23 Aug 2021

மனதை மயக்கும் மோகன ராகம்

மனதை மயக்கும் மோகன ராகம்

            அண்மை காலமாக ராகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஓர் ஆர்வம். ராகம் என்பது தமிழில் பண் எனப்படுகிறது. தமிழிசை எப்படியோ தேய்ந்து போகப் பண் ராகமாகி விட்டது. ராகம் என்பதெல்லாம் கர்நாடக சங்கீதம் சம்பந்தமான சொல்லாடல்கள். கர்நாடக சங்கீதம் என்று சொன்னாலும் அதில் இருப்பதெல்லாம் பெரும்பான்மையானவை தெலுங்கு கீர்த்தனைகள்தான்.

            மோகனம் என்பது கவர்ச்சி, வசீகரம் எனும் பொருளைத் தரும் சொல். அந்தச் சொல்லில் உள்ள பொருளைப் போல மோகன ராகமும் மனதை மயக்கும் கவர்ச்சியும் வசீகரமும் கொண்டதாக உள்ளது.

            கர்நாடக சங்கீதம் மோகனம் என்று சொல்வதைத் தமிழிசையில் தேடினால் அதுதான் முல்லைப் பண் என இசை ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் ‘முல்லைத் தீம்பாணி’ எனக் குறிப்பிடப்படுவது மோகன ராகம் என்கிறார்கள்.

            கர்நாடக சங்கீதத்தில் குறிப்பிடப்படும் தாய் ராகங்கள் எனப்படும் 72 மேளகர்த்தா ராகங்களில் ஹரிகாம்போதியும் ஒன்று. இந்த ஹரிகாம்போதி எனும் தாய் ராகத்தின் சேய் ராகம்தான் மோகனம். இந்துஸ்தானி இசையில் பூப் என இந்த ராகம் குறிப்பிடப்படுகிறது.

            நாட்டார் வழக்கியல் சார்ந்த பல பாடல்கள் மோகன ராகத்தில் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உலகெங்கிலும் அதிகம் பாடப்படும் பாடல்களின் ராகம் பெரும்பாலும் மோகன ராகத்தில் அமைந்துள்ளன.

பழங்குடியினரின் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் அனைத்திலும் பெரும்பான்மை மோகன ராகம் கொண்டதாக அமைகிறது என்கிறார்கள். இடைக்குல ஆய்ச்சியர்கள் பாடும் பாடல்கள் மோகன ராகம் கொண்டதாக அமைந்திருதைச் சிலப்பதிகாரம் சுட்டியதை மேலே கண்டோம். இதனால் இதைத் தொன்மையான ராகம் என்று குறிப்பிடலாம். அத்துடன் ஸ்லோகங்கள் மற்றும் விருத்தங்களைப் பாடவும் இந்த மோகன ராகம் வசதியாக இருக்கும் என்கிறார்கள்.

ஒவ்வொரு நேரத்திற்கும் உகந்த ராகங்கள் உண்டென்பர் இசையியலாளர்கள். ஆனால் எந்த நேரத்திலும் பாட உகந்த ராகமாக அமைவது மோகனம்தான். இருப்பினும் இரவில் பாட சுகமாக இருக்கும் என்கிறார்கள்.

மோகன ராகத்தைக் கேட்காத தமிழர்கள் இருக்க முடியாது என்றால் அதுதான் உண்மை. அது ஏனென்றால் ‘நீராரும் கடலுடுத்த…’ எனப் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து மோகன ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது முல்லைப் பண்ணில் அமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்க கீழே சொடுக்கவும்.

 https://youtu.be/fBvYwF6NMnY


‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ எனப் போற்றப்படும் திருவாசகம் மோகன ராகத்தில்தான் பாடப்படுகிறது.

ராகங்களை ஆண் ராகம் என்றும் பெண் ராகம் என்றும் பிரிப்பவர்கள் மோகனத்தைப் பெண் ராகமாகச் சுட்டுகிறார்கள். மோகன ராகத்திற்கு வாய்த்திருக்கும் வசீகரமும் கவர்ச்சியும் அதனால் கூட அதிகமாக இருக்கலாம்.

பொதுவாக ஐந்து சுரங்களால் அமையும் ராகம் மனதைக் கொள்ளை கொள்ளும் என்கிறார்கள். மோகன ராகமும் ஐந்து சுரங்களால் அமைகிறது. ஐந்து சுர ராகங்களை கர்நாடக சங்கீதத்தில் ஔடத ராகம் என்கிறார்கள். ஆங்கில இசையில் Pentatonic Scale என்கிறார்கள்.

மோகன ராகத்தின் ஐந்து சுர வரிசைகள் என்று பார்த்தால்

ரி2

க3

த2

ஸ்

ஸ்

த2

க3

ரி2

இதில் ரி2 என்பது சதுஸ்ருதி ரிஷபம், க3 என்பது அந்தர காந்தாரம், த2 என்பது சதுஸ்ருதி தைவதம்.

மகாகவி பாரதியாரின் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ எனும் பாடலும், பாவேந்தர் பாரதிதாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலும் இந்த ராகத்தில் திரைப்படங்களில் கையாளப்பட்டிருக்கிறது.

‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ பாடலைக் கேட்க கீழே சொடுக்கவும்.

 https://youtu.be/F4mS3zwhZ1Q


‘சங்கே முழங்கு’ பாடலைக் கேட்க கீழே சொடுக்கவும்.

 https://youtu.be/xoV2U-G2ioA


மேலும் பல வெற்றிப் பெற்ற திரைப்பாடல்கள் மோகன ராகத்தில் அமைந்தவை. அவை குறித்து நாளைப் பார்ப்போம்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...