30 Sept 2019

மண்ணுக்குள்ள சாபம் இருக்கு!



செய்யு - 223
            மனசு இருக்கே அதுக்கு ஒரு விசயம் நல்ல விதமாகவும் படும். கெட்ட விதமாவும் படும். ஒரு நேரத்துல நல்ல விதமா சிந்திக்கும். இன்னொரு நேரத்துல எதை நல்ல விதமா சிந்திச்சுச்சோ அதை அப்படியே திருப்பிப் போட்டு கெட்ட விதமா சிந்திக்கும். சுப்பு வாத்தியாரால மவன் பத்தாயிரத்தைத் திடீர்னு தூக்கிக் கொடுத்ததைப் புரிஞ்சிக்கவும் முடியல, புரிஞ்சிக்காம இருக்கவும் முடியல. அவரு மனசு இப்படியும் அப்படியுமா சிந்திச்சு அலை பாயுது. இனிமேலும் வீட்டுக்குள்ள உட்காந்துகிட்டு மவனைப் பத்தி கோழிக் கனா கண்டுட்டு இருக்கிறது நியாயமில்லேன்னு தோணுது. அவரு விநாயகம் வாத்தியாரைப் போட்டு நையி நையின்னு நச்சரிச்சதுல அவரு, "வாங்க வாத்தியாரே! லீவு போட்டுட்டே போயிப் பாத்துட்டு வந்துடுவேம்! இனுமே நீங்க இதெப் பத்தி பேசுனீங்கன்னா எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும் போலருக்கு!" அப்பிடிங்றார். சுப்பு வாத்தியார் எதிர்பார்த்தது அதைத்தானே.
            ரெண்டு பேரும் லீவு லெட்டரை எழுதி வெச்சிட்டு விநாயகம் வாத்தியாரோட டி.வி.எஸ். சுசுகி பைக்ல அவரு முன்னால உட்காந்து ஓட்ட, சுப்பு வாத்தியாரு பின்னால உட்காந்துக்க திருவாரூரு தெற்கு வீதியை நோக்கிப் போறாங்க. வண்டி ஓட்டுறதுல விநாயகம் வாத்தியாரு பெரிய ஆளு. அதெ நாம்ம முன்னாடியே பார்த்திருக்கோம். இருந்தாலும் இப்போ போறதப் பத்தி ஒரு சில வார்த்தைகளாவது சொல்லலன்னா எப்படி! அப்படியே ரதத்துல உட்கார்ந்துருக்குது போல ஆடாம, அசங்காம, பள்ளம் மேடுல்ல அப்படியே ஸ்பிரிங் போட்ட மெத்தையில உட்காந்திருக்கிறது போல மெல்ல ஏத்தி, இறக்கி அப்படிப் ஓட்டுவாரு அவரு. சக வாத்தியார்மார்களே அவரு ஓட்டுற வண்டியில பின்னாடி உட்கார்ந்துட்டுப் போறது கூத்தியா மடியில உட்கார்ந்திருக்குறது போல சொமாக இருக்கும்னு வேற பேசிக்குவாங்கன்னா பாத்துக்குங்களேன்.
            தெற்கு வீதி முனங்குல விநாயகம் வாத்தியாரு வண்டியைக் கொண்டாந்து நிப்பாட்டுன்னா, அங்க ஒரு பொம்பள வீதியில கெடக்குற மண்ணையெல்லாம் ரெண்டு கையால எடுத்து, "மண்ணாப் போயிடுவீங்கடா! நாசமா போயிடுவீங்கடா! எத்தன வூட்டு தாலியறுத்து இப்படி பொழைக்குறீங்களடா! நாசமா போங்க! மண்ணா போங்க!" அப்பிடின்னு தலைவிரிக் கோலமா பைத்தியம் பிடிச்சா கணக்கா கத்துது.
