31 Mar 2018

வளமைக்கு இன்சொற்கள்! வறுமைக்கு வன்சொற்கள்!


குறளதிகாரம் - 10.4 - விகடபாரதி
வளமைக்கு இன்சொற்கள்! வறுமைக்கு வன்சொற்கள்!
            எந்தச் சூழ்நிலையிலும் எவரிடமும் இன்பம் தரக் கூடிய இனியச் சொற்களைச் சொல்வதைத்தான் வாழ்வில் கற்க வேண்டும்.
            சூழ்நிலைகள் மாறும். அச்சூழ்நிலைகளில் சொல்லிய சொற்களின் தாக்கம் மாறாது.
            மனிதர்கள் யாரும் சொல்லிய சொற்களை மறக்கத் தயாராக இல்லை. அதுவும் குறிப்பாக அவமானப்படுத்தும் வகையில் சொல்லிய சொற்களை எப்போதும் மறக்கத் தயாராக இல்லை.
            பிறரை அவமதிக்கும் சொற்களை மறந்தும் கூட சொல்லி விடக் கூடாது. அது ஏற்படுத்தும் தாக்கம் அழிவு வரை அழைத்துச் செல்லக் கூடியது.
            கோபப்படாமல் இருப்பது சிறந்தது. கோபப்பட்டாலும் ஆத்திரத்தில் இனிமையற்ற சொற்களைச்  சிந்தாமல் இருப்பது நல்லது. 
            கோபத்தில் கொப்புளிக்கும் இனிமையற்ற வார்த்தைகளுக்கு பின்விளைவு தெரியாது, கேட்பவர் மனம் எப்படிப் புண்படும் என்பது அறியாது, அச்சொற்களுக்கு பின்னர் மாபெரும் விலை கொடுக்க வேண்டி வரும் என்பது புரியாது.
            பிச்சைக் கேட்டு வந்த முதியவர் ஒருவரைக் கோபமாகத் திட்டித் தீர்த்தார் கோடீஸ்வரர் ஒருவர்.
            பிச்சைப் போடா விட்டாலும் பரவாயில்லை, கோபப்பட்டு மட்டும் இனிமையில்லாமல் திட்டிப் பேச வேண்டாம் என்று அறிவுரைச் சொல்ல ஆரம்பித்து விட்டார் அந்தப் பிச்சைக்கார முதியவர்.
            "பிச்சைக்கார நாயே! எனக்கே அறிவுரை சொல்கிறாயா! நான் யார் தெரியுமா? பத்துக் கப்பல்களுக்கு முதலாளி!" என்றார் அந்தக் கோடீஸ்வரர்.
            அதனால்தான் கோபப்பட்டு இனிமையில்லாதவைகளைப் பேச வேண்டாம் என்கிறேன் என்றார் அந்த முதியவர் மீண்டும் சாந்தமாக.
            "அட ஒன்றுமில்லாத நாயே! மறுபடியுமா அறிவுரைச் சொல்கிறாய்? ஏன் பத்துக் கப்பலுக்குச் சொந்தக்காரன் கோபப்பட்டு இனிமையில்லாமல் கூடப் பேசக் கூடாதா?" என்றார் கோடீஸ்வரர்.
            "நிச்சயமாக! நான் இருபது கப்பல்களுக்குச் சொந்தக்காரனாக இருந்தவன். கோபப்பட்டு இனிமையில்லாமல் பேசிக் கொண்டிருந்தனால் இப்போது பிச்சைக்காரனாய் நிற்கிறேன்! அதனால் தயவு பண்ணிச் சொல்வதைக் கேளுங்கள்!" என்றால் பிச்சைக்கார முதியவர்.
            இனிமையற்றச் சொற்களைப் பேசும் ஒவ்வொரு கணத்திலும், இனிமையற்ற வாழ்க்கைக் காத்திருக்கிறது.
            ஆறுதல் சொற்களை கூற முடியாவிட்டாலும், இனிய சொற்கள் அல்லாதவைகளைச் சொல்லாமல் இருக்க முடியும்.
            பிறரை அவமதிக்கும் வகையில் பேசும் இனிமையற்றச் சொற்கள்,
            கோபப்பட்டுப் ஆத்திரத்தில் கண்மூடித் தனமாகப் பேசும் இனிமையற்றச் சொற்கள்,
