27 Sept 2019

திருவாரூர் தியாகராசர்கள்!




செய்யு - 220
            வாத்தியார்மார்கள்ல இஸ்மாயிலு வாத்தியாரு போல இருந்த ஆளுகளும் இருக்காங்க. அவருக்கு நேர்மாறா இருக்குற வாத்தியார்களும் இல்லாம இல்ல. ஒரு பாக்கெட்டு நெலக்கடல வாங்கித் திங்கும் போது அதுல ஒரு சில சொத்த கடலைக இல்லாமலா போயிடும்? இருக்கத்தானே செய்யும். அப்பிடி வெச்சுக்குங்களேன். திருவாரூர்ல தியாகராசன்ங்ற பேருக்குக் குறைவு இருக்காது. ஏன்னா இங்க இருக்குற பெரிய கோயிலோட சாமியோட பேரு அதுதாம். அதால அந்தப் பேரு உள்ள ஆளுங்க இங்க அதிகமாக இருப்பாங்க. ஒரு தெருவுல புகுந்து கணக்கு எடுத்தீங்கன்னா பத்து பேருக்காவது அந்தப் பேரு இருக்கும். அந்த பேர்ல இருந்த தியாகராசன் வாத்தியாரு திருவாரூரை ஒட்டுன திருப்புரத்துல குடியிருந்தாரு. அவரு திருவாரூருக்குப் பக்கத்தில ஏனங்குடிங்ற ஊர்ல இருக்குற சின்ன பள்ளிக்கூடத்தில வேலை பார்க்கிறாரு.
            அதென்ன சின்ன பள்ளிக்கூடம்னா? அதாங் எலிமெண்டரி ஸ்கூல்ன்னு சொல்லுவாங்களே தொடக்கப் பள்ளி. அப்போ பெரிய பள்ளிக்கூடங்றது  ஹைஸ்கூல்னு சொல்லுவாங்களே உயர்நிலைப் பள்ளி அதுதாங். அதுக்கு ஏத்த மாதிரி சின்ன பள்ளிக்கூடம்னா கட்டடங்கள் கம்மியாத்தானே இருக்கு. பெரிய பள்ளிக்கூடம்ன்னா நெறைய கட்டடங்கள் இருக்குல்ல. அப்படிக் கூட அந்தப் பேரு வந்திருக்கலாம்.
            தியாகராசன் வாத்தியாருக்கு உடம்பு, நரம்பு, ரத்தம், சதை எல்லாமும் ஒரே யோசனைதான். அதுதான் ஷேர் மார்க்கெட்டு. அவரோட நெனைப்பு, கனவு எல்லாம் அதுதான். எந்நேரமும் அதப் பத்தி மட்டுந்தான் சிந்திச்சுக் கெடப்பாரு. வூட்டுல அவரோட பொண்டாட்டி, புள்ளைகள் பத்தியெல்லாம் சிந்திப்பாரான்னு தெரியல. எப்போ பார்த்தாலும் ஷேர்களோடு இருப்பவரு, ஷேர்களோட வாழ்பவருன்னு அவரப் பத்தித் தாராளமா சொல்லலாம்.
