31 Aug 2023

நிலவில் துப்பாக்கிச் சூடு

நிலவில் துப்பாக்கிச் சூடு

கூடிய விரைவில் நிலவில் சென்று பாட்டி வடை சுடலாம். அதைத்தான் சொல்கிறது சந்திராயன் 3. கூடவே ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளும் உருவாகலாம். துப்பாக்கிச் சூடுகளும் ஏற்படுமா என்பது கால எந்திரத்தில் ஏறிக் கொண்டு கேட்க வேண்டிய கேள்வி.

*****

தங்கத் தக்காளிப் பழமே!

தக்காளி சிவப்பு தங்கம் என்றால்

வெங்காயம் இளஞ்சிவப்புத் தங்கமா

இஞ்சி மஞ்சள் தங்கமா

பட்டாணி பச்சைத் தங்கமா

முள்ளங்கி வெள்ளைத் தங்கமா

விலை ஏறும் ஒவ்வொன்றும் தங்கமாகி விடுகிறது

தங்கமும் தங்கமாகி விடுகிறது

*****

நீங்களும் ஓர் அரசியல்வாதி!

இந்தக் காலத்தில் அரசியல் நடத்துவது சுலபமில்லை. முன்பைப் போல லட்சங்களுக்குள் வாங்குவதாக மக்கள் பிரதிநிதிகளின் (எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின்) விலைகள் இல்லை. எல்லாம் கோடிகளைக் கடந்து ஆயிரம் கோடிகளில் போய் விட்டன. அதற்கேற்ப பணத்தைப் பதுக்கி வைத்திருப்பது என்றால் அதுவும் சவாலாக இருக்கிறது. அந்தச் சோதனை (ரெய்டு), இந்தச் சோதனை (ரெய்டு) என்று ஏகப்பட்ட சோதனைகள் (ரெய்டுகள்) வருகின்றன. அப்படிச் சோதனை (ரெய்டு) வரும் போது புஜபல பராக்கிரமங்களைக் காட்டும் வகையில் ஒரு அடிபொடி கூட்டத்தைப் பிரியாணிப் போட்டுத் தலைக்கு ஐநூறு கொடுக்க சோதனைக்குத் (ரெய்டுக்கு) தெரியாமலே சோதனை (ரெய்டு) பண்ணி விடாத அளவுக்கு ஒரு பெரிய தொகையை வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அரசியல்வாதியாக இருக்கும் வரையில் இந்தச் சோதனை (ரெய்டு) வந்தாலும் பிரச்சனை, வராமல் இருந்தாலும் பிரச்சனை. வராமல் இருந்தால் என்ன பிரச்சனை என்றால் இவரெல்லாம் என்ன அரசியல்வாதி என்ற பெயர் உண்டாகி விடுகிறது.

சோதனைகளுக்குப் (ரெய்டுகளுக்கு) பயந்து வலது கை, இடது கை, அல்லக்கை அல்லது அடிபொடிகளை (பினாமிகளை) உருவாக்கினால் அவர்களும் (பினாமிகளும்) நம்பிக்கையோடு இருப்பதில்லை. எந்த நேரத்தில் எந்த வெளிநாட்டுக்கு ஏமாற்றி விட்டுச் செல்வார்கள் என்பது தெரிவதில்லை. பணத்தோடு விளையாடும் (Play) மற்றும்  வினையாடும் (Roleplay) இந்த விளையாட்டில் / வினையாட்டில் சாமர்த்தியம் இருந்தால் நீங்களும் இந்தக் காலத்தில் ஓர் அரசியல்வாதிதான். அது அவ்வளவு சுலபமில்லை.

சோதனை (ரெய்டு) வரும் போது வரும் நெஞ்சுவலி நிஜமாகப் போய் விட்டால் கதை முடிந்தது. நெஞ்சும் வலிக்க வேண்டும், உயிரும் போகக் கூடாது என்கிற பதத்தில் நடந்து கொள்ள ஒரு தனித்த நெஞ்சு வேண்டும். அந்த நெஞ்சு வந்தால்தான் நீங்கள் அரசியல்வாதி. அது அவ்வளவு சுலபமில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. இதையே மீண்டும் மீண்டும் இரண்டு இடத்தில் சொல்வதற்கு நீங்கள் என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் ஒரு சிலருக்கே அப்படிப்பட்ட இதயம் வாய்ப்பதாகப் புள்ளிவிவரங்கள் விரைவில் வர இருக்கின்றன.

*****

நிம்மதியின் ரகசியம் எது?

நீங்கள் ரொம்ப கச்சிதமாக இருங்கள். அந்தக் கச்சிதத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்காதீர்கள். சுருக்கமாகச் சொன்னால் உங்களிடம் எந்த குணமும் எதிர்பார்ப்பும் மிகுதியாக இருக்கிறதோ அதை மற்றவர்களிடம் எதிர்பார்க்காதீர்கள். அதுதான் நிம்மதியின் ரகசியம். குறிப்பாக இந்த ரகசியத்தைச் சாமியார்களிடம் தேடாதீர்கள்!

மேலும் ஓர் அடிக்குறிப்பாக பெரிய பெரிய விசயங்கள் பின்பு ஒளிந்து கொண்டு நிம்மதியாக இருக்க நினைக்காதீர்கள். சின்ன சின்ன விசயங்களுக்காக எல்லாம் நிம்மதி அடையுங்கள்.

கூடுதல் குறிப்புகளாகப் பின்வருவனவற்றையும் பரிசீலித்துப் பாருங்கள். பரிசீலிக்க முடியவில்லை என்பதற்காக நிம்மதியை இழந்து விட வேண்டாம். அப்படி ஒரு நிலை வந்தால் பரிசீலிப்பதையே நிறுத்தி விடுங்கள்.

இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று யோசித்துக் குழம்பி நிம்மதியை இழந்து விடாதீர்கள். நீங்கள் எந்தப் பக்கமும் நிற்காதீர்கள். முடிவில் ஏதோ ஒரு பக்கத்திற்கு நீங்கள் அடித்துக் கொண்டு செல்லப்படுவீர்கள். அதுவரை அமைதியாக இருந்தால் உங்கள் நிம்மதிக்கு எந்தப் பங்கமும் வராது.

எல்லாவற்றையும் நீங்களே பார்த்துக் கொள்ள முடியாது, நிர்வகித்து விட முடியாது. மற்றவர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும். மற்றவர்களையும் கலந்து கொள்ளுங்கள், கலந்து விடுங்கள். மற்றவர்களிடம் கலந்தும் கொள்ளுங்கள். யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். தயவுசெய்து அறிவுரை சொல்லாதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் நிம்மதியைத் தொலைக்காத வரை உங்கள் நிம்மதி உங்களிடமே இருக்கும்.

*****

30 Aug 2023

கடன் தவிர்ப்புக்கான மாற்றுமுறைகள்

கடன் தவிர்ப்புக்கான மாற்றுமுறைகள்

இந்த உலகில் யார்தான் கடன் வாங்கவில்லை? நிறுவனங்கள் கடன் வாங்குகின்றன. வங்கிகள் கடன் தரத் தயாராக இருக்கின்றன. 

மாநில அரசுகள் கடன் வாங்குகின்றன. மத்திய வங்கிகள் அவற்றுக்கான கடன்களை வழங்குகின்றன. அத்துடன் மாநில அரசுகளுக்குக் கடன் பத்திரங்களை வெளியிடும் வசதிகளும் இருக்கின்றன.

நாடுகளே கடன் வாங்குகின்றன. கடன் பத்திரங்களை வெளியிடவும் செய்கின்றன. அத்துடன் நாடுகளுக்குக் கடன் வழங்க உலக வங்கி போன்ற அமைப்புகளும் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனிநபர்கள் கடன் வாங்காமல் இருக்க முடியுமா என்றால் முடியாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது அல்லவா!

வீடு கட்ட, பிள்ளைகளைப் படிக்க வைக்க, திருமணச் செலவுகளைச் சமாளிக்க, அவசர நிலைமைகளை எதிர்கொள்ள, தொழிலை விரிவாக்கம் செய்ய என்று பல விதங்களில் கடன் வாங்க வேண்டியிருக்கலாம். இவற்றில் அவசர நிலைமைகளில் தவிர்க்க முடியாமல் கடன் வாங்குவதைத் தவிர மற்ற எல்லாவற்றிற்கும் திட்டமிட்டுச் சேமித்து வருவதன் மூலமாகவும், சேமிப்புகளை அறிவுப்பூர்வமாக வருவாயைப் பெருக்கும் முதலீடுகளாக கட்டமைப்பதன் மூலமாகவும் நிலைமைகளைக் கடன் வாங்காமல் எதிர்கொள்ள முடியும்.

