30 Sept 2019

மண்ணுக்குள்ள சாபம் இருக்கு!



செய்யு - 223
            மனசு இருக்கே அதுக்கு ஒரு விசயம் நல்ல விதமாகவும் படும். கெட்ட விதமாவும் படும். ஒரு நேரத்துல நல்ல விதமா சிந்திக்கும். இன்னொரு நேரத்துல எதை நல்ல விதமா சிந்திச்சுச்சோ அதை அப்படியே திருப்பிப் போட்டு கெட்ட விதமா சிந்திக்கும். சுப்பு வாத்தியாரால மவன் பத்தாயிரத்தைத் திடீர்னு தூக்கிக் கொடுத்ததைப் புரிஞ்சிக்கவும் முடியல, புரிஞ்சிக்காம இருக்கவும் முடியல. அவரு மனசு இப்படியும் அப்படியுமா சிந்திச்சு அலை பாயுது. இனிமேலும் வீட்டுக்குள்ள உட்காந்துகிட்டு மவனைப் பத்தி கோழிக் கனா கண்டுட்டு இருக்கிறது நியாயமில்லேன்னு தோணுது. அவரு விநாயகம் வாத்தியாரைப் போட்டு நையி நையின்னு நச்சரிச்சதுல அவரு, "வாங்க வாத்தியாரே! லீவு போட்டுட்டே போயிப் பாத்துட்டு வந்துடுவேம்! இனுமே நீங்க இதெப் பத்தி பேசுனீங்கன்னா எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும் போலருக்கு!" அப்பிடிங்றார். சுப்பு வாத்தியார் எதிர்பார்த்தது அதைத்தானே.
            ரெண்டு பேரும் லீவு லெட்டரை எழுதி வெச்சிட்டு விநாயகம் வாத்தியாரோட டி.வி.எஸ். சுசுகி பைக்ல அவரு முன்னால உட்காந்து ஓட்ட, சுப்பு வாத்தியாரு பின்னால உட்காந்துக்க திருவாரூரு தெற்கு வீதியை நோக்கிப் போறாங்க. வண்டி ஓட்டுறதுல விநாயகம் வாத்தியாரு பெரிய ஆளு. அதெ நாம்ம முன்னாடியே பார்த்திருக்கோம். இருந்தாலும் இப்போ போறதப் பத்தி ஒரு சில வார்த்தைகளாவது சொல்லலன்னா எப்படி! அப்படியே ரதத்துல உட்கார்ந்துருக்குது போல ஆடாம, அசங்காம, பள்ளம் மேடுல்ல அப்படியே ஸ்பிரிங் போட்ட மெத்தையில உட்காந்திருக்கிறது போல மெல்ல ஏத்தி, இறக்கி அப்படிப் ஓட்டுவாரு அவரு. சக வாத்தியார்மார்களே அவரு ஓட்டுற வண்டியில பின்னாடி உட்கார்ந்துட்டுப் போறது கூத்தியா மடியில உட்கார்ந்திருக்குறது போல சொமாக இருக்கும்னு வேற பேசிக்குவாங்கன்னா பாத்துக்குங்களேன்.
            தெற்கு வீதி முனங்குல விநாயகம் வாத்தியாரு வண்டியைக் கொண்டாந்து நிப்பாட்டுன்னா, அங்க ஒரு பொம்பள வீதியில கெடக்குற மண்ணையெல்லாம் ரெண்டு கையால எடுத்து, "மண்ணாப் போயிடுவீங்கடா! நாசமா போயிடுவீங்கடா! எத்தன வூட்டு தாலியறுத்து இப்படி பொழைக்குறீங்களடா! நாசமா போங்க! மண்ணா போங்க!" அப்பிடின்னு தலைவிரிக் கோலமா பைத்தியம் பிடிச்சா கணக்கா கத்துது.
            "என்ன வாத்தியாரே இது! மவன் வேலைப் பார்க்குற அழகைப் பார்க்கப் போற ஆரம்பமே இப்டி இருக்கு?" அப்பிடிங்றாரு விநாயகம் வாத்தியாரு. அப்படிச் சொல்லிப்புட்டு, "என்னப்பா இது! மனுநீதிச் சோழன் ஆண்ட திருவாரூக்கு வந்தச் சோதனே!" அப்பிடிங்றாரு.
            இதைக் கேட்ட மாத்திரத்துல சுப்பு வாத்தியாரு மனசு திக்கு திக்குங்குது. "ஏம் இந்தப் பொம்பளே! இப்படி நடு வீதியில நின்னுகிட்டு மண்ண வாரி இறைக்குது? அதுவும் மவன் வேலையைப் பார்க்க வர்ற இந்த நேரத்துல! நேரமே சரியில்ல!" அப்பிடின்னு நெனைச்சுக்கிட்டு, "டவுன்னான்ன இப்படி ஆயிரம் இருக்குத்தாம் செய்யும்!" அப்பிடின்னு வேற தனக்குத் தானே சமாதானம் செஞ்கிக்குறாரு அவரு.
            "இங்கதான தொண்டாமுத்தூரு கேப்பிட்டல்னு ஏதோ சொன்னான் விகடு. யாரக் கேட்டாலும் வேற தெரியும்ணான்னே. யாரைக் கேட்குறது?" அப்பிடின்னு யோசிக்சுகிட்டே அவரு வண்டிய நிப்பாட்டுன்ன பக்கத்துல டீ ஆத்திகிட்டு இருக்கற டீக்கடைக்காரர்கிட்ட, "அண்ணே! இங்க தொண்டாமுத்தூரு கேப்பிட்டல்னு..." அப்பிடின்னு விசாரிக்கிறாரு விநாயகம் வாத்தியாரு.
            "அதோ அந்தப் பொம்பள மண்ண வாரி வீசுதுல்ல அதுக்கு எதுத்தாப்புலப் பாருங்க. பச்சைக் கலரு போர்டுல வெள்ளை நிறத்துல கொட்டையா பேரு எழுதித் தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்னு போர்டு வெச்சிருக்கானுங்க பாருங்க!" அப்பிடிங்றாரு டீ ஆத்திட்டு இருந்தவரு.
            "அடச் சே! கண்ணுக்குத் தெரியுற மாரி பெரிய போர்டத்தாம் வெச்சிருக்காங்க. அத கவனிக்காமப் போயிக் கேட்டுப்புட்டோமே!" அப்பிடின்னு சுப்பு வாத்தியார்கிட்ட மெல்லமா சொல்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "அந்தப் பொம்பளய பார்த்ததுல கவனம் பெசகிப் போயிட்டுது வாத்தியாரே! வெறேன்ன!" அப்பிடிங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "இஞ்ஞ அப்பிடியே ஒரு டீ அடிச்சிட்டு, அந்த பொம்பள மேட்டரையும் ஒரு விசாரணையைப் போட்டுட்டு வெகடுவைப் போயிப் பார்க்கலாமா?" அப்பிடிங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            சுப்பு வாத்தியாரு தலைய மட்டும் அசைச்சுகிறாரு.
            "அண்ணே! ரண்டு டீ!"ன்னு விநாயகம் வாத்தியாரு ரெண்டு விரலைக் காட்டிட்டு, "யாருண்ணே அது? இப்படி மண்ண வாரி வீசிகிட்டு நிக்குது? என்னாண்ணே விசயம்?" அப்பிடிங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "மாசத்துக்கு ஒண்ணு இந்த மாரி மண்ண அள்ளி வீசிகிட்டுப் போவும் சார் இஞ்ஞ. அந்தா நீங்க விசாரிச்சீங்கயில்ல தொண்டாமுத்தூரு கேப்பிட்டல்னு. அவனுங்க ஷேர் மார்க்கெட்டு வெச்சிருக்கானுங்களாம். அதுல போயி ஷேரை வாங்கி விக்குறேன்னு பொண்டாட்டியோட தாலிய வரை அறுத்து புருஷங்காரனுவோ அழச்சிப்புடறானுவோ. அழிச்சுபுட்டு வீட்டை விட்டு ஓடிப் போயிடுறானுவோ. அதுல பாதிக்கப்பட்ட பொம்பளைங்க இங்க வந்து இப்பிடித்தாம் சார் வந்து மண்ண வாரி இறைச்சுகிட்டு. மாசத்துக்கு ஒண்ணு இப்படி வந்து மண்ண வாரி எறைச்சிட்டுப் போயிடும் சாரே. த்துப்பூ! ன்னா பொழப்பு சாரு இது? உள்ளப் போயிப் பாருங்களேன்! ஏ.சி. போட்டு வெச்சிருக்கானுவோ. கம்ப்யூட்டர ஓட விட்டு வெச்சிருக்கானுவோ. ஆர்லிக்ஸ், பூஸ்ட்டு, பப்ஸ்ன்னு வேண்டிய வாங்கிக் கொடுக்குறானுவோ. எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்துப்புட்டு கோவணத்தை வரை உருவிட்டு விட்டுருவானுவோ!" அப்பிடிங்றார் டீ ஆத்துறவர். அவரு ஆத்துன டீயை விட அவரு பேசி விட்ட சங்கதி செம சூடா இறங்குது சுப்பு வாத்தியாரு மனசுக்குள்ள.
            சுப்பு வாத்தியாருக்கு அப்படியே தூக்கி வாரிப் போடுது. நெஞ்செல்லாம் படபடன்னு அடிச்சுக்குது. டீயைக் குடிக்குறதுக்கு முன்னாடியே அவருக்கு வியர்த்து விறுவிறுத்துக் கொட்டுது.
            "இந்தாங்க சார் ரண்டு டீ!"ன்னு டீ ஆத்துறவரு ரண்டு டீயைக் கிளாஸ்ல நீட்டுறாரு.
            விநாயகம் வாத்தியாரு ரண்டையும் வாங்கி ஒண்ண தங் கையில வெச்சிகிட்டு, இன்னொன்ன சுப்பு வாத்தியார்கிட்ட நீட்டுறாரு.
            சுப்பு வாத்தியாரு அதை வாங்க கையை நீட்ட மாட்டேங்றாரு. அவரு பேயடிச்சவன் நிப்பாம் பாருங்க. அது போல நிக்குறாரு.
            "வாத்தியார்ரே! இதெ வாங்கிக் குடிங்க!" அப்பிடிங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            சுப்பு வாத்தியாரு கண்ணு கலங்குது. அதைப் புரிஞ்சகிட்டவரு மாதிரி அதுக்கு மேல அந்த டீ கிளாஸை நீட்டாம ரண்டு கிளாஸ்ல இருந்த டீயையும் விநாயகம் வாத்தியாரே குடிச்சிட்டு காசை எடுத்துக் கொடுக்குறாரு.
            "செரி வாங்க வாத்தியாரே! உள்ளப் போயி பார்ப்போம்!" அப்பிடிங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "வாணாம்! வீட்டுக்குப் போயிடலாம்! நம்மாள முடியல. மயக்கமா வாரது போல இருக்கு!" அப்பிடிங்றாரு சுப்பு வாத்தியாரு.
            விநாயகம் வாத்தியாருக்குக் குரலெல்லாம் தழுதழுக்குது. "ஒண்ணும் வருத்தப்படாதீங்க வாத்தியா..."ன்னு அவரால முழுசா சொல்ல முடியல. ஒரு வழியா சுப்பு வாத்தியார தேத்தி வீட்டுல கொண்டாந்து விட்டுட்டுப் போயிடுறாரு.
            இப்படி மவனை வேலைப் பார்க்குற இடத்துல பார்க்கப் போயி, பார்க்காமலே திரும்பி வந்த சுப்பு வாத்தியாரு அப்போலேந்து காய்ச்சல்ல படுத்தவருதாம். ரெண்டு மூணு நாளைக்கு எழுந்திரிக்கல.        
*****

