8 Jan 2024

பூரித நிலை அடைந்து விட்ட மனிதம்

பூரித நிலை அடைந்து விட்ட மனிதம்

நம் குரங்கு வகைகளில் ஒரு வகைதான் பிற்காலத்தில் மனித வகையாக மாறி அதிக சேஷ்டைகளைச் செய்யப் போகிறது என்பது அந்நாளைய எந்த வகை குரங்குகளுக்காகவாவது தெரிந்திருக்குமா?

இந்த மனித இனம்தான் வருங்காலத்தில் வேறு எப்படியெல்லாமோ மாறி இன்னும் என்னென்ன செய்யப் போகிறதோ? அதுவாவது யாருக்காவது தெரியுமா?

ஆனால் இதற்கு மேல் மனித இனத்தால் வேறு எதுவும் முடியாது என்று நினைக்கிறேன். அது எப்படி நான் அப்படி நினைக்கலாம் என்கிறீர்களா? இதற்கு மேல் நம்மால் முடியாது என்றுதான் நாம் இயந்திரங்களை உருவாக்கி அதற்குப் பிறகு இப்போது ரோபோக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாம் நம் எல்லையைக் கடந்து விட்டோம். இந்த எல்லைக்குள் இருந்து கொண்டு நாம் நமக்கு வரும் சர்க்கரை, கொழுப்பு, ரத்தக் கொதிப்புக்கு எல்லாம் மருத்துவம் செய்து கொண்டு நம் எல்லைகளைச் செயற்கை நுண்ணறிவால் தாண்டிக் கொள்ள வேண்டியதுதான்.

நம் இருப்பின் அதிகபட்ச எல்லையை நாம் அடைந்து விட்டோம். இனி நாம் அமைதியாக இளைப்பாறுவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது? அதற்கு மேல் ஒரு சூப்பர்மேனாகவோ, ஸ்பைடர்மேனாகவோ மாறிக் கட்டிடத்திற்குக் கட்டிடம் தாவ நம் மூட்டுவலி, முதுகுவலியெல்லாம் இடம் கொடுக்க வேண்டுமே!

*****

மாடுகள் குதிரைகள் மற்றும் கழுதைகள்

பெட்ரோலை இறக்குமதி செய்து, வாகனங்களை உற்பத்தி செய்து மாடுகளின், குதிரைகளின் துயரங்களைக் குறைத்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். நிலைமை அப்படியா இருக்கிறது? கிராமங்களில் கூட காளை மாடுகளே இல்லாமல் போய் விட்டன. பால் பாக்கெட்டுகளுக்காக வீட்டுக்கு வீடு கிழிந்து போன ஒயர்கூடைகள் தொங்க விடப்பட்ட பிறகு பசு மாடுகளும் இல்லாமல் போய் விட்டன. குதிரைகளை அபூர்வமாக எங்கேயாவது ஊருக்கு ஒன்று, இரண்டு என்று அலையும் பைத்தியக்காரர்களைப் பார்ப்பதைப் போலப் பார்க்கிறோம்.

அரிதாக சில நேரங்களில் குதிரை வண்டிகளில் போகுபவர்களைக் கோமாளிகளைப் பார்ப்பதைப் போலப் பார்க்கிறோம். இன்னும் முன்னேறிய காலத்துக்கு வராத மணமக்களில் சிலர் ஹைதர் காலத்து மக்களைப் போல குதிரை வண்டியில் ஊர்வலம் செல்வதைப் பார்க்கிறோம். மற்றபடி அபூர்வமாக மெரினா கடற்கரைக்குப் போனால் வழக்கொழிந்து விட்ட குதிரை சவாரிகளைப் பார்க்க முடிகிறது. கூடவே குதிரைப் பந்தயங்கள் நடக்கும் இடங்களில் குதிரைகளைப் பார்க்க முடிகிறது.

ஜல்லிக்கட்டுகளுக்காகவும் ரேக்ளா பந்தயங்களுக்காகவுமே காளைகள் வளர்க்கப்படுகின்றன. வங்கிகளில் வேறெந்த கடன்களும் வாங்க முடியாத விவசாயிகள் மாட்டுக்கடன் என்ற பெயரில் பசுக்களை வாங்கி வளர்க்கிறார்கள். இயற்கை ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில பலர் நாட்டு இன மாடுகளை வளர்க்கிறார்கள். நகரங்களில் நாடோடிகளைப் போல குப்பைக் கூளங்களையும் பாலிதீன்களையும் தின்றபடி விட்டேத்தியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளைப் போல வளர்க்கப்படும் மாடுகள் கொஞ்சம் இருக்கின்றன.

மாடுகளும் சரி, குதிரைகளும் சரி ஓரம் கட்டப்பட்டு விட்டன. மாட்டு வண்டிகளை ஓரம் கட்டியதில் டாடா ஏசுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. குதிரை வண்டிகளை ஓரம் கட்டியதில் ஜீப்புகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. புல்லட்டுகளும் பைக்குகளும் குதிரைகளில் சோலோவாகப் போகும் பழக்கத்தையே ஒழித்து கட்டி விட்டன.

இப்போதைய உலகின் நியதி எப்படி இருக்கிறது என்றால் மனிதர்களுக்குப் பயன்படும் உயிரினங்கள்தான் இந்த உலகில் நிலைத்திருக்க முடியும் என்பதாக இருக்கிறது. விவசாயத்தில் மாடுகளின் பயன்பாடு குறைந்து உரங்கள் மற்றும் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதால் மாடுகளை வைத்துக் கொள்ள எந்த விவசாயியும் விரும்புவதில்லை.