உதாரணமாகக் கடன் வாங்கி வீடு கட்டுவதை விட பத்தாண்டுகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைச் சேமித்து முதலீடு செய்து வருவதன் மூலம் பத்தாண்டுகள் கழித்துக் கடனின்றி வீட்டைக் கட்டிக் கொள்ள முடியும். ஆனால் நம்முடைய அணுகுமுறை என்பது கடன் வாங்கி வீட்டைக் கட்டி விட்டு பத்தாண்டுகளுக்கு மாதந்தோறும் கடனை அடைப்பதற்கு மாதாந்திர தவணைத் தொகை எனும் இ.எம்.ஐ. கட்டும் வழக்கு முறையாக உள்ளது. இதனால் வீட்டுக்கடனுக்கான வட்டியை நாம் உபரியாக அதிகபட்சமாகச் செலுத்த நேரிடுகிறது. அப்படிச் செலுத்தக்கூடிய வீட்டுக்கடனுக்கான வட்டியில் நாம் இன்னொரு வீட்டையே கட்டி விடலாம்.

பிள்ளைகள் பிறந்த உடன் அவர்களின் வருங்கால கல்விச் செலவைக் கணக்கிட்டு மாதந்தோறும் சேமித்து முதலீடு செய்து வருவதன் மூலமாக உயர்படிப்புக்கானக் கல்விச் செலவைக் கடன் வாங்காமல் அவர்களுக்கு அளிக்கவும் முடியும், அவர்களைக் கடன்காரர்களாக ஆக்காமல் இருக்கவும் முடியும். இதிலும் நம் அணுகுமுறை மாறாகத்தான் இருக்கிறது. படிப்பிற்காகப் பிள்ளைகளைக் கடன்காரர்களாக ஆக்கும் வகையில் நம்முடைய வாழ்க்கை முறை இருக்கிறது. இதனையும் திட்டமிட்டுப் புத்திசாலித்தனமாகச் செயல்படுவதன் மூலமாக மாற்றிக் கொள்ள முடியும்.

திருமணச் செலவுக்கும் மாதந்தோறும் சேமித்து வருவதன் மூலம் சேமிப்புத் தொகையை முதலீடு செய்து திருமணச் செலவையும் கடனின்று செய்துவிக்க முடியும். நடைமுறையானது திருமணம் நம்மைக் கடன்காரர்களாக மாற்றுவதாக உள்ளதை நாம் கவனிக்க வேண்டும். இதையும் திட்டமிட்ட சேமிப்பு முறைகளை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலமாக மாற்றிக் கொள்ள இயலும்.

அவரச நிலைமைகளைக் கூட அவசர காலநிதியைத் திட்டமிட்டுச் சேமித்து உருவாக்கி வைப்பதன் மூலமாகக் கடன் வாங்காமல் சமாளிக்க முடியும். இதற்காக அவசரகால நிதிச் சேமிப்பையும் மாதந்தோறும் செய்யலாம்.

கடன் வாங்காமல் இருப்பதற்கான தாத்பரியம் என்னவென்றால் வருங்காலச் செலவினங்களைப் பட்டியலிட்டுக் கொண்டு அவற்றுக்கேற்ப மாதந்தோறும் சேமித்து வருவதன் மூலமாகக் கடன் வாங்காமல் செலவினங்களை மேற்கொள்ள முடியும் என்பதுதான்.

இரு சக்கர வாகனங்கள் வாங்குதல், கார் வாங்குதல் போன்றவற்றையும் இதே முறையில் மாதந்தோறும் சேமித்துக் கொண்டு வந்து, வாங்குவதற்கான தொகை சேர்ந்து வந்த பிறகு வாங்குவதன் மூலமாகக் கடனின்றி வாங்க முடியும்.

ஓய்வுக்காலத் தேவைக்கும் மாதா மாதம் இதே முறையில் நீங்கள் சேமித்து முதலீட்டைச் செய்யலாம்.

தினசரி சேமிப்பை மாதாந்திர சேமிப்பாக்கி, மாதாந்திர சேமிப்பை வருடாந்திர சேமிப்பாக்கி, வருடாந்திர சேமிப்பைக் கொண்டு கடனின்றி வாங்குவதே கடன் வாங்குவதனின்று விலகிச் செய்து கொள்ளும் மாற்று முறையாகும்.

மாதந்திர சேமிப்பை வட்டி தரும் முதலீடுகளில் செய்யும் போது முடிவில் கிடைக்கும் தொகை செலுத்திய தொகை மற்றும் வட்டித் தொகையின் கூடுதலாகக் கிடைக்கும். இதற்கென் அஞ்சலக மற்றும் வங்கிகளின் தொடர் வைப்பை நாடலாம். சிலர் பரஸ்பர நிதி எனும் மியூட்சுவல் பண்டைப் பரிந்துரைக்கின்றனர். மாதந்தோறும் முறைபடுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம் எனும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானில் இவ்விதம் செய்யலாம் என்கின்றனர். சிலர் நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்வதையும் பரிந்துரைக்கக் கூடும். என்னைக் கேட்டால் பாதுகாப்பான அஞ்சலக மற்றும் வங்கிகளின் தொடர்வைப்பையே பரிந்துரைக்கிறேன். இம்முறையில் குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் நீங்கள் அத்தொகைக்கேற்ப தங்கமாகவோ, வீட்டு மனையாகவோ வாங்கிப் போட்டுக் கொள்ளலாம். வட்டித்தொகையை எடுத்து வேண்டுமானால் நீங்கள் பரஸ்பர நிதி எனும் மியூட்சுவல் பண்டிலோ அல்லது பங்குகள் வாங்குவதிலோ போடலாம்.

கடனுக்கான இம்மாற்றுமுறையின் அடிப்படைகள் என்று பார்த்தால் வருங்காலத் தேவைகளைப் பட்டியலிட்டுக் கொள்வதும், அதற்கேற்ப மாதா மாதம் எவ்வளவு சேமிப்பை எவ்வளவு செய்வதும் எனத் திட்டமிட்டுக் கொள்வதும்தான். அதற்கேற்ப மாதாந்திரச் சேமிப்பை நீங்கள் தொடர் வைப்பிலோ அல்லது பாதுகாப்பான முதலீடுகளிலோ நீங்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவு போன்றவற்றிற்கு நீங்கள் செல்வமகள், பொன்மகன் போன்ற திட்டங்களில் மாதந்தோறும் சேமித்து முதலீடு செய்து வரலாம்.

ஓய்வு காலத் தேவைகளுக்கு பொது வருங்கால வைப்புநிதி எனும் பி.பி.எப். திட்டத்தில் மாதந்தோறும் சேமித்து முதலீடு செய்து வரலாம்.

இவை தவிரவும் நிதி ஆலோசர்களின் ஆலோசனையைப் பெற்று ஓய்வூதியத் திட்டங்கள், பரஸ்பர நிதி எனும் மியூட்சுவல் பண்ட் முதலீடுகள், பங்குச் சந்தை முதலீடுகளையும் நீங்கள் செய்யலாம். அல்லது நீங்களே அது போன்ற முதலீடுகளில் நிபுணத்துவம் பெற்று உங்கள் முதலீடுகளைத் தொடரலாம்.

மருத்துவச் செலவினம், எதிர்பாராத இழப்புகள் போன்றவற்றிற்கு நீங்கள் காப்பீடுகளையும் பரிசீலனைச் செய்து மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் அதற்கான தொகையைக் கட்டி வரலாம். இது குறித்தும் நீங்கள் நிதி ஆலோசர்களின் ஆலோசனைகளையோ அல்லது உங்களது நிபுணத்துவத்தையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடன் வாங்காமல் கடனைத் தவிர்த்து மாற்று முறையில் செல்வதற்கு உங்களது அறிவையும், திட்டமிடலையும், பொறுத்திருந்து விலை குறைவைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கும் முறையையும், வாங்கும் பொருளுக்கானத் தொகையைச் சேமிப்பின் மூலம் திரட்டுவதையும் எப்போதும் வழக்கமாகக் கொள்ளுங்கள். இம்முறைகளை உங்கள் பாரம்பரிய முறைகளைப் போல எப்போதும் பயன்படுத்துங்கள்.

*****

29 Aug 2023

எத்தனைத் தேர்வுகளைத்தான் எழுதுவார்கள் மாணவர்கள்?

எத்தனைத் தேர்வுகளைத்தான் எழுதுவார்கள் மாணவர்கள்?

