29 Sept 2019

சத்திய சோதனை



செய்யு - 222
            சுப்பு வாத்தியாரு திட்டைப் பள்ளியோடத்துக்குக் கிளம்புறாரு. செய்யு மணமங்கலம் பள்ளியோடத்துக்குக் கிளம்புறா. அவங்களுக்கு முன்னாடியே விகடு வேலைக்குக் கிளம்புறான். சுப்பு வாத்தியாரு வாழ்க்கையில ரொம்ப நாளைக்குப் பெறவு இப்பதாம் ஒரு வசந்தத்தைப் பார்க்குறாரு. சுமைகள் கொஞ்சம் கொஞ்சமா இறங்குறது அவருக்குக் கொஞ்சம் இதமா இருக்கு.
            விகடு மாசா மாசம் கொண்டாந்து கொடுக்குற ஐயாயிரம் வாங்குன கடன்களைக் கொஞ்சம் கொஞ்சமா அடைக்குறதுக்கு அவருக்கு உதவியா இருக்கு. அதுலதாம் குடும்பச் செலவுகளைச் சிரமம் இல்லாம் பார்த்துக்கிறாரு. அவரு சம்பளம் முழுசும் சொசைட்டு லோனுக்கும், பேங்குல வாங்குன பெர்சனல் லோனுக்குமா கோவுது. அதுக்கு இடையில கைமாத்தா வாங்குன கடன் ஒண்ண அடைக்கிறதுக்குத் திடீர்னு பத்தாயிரம் தேவையாயிருக்கேன்னு அவரு கையைப் பிசைஞ்சுகிட்டு உட்காந்துருக்காரு. அதைப் பார்க்குற விகடு அவனாப் போயி பத்தாயிரம் ரூவாய்ய கொடுக்குறான். சுப்பு வாத்தியாருக்கு முதன் முதலா இவன் மேலயும், இவன் பார்க்குற வேல மேலயும் சந்தேகம் தட்டுது.
            வாங்குற சம்பளத்த முழுசுமா கொடுத்திடுறதா சொல்றான். அதிலேந்து தினமும் முப்பது ரூவாயை அவருதான் வெங்குகிட்ட கொடுத்து வேலைக்குக் கிளம்புறப்ப கொடுக்கச் சொல்றாரு. அந்தக் காசைப் பைசா காசு செலவு பண்ணாம சேர்த்து வெச்சிருந்தாலும் ஆறேழு மாசத்துக்குள்ள எப்படி பத்தாயிரம் சேர்க்க முடியும்னு அவருக்கு யோசனை போகுது.
            நம்ம மவன்னாலும் எங்க சம்பாதிக்கிறான்? எப்படிச் சம்பாதிக்குறான்? அப்பிடிங்றதைத் தெரியாம இருந்துடக் கூடாதுன்னு நெனைக்குறாரு சுப்பு வாத்தியாரு. ஒரு நேரம் போல ஒரு நேரம் இல்லாம தப்பான வழியில போயிட்டு இதைச் சம்பாதிச்சிருந்தான்னா... அதை முளையிலயே கிள்ளிடணும் இல்லையா!முகத்தைப் பார்த்துட்டு பத்தாயிரம் பணத்தைத் தூக்கிக் கொடுக்குறான்னு கொடுக்குறப்பல்லாம் ஆசை ஆசையா பல்ல இளிச்சிகிட்டு வாங்கிகிட்டு பிற்பாடு ஏதாச்சிம் ஆபத்துல மாட்டிகிட்ட பெறவு முன்னாடியே கவனிக்காம விட்டுட்டேன்னு இருந்துடக் கூடாது இல்லையா! மவன் இதை நல்ல விதமா சம்பாதிச்சு இருந்தாலும் சரிதாம், இல்ல கெட்ட வழியில கொண்டாந்து இருந்தாலும் சரிதாம். விசாரிச்சுப் புடணும். அவன் பார்க்குற வேலையை நேரிலயும் போயிப் பாத்துப்புடணும்னு ஒரு முடிவு கட்டிக்கிறாரு. அந்த முடிவோட இதை இப்படியே விடக் கூடாதுன்னு, அவனைக் கூப்பிட்டுக் விசாரணையைப் போடுறாரு, "இந்தப் பத்தாயிரம் பணம் எங்கேந்து வந்துச்சுடாம்பீ?" அப்பிடின்னு.
