28 Sept 2019

நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடுவுல...



செய்யு - 221
            பொதுவாகவே எந்தத் துறையிலயும் சம்பாதிச்சுத் தலையெடுத்தவங்க கம்மியாத்தாம் இருப்பாங்க. நஷ்டப்பட்டு சின்னாபின்னவங்கதாம் அதிகமாக இருப்பாங்க. சம்பாதிச்சுத் தலையெடுத்த ஒண்ணு ரண்டு பேரைப் பார்த்துதாம் அந்தந்த துறையிலயும் விட்டில் பூச்சிக் கணக்கா மனுஷங்க போயி விழுறாங்க.
            ஷேர் மார்கெட்டுல பெரிசா யாரும் சம்பாதிச்சிருக்காங்கங்ற சந்தேகம் ஒங்களுக்கு வர்றது போல விகடுவுக்கும் அடிக்கடி வரும். உலக அளவுல வாரன் பப்பெட்டை அப்படி ஒரு ஆளா சொல்லுவாங்க. அப்படி ஒரு ஆளைத்தான்னே சொல்றாங்க. இந்தியாவுல ராஜேஷ் ஜின்ஜூவாலா அப்படிங்றவரை அப்படிச் சொல்லுவாங்க. இவங்கள தவிர இன்னும் ஒரு சில பேரைத்தாம் சொல்லுவாங்க. திருவாரூர்ல அப்படி யாராவது இருக்காங்களா?ங்ற கேள்வி விகடுவோட மனசை ரொம்ப நாளா உறுத்திகிட்டு இருந்துச்சு. ஏன்னா இங்க அவனுக்குத் தெரிஞ்சி நஷ்டம் பண்ண ஆளுங்கதாம் அதிகம். நஷ்டம் பண்ணிட்டு இனுமே ஷேர் மார்கெட் பக்கமே தலை வெச்சிப் படுக்க மாட்டேன்னு சபதம் பண்ணிட்டுப் போறவங்க ரெண்டு வாரத்துல திரும்பி வருவாங்க.  அதிலயும் அக்கெளண்ட்டைல்லாம் குளோஸ் பண்ணிட்டுப் போயித் திரும்ப வந்து அக்கெளண்டை ஆரம்பிச்சு ஒடனே டிரேட் பண்ணணும்னு அடம் பிடிக்கற ஆளுங்களும் இருக்காங்க.
            ஷேர் டிரேடிங் ஆபீஸ்ல வேலை பார்க்குற ஆளுங்களுக்கு மத்த மத்த ஆபீஸ்லயும் தொடர்பு இருக்கும். அதெ வெச்சி ஷேர் மார்க்கெட்டுல நல்ல லாபம் பார்த்த ஒரு ஆளையாவது கண்டுபிடிக்கணும்னு நெனைக்குறான் விகடு. அப்படி ஒரு ஆளு அவங் கண்ணுக்குத் தட்டுபடவே மாட்டேங்றாரு. ஆகா தப்பா ஒரு வேலையைத் தேர்ந்தெடுத்து அதுல வேலை பார்த்துட்டு இருக்கோமோங்ற கவலெ இப்போ சில நாட்களா அவனுக்கு வர்ற ஆரம்பிக்குது. வர்றவங்க எல்லாம் நஷ்டப்படுற ஒண்ணுல ஆர்டர் போடுற வேலையில இருக்கோமோங்ற குற்ற உணர்ச்சி அவனெ வாட்டுது. அதை லெனின்கிட்டயும் சொல்றான். அதையெல்லாம் பார்த்தா நாம்ம பொழைக்க முடியாது அப்பிடின்னு சொல்றாரு லெனின். "நாம்ம போயி ரோட்டுல போற ஆள பிடிச்சா ஆர்டரப் போடச் சொல்றோம். அவங்களா வர்றாங்க, அவங்களா போடறாங்க. அதுக்கு நாம்ம என்ன பண்ண முடியும் வெகடு?" அப்பிடிங்றார் கோபி.
