணி முப்பதைக் கடந்த மணமாகாத கன்னியாக இருக்கிறாள். ரங்கா அண்ணாசாமி நடத்தும் நாடகங்களின் தீவிர விமரிசகர். அந்த விமரிசனமே ரங்காவின் மீது ஓர் ஈர்ப்பைக் கல்யாணிக்கு ஏற்படுத்துகிறது. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடும் போது அவர்களைத் திருமணத்தை நோக்கி நகர்த்துகிறார் அண்ணாசாமி.

திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் ரங்காவுக்கு கல்யாணியின் காதலின் மீது ஒரு ஓர் உணர்வுரீதியான திருப்தியின்மை தோன்றுகிறது. மற்றபடி இருவருக்கும் சண்டைகளோ, சச்சரவுகளோ இல்லை. கல்யாணியும் அதற்கு இடம் தருபவள் அல்லள். அவரவர் கருத்துகளும் நிலைபாடுகளும் எதிராகப் போகின்றன. அப்படி எதிராகப் போகும் இடத்திலும் இருவரும் நாகரிகமாகப் பிரிவதை ஏற்றுக் கொள்கின்றனர். ரங்காவுக்குத்தான் அப்படி ஒரு பிரிவு தேவைப்படுகிறதே தவிர கல்யாணி இணைவு மற்றும் பிரிவு இரண்டுக்கும் தயாராகவே இருக்கிறாள்.

ரங்காவுக்கு காதலில் உணர்வு சார்ந்த பந்தம் அவசியமாகப் படுகிறது. அவனே ஓர் அறிவு ஜீவிதான் என்ற போதிலும் உணர்வு சார் போதாமையை உணர்கிறான். கல்யாணி அறிவுப்பூர்வமாகக் காதலைக் காண்கிறாள். அவள் தான் வெளிப்படுத்தும் காதலில் எவ்வித போதாமையையும் காட்டுவதும் இல்லை. புரையோடிப் போன குடும்ப வாழ்க்கையில் காதல் என்பது தியாகமும் விட்டுக் கொடுத்தலுமாக இருப்பதை மனதளவில் பிடித்துக் கொள்ளும் ரங்கா தனக்காகக் கல்யாணி எந்த அளவு விட்டுக் கொடுத்துத் தியாகியாக இருப்பாள் என்பதை யோசிக்கும் இடத்தில் இருவருக்குமான விரிசல் துவங்குகிறது.

ரங்காவின் முதல் திருமண வாழ்வு என்பது அவன் எதிர்பார்த்த அளவுக்கு உணர்வு சார்ந்த திருப்தியைத் தருகிறது. அப்படி ஓர் உணர்வு சார்ந்த காதல் வாழ்வை அவன் வாழ்ந்தான் என்பதை யோசித்துப் பார்க்கக் கூட தோன்றாத அளவுக்கு அந்த வாழ்வு துவங்கி முதல் மனைவியான தேவகியின் மரணத்துடன் அது முடிந்து போகிறது. ரங்காவுக்காகத் தேவகியின் தங்கை சுமதி காத்திருக்கிறாள். ரங்கா அதை தீவிரமாக மறுதலித்து விட்டு மனம் நாடும் கல்யாணியைத் திருமணம் செய்து கொள்கிறான்.

நாடகத்தில் தபேலா வாசிக்கும் கலைஞன் தாமுவும் கல்யாணிக்கு உதவியாக இருக்கும் பட்டம்மாளும் நாவலின் துணைப் பாத்திரங்கள். அவர்களுக்கான திருமணத்தை முன்னின்று செய்து வைப்பது ரங்காவும் கல்யாணியும்தான். உணர்வு சார்ந்த காதலில் எதார்த்தத்தில் நேரிடும் பிரச்சனைகள் மற்றும் வலிகளை அந்தப் பாத்திரங்கள் மூலமாக ஜெயகாந்தன் காட்டுகிறார்.

ரங்கா விவாகரத்தை விரும்பும் போது ரங்காவும் கல்யாணியும் சந்திக்கும் வழக்கறிஞர் பாத்திரமான ராகவனின் பாத்திரம் நாவலின் கௌரவப் பாத்திரம் எனலாம். திருமண பந்தத்திலிருந்து விலகுவதற்குச் சட்டத்தைப் போருத்த வரை யில் வலுவான காரணம் தேவை என்பதை ராகவன் எடுத்துச் சொல்கிறார். அவர்களிடம் உரையாடிய பிறகு அவர்கள் இருவரும் பிரியக் கூடிய ஜோடிகள் இல்லை என்பதையும் தன்னுடைய அபிப்ராயமாகச் சொல்கிறார் ராகவன்.