ஓராண்டில் படிக்கும் ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வு என்றாலும் மூன்று தேர்வுகள். அல்லது முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் என்றாலும் ஓராண்டிற்கு ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு மூன்று தேர்வுகள்தான். இப்படியே ஒன்பதாம் வகுப்பு வரை ஒரு மாணவர் படித்தால் 27 தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். இதுவே அவர் எல்.கே.ஜி., யு.கே.ஜி. என்று ஆரம்பித்திருந்தால் இன்னும் 6 தேர்வுகளைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு இடையே நடக்கும் இடைத்தேர்வுகள், மாதத்தேர்வுகள், வகுப்புத் தேர்வுகள், வாராந்திரத் தேர்வுகள் தனி. எல்லாவற்றையும் சேர்த்தால் நூற்றுக்கும் குறையாமல் ஒரு மாணவர் தேர்வுகளை எதிர்கொண்டு வந்திருக்க வேண்டும்.

பிறகு பத்தாம் வகுப்பு பொதுதேர்வு இருக்கிறது. அந்தப் பொதுத்தேர்வை எழுதவதற்குள் அதற்குத் தயார் படுத்தும் விதமாக ஏகப்பட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொண்டிருக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு. அங்கும் அப்படித்தான் இந்தப் பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்காக ஏகப்பட்ட மாதிரி மற்றும் பயிற்சித் தேர்வுகளை எதிர்கொண்டிருக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்வதிலும் அதே நிலைதான். பொதுவாகப் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு ஆகிய இந்த மூன்று பொதுத் தேர்வுகளும் மன அழுத்தம் தரக் கூடிய தேர்வுகளே.

இதைக் கடந்தால் மருத்துவமோ பொறியியலோ, மத்திய பல்கலைக்கழகங்களிலோ படிக்கவேண்டும் என்றாலோ நீட், ஜேஇஇ, கியூட் என்று நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். இந்தத் தேர்வுகளை எல்லாம் இயல்பாகப் படித்து இயல்பாக எதிர்கொண்டு விட முடியாது. இதற்கெனப் பிரத்யேகப் பயிற்சிகள் தேவை. இந்நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கு முன் ஏகப்பட்ட மாதிரி தேர்வுகளைப் பயிற்சித் தேர்வுகளாக எதிர்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்தத் தேர்வுகளில் தகுதி மதிப்பெண்களைப் பெறுவது இயலாது.

இப்படியாகத் தேர்வுகள் பெரும் நெருக்கடிகளாக மாறி விட்ட காலத்தில் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து அவர்கள் பிடித்தப் படிப்பைப் படிக்க வேண்டும் என்பதற்காகவும் வேலை வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காகவும் எதிர்கொள்ளப் போகும் தேர்வுகளுக்கு கணக்கில்லை.

இந்தத் தேர்வுகளில் ஏற்படும் தோல்வி அவர்களை மன ரீதியாகப் பாதிக்கக் கூடியவை. ஏதோ சில முறைகள் மன அழுத்தம் தரக்கூடிய இத்தேர்வுகளை எதிர்கொண்டோம் பிறகு இயல்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வோம் என்று இந்த தேர்வு சுழற்சியிலிருந்து அவ்வளவு எளிதாகத் தப்பி விட முடியாது.

நீங்கள் நீட்டில் வெற்றி பெற்று எம்.பி.பி.எஸ். முடித்தாலும் அதைத் தொடர்ந்து எம்.டி.யோ அல்லது எம்.எஸ்ஸோ ஆக மீண்டும் நீட்டை எதிர்கொள்ள வேண்டும். ஒரு வகையில் படிப்பின் மூலம் வேலைவாய்ப்பை அமைத்துக் கொள்ள விழைவோர் முடிவில்லாத தேர்வு சுழற்சியில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

இப்படி ஒவ்வொரு தேர்வாக இலக்கு வைத்துத் தேர்வுக்காக முயன்று கொண்டே இருந்தால் அதுவே ஒரு கட்டத்தில் மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும் தரும் அனுபவமாக ஆகி விடுகிறது.

பத்து பேர் கலந்து கொள்ளும் ஓட்டப் போட்டியில் பத்து பேரும் முதல் இடத்தைப் பிடித்து விட முடியாது எனும் எதார்த்தம்தான் சில ஆயிரம் இடங்களுக்கு லட்ச கணக்கான மாணவர்கள் எழுதும் தேர்வுகளும். ஆனால் லட்சத்தில் ஒருவராகக் கலந்து கொள்ளும் எல்லாருக்கும் ஆயிரத்தில் ஒருவராக வந்து விட வேண்டும் என்ற அசைக்க முடியாத ஆசைதான் நிறைந்திருக்கும். அப்படி வர முடியாது போகும் போது அது ஏற்படுத்தும் மன நெருக்கடிகள் ஒருவரைத் தன்னை அழித்துக் கொள்ளும் நிலை வரை கொண்டு போய் நிறுத்தும். நீட் தேர்வில் தகுதி பெற முடியாமலும் தேர்வு பெறுவதற்கான மதிப்பெண்கள் பெற முடியாமலும் நிகழும் தற்கொலைகள் இப்படிப்பட்டவைதான்.

இது போன்ற நிலைமைகள் வராமல் தடுப்பதற்குக் குடும்பமும், சுற்றமும், நட்புகளும், உறவுகளும் அனுசரணையாக இருக்க வேண்டும். வாழ்க்கைக்கான சரியான வழிகாட்டல்களைத் தர வேண்டும். அவ்வபோது மனம் விட்டுப் பேசுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அவர்களின் பலகீனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக அவர்களைக் குறைச் சொல்லும் போக்கைக் கைவிட வேண்டும்.

மாணவர்களுக்கு உறவாகவும் சுற்றமாகவும் நட்பாகவும் இருப்பவர்கள் தேர்வுக்குப் படிக்கும் அவர்களோடு அனுசரணையாகவும் அக்கறையாகவும் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும். அவர்களைப் படிக்கச் சொல்லி விட்டு சுற்றத்தாராகிய நாம் கேளிக்கைகளில் ஈடுபட்டுக் கொணடிருக்கக் கூடாது. அவர்கள் படிக்கும் போது அவர்கள் அருகில் அமர்ந்து ஒரு சில வார்த்தைகள் நம்பிக்கையும் ஊக்கமும் உண்டாகும்படி பேசலாம். ஒரு கோப்பைத் தேநீரை அவர்கள் முன் எடுத்து வந்து நீட்டலாம். அவர்களுடன் சிறிது நேரம் விளையாடலாம். நகைச்சுவையாகப் பேசலாம். எப்போதும் எந்த நிலையிலும் நம்முடைய துணையும் உதவியும் அவர்களுக்கு இருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கலாம்.

இயன்றதைப் படிப்பதே போதுமானது என்ற உணர்வை அவர்களுக்கு எப்போதும் உருவாக்க வேண்டும். தன்னை வருத்திக் கொண்டு படிப்பதோ, படிப்புக்காகத் தன்னியல்பை இழந்து படிப்பதோ தேவையற்றது என்பதை அவர்களுக்கு எப்போதும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனென்றால் படிப்பினாலும் படித்து எழுதிய தேர்வில் போதிய வெற்றி கிடைக்காமல் போனாலும் அதனால் உண்டாகும் மன அழுத்தமும் மன இறுக்கமும் ஒருவரை வெகுவாகப் பாதிக்கும்.

படிப்பது மட்டும் எல்லாமாகி விடாது, படித்து மதிப்பெண்கள் வாங்கித் தேர்வு பெறுவது மட்டும் வாழ்க்கையை முழுமையாக்கி விடாது, பொறுமை, நிதானம், மன அமைதி, மன உறுதி, தன்னம்பிக்கை இவையும் படிப்போடு வேண்டும் என்பதை அவர்களுக்கு எடுத்துக் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

படிப்பின் மூலம் பெற வேண்டியது பொறுமை, நிதானம், மன அமைதி, மன உறுதி, தன்னம்பிக்கைதான் என்பதைப் புரிய வைக்க வேண்டும். இவை இருந்து தேர்வில் தோல்வி அடைந்தாலும் அது வெற்றிதான் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்.

அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்காகவும்தான் படிக்கிறோம் என்ற உண்மையை அவர்களிடம் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். படிப்பைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதால் மன இறுக்கமும் மன அழுத்தமும் அதிகரிக்கிறது என்றால் இயல்பாகப் படிப்பதால் கிடைக்கும் மதிப்பெண்களே போதும், அதைத்தான் பெற்றோர்களாகிய நாங்களும் உறவினர்களாகிய நாங்கள், நண்பர்களாகிய நாங்கள் விரும்புகிறோம் என்பதை அவர்களிடம் எடுததுச் சொல்ல வேண்டும்.

