26 Mar 2024

உறங்கிக் கொண்டிருக்கும் எரிமலை மனது!

உறங்கிக் கொண்டிருக்கும் எரிமலை மனது!

ஓர் இரவைத் தூங்க முடியாமல் கழிப்பது எவ்வளவு துர்பாக்கியமானது? மனதுக்குள் ஒரு முடிவுக்கு வராத முடியாதபடி குழப்பமான நிலையில் சஞ்சரிப்பது எவ்வளவு கொடுமையானது? எல்லாருக்கும் ஒரு நேரத்தில் அப்படி ஓர் இரவும், அப்படி ஒரு மனதும் உண்டாகி விடுகிறது. தூக்கம் வராமைக்கும், மனம் குழம்பி விடுவதற்கும் ஆயிரம் காரணங்கள் அல்லது அதையும் தாண்டி நூறாயிரம் காரணங்கள் இருக்கலாம். அதற்கான அடிப்படை காரணம் விருப்பமின்மை என்ற புள்ளியில் சுழன்று கொண்டிருக்கும். உங்களை உங்களுக்கும், உங்கள் வாழ்க்கையை உங்கள் மனதுக்கும் பிடித்திருந்தால் நீன்றாக உறங்கிக் கொண்டிருப்பதுதெரியாமல் உறங்கிக் கொண்டிருப்பீர்கள். மனம் என்ற ஒன்று இருக்கிறது தெரியாமல் இயங்கிக் கொண்டிருப்பீர்கள்.

நீங்கள் விரும்பிய ஒன்றே ஒரு நாள் விருப்பமின்மை எனும் புள்ளியை நோக்கி நகரலாம். அது புளித்துப்  போவதால் அன்று. சலித்துப் போவதாலும் அன்று. அதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாமர்த்தியத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வேலை குறித்து நீங்கள் அறிந்து கொண்டாக வேண்டும். அது குடும்ப வேலையாக, அலுவலக வேலையாக, சமூக வேலையாக அல்லது வேறெந்த வேலையாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் வேலை பார்க்கவும் வேண்டும், அதே நேரத்தில் எந்த அளவுக்கு வேலை பார்க்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு முன்பாக வேலைகள் எப்படி நடக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் நீங்கள்.

அங்கே வேலைகள் நடக்கின்றன!

வேலைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. அவரவர் வேலைகளை அவரவர் செய்வதைத் தவிர்க்கிறார்கள். வேலைகள் நிறைவேற்றப்பட வேண்டியதாக இருக்கின்றன. நிறைவேற்றப்படாத வேலைகள் வேலைகளை நிறைவேற்றியவர்களை நோக்கி நகர்கின்றன. வேலைகளை நிறைவேற்றியவர்கள் கூடுதல் வேலைகளைச் சுமக்கிறார்கள். வேலைகள் சுமத்தப்படுகின்றன. எந்த வேலைகளையும் செய்யாதவர்கள் வேலைகளைச் செய்யாமல் தவிர்ப்பதை வேலையாகச் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு திறமையான மேலாளர் வேலைக்கு அமர்த்தப்பட்ட அத்தனை வேலையாட்களையும் திறமையாக வேலை வாங்க வேண்டும். சாமர்த்தியமானவர்களையே மேலிடங்கள் விரும்புகின்றன. சாமர்த்தியமான மேலாளர்கள் வேலை செய்பவர்களைக் கண்டறிந்து மீண்டும் மீண்டும் வேலை வாங்குகிறார்கள். வேலை செய்யாதவர்களை வேலை செய்யாமல் இருக்க பழக்குகிறார்கள்.

நாட்கள் நகர்கின்றன.

வேலை செய்பவர் மேலதிக வேலைகளைக் செய்து களைத்துப் போகிறார். வேலை செய்யாதவர் வேலை செய்யாமல் வந்து போகிறார். வேலை செய்யாமல் இருப்பதே அவர்களுக்குச் சில நேரங்களில் களைப்பைத் தருகிறது, சலிப்பை உண்டு பண்ணுகிறது.