            "என்ன வாத்தியாரே இது! மவன் வேலைப் பார்க்குற அழகைப் பார்க்கப் போற ஆரம்பமே இப்டி இருக்கு?" அப்பிடிங்றாரு விநாயகம் வாத்தியாரு. அப்படிச் சொல்லிப்புட்டு, "என்னப்பா இது! மனுநீதிச் சோழன் ஆண்ட திருவாரூக்கு வந்தச் சோதனே!" அப்பிடிங்றாரு.
            இதைக் கேட்ட மாத்திரத்துல சுப்பு வாத்தியாரு மனசு திக்கு திக்குங்குது. "ஏம் இந்தப் பொம்பளே! இப்படி நடு வீதியில நின்னுகிட்டு மண்ண வாரி இறைக்குது? அதுவும் மவன் வேலையைப் பார்க்க வர்ற இந்த நேரத்துல! நேரமே சரியில்ல!" அப்பிடின்னு நெனைச்சுக்கிட்டு, "டவுன்னான்ன இப்படி ஆயிரம் இருக்குத்தாம் செய்யும்!" அப்பிடின்னு வேற தனக்குத் தானே சமாதானம் செஞ்கிக்குறாரு அவரு.
            "இங்கதான தொண்டாமுத்தூரு கேப்பிட்டல்னு ஏதோ சொன்னான் விகடு. யாரக் கேட்டாலும் வேற தெரியும்ணான்னே. யாரைக் கேட்குறது?" அப்பிடின்னு யோசிக்சுகிட்டே அவரு வண்டிய நிப்பாட்டுன்ன பக்கத்துல டீ ஆத்திகிட்டு இருக்கற டீக்கடைக்காரர்கிட்ட, "அண்ணே! இங்க தொண்டாமுத்தூரு கேப்பிட்டல்னு..." அப்பிடின்னு விசாரிக்கிறாரு விநாயகம் வாத்தியாரு.
            "அதோ அந்தப் பொம்பள மண்ண வாரி வீசுதுல்ல அதுக்கு எதுத்தாப்புலப் பாருங்க. பச்சைக் கலரு போர்டுல வெள்ளை நிறத்துல கொட்டையா பேரு எழுதித் தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்னு போர்டு வெச்சிருக்கானுங்க பாருங்க!" அப்பிடிங்றாரு டீ ஆத்திட்டு இருந்தவரு.
            "அடச் சே! கண்ணுக்குத் தெரியுற மாரி பெரிய போர்டத்தாம் வெச்சிருக்காங்க. அத கவனிக்காமப் போயிக் கேட்டுப்புட்டோமே!" அப்பிடின்னு சுப்பு வாத்தியார்கிட்ட மெல்லமா சொல்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "அந்தப் பொம்பளய பார்த்ததுல கவனம் பெசகிப் போயிட்டுது வாத்தியாரே! வெறேன்ன!" அப்பிடிங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "இஞ்ஞ அப்பிடியே ஒரு டீ அடிச்சிட்டு, அந்த பொம்பள மேட்டரையும் ஒரு விசாரணையைப் போட்டுட்டு வெகடுவைப் போயிப் பார்க்கலாமா?" அப்பிடிங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            சுப்பு வாத்தியாரு தலைய மட்டும் அசைச்சுகிறாரு.
