18 Jan 2024

சில நேரங்களில் சிலவற்றைக் கண்டு கொள்ளாதீர்கள்!

சில நேரங்களில் சிலவற்றைக் கண்டு கொள்ளாதீர்கள்!

மனிதர்கள் மற்றவர்களைக் கொலை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். தன்னைத் தானே கொலை செய்து கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். தற்கொலையை அப்படித்தானே சொல்ல வேண்டியிருக்கிறது.

தற்கொலை குறித்த புள்ளி விவரங்கள் மிகுந்த அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றன.

ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் 3 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 60 பேர் தற்கொலை எண்ணத்துடன் இருக்கிறார்கள்.

தற்கொலை செய்து கொள்பவர்களில் 18 முதல் 30 வயது வரையுள்ளவர்கள் அதிகம். அதற்கு அடுத்தப்படியாக 30 முதல் 45 வயது வரையுள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் உயர் பொறுப்பிலுள்ள அதிகாரிகளே தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் தமிழகத்தில் சென்னை மாநகரம் முதலிடத்தில் இருக்கிறது என்பதைக் கேட்டவுடன் அது தலைநகரமா, தற்கொலை நகரமா என்ற எண்ணம் தோன்றுவதை எப்படித் தவிர்ப்பது?

ஏன் இந்த தற்கொலைகள் நடக்கின்றன?

மனிதர்கள் மனிதர்கள் மீது வைக்கும் அன்பு குறைவின் விளைவுதான் இது என்பது பொத்தாம் பொதுவான பதில். உண்மையில் இதற்குக் காரணம் மனிதர்கள் மனிதர்கள் மீது வைக்கும் மதிப்புக் குறைவின் விளைவுதான்.

எப்போது மனிதர்களை நாம் மதிப்புக் குறைந்தவர்களாகப் பார்க்கத் தொடங்கினோமோ, பணத்தையும் இதர பொருளாதார மதிப்புகளையும் மதிப்பு மிகுந்தவையாகப் பார்க்கத் தொடங்கினோமோ அப்போதே மனிதர்கள் மனதளவில் வீழ்ச்சி அடைந்து விட்டார்கள். அந்த வீழ்ச்சியைப் பொறுத்துக் கொள்பவர்கள், சகித்துக் கொள்பவர்கள், மனதார ஏற்றுக் கொண்டு வாழ பழகுபவர்கள் தற்கொலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில்லை. வீழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தற்கொலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.

அக்கம் பக்கத்தைப் பார்க்கையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டவர்கள், குடும்பப் பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டவர்கள், காதல் பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெறாததால் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்று ஒரு பட்டியலை நாம் தயாரிக்க முடியும்.

இத்தற்கொலைகளைக் கொண்டு தற்கொலைக்கான காரணங்களைப் பொருளாதாரக் காரணங்கள், மனம் மற்றும் உணர்வு சார்ந்த காரணங்கள், சமூகக் காரணங்கள், கல்வி ரீதியான காரணங்கள் என்று வகைபடுத்திக் கொள்ளலாம். இன்னும் வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

இக்காரணங்களில் பொருளாதாரக் காரணங்களுக்கும், கல்வி ரீதியான காரணங்களுக்கும் அரசுகள்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

மனம் மற்றும் உணர்வு சார் காரணங்களுக்கு குடும்பம், உறவுகள் மற்றும் நட்புகள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

சமூகம் சார் காரணங்களுக்கு ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் கல்வியின் மூலமாக மாற்றலாம் என்றால் கல்வியே சில நேரங்களில் தற்கொலைக்கான காரணமாக அமைவதால் மாற்றுவதற்கு அதுவும் ஒரு சாதனம் என்று கொள்ளலாமே தவிர அதை மட்டுமே முழுமையான சாதானமாகக் கொள்ள முடியாது.