            "டேய் வெகடு பய்யா! ஒனக்கு ஐஸ்கிரீம், செல்வீஸ்ல ட்ரீட், ராயல் பார்க்ல லஞ்ச்லாம் வேணுமா இல்லையா!" அப்பிடின்னு சுபா கேலி பண்ணிச் சிரிக்குது.
            சாராயக் கடையைத் தொறந்து வெச்சா குடிக்கிறவன் வந்து குடிச்சிட்டுதாம் போவான். சாராயக் கடையைத் தொறக்கலைன்னா எவன் குடிக்க வரப் போறான்? அது போல டிரேடிங் ஆபீஸ்ஸைத் திறந்து வெச்சு அதுல நாம்ம வேலை பார்க்குறதாலதான்னே வர்றவங்க வந்து டிரேட் பண்ணி நஷ்டப்பட்டுப் போறாங்க அப்பிடின்னு யோசனைப் போகுது விகடுவுக்கு. அதையும் லெனின்கிட்டே சொல்றான்.
            "லிட்டில் பாய் விகடு! நாம்ம ஆபீஸ் போடாட்டியும் எவனாவது ஆபீஸ் போட்டு நடக்குறது நடந்துகிட்டுதாம் இருக்கும். திருவாரூர்ல எட்டு ஆபீஸ் இருக்குத் தெரியும்ல. எட்டுலயும் கூட்டம் அள்ளுது. நமக்கு அள்ளோ அள்ளுன்ன்னு அள்ளுது. நாம்ம இந்த ஒரு ஆபீஸைக் கொறைச்சாலும் மித்த ஏழு ஆபீஸ்ல டிரேட் பண்றவங்க போயிச் சேந்துப்பாங்களே தவிர இதுக்கு வந்தவங்க இதை விட்டுட்டு வெளியில போனதா சரித்திரமே இல்ல. ரொம்ப போட்டுக் கொழப்பிக்காம வேலையைப் பாருங்க சிந்தனையாளர் விகடு அவர்களே!" அப்படிங்றார் லெனின்.
            இந்த உறுத்தலோட விகடு ஆர்டர் போட்டுகிட்டு இருக்கிறப்ப, சுபாகர்ன்னு ஒருத்தரு வராரு. அவரோட கோட் டி.வி.ஆர். எஸ். ஒன். இத்தன நாளுல்ல விகடு அவரை ஆபீஸ்ல பார்த்ததேயில்ல. ஏன் கோபி, சுபா கூட பார்த்ததில்ல. அவரைப் பார்த்தவரு ஆபீஸ் ஆரம்பிச்சதிலிருந்து இருக்குற லெனின் மட்டும்தான். சுபாகரைப் பார்த்த உடனே, "வாங்க எஸ். ஒன். சார்!" அப்பிடிங்றார் லெனின்.
            "எனி பையிங் ஆர் செல்லிங்?" அப்பிடிங்றார் லெனின்.
            "நத்திங்! சும்மா பார்த்துட்டுப் போவலாம்னுதான் வந்தேன்." அப்பிடிங்றார் சுபாகர். அவர் சொல்லுறதுல அப்படி ஒரு பணிவு, எளிமை எல்லாம் இருக்கு. உட்கார்றத கூட நாற்காலிக்கு வலிக்காம ரொம்ப நாசுக்கா உட்காருறாரு.
            "எதாச்சிம் ஸ்கிரிப்ட் பார்க்குறீங்களா சார்!" அப்பிடிங்றார்.
            "பார்மா செக்டார்ஸ் அண்ட் மார்கெட்டிங் செக்டார்ஸ். வோக்கார்ட் பார்மா அன்ட் டாடா எல்க்ஸி ரண்டும் பாருங்க!" அப்பிடின்னு ரொம்ப மென்மையா சொல்றார் சுபாகர்.
            "வெகடு ரண்டு ஸ்கிரிப்டையும் பார்த்து ரேட் சொல்லுங்க!"ங்றார் லெனின்.