வேலை செய்பவர்கள் வேலைகளைச் செய்து செய்து வெடித்துப் போகிறார்கள். துண்டு துண்டாகிச் சிதறிப் போகிறார்கள். மனிதர்கள் கண் முன்னே வெடித்துச் சிதறுவதை எவரும் கண்டு கொள்வதாகத் தெரிவதில்லை. எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் வேலை செய்யாதவர்கள் வேலை செய்யாமையைத் தொடர்கிறார்கள். சாமர்த்தியமான மேலாளர்கள் வேலை செய்பவர்களை மட்டும் வேலை வாங்குகிறார்கள். வேலை செய்யாதவர்களுக்குச் சம்பளத்தை வாங்கித் தருகிறார்கள். வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

வேலைக்காரர் ஏன் இப்படிப் பேசுகிறார்?

வேலைக்காரர் இப்படிப் பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா? அதை யாரும் கேட்டிருக்க முடியாது. அவர் இதை யாரிடமும் பேசுவதில்லை. பேசாததை எப்படிக் கேட்க முடியும்? கேட்க முடியாது என்றில்லை, கேட்க முடியும். அவர் மனதுக்குள் பேசிக் கொண்டிருக்கிறார். மனதோடு பேசுவதை எப்படிக் கேட்க முடியும்? கேட்க முடியாது என்றில்லை, கேட்க முடியும். கேட்க விரும்பாதவர்கள் அதிகம் சூழ்ந்திருக்கும் போது மனதோடு பேசுபவர்கள் அதிகரித்துப் போகிறார்கள். கேட்பவர்கள் வரும் போது மனம் பேசத் தொடங்கும்.

ஒரு வேலைக்காரர் பேசுவதை அவசியம் கேளுங்கள். அவர் இப்படிப் பேசுகிறார்.

வேலைகளை என் மேல் சுமத்துகிறார்களோ என்று நான் நினைக்கிறேன். சமீப நாட்களாக அலைச்சல் சார்ந்த வேலைகள், கோப்புகள் சார்ந்த வேலைகள், பதிவேடுகளுக்கும் பதிவேற்றங்களுக்கும் இடையிலான தொழில்நுட்ப வேலைகள், வேலைகளைக் கொடுத்தாக வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்படும் வேலைகள், புதிது புதிதாக உருவாக்கி வழங்கப்படும் வேலைகள், வேலைகளை உருவாக்குவதற்கென்று இருக்கும் உயர்மட்ட ஆய்வுக்குழு உருவாக்கித் தரும் வேலைகள் – இவற்றுக்கு மத்தியில் சிறுநீர் கழிப்பதும், தாகத்திற்கு நீர் பருகுவதும் வேலைகளாகி விடுகின்ற. சிறுநீரை அடக்கிக் கொண்டு பார்த்த வேலைகள் ஆயிரம் இருக்கும். தாகத்தைத் தவிர்த்து விட்டு பார்த்த வேலைகள் சில நூறு இருக்கும். புதிய பொறுப்புகளுக்காகப் பழைய பொறுப்புகள் விட்ட பாடில்லை. செல்லரித்துப் போன பழைய பதிவேட்டையும் அடிக்கடிப் பார்த்து விவரங்களை நினைவில் கொண்டே இருக்க வேண்டும். பணிக்கு வரும் இதர அலுவலர்கள் எனக்கென்ன என்பது போலத்தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க அவர்கள் செய்யாமல் விட்ட பணிகளையும் தாங்குவது என்றால்… முதுகெலும்பு உள்ளவர் செய்கிற காரியமா? முதுகெலும்பு உடைந்து நாட்களாகி விட்டதால், உடைந்த முதுகெலும்பில் எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றலாம் என்ற சித்தாந்ததை உருவாக்கியவர்கள் அதையே செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாயாய் உழைப்பவர்கள் பேயாய் மாறுவார்கள்!

நிறைவேறாத ஆசையுடன் இறப்பவர்கள் பேயாய் மாறுவார்கள் என்று கிராமத்தில் சொல்லக் கேட்டவர்கள்தானே நாம். அதெல்லாம் மீமெய்யியல் என்று ஒதுக்கினாலும் நாயாய் உழைப்பவர்கள் பேயாய் மாறுவார்கள் என்பதை எப்படி அப்படி ஒதுக்க முடியும்?

