சுந்தர ராமசாமிக்கும் அவரது தந்தைக்கும் இணக்கமான உறவு இருந்திருக்கவில்லை.
நா.பா. எனும் நா. பார்த்தசாரதிக்கும் சுந்தர ராமசாமியின் தந்தைக்கும் ஓர் இணக்கமாக
உறவு இருந்திருக்கிறது. அது பாந்தமான மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியதாக இருந்திருக்கிறது.
சு.ரா.வின் தந்தைக்கு சு.ரா. பழகிய இலக்கிய ஆளுமைகளுடன் அவ்வளவு பெரிய ஈர்ப்பும் மதிப்பும்
வேறு யாருடனும் இல்லாவிட்டாலும் நா.பா.வின் மீது மட்டும் இருந்திருக்கிறது. இத்தகவல்களை
எல்லாம் சு.ரா.வின் நா.பா. குறித்த நினைவோடை நூலின் மூலமாக அறிய முடிகிறது.
தமிழில் லட்சியவாத நாவல்கள் எழுதியவர்களில் மு.வ., அகிலன் போன்றோருக்கு
இருக்கும் இடம் நா.பா.வுக்கு இருக்கிறது. அவரது ‘குறிஞ்சி மலர்’ என்ற நாவல் அப்படி
ஓர் லட்சியவாத தாக்கத்தைத் தமிழ்ச் சூழலில் விளைவித்தது. அவரது ‘சமுதாய வீதி’ என்று
நாவலுக்கு சாகித்திய அகாதெமி பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது.
நா.பா.வின் எழுத்தைக் கல்கி, தேவன் போன்ற வெகுஜன அம்சம் கொண்ட
எழுத்தின் தொடர்ச்சி என்கிறார் சு.ரா. அத்துடன் அவருக்கு இருந்த இலக்கிய ஈடுபாட்டைக்
கருத்தில் கொண்டால் அவர் பாரதி, புதுமைப்பித்தன் தடத்தில் வந்திருக்க வேண்டியவர் என்றும்
மதிப்பிடுகிறார்.
நா.பா.வுக்கு கல்கி, தேவன்
வழியிலான அந்தத் தொடர்ச்சியை அவருக்கு ஏற்படுத்தித் தந்தவர் கி.வா.ஜ. அவரே நா.பா.வுக்குச்
செல்ல வேண்டிய எழுத்து வழியை அடையாளம் காட்டுகிறார். அவர் காட்டிய வழியில் சென்று அவர்
காலத்து நட்சத்திர எழுத்தாளராக மிளிர்ந்தவர் நா.பா.
நா.பா.வின் எழுத்து வெகுஜன சுவாரசியம் மிகுந்தது என்றாலும் அவருக்கு
உள்ளூர இருந்த ஆர்வமெல்லாம் தீவிர எழுத்தின் மீதுதான் என்பதை அவர் நடத்திய ‘தீபம்’
என்ற பத்திரிகை காட்டும். 20 ஆண்டு காலம் இந்தப் பத்திரிகையை எந்த வித சமரசமும் இன்றி
நா.பா. நடத்தியிருக்கிறார்.
இப்புத்தகத்தில் நா.பா.வின் ஆளுமையை வெகு சுவாரசியமாகப் பதிவு
செய்திருக்கிறார் சு.ரா. நா.பா.வின் எழுத்து நடையைப் பொருத்த மட்டில் சு.ரா.வுக்கு
மாறுபட்ட கருத்து இருந்தாலும் அவரின் அழகான கையெழுத்தைப் பாராட்டுகிறார். தொ.மு.சி.ரகுநாதன்,
வல்லிக்கண்ணன் மற்றும் நா.பா. போன்றோருக்கே எழுத்தாளர்களில் அழகான வாய்த்திருக்கிறது
என்கிறார். அதற்கேற்ப சிறிதாகக் கவர்ச்சியாக எழுதுவதில் வல்லவராக இருந்திருக்கிறார்
நா.பா.
வெகுஜனம் விரும்பும் சுவாரசியமான
நடையில் எழுதினாலும் அந்த எழுத்தை ஏனோதானோவென்று எழுதியதில்லை. அதற்குரிய சிரத்தையைக்
கொடுத்திருக்கிறார். தாம் எழுதுவதில் சிறப்பாக எழுதுவதற்குரிய மெனக்கெடலையும் விரும்பிச்
செய்திருக்கிறார்.
