29 Aug 2021

சு.ரா.வின் நா. பா. குறித்த நினைவோடை

சு.ரா.வின் நா. பா. குறித்த நினைவோடை

            சுந்தர ராமசாமிக்கும் அவரது தந்தைக்கும் இணக்கமான உறவு இருந்திருக்கவில்லை. நா.பா. எனும் நா. பார்த்தசாரதிக்கும் சுந்தர ராமசாமியின் தந்தைக்கும் ஓர் இணக்கமாக உறவு இருந்திருக்கிறது. அது பாந்தமான மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியதாக இருந்திருக்கிறது. சு.ரா.வின் தந்தைக்கு சு.ரா. பழகிய இலக்கிய ஆளுமைகளுடன் அவ்வளவு பெரிய ஈர்ப்பும் மதிப்பும் வேறு யாருடனும் இல்லாவிட்டாலும் நா.பா.வின் மீது மட்டும் இருந்திருக்கிறது. இத்தகவல்களை எல்லாம் சு.ரா.வின் நா.பா. குறித்த நினைவோடை நூலின் மூலமாக அறிய முடிகிறது.

            தமிழில் லட்சியவாத நாவல்கள் எழுதியவர்களில் மு.வ., அகிலன் போன்றோருக்கு இருக்கும் இடம் நா.பா.வுக்கு இருக்கிறது. அவரது ‘குறிஞ்சி மலர்’ என்ற நாவல் அப்படி ஓர் லட்சியவாத தாக்கத்தைத் தமிழ்ச் சூழலில் விளைவித்தது. அவரது ‘சமுதாய வீதி’ என்று நாவலுக்கு சாகித்திய அகாதெமி பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது.

            நா.பா.வின் எழுத்தைக் கல்கி, தேவன் போன்ற வெகுஜன அம்சம் கொண்ட எழுத்தின் தொடர்ச்சி என்கிறார் சு.ரா. அத்துடன் அவருக்கு இருந்த இலக்கிய ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டால் அவர் பாரதி, புதுமைப்பித்தன் தடத்தில் வந்திருக்க வேண்டியவர் என்றும் மதிப்பிடுகிறார்.

நா.பா.வுக்கு கல்கி, தேவன் வழியிலான அந்தத் தொடர்ச்சியை அவருக்கு ஏற்படுத்தித் தந்தவர் கி.வா.ஜ. அவரே நா.பா.வுக்குச் செல்ல வேண்டிய எழுத்து வழியை அடையாளம் காட்டுகிறார். அவர் காட்டிய வழியில் சென்று அவர் காலத்து நட்சத்திர எழுத்தாளராக மிளிர்ந்தவர் நா.பா.

            நா.பா.வின் எழுத்து வெகுஜன சுவாரசியம் மிகுந்தது என்றாலும் அவருக்கு உள்ளூர இருந்த ஆர்வமெல்லாம் தீவிர எழுத்தின் மீதுதான் என்பதை அவர் நடத்திய ‘தீபம்’ என்ற பத்திரிகை காட்டும். 20 ஆண்டு காலம் இந்தப் பத்திரிகையை எந்த வித சமரசமும் இன்றி நா.பா. நடத்தியிருக்கிறார்.

            இப்புத்தகத்தில் நா.பா.வின் ஆளுமையை வெகு சுவாரசியமாகப் பதிவு செய்திருக்கிறார் சு.ரா. நா.பா.வின் எழுத்து நடையைப் பொருத்த மட்டில் சு.ரா.வுக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் அவரின் அழகான கையெழுத்தைப் பாராட்டுகிறார். தொ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன் மற்றும் நா.பா. போன்றோருக்கே எழுத்தாளர்களில் அழகான வாய்த்திருக்கிறது என்கிறார். அதற்கேற்ப சிறிதாகக் கவர்ச்சியாக எழுதுவதில் வல்லவராக இருந்திருக்கிறார் நா.பா.

வெகுஜனம் விரும்பும் சுவாரசியமான நடையில் எழுதினாலும் அந்த எழுத்தை ஏனோதானோவென்று எழுதியதில்லை. அதற்குரிய சிரத்தையைக் கொடுத்திருக்கிறார். தாம் எழுதுவதில் சிறப்பாக எழுதுவதற்குரிய மெனக்கெடலையும் விரும்பிச் செய்திருக்கிறார்.

