நிலவில் துப்பாக்கிச் சூடு
கூடிய விரைவில் நிலவில் சென்று
பாட்டி வடை சுடலாம். அதைத்தான் சொல்கிறது சந்திராயன் 3. கூடவே ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளும்
உருவாகலாம். துப்பாக்கிச் சூடுகளும் ஏற்படுமா என்பது கால எந்திரத்தில் ஏறிக் கொண்டு
கேட்க வேண்டிய கேள்வி.
*****
தங்கத் தக்காளிப் பழமே!
தக்காளி சிவப்பு தங்கம் என்றால்
வெங்காயம் இளஞ்சிவப்புத்
தங்கமா
இஞ்சி மஞ்சள் தங்கமா
பட்டாணி பச்சைத் தங்கமா
முள்ளங்கி வெள்ளைத் தங்கமா
விலை ஏறும் ஒவ்வொன்றும் தங்கமாகி
விடுகிறது
தங்கமும் தங்கமாகி விடுகிறது
*****
நீங்களும் ஓர் அரசியல்வாதி!
இந்தக் காலத்தில் அரசியல்
நடத்துவது சுலபமில்லை. முன்பைப் போல லட்சங்களுக்குள் வாங்குவதாக மக்கள் பிரதிநிதிகளின்
(எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின்) விலைகள் இல்லை. எல்லாம் கோடிகளைக் கடந்து ஆயிரம்
கோடிகளில் போய் விட்டன. அதற்கேற்ப பணத்தைப் பதுக்கி வைத்திருப்பது என்றால் அதுவும்
சவாலாக இருக்கிறது. அந்தச் சோதனை (ரெய்டு), இந்தச் சோதனை (ரெய்டு) என்று ஏகப்பட்ட சோதனைகள்
(ரெய்டுகள்) வருகின்றன. அப்படிச் சோதனை (ரெய்டு) வரும் போது புஜபல பராக்கிரமங்களைக்
காட்டும் வகையில் ஒரு அடிபொடி கூட்டத்தைப் பிரியாணிப் போட்டுத் தலைக்கு ஐநூறு கொடுக்க
சோதனைக்குத் (ரெய்டுக்கு) தெரியாமலே சோதனை (ரெய்டு) பண்ணி விடாத அளவுக்கு ஒரு பெரிய
தொகையை வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அரசியல்வாதியாக இருக்கும்
வரையில் இந்தச் சோதனை (ரெய்டு) வந்தாலும் பிரச்சனை, வராமல் இருந்தாலும் பிரச்சனை. வராமல்
இருந்தால் என்ன பிரச்சனை என்றால் இவரெல்லாம் என்ன அரசியல்வாதி என்ற பெயர் உண்டாகி விடுகிறது.
சோதனைகளுக்குப் (ரெய்டுகளுக்கு)
பயந்து வலது கை, இடது கை, அல்லக்கை அல்லது அடிபொடிகளை (பினாமிகளை) உருவாக்கினால் அவர்களும்
(பினாமிகளும்) நம்பிக்கையோடு இருப்பதில்லை. எந்த நேரத்தில் எந்த வெளிநாட்டுக்கு ஏமாற்றி
விட்டுச் செல்வார்கள் என்பது தெரிவதில்லை. பணத்தோடு விளையாடும் (Play) மற்றும் வினையாடும் (Roleplay) இந்த விளையாட்டில் / வினையாட்டில்
சாமர்த்தியம் இருந்தால் நீங்களும் இந்தக் காலத்தில் ஓர் அரசியல்வாதிதான். அது அவ்வளவு
சுலபமில்லை.
சோதனை (ரெய்டு) வரும் போது
வரும் நெஞ்சுவலி நிஜமாகப் போய் விட்டால் கதை முடிந்தது. நெஞ்சும் வலிக்க வேண்டும்,
உயிரும் போகக் கூடாது என்கிற பதத்தில் நடந்து கொள்ள ஒரு தனித்த நெஞ்சு வேண்டும். அந்த
நெஞ்சு வந்தால்தான் நீங்கள் அரசியல்வாதி. அது அவ்வளவு சுலபமில்லை என்பது என் தனிப்பட்ட
கருத்து. இதையே மீண்டும் மீண்டும் இரண்டு இடத்தில் சொல்வதற்கு நீங்கள் என்னைப் பொறுத்துக்
கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் ஒரு சிலருக்கே அப்படிப்பட்ட இதயம் வாய்ப்பதாகப்
புள்ளிவிவரங்கள் விரைவில் வர இருக்கின்றன.
*****
நிம்மதியின் ரகசியம் எது?
நீங்கள் ரொம்ப கச்சிதமாக
இருங்கள். அந்தக் கச்சிதத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்காதீர்கள். சுருக்கமாகச் சொன்னால்
உங்களிடம் எந்த குணமும் எதிர்பார்ப்பும் மிகுதியாக இருக்கிறதோ அதை மற்றவர்களிடம் எதிர்பார்க்காதீர்கள்.
அதுதான் நிம்மதியின் ரகசியம். குறிப்பாக இந்த ரகசியத்தைச் சாமியார்களிடம் தேடாதீர்கள்!
மேலும் ஓர் அடிக்குறிப்பாக
பெரிய பெரிய விசயங்கள் பின்பு ஒளிந்து கொண்டு நிம்மதியாக இருக்க நினைக்காதீர்கள். சின்ன
சின்ன விசயங்களுக்காக எல்லாம் நிம்மதி அடையுங்கள்.
கூடுதல் குறிப்புகளாகப் பின்வருவனவற்றையும்
பரிசீலித்துப் பாருங்கள். பரிசீலிக்க முடியவில்லை என்பதற்காக நிம்மதியை இழந்து விட
வேண்டாம். அப்படி ஒரு நிலை வந்தால் பரிசீலிப்பதையே நிறுத்தி விடுங்கள்.
இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா
என்று யோசித்துக் குழம்பி நிம்மதியை இழந்து விடாதீர்கள். நீங்கள் எந்தப் பக்கமும் நிற்காதீர்கள்.
முடிவில் ஏதோ ஒரு பக்கத்திற்கு நீங்கள் அடித்துக் கொண்டு செல்லப்படுவீர்கள். அதுவரை
அமைதியாக இருந்தால் உங்கள் நிம்மதிக்கு எந்தப் பங்கமும் வராது.
எல்லாவற்றையும் நீங்களே பார்த்துக்
கொள்ள முடியாது, நிர்வகித்து விட முடியாது. மற்றவர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளத்தான்
வேண்டியிருக்கும். மற்றவர்களையும் கலந்து கொள்ளுங்கள், கலந்து விடுங்கள். மற்றவர்களிடம்
கலந்தும் கொள்ளுங்கள். யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். தயவுசெய்து
அறிவுரை சொல்லாதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் நிம்மதியைத் தொலைக்காத வரை உங்கள்
நிம்மதி உங்களிடமே இருக்கும்.
*****
No comments:
Post a Comment