24 Aug 2021

மோகன ராகத்தில் அமைந்த மோகனப் பாடல்கள்

மோகன ராகத்தில் அமைந்த பாடல்கள்

            மகாகவி பாரதியாரின் பெரும்பான்மையான பாடல்கள் திரைப்படங்களில் மோகன ராகத்தில் பாடப்பட்டிருக்கின்றன. நாம் இருவர் திரைப்படத்தில் இடம் பெறும் ‘விடுதலை விடுதலை விடுதலை’ என்ற பாடலும் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் இடம் பெறும் ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ பாடலும் மோகன ராகத்தில் அமைந்தவை.

            ஆன்மிகப் பாடல்களிலும் சிறப்பான பாடல்கள் பல மோகன ராகத்தில் அமைந்திருக்கின்றன. சான்றாகச் சுசீலா அம்மாவின் குரலில் ஒலிக்கும் ‘மாணிக்க வீணை ஏந்தும்’ என்ற பாடல் மோகன ராகத்தில் அமைந்தது.

            முருகன் பாடல்களில் தனித்து ஒலிக்கும் தெய்வம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ‘திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்’ என்ற பாடல் மோகன ராகத்தில் அமைந்தது.

            அன்னை மரியைப் போற்றி ‘அன்னை வேளாங்கண்ணி’ திரைப்படத்தில் இடம் பெறும் ‘நீலக்கடலின் ஓரத்தில்’ என்ற பாடலும் மோகன ராகத்தில் அமைந்து. இந்தப் பாடலைக் கேட்க கீழே சொடுக்கவும்.

 https://youtu.be/Ghp8JG7ARcQ

            சினிமா நட்சத்திரங்களுக்குத் தனித்த நினைவலைகளைத் தரும் வகையில் மோகன ராகத்தில் அமைந்த பாடல்கள் உதவியிருக்கின்றன. அதற்கான சான்றுகளையும் பார்க்கலாம்.

            அன்பே வா என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். சூட்கேஸோடு ‘புதிய வானம் புதிய பூமி’ என்று பாடும் பாடலைக் கேட்டிருக்காதவர்கள் இருக்க முடியாது. அந்தப் பாடல் மோகன ராகத்தில் அமைந்ததுதான். அவருடைய உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் அமைந்த பெரும்பான்மையான பாடல்கள் மோகன ராகத்தில் அமைந்தவை. அப்படத்தின் ‘தங்கத் தோணியிலே’ என்ற திரைப்பாடல் மோகன ராகத்தில் அமைந்த பிரபலமான பாடல். நேற்று இன்று நாளை என்ற எம்.ஜி.ஆரின் திரைப்படத்தில் இடம் பெறும் ‘பாடும் போது தென்றல் காற்று’ என்ற பாடலும் மோகன ராகத்தில் அமைந்தது.

            சிவாஜி கணேசனின் பாவ மன்னிப்பு திரைப்படத்தில் இடம் பெறும் ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை’ திரைப்பாடல் மோகன ராகத்தில் அமைந்தது. பாலும் பழமும் திரைப்படத்தில் இடம் பெறும் ‘ஆலய மணியின் ஓசை’ பாடலும் மோகன ராகத்தில் அமைந்ததுதான்.

            ஜெமினி கணேசனின் கல்யாணப் பரிசு திரைப்படத்தில் இடம் பெறும் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற திரைப்பாடலும் மோகன ராகத்தில் அமைந்தது. இந்தப் பாடலைக் கேட்க கீழே சொடுக்கவும்.

 https://youtu.be/XupZjuPB_fU

            ரஜினிகாந்தை வித்தியாசமான குடும்ப பாங்கான நடிப்பில் வெளிப்படுத்திய ஆறிலிருந்து அறுபது வரை என்ற திரைப்படத்தில் இடம் பெறும் ‘கண்மணியே காதல் என்பது’ என்ற திரைப்பாடல் மோகன ராகத்தில் அமைந்தது. அவரது அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெறும் ‘அண்ணாமலை அண்ணாமலை’ என்ற பாடலும் மோகன ராகத்தில் அமைந்தது.