தற்கொலை என்பது ஒரு நொடி நேரத்து மன மாற்றமே, அந்த நொடியைக் கடந்து விட்டால் தற்கொலையையும் கடந்து விடலாம் என்கிறார்கள். எதுவும் அப்படி ஒரு நொடி நேரத்தில் திடீரெனக் கிளம்பி விடுவதில்லை. அது நொடி நேரத்து மாற்றமாக இருந்தாலும் பல காலம் சிறிது சிறிதாக உருவாகி மறைந்திருந்து ஒளிந்திருந்து வெளிப்பட்டு, பிறகு வெளிப்படாமல் இருந்து பிறகு மீண்டும் மீண்டும் உருவாகி மறைந்து உருவாகி என்று திடீரென ஒரு நொடிப்பொழுதில் வெடித்துக் கிளம்பும் உணர்வே. அந்த ஒரு நொடிக்கு ஒரு நீண்ட கால பின்புலமும் பின்னணியும் இருக்கிறது. அதனால்தான் தற்கொலையை வெறும் நோடி நேரத்து மன மாற்றம் என்று மட்டும் குறுக்கி விட முடியாது. அதை நெடுநாட்களாக ஓடிக் கொண்டிருக்கும் மன மாற்றத்தின் திடீர் வெடிப்பு என்று குறிப்பிடலாம்.

அனுசரணையான குடும்பம், நட்புகள், உறவுகள், உணர்வுகளையும் மனப்போக்குகளையும் செவி மடுக்கும் பெரியோர்கள் அல்லது ஆலோசகர்கள் நிறைந்த வாழ்க்கையில் தற்கொலைக்கான எண்ணம் தோன்ற வாய்ப்பில்லை என்று சொல்லலாம்.

நம் குடும்ப அமைப்புகள் அப்படியா இருக்கின்றன? ஒவ்வொரு குடும்ப அமைப்பும் வெவ்வேறு பொருளாதாரத் தேவைகளைத் தேடியபடியும், வேலை வாய்ப்புக்கான நெருக்கடிகளை எதிர் கொண்டபடியும் வாழ்க்கையை ஒரு போராட்டமாகக் கருதியபடி இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அரவணைத்துச் செல்லும் ஆரோக்கியமான நட்புகளும் உறவுகளும் அரிதாகிக் கொண்டிருக்கின்றன. பயன் கருதி இணைந்திருக்கும் பொருளாதாரம் சார்ந்த உறவுகளும் நட்புகளுமே அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.

உணர்வுகளையும் மனப்போக்குகளையும் செவி மடுக்கும் பெரியோர்களை நாம் முதியோர் இல்லத்தில் தள்ளி விட்டு விட்டோம். ஆலோசர்களை நாட காசு கொடுக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி விட்டோம்.

நம்முடைய பொருளாதாரத் தேவைகளும், கெளரவத் தேவைகளும், உணர்வு மற்றும் மனம் விரும்பும் தேவைகளுமே நமக்கு முதன்மையாகி விட்டன. மற்றவர்களுக்காகச் சிறிது பணம் செலவழிப்பதும், நேரம் செலவழிப்பதும், சில சொற்களைக் காது கொடுத்துக் கேட்பதும் நமக்கு அநாவசியமாகி விட்டன. இந்தச் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்பவர்களும் ஏற்றுக் கொள்பவர்களும் சகித்துக் கொள்பவர்களும் தப்பித்துக் கொள்வார்கள். ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையை அடைபவர்கள் தற்கொலை செய்து கொள்வதன் மூலமாகத் தங்கள் மதிப்புகளை இந்தச் சமூகத்திற்கு உணர்த்த நினைப்பார்கள். அவர்கள் இறந்தால் அவர்களுக்காக அழுவார்கள், தங்கள் தவறுகளை நினைத்து வருந்துவார்கள் என்று அவர்களாகவே கருதிக் கொள்வார்கள். தங்கள் இறப்பின் மூலம் தங்களுக்குப் பிரியமானவர்களைப் பழி வாங்குவதாகவும் எண்ணிக் கொள்வார்கள். ஆனால் நிதர்சனம்? இங்கே வாழும் மனிதர்களைப் பற்றியே நினைக்க நேரமில்லாத மனிதர்களுக்கு இறந்து விட்ட மனிதர்களைப் பற்றி நினைக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?

