29 Jan 2024

அதிர்ஷ்ட விதிகளின் எதிர்வினை

அதிர்ஷ்ட விதிகளின் எதிர்வினை

பள்ளம் மேடு குண்டு குழிகள் மிகுந்த சாலையில்

எவ்வளவு மெதுவாக

ஆடி அசைந்து அழகாகச் செல்கின்றன வாகனங்கள்

 

அப்பா கொடுத்து விட்டுப் போனது பத்து ரூபாய்

அம்மாவின் கையிலிருந்து கிடைத்தது ஏழு ரூபாய் இருபது பைசா

வீட்டுக்காரர் எடுத்துக் கொண்டது இரண்டு ரூபாய் எண்பது பைசா

 

மழையடித்தால் விடுமுறை

அதிக வெயிலடித்தால் விடுமுறை

அதிர்ஷ்டம் செய்த குழந்தைகள்

அன்று முழுவதும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

ஒவ்வொரு விடுமுறைக்கும்

ஓர் எதிர்வினை இருக்கிறது

என்று நியூட்டனின் மூன்றாம் விதியை

மனப்பாடம் செய்யும் குழந்தைகளுக்குச்

சனிக்கிழமை வேலை நாளாகிறது

*****

25 Jan 2024

அதிர்ஷ்டத்தின் பாதை

அதிர்ஷ்டத்தின் பாதை

உங்களிடம் அதிர்ஷ்டம் இருந்தால் எல்லாருக்கும் கொஞ்சம் தாருங்கள்

எத்தனைப் பேருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குத் தாருங்கள்

துரதிர்ஷ்டத்தைச் சுமப்பவர்கள் நாட்டில் அதிகம்

அவர்களின் சுமையை உங்களையும் சுமக்கச் சொல்லவில்லை

அவர்களின் சுமையை இறக்கி வைக்க உதவுங்கள்

அதிர்ஷ்டத்தின் திசை தெரியாதவர்களுக்கு வழிகாட்டுங்கள்

அதிர்ஷ்டத்தை விலக்குபவர்களிடம் ஈர்ப்பதைச் சொல்லிக் கொடுங்கள்

துரதிர்ஷ்டத்தின் பக்கம் தலை வைத்து படுப்பவர்களிடம்

அதிர்ஷ்டத்தின் பக்கம் தலைவைத்துப் படுக்கச் சொல்லுங்கள்

எதில் அதிர்ஷ்டம் இருக்கிறது என்பது தெரியாததால்

எல்லாவற்றிலும் தேடச் சொல்லுங்கள்

எதைச் செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது

எவரும் அறிய முடியாத ரகசியம் என்பதால்

எல்லாவற்றையும் செய்யச் சொல்லுங்கள்

எந்த இடத்திலும் புதையல் இருக்கும் என்பதால்

எல்லா இடத்தையும் தோண்டிப் பார்க்கச் சொல்லுங்கள்

அதெப்படி எல்லாவற்றையும் தேடி

எல்லாவற்றையும் செய்து

எல்லா இடங்களிலும் தோண்டி முடியுமா என்றால்

முடியாதவர்கள் எப்படி

அதிர்ஷ்டத்தின் விலாசத்தை அடைய முடியும்

எங்கிருக்கும் என்று தெரியாத ஒன்றை

எல்லா இடங்களிலும் அலசிப் பார்க்காமல்

எப்படிக் கண்டுபிடிக்க முடியும்

எந்த நேரத்தில் வரும் என்று தெரியாத ஒன்றுக்காக

எல்லா நேரத்திலும் காத்திருக்க வேண்டும்

எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் இருங்கள்

எந்தக் கதவு திறக்கும் என்று தெரியாத போது

எல்லா கதவுகளையும் தட்டிப் பாருங்கள்

ஆயிரத்தில் ஒன்று அதிர்ஷ்டத்திற்கு அடியெடுத்து வைக்கிறது

அதற்காக 999 அடிகளை நீங்கள் தவிர்த்து விட முடியாது

எல்லா அடிகளையும் கவனமாக எடுத்து வையுங்கள்

ஏதோ ஒரு அடியில் நீங்கள் மாய உலகில் நுழைவீர்கள்

அங்கு நுழைந்து விட்டால்

நீங்கள் நினைப்பது நடக்கும்

அதற்கு நீங்கள் எல்லா இடங்களிலும் நுழைந்து பாருங்கள்

அதிர்ஷ்டத்தின் தீண்டலுக்கு முன்பாக

நீங்கள் நிறைய துரதிர்ஷ்ட தீண்டல்களைப்

பரிசோதித்துப் பார்த்திருக்க வேண்டும்

முடிவில் உங்கள் பரிசோதனையின் முடிவுகள்

அதிர்ஷ்டத்தின் தீண்டல்களை அறிய வைக்கும்

அறிந்து கொள்ளும் வரை அறிதலை நிறுத்தாதீர்கள்

அடையும் வரை பயணத்தைப் பாதியில் முடிக்காதீர்கள்

நிறைய முயன்று வீட்டீர்கள்தான்

இன்னும் கொஞ்சம் முயலுங்கள்

உங்கள் துரதிர்ஷ்டங்கள் சோர்ந்து போகும் வரை

அனைத்தையும் எதிர்கொள்ளுங்கள்

கண்களை மூடி விடாதீர்கள்

மூடிய கண்களுக்குள் தெரிவதெல்லாம் துரதிர்ஷ்டங்கள்

அதிர்ஷ்டம் புலப்படும் போது

உங்கள் கண்கள் திறந்திருக்க வேண்டும்

*****

22 Jan 2024

மூன்று நாட்களுக்குப் பின் இலவச சேவை கட்டணச் சேவை ஆகும்!

மூன்று நாட்களுக்குப் பின் இலவச சேவை கட்டணச் சேவை ஆகும்!

பங்குச் சந்தையில் பங்குகளை விற்கும் மற்றும் வாங்குவதற்கான குறிப்புகள் (ஸ்டாக் டிப்ஸ்) எப்படிக் கட்டணச் சேவையாக மாறுகிறது என்கிற கதை வேடிக்கையானது.

உங்களுக்கு குறுஞ்செய்தியாகவோ, புலனம் வழியாகவோ அல்லது இன்னபிற தொடர்பு ஊடகங்கள் மூலமாகவோ பங்குச் சந்தையில் லாபம் குவிப்பதற்கான பங்குகளை விற்றல் மற்றும் வாங்குதல் குறிப்புகளை அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக செய்திகள் வரும்.

மூன்று நாள் இலவசச் சேவையைப் பரிசோதனை செய்துவிட்டுக் கட்டணச் சேவைக்கு மாறிக் கொள்ளலாம் என்று அந்தச் செய்தி தெரிவிக்கும்.

மூன்று நாட்கள் நீங்கள் சோதித்துப் பார்க்கும் போது உங்களுக்கு அந்தக் குறிப்புகள் லாபகரமாக அமையும். அதை நம்பி நீங்கள் கட்டணச் சேவையில் இணைந்தால் தொடர்ந்து நீங்கள் நட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். அல்லது கட்ணத்தைச் செலுத்திய பிறகு உங்களுக்குச் செய்திகள் வராமல் போகலாம். ஏன் இப்படி நடக்கிறது? இதன் பின்னணிதான் என்ன?