            அவரு ஒரு ஆளு வந்தாப் போதும். வேற யாரும் தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்ல டிரேடிங் செய்ய வேண்டிய அவசியமே இல்ல. அவரு ஒரு ஆளே ஒரு கோடி, ரெண்டு கோடிக்கு டிரேடிங் பண்ணுவாரு. எந்த ஸ்டாக்கா இருந்தாலும் ஆயிரம், ஐயாயிரம் அளவுலதாம் ஆர்டர் போடச் சொல்லி வாங்குவாரு அல்லது விற்பாரு. லாபமும் ஒரு நாளைக்கு ஐயாயிரம், பத்தாயிரம்னு பார்ப்பாரு. இப்படி ஒரு ஆளு சம்பாதிச்சா அவருக்குக் கவனம் எப்படி பள்ளிக்கூடத்துல போவும்? அதால அவரு பள்ளிக்கூடம் போவுறது கம்மி. ஷேர் மார்கெட்டுக்கு வர்றது அதிகம். அவரு தொண்டாமுத்தூரு கேப்பிட்டல் தவிர இன்னும் நாலைஞ்சு டிரேடிங் ஆபீஸ்ல வேற அக்கெளண்ட் வெச்சிருந்தாரு. அவர தொண்டாமுத்தூர் கேப்பிட்டலுக்குக் கொண்டு வர்றதுக்கான அத்தனை வேலையையும் லெனின் பண்ணுவாரு. பையிங், செல்லிங் கமிஷன்ல ஹெட் ஆபீஸ்ல பேசி அவருக்கு நெறையவே ரிலாக்சேசன் பண்ணித் தருவாரு. அதுவும் இல்லாம திருவாரூர் ஷேர் டிரேடிங் ஆபீஸ்ல தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்லதாம் கமிஷன் கம்மிங்றதால தியாகராசன் வாத்தியாரும் இங்கதாம் அடிக்கடி வருவாரு.
            தியாகசரான் வாத்தியாரு ரொம்ப நாட்கள் பள்ளிக்கூடம் பக்கமே போவாம இங்க மார்கெட்டு பக்கம் வந்து உட்கார்ந்துடுவாரு. "என்ன டி எய்ட் சார்! ஸ்கூல் பக்கம்லாம் போவீங்களா? புள்ளைங்களுக்கு பாடம்லாம் சொல்லிக் கொடுப்பீங்களா?" என்று லெனினுக்குத் தியாகராசன் வாத்தியாரைப் பார்த்தா கேலியும் கிண்டலும் தானா வந்துடும். இப்படியெல்லாம் அப்படியும் இப்படியும் பேசித்தாம் கிளையண்ட்ஸ பிடிச்சக்கணும்ங்ற வித்தையெல்லாம் லெனினுக்கு அத்துப்படிங்றதால அவரோட பேச்சுக்கு மயங்கிக் கூட நிறைய கிளையண்ட்ஸ் இங்க ஆபிஸ்க்கு வந்துகிட்டு இருந்தாங்க.
            "போவாமா ன்னா? ஒரு வாரத்துல நடத்த வேண்டியதெ ரெண்டே மணி நேரத்துல முடிச்சிடுவேம். அவ்வளவுதாம் பாடம். அதப் போயி வாரக் கணக்கா உட்காந்து நடத்த முடியுமா? பாடமும் ஷேர்களை வெச்சித்தாம் நடத்துவேம். பத்து ரூவாய் விக்குற பங்கோட வெலை அஞ்சு ரூவா கூட ஏறுனா எவ்வளவும்பேம். அதாங் கூட்டலு சொல்லிக் கொடுக்குற வெதம். அஞ்சு ரூவா வெல இறங்குனா எவ்வளவும்பேம். அதாங் கழித்தலு சொல்லிக் கொடுக்குற வெதம். அஞ்சு பங்கு வெல ஏறுனா எவ்வளவும்பேம். அதாங் பெருக்கலு சொல்லிக் கொடுக்குற வெதம். அந்தப் பங்கை அஞ்சு பேரு சேர்ந்து வாங்கணும்னு ஆளுக்கு எவ்ளோ போடணும்பேம். அதாங் வகுத்துல சொல்லிக் கொடுக்குற வெதம். அவ்வளவுதாங் கணக்கு. பங்குகளோட பேரை தமிழ்ல எழுதச் சொன்னாக்க தமிழ் பாடம். இங்கிலீஷ்ல எழுதச் சொன்னா இங்கிலீஷ் பாடம்.  ரசாயனப் பங்கு ஒண்ண எடுத்துகிட்டுப் பேசுனா அதாங் அறிவியலு. அக்ரி பங்க ஒண்ணு எடுத்துட்டுப் பேசுனா அதாங் சோசியலு. வாழ்க்கையே ஷேர் மார்கெட்டுதாங்க லெனின்!" அப்பிடின்னு லெனினோட கேள்விக்குப் பதில் சொல்லுவாரு வாத்தியார்.