நாயாய் உழைப்பவர்கள் என்றால் லொள் லொள் என்று குரைத்துக் கொண்டு உழைப்பவர்களா? இப்படியா புரிந்து கொள்வது மொன்னையாக. அவர்கள் விசுவாசமாக உழைப்பவர்கள், உழைக்கிறவர்கள், உழைத்துக் கொண்டே இருப்பவர்கள். நாயின் விசுவாசத்துக்கும் உழைப்புக்கும் என்ன கிடைக்கும்? பணக்கார வீட்டு நாய்களுக்குப் பலதும் கிடைக்கலாம். மனித நாய்களாகக் கருதப்படுபவர்களுக்கு ஒரு பதவி உயர்வுதான் ஒரு குச்சு மிட்டாய்.

குச்சு மிட்டாய் சுலபமாகக் கிடைக்கும் சமுதாயத்திலா நாம் இருக்கிறோம்? குச்சிகள் கிடைக்கலாம், குச்சி மேலிருக்கும் மிட்டாய்கள் கிடைக்காது. அதை உங்கள் கைக்கு வரும் முன்னே வேலை செய்யாத ஒருவர் சப்பிச் சாப்பிட்டிருப்பார். அவருக்கு அது ஒன்றுதான் வேலை. தேனெடுப்பவர் ஒருவர், புறங்கையை நக்கி சாப்பிட்டிருப்பவர் வேறொருவர்.

ஊரார் கோப்பைப் பார்த்து சரி செய்து கொடுத்த உங்கள் கோப்பில் இருக்கும் ஓட்டைகள் அப்போது தெரிய வரும். ஒரு ஓட்டையா? இரண்டு ஓட்டைகளா? ஆயிரம் ஓட்டைகள் உள்ள ஓட்டைக் குடையில் நீங்கள் எந்த ஓட்டையை அடைப்பீர்கள்? குடை பிடித்திருக்கிறோம் என்ற கௌரவத்துக்கு நீங்கள் மழையில் நனைந்து கொண்டே போகலாம். கேட்பீர்களா நீங்கள்? உங்களுக்கு ரோஷம் வந்து விடும்.

சிலரிடம் சொல்லி வைப்பீர்கள். சிபாரிசுக்காகக் காலணி துடைப்பீர்கள். நீங்கள்தான் உழைத்து உழைத்து எல்லாவற்றையும் உழைப்பாக்கி விட்டீர்களே? காலில் விழுவதும் உழைப்புதான், அடி மற்றும் உதைகளை வாங்கிக் கொள்வதும் உழைப்பதும், அவமானத்தை அடிமனதில் தாங்குவதும் உழைப்புதான்.

குச்சி மிட்டாய் கனவுக்காகப் பலரிடம் பேசுவீர்கள். அவர்கள் கதைக்கு உதவாத விதிகளைச் சொல்வார்கள். காரியத்தை ஆக்காத ஆணைகளை நீட்டுவார்கள். ஆணாக நீங்கள் இருந்தால் ஆண் என்பதற்கான சான்றினைக்  கேட்பார்கள், பெண் என்றால் பெண் என்பதற்கான சான்றினைக் கேட்பார்கள். முடிவில் அது நீங்கள் அதாவது நீங்கள் நீங்கள்தான் என்பதற்கான சான்றினைக் கேட்பார்கள். நான் யார் என்ற கேள்வியைக் கேட்டு ரமண நிலைக்குச் செல்ல வைப்பார்கள். முற்றும் துறந்த முனியாகி விட்டால் அதன் பின் குச்சு மிட்டாய் உயர்வு உங்களைப் பாதிக்காது. விட மாட்டார் கருப்பு என்று தொடர்ந்தால் சட்ட விதிகள் சும்மா இருக்குமா? உங்களுக்காக மனநல மருத்துவர் காத்திருப்பார். அவரிடம் முன்கூட்டியே பணம் செலுத்தி நேரம் வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

இதற்கு மேல் என்ன நடக்கும் என்று கேட்கிறீர்களா? எல்லாவற்றையும் ஓர் எழுத்தாளர் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? அப்படிச் சொன்னால் உங்கள் வேலையை அவர் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருப்பதாக அர்த்தமாகும். நீங்களே அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள். எழுத்தாளர் கொஞ்ச நேரம் ஓய்வு நேரத்தில் இருக்கட்டும். தமிழில் எழுதுபவர்களுக்குப் பதவி உயர்வும் கிடையாது, நீங்கள் எப்படி இரட்டை அர்த்தத்தில் பார்த்தாலும்.

*****

No comments:

Post a Comment

Solutions available while changing lifestyles!

Solutions available while changing lifestyles! Samudhira used to drink only half of the water bottle she took to school. The rest of the w...