            "அண்ணே! ரண்டு டீ!"ன்னு விநாயகம் வாத்தியாரு ரெண்டு விரலைக் காட்டிட்டு, "யாருண்ணே அது? இப்படி மண்ண வாரி வீசிகிட்டு நிக்குது? என்னாண்ணே விசயம்?" அப்பிடிங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "மாசத்துக்கு ஒண்ணு இந்த மாரி மண்ண அள்ளி வீசிகிட்டுப் போவும் சார் இஞ்ஞ. அந்தா நீங்க விசாரிச்சீங்கயில்ல தொண்டாமுத்தூரு கேப்பிட்டல்னு. அவனுங்க ஷேர் மார்க்கெட்டு வெச்சிருக்கானுங்களாம். அதுல போயி ஷேரை வாங்கி விக்குறேன்னு பொண்டாட்டியோட தாலிய வரை அறுத்து புருஷங்காரனுவோ அழச்சிப்புடறானுவோ. அழிச்சுபுட்டு வீட்டை விட்டு ஓடிப் போயிடுறானுவோ. அதுல பாதிக்கப்பட்ட பொம்பளைங்க இங்க வந்து இப்பிடித்தாம் சார் வந்து மண்ண வாரி இறைச்சுகிட்டு. மாசத்துக்கு ஒண்ணு இப்படி வந்து மண்ண வாரி எறைச்சிட்டுப் போயிடும் சாரே. த்துப்பூ! ன்னா பொழப்பு சாரு இது? உள்ளப் போயிப் பாருங்களேன்! ஏ.சி. போட்டு வெச்சிருக்கானுவோ. கம்ப்யூட்டர ஓட விட்டு வெச்சிருக்கானுவோ. ஆர்லிக்ஸ், பூஸ்ட்டு, பப்ஸ்ன்னு வேண்டிய வாங்கிக் கொடுக்குறானுவோ. எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்துப்புட்டு கோவணத்தை வரை உருவிட்டு விட்டுருவானுவோ!" அப்பிடிங்றார் டீ ஆத்துறவர். அவரு ஆத்துன டீயை விட அவரு பேசி விட்ட சங்கதி செம சூடா இறங்குது சுப்பு வாத்தியாரு மனசுக்குள்ள.
            சுப்பு வாத்தியாருக்கு அப்படியே தூக்கி வாரிப் போடுது. நெஞ்செல்லாம் படபடன்னு அடிச்சுக்குது. டீயைக் குடிக்குறதுக்கு முன்னாடியே அவருக்கு வியர்த்து விறுவிறுத்துக் கொட்டுது.
            "இந்தாங்க சார் ரண்டு டீ!"ன்னு டீ ஆத்துறவரு ரண்டு டீயைக் கிளாஸ்ல நீட்டுறாரு.
            விநாயகம் வாத்தியாரு ரண்டையும் வாங்கி ஒண்ண தங் கையில வெச்சிகிட்டு, இன்னொன்ன சுப்பு வாத்தியார்கிட்ட நீட்டுறாரு.
            சுப்பு வாத்தியாரு அதை வாங்க கையை நீட்ட மாட்டேங்றாரு. அவரு பேயடிச்சவன் நிப்பாம் பாருங்க. அது போல நிக்குறாரு.
            "வாத்தியார்ரே! இதெ வாங்கிக் குடிங்க!" அப்பிடிங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            சுப்பு வாத்தியாரு கண்ணு கலங்குது. அதைப் புரிஞ்சகிட்டவரு மாதிரி அதுக்கு மேல அந்த டீ கிளாஸை நீட்டாம ரண்டு கிளாஸ்ல இருந்த டீயையும் விநாயகம் வாத்தியாரே குடிச்சிட்டு காசை எடுத்துக் கொடுக்குறாரு.
            "செரி வாங்க வாத்தியாரே! உள்ளப் போயி பார்ப்போம்!" அப்பிடிங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "வாணாம்! வீட்டுக்குப் போயிடலாம்! நம்மாள முடியல. மயக்கமா வாரது போல இருக்கு!" அப்பிடிங்றாரு சுப்பு வாத்தியாரு.
            விநாயகம் வாத்தியாருக்குக் குரலெல்லாம் தழுதழுக்குது. "ஒண்ணும் வருத்தப்படாதீங்க வாத்தியா..."ன்னு அவரால முழுசா சொல்ல முடியல. ஒரு வழியா சுப்பு வாத்தியார தேத்தி வீட்டுல கொண்டாந்து விட்டுட்டுப் போயிடுறாரு.
            இப்படி மவனை வேலைப் பார்க்குற இடத்துல பார்க்கப் போயி, பார்க்காமலே திரும்பி வந்த சுப்பு வாத்தியாரு அப்போலேந்து காய்ச்சல்ல படுத்தவருதாம். ரெண்டு மூணு நாளைக்கு எழுந்திரிக்கல.        
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...