வாழ்க்கையின் ஏழு அதிசயங்கள்



            வாழ்க்கையில் இன்னும் அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அநத அதிசயங்களைப் பட்டியல் போட்டால்...
            1) எங்கள் ஊர் பெட்டிக்கடைக்கார அண்ணாச்சி இன்னும் லேண்ட் லைன் போன்தான் வைத்திருக்கிறார். அதிலே பேசி அதிலே எல்லாவற்றையும் முடித்து விடுகிறார். ஏன் அண்ணாச்சி இன்னும் கைபேசி வாங்கவில்லை என்றால், அதெல்லாம் நமக்கு எதுக்கு தம்பி? என்கிறார்.
            2) அமேசான் காட்டு தீப்பிடித்து அழிந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். நம் சொட்டைத் தலை நண்பர் இன்னும் எப்படி அமேசான் காட்டிலிருந்து தயாராகி வந்து கொண்டிருக்கும் தைலத்தை வாங்கித் தடவிக் கொண்டிருக்கிறார்.
            3) ஏன் நண்பா! நான் துணி துவைக்கும் போது மட்டும் மழை வருகிறது என்றேன். நான்கு மாதத்துக்கு ஒரு முறை ‍துவைத்தால் அப்படித்தான் வரும். இனிமேலாவது தினந்தோறும் துவைத்துக் கட்டு என்கிறான்.
            4) டீக்கடையில் உட்கார்ந்து பேசும் போது சூடாக இருக்கிறது. வீட்டுக்கு வந்ததும் ஆறி விடுகிறது அரசியல்.
            5) எவ்வளவுதான் அதிசயத்தைத் தேடினாலும் அமைதிதான் அதிசயம். ஏதாவது ஒன்று நடந்து விடாதா? தொழிலில் மாற்றம் - பிள்ளையின் படிப்பில் மாற்றம் - குடும்பத்தில் மாற்றம் - குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு - வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை - இப்படி ஏதாவது? அப்படி அது நிகழ்ந்த பின் அடுத்து மனசு தேடுவது அமைதியைத்தான். எல்லாம் நடந்து விட்டதே! மனம் அமைதியாக இருக்க வேண்டியதுதானே! இருக்காது. ஆகவேதான் எவ்வளவுதான் அதிசயத்தைத் தேடினாலும் அமைதிதான் அதிசயம்.
            6) கடவுள் வந்திருக்கிறார். சிசிடிவி கேமரா வேலை செய்யாமல் போய் விட்டது.
            7) தண்டனைகள் இல்லை என்று சொல்லாதே. அளவுக்கு மீறித் தின்றவன் சுகர் வந்து அலைகிறான். அளவைத் தாண்டுபவன் அனுபவித்துச் சாவான்.
*****