            "என்ன இருந்தாலும் ஒங்க முகத்த பார்க்காம புள்ளைங்களுக்குத் தவிப்பா இருக்காதா டி எய்ட் சார்?" என்று லெனின் விட மாட்டார்.
            "நீங்க நெனைக்குற மாதிரி பள்ளியோடத்துக்கு போவாமல்லாம் இருக்க மாட்டேம் லெனின். ரொம்ப நேரம்லாம் நம்மால அங்க உக்கார முடியாது. நாம்ம அங்க இல்லாதால அங்க பாதிப்பு வந்திடக் கூடாது பாருங்க. நம்ம சொந்தக் காசுல ஒரு ஆளயும் அங்க போட்டிருக்கேம். அவ்வேம் பாத்துப்பாம். இந்த எஜூகேஷன் சுத்த வேஸ்ட்டு லெனின். புள்ளைங்களுக்கு ஸ்டாக் மார்க்கெட்ட பத்திச் சொல்லிக் கொடுக்கணும். ஈஸியா சம்பாதிச்சிடலாம். இதெச் சொல்லிக் கொடுக்காம என்னென்னமோ சொல்லிக் கொடுக்கச் சொல்றாங்க. அதுல நமக்கு இஷ்டமில்ல லெனினு. அதாலதாம் லெனினு நாட்டுல அன்எம்ப்ளாய்மெண்ட் பிரச்சனை தலைவிரிச்சு ஆடுது. நீங்க என்ன சொல்றீங்க?" அப்படிம்பார்.
            அதுக்கு மேல அவருகிட்ட என்ன பேசுறது? "சூப்பர் சார்!" அப்பிடிம்பார் லெனின்.
            "யப்பா மேனேஜரு! வர்ற கிளையண்ட்ஸ கெடுத்து விட்டு வர்ற விடாம பண்ணி ஹெட் ஆபீஸ்லேந்து கமிஷன் கம்மியாயிடுச்சுன்னு பேச்சு வாங்க வெச்சிடாதே!"ன்னு கோபி சொன்னார்ன்னா அங்க அதுக்கு ஒரு சிரிப்பு பத்திக்கும் எல்லாருக்கும்.
            தியாகராசன் வாத்தியாரு ஆர்டர்களை எடுத்து விடுவாரு. அதுக்கு முன்னாடி அவரு பேரச் சொல்லாம லெனின் டி எய்ட்ன்னு சொல்றாரேன்னு ஒங்களுக்கு ஒரு கேள்வி வந்திருக்கும். அதுக்கான காரணத்தைச் சொல்லிட்டே மேற்கொண்டு பேசலாம். இங்க ஆபீஸ்ல கிளையண்ட்ஸ் எல்லாத்துக்கும் ஒரு பேரு உண்டு. அவங்களோட பேரோட முதல் எழுத்தோட ஒரு நம்பரு இருக்கும். அதாங் அவங்களோட பேரு. தியாகராசன் வாத்தியாரோட முதல் எழுத்து டி இல்லையா. அதோட அவருக்குன்னு ஒரு நம்பரு எய்ட். அதால அவர ஆபீஸ்ல டி எய்ட்ன்னுதாம் கூப்புடுவாங்க. ஏன் இப்பிடின்னா அவருக்கு ஆர்டர் போடுறப்ப டி.வி.ஆர். டி எய்ட்ன்னு ஆர்டர்ல போட்டுதாம் அதைச் செய்ய முடியும். டி.வி.ஆர்.ங்றது திருவாரூரோட சுருக்கம்.