தொ.மு.சி.ரகுநாதனும் நா.பா.வும் பொய் பேசுவதை விரும்பியதில்லை
என்ற குணாதிசயத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார் சு.ரா. அத்துடன் நா.பா.வுக்கு ஆட்களைத்
தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் இருந்ததில்லை என்பதையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
அவர் இருந்த நிலைக்கு எத்தனையோ ஆட்களை அவர் போக்கிற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்க
முடியும். ஆனால் நா.பா. அதை ஒருபோதும் விரும்பியது இல்லை என்பது புத்தகத்தைப் படிக்க
படிக்க புலனாகும்.
நா.பா.வுக்கு என்று சில விசித்திரமான பழக்கங்களும் இருந்திருக்கின்றன.
ஒரு நாளைக்கு நான்கு முறை குளிப்பது, ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு கால் பாதங்களுக்குக்
கிரீம் தடவிக் கொள்வது என்று. இதை அருகில் இருந்து பார்த்திருக்கிறார் சு.ரா. அதையும்
இந்தப் புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ஒருமுறை சத்திரம் ஒன்றில்
குளிக்க தண்ணீர் இல்லாமல் பக்கத்து வீட்டில் தாவிக் குதித்து குளித்திருக்கிறார் நா.பா.
இப்படியான சுவாரசியங்களில் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது என்கிறார் சு.ரா. தாவிக்
குதித்து வந்து தங்கள் வீட்டில் குளித்துக் கொண்டிருப்பவர் நா.பா. என அறிந்து வீட்டுக்காரர்களும்
அதை பெருந்தன்மையாக அனுமதித்து அதில் பெருமைப்பட்டிருக்கிறார்கள். இதை நா.பா.வின் எழுத்து
பிரபல்யத்துக்குக் கிடைத்திருந்த சான்றாகக் கொள்ளலாம்.
பொதுவாக எழுத்தாளர்கள் தங்கள் அனுபவத்தை எழுத வேண்டும் என்ற
கருத்துடையவர் சு.ரா. இதற்கு மாறாக தாம் எழுதுவதை தமக்குரிய அனுபவமாக மாற்றிக் கொள்ள
முயன்றவர் நா.பா. என்று அவரைப் பற்றி மதிப்பிடும் சு.ரா. நன்னெறி, நல்லொழுக்கம், நன்னோக்கு
இவற்றில் எல்லாம் நா.பா.வுக்கு அலாதியான ஈடுபாடும் பிடித்தமும் இருந்திருக்கிறது என்கிறார்.
இதுவே அவரது எழுத்திலும் பிரதிபலித்திருக்கிறது என்பதையும் மதிப்பிடுகிறார்.
ஆனால் நா.பா.வுக்கு இருந்த
உணவு பலகீனம் அதாவது உணவில் இருந்த கட்டுபாடின்மை அவரை ஐம்பத்து வயதில் வீழ்த்தி விட்டது
என்கிறார். அவர் மட்டும் உணவுக் கட்டுபாட்டில் கவனமாக இருந்திருந்தால் இன்னும் இருப்பத்தைந்து
வருடங்கள் கூடுதலாகவே வாழ்ந்திருப்பார் என்கிறார் சு.ரா.
யார் எப்படி வாழ்ந்திருந்தாலும் எப்படிப்பட்ட எழுத்தை எழுதியிருந்தாலும்
அவர்களின் வாழ்க்கையை தேர்ந்த நடையில் இலக்கியத்தில் பதிவு செய்ய முடியும் என்பதை இப்புத்தகத்தின்
வழியாகச் சு.ரா. காட்டுகிறார் எனலாம்.
மகாகவி பாரதியாரின் பெரும்பான்மையான பாடல்கள் திரைப்படங்களில்
மோகன ராகத்தில் பாடப்பட்டிருக்கின்றன. நாம் இருவர் திரைப்படத்தில் இடம் பெறும் ‘விடுதலை
விடுதலை விடுதலை’ என்ற பாடலும் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் இடம் பெறும் ‘காற்று
வெளியிடை கண்ணம்மா’ பாடலும் மோகன ராகத்தில் அமைந்தவை.
ஆன்மிகப் பாடல்களிலும் சிறப்பான பாடல்கள் பல மோகன ராகத்தில்
அமைந்திருக்கின்றன. சான்றாகச் சுசீலா அம்மாவின் குரலில் ஒலிக்கும் ‘மாணிக்க வீணை ஏந்தும்’
என்ற பாடல் மோகன ராகத்தில் அமைந்தது.