            என்னப் பேசுகிறோம் என்பது புரியாமல் பேசி விடும் இனிமையற்றச் சொற்கள் - இவைகள் எல்லாம் வாழ்வில் ஒருவருக்கு வறுமையைத்தான் கொண்டு வருகின்றன. அந்த இனிமையற்றச் சொற்களை எதிர்கொள்பவர் சொன்னவரைக் காலை வாரி விட நேரம் பார்த்துக் கொண்டிருப்பார். பழி வாங்க சரியான காலத்துக்கு எதிர்நோக்கிக் காத்திருப்பார். இனிமையற்றச் சொற்களுக்கு அப்படி ஓர் எதிர்மறைச் சக்தி உண்டு.
            எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், இனிமையற்றச் சொற்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது. இனிமையற்றச் சொற்கள் அதிகாரத்தையும் வீழ்த்தும்.
            எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் இனிமையற்றச் சொற்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது. இனிமையற்றச் சொற்கள் எவ்வளவு பெரிய பதவியையும் காலி செய்யும்.
            எவ்வளவு பெரிய மாவீரனாக இருந்தாலும் இனிமையற்றச் சொற்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது. இனிமையற்றச் சொற்கள் வீரத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடும்.
            எவ்வளவு பணம், சொத்து, செல்வாக்கு இருந்தாலும் இனிமையற்றச் சொற்களைச் சொல்லாமல் நல்லது. இனிமையற்றச் சொற்கள் இறுதியில் எவ்வளவு இருந்தாலும் அவ்வளவையும் சுழியத்தில் கொண்டு வந்து நிறுத்தி விடும்.
            வாழ்க்கையில் வறுமை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இனிமையற்றச் சொற்களைப் பேசுவதால் ஏற்படும் வறுமைக்கு பேசுபவரே காரணம்.
            இனிமையற்றச் சொற்களைப் பேசுவதினால் ஏற்பட்ட வறுமைக்கு இனியச் சொற்களே மருந்து.
            இனிமையானச் சொற்கள் கேட்பவர் மனதைக் கவரும். அதைக் கேட்பவருக்கு இவ்வளவு இனியச் சொற்களைப் பேசுபவர்க்கு வறுமையா? என்ற எண்ணத்தை உருவாக்கி அதைப் போக்க ஏதேனும் செய்வதற்கும் தூண்டும்.
            இனிமையற்றச் சொற்கள் கேட்பவர் மனதைக் கவ்வி வவ்வும். அதைக் கேட்பவருக்கு இவ்வளவு இனிமையற்றச் சொற்களைப் பேசும் இவருக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கக் கூடும்? என்ற எண்ணத்தை உருவாக்கி வறுமையை ஏற்படுத்த ஏதேனும் செய்யத் தூண்டும்.
            இனிமையானச் சொற்கள் வறுமையையும் வளமையாக்கும்.
            இனிமையற்றச் சொற்கள் வளமையையும் வறுமையாக்கும்.
            வறுமை இல்லாமல் போக, வளமை உருவாக இனிமையானச் சொற்களையே எல்லாரிடமும் பேசுவோம். இனிமையானச் சொற்களையே எல்லாரிடமும் பேசி வறுமை இல்லாத வளமையான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வோம்.
            துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார் மாட்டும் இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு.
            வளமைக்கு இன்சொற்கள்.
            வறுமைக்கு வன்சொற்கள்.
*****