அதற்கு முன் சிலவினாக்களை எழுப்பி விடை காண்பது முக்கியமாகிறது.

பங்குச் சந்தையில் எதை வாங்கி விற்றால் லாபம் கிடைக்கும் என்ற செய்தி தெரிந்த ஒருவர் அதைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதைப் பார்ப்பாரா? அல்லது உங்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்க பார்ப்பாரா? அப்படி ஒரு நுட்பத்தை ஏன் அவர் உங்களுக்கு விற்க வேண்டும்? உண்மையில் அந்தச் செய்தி சரியாக நடக்குமானால் அவர் அதை வெளியில் சொல்லவே மாட்டார். அவரே பயன்படுத்தி அதிக லாபத்தைப் பார்ப்பார். பிறகேன் அவர் வெளியே சொல்கிறார்?

எந்தப் பங்கு எந்த நேரத்தில் இறங்கும், ஏறும் என்பது நூறு சதவீதம் சரியாக யாருக்கும் தெரியாது. பங்குகளை வாங்கி விற்று அல்லது விற்று வாங்கி லாபம் சம்பாதிக்க ஆசைப்படும் நபர்களைப் பயன்படுத்திச் செய்தி அனுப்புபவர் பணம் பண்ண நினைக்கிறார் என்பதுதான் இதன் பின்னணியில் இருக்கும் சூட்சமம். அவர் இதை ஒரு வியாபாரமாக மாற்றி பலரை ஏமாற்ற நினைக்கிறார். இந்தச் சங்கிலி எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிந்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள், இதில் என்ன நடக்கிறது என்பதை.

பங்குகளை விற்கும் மற்றும் வாங்கும் குறிப்புகளை அனுப்புவதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒருவர் முதலில் 200 பேருக்குச் செய்திகளை அனுப்புகிறார். அவர் எப்படி அனுப்புகிறார் என்றால் ஒரு குறிப்பிட்ட பங்கை இன்ன விலையில் வாங்கி இன்ன விலைக்கு விற்று லாபம் செய்யுமாறு 100 பேருக்கும், அதே பங்கை இன்ன விலையில் விற்று இன்ன விலைக்கு வாங்கி லாபம் செய்யுமாறு மற்ற 100 பேருக்கும் செய்தி அனுப்புகிறார். அதாவது ஒரு நூறு பேருக்கு வாங்கி விற்று லாபம் பார்க்கச் சொல்கிறார். மற்ற நூறு பேருக்கு விற்று வாங்கி லாபம் பார்க்கச் சொல்கிறார். இந்த இரண்டில் ஒன்றுதான் பங்குச் சந்தையில் நிகழச் சாத்தியம் என்பதால் அவர் அனுப்பிய இருவிதமான செய்திகளில் ஏதோ ஒன்று நடக்க வாய்ப்பிருக்கிறது.அதன் படி 200 பேரில் 100 பேர் லாபம் பார்த்திருப்பர், மற்ற 100 பேர் நட்டம் பார்த்திருப்பர்.  அவர் செய்தி அனுப்பியபடி லாபம் பார்த்த 100 பேரை மட்டும் அவர் அடுத்த நாள் செய்தி அனுப்ப தேர்ந்து கொள்கிறார். அவர் சொன்னபடி லாபம் பார்க்க முடியாத நட்டம் பார்த்த 100 பேரை அவர் அத்தோடு விட்டு விடுகிறார். இது முதல் நாள் நடப்பது.

இரண்டவாது நாள் அவர் என்ன செய்கிறார் முதல் நாள் செய்த வேலையை அப்படியே 100 ஐ இரண்டாகப் பிரித்து குறிப்பிட்ட பங்கை இன்ன விலையில் வாங்கி இன்ன விலைக்கு விற்று லாபம் பார்க்குமாறு 50 பேருக்கும், அதே பங்கை இன்ன விலையில் விற்று இன்ன விலைக்கு வாங்கி லாபம் பார்க்குமாறு மற்ற 50 பேருக்கும் செய்தி அனுப்புகிறார். இந்த இரண்டில் ஒரு வகையில்தான் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கச் சாத்தியம் என்பதால் அவர் அனுப்பிய இருவிதமான செய்திகளில் ஏதோ ஒன்றில் லாபம் பார்க்க வாய்ப்பிருக்கிறது. அதன்படி 50 பேர் லாபம் பார்த்திருப்பர். 50 பேர் நட்டம் பார்த்திருப்பர். அவர் செய்தி அனுப்பியபடி லாபம் பார்த்த 50 பேரை மட்டும் அவர் அடுத்த நாள் செய்தி அனுப்ப தேர்ந்து கொள்கிறார். அவர் சொன்னபடி லாபம் பார்க்க முடியாத நட்டம் பார்த்த  50 பேரை அவர் அத்தோடு விட்டு விடுகிறார். இது இரண்டாம் நாள் நடப்பது.

மூன்றாவது நாள் அவர் என்ன செய்கிறார் என்றால் முதல் நாள் மற்றும் இரண்டாவது நாள் செய்த அதே வேலையை 50 ஐ இரண்டாகப் பிரித்து குறிப்பிட்ட பங்கை இன்ன விலையில் வாங்கி இன்ன விலைக்கு விற்று லாபம் பார்க்குகுமாறு 25 பேருக்கும், அதே பங்கை இன்ன விலையில் விற்று இன்ன விலைக்கு வாங்கி லாபம் பார்க்குமாறு மற்ற 25 பேருக்கும் செய்தி அனுப்புகிறார். இந்த இரு வகையில் ஒரு வகையில்தான் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கச் சாத்தியம் என்பதால் அவர் அனுப்பிய இருவிதமான செய்திகளில் ஏதோ ஒன்றில் லாபம் பார்க்க வாய்ப்பிருக்கிறது. அதன்படி 25 பேர் லாபம் பார்த்திருப்பர். 25 பேர் நட்டம் பார்த்திருப்பர். அவர் செய்தி அனுப்பியபடி லாபம் பார்த்த 25 பேரை மட்டும் அவர் இப்போது கட்டணச் சேவையோடு பங்குகளை வாங்கும் விற்கும் குறிப்புகள் அனுப்புவதற்கான நபர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்.

அவர் தேர்ந்து கொண்ட 25 பேரில் நீங்கள் ஒருவராக இருந்தால் நான்காவது நாள் செய்தி அனுப்ப அவர் உங்களிடம் கட்டணத்தைக் கேட்பார். உங்களுக்குத்தான் மூன்று நாளும் அவர் சொன்னபடி பங்குச் சந்தைக் குறிப்புகள் லாபம் தந்து விட்டதே. நீங்கள் இனி அவர் சொன்னபடிதான் பங்குச் சந்தை நடக்கும் என்று நம்பத் தொடங்கி விடுவீர்கள். அவர் கேட்கும் கட்டணத்தை அனுப்ப தயாராக இருப்பீர்கள். அவர் உதாரணத்துக்கு ஒரு மாத பங்குச் சந்தைக் குறிப்புகளுக்கு பத்தாயிரமோ, ஐம்பதாயிரமோ, ஒரு லட்சமோ கேட்கலாம்.

