28 Sept 2019

பிள்ளைகளின் பிரியங்களைப் பார்சல் கட்ட...



            பிள்ளைகளின் பிரியங்களைப் பார்சல் கட்ட பெரிய பிரம்ம வித்தைகள் தேவையில்லை என்று அறியும் தருணம் இருக்கிறதே அது ஒருவகை ஞானமடைதல்.
            ஒரு சின்ன பகிர்தல் போதும். உங்களிடம் எது இருக்கிறதோ, அதைப் பகிருங்கள். கொஞ்சம் நேரத்தைப் பகிர்ந்தால் அதுவும் பகிர்தல்தாம். கொஞ்சம் நேரம் செலவிட்டு அவர்களோடு மனம் விட்டுப் பேசினால் போதும். அது ஆகச் சிறியதாகத் தெரிந்தாலும் அதைப் போன்ற மிகப் பெரிய பகிர்தல் உலகில் வேறு ஏதும் இருக்கிறதா என்னவென்று தெரியவில்லை.
             ஒரு நாள் சாப்பாட்டைப் பகிர்ந்து பாருங்கள். உலகத்தில் பிள்ளைகளின் மகிழ்ச்சியான நாள் அதுதான். ஓர் ஆசிரியர் தன்னோடு அமர்ந்து சாப்பிடுவார் என்பதை நம்ப முடியாத உலகத்தில் பிள்ளைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
            ஓர் ஆசிரியர் தன்னோடு சரிநிகர் சமானமாகப் பேசுவார் என்பதைக் கனவு கூட காண முடியாத கல்விக்கூடங்களில் பிள்ளைகள் பயின்று கொண்டிருக்கிறார்கள்.
            உயிர்களின் இயல்பு பகிர்தல்தான் அல்லவா! அதைப் பகிரும் போது அவர்கள் உயிர்ப்பு உள்ளவராகிறார்கள். அந்த உயிர்ப்புதாம் கல்விக்குத் தேவைப்படுகிறது. உண்மையில் இந்தக் கல்விக்குத் தேவைப் பெரிய புத்திசாலித்தனமோ, நுண்ணறிவோ இல்லை. பிரியமான பகிர்தல்கள் மட்டுமே. அந்தப் பிரியமான பகிர்தல்களில்தான் மன இறுக்கம் இல்லாத நுண்ணறிவு, மன உளைச்சல் தராத புத்திசாலித்தனம் ஆகியன உருவாகின்றன.
            நம் கல்வி ஏன் மனஇறுக்கம் மற்றும் மன உளைச்சல் தருவதாக இருக்கிறது என்றால் அது பகிர்தலுக்கு வாய்ப்பற்ற ஒரு வழிப் பாதையாக இருக்கிறது. ஒரு வழிப் பாதைகள் வேகமான பயணத்தைத் தரலாம். அனுபம் பெறத் தக்க பயணத்தைத் தருமா என்ன?          
            பகிரப் பகிரத்தான் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் புரிபடாதவைகள் துலக்கமும், விளக்கமும் பெறுகின்றன. எங்கே வெளிச்சம் பரவுகிறதோ அங்கு இருட்டு இருப்பதில்லை. மற்றபடி இருட்டை விரட்ட வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. அவ்வண்ணமே புரியாமையை விரட்ட பகிர்தல் ஒன்று போதும். இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் பகிரும் போது ஒரு கூட்டுச் சக்தி உருவாகிறது. அந்தச் சக்தியின் முன் விலகாத இருள் ஏதும் உண்டா?!
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...