பொயட்டிசியன்


பொயட்டிசியன்
எழுதியது கவிதை போல்
இல்லையா
இரண்டு முறை வாசி
கவிதையாகி விடும்
மூன்று முறை வாசி
ஆகச் சிறந்த கவிதையாகி விடும்
*****
கோல் மாமே கோல்
மர்ம கோலில்
மரணத்தை மறைக்கலாம்
தெர்ம கோலில்
அணையை மூடலாம்
அதர்ம கோலில்
எதையும் செய்யலாம்
தர்ம கோலில்
முட்டிக் கொள்ளலாம்
*****
ஜஸ்டிபிகேஷன்
இருபது வருடம் கழித்து
குற்றவாளி என்று
தீர்ப்பு வரும் வரை
நீ
நிரபராதிதான்
*****

மீண்டும் மீண்டும் சிரிக்கின்ற மக்கள்!


மீண்டும் மீண்டும் சிரிக்கின்ற மக்கள்!
பேரங்கள் புகைமூட்டம் போல் எழுந்து
அஸ்திவாரத்தை அசைக்கின்றன
வாக்குறுதிகள் எழுதப்பட்ட சுவடற்று
நீரில் மிதந்து செல்கின்றன
ஒன்று இரண்டாகி, இரண்டு மூன்றாகி,
மூன்று நான்காகி, நான்கு ஐந்தாகி... ஆகி.... ஆகி...
சொற்களை வீசி எறிந்து
சண்டையிட்டுக் கொள்கின்றனர்
ஆத்மாக்களின் அமைதி மண்டபத்தில் அமர்ந்து
கவிழ்ப்பு வேலைகள் குறித்து
நிதானமாக தியானிக்கின்றனர்
ஒரு எழுதப்பட்ட புனை கதையை எடுத்து
காலக்கலைஞன் தன் இஷ்டப்படி
படம் பிடித்துத் தள்ளுகிறான்
தீப்பற்றி எரியும் செய்திச் சேனல்களை
மக்கள் சிரித்துச் சிரித்துப்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விட்டதாக
நகைச்சுவை நடிகர்கள்
வயிற்றில் அடித்துக் கொண்டு அழுகின்றனர்
மறுபடியும் ஒரு பிரேக்கிங் நியூஸ்
மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்
*****

30 Mar 2018

யாவரும் செய்யலாம் அறம்!