தற்கொலை குறித்த எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான எண்ணப்போக்கு எப்படி இருக்கலாம் என்று கேட்டால், கீழே உள்ள பத்திகளைப் படித்துப் பார்ப்பதன் மூலம் ஒருவர் அதற்கான மனப்போக்கை அனுமானிக்க முடியும்.

எல்லாரும் இந்த உலகிற்கு முக்கியமானவர்கள்தான். சிறு பூச்சி உட்பட எல்லாம் வாழ்க்கை சமநிலைக்கு அவசியமானவை. நீங்களும்தான் இந்த உலகிற்கு அவசியமான முக்கியமான நபர். இப்போது உங்களது அவசியமும் முக்கியத்துவம் உணரப்படாமல் இருக்கலாம். அது சிறிது காலம்தான். விரைவில் உங்களது அவசியமும் முக்கியத்துவம் உணரப்படும். அதுவரை நீங்கள் வாழ வேண்டும். அவ்வளவுதான். வாழுங்கள்.

நீங்கள் எவற்றை இழந்து விட்டீர்கள், எவற்றை அடையாமல் அல்லாடுகிறீர்கள் என்று நினைக்கிறீர்களோ அனைத்தையும் அடைவீர்கள். அப்படி நீங்கள் நினைத்ததை அடைய முடியாவிட்டால் நீங்கள் நினைத்ததை விட இன்னும் சிறப்பானவற்றை அடைவீர்கள். இது வாழ்க்கை குறித்த நம்பிக்கைக்கான வாசகம் என்று நினைத்து விடாதீர்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்பதால் எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் பொக்கிஷங்கள் என்னவென்று தெரிந்து கொள்வதற்காகவேனும் வாழுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே. சாதிப்பதற்கானது என்றோ மகத்தான காரியங்கள் செய்வதற்கானது என்றோ அவமானங்களுக்கோ அவமதிப்புகளுக்கோ அங்கே இடமில்லை என்று போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். வாழ்ந்து கொண்டே இருங்கள். அந்த வாழ்க்கையில் சாதனைகள், மகத்தான காரியங்கள், அவமானங்கள், அவமதிப்புகள் எல்லாம் வந்து போகும். எதுவும் நிரந்தரமில்லை. எல்லாம் மாறிப் போகும். எல்லாம் மாறிப் போகும் இந்த உலகில் எதையும் நிரந்தரம் என்று நினைத்து அல்லாடிக் கொண்டு இருக்காதீர்கள்.

எதுவும் கடந்து போகும். மனதை அழுத்தும் இந்தச் சுமைகளும்தான். இவ்வளவு சுமைகளைச் சுமப்பதாக நினைக்கும் இந்த மனமும் இன்னொரு காலத்தில் காணாமல் போகும். ஆம், இப்போது இருப்பது போலவே எப்போதும் இருக்கப் போவதில்லை இந்த மனம். இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். காலம் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டுக் கொண்டே போய்க் கொண்டே இருக்கும். நீங்கள் மாறிக் கொண்டிருக்கும் காலத்தில் மாற்றங்களை வேடிக்கைப் பார்த்தபடி பயணித்துக் கொண்டிருங்கள்.

இந்த வாழ்க்கையில் தீவிரம் கொள்ள எதுவுமில்லை. மென்மையாக, தளர்வாக, நெகிழ்வாக, மகிழ்வாகவே இருந்து விட்டுப் போங்கள். அப்படி இருப்பதற்கு ஏதேனும் சூத்திரம் இருக்கிறதா என்றால், அந்தச் சூத்திரமே உங்களைத் தீவிரமாக்கவும் இறுக்கமாக்கவும் கூடும். இருப்பினும் இந்தச் சூத்திரம் பயன்படுமா என்று பாருங்கள். சில நேரங்களில் சிலவற்றைக் கண்டு கொள்ளாதீர்கள். இந்தச் சூத்திரம் உங்களை இறுக்கமாக்குனால் இந்தச் சூத்திரத்தையும் சில நேரங்களில் கண்டு கொள்ளாதீர்கள்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...