            "சம்பாதித்தப் பணம்தான்!" அப்பிடிங்றான் விகடு.
            "அதாங் சம்பாதிக்குற பணத்த முழுசா கொடுத்திடுறீயேடா தம்பீ! பெறவு எப்பிடிடாம்பீ!" அப்பிடிங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "எங்க வேலை அப்படி. எப்படி வேணாலும் பணம் வரும்."
            "அதாம்டாம்பீ! எப்படி வருதுன்னு கேக்குறேம்?"
            "வியாபாரத்துல லாபம் நிறைய கிடைத்தால் வாடிக்கைப் பண்றவங்க ஆயிரம் ஐநூறு, நூறுன்னு கொடுப்பாங்க. நல்லா வியாபாரம் நடந்தா ஆபீஸ்லயும் தனியா பணம் கொடுப்பாங்க!"
            "ஓ! அப்பிடியா! நல்ல பணந்தானே?"
            "உழைத்த பணம்ப்பா!"
            அவ்வளவுதான். அதுக்கு மேல சுப்பு வாத்தியாரு எதுவும் கேட்கல. விகடுவும் மேற்கொண்டு எதுவும் சொல்லல. அவன் பேச்சை அவரு நம்புறாரு. அப்படித்தாம் விகடுவுக்கு அவரோட முகம் காட்டிக் கொடுக்குது.
            சுப்பு வாத்தியாரு மனசுல பெரும்படியான சந்தேகம் போயிருந்தாலும், மனசுல அங்க இங்க கொஞ்சம் சந்தேகம் ஒட்டியிருக்கு. இருந்தாலும் இப்படி இந்த வயசுல மவன் வேலை செஞ்சு சம்பாதிக்கிற ஆபீஸையும், மவன் வேலை பார்க்குற அழகையும் பார்க்கணும்ங்ற ஆசையும் சுப்பு வாத்தியாருக்கு வருது. அவன் திருவாரூர்ல எந்த இடத்துல வேலை பார்க்குறாங்றத மவங்கிட்ட கேட்குறதுக்கு அவருக்குத் தயக்கமா இருக்கு. இந்த இடத்துலதாம் அவரோட ஆத்ம தோஸ்த்தான விநாயகம் வாத்தியாரைத் துணைக்குக் கூப்பிட்டுக்கிறாரு.
            அன்னிக்கு ராத்திரியே சங்கதி ஆரம்பமாகுது. விகடு வேலை விட்டு வீட்டுக்கு வர்ற நேரத்துக்கு முன்னாடியே வந்து விநாயம் வாத்தியாரு சுப்பு வாத்தியார் வீட்டுல வந்து உட்கார்ந்து கிடக்குறாரு.
            விகடு சைக்கிள்ல வந்து இறங்குன உடனேயே எதார்த்தமா வீட்டுக்கு வந்தது போல விநாயகம் வாத்தியாரு, "வா விகடா!" அப்பிடிங்றார்.
            இவனும், "வாங்க! வாங்க! வாங்கய்யா!" அப்பிடிங்றான்.
            "ச்சும்மா அப்பாவ பாத்துட்டுப் போவலாம்னு வந்தேங்! நல்ல நேரம் நீயும் வந்துட்டே. ஒன்னயும் பார்த்த மாதிரி ஆயிடுச்சு!" அப்பிடிங்றார் விநாயகம் வாத்தியார்.