குறளதிகாரம் - 10.3 - விகடபாரதி
யாவரும் செய்யலாம் அறம்!
            கொடுப்பதற்கு எதுவுமில்லை. எதைக் கொடுப்பது?
            செய்வதற்கு எதுவுமில்லை. எதைச் செய்வது?
            நிகழ்த்துவதற்கு எதுவுமில்லை. எதை நிகழ்த்துவது?
            வழங்குவதற்கு பணமில்லை. எதை வழங்குவது?
            நல்லது செய்ய முடியவில்லை. எப்படி முயல்வது?
            உதவி செய்ய வழியில்லை. எப்படி உதவுவது?
            இல்லாத போது எதையும் கொடுக்க முடியாது. வாய்ப்பில்லாத போது எதையும் செய்ய வழி கிடையாது. சாத்தியமற்றப் பொழுதுகளில் எதுவும் சாத்தியம் ஆகாது. இயலாத போது எதையும் நிகழ்த்த முடியாது.
            அப்புறம் எப்படி அறம் செய்ய முடியும்?
            ஒளவைச் சொன்னது போல அறம் செய விரும்பு என்று விரும்பினாலே போதுமா? அறம் செய்ய வேண்டாமா?
            இல்லாத போதும் அறம் செய்ய முடியும்.
            இயலாத போதும் அறம் செய்ய முடியும்.
            வாய்ப்பில்லாத போதும் அறம் வாய்க்கும்.
            சாத்தியமில்லாத போதும் அறம் சாத்தியம்.
            காரணம், அறம் அவ்வளவு எளிமையானது.
            இல்லாததிலிருந்தும் அறம் புறப்படும். இயலாததிலிருந்தும் அறம் புறப்படும். வாய்ப்பில்லாத போதும் அறம் வாய்ப்புகளை உருவாக்கும். வழியில்லாத போதும் அறம் வழியை உருவாக்கும். சாத்தியமில்லாத போதும் அறம் சாத்தியங்களைக் கண்டறியும்.
            அறம் செய்ய முகம் போதும். முகம் இருக்கின்ற யாரும் அறம் செய்ய முடியும். முகமற்றவர்கள் அறம் செய்ய முடியாது. மனிதம் என்ற முகம் அற்றவர்கள் எப்படி அறம் செய்ய முடியும்?
            முகத்தை வைத்துக் கொண்டு எப்படி அறம் செய்ய முடியும்?
            முகத்தால் இனிமையாக நோக்கினால் போதும். அதுவே அறம்.
            முகத்தால் கடுமையாக நோக்கினால்... செய்யும் அறத்தையும் செய்ய முடியாது. நோக்கக் குழையும் விருந்து போல ஆகி விடும். பெற வந்தவர் பெறாமலே போய் விடுவார்.
            முக இனிமையால்தான் அறம் சாத்தியப்படும். இல்லாதவர், இயலாதவர், முடியாதவர் யாவருக்கும் இது சாத்தியப்படும். முகம் யாவருக்கும் இருக்கும். யாவருக்கும் அறம் சாத்தியமே.
            அப்படி இனிமையாக நோக்கிய முகத்தால், வழங்குவதற்கும் ஏதேனும் வாய்ப்பிருந்தால் அறம் இன்னும் சிறக்கும் இல்லையா?
            பொருளில்லாத நிலையில், வழங்க வாய்ப்பும் வழியில் இல்லாத திக்கற்ற நிலையில், கடனாகக் கூட பெற்று வழங்க வக்கற்ற நிலையில் எதை வழங்குவது?
            அப்படிப்பட்ட நிலையிலும் வழங்க ஒன்று இருக்கவே இருக்கிறது.
            மனதிலிருந்து வெளிப்படும் இன்சொற்கள்தான் அவைகள்.
            காசா? பணமா? இன்சொற்கள் இல்லாமல் போக அல்லது களவு போக.
            வாய்ப்பா? வழியா? இன்சொற்களைத் தேடிப் போக அல்லது ஏமாந்துப் போக.
            இயலாமல் போய் விடுமா? முடியாமல் போய் விடுமா? இன்சொற்களைப் பேசிப் பார்க்க அல்லது முடியாமல் இயலாமல் போக.
            எப்போதும் இன்சொற்கள் சாத்தியம் என்பதே சத்தியம். அதற்காக முயற்சிக்க வேண்டியதில்லை. இயலாமல் போய் விடுவதில்லை.
            முகத்தால் இனிமை வீசுதலும், அகத்தால் இன்சொல் பேசுதலும் யாருக்கும், எவர்க்கும், எவ்வயதினர்க்கும், எந்நாட்டவர்க்கும் சாத்தியம். அதுவே அறம். முதன்மையான அறம். அந்த முதன்மையான அறத்துக்குப் பின்பே கொடுத்தல், வழங்கல், உதவுவதல் போன்றவைகள் கூடுதல் தகுதிகளாகக் கொள்ளப்படும்.
            முதன்மையான அறம் முகத்தால் இனிமையாக நோக்குதலும், அகத்தால் இன்சொல் வார்த்தலுமே.
            குழந்தையும் புன்முறுவல் செய்யும், மழலையால் இனிமையாகப் பேசும்.
            யாவரும், எவரும் செய்யக் கூடியதே அறம்.
            அறம் செய்ய பொன்னோ, மணியோ, பணமோ, சொத்தோ, சுகமோ தேவையில்லை. முகமும் அகமும் இருந்தால் போதும்.
            முகத்தால் இனிமையாக நோக்கி, அகத்தால் இனிமையாகப் பேசினால் அதுவே அறம்.
            முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம் இன்சொலினதே அறம்.
*****