அவர் கேட்டபடி நீங்கள் உட்பட 25 பேரும் பத்தாயிரம் அனுப்பினால் இரண்டரை லட்சம் சம்பாதித்து விடுவார், ஐம்பதாயிரம் அனுப்பினால் பனிரெண்டரை லட்சம் சம்பாதித்து விடுவார், லட்ச ரூபாய் அனுப்பியிருந்தால் இருபத்தைந்து லட்சம் அனுப்பி விடுவார். நான்கே நாட்களில் அவர் இப்படி ஒரு மகத்தான தொகையைப் பெற்று விடுவார். இப்படித்தான் ஆசை வலை விரித்து பங்குச் சந்தைக் குறிப்புகளை விற்பதாக விற்பவர்கள் பணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது நீங்கள் உட்பட 25 பேரிடம் அவர் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு என்ன செய்வார்? அவர் செய்தி அனுப்பலாம் அல்லது அனுப்பாமல் போகலாம். ஒருவேளை அவர் செய்தி அனுப்பினாலும் அது இனி எப்படி வேலை செய்யும் என்பது உங்களுக்கே தெரியும்.

அவ்வளவுதான் அத்தோடு அவர் ஓய்ந்து விட மாட்டார். நாட்டில் இப்படி ஆசை வலையில் சிக்கிக் கொள்ளும் மக்களுக்கா பஞ்சம்? இப்போது அடுத்த 200 பேரைத் தொடர்பு கொண்டு தன் சங்கிலித் தொடர் வலைக்குள் உங்களைத் தேர்ந்தெடுத்ததைப் போலத் தேர்ந்தெடுத்து பணம் பறிக்கும் விளையாட்டைத் தொடங்குவார். அவர் எதிர்பார்த்தபடி மூன்று நாட்களில் 25 பேர் சிக்கியதும் இதே பண விளையாட்டை ஆட்களை மாற்றி மாற்றி விளையாடிக் கொண்டே இருப்பார்.

பங்குச் சந்தைப் பற்றிய எந்தக் குறிப்பையாவது தெரிந்து கொண்டு எப்படியாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற பேராசை பிடித்த மனிதர்கள் இருக்கும் வரை இது போன்று சம்பாதிப்பவர்கள் சம்பாதித்துக் கொண்டே இருப்பார்கள்.

இப்படித்தான் பங்குச் சந்தைக் குறிப்புகளை அனுப்புகிறேன் என்ற பெயரில் பணத்தைச் சம்பாதிக்கிறார்கள் ஏமாற்றுப் பேர்வழிகள். நீங்கள்தான் இதைப் புரிந்து கொண்டு விழிப்புணர்வோடு இருந்து கொள்ள வேண்டும். எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உணர்வோடு இருந்தால் நீங்கள் ஏமாறுவது நிச்சயம். நீங்கள் ஏமாறுவதை நீங்கள்தான் தடுத்துக் கொள்ள வேண்டும்.

*****

18 Jan 2024

சில நேரங்களில் சிலவற்றைக் கண்டு கொள்ளாதீர்கள்!

சில நேரங்களில் சிலவற்றைக் கண்டு கொள்ளாதீர்கள்!

மனிதர்கள் மற்றவர்களைக் கொலை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். தன்னைத் தானே கொலை செய்து கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். தற்கொலையை அப்படித்தானே சொல்ல வேண்டியிருக்கிறது.

தற்கொலை குறித்த புள்ளி விவரங்கள் மிகுந்த அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றன.

ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் 3 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 60 பேர் தற்கொலை எண்ணத்துடன் இருக்கிறார்கள்.

தற்கொலை செய்து கொள்பவர்களில் 18 முதல் 30 வயது வரையுள்ளவர்கள் அதிகம். அதற்கு அடுத்தப்படியாக 30 முதல் 45 வயது வரையுள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் உயர் பொறுப்பிலுள்ள அதிகாரிகளே தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் தமிழகத்தில் சென்னை மாநகரம் முதலிடத்தில் இருக்கிறது என்பதைக் கேட்டவுடன் அது தலைநகரமா, தற்கொலை நகரமா என்ற எண்ணம் தோன்றுவதை எப்படித் தவிர்ப்பது?

ஏன் இந்த தற்கொலைகள் நடக்கின்றன?

மனிதர்கள் மனிதர்கள் மீது வைக்கும் அன்பு குறைவின் விளைவுதான் இது என்பது பொத்தாம் பொதுவான பதில். உண்மையில் இதற்குக் காரணம் மனிதர்கள் மனிதர்கள் மீது வைக்கும் மதிப்புக் குறைவின் விளைவுதான்.

எப்போது மனிதர்களை நாம் மதிப்புக் குறைந்தவர்களாகப் பார்க்கத் தொடங்கினோமோ, பணத்தையும் இதர பொருளாதார மதிப்புகளையும் மதிப்பு மிகுந்தவையாகப் பார்க்கத் தொடங்கினோமோ அப்போதே மனிதர்கள் மனதளவில் வீழ்ச்சி அடைந்து விட்டார்கள். அந்த வீழ்ச்சியைப் பொறுத்துக் கொள்பவர்கள், சகித்துக் கொள்பவர்கள், மனதார ஏற்றுக் கொண்டு வாழ பழகுபவர்கள் தற்கொலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில்லை. வீழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தற்கொலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.

அக்கம் பக்கத்தைப் பார்க்கையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டவர்கள், குடும்பப் பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டவர்கள், காதல் பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெறாததால் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்று ஒரு பட்டியலை நாம் தயாரிக்க முடியும்.

இத்தற்கொலைகளைக் கொண்டு தற்கொலைக்கான காரணங்களைப் பொருளாதாரக் காரணங்கள், மனம் மற்றும் உணர்வு சார்ந்த காரணங்கள், சமூகக் காரணங்கள், கல்வி ரீதியான காரணங்கள் என்று வகைபடுத்திக் கொள்ளலாம். இன்னும் வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

இக்காரணங்களில் பொருளாதாரக் காரணங்களுக்கும், கல்வி ரீதியான காரணங்களுக்கும் அரசுகள்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

மனம் மற்றும் உணர்வு சார் காரணங்களுக்கு குடும்பம், உறவுகள் மற்றும் நட்புகள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

சமூகம் சார் காரணங்களுக்கு ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் கல்வியின் மூலமாக மாற்றலாம் என்றால் கல்வியே சில நேரங்களில் தற்கொலைக்கான காரணமாக அமைவதால் மாற்றுவதற்கு அதுவும் ஒரு சாதனம் என்று கொள்ளலாமே தவிர அதை மட்டுமே முழுமையான சாதானமாகக் கொள்ள முடியாது.

