25 Aug 2023

இயங்கக் காத்திருந்த மிதிவண்டிகள்

இயங்கக் காத்திருந்த மிதிவண்டிகள்

இலவு காத்த கிளியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். இலவு காத்த கிளியைப் போல இயங்கக் காத்திருந்த மிதிவண்டிகளைப் பற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

2015 வது வருடம்.

எங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் இரு சக்கர வாகனம் (டூ வீலர்) இருந்தது. நான்கு மிதிவண்டிகளும் இருந்தன. தேவை மற்றும் அவசியத்துக்கு ஏற்ப இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்துவது என்றும் மற்றபடி மிதிவண்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். அருகில் உள்ள இடங்களுக்குச் செல்வதென்றால் மிதிவண்டியையும் பயன்படுத்தக் கூடாது, நடந்தே செல்ல வேண்டும் என்றும் முடிவு கட்டியிருந்தோம்.

நாங்கள் செய்த முடிவை நாங்களே மீறிப் போவோம் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் அதுதான் நடந்தது. சில நாட்கள் எங்கள் முடிவின் படி மிதிவண்டிப் பயணத்தையும் நடை பயணத்தையும் செய்தோம். படிப்படியாக மிதிவண்டியையும் நடை பயணத்தையும் தவிர்த்து அருகில் உள்ள இடங்களுக்கும் இரு சக்கர வாகனத்தில் செல்ல ஆரம்பித்தோம்.

மிதிவண்டிகள் எங்களுக்காகக் காத்திருந்தன. நாங்கள் எங்கு செல்வதென்றாலும் இரு சக்கர வாகனத்தையே தேர்வு செய்து கொண்டிருந்தோம். எங்களால் எங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை. எங்கு செல்வதென்றாலும் இப்போது எங்களை இரு சக்கர வாகனமே இயக்கத் தொடங்கியிருந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு எங்கள் மிதிவண்டிகள் தூசி படிந்து அழுக்காகவும் ஒட்டடை படிந்து விகாரமாகவும் காட்சியளிக்கத் தொடங்கின. சக்கர வளையங்களில் துருவும் ஏறியிருந்தது. இப்படி மிதிவண்டிகள் எங்கள் கண்ணில் படத் தொடங்கியதும் அதைத் துடைத்துச் சில நாட்கள் பயன்படுத்துவோம். மீண்டும் அதை விடுத்து இருசக்கர வாகனங்களிலே பயணிப்போம். இது தொடர்கதையானது.

இப்படியே நிலைமை போனால் மிதிவண்டிகள் வீணாகி பழைய இரும்புக்குத்தான் போட வேண்டியிருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது. அதுவும் நான்கு மிதிவண்டிகள் அப்படிக் கிடந்தன. அதனால் இரண்டு மிதிவண்டிகளையாவது விற்று விடுவது நல்லது, மீதி இரண்டு மிதிவண்டிகளைப் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டோம்.

விற்க நினைத்த மிதிவண்டிகள் நல்ல விலைக்குப் போகவில்லை. மிதிவண்டிகள் ஒவ்வொன்றும் ஐயாயிரத்து ஐநூறு சொச்சத்துக்கு வாங்கியது. அவற்றை விற்க முனைந்த போது எளிதில் விலை போகவில்லை. மிதிவண்டியானது போக்குவரத்திலிருந்து விலக்கப்பட்ட வாகனம் போலாகி விட்டது. அனைவரும் இரு சக்கர வாகனத்திற்கு மாறி விட்ட காலத்தில் ஓட்டுபவர் இல்லையென்றால் யார் மிதிவண்டியை வாங்குவார்கள்?

இரண்டு மிதிவண்டிகளையும் விற்பதற்கு எங்களுக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகின. ஐயாயிரத்துக்கும் மேல் விலை கொடுத்து வாங்கிய மிதிவண்டிகளில் ஒன்றை ஆயிரத்து ஐநூறுக்கும் மற்றொன்றை ஆயிரத்துக்கும் விற்றோம். விலை குறைவாக விற்ற அந்தத் தொகையிலும் வண்டி ஒன்றுக்கு நூற்றைம்பதை விற்பனைத் தரகாகக் கொடுத்தோம்.

இப்போது எங்களிடம் இரண்டு மிதிவண்டிகள் நாங்கள் இயக்குவதற்காகக் காத்திருந்தன. எப்படியும் பயன்படுத்துவது என்று வைத்திருந்த அந்த இரண்டு மிதிவண்டிகளையும் பல மாதங்களாகப் பயன்படுத்தாமலே இருந்தோம். அவை இரண்டும் எங்கள் மனதை உறுத்தத் தொடங்கியதோ என்னவோ, இந்த இரண்டு மிதிவண்டிகளும் ஏன் பயன்பாடற்று கிடக்க வேண்டும் என்று அதை மாடியில் கொண்டு போய் போட்டோம்.