29 Sept 2019

சத்திய சோதனை



செய்யு - 222
            சுப்பு வாத்தியாரு திட்டைப் பள்ளியோடத்துக்குக் கிளம்புறாரு. செய்யு மணமங்கலம் பள்ளியோடத்துக்குக் கிளம்புறா. அவங்களுக்கு முன்னாடியே விகடு வேலைக்குக் கிளம்புறான். சுப்பு வாத்தியாரு வாழ்க்கையில ரொம்ப நாளைக்குப் பெறவு இப்பதாம் ஒரு வசந்தத்தைப் பார்க்குறாரு. சுமைகள் கொஞ்சம் கொஞ்சமா இறங்குறது அவருக்குக் கொஞ்சம் இதமா இருக்கு.
            விகடு மாசா மாசம் கொண்டாந்து கொடுக்குற ஐயாயிரம் வாங்குன கடன்களைக் கொஞ்சம் கொஞ்சமா அடைக்குறதுக்கு அவருக்கு உதவியா இருக்கு. அதுலதாம் குடும்பச் செலவுகளைச் சிரமம் இல்லாம் பார்த்துக்கிறாரு. அவரு சம்பளம் முழுசும் சொசைட்டு லோனுக்கும், பேங்குல வாங்குன பெர்சனல் லோனுக்குமா கோவுது. அதுக்கு இடையில கைமாத்தா வாங்குன கடன் ஒண்ண அடைக்கிறதுக்குத் திடீர்னு பத்தாயிரம் தேவையாயிருக்கேன்னு அவரு கையைப் பிசைஞ்சுகிட்டு உட்காந்துருக்காரு. அதைப் பார்க்குற விகடு அவனாப் போயி பத்தாயிரம் ரூவாய்ய கொடுக்குறான். சுப்பு வாத்தியாருக்கு முதன் முதலா இவன் மேலயும், இவன் பார்க்குற வேல மேலயும் சந்தேகம் தட்டுது.
            வாங்குற சம்பளத்த முழுசுமா கொடுத்திடுறதா சொல்றான். அதிலேந்து தினமும் முப்பது ரூவாயை அவருதான் வெங்குகிட்ட கொடுத்து வேலைக்குக் கிளம்புறப்ப கொடுக்கச் சொல்றாரு. அந்தக் காசைப் பைசா காசு செலவு பண்ணாம சேர்த்து வெச்சிருந்தாலும் ஆறேழு மாசத்துக்குள்ள எப்படி பத்தாயிரம் சேர்க்க முடியும்னு அவருக்கு யோசனை போகுது.
            நம்ம மவன்னாலும் எங்க சம்பாதிக்கிறான்? எப்படிச் சம்பாதிக்குறான்? அப்பிடிங்றதைத் தெரியாம இருந்துடக் கூடாதுன்னு நெனைக்குறாரு சுப்பு வாத்தியாரு. ஒரு நேரம் போல ஒரு நேரம் இல்லாம தப்பான வழியில போயிட்டு இதைச் சம்பாதிச்சிருந்தான்னா... அதை முளையிலயே கிள்ளிடணும் இல்லையா!முகத்தைப் பார்த்துட்டு பத்தாயிரம் பணத்தைத் தூக்கிக் கொடுக்குறான்னு கொடுக்குறப்பல்லாம் ஆசை ஆசையா பல்ல இளிச்சிகிட்டு வாங்கிகிட்டு பிற்பாடு ஏதாச்சிம் ஆபத்துல மாட்டிகிட்ட பெறவு முன்னாடியே கவனிக்காம விட்டுட்டேன்னு இருந்துடக் கூடாது இல்லையா! மவன் இதை நல்ல விதமா சம்பாதிச்சு இருந்தாலும் சரிதாம், இல்ல கெட்ட வழியில கொண்டாந்து இருந்தாலும் சரிதாம். விசாரிச்சுப் புடணும். அவன் பார்க்குற வேலையை நேரிலயும் போயிப் பாத்துப்புடணும்னு ஒரு முடிவு கட்டிக்கிறாரு. அந்த முடிவோட இதை இப்படியே விடக் கூடாதுன்னு, அவனைக் கூப்பிட்டுக் விசாரணையைப் போடுறாரு, "இந்தப் பத்தாயிரம் பணம் எங்கேந்து வந்துச்சுடாம்பீ?" அப்பிடின்னு.
            "சம்பாதித்தப் பணம்தான்!" அப்பிடிங்றான் விகடு.
            "அதாங் சம்பாதிக்குற பணத்த முழுசா கொடுத்திடுறீயேடா தம்பீ! பெறவு எப்பிடிடாம்பீ!" அப்பிடிங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "எங்க வேலை அப்படி. எப்படி வேணாலும் பணம் வரும்."
            "அதாம்டாம்பீ! எப்படி வருதுன்னு கேக்குறேம்?"
            "வியாபாரத்துல லாபம் நிறைய கிடைத்தால் வாடிக்கைப் பண்றவங்க ஆயிரம் ஐநூறு, நூறுன்னு கொடுப்பாங்க. நல்லா வியாபாரம் நடந்தா ஆபீஸ்லயும் தனியா பணம் கொடுப்பாங்க!"
            "ஓ! அப்பிடியா! நல்ல பணந்தானே?"
            "உழைத்த பணம்ப்பா!"
            அவ்வளவுதான். அதுக்கு மேல சுப்பு வாத்தியாரு எதுவும் கேட்கல. விகடுவும் மேற்கொண்டு எதுவும் சொல்லல. அவன் பேச்சை அவரு நம்புறாரு. அப்படித்தாம் விகடுவுக்கு அவரோட முகம் காட்டிக் கொடுக்குது.
            சுப்பு வாத்தியாரு மனசுல பெரும்படியான சந்தேகம் போயிருந்தாலும், மனசுல அங்க இங்க கொஞ்சம் சந்தேகம் ஒட்டியிருக்கு. இருந்தாலும் இப்படி இந்த வயசுல மவன் வேலை செஞ்சு சம்பாதிக்கிற ஆபீஸையும், மவன் வேலை பார்க்குற அழகையும் பார்க்கணும்ங்ற ஆசையும் சுப்பு வாத்தியாருக்கு வருது. அவன் திருவாரூர்ல எந்த இடத்துல வேலை பார்க்குறாங்றத மவங்கிட்ட கேட்குறதுக்கு அவருக்குத் தயக்கமா இருக்கு. இந்த இடத்துலதாம் அவரோட ஆத்ம தோஸ்த்தான விநாயகம் வாத்தியாரைத் துணைக்குக் கூப்பிட்டுக்கிறாரு.
            அன்னிக்கு ராத்திரியே சங்கதி ஆரம்பமாகுது. விகடு வேலை விட்டு வீட்டுக்கு வர்ற நேரத்துக்கு முன்னாடியே வந்து விநாயம் வாத்தியாரு சுப்பு வாத்தியார் வீட்டுல வந்து உட்கார்ந்து கிடக்குறாரு.
            விகடு சைக்கிள்ல வந்து இறங்குன உடனேயே எதார்த்தமா வீட்டுக்கு வந்தது போல விநாயகம் வாத்தியாரு, "வா விகடா!" அப்பிடிங்றார்.
            இவனும், "வாங்க! வாங்க! வாங்கய்யா!" அப்பிடிங்றான்.
            "ச்சும்மா அப்பாவ பாத்துட்டுப் போவலாம்னு வந்தேங்! நல்ல நேரம் நீயும் வந்துட்டே. ஒன்னயும் பார்த்த மாதிரி ஆயிடுச்சு!" அப்பிடிங்றார் விநாயகம் வாத்தியார்.
            "சரிங்கய்யா! நீங்க எப்ப வேணாலும் வரலாம். அதுக்கு ஏம் எங்கிட்ட அனுமதி கேட்குற கணக்கா சொல்றீங்களேய்யா!" அப்பிடிங்றான் விகடு.
            "வேலையெல்லாம் எப்பிடிப் போகுது!"
            "ம்! நல்லா போகுதுங்கய்யா!"
            "அப்பா என்னெம்மோ வேலைன்னு சொன்னாங்களே..." என்று நெற்றியைச் சுருக்கிக் கொண்டு இழுக்கிறார் விநாயகம் வாத்தியார்.
            "பங்குத் தரகு நிறுவனத்துல பங்கை வாங்கி, வித்துக் கொடுக்கற வேலை!"
            "எந்த இடத்துல வேல?"
            "திருவாரூரு தெற்கு வீதி முனங்கு இருக்குலங்கய்யா! அங்க தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்."
            தனக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்த வாத்தியார் இல்லையா! தங்கிட்ட படிச்ச பையன் என்ன வேலை பார்க்குறான்னு தெரிஞ்சிக்க ஆசை இருக்காதா! அப்பிடிதான் விநாயகம் வாத்தியார் கேக்குறதா நினைச்சுக்கிறான் விகடு.
            "சம்பளம்லாம் எப்பிடி?" அடுத்தப் பிடியைப் போடுறார் விநாயகம் வாத்தியாரு.
            "மாசம் ஐந்தாயிரங்கய்யா!" அப்பிடிங்றான் விகடு.
            "அப்பா அப்பைக்கப்ப சொன்னத பார்க்குறப்ப கூட இருக்கும் போலருக்கே!" என்று சந்தேகமாக இழுக்கிறார் விநாயகம் வாத்தியார்.
            "மாசம் சம்பளம் அவ்வளவுதாங்கய்யா! வாடிக்கைப் பண்றவங்க மூலமா நூறு, இருநூறுன்னு ஆயிரம் வரைக்கும் கொஞ்சம் முன்ன பின்ன கிடைக்கும். வியாபாரம் அதிகமா இருந்தா அதுக்குத் தனியா நிறுவனத்துலேந்து கொடுத்துடுவாங்கய்யா! நாம்ம மாச சம்பளத்த மட்டுந்தாங்கய்யா வீட்டுல கொடுக்குறது. அதை அதாங்கய்யா அதை கையில வெச்சிக்கிறது!"
            "ரோம்ப சந்தோஷம்ப்பா! ஒன்னயப் பத்தின கவலைதாம் அப்பாவுக்கு நிரம்ப இருந்துச்சு. இப்போ சந்தோஷமா இருக்காரு. ஒஞ் சம்பாத்தியத்துலதாம் குடும்பச் செலவைுயம் பார்த்துகிட்டு, கடன உடன வாங்குனத கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிட்டு இருக்குறதா ஒங்கப்பா சொல்றப்ப மனசு நெறைவா இருக்குப்பா! ஒன்னயப் பத்தின கவலெ இப்போ விட்டுச்சு ஒங்கப்பாவுக்கு!"
            இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே நிக்குறான் விகடு.
            "ஆபீஸூ தெற்கு வீதியில எங்கச் சொன்னே?" ன்னு மறுபடியும் கேட்குறாரு விநாயகம் வாத்தியார்.
            "அந்த முனங்குல தொண்டாமுத்தூர் கேப்பிட்டல். அங்க வந்து யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க. அது தெற்கு வீதிக்கு முக்கியமான இடம்ங்கய்யா!" அப்பிடிங்றான்.
            "தெற்கு வீதி முனங்கு. தொண்டாமுத்தூரு கேப்பிட்டலு!" விகடு சொன்னதை அப்படியே மனசுக்குள்ள சொல்லிப் பார்த்துக்குறது போல சொல்லிக்கிறாரு விநாயகம் வாத்தியார்.
*****

கவலைப்பட்டால் நீயும் ஒரு விவசாயி!