தற்கொலை என்பது ஒரு நொடி நேரத்து மன மாற்றமே, அந்த நொடியைக் கடந்து விட்டால் தற்கொலையையும் கடந்து விடலாம் என்கிறார்கள். எதுவும் அப்படி ஒரு நொடி நேரத்தில் திடீரெனக் கிளம்பி விடுவதில்லை. அது நொடி நேரத்து மாற்றமாக இருந்தாலும் பல காலம் சிறிது சிறிதாக உருவாகி மறைந்திருந்து ஒளிந்திருந்து வெளிப்பட்டு, பிறகு வெளிப்படாமல் இருந்து பிறகு மீண்டும் மீண்டும் உருவாகி மறைந்து உருவாகி என்று திடீரென ஒரு நொடிப்பொழுதில் வெடித்துக் கிளம்பும் உணர்வே. அந்த ஒரு நொடிக்கு ஒரு நீண்ட கால பின்புலமும் பின்னணியும் இருக்கிறது. அதனால்தான் தற்கொலையை வெறும் நோடி நேரத்து மன மாற்றம் என்று மட்டும் குறுக்கி விட முடியாது. அதை நெடுநாட்களாக ஓடிக் கொண்டிருக்கும் மன மாற்றத்தின் திடீர் வெடிப்பு என்று குறிப்பிடலாம்.

அனுசரணையான குடும்பம், நட்புகள், உறவுகள், உணர்வுகளையும் மனப்போக்குகளையும் செவி மடுக்கும் பெரியோர்கள் அல்லது ஆலோசகர்கள் நிறைந்த வாழ்க்கையில் தற்கொலைக்கான எண்ணம் தோன்ற வாய்ப்பில்லை என்று சொல்லலாம்.

நம் குடும்ப அமைப்புகள் அப்படியா இருக்கின்றன? ஒவ்வொரு குடும்ப அமைப்பும் வெவ்வேறு பொருளாதாரத் தேவைகளைத் தேடியபடியும், வேலை வாய்ப்புக்கான நெருக்கடிகளை எதிர் கொண்டபடியும் வாழ்க்கையை ஒரு போராட்டமாகக் கருதியபடி இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அரவணைத்துச் செல்லும் ஆரோக்கியமான நட்புகளும் உறவுகளும் அரிதாகிக் கொண்டிருக்கின்றன. பயன் கருதி இணைந்திருக்கும் பொருளாதாரம் சார்ந்த உறவுகளும் நட்புகளுமே அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.

உணர்வுகளையும் மனப்போக்குகளையும் செவி மடுக்கும் பெரியோர்களை நாம் முதியோர் இல்லத்தில் தள்ளி விட்டு விட்டோம். ஆலோசர்களை நாட காசு கொடுக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி விட்டோம்.

நம்முடைய பொருளாதாரத் தேவைகளும், கெளரவத் தேவைகளும், உணர்வு மற்றும் மனம் விரும்பும் தேவைகளுமே நமக்கு முதன்மையாகி விட்டன. மற்றவர்களுக்காகச் சிறிது பணம் செலவழிப்பதும், நேரம் செலவழிப்பதும், சில சொற்களைக் காது கொடுத்துக் கேட்பதும் நமக்கு அநாவசியமாகி விட்டன. இந்தச் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்பவர்களும் ஏற்றுக் கொள்பவர்களும் சகித்துக் கொள்பவர்களும் தப்பித்துக் கொள்வார்கள். ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையை அடைபவர்கள் தற்கொலை செய்து கொள்வதன் மூலமாகத் தங்கள் மதிப்புகளை இந்தச் சமூகத்திற்கு உணர்த்த நினைப்பார்கள். அவர்கள் இறந்தால் அவர்களுக்காக அழுவார்கள், தங்கள் தவறுகளை நினைத்து வருந்துவார்கள் என்று அவர்களாகவே கருதிக் கொள்வார்கள். தங்கள் இறப்பின் மூலம் தங்களுக்குப் பிரியமானவர்களைப் பழி வாங்குவதாகவும் எண்ணிக் கொள்வார்கள். ஆனால் நிதர்சனம்? இங்கே வாழும் மனிதர்களைப் பற்றியே நினைக்க நேரமில்லாத மனிதர்களுக்கு இறந்து விட்ட மனிதர்களைப் பற்றி நினைக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?

தற்கொலை குறித்த எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான எண்ணப்போக்கு எப்படி இருக்கலாம் என்று கேட்டால், கீழே உள்ள பத்திகளைப் படித்துப் பார்ப்பதன் மூலம் ஒருவர் அதற்கான மனப்போக்கை அனுமானிக்க முடியும்.

எல்லாரும் இந்த உலகிற்கு முக்கியமானவர்கள்தான். சிறு பூச்சி உட்பட எல்லாம் வாழ்க்கை சமநிலைக்கு அவசியமானவை. நீங்களும்தான் இந்த உலகிற்கு அவசியமான முக்கியமான நபர். இப்போது உங்களது அவசியமும் முக்கியத்துவம் உணரப்படாமல் இருக்கலாம். அது சிறிது காலம்தான். விரைவில் உங்களது அவசியமும் முக்கியத்துவம் உணரப்படும். அதுவரை நீங்கள் வாழ வேண்டும். அவ்வளவுதான். வாழுங்கள்.

நீங்கள் எவற்றை இழந்து விட்டீர்கள், எவற்றை அடையாமல் அல்லாடுகிறீர்கள் என்று நினைக்கிறீர்களோ அனைத்தையும் அடைவீர்கள். அப்படி நீங்கள் நினைத்ததை அடைய முடியாவிட்டால் நீங்கள் நினைத்ததை விட இன்னும் சிறப்பானவற்றை அடைவீர்கள். இது வாழ்க்கை குறித்த நம்பிக்கைக்கான வாசகம் என்று நினைத்து விடாதீர்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்பதால் எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் பொக்கிஷங்கள் என்னவென்று தெரிந்து கொள்வதற்காகவேனும் வாழுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே. சாதிப்பதற்கானது என்றோ மகத்தான காரியங்கள் செய்வதற்கானது என்றோ அவமானங்களுக்கோ அவமதிப்புகளுக்கோ அங்கே இடமில்லை என்று போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். வாழ்ந்து கொண்டே இருங்கள். அந்த வாழ்க்கையில் சாதனைகள், மகத்தான காரியங்கள், அவமானங்கள், அவமதிப்புகள் எல்லாம் வந்து போகும். எதுவும் நிரந்தரமில்லை. எல்லாம் மாறிப் போகும். எல்லாம் மாறிப் போகும் இந்த உலகில் எதையும் நிரந்தரம் என்று நினைத்து அல்லாடிக் கொண்டு இருக்காதீர்கள்.

எதுவும் கடந்து போகும். மனதை அழுத்தும் இந்தச் சுமைகளும்தான். இவ்வளவு சுமைகளைச் சுமப்பதாக நினைக்கும் இந்த மனமும் இன்னொரு காலத்தில் காணாமல் போகும். ஆம், இப்போது இருப்பது போலவே எப்போதும் இருக்கப் போவதில்லை இந்த மனம். இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். காலம் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டுக் கொண்டே போய்க் கொண்டே இருக்கும். நீங்கள் மாறிக் கொண்டிருக்கும் காலத்தில் மாற்றங்களை வேடிக்கைப் பார்த்தபடி பயணித்துக் கொண்டிருங்கள்.