பெட்ரோலைப் போட்டுக் கொண்டு அறுபதிலிருந்து எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க முடியும் என்பதால் யாரும் குதிரைகளை வளர்ப்பதில்லை. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை உப்பு வியாபாரிகள் கழுதைகளில் உப்பு மூட்டைகளைப் போட்டுக் கொண்டு விற்பனைக்கு வந்தார்கள். அயோடின் கலந்த உப்பு என்று உப்பு வணிகத்தை அவர்களிடமிருந்து பிடுங்கி பெரு நிறுவனங்களிடம் கொடுத்து சால்ட் விற்பனையைத் தொடங்கி விட்டதால் கழுதைகளையும் இப்போது பார்க்க முடிவதில்லை.

போகிற போக்கில் மாடுகளையும் குதிரைகளையும் கழுதைகளையும் வனவிலங்கு அருங்காட்சியகத்தில் பார்க்கின்ற சூழ்நிலையும் வரலாம்.

*****

இந்தக் கருமத்திற்கு அந்தக் கருமம் பரவாயில்லை

டெக் மற்றும் வீடியோ கேசட்டுகள் வாடகைக்கு விட்ட அந்தக் காலத்தில் திரைப்படம் பார்ப்பதில் அப்படியொரு கவர்ச்சி இருந்தது. ஊருக்கு ஊர் விஷேஷம் என்றாலோ, திருவிழா என்றாலோ டெக் எடுத்து டிவியில் படம் போடுவதுதான் அப்போது ஹைலைட். அப்படிப் படம் பார்க்க அலைவதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் போட்டிப் போட்டுக் கொண்டு அலையும் கோஷ்டிகள் உண்டு. இவர்களைப் பட பைத்தியங்கள் என்று திட்டுவார்கள். இதுகள் எங்கே உருப்பட போகின்றன என்று ஒருமையில் ஏசுவார்கள்.

விசிடி, சிடி என்று வந்த பிறகு அவரவர்களும் வீட்டுக்கு வீடு விசிடி, சிடி பிளேயர் வாங்கி சினிமா பார்த்து அதகளம் பண்ணினார்கள். அய்யோ திருட்டு விசிடி, திருட்டு சிடி என்று திரைத்துறையினர் புலம்பித் தள்ளினார்கள். ஒரே நாளில் நான்கைந்து படங்களைக் கொட்ட கொட்ட கண்விழித்துப் பார்த்து சாதனை படைத்த இளைஞர்களும் யுவதிகளும் அப்போது எங்கள் ஊரில் இருந்தார்கள். அதெல்லாம் சிடி, விசிடியால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள். எந்நேரமும் டிவியும் பிளேயருமாக அவர்கள் இருந்தார்கள். இப்படி இருந்தால் குடும்பம் எப்படி முன்னேறுவது என்று அப்போதும் கூச்சல்கள் உண்டு.

இப்போது எல்லாம் காணாமல் போய் எல்லாம் சுவரில் மாட்டப்படும் படத்தைப் போன்ற டிவிக்குள் வந்து விட்டன. அதை யாரும் ஒன்றிப் பார்ப்பதில்லை. பத்து நிமிடத்திற்குள் சேனல் சேனலாக மாறிக் கொண்டே இருக்கிறது. அதற்கிடையில் சாப்பிடுவது, குடிப்பது, வெங்காயம் உரிப்பது, காரட் நறுக்குவது என்று மாறி மாறி வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

அன்று டிவி பார்த்தால் எப்படி உருப்படுவது என்று சொன்ன பலரே இன்று டிவியைப் பார்த்துக் கொண்டே கதைகளைப் பேசிக் கொண்டும் வேலைகளைச் செய்து கொண்டும் இருக்கிறார்கள். டிவி இல்லையென்றால் அவர்களுக்கு வேலை ஒட மாட்டேன் என்கிறது. ஒருவேளை நிஜமாக டிவி இல்லாமல் போய் விட்டால் அவர்களுக்கு எல்லாம் பைத்தியம் பிடித்து விடும் போலத் தெரிகிறது. அதற்காகவே வீட்டில் எது இல்லையென்றாலும் பரவாயில்லை என்று டிவியை வாங்கி வைக்க வேண்டியதாக இருக்கிறது.

இந்த டிவி பைத்தியங்களை விட இப்போது மொபைல் பைத்தியங்கள் இன்னும் மோசமாக இருக்கிறார்கள். கழிவறை செல்லும் போதும் விட மாட்டேன்கிறார்கள். மலம் கழித்து முடிப்பதற்குள் ஒரு யூடியூப் வீடியோவைப் பார்த்து முடித்து லைக் பண்ணி கமென்ட் போட்டு விடுகிறார்கள். என்ன கருமம்டா என்று நாம் சொன்னாலும் வருங்கால கண்டுபிடிப்புகளால் இதை மிஞ்சும் இன்னும் மிக அதிகமான கருமங்கள் வந்தே சேரும். அதனால் இந்தக் காலத்துக் கருமங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று வருங்காலத்தில் பேசத்தான் நேரிடும். இப்படி மாறி மாறித்தான் காலம் பயணித்துக் கொண்டே இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...