            அதே போல இங்க மார்கெட்ட விகடுவுக்கு அறிமுகப்படுத்தின வெங்கடேசன வீ செவன் அப்படிப்பாங்க. வீ ங்றது அவரோட பேரோட முதல் எழுத்து. அத்தோட அவருக்கு ஒரு நம்பரு செவன்னு. அவருக்கு ஆர்டர் போடுறப்ப டி.வி.ஆர். வி செவன்னு ஆர்டர் போடுவாங்க.
            தியாகராசன் ஆர்டர் போட ஆரம்பிச்சார்ன்னா நாலு சிஸ்டம் இருந்தாலும் பத்தாது. ஆனா இங்க ஆபீஸ்ல இருக்குறது மூணு சிஸ்டம்தானே. மூணுலயும் மூணு பேர்கிட்டயும் ஆர்டர் போடச் சொல்வாரு. "ரான்பாக்ஸியில தெளசண்ட் செல்லிங் போங்க. எஸ்ஸார் ஆயில்ல பைவ் தெளஸண்ட் பையிங் போங்க. எம் அன்ட் எம்ல பைவ் ஹண்ட்ட்டுக்கு பையிங் ரேட்லேந்து ஒரு ரூவா கம்மி பண்ணி ஸ்டாப் லாஸ் போடுங்க." அப்பிடின்னு சொல்லிகிட்டே இருப்பாரு.
            வாங்குன ஸ்டாக் விலை ஏறுனா லாபம். அது போல வித்த ஸ்டாக் விலை இறங்குனா லாபம். இதுக்க நேர்மாறா நடந்தா நஷ்டம். வாங்குற ஸ்டாக் விலை ஏறும்னு எப்படிச் சொல்ல முடியும்? அது விலை ஏறுனாலும் ஏறும், விலை இறங்குனாலும் இறங்கும் இல்லையா. வாங்குன ஸ்டாக் அதல பாதாளத்துக்கு விலை இறங்கி அதால ரொம்ப நஷ்டமாயிடப் படாதுங்றதுக்காக ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல இறங்குனா வித்திடுற மாதிரி ஆர்டர் போடுறதுதாங் ஸ்டாப் லாஸ்ங்ற ஆர்டரு. அதாவது ஐம்பது ரூவாய்க்கு வாங்குற ஸ்டாக் ஒரு கணக்குப் பண்ணி நாப்பத்து எட்டுக்குக் கீழே இறங்குனா வித்திடச் சொல்லி வாங்குறப்பவே ஆர்டர் போட்டுறதை ஸ்டாப் லாஸ் ஆர்டர் அப்பிடிம்பாங்க. அதே போல வித்த ஸ்டாக் குறிப்பிட்ட விலைக்கு மேல ஏறுனா அதுக்கும் வாங்குறதுக்கு ஸ்டாப் லாஸ் ஆர்டர் போட்டு வெச்சிக்கலாம். அதாவது ஐம்பது ரூபாய்க்கு வித்த ஸ்டாக் விலை இறங்கிட்டே போனா லாபம். மாறா ஏறிட்டு போனா நஷ்டம் இல்லையா. அதால ஐம்பதுக்கு வித்ததை ஒரு ஐம்பத்து ரண்டுக்கு வாங்குற மாதிரி ஸ்டாப் லாஸ் ஆர்டர் போட்டுட்டா ரண்டு ரூவாய் நஷ்டத்தோட முடிஞ்சிடும் இல்லையா. இப்படி ஒரு ஸ்டாக்கை வாங்குறப்பவோ, விற்குறப்பவோ ஸ்டாப் லாஸ் ஆர்டரையும் துல்லியமா போட்டு டிரேடிங் பண்ணுறவரு தியாகராசன் வாத்தியாரு.