கவலைப்பட்டால் நீயும் ஒரு விவசாயி!
            முதலில் காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று கவலையாக இருக்கிறது. காவிரியில் தண்ணீர் வந்தும் வெண்ணாற்றில் பாலம் மற்றும் மதகுகள் கட்டும் வேலை முடியவில்லையே என்று கவலையாக இருக்கிறது. அந்த வேலை முடிந்த பிறகுதானே வெண்ணாற்றில் தண்ணீர் விடுகிறார்கள். வெண்ணாற்றில் தண்ணீர் வந்தும் மேல்மடைக்காரன் தண்ணீர் விடுவானா என்று கவலையாக இருக்கிறது. இதெல்லாம் முடிந்த பிற்பாடு நான்கு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, நான்கே நாளில் பெய்து வெள்ளமாகி விடக் கூடாது என்று கவலையாக இருக்கிறது. இப்படி எதற்கெடுத்தாலும் கவலைதான். என்ன செய்வது? கவலைதானே விவசாயிகளின் வாழ்க்கை. தொழிற்சாலையில் உருவாக்குவது போல பாதுக்காப்பாகவா நெல்மணிகளை விளைவிக்க முடிகிறது? அல்லது இந்த நாளில் ஆரம்பித்து இந்த நாளில் என்று கட்டு செட்டாவாகா முடிக்க முடிகிறது? விதைத்தது, நட்டது வளர்ந்து வரும் நாள் வரை காத்திருந்துதானே அறுவடை பண்ண முடிகிறது!
*****
மந்த நிலையின் சுபிட்ச நிலைகள்
            பொருளாதார மந்தநிலையெல்லாம் நாமாக உருவாக்கிக் கொள்வது என்று நினைக்கிறேன். அப்படி, எப்படி சொல்லி விட முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். எந்த பொருளாதார மந்த நிலையிலாவது டாஸ்மாக் விற்பனை குறைகிறதா? பீடி, சிகெரட் புகைப்பது குறைகிறதா? போதைப் பாக்குகளின் விற்பனைதான் சரிகிறதா? தின்ன சோறு இல்லை என்றாலும் குடித்து விட்டு வருகிறார்கள். ஊதித் தள்ளி விட்டு வருகிறார்கள். வாய்க்குள் போட்டு மென்று விட்டு வருகிறார்கள். அதற்கு மட்டும் காசு எப்படியோ கிடைத்து விடுகிறது. ஏதோ ஒரு மன வேகம்தானே அப்படி அதை நோக்கி உந்தித் தள்ளுகிறது. அப்படி அதை நோக்கி ஒரு மனவேகம் உந்தித் தள்ளும் போது பொருளாதார மந்தநிலையை நோக்கி ஒரு மனவேகம் ஏன் உந்தித் தள்ளக் கூடாது?
            இதில்...
            நம் மக்கள் இருக்கிறார்களே! குடித்து விட்டு வருபவர்களைப் பார்த்து பயந்து நிற்பார்கள். சுயமாக ஒன்றை முயன்று பார்ப்பவரைப் பயமுறுத்தி விடுவார்கள்! ஏன் இப்படி?
*****

28 Sept 2019

நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடுவுல...