இந்த வாழ்க்கையில் தீவிரம் கொள்ள எதுவுமில்லை. மென்மையாக, தளர்வாக, நெகிழ்வாக, மகிழ்வாகவே இருந்து விட்டுப் போங்கள். அப்படி இருப்பதற்கு ஏதேனும் சூத்திரம் இருக்கிறதா என்றால், அந்தச் சூத்திரமே உங்களைத் தீவிரமாக்கவும் இறுக்கமாக்கவும் கூடும். இருப்பினும் இந்தச் சூத்திரம் பயன்படுமா என்று பாருங்கள். சில நேரங்களில் சிலவற்றைக் கண்டு கொள்ளாதீர்கள். இந்தச் சூத்திரம் உங்களை இறுக்கமாக்குனால் இந்தச் சூத்திரத்தையும் சில நேரங்களில் கண்டு கொள்ளாதீர்கள்.

*****

15 Jan 2024

பணியிடத்தில் உங்களைச் சிறப்பாக்கிக் கொள்ளும் முறைகள்

பணியிடத்தில் உங்களைச் சிறப்பாக்கிக் கொள்ளும் முறைகள்

அலுவலகம், தொழிற்சாலை, கடை, உணவகம் என்று உங்கள் பணியிடம் எதுவாக இருந்தாலும் அவ்விடத்தில் உங்களைச் சிறப்பாக நிர்வகித்துக் கொள்வதன் மூலமாக உங்கள் நிலையையும் வருமானத்தை உயர்த்திக் கொள்ள முடியும். பதவி உயர்வையும் அதிகப்படுத்திக் கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளை இப்பத்தியில் காண்போம்.

உங்கள் நிர்வாகத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எப்படி நிர்வகிக்கப்படுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு மேல் உள்ளவர் உங்களை எப்படி நிர்வகிக்க விரும்புகிறார் என்பதைப் தெரிந்து கொள்ளுங்கள். இவற்றில் எப்போதும் சில குறைபாடுகளும் அதிருப்திகளும் இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒருவெள்ளைத் துணியில் சிறு கரும்புள்ளியாவது இருப்பது போல, அழகான முகத்தில் ஒரு சிறு மரு இருப்பது போல, எவ்வளவு பத்திரமாகப் பாதுகாத்தாலும் உடம்பில் ஒரு சிறு தழும்பாவது ஏற்பட்டு விடுவது போல இது தவிர்க்க முடியாததாகும்.

அதிருப்திகளும் குறைபாடுகளும் உங்களை நிஜமாகவே பாதித்தாலும் அவைச் சிறிதளவும் உங்களைப் பாதிக்கவில்லை என்பதைப் போல நடந்து கொள்ளுங்கள். அப்படி நடந்து கொள்வதைத்தான் உங்கள் நிர்வாகமும் மேலதிகாரிகளும் முதலாளிகளும் எதிர்பார்ப்பார்கள். இது வேடமிடுவது போல அல்லவா. ஆம் நிச்சயமாக அப்படித்தான். உங்களுக்கு இதுபோல வேடமிட தெரியாவிட்டால் பணியிடத்தில் உங்களால் நிலைக்க முடியாது. நீங்கள் பந்தாடப்படுவீர்கள். அல்லது பணியிழப்புக்கு ஆளாவீர்கள்.

உங்கள் நிர்வாகம் எப்போதும் உங்களிடம் எப்போதும் அதிகமாக எடுத்துக் கொள்ளப் பார்க்கும். குறைவாகவே கொடுக்க நினைக்கும். தவிர்க்க முடியாத இந்த எதார்த்தத்தை நீங்கள் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.

அதிகமாக எடுத்துக் கொள்ளும் என்றால் உங்களது திறமையையும் உழைப்பையும் வேலை நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொள்ளும்.

குறைவாகக் கொடுக்கும் என்றால் உங்களுக்கான ஊதியத்தைக் குறைவாகக் கொடுக்க விரும்பும். நீங்கள் ஒரு நிர்வாகத் தலைவர் ஆனாலும் அல்லது நீங்கள் ஒரு முதலாளி ஆனாலும் இதே விதத்தில்தான் அப்போது நீங்களும் செயல்படுவீர்கள் என்பதுதான் இதன் பின்னுள்ள எதார்த்தம்.

நிலைமை இப்படி இருக்கும் போது உங்களுக்கான ஊதியத்தை அதிகப்படுத்திக் கொள்ள அந்த நிர்வாகத்தில் நீங்கள் முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருக்க வேண்டும்.

நீங்களின்றி அந்த நிர்வாகம் நடக்காது என்ற நிலையில் இருந்தால்தான் உங்களால் உங்களது ஊதியத்தை நிர்ணயம் செய்ய முடியும். இல்லையென்றால் அவர்கள் கொடுக்கின்ற ஊதியத்தை வாங்கிக் கொண்டு இருந்து கொள்வதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது?

சில நேரங்களில் பணி அல்லது வியாபார நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்காகக் குறைவான ஊதியத்தில் பணியாற்ற வேண்டியிருக்கும். அதை பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டியதில்லை. அது நீங்கள் கற்றுக் கொள்வதற்காகச் செய்கின்ற முதலீடு போன்றது. அதைக் கற்று முடித்தவுடன் நீங்கள் அதில் நிபுணராகி விடுவீர்கள். அந்த நிபுணத்துவத்தின் மூலமாகக் குறைவான ஊதியத்தில் நீங்கள் பணியாற்றிய காலத்து இழப்பையெல்லாம் புதிய நிர்வாக முறையை அல்லது புதிய வியாபாரத்தை ஆரம்பித்து நீங்கள் சம்பாதித்து விடலாம்.

பணியிடத்தில் உங்கள் குரல் எடுபட மாட்டேன்கிறது என்ற ஆதங்கமும் மனச்சோர்வும் உங்களுக்கு இருக்கலாம். நிர்வாகத்திற்குப் பயன்தரும் குரல்களே எப்போதும் எடுபடும். அது பெரும்பாலும் நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதாகவும் லாப அளவை அதிகரிப்பதாகவும் இருக்க வேண்டும்.

இதனால் நிர்வாகத்திடம் எதைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அதன் பட்ஜெட் எல்லையை நன்கு அறிந்து அதைக் குறைக்கும் விதத்திலும் லாபத்தை அதிகமாக்கிக் காட்டும் வகையில் பேச வேண்டும். அப்படிப்பட்ட குரல்தான் நிர்வாகத்தில் எதிரொலிக்கும். அப்படிப்பட்டவர்களிடமே நிர்வாகம் ஆலோசனைகளைக் கேட்பதை விரும்பும். அவர்களின் குரல்களுக்கே நிர்வாகம் செவி சாய்க்கவும் செய்யும்.