            தொ.மு.சி.ரகுநாதனும் நா.பா.வும் பொய் பேசுவதை விரும்பியதில்லை என்ற குணாதிசயத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார் சு.ரா. அத்துடன் நா.பா.வுக்கு ஆட்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் இருந்ததில்லை என்பதையும் குறிப்பிட்டுச் சொல்கிறார். அவர் இருந்த நிலைக்கு எத்தனையோ ஆட்களை அவர் போக்கிற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால் நா.பா. அதை ஒருபோதும் விரும்பியது இல்லை என்பது புத்தகத்தைப் படிக்க படிக்க புலனாகும்.

            நா.பா.வுக்கு என்று சில விசித்திரமான பழக்கங்களும் இருந்திருக்கின்றன. ஒரு நாளைக்கு நான்கு முறை குளிப்பது, ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு கால் பாதங்களுக்குக் கிரீம் தடவிக் கொள்வது என்று. இதை அருகில் இருந்து பார்த்திருக்கிறார் சு.ரா. அதையும் இந்தப் புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ஒருமுறை சத்திரம் ஒன்றில் குளிக்க தண்ணீர் இல்லாமல் பக்கத்து வீட்டில் தாவிக் குதித்து குளித்திருக்கிறார் நா.பா. இப்படியான சுவாரசியங்களில் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது என்கிறார் சு.ரா. தாவிக் குதித்து வந்து தங்கள் வீட்டில் குளித்துக் கொண்டிருப்பவர் நா.பா. என அறிந்து வீட்டுக்காரர்களும் அதை பெருந்தன்மையாக அனுமதித்து அதில் பெருமைப்பட்டிருக்கிறார்கள். இதை நா.பா.வின் எழுத்து பிரபல்யத்துக்குக் கிடைத்திருந்த சான்றாகக் கொள்ளலாம்.

            பொதுவாக எழுத்தாளர்கள் தங்கள் அனுபவத்தை எழுத வேண்டும் என்ற கருத்துடையவர் சு.ரா. இதற்கு மாறாக தாம் எழுதுவதை தமக்குரிய அனுபவமாக மாற்றிக் கொள்ள முயன்றவர் நா.பா. என்று அவரைப் பற்றி மதிப்பிடும் சு.ரா. நன்னெறி, நல்லொழுக்கம், நன்னோக்கு இவற்றில் எல்லாம் நா.பா.வுக்கு அலாதியான ஈடுபாடும் பிடித்தமும் இருந்திருக்கிறது என்கிறார். இதுவே அவரது எழுத்திலும் பிரதிபலித்திருக்கிறது என்பதையும் மதிப்பிடுகிறார்.

ஆனால் நா.பா.வுக்கு இருந்த உணவு பலகீனம் அதாவது உணவில் இருந்த கட்டுபாடின்மை அவரை ஐம்பத்து வயதில் வீழ்த்தி விட்டது என்கிறார். அவர் மட்டும் உணவுக் கட்டுபாட்டில் கவனமாக இருந்திருந்தால் இன்னும் இருப்பத்தைந்து வருடங்கள் கூடுதலாகவே வாழ்ந்திருப்பார் என்கிறார் சு.ரா.

            யார் எப்படி வாழ்ந்திருந்தாலும் எப்படிப்பட்ட எழுத்தை எழுதியிருந்தாலும் அவர்களின் வாழ்க்கையை தேர்ந்த நடையில் இலக்கியத்தில் பதிவு செய்ய முடியும் என்பதை இப்புத்தகத்தின் வழியாகச் சு.ரா. காட்டுகிறார் எனலாம்.

நூல் குறிப்பு

நூலாசிரியர்

சுந்தர ராமசாமி

நூல் பெயர்

நா. பார்த்தசாரதி நினைவோடை

பதிப்பும் ஆண்டும்

இரண்டாம் குறும் பதிப்பு 2016

பக்கங்கள்

64

விலை

ரூ. 75/-

நூல் வெளியீடு

காலச்சுவடு பதிப்பகம்,

669, கே.பி. சாலை,

நாகர்கோயில் – 629 001

publisher@kalachuvadu.com

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...