செய்யு - 221
            பொதுவாகவே எந்தத் துறையிலயும் சம்பாதிச்சுத் தலையெடுத்தவங்க கம்மியாத்தாம் இருப்பாங்க. நஷ்டப்பட்டு சின்னாபின்னவங்கதாம் அதிகமாக இருப்பாங்க. சம்பாதிச்சுத் தலையெடுத்த ஒண்ணு ரண்டு பேரைப் பார்த்துதாம் அந்தந்த துறையிலயும் விட்டில் பூச்சிக் கணக்கா மனுஷங்க போயி விழுறாங்க.
            ஷேர் மார்கெட்டுல பெரிசா யாரும் சம்பாதிச்சிருக்காங்கங்ற சந்தேகம் ஒங்களுக்கு வர்றது போல விகடுவுக்கும் அடிக்கடி வரும். உலக அளவுல வாரன் பப்பெட்டை அப்படி ஒரு ஆளா சொல்லுவாங்க. அப்படி ஒரு ஆளைத்தான்னே சொல்றாங்க. இந்தியாவுல ராஜேஷ் ஜின்ஜூவாலா அப்படிங்றவரை அப்படிச் சொல்லுவாங்க. இவங்கள தவிர இன்னும் ஒரு சில பேரைத்தாம் சொல்லுவாங்க. திருவாரூர்ல அப்படி யாராவது இருக்காங்களா?ங்ற கேள்வி விகடுவோட மனசை ரொம்ப நாளா உறுத்திகிட்டு இருந்துச்சு. ஏன்னா இங்க அவனுக்குத் தெரிஞ்சி நஷ்டம் பண்ண ஆளுங்கதாம் அதிகம். நஷ்டம் பண்ணிட்டு இனுமே ஷேர் மார்கெட் பக்கமே தலை வெச்சிப் படுக்க மாட்டேன்னு சபதம் பண்ணிட்டுப் போறவங்க ரெண்டு வாரத்துல திரும்பி வருவாங்க.  அதிலயும் அக்கெளண்ட்டைல்லாம் குளோஸ் பண்ணிட்டுப் போயித் திரும்ப வந்து அக்கெளண்டை ஆரம்பிச்சு ஒடனே டிரேட் பண்ணணும்னு அடம் பிடிக்கற ஆளுங்களும் இருக்காங்க.
            ஷேர் டிரேடிங் ஆபீஸ்ல வேலை பார்க்குற ஆளுங்களுக்கு மத்த மத்த ஆபீஸ்லயும் தொடர்பு இருக்கும். அதெ வெச்சி ஷேர் மார்க்கெட்டுல நல்ல லாபம் பார்த்த ஒரு ஆளையாவது கண்டுபிடிக்கணும்னு நெனைக்குறான் விகடு. அப்படி ஒரு ஆளு அவங் கண்ணுக்குத் தட்டுபடவே மாட்டேங்றாரு. ஆகா தப்பா ஒரு வேலையைத் தேர்ந்தெடுத்து அதுல வேலை பார்த்துட்டு இருக்கோமோங்ற கவலெ இப்போ சில நாட்களா அவனுக்கு வர்ற ஆரம்பிக்குது. வர்றவங்க எல்லாம் நஷ்டப்படுற ஒண்ணுல ஆர்டர் போடுற வேலையில இருக்கோமோங்ற குற்ற உணர்ச்சி அவனெ வாட்டுது. அதை லெனின்கிட்டயும் சொல்றான். அதையெல்லாம் பார்த்தா நாம்ம பொழைக்க முடியாது அப்பிடின்னு சொல்றாரு லெனின். "நாம்ம போயி ரோட்டுல போற ஆள பிடிச்சா ஆர்டரப் போடச் சொல்றோம். அவங்களா வர்றாங்க, அவங்களா போடறாங்க. அதுக்கு நாம்ம என்ன பண்ண முடியும் வெகடு?" அப்பிடிங்றார் கோபி.
            "டேய் வெகடு பய்யா! ஒனக்கு ஐஸ்கிரீம், செல்வீஸ்ல ட்ரீட், ராயல் பார்க்ல லஞ்ச்லாம் வேணுமா இல்லையா!" அப்பிடின்னு சுபா கேலி பண்ணிச் சிரிக்குது.
            சாராயக் கடையைத் தொறந்து வெச்சா குடிக்கிறவன் வந்து குடிச்சிட்டுதாம் போவான். சாராயக் கடையைத் தொறக்கலைன்னா எவன் குடிக்க வரப் போறான்? அது போல டிரேடிங் ஆபீஸ்ஸைத் திறந்து வெச்சு அதுல நாம்ம வேலை பார்க்குறதாலதான்னே வர்றவங்க வந்து டிரேட் பண்ணி நஷ்டப்பட்டுப் போறாங்க அப்பிடின்னு யோசனைப் போகுது விகடுவுக்கு. அதையும் லெனின்கிட்டே சொல்றான்.
            "லிட்டில் பாய் விகடு! நாம்ம ஆபீஸ் போடாட்டியும் எவனாவது ஆபீஸ் போட்டு நடக்குறது நடந்துகிட்டுதாம் இருக்கும். திருவாரூர்ல எட்டு ஆபீஸ் இருக்குத் தெரியும்ல. எட்டுலயும் கூட்டம் அள்ளுது. நமக்கு அள்ளோ அள்ளுன்ன்னு அள்ளுது. நாம்ம இந்த ஒரு ஆபீஸைக் கொறைச்சாலும் மித்த ஏழு ஆபீஸ்ல டிரேட் பண்றவங்க போயிச் சேந்துப்பாங்களே தவிர இதுக்கு வந்தவங்க இதை விட்டுட்டு வெளியில போனதா சரித்திரமே இல்ல. ரொம்ப போட்டுக் கொழப்பிக்காம வேலையைப் பாருங்க சிந்தனையாளர் விகடு அவர்களே!" அப்படிங்றார் லெனின்.
            இந்த உறுத்தலோட விகடு ஆர்டர் போட்டுகிட்டு இருக்கிறப்ப, சுபாகர்ன்னு ஒருத்தரு வராரு. அவரோட கோட் டி.வி.ஆர். எஸ். ஒன். இத்தன நாளுல்ல விகடு அவரை ஆபீஸ்ல பார்த்ததேயில்ல. ஏன் கோபி, சுபா கூட பார்த்ததில்ல. அவரைப் பார்த்தவரு ஆபீஸ் ஆரம்பிச்சதிலிருந்து இருக்குற லெனின் மட்டும்தான். சுபாகரைப் பார்த்த உடனே, "வாங்க எஸ். ஒன். சார்!" அப்பிடிங்றார் லெனின்.
            "எனி பையிங் ஆர் செல்லிங்?" அப்பிடிங்றார் லெனின்.
            "நத்திங்! சும்மா பார்த்துட்டுப் போவலாம்னுதான் வந்தேன்." அப்பிடிங்றார் சுபாகர். அவர் சொல்லுறதுல அப்படி ஒரு பணிவு, எளிமை எல்லாம் இருக்கு. உட்கார்றத கூட நாற்காலிக்கு வலிக்காம ரொம்ப நாசுக்கா உட்காருறாரு.
            "எதாச்சிம் ஸ்கிரிப்ட் பார்க்குறீங்களா சார்!" அப்பிடிங்றார்.
            "பார்மா செக்டார்ஸ் அண்ட் மார்கெட்டிங் செக்டார்ஸ். வோக்கார்ட் பார்மா அன்ட் டாடா எல்க்ஸி ரண்டும் பாருங்க!" அப்பிடின்னு ரொம்ப மென்மையா சொல்றார் சுபாகர்.
            "வெகடு ரண்டு ஸ்கிரிப்டையும் பார்த்து ரேட் சொல்லுங்க!"ங்றார் லெனின்.
            "டாடா எல்க்ஸி சிக்ஸ்டி ஒன், வோக்கார்ட் ஒன் செவன்டி போர்"ங்றான் விகடு.
            சுபாகர் சின்ன சிரிப்பு சிரிச்சிட்டு எழுந்து போறாரு. லெனின் அவர் பின்னால ஓடிப் போயி, "எஸ் ஒன் சார்! டீ, காபி!"ங்றார்.
            "நோ தேங்க்ஸ்!" அவ்வளவுதான் பேசுறார். லெனினோட கையை ஹேண்ட் ஷேக் பண்ணிட்டு வெளியில போயிட்டே இருக்குறார்.
            விகடுவோட இத்தனை நாளு அனுபவத்துல வந்த வேகத்துல டிரேடிங் ஆபீஸ்லேர்ந்து வெளியே போன ஒரே ஆளு இவருதான். அவரு போன பின்னாடி லெனின் வந்து எல்லார்கிட்டயும் சொல்றாரு. "இவர நல்லா நோட் பண்ணிக்குங்கப்பா! நம்ம கம்பெனி ஆரம்பிச்ச நைன்டி ஒன்ல இன்போஸிஸ் ஷேரை எண்பத்து மூணாயிரத்துக்கு வாங்குனு ஆளு இவருதாம். அதுல என்னா ஆச்சரியம்னு கேட்குறீங்களா! அதை டூ தெளஸண்ட் ஒன்ல எண்பத்து ஏழு லட்சத்துக்கு வித்தாரு. அன்னிக்கு ஒரு நாளுக்கு மட்டும் அவரு வித்ததால நம்மோட புரோக்கரேஜ் கமிஷன் இருபத்தாறாயிரத்துக்கு மேல. திருவாரூர்ல இவரு அளவுக்கு ஆல் டைம் ரெகார்ட் சம்பாதிச்ச ஆளு யாருமில்ல. மார்க்கெட் பக்கம் வரவே மாட்டாரு. ஷேர்ஸ் வாங்குனா ஒன்லி டெலிவரிதாம். நோ டே டிரேடிங்க. இப்போ வந்து ரண்டு ஷேரை விசாரிச்சிட்டுப் போனார்ல. அதெ நல்லா நோட் பண்ணிக்குங்க. அத அவரு வாங்கப் போறார்னு அர்த்தம். அவரு இங்க வந்து அதெ விசாரிச்சதல்லாம் ச்சும்மா பேருக்கு. எல்லாத்தியும் வீட்டுலயே ந்நல்லா பார்த்துட்டு வந்துதாம் இங்க பேருக்கு விசாரிப்பாரு. அது அவரோட செண்டிமென்ட். இன்னும் கொஞ்ச நாளுல்ல பாருங்களேன். அதெ வாங்குவாரு. இடையில விக்கவே மாட்டாரு. நல்லா ரேட் வர்றப்பத்தான் விப்பாரு. வாங்குறப்ப ஆயிரத்துல வாங்குவாரு. விக்குறப்ப லட்சத்துல விற்பாரு. நம்ம ஆளுங்க யாராவது ஷேர் டெலிவரி எடுக்கணும்னா அந்த ஷேரை எல்லாருக்ருக்கும் ரெகமண்ட் பண்ணிச் சொல்லி விட்டுடுங்கப்பா!" அப்படிங்றார் லெனின்.
            லெனின் இந்த சேதியைச் சொன்னதும் விகடுவின் மனசில் நம்பிக்கைக் கீற்று ஒளிர்றது போல இருக்கு. ஆக ஷேர் மார்க்கெட்டுல சம்பாதிக்கிறவங்களும் இருக்காங்க போலருக்குன்னு அவன் நெனைச்சுக்குறான். ஆனா ஷேர் மார்கெட்டுல சம்பாதிக்கிறவங்க அடிக்கடி மார்கெட்டுக்கு வர மாட்டாங்க போலருக்குன்னு அவன் புரிஞ்சிக்கிட்டது அந்தச் சந்தர்ப்பத்துலதான்.
            லெனின் சொன்னது போலவே எஸ் ஒன். சுபாகர் ரெண்டு வாரம் கழிச்சு வந்தாரு. விகடுதான் ஆர்டர் போட்டான். வோக்கார்ட் ஐநூறு பையிங் பண்ணாரு. டாடா எல்க்ஸி முந்நூறு பையிங் பண்ணாரு. மொத்தமா ரெண்டும் சேர்த்து வாங்குனதுக்கு ஒரு லட்சத்து ஐயாயிரம் செக் போட்டுக் கொடுத்துட்டு எழுந்திருக்கிறாரு. எழுந்திரிச்சவரு பையில கையை விட்டு லெனினுக்கு இருநூறு ரூவாய் எடுத்துக் கொடுக்குறாரு. அதை அவர ரொம்ப பவ்வியமாய் வளைஞ்சு நெளிஞ்சி வாங்கிக்கிறாரு. மத்தவங்க கூட  வேலை பார்க்குற கோபி, சுபா, விகடுவுக்கு ஆளுக்கு நூறு ரூவா கொடுக்கச் சொல்லி முந்நூறு ரூவாய எடுத்துக் கொடுத்துட்டு அவரு பாட்டுக்கு போய்ட்டே இருக்காரு.
            அவரு வாங்குன ஸ்டாக்குகளை அவரு பின்னாளில என்ன விலைக்கு வித்திருப்பாருங்ற சஸ்பென்ஸ் இந்நேரத்துக்கு ஒங்க மனசுல வந்திருக்கும். அந்த சஸ்பென்ஸ உடைக்கணும்னா இன்னும் நீங்க சில வாரங்கள் காத்திருக்கணும். உங்கள அவ்வளவு நாட்கள் காக்க வைக்காமா இப்போவே அதைப் பத்தியும் சொல்லிடுறேன்.
            ஷேர் மார்க்கெட் ஆபீஸூக்கு ஆயிரம் பேரு வருவாங்க, போவாங்க. அத்தன பேரிலயும் விகடு கவனிச்ச ஒரே ஆளு சுபாகருதான். 2003 ல வாங்குன இந்த ஸ்டாக்குகள அவரு 2013 க்கு மேலதான் வித்தாரு. வோக்கார்ட்டை 2013 வது வருஷத்துல 2000 க்கு மேல வித்தாரு. டாடா எல்க்ஸியை 2015 ல ஆயிரத்து நூறு ரூவாய்க்கு மேல வித்தாரு. ஒரு லட்சம் சொச்சத்துக்கு வாங்குனத அவரு பதினாலு லட்சத்துக்கு மேல வித்தாரு. அவ்வளவு வருஷமும் அந்த ஸ்டாக்குகளை வெச்சிருந்ததுக்கு டிவிடெண்ட், ரைட் இஷ்யூல வந்த ஷேர்ஸ், போனஸ் ஷேர்ஸ்ன்னு வேற நிறைய வெச்சிருந்துப்பாரு. அது தனிக்கணக்கு. அது அவருக்குத்தாம் தெரியும். இடையில அவரு அந்த ஸ்டாக்கை எதுவும் பண்ணல. இப்படி அவரு நிறைய ஸ்டாக்குகளை லட்சத்துக்கு வாங்கி பல லட்சத்துக்கு, கோடி கணக்குல வித்திருக்காரு. ஒவ்வொரு வருஷமும் வந்து லட்சத்துக்கு ஸ்டாக்குகளை வாங்கிப் போட்டுட்டு, முன்னாடி வாங்கிப் போட்ட ஸ்டாக்குகளை பல லட்சத்துக்கு வித்துட்டுப் போவாரு. ஆக ஸ்டாக் மார்க்கெட்டுங்றதுல நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. எது அதிகம் இருக்குன்னுதான் தெரியலன்னு இப்போ தடுமாறுறான் விகடு. சுருக்கமா சொல்லணும்னா நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடுவுல எங்க இருக்கோம்னு புரியாம தவிக்கிறான் அவன்.
*****