பணியிடங்கள் ஒன்றைச் செய்தால் என்ன விளைவுகள் உண்டாகும் என்பதைத்தான் பார்க்கும். அந்த விளைவுகள் நல்ல முடிவைத் தருவதாகவும் இருக்க வேண்டும். அதனால் நல்ல முடிவுகளைத் தரும் உங்கள் செயல்திறனையும் அதை ஊக்குவிக்கும் பேச்சையும்தான் நிர்வாகம் விரும்பும். உங்களது தனிப்பட்ட மன உணர்வுகளுக்கோ ஆதங்கங்களுக்கோ மனக் குறைகளுக்கோ அதற்கு அக்கறையில்லை என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பணியிடங்கள் எப்போதும் நீங்கள் இல்லாவிட்டால் இன்னொருவர் இருக்கிறார் என்ற அலட்சியத்துடனே செயல்படும். நீங்கள் இல்லாவிட்டால் இன்னொருவர் அதைச் சமாளிக்க முடியாது என்ற நிலையை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். அதில் சுணக்கம் காட்டினால் பணியிடம் உங்களைத் தூக்கி எறிய கொஞ்சம் கூட யோசிக்காது. பிறகு நீங்கள் எவ்வளவு உழைத்து என்ன பயன், நன்றி கெட்ட தனமாக நடந்து கொண்டு விட்டார்களே என்று புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

உங்களது பணியிட மதிப்பு நிலை என்பது உங்களைப் பற்றி உங்களது மேலதிகாரியின் மனநிலையே ஆகும். உங்களைப் பற்றி உங்களது மேலதிகாரி நல்ல மனநிலையோடு இருக்கும் வகையில் நடந்து கொள்வது நல்லது. அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டு உங்களைப் பற்றி நல்லவிதமாக நினைக்கும்படி நடந்து கொள்ள வேண்டும். அது முடியாத போது வேறு பணியிடத்தைத் தேடிச் செல்வது உசிதமானது. உங்களைப் பற்றிய உங்களது மேலதிகாரியின் மோசமான மனநிலை உங்கள் மனநிலையையும் பாதித்து உங்களது பணி நிலையையும் பாதித்து விடும். உங்களது எதிர்காலத்தையும் பாழாக்கி விடும்.

மற்றபடி உங்கள் திறமை, உழைப்பு போன்றவற்றால் உங்களது அடுத்த கட்ட பணி உயர்வு தீர்மானிக்கப்படும் என நினைத்தால் நீங்கள் தப்புக் கணக்குப் போடுவதாகவே அர்த்தம். உங்கள் பணி உயர்வை உங்களுக்கு மேலே உள்ள ஒரு மனிதர்தான் தீர்மானிக்கிறார். அதற்கு அவர் தன்னுடைய மனநிலையைப் பயன்படுத்துகிறார். உங்கள் திறமை, உழைப்பை அவர் அளவுகோலாகக் கொள்ளும் அளவுக்கு அவரை முதிர்ச்சி நிறைந்தவராக நினைத்தால் அது நீங்கள் செய்யும் தவறே ஆகும். அது உங்களது பணியிடத்தின் தவறாக ஆகாது.

கஷ்டப்பட்டு பாடுபடுவதாலே நீங்கள் பணியிடத்திற்குப் பிடித்தமானவர்களாக ஆகி விட மாட்டீர்கள். உங்களால் உங்கள் பணியிடத்திற்கு எவ்வளவு லாபம் என்ற எண்ணைக் காட்டுவதன் மூலமாகவே நீங்கள் உங்கள் பணியிடத்திற்குப் பிடித்தமானவர்களாக ஆகிறீர்கள்.

அடுத்து பணியிடப் பழக்கம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். உங்களோடு பணி புரிபவர்கள் உங்களைப் போன்ற மனநிலையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். அதுதான் பலரும் போடும் தப்புக் கணக்கு. யாருடைய மனநிலையையும் உங்களால் அனுமானித்து விட முடியாது. அதனால் யாருடனும் பணியிடம் குறித்த உங்களது பகுப்பாய்வுகளையோ விமர்சனங்களையோ பகிர்ந்து கொள்ளாதீர்கள். அவர்கள் ஏதாவது கூறினால் கேட்டுக் கொள்ளுங்கள்.

நீங்களாக உங்கள் பணியிட நண்பர்கள் நல்லவர்கள் என்று நினைத்து எதையாவது உளறி வைத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் நண்பர் என நினைப்பவர்கள் உங்களுக்கு எதிராக வத்தி வைப்பவராகவும் இருக்கலாம் என்பதை மறக்காதீர்கள். அனைவரிடமும் இணக்கமாகப் பழகுங்கள். அவர்கள் உங்கள் நலனில் அக்கறையாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.

யாருக்கும் யார் மேலும் எப்படி வேண்டுமானாலும் போறாமையோ போட்டியுணர்வோ பழி தீர்க்கும் உணர்வோ உண்டாகலாம். ஆகவே எச்சரிக்கையாக அதே நேரத்தில் எளிமையாகவும் எல்லாரிடமும் பழகிக் கொண்டிருங்கள். உண்மை விளம்பியாகி எல்லாரின் நன்மதிப்புகளையும் பெறப் போகிறேன் என்று உங்களுக்கான குழியை நீங்களே வெட்டிக் கொள்ளாதீர்கள்.

உங்களது பணி பற்றிய புதிய புதிய முன்னேற்றங்களையும் மாறுதல்களையும் அறிந்த வண்ணம் இருங்கள். அப்போதுதான் அவ்வபோது உங்களை மாற்றிக் கொண்டு உங்கள் பணித்தகுதிக்கு உங்களால் ஈடு கொடுக்க முடியும். பணியிடத்தாலும் உங்களை நீக்க முடியாத முக்கியமான நிலையிலும் இருக்க முடியும்.

கடைசியாக நீண்ட காலத்திற்கு ஒரே பணியிடத்திலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் மற்றவர்களுக்கான பணியிடங்களை உருவாக்கக் கூடிய நிலைமைக்கும் உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள். தொழிலாளியாக இருப்பது முதலாளியாக உயர்வதற்கான நுட்பங்களையும் நுணுக்கங்களையும் கற்றுக் கொள்வதற்காகத்தான் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பத்தியில் சொல்லப்படுவது எல்லாம் குறுக்கு வழிகள் போல இருப்பதாக நினைக்காதீர்கள். அவ்வபோது வளைந்து நெளிந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் பாதைகள் எப்போதும் நேராக இருப்பதில்லை.