            "சரிங்கய்யா! நீங்க எப்ப வேணாலும் வரலாம். அதுக்கு ஏம் எங்கிட்ட அனுமதி கேட்குற கணக்கா சொல்றீங்களேய்யா!" அப்பிடிங்றான் விகடு.
            "வேலையெல்லாம் எப்பிடிப் போகுது!"
            "ம்! நல்லா போகுதுங்கய்யா!"
            "அப்பா என்னெம்மோ வேலைன்னு சொன்னாங்களே..." என்று நெற்றியைச் சுருக்கிக் கொண்டு இழுக்கிறார் விநாயகம் வாத்தியார்.
            "பங்குத் தரகு நிறுவனத்துல பங்கை வாங்கி, வித்துக் கொடுக்கற வேலை!"
            "எந்த இடத்துல வேல?"
            "திருவாரூரு தெற்கு வீதி முனங்கு இருக்குலங்கய்யா! அங்க தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்."
            தனக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்த வாத்தியார் இல்லையா! தங்கிட்ட படிச்ச பையன் என்ன வேலை பார்க்குறான்னு தெரிஞ்சிக்க ஆசை இருக்காதா! அப்பிடிதான் விநாயகம் வாத்தியார் கேக்குறதா நினைச்சுக்கிறான் விகடு.
            "சம்பளம்லாம் எப்பிடி?" அடுத்தப் பிடியைப் போடுறார் விநாயகம் வாத்தியாரு.
            "மாசம் ஐந்தாயிரங்கய்யா!" அப்பிடிங்றான் விகடு.
            "அப்பா அப்பைக்கப்ப சொன்னத பார்க்குறப்ப கூட இருக்கும் போலருக்கே!" என்று சந்தேகமாக இழுக்கிறார் விநாயகம் வாத்தியார்.
            "மாசம் சம்பளம் அவ்வளவுதாங்கய்யா! வாடிக்கைப் பண்றவங்க மூலமா நூறு, இருநூறுன்னு ஆயிரம் வரைக்கும் கொஞ்சம் முன்ன பின்ன கிடைக்கும். வியாபாரம் அதிகமா இருந்தா அதுக்குத் தனியா நிறுவனத்துலேந்து கொடுத்துடுவாங்கய்யா! நாம்ம மாச சம்பளத்த மட்டுந்தாங்கய்யா வீட்டுல கொடுக்குறது. அதை அதாங்கய்யா அதை கையில வெச்சிக்கிறது!"
            "ரோம்ப சந்தோஷம்ப்பா! ஒன்னயப் பத்தின கவலைதாம் அப்பாவுக்கு நிரம்ப இருந்துச்சு. இப்போ சந்தோஷமா இருக்காரு. ஒஞ் சம்பாத்தியத்துலதாம் குடும்பச் செலவைுயம் பார்த்துகிட்டு, கடன உடன வாங்குனத கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிட்டு இருக்குறதா ஒங்கப்பா சொல்றப்ப மனசு நெறைவா இருக்குப்பா! ஒன்னயப் பத்தின கவலெ இப்போ விட்டுச்சு ஒங்கப்பாவுக்கு!"
            இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே நிக்குறான் விகடு.
            "ஆபீஸூ தெற்கு வீதியில எங்கச் சொன்னே?" ன்னு மறுபடியும் கேட்குறாரு விநாயகம் வாத்தியார்.
            "அந்த முனங்குல தொண்டாமுத்தூர் கேப்பிட்டல். அங்க வந்து யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க. அது தெற்கு வீதிக்கு முக்கியமான இடம்ங்கய்யா!" அப்பிடிங்றான்.
            "தெற்கு வீதி முனங்கு. தொண்டாமுத்தூரு கேப்பிட்டலு!" விகடு சொன்னதை அப்படியே மனசுக்குள்ள சொல்லிப் பார்த்துக்குறது போல சொல்லிக்கிறாரு விநாயகம் வாத்தியார்.
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...