படிக்காமல் இருந்து விடக் கூடாது என்பதுதான் முக்கியமே தவிர, படித்துப் பெரும் மதிப்பெண்கள் வாங்க வேண்டும், வேலை வாய்ப்பை அடைந்து விட வேண்டும் என்பதெல்லாம் முக்கியமில்லை என்பதையும் மாணவர்களுடைய படிப்புக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கிடைத்தாலும் அது குறைவாக இருந்தாலும் அது எங்களுக்கு எல்லாம் சந்தோஷமும் ஏற்புடையதும்தான் என்று பெற்றோர்களும் உறவுகளும் நட்புகளும் தம்முடைய மனப்போக்கைத் தெளிவாகப் புரிய வைத்து விட்டால் படிப்பினால் உண்டாகும் இறுக்கமோ, தேர்வுகளால் உண்டாகும் அழுத்தமோ மாணவர்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன்.

அப்போது அவர்கள் இயல்பாகப் படிப்பார்கள். அந்தப் படிப்பில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிக மதிப்பெண்களே வாங்குவார்கள்.

வெகு முக்கியமாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால் தன்னம்பிக்கையுடன் படித்து மாணவர்கள் வாங்கும் குறைந்த மதிப்பெண்களும் உயர்ந்த மதிப்பெண்களே. தன்னம்பிக்கையின்றிப் படித்து அவர்கள் வாங்கும் அதிக மதிப்பெண்களும் குறைவான மதிப்பெண்களே. ஏனென்றால் வாழ்க்கையின் மதிப்பெண்கள் அப்படித்தானே வழங்கப்படுகிறது.

*****

28 Aug 2023

அளவோடு இருப்பதன் ஒழுக்கம்

அளவோடு இருப்பதன் ஒழுக்கம்

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.”              (குறள், 943)

என்கிறார் வள்ளுவர்.

உண்ட உணவு செரித்த பின் உண்ண வேண்டும். அது மட்டுமல்லாமல் செரிக்கும் அளவுக்குத்தான் உணவை உண்ணவும் வேண்டும். இந்த இரண்டையும் கடைபிடித்தால் நெடுநாள் வாழலாம் அல்லது நீங்கள் எதிர்பார்ப்பது போல நூறாண்டுகள் வாழலாம் என்பது வள்ளுவர் வாக்கு. அவரைத் தெய்வப்புலவர் என்று சொல்வதால் இவ்வாக்கைத் தெய்வ வாக்கு என்றும் சொல்லாம்.

அளவோடு உண்பதற்கு நாக்கு விடாது. சுவையான பண்டங்களைப் பார்த்து விட்டால் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று வயிறு புடைக்க உண்ண வைத்து விடும். இதற்கும் வள்ளுவர் ஒரு வாக்கைச் சொல்லியிருக்கிறார்.

“யாகாவார் ஆயினும் நாகாக்க”                (குறள், 127)

என்கிறார். இவ்வாக்கு சொல்லடக்கத்திற்கு என்று நீங்கள் சொல்லலாம். உணவு அடக்கத்திற்கும் இதைக் கொள்ளலாம். சொல்லிலும் உணவிலும் சரி நாவைக் காக்காவிட்டால் சொல் இழுக்குப் படுதலும், உடல் இழுக்குப் படுதலும் நிகழும்.

அளவு அறிந்து அடக்கமாக இருப்பது அவ்வளவு முக்கியம். அளவே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. அமுதத்தை விஷமாகவும், விஷத்தை மருந்தாகவும் தீர்மானிப்பது அளவே.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று அமுதத்திற்கும் அதற்கான ஓர் அளவு இருப்பதைப் நம் பழமொழி மரபு சொல்கிறது. விஷம்தான் என்றாலும் பாம்பின் விஷத்திலிருந்து மருந்துகள் உருவாக்கப்படுவதை மருத்துவ அறிவியல் சொல்கிறது. ஆக அளவை மீறி நலமாக வாழ்ந்து விட முடியாது.

உடல் எடைக்கென்று, ரத்த அழுத்தத்திற்கு என்று, சர்க்கரைக்கு என்று, கொழுப்புக்கு என்று எல்லாவற்றுக்கும் ஓர் அளவு இருக்கிறதுதானே. நோயென்று செல்லும் போது மருத்துவர்கள் இதைத்தானே பார்க்கிறார்கள். இந்த அளவு குறையவும் கூடாது, மிகவும் கூடாது. அப்படி ஆனால் அதை நோய் என்றுதானே குறிப்பிடுகிறார்கள். ஆம் அதுதான் நோய் என்பதை

“மிகினும் குறையினும் நோய் செய்யும்”            (குறள், 941)

என்கிறார் வள்ளுவர்.

அளவைக் கடந்து உண்பதை Sin of Gluttony என்கிறது மேற்கத்திய கலாச்சாரம். தமிழ்க் கலாச்சாரமும்

மீதூண் விரும்பேல்             (ஆத்திசூடி, 91)

என்றுதான் சொல்கிறது.

அல்வைஸ் கார்னாரோ என்பவது ‘நூறு வயது வரை வாழ்வது எப்படி?’ என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். புத்தகம் எழுதியது மட்டுமல்ல அவர் நூறு வயது வரையும் வாழ்ந்தவர். நூறாண்டு வாழ்வதற்கு அவர் அளவாக உண்பைதைத் வலியுறுத்துகிறார். அனுபவஸ்தர் சொல்லும் உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.

அளவோடு உண்பது அல்லது உணவில் அடக்கமாக இருப்பது என்பது ஒரு நாளில் கிட்டி விடாது. அது ஓர் ஒழுக்கம் என்பதால் அந்த ஒழுக்க நிலையை அடையும் வரை வைராக்கியமாக முயன்று கொண்டே இருக்க வேண்டும். பலமுறை இந்த ஒழுக்க நிலைக்கு அருகில் போய் தடுமாறி விழவும் நேரிடும். அந்தத் தடுமாற்றங்களைப் பெரிது படுத்திக் கொள்ளாமல் அந்த ஒழுக்கத்தை நிலைநிறுத்த கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டியிருக்கும்.

தொடக்கத்தில் நீங்கள் அளவோடு உண்பதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். அந்த ஆர்வம் மட்டும் போதாது. ஆர்வம் என்போது வேண்டுமானாலும் வடிந்து போகலாம். ஒழுக்கம் அப்படிப்பட்டதல்ல. நிலைபெற்று விட்டால் மலையைப் போன்று உறுதியாக நிற்கக் கூடாது. ஆகவே அந்த ஆர்வத்தை ஒழுக்கமாக மாற்றும் வரை நீங்கள் ஓயக் கூடாது, விடவும் கூடாது. உங்களுக்குள் அது ஓர் ஒழுக்கமாக நிலைபெற்று விட்டால் பிறகு நீங்கள் நினைத்தாலும் அந்தக் குணத்தை அந்த ஒழுக்கத்தால் உண்டான இயல்பை மாற்றிக் கொள்ள முடியாது. ஒழுக்கத்தின் வலிமை அப்படிப்பட்டது. அதனால்தான் ஒழுக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.”               (குறள், 131)

என்கிறார் திருவள்ளுவர். உயிருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் திருவள்ளுவர் ஒழுக்கத்திற்குக் கொடுப்பதால், இன்னும் சொல்லப் போனால் உயிரை விட மேலாக ஒழுக்கத்தை வலியுறுத்துவதால் ஒழுக்கத்தை எவ்வளவு வைராக்கியத்தோடு பின்பற்ற வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

*****

25 Aug 2023

இயங்கக் காத்திருந்த மிதிவண்டிகள்

இயங்கக் காத்திருந்த மிதிவண்டிகள்

இலவு காத்த கிளியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். இலவு காத்த கிளியைப் போல இயங்கக் காத்திருந்த மிதிவண்டிகளைப் பற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

2015 வது வருடம்.

எங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் இரு சக்கர வாகனம் (டூ வீலர்) இருந்தது. நான்கு மிதிவண்டிகளும் இருந்தன. தேவை மற்றும் அவசியத்துக்கு ஏற்ப இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்துவது என்றும் மற்றபடி மிதிவண்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். அருகில் உள்ள இடங்களுக்குச் செல்வதென்றால் மிதிவண்டியையும் பயன்படுத்தக் கூடாது, நடந்தே செல்ல வேண்டும் என்றும் முடிவு கட்டியிருந்தோம்.