முருகன் பாடல்களில் தனித்து ஒலிக்கும் தெய்வம் என்ற திரைப்படத்தில்
இடம் பெற்ற ‘திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்’ என்ற பாடல் மோகன
ராகத்தில் அமைந்தது.
அன்னை மரியைப் போற்றி ‘அன்னை வேளாங்கண்ணி’ திரைப்படத்தில் இடம்
பெறும் ‘நீலக்கடலின் ஓரத்தில்’ என்ற பாடலும் மோகன ராகத்தில் அமைந்து. இந்தப் பாடலைக்
கேட்க கீழே சொடுக்கவும்.
சினிமா நட்சத்திரங்களுக்குத் தனித்த நினைவலைகளைத் தரும் வகையில்
மோகன ராகத்தில் அமைந்த பாடல்கள் உதவியிருக்கின்றன. அதற்கான சான்றுகளையும் பார்க்கலாம்.
அன்பே வா என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். சூட்கேஸோடு ‘புதிய
வானம் புதிய பூமி’ என்று பாடும் பாடலைக் கேட்டிருக்காதவர்கள் இருக்க முடியாது. அந்தப்
பாடல் மோகன ராகத்தில் அமைந்ததுதான். அவருடைய உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில்
அமைந்த பெரும்பான்மையான பாடல்கள் மோகன ராகத்தில் அமைந்தவை. அப்படத்தின் ‘தங்கத் தோணியிலே’
என்ற திரைப்பாடல் மோகன ராகத்தில் அமைந்த பிரபலமான பாடல். நேற்று இன்று நாளை என்ற எம்.ஜி.ஆரின்
திரைப்படத்தில் இடம் பெறும் ‘பாடும் போது தென்றல் காற்று’ என்ற பாடலும் மோகன ராகத்தில்
அமைந்தது.
சிவாஜி கணேசனின் பாவ மன்னிப்பு திரைப்படத்தில் இடம் பெறும்
‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை’ திரைப்பாடல் மோகன ராகத்தில் அமைந்தது. பாலும் பழமும்
திரைப்படத்தில் இடம் பெறும் ‘ஆலய மணியின் ஓசை’ பாடலும் மோகன ராகத்தில் அமைந்ததுதான்.
ஜெமினி கணேசனின் கல்யாணப் பரிசு திரைப்படத்தில் இடம் பெறும்
‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற திரைப்பாடலும் மோகன ராகத்தில் அமைந்தது. இந்தப் பாடலைக்
கேட்க கீழே சொடுக்கவும்.
ரஜினிகாந்தை வித்தியாசமான குடும்ப பாங்கான நடிப்பில் வெளிப்படுத்திய
ஆறிலிருந்து அறுபது வரை என்ற திரைப்படத்தில் இடம் பெறும் ‘கண்மணியே காதல் என்பது’ என்ற
திரைப்பாடல் மோகன ராகத்தில் அமைந்தது. அவரது அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெறும்
‘அண்ணாமலை அண்ணாமலை’ என்ற பாடலும் மோகன ராகத்தில் அமைந்தது.
கமலகாஸனின் மறக்க முடியாத திரைப்படமான சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில்
இடம் பெறும் ‘வான் போலே வண்ணம் கொண்ட’ என்ற திரைப்பாடல் மோகன ராகத்தில் அமைந்தது.
‘நிழல் நிஜமாகிறது’ என்ற திரைப்படத்தில் இடம் பெறும் ‘கம்பன் ஏமாந்தான்’ என்ற திரைப்பாடலும்
மோகன ராகத்தில் அமைந்தது.
பல இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.வி.யிலிருந்து இளையராஜா வரை அத்துடன்
தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் வரை மோகன ராகத்தைத் திரைப்படங்களில் அதிகமாகவே திரைப்பாடல்களில்
பயன்படுத்தியுள்ளார்கள்.
பூச்சி ஐயங்காரின் ‘நின்னுக்கோரி’ என்ற வர்ணம் மோகன ராகத்தில்
அமைந்தது. அந்த நின்னுக்கோரியை எடுத்துக் கொண்டு அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில்
‘நின்னுக்கோரி வர்ணம்’ என்ற இளையராஜா இசையமைத்த பாடல் மோகன ராகத்தில் அமைந்ததுதான்.