*****

11 Jan 2024

மலரை நினைக்கும் மனதில் அரசியல் வாடை

மலரை நினைக்கும் மனதில் அரசியல் வாடை

பறிக்கப்படாத பூக்களுக்கு

மண்ணை

பூஜிக்கும் பாக்கியம்

 

தெருநாய் காணாமல் போனால்

யாருக்கென்ன கவலை

வீட்டுநாய் காணாமல் போன

வீட்டில் இருப்போருக்கு எல்லாம் கவலை

 

நினைத்தால் போதும்

அதுவே வழிநடத்திச் செல்லும்

நினைக்க வேண்டுமே

பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாவுக்கு இடையில்

 

அரசியலில் தோல்வி என்பது ஏது

ஆளுநர் ஆகியும் மின்னலாம்

அது சரி

ஆனால் இந்த

சராசரிகளை என்ன பண்ணலாம்

*****

புதிய பறவையின் பாடல்

சேர்ந்து வாழ்வதா

அதெல்லாம் முடியாது

இந்த இணைவு இந்த இரவுக்கானது

நாளை செல்லுபடியாகாது

நாளை நீ

பல இடங்களில் தேடி அலையலாம்

கண்டுபிடிப்பது சாத்தியமற்றது

யாரும் யாரையும் தேடி

ஏன் அலைந்து கொண்டிருக்க வேண்டும்

கிடைப்பவருடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்

தேடலின் தப்புதலில் இருக்க பிரியப்படுபவர்கள்

இனிவரும் நாட்களில் அதிகமாவார்கள்

உன் சந்தோஷத்திற்காக உன் சிறைகளில் அகப்பட்டு வாழ

எந்தப் பறவை தயாராக இருக்கும்

அடைபட்ட பறவைகளுக்காக தரும் உணவு

விலைமதிப்பற்றதாக இருக்கலாம்

சுதந்திரம் அதை விட விலைமதிப்பற்றதாகி விடுகிறது

நீயும் சுதந்திரமாகக் சுற்றித் திரி

உன்னோடு சுற்றித் திரியப் பிரியப்படும் பறவை

உனக்கு ஒருநாள் கிடைக்கலாம்

யாரையும் அந்தப் பறவையாக எதிர்பார்க்காதே

*****

8 Jan 2024

பூரித நிலை அடைந்து விட்ட மனிதம்

பூரித நிலை அடைந்து விட்ட மனிதம்

நம் குரங்கு வகைகளில் ஒரு வகைதான் பிற்காலத்தில் மனித வகையாக மாறி அதிக சேஷ்டைகளைச் செய்யப் போகிறது என்பது அந்நாளைய எந்த வகை குரங்குகளுக்காகவாவது தெரிந்திருக்குமா?

இந்த மனித இனம்தான் வருங்காலத்தில் வேறு எப்படியெல்லாமோ மாறி இன்னும் என்னென்ன செய்யப் போகிறதோ? அதுவாவது யாருக்காவது தெரியுமா?

ஆனால் இதற்கு மேல் மனித இனத்தால் வேறு எதுவும் முடியாது என்று நினைக்கிறேன். அது எப்படி நான் அப்படி நினைக்கலாம் என்கிறீர்களா? இதற்கு மேல் நம்மால் முடியாது என்றுதான் நாம் இயந்திரங்களை உருவாக்கி அதற்குப் பிறகு இப்போது ரோபோக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாம் நம் எல்லையைக் கடந்து விட்டோம். இந்த எல்லைக்குள் இருந்து கொண்டு நாம் நமக்கு வரும் சர்க்கரை, கொழுப்பு, ரத்தக் கொதிப்புக்கு எல்லாம் மருத்துவம் செய்து கொண்டு நம் எல்லைகளைச் செயற்கை நுண்ணறிவால் தாண்டிக் கொள்ள வேண்டியதுதான்.

நம் இருப்பின் அதிகபட்ச எல்லையை நாம் அடைந்து விட்டோம். இனி நாம் அமைதியாக இளைப்பாறுவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது? அதற்கு மேல் ஒரு சூப்பர்மேனாகவோ, ஸ்பைடர்மேனாகவோ மாறிக் கட்டிடத்திற்குக் கட்டிடம் தாவ நம் மூட்டுவலி, முதுகுவலியெல்லாம் இடம் கொடுக்க வேண்டுமே!

*****

மாடுகள் குதிரைகள் மற்றும் கழுதைகள்

பெட்ரோலை இறக்குமதி செய்து, வாகனங்களை உற்பத்தி செய்து மாடுகளின், குதிரைகளின் துயரங்களைக் குறைத்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். நிலைமை அப்படியா இருக்கிறது? கிராமங்களில் கூட காளை மாடுகளே இல்லாமல் போய் விட்டன. பால் பாக்கெட்டுகளுக்காக வீட்டுக்கு வீடு கிழிந்து போன ஒயர்கூடைகள் தொங்க விடப்பட்ட பிறகு பசு மாடுகளும் இல்லாமல் போய் விட்டன. குதிரைகளை அபூர்வமாக எங்கேயாவது ஊருக்கு ஒன்று, இரண்டு என்று அலையும் பைத்தியக்காரர்களைப் பார்ப்பதைப் போலப் பார்க்கிறோம்.

அரிதாக சில நேரங்களில் குதிரை வண்டிகளில் போகுபவர்களைக் கோமாளிகளைப் பார்ப்பதைப் போலப் பார்க்கிறோம். இன்னும் முன்னேறிய காலத்துக்கு வராத மணமக்களில் சிலர் ஹைதர் காலத்து மக்களைப் போல குதிரை வண்டியில் ஊர்வலம் செல்வதைப் பார்க்கிறோம். மற்றபடி அபூர்வமாக மெரினா கடற்கரைக்குப் போனால் வழக்கொழிந்து விட்ட குதிரை சவாரிகளைப் பார்க்க முடிகிறது. கூடவே குதிரைப் பந்தயங்கள் நடக்கும் இடங்களில் குதிரைகளைப் பார்க்க முடிகிறது.

ஜல்லிக்கட்டுகளுக்காகவும் ரேக்ளா பந்தயங்களுக்காகவுமே காளைகள் வளர்க்கப்படுகின்றன. வங்கிகளில் வேறெந்த கடன்களும் வாங்க முடியாத விவசாயிகள் மாட்டுக்கடன் என்ற பெயரில் பசுக்களை வாங்கி வளர்க்கிறார்கள். இயற்கை ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில பலர் நாட்டு இன மாடுகளை வளர்க்கிறார்கள். நகரங்களில் நாடோடிகளைப் போல குப்பைக் கூளங்களையும் பாலிதீன்களையும் தின்றபடி விட்டேத்தியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளைப் போல வளர்க்கப்படும் மாடுகள் கொஞ்சம் இருக்கின்றன.

மாடுகளும் சரி, குதிரைகளும் சரி ஓரம் கட்டப்பட்டு விட்டன. மாட்டு வண்டிகளை ஓரம் கட்டியதில் டாடா ஏசுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. குதிரை வண்டிகளை ஓரம் கட்டியதில் ஜீப்புகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. புல்லட்டுகளும் பைக்குகளும் குதிரைகளில் சோலோவாகப் போகும் பழக்கத்தையே ஒழித்து கட்டி விட்டன.

இப்போதைய உலகின் நியதி எப்படி இருக்கிறது என்றால் மனிதர்களுக்குப் பயன்படும் உயிரினங்கள்தான் இந்த உலகில் நிலைத்திருக்க முடியும் என்பதாக இருக்கிறது. விவசாயத்தில் மாடுகளின் பயன்பாடு குறைந்து உரங்கள் மற்றும் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதால் மாடுகளை வைத்துக் கொள்ள எந்த விவசாயியும் விரும்புவதில்லை.