            "டாடா எல்க்ஸி சிக்ஸ்டி ஒன், வோக்கார்ட் ஒன் செவன்டி போர்"ங்றான் விகடு.
            சுபாகர் சின்ன சிரிப்பு சிரிச்சிட்டு எழுந்து போறாரு. லெனின் அவர் பின்னால ஓடிப் போயி, "எஸ் ஒன் சார்! டீ, காபி!"ங்றார்.
            "நோ தேங்க்ஸ்!" அவ்வளவுதான் பேசுறார். லெனினோட கையை ஹேண்ட் ஷேக் பண்ணிட்டு வெளியில போயிட்டே இருக்குறார்.
            விகடுவோட இத்தனை நாளு அனுபவத்துல வந்த வேகத்துல டிரேடிங் ஆபீஸ்லேர்ந்து வெளியே போன ஒரே ஆளு இவருதான். அவரு போன பின்னாடி லெனின் வந்து எல்லார்கிட்டயும் சொல்றாரு. "இவர நல்லா நோட் பண்ணிக்குங்கப்பா! நம்ம கம்பெனி ஆரம்பிச்ச நைன்டி ஒன்ல இன்போஸிஸ் ஷேரை எண்பத்து மூணாயிரத்துக்கு வாங்குனு ஆளு இவருதாம். அதுல என்னா ஆச்சரியம்னு கேட்குறீங்களா! அதை டூ தெளஸண்ட் ஒன்ல எண்பத்து ஏழு லட்சத்துக்கு வித்தாரு. அன்னிக்கு ஒரு நாளுக்கு மட்டும் அவரு வித்ததால நம்மோட புரோக்கரேஜ் கமிஷன் இருபத்தாறாயிரத்துக்கு மேல. திருவாரூர்ல இவரு அளவுக்கு ஆல் டைம் ரெகார்ட் சம்பாதிச்ச ஆளு யாருமில்ல. மார்க்கெட் பக்கம் வரவே மாட்டாரு. ஷேர்ஸ் வாங்குனா ஒன்லி டெலிவரிதாம். நோ டே டிரேடிங்க. இப்போ வந்து ரண்டு ஷேரை விசாரிச்சிட்டுப் போனார்ல. அதெ நல்லா நோட் பண்ணிக்குங்க. அத அவரு வாங்கப் போறார்னு அர்த்தம். அவரு இங்க வந்து அதெ விசாரிச்சதல்லாம் ச்சும்மா பேருக்கு. எல்லாத்தியும் வீட்டுலயே ந்நல்லா பார்த்துட்டு வந்துதாம் இங்க பேருக்கு விசாரிப்பாரு. அது அவரோட செண்டிமென்ட். இன்னும் கொஞ்ச நாளுல்ல பாருங்களேன். அதெ வாங்குவாரு. இடையில விக்கவே மாட்டாரு. நல்லா ரேட் வர்றப்பத்தான் விப்பாரு. வாங்குறப்ப ஆயிரத்துல வாங்குவாரு. விக்குறப்ப லட்சத்துல விற்பாரு. நம்ம ஆளுங்க யாராவது ஷேர் டெலிவரி எடுக்கணும்னா அந்த ஷேரை எல்லாருக்ருக்கும் ரெகமண்ட் பண்ணிச் சொல்லி விட்டுடுங்கப்பா!" அப்படிங்றார் லெனின்.
            லெனின் இந்த சேதியைச் சொன்னதும் விகடுவின் மனசில் நம்பிக்கைக் கீற்று ஒளிர்றது போல இருக்கு. ஆக ஷேர் மார்க்கெட்டுல சம்பாதிக்கிறவங்களும் இருக்காங்க போலருக்குன்னு அவன் நெனைச்சுக்குறான். ஆனா ஷேர் மார்கெட்டுல சம்பாதிக்கிறவங்க அடிக்கடி மார்கெட்டுக்கு வர மாட்டாங்க போலருக்குன்னு அவன் புரிஞ்சிக்கிட்டது அந்தச் சந்தர்ப்பத்துலதான்.