இந்த மோகன ராகத்தில் கரும்பு வில் என்ற திரைப்படத்தில் ‘மீன்கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்’ என்ற இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல் அந்த ராகத்தின் சுகானுபவத்தின்
உச்சத்தைக் காட்டும். இந்தப் பாடலைக் கேட்க கீழே சொடுக்கவும்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கருத்தம்மா திரைப்படத்தில் இடம் பெறும்
‘போறாளே பொன்னுத்தாயி’ என்ற பாடலும் மோகன ராகத்தில் அமைந்ததுதான். அவர் பாய்ஸ் திரைப்படத்தில்
இசை அமைத்திருக்கும் ‘பால் போலே’ என்ற பாடலும் ‘பாய்ஸை ஏங்க வைக்காதே’ என் ற பாடலும்,
ஜீன்ஸ் திரைப்படத்தில் இடம் பெறும் ‘வாராயோ தோழி’ என்ற பாடலும் மோகன ராகத்தில் அமைந்தவை.
இவை ஒரு வகை என்றால் சிறைச்சாலை திரைப்படத்தில் இடம் பெறும் ‘ஆலோலம் கிளி தோப்பிலே’
என்ற மோகன ராக இசைப்பாடல் தனித்த சுகத்தைத் தராமல் போகாது.
காதல் கோட்டை திரைப்படத்தில் இடம் பெற்ற வெகுஜனதுள்ளல் பாடலான ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’
பாடலும் மோகன ராகத்தில் அமைந்தது. மெல்லிசைப் பாடல்களை விரும்புவோர் தங்களை அறியாமல்
முணுமுணுக்கும் இதயக்கோயில் திரைப்படத்தில் இடம் பெறும் ‘இதயம் ஒரு கோயில்’ என்ற திரைப்பாடலும்
மோகன ராகத்தில் அமைந்தது.
நாகேஷ் கதை நாயகராக நடித்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் சௌகார்
ஜானகியும் ஸ்ரீகாந்தும் நகைச்சுவையாகப் பாடும் வகையில் அமைந்திருக்கும் ‘அடுத்தாத்து
அம்புஜத்தைப் பாத்தேளா’ என்ற திரைப்பாடலும் மோகன ராகத்தில் அமைந்தததுதான்.
அத்துடன் பலரும் ஏதேனும் ஒருவேளையிலாவது தன்னை அறியாமல் மனதுக்குள்
பாடிக் கொள்ளும் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’ என்ற தேடி வந்த மாப்பிள்ளை
என்ற திரைப்படத்தில் இடம் பெறும் பாடலும், ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ என்ற அண்ணனுக்கு
ஜே என்ற திரைப்படத்தில் இடம் பெறும் பாடலும் மோகன ராகத்தில் அமைந்தவை.
கிராமங்களில் திருமண நடைபெறும்
போதெல்லாம் போடப்படும் ‘காதல் கடிதம் வரைந்தேன்’ என்ற சேரன் பாண்டியன் திரைப்படத்தில்
இடம் பெறும் பாடலும் மோகன ராகத்தில் அமைந்ததுதான். இந்தப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம்
மனதை மயக்கும் ராகம் மோகனம் என்பது சொல்லாமல் புலப்படும்.
அண்மை காலமாக ராகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற
ஓர் ஆர்வம். ராகம் என்பது தமிழில் பண் எனப்படுகிறது. தமிழிசை எப்படியோ தேய்ந்து போகப்
பண் ராகமாகி விட்டது. ராகம் என்பதெல்லாம் கர்நாடக சங்கீதம் சம்பந்தமான சொல்லாடல்கள்.
கர்நாடக சங்கீதம் என்று சொன்னாலும் அதில் இருப்பதெல்லாம் பெரும்பான்மையானவை தெலுங்கு
கீர்த்தனைகள்தான்.
மோகனம் என்பது கவர்ச்சி, வசீகரம் எனும் பொருளைத் தரும் சொல்.
அந்தச் சொல்லில் உள்ள பொருளைப் போல மோகன ராகமும் மனதை மயக்கும் கவர்ச்சியும் வசீகரமும்
கொண்டதாக உள்ளது.