பெட்ரோலைப் போட்டுக் கொண்டு அறுபதிலிருந்து எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க முடியும் என்பதால் யாரும் குதிரைகளை வளர்ப்பதில்லை. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை உப்பு வியாபாரிகள் கழுதைகளில் உப்பு மூட்டைகளைப் போட்டுக் கொண்டு விற்பனைக்கு வந்தார்கள். அயோடின் கலந்த உப்பு என்று உப்பு வணிகத்தை அவர்களிடமிருந்து பிடுங்கி பெரு நிறுவனங்களிடம் கொடுத்து சால்ட் விற்பனையைத் தொடங்கி விட்டதால் கழுதைகளையும் இப்போது பார்க்க முடிவதில்லை.

போகிற போக்கில் மாடுகளையும் குதிரைகளையும் கழுதைகளையும் வனவிலங்கு அருங்காட்சியகத்தில் பார்க்கின்ற சூழ்நிலையும் வரலாம்.

*****

இந்தக் கருமத்திற்கு அந்தக் கருமம் பரவாயில்லை

டெக் மற்றும் வீடியோ கேசட்டுகள் வாடகைக்கு விட்ட அந்தக் காலத்தில் திரைப்படம் பார்ப்பதில் அப்படியொரு கவர்ச்சி இருந்தது. ஊருக்கு ஊர் விஷேஷம் என்றாலோ, திருவிழா என்றாலோ டெக் எடுத்து டிவியில் படம் போடுவதுதான் அப்போது ஹைலைட். அப்படிப் படம் பார்க்க அலைவதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் போட்டிப் போட்டுக் கொண்டு அலையும் கோஷ்டிகள் உண்டு. இவர்களைப் பட பைத்தியங்கள் என்று திட்டுவார்கள். இதுகள் எங்கே உருப்பட போகின்றன என்று ஒருமையில் ஏசுவார்கள்.

விசிடி, சிடி என்று வந்த பிறகு அவரவர்களும் வீட்டுக்கு வீடு விசிடி, சிடி பிளேயர் வாங்கி சினிமா பார்த்து அதகளம் பண்ணினார்கள். அய்யோ திருட்டு விசிடி, திருட்டு சிடி என்று திரைத்துறையினர் புலம்பித் தள்ளினார்கள். ஒரே நாளில் நான்கைந்து படங்களைக் கொட்ட கொட்ட கண்விழித்துப் பார்த்து சாதனை படைத்த இளைஞர்களும் யுவதிகளும் அப்போது எங்கள் ஊரில் இருந்தார்கள். அதெல்லாம் சிடி, விசிடியால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள். எந்நேரமும் டிவியும் பிளேயருமாக அவர்கள் இருந்தார்கள். இப்படி இருந்தால் குடும்பம் எப்படி முன்னேறுவது என்று அப்போதும் கூச்சல்கள் உண்டு.

இப்போது எல்லாம் காணாமல் போய் எல்லாம் சுவரில் மாட்டப்படும் படத்தைப் போன்ற டிவிக்குள் வந்து விட்டன. அதை யாரும் ஒன்றிப் பார்ப்பதில்லை. பத்து நிமிடத்திற்குள் சேனல் சேனலாக மாறிக் கொண்டே இருக்கிறது. அதற்கிடையில் சாப்பிடுவது, குடிப்பது, வெங்காயம் உரிப்பது, காரட் நறுக்குவது என்று மாறி மாறி வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

அன்று டிவி பார்த்தால் எப்படி உருப்படுவது என்று சொன்ன பலரே இன்று டிவியைப் பார்த்துக் கொண்டே கதைகளைப் பேசிக் கொண்டும் வேலைகளைச் செய்து கொண்டும் இருக்கிறார்கள். டிவி இல்லையென்றால் அவர்களுக்கு வேலை ஒட மாட்டேன் என்கிறது. ஒருவேளை நிஜமாக டிவி இல்லாமல் போய் விட்டால் அவர்களுக்கு எல்லாம் பைத்தியம் பிடித்து விடும் போலத் தெரிகிறது. அதற்காகவே வீட்டில் எது இல்லையென்றாலும் பரவாயில்லை என்று டிவியை வாங்கி வைக்க வேண்டியதாக இருக்கிறது.

இந்த டிவி பைத்தியங்களை விட இப்போது மொபைல் பைத்தியங்கள் இன்னும் மோசமாக இருக்கிறார்கள். கழிவறை செல்லும் போதும் விட மாட்டேன்கிறார்கள். மலம் கழித்து முடிப்பதற்குள் ஒரு யூடியூப் வீடியோவைப் பார்த்து முடித்து லைக் பண்ணி கமென்ட் போட்டு விடுகிறார்கள். என்ன கருமம்டா என்று நாம் சொன்னாலும் வருங்கால கண்டுபிடிப்புகளால் இதை மிஞ்சும் இன்னும் மிக அதிகமான கருமங்கள் வந்தே சேரும். அதனால் இந்தக் காலத்துக் கருமங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று வருங்காலத்தில் பேசத்தான் நேரிடும். இப்படி மாறி மாறித்தான் காலம் பயணித்துக் கொண்டே இருக்கிறது.

*****

4 Jan 2024

கால நாய் கடித்துச் செல்லும் எலும்புகள்

கால நாய் கடித்துச் செல்லும் எலும்புகள்

ஒரு நம்பிக்கை

ஓர் அவநம்பிக்கை

ஓர் அனுபவம்

எப்படியெல்லாமோ வாழ்க்கையை மாற்றி விடுகிறது

பக்குவம் ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறது

உணர்ச்சி ஒரு நாள் பக்குவப்பட்டு விடுகிறது

கணிப்புகள் சிதறித் தூள் தூளாகின்றன

எதைப் பற்றிக் கொள்வது

எதை நிராகரிப்பது

கருத்துகளை அடித்து நொறுக்கியபடி

பயணிக்க வைக்கின்ற கால வெளிக்குள்

உங்களை நீங்களே தடுத்து நிறுத்திக் கொள்ள

தற்கொலை ஒரு பழிவாங்கலாக இருக்கலாம்

ஒரு பாதி உண்மையின் மறுபாதி என்னவென்றால்

கண்டு கொள்ளாமல்

பயணிப்பதால் பயணித்துக் கொண்டு இருப்பதால்

ஏமாற்றங்களைப் பழிவாங்கலாம்

முடிவின் எல்லையில் புலனாகக் கூடும்

கருத்துகள் போலிகள்

நம்பிக்கைகள் பாதி வேகாதவைகள்

அவநம்பிக்கைகள் அர்த்தமிழந்தவைகள்

அனுபவங்கள் தொக்கி நிற்பவைகள்

கண்டவை அனைத்தும் வேடிக்கைகள்

கேட்டவை அனைத்தும் நகைச்சுவைகள்

உணர்ந்தது அனைத்தும் விளையாட்டுகள்

உச்சியிலிருந்து தள்ளி விடப்படும் போது

விழாமல் இருப்பது எப்படிச் சாத்தியம்

விழுதலின் முடிவில் ஒரு சில சுக்கல்கள்

கால நாய் கடித்துச் செல்ல ஒரு சில எலும்புகள்

நாவினில் எச்சிலூற வேடிக்கை பாருங்கள்

விழுவதெல்லாம் அமுதத் துளிகள்

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...