ராகவனின் வாக்கு பலிக்கிறது. சில மாதங்கள் ரங்கா கல்யாணியைப் பிரிந்திருக்கிறான். அந்த நிலையில் கல்யாணிக்கு ஏற்படும் எலும்புருக்கி நோயின் பாதிப்பால் கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையாக ஆகி விடுகிறாள். அண்ணாசாமி ரங்காவிடம் செய்தியைச் சொல்லி அழைத்து வருகிறார். ரங்காவுக்கு இப்போது அவளை விட்டுப் பிரிய மனமில்லை. பத்திரிகை பணியிலிருந்து ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு கல்யாணியைக் கவனித்துக் கொள்கிறான். இனி கல்யாணியைப் பிரிவதில்லை என்ற முடிவை எடுக்கிறான்.

நாவலின் முன்னுரையில் இக்கதையின் முக்கிய பாத்திரங்கள் அனைத்துமே தான்தான் என்கிறார் ஜெயகாந்தன். தன்னையே ஆணாகாவும் பெண்ணாகவும் படைத்து மனச்சிக்கல்களை இந்த நாவலில் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்.

மனப்போக்குகளும், மனதில் இருக்கும் கருத்துகளும் அதற்கான நிலைப்பாடுகளும் மனிதர்களுக்கு இடையே எத்தனை வேறுபாடுகளை, பிரிவுகளை உண்டாக்குகின்றன என்பதை ஜெயகாந்தன் வாழ்க்கைக் காட்சிகளாக நாவல் முழுவதும் விரிய விடுகிறார். மனம் தன் நிலைபாடுகளுக்கு சமூக சம்பிரதாயங்களை எவ்வளவு வலுவாகப் பிடித்துக் கொள்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். ஆண் மனதைப் பெண் புரிந்து கொள்ளவும், பெண் மனதை ஆண் புரிந்து கொள்ளவும் இரண்டு பக்கமாகவும் நின்று நாவலின் பல இடங்களில் ஒரு நாவலாசிரியாக ஜெயகாந்தன் பேசுகிறார்.

ஓர் உறவில் ஒருவருக்கொருவர் எந்த அளவுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கிலே இந்த நாவலை ஜெயகாந்தன் படைத்திருக்கிறார். அந்த நோக்கத்தை மிகவும் வெளிப்படையாகவும் நாவலில் புலப்படுத்துகிறார்.

சொல்லாமல் விட வேண்டிய பல இடங்களைப் பொட்டுத் தெரித்தாற் போலச் சொல்லிச் செல்கிறார் ஜெயகாந்தன். இதுதான் அவருடைய எழுத்துப் பாணியும் கூட. இப்படித்தான் என்ற வாசக அனுமானத்திற்கு இடமில்லாமல் அனைத்தையும் நாவலில் வெளிப்படுத்தி விடுகிறார். அவர் சொல்ல வரும் வாழ்க்கைத் தத்துவத்தை மிக அழுத்தமாகக் காட்டும் வகையில் இந்த நாவல் அமைகிறது. இருவர் மனமும் இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று ஊகிக்க இடம் தர வேண்டிய இடங்களையும் அப்பட்டமாகப் பேசி விடுவதன் மூலமாக தான் விரும்பும் ஒரு குடும்ப வாழ்க்கை என்ன என்பதை படம் போட்டுக் காட்டி விடுகிறார் ஜெயகாந்தன்.

ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப வாழ்க்கையை ஒரு நாடகம் போல சாட்சி பாவமாக நின்று பார்க்கும் போது ஒருவரை ஒருவர் மதித்து உண்மையாகவும் நேர்மையாகவும் உணர்வு ரீதியாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பு செலுத்த வேண்டியதன் அவசியம் புரிய வரும் என்பதுதான் இந்த நாவல் மூலமாக ஜெயகாந்தன் சொல்ல வரும் சங்கதி எனலாம்.

*****

No comments:

Post a Comment

Solutions available while changing lifestyles!

Solutions available while changing lifestyles! Samudhira used to drink only half of the water bottle she took to school. The rest of the w...