நாங்கள் செய்த முடிவை நாங்களே மீறிப் போவோம் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் அதுதான் நடந்தது. சில நாட்கள் எங்கள் முடிவின் படி மிதிவண்டிப் பயணத்தையும் நடை பயணத்தையும் செய்தோம். படிப்படியாக மிதிவண்டியையும் நடை பயணத்தையும் தவிர்த்து அருகில் உள்ள இடங்களுக்கும் இரு சக்கர வாகனத்தில் செல்ல ஆரம்பித்தோம்.

மிதிவண்டிகள் எங்களுக்காகக் காத்திருந்தன. நாங்கள் எங்கு செல்வதென்றாலும் இரு சக்கர வாகனத்தையே தேர்வு செய்து கொண்டிருந்தோம். எங்களால் எங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை. எங்கு செல்வதென்றாலும் இப்போது எங்களை இரு சக்கர வாகனமே இயக்கத் தொடங்கியிருந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு எங்கள் மிதிவண்டிகள் தூசி படிந்து அழுக்காகவும் ஒட்டடை படிந்து விகாரமாகவும் காட்சியளிக்கத் தொடங்கின. சக்கர வளையங்களில் துருவும் ஏறியிருந்தது. இப்படி மிதிவண்டிகள் எங்கள் கண்ணில் படத் தொடங்கியதும் அதைத் துடைத்துச் சில நாட்கள் பயன்படுத்துவோம். மீண்டும் அதை விடுத்து இருசக்கர வாகனங்களிலே பயணிப்போம். இது தொடர்கதையானது.

இப்படியே நிலைமை போனால் மிதிவண்டிகள் வீணாகி பழைய இரும்புக்குத்தான் போட வேண்டியிருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது. அதுவும் நான்கு மிதிவண்டிகள் அப்படிக் கிடந்தன. அதனால் இரண்டு மிதிவண்டிகளையாவது விற்று விடுவது நல்லது, மீதி இரண்டு மிதிவண்டிகளைப் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டோம்.

விற்க நினைத்த மிதிவண்டிகள் நல்ல விலைக்குப் போகவில்லை. மிதிவண்டிகள் ஒவ்வொன்றும் ஐயாயிரத்து ஐநூறு சொச்சத்துக்கு வாங்கியது. அவற்றை விற்க முனைந்த போது எளிதில் விலை போகவில்லை. மிதிவண்டியானது போக்குவரத்திலிருந்து விலக்கப்பட்ட வாகனம் போலாகி விட்டது. அனைவரும் இரு சக்கர வாகனத்திற்கு மாறி விட்ட காலத்தில் ஓட்டுபவர் இல்லையென்றால் யார் மிதிவண்டியை வாங்குவார்கள்?

இரண்டு மிதிவண்டிகளையும் விற்பதற்கு எங்களுக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகின. ஐயாயிரத்துக்கும் மேல் விலை கொடுத்து வாங்கிய மிதிவண்டிகளில் ஒன்றை ஆயிரத்து ஐநூறுக்கும் மற்றொன்றை ஆயிரத்துக்கும் விற்றோம். விலை குறைவாக விற்ற அந்தத் தொகையிலும் வண்டி ஒன்றுக்கு நூற்றைம்பதை விற்பனைத் தரகாகக் கொடுத்தோம்.

இப்போது எங்களிடம் இரண்டு மிதிவண்டிகள் நாங்கள் இயக்குவதற்காகக் காத்திருந்தன. எப்படியும் பயன்படுத்துவது என்று வைத்திருந்த அந்த இரண்டு மிதிவண்டிகளையும் பல மாதங்களாகப் பயன்படுத்தாமலே இருந்தோம். அவை இரண்டும் எங்கள் மனதை உறுத்தத் தொடங்கியதோ என்னவோ, இந்த இரண்டு மிதிவண்டிகளும் ஏன் பயன்பாடற்று கிடக்க வேண்டும் என்று அதை மாடியில் கொண்டு போய் போட்டோம்.

மாதங்கள் ஆண்டுகளாக உருண்டோடிக் கொண்டிருந்தன. இடையிடையே மிதிவண்டியில் செல்ல வேண்டும் என்பது குறித்துப் பேசிக் கொள்வோம். மாடியில் கிடக்கும் மிதிவண்டிகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். என்னதான் உறுதி எடுத்துக் கொண்டாலும் மிதிவண்டிகளை எங்களால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியவில்லை.

நான் மட்டும் மாடியில் கிடக்கும் மிதிவண்டிகளை மாதத்திற்கு ஒரு முறை துடைத்து வைப்பேன். மிதிவண்டியை உடற்பயிற்சிக் கருவியைப் போல அது நின்ற நிலையில் ஏறி அமர்ந்து அரை மணி நேரம் வரை மிதித்துக் கொண்டிருப்பேன். என்னதான் நின்ற இடத்தில் மிதிவண்டியை ஓட்டினாலும் அதை சாலையில் ஓட்டுவதைப் போல வராது.

எப்படியாவது மிதிவண்டியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருந்தோம். இந்த இடைப்பட்ட காலங்களில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டது. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

குண்டாக ஆக மாட்டார்கள் என்று நினைத்த என் மனைவியும் மகளும் குண்டானது அப்போதுதான். குண்டானதை உடம்பு நன்றாகத் தேறி விட்டது என்று அவர்கள் இருவரும் நினைத்துக் கொண்டார்கள்.

கொரோனா பெருந்தொற்று முடிந்து மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பிய போதும் அவர்களின் உடல் பெருக்கம் அதிகமாகிக் கொண்டு போனது. அப்போதும் நாங்கள் மிதிவண்டியைப் பயன்படுத்துவது பற்றி பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தோம். வைராக்கியமாக இனிமேலாவது மிதிவண்டியைப் பயன்படுத்த வேண்டும் என்று சங்கல்பம் எல்லாம் செய்து கொண்டிருந்தோம்.

எங்கள் வைராக்கியம், சங்கல்பம் எதுவும் வேலை செய்யவில்லை. எங்களுக்கே நாங்கள் போகும் பாதை சரியில்லை என்று புரிபடவும் தொடங்கியது. கட்டாயம் மிதிவண்டியில் பயணிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று தெரிந்தும் நாங்கள் மிதிவண்டியைப் பயன்படுத்தாமல் இருக்கிறோமே என்பதும் தெரிந்துதான் இருந்தது. எல்லாம் தெரிந்தும் ஏன் அப்படியே இருக்கிறோம் என்பதும் புரியாமல் இருந்தது.

ஆண்டுகள் உருண்டோடி இப்போது 2023 இல் நிற்கின்றோம்.

ஒரு செயல் தூண்டல் அவசியம் என்பதை உணர்ந்தோம். நான் ஒரு நாள் அதிரடியாக மகளை அழைத்துக் கொண்டு மிதிவண்டியில் சென்றேன். செயலை நோக்கிய மாற்றம் அன்றுதான் நிகழ்ந்தது. மிதிவண்டிப் பயணத்தின் முடிவில் என் மகள் தனக்கு மூச்சு விடுவது சிரமமாக இருப்பதாகும், நெஞ்சு லேசாக வலிப்பதாகவும் சொன்னாள். எந்த அளவுக்கு உடல் உழைப்பிலிருந்து வெகுவாக விலகிப் போயிருந்தால் இப்படி ஒரு நிலை அவளுக்கு ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டேன். இது குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும், தொடர்ந்து மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தால் இந்த நிலை மாறி விடும் என்றும் அவளை ஆற்றுப்படுத்தினேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மிதிவண்டியில் சென்று வந்ததன் நன்மையை நாங்கள் அனுபவிக்கத் தொடங்கினோம். நாங்கள் நல்ல காற்றை நன்றாகச் சுவாசித்து இருந்தோம். எங்கள் ரத்த ஓட்டம் உடலெங்கும் அற்புதமான ஓட்டத்தை நிகழ்த்தியிருப்பதைப் பொங்கி வழிந்த வியர்வையினால் புரிந்து கொண்டோம்.

மிதிவண்டியில் சென்று வந்தது ஓர் உற்சாகத்தையும் இரவில் தூங்கிய போது தூங்குவதற்கு வசதியாக உடல் அசதியை உருவாக்கியதையும் உணர முடிந்தது.

நாங்கள் மறுநாள் பள்ளி செல்வதையும் மிதிவண்டியில் வைத்துக் கொள்வதெனத் தீர்மானித்தோம்.

*****

24 Aug 2023

இந்தக் காலத்தில் டீயும் காப்பியும் உண்டு

இந்தக் காலத்தில் டீயும் காப்பியும் உண்டு

ஆய்வாளர் ஆ.இரா.வெங்கடாசலபதி எழுதிய நூல் ஒன்றின் பெயர் ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக்கட்டுரைகள்’ என்பதாகும். அதனால் இந்தப் பத்திக்கு இப்படி ஒரு தலைப்பை நான் வைத்திருக்கிறேன்.