பிள்ளைகளின் பிரியங்களைப் பார்சல் கட்ட...



            பிள்ளைகளின் பிரியங்களைப் பார்சல் கட்ட பெரிய பிரம்ம வித்தைகள் தேவையில்லை என்று அறியும் தருணம் இருக்கிறதே அது ஒருவகை ஞானமடைதல்.
            ஒரு சின்ன பகிர்தல் போதும். உங்களிடம் எது இருக்கிறதோ, அதைப் பகிருங்கள். கொஞ்சம் நேரத்தைப் பகிர்ந்தால் அதுவும் பகிர்தல்தாம். கொஞ்சம் நேரம் செலவிட்டு அவர்களோடு மனம் விட்டுப் பேசினால் போதும். அது ஆகச் சிறியதாகத் தெரிந்தாலும் அதைப் போன்ற மிகப் பெரிய பகிர்தல் உலகில் வேறு ஏதும் இருக்கிறதா என்னவென்று தெரியவில்லை.
             ஒரு நாள் சாப்பாட்டைப் பகிர்ந்து பாருங்கள். உலகத்தில் பிள்ளைகளின் மகிழ்ச்சியான நாள் அதுதான். ஓர் ஆசிரியர் தன்னோடு அமர்ந்து சாப்பிடுவார் என்பதை நம்ப முடியாத உலகத்தில் பிள்ளைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
            ஓர் ஆசிரியர் தன்னோடு சரிநிகர் சமானமாகப் பேசுவார் என்பதைக் கனவு கூட காண முடியாத கல்விக்கூடங்களில் பிள்ளைகள் பயின்று கொண்டிருக்கிறார்கள்.
            உயிர்களின் இயல்பு பகிர்தல்தான் அல்லவா! அதைப் பகிரும் போது அவர்கள் உயிர்ப்பு உள்ளவராகிறார்கள். அந்த உயிர்ப்புதாம் கல்விக்குத் தேவைப்படுகிறது. உண்மையில் இந்தக் கல்விக்குத் தேவைப் பெரிய புத்திசாலித்தனமோ, நுண்ணறிவோ இல்லை. பிரியமான பகிர்தல்கள் மட்டுமே. அந்தப் பிரியமான பகிர்தல்களில்தான் மன இறுக்கம் இல்லாத நுண்ணறிவு, மன உளைச்சல் தராத புத்திசாலித்தனம் ஆகியன உருவாகின்றன.
            நம் கல்வி ஏன் மனஇறுக்கம் மற்றும் மன உளைச்சல் தருவதாக இருக்கிறது என்றால் அது பகிர்தலுக்கு வாய்ப்பற்ற ஒரு வழிப் பாதையாக இருக்கிறது. ஒரு வழிப் பாதைகள் வேகமான பயணத்தைத் தரலாம். அனுபம் பெறத் தக்க பயணத்தைத் தருமா என்ன?          
            பகிரப் பகிரத்தான் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் புரிபடாதவைகள் துலக்கமும், விளக்கமும் பெறுகின்றன. எங்கே வெளிச்சம் பரவுகிறதோ அங்கு இருட்டு இருப்பதில்லை. மற்றபடி இருட்டை விரட்ட வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. அவ்வண்ணமே புரியாமையை விரட்ட பகிர்தல் ஒன்று போதும். இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் பகிரும் போது ஒரு கூட்டுச் சக்தி உருவாகிறது. அந்தச் சக்தியின் முன் விலகாத இருள் ஏதும் உண்டா?!
*****

27 Sept 2019

திருவாரூர் தியாகராசர்கள்!




