எத்தனைத் தேர்வுகளைத்தான் எழுதுவார்கள் மாணவர்கள்?
ஓராண்டில் படிக்கும் ஒரு
குறிப்பிட்ட வகுப்புக்கு காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வு என்றாலும் மூன்று தேர்வுகள்.
அல்லது முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் என்றாலும் ஓராண்டிற்கு ஒரு
குறிப்பிட்ட வகுப்புக்கு மூன்று தேர்வுகள்தான். இப்படியே ஒன்பதாம் வகுப்பு வரை ஒரு
மாணவர் படித்தால் 27 தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். இதுவே அவர் எல்.கே.ஜி., யு.கே.ஜி.
என்று ஆரம்பித்திருந்தால் இன்னும் 6 தேர்வுகளைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு
இடையே நடக்கும் இடைத்தேர்வுகள், மாதத்தேர்வுகள், வகுப்புத் தேர்வுகள், வாராந்திரத்
தேர்வுகள் தனி. எல்லாவற்றையும் சேர்த்தால் நூற்றுக்கும் குறையாமல் ஒரு மாணவர் தேர்வுகளை
எதிர்கொண்டு வந்திருக்க வேண்டும்.
பிறகு பத்தாம் வகுப்பு பொதுதேர்வு
இருக்கிறது. அந்தப் பொதுத்தேர்வை எழுதவதற்குள் அதற்குத் தயார் படுத்தும் விதமாக ஏகப்பட்ட
எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொண்டிருக்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து பதினொன்றாம்
வகுப்பு பொதுத்தேர்வு. அங்கும் அப்படித்தான் இந்தப் பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்காக
ஏகப்பட்ட மாதிரி மற்றும் பயிற்சித் தேர்வுகளை எதிர்கொண்டிருக்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து பனிரெண்டாம்
வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்வதிலும் அதே நிலைதான். பொதுவாகப் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம்
வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு ஆகிய இந்த மூன்று பொதுத் தேர்வுகளும் மன அழுத்தம்
தரக் கூடிய தேர்வுகளே.
இதைக் கடந்தால் மருத்துவமோ
பொறியியலோ, மத்திய பல்கலைக்கழகங்களிலோ படிக்கவேண்டும் என்றாலோ நீட், ஜேஇஇ, கியூட் என்று
நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். இந்தத் தேர்வுகளை எல்லாம் இயல்பாகப் படித்து
இயல்பாக எதிர்கொண்டு விட முடியாது. இதற்கெனப் பிரத்யேகப் பயிற்சிகள் தேவை. இந்நுழைவுத்
தேர்வுகளை எழுதுவதற்கு முன் ஏகப்பட்ட மாதிரி தேர்வுகளைப் பயிற்சித் தேர்வுகளாக எதிர்கொள்ள
வேண்டும். இல்லையென்றால் இந்தத் தேர்வுகளில் தகுதி மதிப்பெண்களைப் பெறுவது இயலாது.
இப்படியாகத் தேர்வுகள் பெரும்
நெருக்கடிகளாக மாறி விட்ட காலத்தில் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து
அவர்கள் பிடித்தப் படிப்பைப் படிக்க வேண்டும் என்பதற்காகவும் வேலை வாய்ப்பைப் பெற வேண்டும்
என்பதற்காகவும் எதிர்கொள்ளப் போகும் தேர்வுகளுக்கு கணக்கில்லை.
இந்தத் தேர்வுகளில் ஏற்படும்
தோல்வி அவர்களை மன ரீதியாகப் பாதிக்கக் கூடியவை. ஏதோ சில முறைகள் மன அழுத்தம் தரக்கூடிய
இத்தேர்வுகளை எதிர்கொண்டோம் பிறகு இயல்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வோம் என்று
இந்த தேர்வு சுழற்சியிலிருந்து அவ்வளவு எளிதாகத் தப்பி விட முடியாது.
நீங்கள் நீட்டில் வெற்றி
பெற்று எம்.பி.பி.எஸ். முடித்தாலும் அதைத் தொடர்ந்து எம்.டி.யோ அல்லது எம்.எஸ்ஸோ ஆக
மீண்டும் நீட்டை எதிர்கொள்ள வேண்டும். ஒரு வகையில் படிப்பின் மூலம் வேலைவாய்ப்பை அமைத்துக்
கொள்ள விழைவோர் முடிவில்லாத தேர்வு சுழற்சியில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது
என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
இப்படி ஒவ்வொரு தேர்வாக இலக்கு
வைத்துத் தேர்வுக்காக முயன்று கொண்டே இருந்தால் அதுவே ஒரு கட்டத்தில் மன உளைச்சலையும்
மன அழுத்தத்தையும் தரும் அனுபவமாக ஆகி விடுகிறது.
பத்து பேர் கலந்து கொள்ளும்
ஓட்டப் போட்டியில் பத்து பேரும் முதல் இடத்தைப் பிடித்து விட முடியாது எனும் எதார்த்தம்தான்
சில ஆயிரம் இடங்களுக்கு லட்ச கணக்கான மாணவர்கள் எழுதும் தேர்வுகளும். ஆனால் லட்சத்தில்
ஒருவராகக் கலந்து கொள்ளும் எல்லாருக்கும் ஆயிரத்தில் ஒருவராக வந்து விட வேண்டும் என்ற
அசைக்க முடியாத ஆசைதான் நிறைந்திருக்கும். அப்படி வர முடியாது போகும் போது அது ஏற்படுத்தும்
மன நெருக்கடிகள் ஒருவரைத் தன்னை அழித்துக் கொள்ளும் நிலை வரை கொண்டு போய் நிறுத்தும்.