இந்தப் பத்தி சுடச்சுட வழங்கப்படும் தேநீர் (டீ) மற்றும் காப்பியைப் பற்றியது.

இன்று உலகெங்கும் குடிக்கப்படும் தேநீரை உலகில் முதன் முதலில் குடித்தவர்கள் சீனர்கள்.

சீன அரசர்தான் டீயைக் கண்டுபிடித்திருக்கிறார். எதேச்சையாக தேயிலை விழுந்த சூடான நீரைப் பருகிய அவருக்கு அந்தப் பானம் உற்சாகம் தந்திருக்கிறது. இந்த இலையில் இப்படி ஒரு அதிசயமா என வியந்து போன அவர் தேயிலையைக் கொதிக்க வைத்து அருந்தியிருக்கிறார். அரண்மனையில் இருந்தோரையும் பருக வைத்திருக்கிறார். படிப்படியாக சீன மக்கள் பருகத் தொடங்கி உலகம் முழுவதும் பருகத் தொடங்கி விட்டனர்.

டீயைக் கண்டுபிடிப்பதில் சீனர்கள் முந்திக் கொண்டாலும் உலகளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா முந்திக் கொண்டது. உலகளவில் அதிக தேயிலை உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். அடுத்த இடத்தில் நம் பக்கத்து தீவான இலங்கை இருக்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டியும் மூணாறும் டீ உற்பத்திக்குப் பிரபலம்.

ஜென் நிலையில் தேநீர் அருந்துவதே தியானம். உறங்காமல் தியானிப்பதற்காகப் போதிதர்மர் வெட்டி எறிந்த கண் இமைகளே தேயிலைச் செடிகளாக முளைத்ததாக ஒரு ஜென் கதையும் உண்டு. அதனாலேயே ஜென்னில் தேநீர் பருகுதலுக்கு அலாதியான முக்கியத்துவம் உண்டு.

உலகெங்கிலும் இருப்பதை விட இந்தியாவில் தேநீர் கடைகள் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஜென் நிலையில் சொல்வதென்றால் தேநீர் கடைகள் என்ற தியான நிலையங்கள் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். தண்ணீர் அருந்தாமல் கூட இருந்து விடலாம், தேநீர் அருந்தாமல் இருந்துவிட முடியாது என்கிற அளவுக்கு இந்தியாவின் தேசிய பானம் தேநீர்தான்.

விருந்தோம்பலுக்குப் பிரசித்திப் பெற்ற தமிழர் பண்பாட்டில் இப்போது முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது தேநீர்தான். ‘ஒரு வாய் டீ குடித்து விட்டுப் போகலாம்’ என்று அமர வைத்து தேநீர் கொடுத்தால்தான் தமிழர்களுக்குத் திருப்தி இப்போது. எதேச்சையாக நண்பர்களோ, உறவினர்களோ சந்தித்தாலோ ஒரு தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் பருகி விடை பெற்றால்தான் அவர்களுக்கும் திருப்தி.

ஆரம்ப காலத்தில் இந்தத் தேநீரை மக்கள் மத்தியில் பிரபலபடுத்த இலவசமாகக் கொடுத்ததாக வரலாறு உண்டு. இலவசமாகக் கொடுத்த நிலை மாறி உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பின் ஊதியத்தால் வாங்கிக் குடிக்கும் நிலைமைக்குத் தேநீர் பொருளாதார பலம் கொண்ட பானமாக மாறியது.

காலப்போக்கில் உழைக்கும் மக்களின் உற்சாகப் பானமாய் தேநீர் மாறியதைக் ‘கல்யாணப் பரிசு’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கீழ்காணும் பாடலைக் கொண்டு அறியலாம். நகைச்சுவை நடிகர் தங்கவேலு நடமாடும் தேநீர்கடையை வாகனத்தில் அமைத்துக் கொண்டு பாடுவது போல இந்தப் பாடலுக்கான காட்சி திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். இன்றும் கூட நடமாடும் தேநீர் கடைகளை மிதிவண்டிகளிலும் இரு சக்கர வாகனங்களிலும் பார்ப்பதற்கு அன்றே இத்திரைப்படப் பாடல் காட்சி கால்கோள் ஊன்றி விட்டது எனலாம். இனி அந்தப் பாடலைப் பாருங்களேன்.

“டீ டீ டீ – வாங்க

டீ டீ டீ

பாட்டாளித் தோழருக்கும்

பல தொழிலாளருக்கும்

கூட்டடாளியாயிருக்கும் டீ

கொஞ்சம் சூட்டோடு போட்டா

சோம்பேறி நண்பனுக்கும்

சுறுசுறுப்பு கொடுக்கும் டீ – இது

விறுவிறுப்பு கொடுக்கும் டீ

காரிலே ஏறிட்டு ரோடுலே போறவங்க

காய்கறி பழம் விற்க சுத்துறவங்க

உருகும் தாரிலே நடக்கற

தள்ளுவண்டிக் காரருங்க

சகலரும் விரும்பும் டீ – பலருக்கு

சாப்பாடு கூட இந்த டீ

ஊருக்கும் பேருக்கும்

உடல் மெலிந்தோருக்கும்

உள்ளபடி உழைக்கிற நல்லவங்களும்

காருக்கும் கூறுக்கும் வம்பு தகராறுக்கும்

மல்லுக்கும் காரணமாய் உள்ளவங்களும் குடிக்க

கூழுக்கும் இல்லாத குடிசைகளும் – பெருங்

கோட்டையும் விரும்பும் டீ – பழைய

குணத்தை மறக்க வைக்கும் டீ”

என்று பட்டுக்கோட்டையார் 1956 இல் வெளியான ‘கல்யாணப் பரிசு‘ படத்தில் எழுதிய பாடலிலிருந்து அன்றிலிருந்து இன்றும் கூட பலருக்கு டீயே சாப்பாடாக இருக்கும் உண்மையும் புலப்படுகிறது.

அப்போது இலசமாக வழங்கப்பட்டு பிறகு விலை வைக்கப்பட்டு சந்து பொந்தெங்கும் நீக்கமற நிறைந்து விட்ட தேநீரின் விலையைக் கொண்டு இப்போது விலைவாசி ஏற்றத்தையும் பணவீக்க விகிதத்தையும் மதிப்பிட்டு விடலாம்.

நானறிந்து 1.25 ரூபாயிலிருந்து தேநீர் குடித்திருக்கிறேன். இப்போது இந்த 2023வது ஆண்டில் கிராமத்துக் கடைகளில் எட்டு ரூபாய். நகரத்துக் கடைகளில் பத்து ரூபாய். இருபது ஆண்டுகளுக்குள் கிட்டதட்ட எட்டு மடங்குக்கு மேல் ஏறியிருக்கிறது.

அடுத்து காப்பியைக் குறித்து பார்த்தோமானால் உலகில் முதன் முதலில் எத்தியோப்பியாவைச் சார்ந்தவர்கள்தான் காபியைக் குடித்திருக்கிறார்கள்.

எத்தியோப்பிய சூபி துறவி ஒருவர் காபி செடிகளையும் கொட்டைகளையும் தின்ற ஆடுகள் இரவு பகல் பாராமல் உற்சாகமாக அலைவதைப் பார்த்திருக்கிறார். இந்தக் காப்பிக் கொட்டையில் அப்படி ஒரு விஷேஷமா என்று காப்பியைக் கண்டுபிடித்திருக்கிறார்.

டீ, காப்பி இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் டீயை விட காப்பிக்குச் சுறுசுறுப்பு தரும் வேகம் அதிகம். அதனால்தான் டீயை விட காப்பி விலை அதிகம் என்னவோ! ஆனால் உண்மையான காரணம் அதிலுள்ள அதிக கப்பைன் என்ற வேதிப்பொருள்தான். இது டீயில் கம்மி மற்றும் மெதுவாகத்தான வேலை செய்யும். காப்பியில் அதிகம் மற்றும் படு வேகமாக வேலை செய்யும்.

காப்பி உற்பத்தியில் பிரேசில் முதலிடத்திலும் இந்தோனேசியா இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இந்தியாவில் உற்பத்தியாகும் காப்பிக்குத்தான் தனிச்சுவை இருக்கிறது. அதனால் உலகெங்கிலும் இந்திய காப்பிக்கு தனி கிராக்கி இருக்கிறது. கும்பகோணம் டிகிரி காப்பியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குடித்தால் ஒரு கிறுகிறுப்பும் சுறுசுறுப்பும் வருவது நிச்சயம். அந்த விதத்தில் உலகளவில் தமிழ்நாட்டுக்குக் காப்பிக்குத் தனித்த இடம் இருக்கிறது என்று தமிழர்களாகிய நாம் பெருமைபட்டுக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் காப்பி கடைகளைப் பிரதியெடுத்து இன்று உலகெங்கும் காப்பி ஷாப்புகள் பெருகி விட்டன.  