செய்யு - 220
            வாத்தியார்மார்கள்ல இஸ்மாயிலு வாத்தியாரு போல இருந்த ஆளுகளும் இருக்காங்க. அவருக்கு நேர்மாறா இருக்குற வாத்தியார்களும் இல்லாம இல்ல. ஒரு பாக்கெட்டு நெலக்கடல வாங்கித் திங்கும் போது அதுல ஒரு சில சொத்த கடலைக இல்லாமலா போயிடும்? இருக்கத்தானே செய்யும். அப்பிடி வெச்சுக்குங்களேன். திருவாரூர்ல தியாகராசன்ங்ற பேருக்குக் குறைவு இருக்காது. ஏன்னா இங்க இருக்குற பெரிய கோயிலோட சாமியோட பேரு அதுதாம். அதால அந்தப் பேரு உள்ள ஆளுங்க இங்க அதிகமாக இருப்பாங்க. ஒரு தெருவுல புகுந்து கணக்கு எடுத்தீங்கன்னா பத்து பேருக்காவது அந்தப் பேரு இருக்கும். அந்த பேர்ல இருந்த தியாகராசன் வாத்தியாரு திருவாரூரை ஒட்டுன திருப்புரத்துல குடியிருந்தாரு. அவரு திருவாரூருக்குப் பக்கத்தில ஏனங்குடிங்ற ஊர்ல இருக்குற சின்ன பள்ளிக்கூடத்தில வேலை பார்க்கிறாரு.
            அதென்ன சின்ன பள்ளிக்கூடம்னா? அதாங் எலிமெண்டரி ஸ்கூல்ன்னு சொல்லுவாங்களே தொடக்கப் பள்ளி. அப்போ பெரிய பள்ளிக்கூடங்றது  ஹைஸ்கூல்னு சொல்லுவாங்களே உயர்நிலைப் பள்ளி அதுதாங். அதுக்கு ஏத்த மாதிரி சின்ன பள்ளிக்கூடம்னா கட்டடங்கள் கம்மியாத்தானே இருக்கு. பெரிய பள்ளிக்கூடம்ன்னா நெறைய கட்டடங்கள் இருக்குல்ல. அப்படிக் கூட அந்தப் பேரு வந்திருக்கலாம்.
            தியாகராசன் வாத்தியாருக்கு உடம்பு, நரம்பு, ரத்தம், சதை எல்லாமும் ஒரே யோசனைதான். அதுதான் ஷேர் மார்க்கெட்டு. அவரோட நெனைப்பு, கனவு எல்லாம் அதுதான். எந்நேரமும் அதப் பத்தி மட்டுந்தான் சிந்திச்சுக் கெடப்பாரு. வூட்டுல அவரோட பொண்டாட்டி, புள்ளைகள் பத்தியெல்லாம் சிந்திப்பாரான்னு தெரியல. எப்போ பார்த்தாலும் ஷேர்களோடு இருப்பவரு, ஷேர்களோட வாழ்பவருன்னு அவரப் பத்தித் தாராளமா சொல்லலாம்.
            அவரு ஒரு ஆளு வந்தாப் போதும். வேற யாரும் தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்ல டிரேடிங் செய்ய வேண்டிய அவசியமே இல்ல. அவரு ஒரு ஆளே ஒரு கோடி, ரெண்டு கோடிக்கு டிரேடிங் பண்ணுவாரு. எந்த ஸ்டாக்கா இருந்தாலும் ஆயிரம், ஐயாயிரம் அளவுலதாம் ஆர்டர் போடச் சொல்லி வாங்குவாரு அல்லது விற்பாரு. லாபமும் ஒரு நாளைக்கு ஐயாயிரம், பத்தாயிரம்னு பார்ப்பாரு. இப்படி ஒரு ஆளு சம்பாதிச்சா அவருக்குக் கவனம் எப்படி பள்ளிக்கூடத்துல போவும்? அதால அவரு பள்ளிக்கூடம் போவுறது கம்மி. ஷேர் மார்கெட்டுக்கு வர்றது அதிகம். அவரு தொண்டாமுத்தூரு கேப்பிட்டல் தவிர இன்னும் நாலைஞ்சு டிரேடிங் ஆபீஸ்ல வேற அக்கெளண்ட் வெச்சிருந்தாரு. அவர தொண்டாமுத்தூர் கேப்பிட்டலுக்குக் கொண்டு வர்றதுக்கான அத்தனை வேலையையும் லெனின் பண்ணுவாரு. பையிங், செல்லிங் கமிஷன்ல ஹெட் ஆபீஸ்ல பேசி அவருக்கு நெறையவே ரிலாக்சேசன் பண்ணித் தருவாரு. அதுவும் இல்லாம திருவாரூர் ஷேர் டிரேடிங் ஆபீஸ்ல தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்லதாம் கமிஷன் கம்மிங்றதால தியாகராசன் வாத்தியாரும் இங்கதாம் அடிக்கடி வருவாரு.
            தியாகசரான் வாத்தியாரு ரொம்ப நாட்கள் பள்ளிக்கூடம் பக்கமே போவாம இங்க மார்கெட்டு பக்கம் வந்து உட்கார்ந்துடுவாரு. "என்ன டி எய்ட் சார்! ஸ்கூல் பக்கம்லாம் போவீங்களா? புள்ளைங்களுக்கு பாடம்லாம் சொல்லிக் கொடுப்பீங்களா?" என்று லெனினுக்குத் தியாகராசன் வாத்தியாரைப் பார்த்தா கேலியும் கிண்டலும் தானா வந்துடும். இப்படியெல்லாம் அப்படியும் இப்படியும் பேசித்தாம் கிளையண்ட்ஸ பிடிச்சக்கணும்ங்ற வித்தையெல்லாம் லெனினுக்கு அத்துப்படிங்றதால அவரோட பேச்சுக்கு மயங்கிக் கூட நிறைய கிளையண்ட்ஸ் இங்க ஆபிஸ்க்கு வந்துகிட்டு இருந்தாங்க.
            "போவாமா ன்னா? ஒரு வாரத்துல நடத்த வேண்டியதெ ரெண்டே மணி நேரத்துல முடிச்சிடுவேம். அவ்வளவுதாம் பாடம். அதப் போயி வாரக் கணக்கா உட்காந்து நடத்த முடியுமா? பாடமும் ஷேர்களை வெச்சித்தாம் நடத்துவேம். பத்து ரூவாய் விக்குற பங்கோட வெலை அஞ்சு ரூவா கூட ஏறுனா எவ்வளவும்பேம். அதாங் கூட்டலு சொல்லிக் கொடுக்குற வெதம். அஞ்சு ரூவா வெல இறங்குனா எவ்வளவும்பேம். அதாங் கழித்தலு சொல்லிக் கொடுக்குற வெதம். அஞ்சு பங்கு வெல ஏறுனா எவ்வளவும்பேம். அதாங் பெருக்கலு சொல்லிக் கொடுக்குற வெதம். அந்தப் பங்கை அஞ்சு பேரு சேர்ந்து வாங்கணும்னு ஆளுக்கு எவ்ளோ போடணும்பேம். அதாங் வகுத்துல சொல்லிக் கொடுக்குற வெதம். அவ்வளவுதாங் கணக்கு. பங்குகளோட பேரை தமிழ்ல எழுதச் சொன்னாக்க தமிழ் பாடம். இங்கிலீஷ்ல எழுதச் சொன்னா இங்கிலீஷ் பாடம்.  ரசாயனப் பங்கு ஒண்ண எடுத்துகிட்டுப் பேசுனா அதாங் அறிவியலு. அக்ரி பங்க ஒண்ணு எடுத்துட்டுப் பேசுனா அதாங் சோசியலு. வாழ்க்கையே ஷேர் மார்கெட்டுதாங்க லெனின்!" அப்பிடின்னு லெனினோட கேள்விக்குப் பதில் சொல்லுவாரு வாத்தியார்.