நீட் தேர்வில் தகுதி பெற முடியாமலும் தேர்வு பெறுவதற்கான மதிப்பெண்கள் பெற முடியாமலும்
நிகழும் தற்கொலைகள் இப்படிப்பட்டவைதான்.
இது போன்ற நிலைமைகள் வராமல்
தடுப்பதற்குக் குடும்பமும், சுற்றமும், நட்புகளும், உறவுகளும் அனுசரணையாக இருக்க வேண்டும்.
வாழ்க்கைக்கான சரியான வழிகாட்டல்களைத் தர வேண்டும். அவ்வபோது மனம் விட்டுப் பேசுவதை
வழக்கமாகக் கொள்ள வேண்டும். அவர்களின் பலகீனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக
அவர்களைக் குறைச் சொல்லும் போக்கைக் கைவிட வேண்டும்.
மாணவர்களுக்கு உறவாகவும்
சுற்றமாகவும் நட்பாகவும் இருப்பவர்கள் தேர்வுக்குப் படிக்கும் அவர்களோடு அனுசரணையாகவும்
அக்கறையாகவும் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும். அவர்களைப் படிக்கச்
சொல்லி விட்டு சுற்றத்தாராகிய நாம் கேளிக்கைகளில் ஈடுபட்டுக் கொணடிருக்கக் கூடாது.
அவர்கள் படிக்கும் போது அவர்கள் அருகில் அமர்ந்து ஒரு சில வார்த்தைகள் நம்பிக்கையும்
ஊக்கமும் உண்டாகும்படி பேசலாம். ஒரு கோப்பைத் தேநீரை அவர்கள் முன் எடுத்து வந்து நீட்டலாம்.
அவர்களுடன் சிறிது நேரம் விளையாடலாம். நகைச்சுவையாகப் பேசலாம். எப்போதும் எந்த நிலையிலும்
நம்முடைய துணையும் உதவியும் அவர்களுக்கு இருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கலாம்.
இயன்றதைப் படிப்பதே போதுமானது
என்ற உணர்வை அவர்களுக்கு எப்போதும் உருவாக்க வேண்டும். தன்னை வருத்திக் கொண்டு படிப்பதோ,
படிப்புக்காகத் தன்னியல்பை இழந்து படிப்பதோ தேவையற்றது என்பதை அவர்களுக்கு எப்போதும்
எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனென்றால் படிப்பினாலும் படித்து எழுதிய தேர்வில் போதிய
வெற்றி கிடைக்காமல் போனாலும் அதனால் உண்டாகும் மன அழுத்தமும் மன இறுக்கமும் ஒருவரை
வெகுவாகப் பாதிக்கும்.
படிப்பது மட்டும் எல்லாமாகி
விடாது, படித்து மதிப்பெண்கள் வாங்கித் தேர்வு பெறுவது மட்டும் வாழ்க்கையை முழுமையாக்கி
விடாது, பொறுமை, நிதானம், மன அமைதி, மன உறுதி, தன்னம்பிக்கை இவையும் படிப்போடு வேண்டும்
என்பதை அவர்களுக்கு எடுத்துக் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.
படிப்பின் மூலம் பெற வேண்டியது
பொறுமை, நிதானம், மன அமைதி, மன உறுதி, தன்னம்பிக்கைதான் என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
இவை இருந்து தேர்வில் தோல்வி அடைந்தாலும் அது வெற்றிதான் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்.
அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும்
வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்காகவும்தான் படிக்கிறோம் என்ற உண்மையை அவர்களிடம்
அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். படிப்பைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதால்
மன இறுக்கமும் மன அழுத்தமும் அதிகரிக்கிறது என்றால் இயல்பாகப் படிப்பதால் கிடைக்கும்
மதிப்பெண்களே போதும், அதைத்தான் பெற்றோர்களாகிய நாங்களும் உறவினர்களாகிய நாங்கள், நண்பர்களாகிய
நாங்கள் விரும்புகிறோம் என்பதை அவர்களிடம் எடுததுச் சொல்ல வேண்டும்.
படிக்காமல் இருந்து விடக்
கூடாது என்பதுதான் முக்கியமே தவிர, படித்துப் பெரும் மதிப்பெண்கள் வாங்க வேண்டும்,
வேலை வாய்ப்பை அடைந்து விட வேண்டும் என்பதெல்லாம் முக்கியமில்லை என்பதையும் மாணவர்களுடைய
படிப்புக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கிடைத்தாலும் அது குறைவாக இருந்தாலும் அது எங்களுக்கு
எல்லாம் சந்தோஷமும் ஏற்புடையதும்தான் என்று பெற்றோர்களும் உறவுகளும் நட்புகளும் தம்முடைய
மனப்போக்கைத் தெளிவாகப் புரிய வைத்து விட்டால் படிப்பினால் உண்டாகும் இறுக்கமோ, தேர்வுகளால்
உண்டாகும் அழுத்தமோ மாணவர்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன்.
அப்போது அவர்கள் இயல்பாகப்
படிப்பார்கள். அந்தப் படிப்பில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிக மதிப்பெண்களே வாங்குவார்கள்.
வெகு முக்கியமாக நாம் புரிந்து
கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால் தன்னம்பிக்கையுடன் படித்து மாணவர்கள் வாங்கும் குறைந்த
மதிப்பெண்களும் உயர்ந்த மதிப்பெண்களே. தன்னம்பிக்கையின்றிப் படித்து அவர்கள் வாங்கும்
அதிக மதிப்பெண்களும் குறைவான மதிப்பெண்களே. ஏனென்றால் வாழ்க்கையின் மதிப்பெண்கள் அப்படித்தானே
வழங்கப்படுகிறது.
*****
No comments:
Post a Comment