*****

23 Aug 2023

நலம் நாடி… நலம் முதல் நாடி…

நலம் நாடி… நலம் முதல் நாடி…

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”        (குறள், 948)

என்பார் வள்ளுவர்.

இக்குறள் எதிர்மறையாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் இக்குறளை நீங்கள் இப்படியும் மாற்றிக் கொள்ளலாம்.

நலம் நாடி நலம் முதல் நாடி அது தொணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

மனித உடல் நலமாக இருக்க வேண்டுமென்றால் அது மலம், சிறுநீர் போன்ற கழிவுகளை மட்டும் வெளியேற்றினால் போதாது. வியர்வையையும் வெளியேற்ற வேண்டும்.

தினமும் மலம் கழித்தல் ஆரோக்கியத்தின் அடிப்படை. ஏனென்றால் மலச்சிக்கல் உருவாக்கும் நோய்கள் அநேகம். சிறுநீர் கழித்தலிலும் பிரச்சனை இல்லாமல் இருத்தல் முக்கியம். இல்லையென்றால் உயிர் வாழ டயாலிசிஸ் கட்டாயம்.

மலம் மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தைப் போன்று வியர்வை வெளியேற்றமும் அவசியமும் முக்கியமும் நிறைந்ததாகும். வியர்வையை வெளியேற்றுவதில் இன்றைய வாழ்க்கை முறையில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இன்று உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் குறைந்து விட்டன. இல்லாமலும் போய் விட்டன.

சாதாரணமாக நடத்தலுக்கும் வாய்ப்பில்லாமல் வாகனங்கள் நம்மைச் சுமந்து செல்கின்றன. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாமல் வாழ்க்கை நம்மை வேகமாக இழுத்துச் செல்கிறது.

இயல்பாக வெளியேறும் வியர்வையையும் குளிர்சாதன வசதிகள் (ஏ.சி.) வெளியேற விடாமல் செய்து விடுகின்றது. வியர்வை வெளியேறாத போது சிறுநீரகத்தின் பணி அதிகமாகிறது மற்றும் கடினமாகிறது. பலருக்கும் விரைவில் சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இது முதன்மையான காரணம்.

இதற்குத் தீர்வே கிடையாதா? இப்படியேதான போய்க் கொண்டிருக்குமா வாழ்க்கை? வாழ்க்கை முறை இப்படி சிக்கலான கேள்விகளை எழுப்பும் போது நாம் இவற்றுக்கு எப்படி விடை காண்பது? விடை கண்டாலும் அதை எப்படிச் செயல்படுத்துவது?

வீட்டிலிருக்கும் சட்டினி அரைப்பான் (மிக்ஸி), மாவு அரைப்பான் (கிரைண்டர்), குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்), குளிர்சாதன வசதி (ஏர் கண்டிஷன்) போன்ற சாதனங்களில் எவற்றிற்கெல்லாம் விடை கொடுக்கலாம் என யோசிக்கலாம். இவை அத்தனைக்கும் விடை கொடுத்தால் வியர்வைக்கான விடை கிடைத்து விடும். அல்லது இவற்றில் கணிசமானவற்றிக்கு விடை கொடுத்தாலும் வியர்வைக்கான வாய்ப்புகள் கிடைத்து விடும். இவற்றுடன் துணி துவைப்பான் (வாஷிங் மெஷின்), இரு சக்கர வாகனம் (டூ வீலர்), மகிழ்வுந்து (கார்) போன்றவை உங்களிடம் இருந்தால் அவற்றுக்கும் விடை கொடுத்தால் இழந்து கொண்டிருக்கும் ஆரோக்கியத்தை மீட்டு விடலாம்.

நீங்கள் சட்டினி அரைப்பானுக்கு விடை கொடுத்தால் அம்மிக்கல்லுக்கு வேலை வந்து விடும். மாவு அரைப்பானுக்கு விடை கொடுத்தால் ஆட்டுக்கல்லுக்கு வேலை கிடைத்து விடும். குளிர்சாதனப் பெட்டிக்கு விடை கொடுத்தால் உணவை அப்போரைதக்கப்போது சமைத்து உண்பதற்கு வாய்ப்புகள் உண்டாகும். குளிர்சாதன வசதிக்கு விடை கொடுத்தால் உடலிலிருந்து வியர்வை வெளியேறுவதற்கு எந்தத் தடுக்கின்ற சோதனைச் சாவடியும் இருக்காது.

இரு சக்கர வாகனத்துக்கும் மகிழ்வுந்துக்கும் விடை கொடுத்தால் அந்த இடத்தை நடையோ, மிதிவண்டியோ பிடித்துக் கொண்டு விடும்.

எல்லாவற்றிக்கும் மேலாகத் தொலைக்காட்சி (டிவி) பெட்டிக்கு விடை கொடுத்து விட்டால் உங்களது சகல நோய்களும் தீர்ந்த மாதிரிதான். இப்போது நீங்கள் சர்வரோக நிவாரணியைத் தரும் வாழ்க்கை முறைக்குள் வந்து விடலாம்.

முடியுமானால் மண்பாண்டங்களையும் விறகு அடுப்பு சமையலையும் நீங்கள் வழக்கத்திற்குக் கொண்டு வரலாம்.

இந்த மாற்றங்களால் உங்களது உடல் நலம் மட்டும் மேம்படுகிறது என்ற நினைக்க வேண்டாம். உங்கள் பொருளாதார நலமும் பலமும் கூடுகிறது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் சட்டினி அரைப்பான், மாவு அரைப்பான், குளிர்சாதனப் பெட்டி, குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி இல்லையென்றால் நீங்கள் பயன்படுத்தும் மின்சாரம் கணிசமாகக் குறைந்து விடும். நீங்கள் நூறு அலகு (யூனிட்) இலவச மின்சாரப் பயன்பாட்டிற்குள் வந்து மின் கட்டணமும் கட்ட வேண்டியிராத சூழ்நிலையையும் அடைந்து விடலாம்.

இந்த இலவச மின்சாரப் பயன்பாட்டை நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம். இதனால் நிறைய சுற்றுச்சூழல் நன்மைகள் உண்டு. அந்த நன்மைகளுக்காக அரசாங்கம் உங்களுக்குக் கொடுக்கும் பரிசுதான் இலவச மின்சாரம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். ஏன் அப்படியென்றால், நாம் மின்சாரம் தயாரிக்கும் பெரும்பாலான முறைகள் சூழலியல் கேடுகளை உண்டு பண்ணுகின்றன. அந்தச் சூழலியல் கேடுகளைக் குறைக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்காக உங்களுக்கு வழங்கப்படும் பசுமை கட்டணம்தான் இலவச மின்சாரம் எனலாம்.

கால்நடையாக நடந்து செல்லுதலும் மிதிவண்டியில் செல்லுதலும் ஆரோக்கியத்தை நோக்கிய மிகப்பெரும் முன்வைப்புகள். எல்லா இடங்களுக்கும் நடந்தும் மிதிவண்டியிலும் செல்ல முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். அது போன்ற நிலைமைகளில் திட்டமிட்டுக் கொண்டு பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். இதனால் நீங்கள் எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து நாட்டின் எரிபொருள் இறக்குமதியைக் குறைக்க உதவுகிறீர்கள். வீட்டின் செலவுத்தொகையிலும் எரிபொருள் செலவைக் குறைக்கிறீர்கள். இதனால் நாட்டுக்கும் லாபம். வீட்டுக்கும் லாபம். சுற்றுச்சூழலுக்கும் லாபம். ஒரு கல்லில் மூன்று மாங்காய் அடிப்பதைப் போன்றது இது.