            "என்ன இருந்தாலும் ஒங்க முகத்த பார்க்காம புள்ளைங்களுக்குத் தவிப்பா இருக்காதா டி எய்ட் சார்?" என்று லெனின் விட மாட்டார்.
            "நீங்க நெனைக்குற மாதிரி பள்ளியோடத்துக்கு போவாமல்லாம் இருக்க மாட்டேம் லெனின். ரொம்ப நேரம்லாம் நம்மால அங்க உக்கார முடியாது. நாம்ம அங்க இல்லாதால அங்க பாதிப்பு வந்திடக் கூடாது பாருங்க. நம்ம சொந்தக் காசுல ஒரு ஆளயும் அங்க போட்டிருக்கேம். அவ்வேம் பாத்துப்பாம். இந்த எஜூகேஷன் சுத்த வேஸ்ட்டு லெனின். புள்ளைங்களுக்கு ஸ்டாக் மார்க்கெட்ட பத்திச் சொல்லிக் கொடுக்கணும். ஈஸியா சம்பாதிச்சிடலாம். இதெச் சொல்லிக் கொடுக்காம என்னென்னமோ சொல்லிக் கொடுக்கச் சொல்றாங்க. அதுல நமக்கு இஷ்டமில்ல லெனினு. அதாலதாம் லெனினு நாட்டுல அன்எம்ப்ளாய்மெண்ட் பிரச்சனை தலைவிரிச்சு ஆடுது. நீங்க என்ன சொல்றீங்க?" அப்படிம்பார்.
            அதுக்கு மேல அவருகிட்ட என்ன பேசுறது? "சூப்பர் சார்!" அப்பிடிம்பார் லெனின்.
            "யப்பா மேனேஜரு! வர்ற கிளையண்ட்ஸ கெடுத்து விட்டு வர்ற விடாம பண்ணி ஹெட் ஆபீஸ்லேந்து கமிஷன் கம்மியாயிடுச்சுன்னு பேச்சு வாங்க வெச்சிடாதே!"ன்னு கோபி சொன்னார்ன்னா அங்க அதுக்கு ஒரு சிரிப்பு பத்திக்கும் எல்லாருக்கும்.
            தியாகராசன் வாத்தியாரு ஆர்டர்களை எடுத்து விடுவாரு. அதுக்கு முன்னாடி அவரு பேரச் சொல்லாம லெனின் டி எய்ட்ன்னு சொல்றாரேன்னு ஒங்களுக்கு ஒரு கேள்வி வந்திருக்கும். அதுக்கான காரணத்தைச் சொல்லிட்டே மேற்கொண்டு பேசலாம். இங்க ஆபீஸ்ல கிளையண்ட்ஸ் எல்லாத்துக்கும் ஒரு பேரு உண்டு. அவங்களோட பேரோட முதல் எழுத்தோட ஒரு நம்பரு இருக்கும். அதாங் அவங்களோட பேரு. தியாகராசன் வாத்தியாரோட முதல் எழுத்து டி இல்லையா. அதோட அவருக்குன்னு ஒரு நம்பரு எய்ட். அதால அவர ஆபீஸ்ல டி எய்ட்ன்னுதாம் கூப்புடுவாங்க. ஏன் இப்பிடின்னா அவருக்கு ஆர்டர் போடுறப்ப டி.வி.ஆர். டி எய்ட்ன்னு ஆர்டர்ல போட்டுதாம் அதைச் செய்ய முடியும். டி.வி.ஆர்.ங்றது திருவாரூரோட சுருக்கம்.
            அதே போல இங்க மார்கெட்ட விகடுவுக்கு அறிமுகப்படுத்தின வெங்கடேசன வீ செவன் அப்படிப்பாங்க. வீ ங்றது அவரோட பேரோட முதல் எழுத்து. அத்தோட அவருக்கு ஒரு நம்பரு செவன்னு. அவருக்கு ஆர்டர் போடுறப்ப டி.வி.ஆர். வி செவன்னு ஆர்டர் போடுவாங்க.
            தியாகராசன் ஆர்டர் போட ஆரம்பிச்சார்ன்னா நாலு சிஸ்டம் இருந்தாலும் பத்தாது. ஆனா இங்க ஆபீஸ்ல இருக்குறது மூணு சிஸ்டம்தானே. மூணுலயும் மூணு பேர்கிட்டயும் ஆர்டர் போடச் சொல்வாரு. "ரான்பாக்ஸியில தெளசண்ட் செல்லிங் போங்க. எஸ்ஸார் ஆயில்ல பைவ் தெளஸண்ட் பையிங் போங்க. எம் அன்ட் எம்ல பைவ் ஹண்ட்ட்டுக்கு பையிங் ரேட்லேந்து ஒரு ரூவா கம்மி பண்ணி ஸ்டாப் லாஸ் போடுங்க." அப்பிடின்னு சொல்லிகிட்டே இருப்பாரு.
            வாங்குன ஸ்டாக் விலை ஏறுனா லாபம். அது போல வித்த ஸ்டாக் விலை இறங்குனா லாபம். இதுக்க நேர்மாறா நடந்தா நஷ்டம். வாங்குற ஸ்டாக் விலை ஏறும்னு எப்படிச் சொல்ல முடியும்? அது விலை ஏறுனாலும் ஏறும், விலை இறங்குனாலும் இறங்கும் இல்லையா. வாங்குன ஸ்டாக் அதல பாதாளத்துக்கு விலை இறங்கி அதால ரொம்ப நஷ்டமாயிடப் படாதுங்றதுக்காக ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல இறங்குனா வித்திடுற மாதிரி ஆர்டர் போடுறதுதாங் ஸ்டாப் லாஸ்ங்ற ஆர்டரு. அதாவது ஐம்பது ரூவாய்க்கு வாங்குற ஸ்டாக் ஒரு கணக்குப் பண்ணி நாப்பத்து எட்டுக்குக் கீழே இறங்குனா வித்திடச் சொல்லி வாங்குறப்பவே ஆர்டர் போட்டுறதை ஸ்டாப் லாஸ் ஆர்டர் அப்பிடிம்பாங்க. அதே போல வித்த ஸ்டாக் குறிப்பிட்ட விலைக்கு மேல ஏறுனா அதுக்கும் வாங்குறதுக்கு ஸ்டாப் லாஸ் ஆர்டர் போட்டு வெச்சிக்கலாம். அதாவது ஐம்பது ரூபாய்க்கு வித்த ஸ்டாக் விலை இறங்கிட்டே போனா லாபம். மாறா ஏறிட்டு போனா நஷ்டம் இல்லையா. அதால ஐம்பதுக்கு வித்ததை ஒரு ஐம்பத்து ரண்டுக்கு வாங்குற மாதிரி ஸ்டாப் லாஸ் ஆர்டர் போட்டுட்டா ரண்டு ரூவாய் நஷ்டத்தோட முடிஞ்சிடும் இல்லையா. இப்படி ஒரு ஸ்டாக்கை வாங்குறப்பவோ, விற்குறப்பவோ ஸ்டாப் லாஸ் ஆர்டரையும் துல்லியமா போட்டு டிரேடிங் பண்ணுறவரு தியாகராசன் வாத்தியாரு.
            லாபம் வந்திடுச்சுன்னா மேல மேல ஆர்டரைப் போட்டு அன்னிக்கு ஒரு நாளைக்கே கம்பெனிக்கு அய்யாயிரம், பத்தாயிரம் கமிஷன் வர்ற அளவுக்கு வியாபாரம் பண்ணிடுவாரு வாத்தியாரு. நஷ்டம் ஆயிடுச்சுன்னா, "வாங்குன ஸ்டாக்கையெல்லாம் டெலிவரி எடுங்க நாளைக்கு விப்போம்!" அப்பிடிம்பாரு. அன்னைக்கே வாங்கி விற்குறதை விட, இப்படி டெலிவரி எடுக்குறப்ப கமிஷன் பத்து மடங்கு கூடங்றதால தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்ல அதைச் செஞ்சு கொடுப்பாங்க. அப்படி டெலிவரி எடுத்ததை மறுநாளு விலை ஏறியிருந்தா வித்துப்புடலாம். விக்குறதுக்கான கமிஷனும் டெலிவரி கமிஷன்தான். அதாவது டே டிரேடிங் கமிஷனை விட பத்து மடங்கு கூடுதலான கமிஷன். அதை பி.டி.எஸ்.டி. அப்பிடிம்பாங்க. அதாவது buy today sell tomorrow அப்படிங்றதோட முதல் எழுத்துகளையெல்லாம் எடுத்துப் போட்டா அதுக்கான விரிவாக்கம் உங்களுக்குக் கிடைச்சிடும். அதாவது இன்னிக்கு வாங்கி நாளைக்கு விக்குறது. இதுல என்னா ஒரு கஷ்டம்ன்னா இன்னிக்கு வாங்குனது நாளைக்கு விலை ஏறியிருக்கணும். அப்பதாம் லாபம். விலை இறங்கியிருந்தா அவ்வளவும் நஷ்டம். நஷ்டத்தை கம்பெனிக்கு ரெண்டு நாளுக்குள்ள செக் போட்டுக் கொடுத்தாகணும். லாபம்ன்னா அந்த லாபத்தை கம்பெனி ரெண்டு நாள் கழிச்சு செக் போட்டுக் கொடுக்கும். 
            ஸ்டாக் மார்கெட்டுல தியாகராசன் வாத்தியார் கில்லிதான். காலையில எல்லா பேப்பர், ஜர்னலையும் படிச்சிடுவாரு. எந்த ஸ்டாக் எவ்வளவு விலை இறங்கும், விலை ஏறுங்றத துல்லியமாக கணிச்சிடுவாரு. இதுக்காக நெறைய டெக்னிக்கலாம் இருக்கு. மூவிங் ஆவரேஜ் பாக்குறது, ஆர்.எஸ்.ஐ.இன்டிகேட்டர் பார்க்குறது, கிராப் அனாலிசிஸ் பண்றதுன்னு ஏகப்பட்டது இருக்கு. அத்தனையையும் சரியா பாத்து வெச்சிருப்பாரு தியாகராசன் வாத்தியாரு.
            ஆனா ஷேர் மார்கெட்டுங்றது ஆயிரம் ரூவா லாபத்தைக் கொடுத்து பத்தாயிரம் ரூவா நஷ்டத்தைக் கொடுக்கக் கூடிய இடங்றத மறந்துடக் கூடாது. ஆனைக்கும் அடி சறுக்குங்றது ஷேர் மார்க்கெட்டுக்காகவே சொல்லப்பட்டதாகத்தாம் இருக்கும். இங்க டைனசோரும் தலைகுப்புற விழும். திமிங்கலமும் முழுங்கப்படும். இதை நீங்க ரோம்ப பயமுறுத்துறதுக்காக சொல்லபட்டதாவும் எடுத்துக்கலாம். அல்லது ரொம்ப விழிப்பா இருக்கணுங்றதுக்காக சொல்லப்பட்டதாவும் எடுத்துக்கலாம்.
*****


பிராண்டி விழும் பற்களின் சிரிப்பு



தனிமையைக் கொஞ்சம் எடுத்துக் கொள்
உளைச்சலைக் கொஞ்சம் வாங்கிக் கொள்
அழுத்தம் கொஞ்சம் பெற்றுக் கொள்
வேதனைகள் கைகளில்
மரம் போல் வளர்வதைப் பார்
துயரங்கள் சுற்றிலும்
கொடிகள் போல் பின்னுவதைப் பார்
நெருக்கடிகள் நெருங்கி நெலுங்கி
பிராண்டிப் பார்ப்பதைப் பார்
மலை போல் பொறுத்துக் கொண்டதில்
மரம் வளரட்டும்
கொடிகள் பின்னட்டும்
பிராண்டிப் பார்க்கட்டும்
வளர்ந்த மரங்களுக்கு
பின்னிய கொடிகளுக்கு
மலையைப் பெரிதாக்கிக் காட்டியதற்கு நன்றி
பிராண்டியப் பற்களுக்கு வாழ்த்து
பிராண்டி உடைந்தப் பற்களில்
சிலவற்றை எடுத்துச்
சிரித்துக் கொள்ளாதோ மலை
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...