            கமலகாஸனின் மறக்க முடியாத திரைப்படமான சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில் இடம் பெறும் ‘வான் போலே வண்ணம் கொண்ட’ என்ற திரைப்பாடல் மோகன ராகத்தில் அமைந்தது. ‘நிழல் நிஜமாகிறது’ என்ற திரைப்படத்தில் இடம் பெறும் ‘கம்பன் ஏமாந்தான்’ என்ற திரைப்பாடலும் மோகன ராகத்தில் அமைந்தது.

            பல இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.வி.யிலிருந்து இளையராஜா வரை அத்துடன் தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் வரை மோகன ராகத்தைத் திரைப்படங்களில் அதிகமாகவே திரைப்பாடல்களில் பயன்படுத்தியுள்ளார்கள்.

            பூச்சி ஐயங்காரின் ‘நின்னுக்கோரி’ என்ற வர்ணம் மோகன ராகத்தில் அமைந்தது. அந்த நின்னுக்கோரியை எடுத்துக் கொண்டு அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் ‘நின்னுக்கோரி வர்ணம்’ என்ற இளையராஜா இசையமைத்த பாடல் மோகன ராகத்தில் அமைந்ததுதான். இந்த மோகன ராகத்தில் கரும்பு வில் என்ற திரைப்படத்தில் ‘மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்’ என்ற இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல் அந்த ராகத்தின் சுகானுபவத்தின் உச்சத்தைக் காட்டும். இந்தப் பாடலைக் கேட்க கீழே சொடுக்கவும்.


            ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கருத்தம்மா திரைப்படத்தில் இடம் பெறும் ‘போறாளே பொன்னுத்தாயி’ என்ற பாடலும் மோகன ராகத்தில் அமைந்ததுதான். அவர் பாய்ஸ் திரைப்படத்தில் இசை அமைத்திருக்கும் ‘பால் போலே’ என்ற பாடலும் ‘பாய்ஸை ஏங்க வைக்காதே’ என் ற பாடலும், ஜீன்ஸ் திரைப்படத்தில் இடம் பெறும் ‘வாராயோ தோழி’ என்ற பாடலும் மோகன ராகத்தில் அமைந்தவை. இவை ஒரு வகை என்றால் சிறைச்சாலை திரைப்படத்தில் இடம் பெறும் ‘ஆலோலம் கிளி தோப்பிலே’ என்ற மோகன ராக இசைப்பாடல் தனித்த சுகத்தைத் தராமல் போகாது.

            காதல் கோட்டை திரைப்படத்தில் இடம் பெற்ற வெகுஜன  துள்ளல் பாடலான ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ பாடலும் மோகன ராகத்தில் அமைந்தது. மெல்லிசைப் பாடல்களை விரும்புவோர் தங்களை அறியாமல் முணுமுணுக்கும் இதயக்கோயில் திரைப்படத்தில் இடம் பெறும் ‘இதயம் ஒரு கோயில்’ என்ற திரைப்பாடலும் மோகன ராகத்தில் அமைந்தது.

            நாகேஷ் கதை நாயகராக நடித்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் சௌகார் ஜானகியும் ஸ்ரீகாந்தும் நகைச்சுவையாகப் பாடும் வகையில் அமைந்திருக்கும் ‘அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா’ என்ற திரைப்பாடலும் மோகன ராகத்தில் அமைந்தததுதான்.

            அத்துடன் பலரும் ஏதேனும் ஒருவேளையிலாவது தன்னை அறியாமல் மனதுக்குள் பாடிக் கொள்ளும் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’ என்ற தேடி வந்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் இடம் பெறும் பாடலும், ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ என்ற அண்ணனுக்கு ஜே என்ற திரைப்படத்தில் இடம் பெறும் பாடலும் மோகன ராகத்தில் அமைந்தவை.

கிராமங்களில் திருமண நடைபெறும் போதெல்லாம் போடப்படும் ‘காதல் கடிதம் வரைந்தேன்’ என்ற சேரன் பாண்டியன் திரைப்படத்தில் இடம் பெறும் பாடலும் மோகன ராகத்தில் அமைந்ததுதான். இந்தப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் மனதை மயக்கும் ராகம் மோகனம் என்பது சொல்லாமல் புலப்படும்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...