மாதங்கள் ஆண்டுகளாக உருண்டோடிக் கொண்டிருந்தன. இடையிடையே மிதிவண்டியில் செல்ல வேண்டும் என்பது குறித்துப் பேசிக் கொள்வோம். மாடியில் கிடக்கும் மிதிவண்டிகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். என்னதான் உறுதி எடுத்துக் கொண்டாலும் மிதிவண்டிகளை எங்களால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியவில்லை.

நான் மட்டும் மாடியில் கிடக்கும் மிதிவண்டிகளை மாதத்திற்கு ஒரு முறை துடைத்து வைப்பேன். மிதிவண்டியை உடற்பயிற்சிக் கருவியைப் போல அது நின்ற நிலையில் ஏறி அமர்ந்து அரை மணி நேரம் வரை மிதித்துக் கொண்டிருப்பேன். என்னதான் நின்ற இடத்தில் மிதிவண்டியை ஓட்டினாலும் அதை சாலையில் ஓட்டுவதைப் போல வராது.

எப்படியாவது மிதிவண்டியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருந்தோம். இந்த இடைப்பட்ட காலங்களில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டது. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

குண்டாக ஆக மாட்டார்கள் என்று நினைத்த என் மனைவியும் மகளும் குண்டானது அப்போதுதான். குண்டானதை உடம்பு நன்றாகத் தேறி விட்டது என்று அவர்கள் இருவரும் நினைத்துக் கொண்டார்கள்.

கொரோனா பெருந்தொற்று முடிந்து மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பிய போதும் அவர்களின் உடல் பெருக்கம் அதிகமாகிக் கொண்டு போனது. அப்போதும் நாங்கள் மிதிவண்டியைப் பயன்படுத்துவது பற்றி பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தோம். வைராக்கியமாக இனிமேலாவது மிதிவண்டியைப் பயன்படுத்த வேண்டும் என்று சங்கல்பம் எல்லாம் செய்து கொண்டிருந்தோம்.

எங்கள் வைராக்கியம், சங்கல்பம் எதுவும் வேலை செய்யவில்லை. எங்களுக்கே நாங்கள் போகும் பாதை சரியில்லை என்று புரிபடவும் தொடங்கியது. கட்டாயம் மிதிவண்டியில் பயணிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று தெரிந்தும் நாங்கள் மிதிவண்டியைப் பயன்படுத்தாமல் இருக்கிறோமே என்பதும் தெரிந்துதான் இருந்தது. எல்லாம் தெரிந்தும் ஏன் அப்படியே இருக்கிறோம் என்பதும் புரியாமல் இருந்தது.

ஆண்டுகள் உருண்டோடி இப்போது 2023 இல் நிற்கின்றோம்.

ஒரு செயல் தூண்டல் அவசியம் என்பதை உணர்ந்தோம். நான் ஒரு நாள் அதிரடியாக மகளை அழைத்துக் கொண்டு மிதிவண்டியில் சென்றேன். செயலை நோக்கிய மாற்றம் அன்றுதான் நிகழ்ந்தது. மிதிவண்டிப் பயணத்தின் முடிவில் என் மகள் தனக்கு மூச்சு விடுவது சிரமமாக இருப்பதாகும், நெஞ்சு லேசாக வலிப்பதாகவும் சொன்னாள். எந்த அளவுக்கு உடல் உழைப்பிலிருந்து வெகுவாக விலகிப் போயிருந்தால் இப்படி ஒரு நிலை அவளுக்கு ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டேன். இது குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும், தொடர்ந்து மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தால் இந்த நிலை மாறி விடும் என்றும் அவளை ஆற்றுப்படுத்தினேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மிதிவண்டியில் சென்று வந்ததன் நன்மையை நாங்கள் அனுபவிக்கத் தொடங்கினோம். நாங்கள் நல்ல காற்றை நன்றாகச் சுவாசித்து இருந்தோம். எங்கள் ரத்த ஓட்டம் உடலெங்கும் அற்புதமான ஓட்டத்தை நிகழ்த்தியிருப்பதைப் பொங்கி வழிந்த வியர்வையினால் புரிந்து கொண்டோம்.

மிதிவண்டியில் சென்று வந்தது ஓர் உற்சாகத்தையும் இரவில் தூங்கிய போது தூங்குவதற்கு வசதியாக உடல் அசதியை உருவாக்கியதையும் உணர முடிந்தது.

நாங்கள் மறுநாள் பள்ளி செல்வதையும் மிதிவண்டியில் வைத்துக் கொள்வதெனத் தீர்மானித்தோம்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...