கர்நாடக சங்கீதம் மோகனம் என்று சொல்வதைத் தமிழிசையில் தேடினால்
அதுதான் முல்லைப் பண் என இசை ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர்
குரவையில் ‘முல்லைத் தீம்பாணி’ எனக் குறிப்பிடப்படுவது மோகன ராகம் என்கிறார்கள்.
கர்நாடக சங்கீதத்தில் குறிப்பிடப்படும் தாய் ராகங்கள் எனப்படும்
72 மேளகர்த்தா ராகங்களில் ஹரிகாம்போதியும் ஒன்று. இந்த ஹரிகாம்போதி எனும் தாய் ராகத்தின்
சேய் ராகம்தான் மோகனம். இந்துஸ்தானி இசையில் பூப் என இந்த ராகம் குறிப்பிடப்படுகிறது.
நாட்டார் வழக்கியல் சார்ந்த பல பாடல்கள் மோகன ராகத்தில் அமைந்துள்ளதாக
ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உலகெங்கிலும் அதிகம் பாடப்படும் பாடல்களின் ராகம்
பெரும்பாலும் மோகன ராகத்தில் அமைந்துள்ளன.
பழங்குடியினரின் பாடல்கள்,
நாட்டுப்புற பாடல்கள் அனைத்திலும் பெரும்பான்மை மோகன ராகம் கொண்டதாக அமைகிறது என்கிறார்கள்.
இடைக்குல ஆய்ச்சியர்கள் பாடும் பாடல்கள் மோகன ராகம் கொண்டதாக அமைந்திருதைச் சிலப்பதிகாரம்
சுட்டியதை மேலே கண்டோம். இதனால் இதைத் தொன்மையான ராகம் என்று குறிப்பிடலாம். அத்துடன்
ஸ்லோகங்கள் மற்றும் விருத்தங்களைப் பாடவும் இந்த மோகன ராகம் வசதியாக இருக்கும் என்கிறார்கள்.
ஒவ்வொரு நேரத்திற்கும் உகந்த
ராகங்கள் உண்டென்பர் இசையியலாளர்கள். ஆனால் எந்த நேரத்திலும் பாட உகந்த ராகமாக அமைவது
மோகனம்தான். இருப்பினும் இரவில் பாட சுகமாக இருக்கும் என்கிறார்கள்.
மோகன ராகத்தைக் கேட்காத தமிழர்கள்
இருக்க முடியாது என்றால் அதுதான் உண்மை. அது ஏனென்றால் ‘நீராரும் கடலுடுத்த…’ எனப்
பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து மோகன ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது முல்லைப்
பண்ணில் அமைக்கப்பட்டிருக்கிறது.
‘திருவாசகத்திற்கு உருகார்
ஒரு வாசகத்திற்கும் உருகார்’ எனப் போற்றப்படும் திருவாசகம் மோகன ராகத்தில்தான் பாடப்படுகிறது.
ராகங்களை ஆண் ராகம் என்றும்
பெண் ராகம் என்றும் பிரிப்பவர்கள் மோகனத்தைப் பெண் ராகமாகச் சுட்டுகிறார்கள். மோகன
ராகத்திற்கு வாய்த்திருக்கும் வசீகரமும் கவர்ச்சியும் அதனால் கூட அதிகமாக இருக்கலாம்.
பொதுவாக ஐந்து சுரங்களால்
அமையும் ராகம் மனதைக் கொள்ளை கொள்ளும் என்கிறார்கள். மோகன ராகமும் ஐந்து சுரங்களால்
அமைகிறது. ஐந்து சுர ராகங்களை கர்நாடக சங்கீதத்தில் ஔடத ராகம் என்கிறார்கள். ஆங்கில
இசையில் Pentatonic Scale என்கிறார்கள்.
மோகன ராகத்தின் ஐந்து சுர
வரிசைகள் என்று பார்த்தால்
ஸ
ரி2
க3
ப
த2
ஸ்
ஸ்
த2
ப
க3
ரி2
ஸ
இதில் ரி2 என்பது சதுஸ்ருதி
ரிஷபம், க3 என்பது அந்தர காந்தாரம், த2 என்பது சதுஸ்ருதி தைவதம்.
மகாகவி பாரதியாரின் ‘செந்தமிழ்
நாடெனும் போதினிலே’ எனும் பாடலும், பாவேந்தர் பாரதிதாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலும்
இந்த ராகத்தில் திரைப்படங்களில் கையாளப்பட்டிருக்கிறது.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’
பாடலைக் கேட்க கீழே சொடுக்கவும்.