            லாபம் வந்திடுச்சுன்னா மேல மேல ஆர்டரைப் போட்டு அன்னிக்கு ஒரு நாளைக்கே கம்பெனிக்கு அய்யாயிரம், பத்தாயிரம் கமிஷன் வர்ற அளவுக்கு வியாபாரம் பண்ணிடுவாரு வாத்தியாரு. நஷ்டம் ஆயிடுச்சுன்னா, "வாங்குன ஸ்டாக்கையெல்லாம் டெலிவரி எடுங்க நாளைக்கு விப்போம்!" அப்பிடிம்பாரு. அன்னைக்கே வாங்கி விற்குறதை விட, இப்படி டெலிவரி எடுக்குறப்ப கமிஷன் பத்து மடங்கு கூடங்றதால தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்ல அதைச் செஞ்சு கொடுப்பாங்க. அப்படி டெலிவரி எடுத்ததை மறுநாளு விலை ஏறியிருந்தா வித்துப்புடலாம். விக்குறதுக்கான கமிஷனும் டெலிவரி கமிஷன்தான். அதாவது டே டிரேடிங் கமிஷனை விட பத்து மடங்கு கூடுதலான கமிஷன். அதை பி.டி.எஸ்.டி. அப்பிடிம்பாங்க. அதாவது buy today sell tomorrow அப்படிங்றதோட முதல் எழுத்துகளையெல்லாம் எடுத்துப் போட்டா அதுக்கான விரிவாக்கம் உங்களுக்குக் கிடைச்சிடும். அதாவது இன்னிக்கு வாங்கி நாளைக்கு விக்குறது. இதுல என்னா ஒரு கஷ்டம்ன்னா இன்னிக்கு வாங்குனது நாளைக்கு விலை ஏறியிருக்கணும். அப்பதாம் லாபம். விலை இறங்கியிருந்தா அவ்வளவும் நஷ்டம். நஷ்டத்தை கம்பெனிக்கு ரெண்டு நாளுக்குள்ள செக் போட்டுக் கொடுத்தாகணும். லாபம்ன்னா அந்த லாபத்தை கம்பெனி ரெண்டு நாள் கழிச்சு செக் போட்டுக் கொடுக்கும். 
            ஸ்டாக் மார்கெட்டுல தியாகராசன் வாத்தியார் கில்லிதான். காலையில எல்லா பேப்பர், ஜர்னலையும் படிச்சிடுவாரு. எந்த ஸ்டாக் எவ்வளவு விலை இறங்கும், விலை ஏறுங்றத துல்லியமாக கணிச்சிடுவாரு. இதுக்காக நெறைய டெக்னிக்கலாம் இருக்கு. மூவிங் ஆவரேஜ் பாக்குறது, ஆர்.எஸ்.ஐ.இன்டிகேட்டர் பார்க்குறது, கிராப் அனாலிசிஸ் பண்றதுன்னு ஏகப்பட்டது இருக்கு. அத்தனையையும் சரியா பாத்து வெச்சிருப்பாரு தியாகராசன் வாத்தியாரு.
            ஆனா ஷேர் மார்கெட்டுங்றது ஆயிரம் ரூவா லாபத்தைக் கொடுத்து பத்தாயிரம் ரூவா நஷ்டத்தைக் கொடுக்கக் கூடிய இடங்றத மறந்துடக் கூடாது. ஆனைக்கும் அடி சறுக்குங்றது ஷேர் மார்க்கெட்டுக்காகவே சொல்லப்பட்டதாகத்தாம் இருக்கும். இங்க டைனசோரும் தலைகுப்புற விழும். திமிங்கலமும் முழுங்கப்படும். இதை நீங்க ரோம்ப பயமுறுத்துறதுக்காக சொல்லபட்டதாவும் எடுத்துக்கலாம். அல்லது ரொம்ப விழிப்பா இருக்கணுங்றதுக்காக சொல்லப்பட்டதாவும் எடுத்துக்கலாம்.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...