            லெனின் சொன்னது போலவே எஸ் ஒன். சுபாகர் ரெண்டு வாரம் கழிச்சு வந்தாரு. விகடுதான் ஆர்டர் போட்டான். வோக்கார்ட் ஐநூறு பையிங் பண்ணாரு. டாடா எல்க்ஸி முந்நூறு பையிங் பண்ணாரு. மொத்தமா ரெண்டும் சேர்த்து வாங்குனதுக்கு ஒரு லட்சத்து ஐயாயிரம் செக் போட்டுக் கொடுத்துட்டு எழுந்திருக்கிறாரு. எழுந்திரிச்சவரு பையில கையை விட்டு லெனினுக்கு இருநூறு ரூவாய் எடுத்துக் கொடுக்குறாரு. அதை அவர ரொம்ப பவ்வியமாய் வளைஞ்சு நெளிஞ்சி வாங்கிக்கிறாரு. மத்தவங்க கூட  வேலை பார்க்குற கோபி, சுபா, விகடுவுக்கு ஆளுக்கு நூறு ரூவா கொடுக்கச் சொல்லி முந்நூறு ரூவாய எடுத்துக் கொடுத்துட்டு அவரு பாட்டுக்கு போய்ட்டே இருக்காரு.
            அவரு வாங்குன ஸ்டாக்குகளை அவரு பின்னாளில என்ன விலைக்கு வித்திருப்பாருங்ற சஸ்பென்ஸ் இந்நேரத்துக்கு ஒங்க மனசுல வந்திருக்கும். அந்த சஸ்பென்ஸ உடைக்கணும்னா இன்னும் நீங்க சில வாரங்கள் காத்திருக்கணும். உங்கள அவ்வளவு நாட்கள் காக்க வைக்காமா இப்போவே அதைப் பத்தியும் சொல்லிடுறேன்.
            ஷேர் மார்க்கெட் ஆபீஸூக்கு ஆயிரம் பேரு வருவாங்க, போவாங்க. அத்தன பேரிலயும் விகடு கவனிச்ச ஒரே ஆளு சுபாகருதான். 2003 ல வாங்குன இந்த ஸ்டாக்குகள அவரு 2013 க்கு மேலதான் வித்தாரு. வோக்கார்ட்டை 2013 வது வருஷத்துல 2000 க்கு மேல வித்தாரு. டாடா எல்க்ஸியை 2015 ல ஆயிரத்து நூறு ரூவாய்க்கு மேல வித்தாரு. ஒரு லட்சம் சொச்சத்துக்கு வாங்குனத அவரு பதினாலு லட்சத்துக்கு மேல வித்தாரு. அவ்வளவு வருஷமும் அந்த ஸ்டாக்குகளை வெச்சிருந்ததுக்கு டிவிடெண்ட், ரைட் இஷ்யூல வந்த ஷேர்ஸ், போனஸ் ஷேர்ஸ்ன்னு வேற நிறைய வெச்சிருந்துப்பாரு. அது தனிக்கணக்கு. அது அவருக்குத்தாம் தெரியும். இடையில அவரு அந்த ஸ்டாக்கை எதுவும் பண்ணல. இப்படி அவரு நிறைய ஸ்டாக்குகளை லட்சத்துக்கு வாங்கி பல லட்சத்துக்கு, கோடி கணக்குல வித்திருக்காரு. ஒவ்வொரு வருஷமும் வந்து லட்சத்துக்கு ஸ்டாக்குகளை வாங்கிப் போட்டுட்டு, முன்னாடி வாங்கிப் போட்ட ஸ்டாக்குகளை பல லட்சத்துக்கு வித்துட்டுப் போவாரு. ஆக ஸ்டாக் மார்க்கெட்டுங்றதுல நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. எது அதிகம் இருக்குன்னுதான் தெரியலன்னு இப்போ தடுமாறுறான் விகடு. சுருக்கமா சொல்லணும்னா நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடுவுல எங்க இருக்கோம்னு புரியாம தவிக்கிறான் அவன்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...