மாதம் நாம் பயன்படுத்தும் ஒரு சில லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலிலா நாட்டின் பொருளாதாரம் மேம்படப் போகிறது என நீங்கள் நினைக்க வேண்டாம். இப்படி ஒவ்வொருவரும் ஒரு சில லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலைக் குறைக்கும் போது பல கோடி லிட்டர் பெட்ரோல் டீசல் பயன்பாட்டைக் குறைக்க முடியும். இதனால் பெட்ரோலியப் பொருள் இறக்குமதி குறைவதுடன் பெட்ரோலியப் பொருள்களின் பயன்பாடு குறைந்து காற்று மண்டலத்தின் மாசுபாடு குறைந்து மேம்பாடு அடையும். இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் பொருட்களில் பெட்ரோலியப் பொருட்களும் ஒன்று என்பதைக் கருத்தில் கொண்டால் இதனுடைய பொருளாதார லாபத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

உங்களின் ஆரோக்கியம் மேம்படும் போது மருத்துவச் செலவினங்களும் குறையும். அந்த விதத்தில் இது மற்றொரு பொருளாதார நலனையும் உங்களுக்குத் தரும். ஆரோக்கியக் குறைவால் ஏற்படும் நோய்களால் உங்கள் பொன்னான நேரம் வியாதியால் பாதிக்கப்படாமலும் உங்களுக்கு ஒரு காப்பீடு இதனால் கிடைத்து விடும். பொன் போன்ற காலத்தை வாங்குவதற்கும் பொன்னான காலத்தில் நோய் வாய்ப்படாமல் உழைத்து பொன்னை வாங்குவதற்கும் இந்த வாழ்க்கை மாற்ற முறைகள் உங்களுக்கு உதவும்.

இதெல்லாம் உடனடியாக நிகழ்த்தி விட முடியுமா? அது அவ்வளவு சுலபமில்லை. நாங்கள் இந்த மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க ஏழெட்டு ஆண்டுகள் ஆயிருக்கின்றன. அந்தக் கதையை உங்களிடம் சொல்ல வேண்டும். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

*****

22 Aug 2023

நோய் தீர்க்கும் என்று விலையேற்றப்படும் காய்களும் பழங்களும்

நோய் தீர்க்கும் என்று விலையேற்றப்படும் காய்களும் பழங்களும்

நம்மிடம் ஏகப்பட்ட கட்டுக்கதைகள் இருக்கின்றன. ஏதோ ஒரு நம்பிக்கைதான் அந்தக் கட்டுக்கதைகளின் ஆதாரம். சில கட்டுக்கதைகள் வாழ்க்கையின் பிடிமானங்களாக ஆகிப் போவதும் உண்டு. உணவைப் பற்றிய கட்டுக்கதைகள் ஏராளம். அந்தக் கதைகளின் ஏதோ சில விசயங்கள் உண்மையோடு ஒத்துப் போவதால் ஒட்டுமொத்த கதையும் உண்மை என்றாகி விடாது. அந்தக் கட்டுகதைகளின் ஒரு சில உண்மைகள் ஒட்டுமொத்தக் கதையையும் உண்மை என்று நிறுவும்.

முருங்கைக்காய் சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என்பார்கள். நம் நாட்டில் முருங்கைக்காய்க்கா பஞ்சம்? முருங்கைக்காயைத் தின்றும் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் இருந்திருக்கிறார்கள். முருங்கைக்காயில் ஆண்மைக்கான சமாச்சாரங்கள் இல்லை என்கிறாயா என்றால் இருக்கலாம். அது நல்ல காய்கறி என்பதில் எல்லாம் மாற்றுக்கருத்தில்லை. முருங்கைக்காயை மட்டும் தின்று ஆண்மையைப் பெருக்க முயற்சிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அதே போல கடுக்காய் பற்றிய கதையும் ஆண்மையை ஊதிப் பெருக்குவதைப் போலச் சொல்வார்கள்.

இயற்கையாக சில மூலிகைகளுக்கு இருக்கும் வல்லமைகளையும் வலிமைகளையும் மறுக்க முடியாது. உணவாகப் பயன்படுத்தும் எதுவும் அப்படி அபரிமிதமான மாற்றத்தை உண்டு பண்ணும் என்பதை எந்த அளவுக்கு ஏற்க முடியும் என்பதுதான் கேள்வி. உடலானது மிதமான உணவை ஏற்கும் வகையில் உள்ளது. மருந்து போன்ற உணவைத் தொடர்ந்து உண்டு கொண்டிருந்தால் அது வேறு விதமான பக்க விளைவுகளை உண்டு பண்ணி விடும். விருந்தும் மருந்தும் மூன்று நாள் கிராமங்களில் ஒரு சொலவத்தைச்  சொல்வார்கள்.  மூன்று நாட்கள் என்பதை நாம் முப்பது நாட்கள் வரை கூட வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் உடம்பு தாங்காது. அதன் பக்க விளைவுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். தங்க பஸ்பமே என்றாலும் அதைத் தொடர்ச்சியாகச் சாப்பிட்டால் அது வேறு மாதிரியான பிரச்சனைகளை உண்டு பண்ணி அதை உண்ண முடியாத நிலைக்குப் போகத்தான் வேண்டியிருக்கும்.

உணவுப் பொருட்களால் உண்டாக்கப்படும் அதிசயத்தைப் பற்றி சமீப காலமாக ஊதிப் பெருக்கப்பட்ட கட்டுக்கதைகளும் சங்கதிகளும் அதிகமாக உலவுகின்றன.

விஷத்தைத் தின்றால் உயிர் போவதைப் போல உணவுப் பொருட்களால் அப்படி திடீரென்ற அதிசயத்தை உண்டு பண்ணி விட முடியாது. சிறிதுசிறிதாக உண்டு பண்ணக் கூடும். இப்படிப்பட்ட உணவை அதிகமாக எடுத்துக் கொண்டால்தான் இந்த மாதிரியான மாற்றம் உண்டாகும், இல்லையென்றால் இப்படியேதான் இருக்க வேண்டும் என்பது மாதிரியான மிகைக் கதைகளில் இருக்கும் கட்டுப்பெட்டித்தன்மையைத்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் கேன்சர் வராது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் சர்க்கரை நெருங்கிப் பார்க்காது என்றெல்லாம் திடீர் திடீர் என்று சில பழங்கள் அதீத மவுசோடும் அதிக விலையோடும் விற்கப்படுவதைப் பார்க்கும் போது அவற்றிற்கான விற்பனை தந்திர வியாபார உத்தியாகத்தான் அவற்றைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களால் எந்த மாற்றமும் உண்டாகப் போவதில்லை.

கலவையாக தானியங்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு வகைகள், இறைச்சி என்று எடுத்துக் கொள்வதைத்தான் நான் ஆதரிக்கிறேன். இது மாவுச்சத்து, புரதச் சத்து, உயிர்ச் சத்து, கொழுப்புச் சத்து, தாது உப்புகள் என்று பள்ளிக்கூடத்தில் படித்த சரிவிகித உணவு எனும் சத்து கணக்கோடு அப்படியே பொருந்திப் போகும்.

குறிப்பிட்ட உணவை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அந்தந்தப் பருவத்தில் அதிகம் கிடைக்கும் கறிகாய்கள், கிழங்குகள், கடலைகள், பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

உதாரணமாக மாம்பழ சீசனில் மாம்பழங்களை அதிகம் உண்ணலாம். பலாப்பல சீசனில் பலாப்பழச் சுளைகளை அதிகம் உண்ணலாம். மரவள்ளிக் கிழங்குக்கென்று ஒரு சீசன் இருக்கிறது. அப்போது அதை அதிகம் உண்ணலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கிற்கும் சீசன் இருக்கிறது. நிலக்கடலைக்கும் சீசன் இருக்கிறது. மாதுளம் பழ சீசன், கத்திரிக்காய் சீசன், ஆரஞ்சு சீசன் என்று சீசன்கள் இருக்கின்றன. இலந்தைப் பழ சீசனில் நாவல் பழ சீசனில் விளாம்பழ சீசனில் அந்தந்தப் பழங்களை உண்ணலாம். அந்தந்த சீசன்களில் கிடைப்பதை அதிகம் உண்ணலாம். விலையும் மலிவு. குறிப்பிட்ட சில உணவை அதிகம் உண்ணவில்லை என்ற ஏக்கத்தையும் தீர்த்துக் கொள்ளலாம்.

பிரமாதமான அட்டகாசமான வியாதியை அதிசயமான முறையில் தீர்க்கும் உணவு என்றெல்லாம் எதுவும் இல்லை. உங்கள் பகுதியில் விளையக்கூடிய உங்களுக்கு மலிவாகக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருள்கள்தான் பிரமாதமான அட்டகாசமான உணவு. மற்றபடி சீசனில் மிதமிஞ்சிப் போவதால் விலை மலிவாக வரும் உணவுப் பொருள்களையும் உண்ணலாம். மற்றபடி குறிப்பிட்ட சில உணவுப்பொருள்கள் குறிப்பிட்ட சில வியாதிகளைத் தீர்க்கும் என்ற கதைகளை நம்பி அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உண்ண வேண்டியதில்லை.

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...