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 4


செங்காந்தள் அறிவுத் திருவிழா - 4
            செங்காந்தள் அறிவுத் திருவிழா மாணவர்களுக்கானப் புத்தக இயக்கம் ஆகும். ஒரு லட்சம் புத்தகங்களை மாணவர்களின் கரங்களில் கொண்டு சேர்ப்பது அறிவுத் திருவிழாவின் முக்கிய இலக்கு ஆகும்.
            ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற இலக்கை நோக்கி இதுவரை மூன்று அறிவுத் திருவிழாக்கள் நடைபெற்றுள்ளன.
            நான்காவது அறிவுத் திருவிழா 28.03.2018 (புதன்) அன்று மன்னார்குடி நூலகத்தில் நடைபெற்றது. பள்ளி அளவில் நடைபெற்ற அறிவுத் திருவிழாவிலிருந்து மாறுபட்டு நூலகத்தில் நடைபெற்ற முதல் அறிவுத் திருவிழா இதுவாகும்.
            அறிவுத் திருவிழாவோடு மாணவர்கள் புத்தகங்களை நேசிக்கும் வகையில் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகளும் இவ்வறிவுத் திருவிழாவில் நடைபெற்றன. போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் வகையில் புத்தகங்களே நினைவுப் பரிசுகளாய் வழங்கப்பட்டன.
            நூலகத்தில் அறிவுத் திருவிழா நடைபெற்ற அதே நேரத்தில், மன்னார்குடி வட்டார வள மையத்தில் தமிழாசிரியர்களுக்கு நடைபெற்ற 'கேள்வி எனும் கலை' பயிற்சி வகுப்புக்கும் சில மணித் துளிகள் பறந்து வந்து காட்சியளித்தது இவ்வறிவுத் திருவிழா.
            'கேள்வி எனும் கலை' என்ற பயிற்சி வகுப்பில் "தமிழாசிரியர் ஒருவரிடம் இருக்க வேண்டிய புத்தகங்கள் என்னென்ன?" என்ற கேள்வி எழுப்பப்பட, "புத்தகங்களைப் பார்த்தால்தானே சொல்ல முடியும்" என்று தமிழாசிரியர்களிடமிருந்து விடை பெறப்பட, திடீர் ஏற்படாக சில மணித் துளிகள் அறிவுத் திருவிழா அங்கும் இடம் பெயர்ந்தது. தமிழாசிரியர்கள் அறிவுத் திருவிழாவின் புத்தகங்களைப் பார்த்த மாத்திரத்தில் கொண்டாடித் தீர்த்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும்.
            இப்படியாக நூலகத்துக்கும், வட்டார வள மையத்துக்குமாக அறிவுத் திருவிழா ஒருங்கே நடைபெற்றதும் அறிவுத் திருவிழா நிகழ்வுகளில் இதுவே முதன் முறையாகும்.
            மன்னார்குடி நூலகத்திலும் அறிவுத் திருவிழாவைப் பார்த்தவர்கள் கொண்டாடித் தீர்க்க 105 புத்தகங்கள் வாசிப்பை நேசிக்கும் கரங்களில் சென்று சேர்ந்தன.
            அறிவுத் திருவிழாவின் நமது இலக்கான ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற இலக்கில் இன்னும் அடையப் பட வேண்டிய இலக்கு 98,573 ஆகும். நான்காவது அறிவுத் திருவிழாவில் அடையப்பட்ட இலக்கு 105. ஆக 98,573 - 105 = 98,468. இன்னும் 98,468 புத்தகங்களைப் பிஞ்சுக் கரங்களில் கொண்டு சேர்க்க கரம் கோர்ப்போம்! அறிவுத் தாகம் தீர்ப்போம்!
*****

3 வது திருமணம், 4 வது விவாகரத்து


3 வது திருமணம், 4 வது விவாகரத்து
            ஒரு திருமணம் செய்து கொள்கிறார். பிடிக்கவில்லை என்று விவாகரத்துச் செய்கிறார்.
            திருமணம் பிடிக்கவில்லை என்று விவாகரத்துச் செய்கிறவர், மறுபடியும் எப்படித் திருமணம் செய்து கொள்கிறார்?
            மறுபடியும் திருமணம் செய்து கொள்கிறவர், எதற்காக மறுபடியும் விவாகரத்து செய்கிறார்?
            இப்படி இரண்டு ஆகிறது. மூன்றாவது திருமணத்துக்கு அவர் எப்படி தயார் ஆகிறார்?
            வியாபாரிகளுக்குப் போட்டியாக அரசியல்வாதிகளும் இதையே செய்கிறார்கள். அவர்கள் முதல் திருமணத்திலேயே தெளிவாக இருக்கிறார்கள், நடக்கின்ற இது ஒரு முறையாக இருக்கப் போவதில்லை என்பதில்.
            அவர்களுக்குத் திருமணம் பிடித்திருக்கிறது. திருமணத்திற்குப் பின் திருமணம் செய்து கொண்டவர் பிடிக்காமல் போய் விடுகிறது.
            அப்படிப் பிடிக்காமல்தான் போக வேண்டும் அவர்களுக்கு. ஒருவேளைப் பிடித்திருந்தாலும் திட்டமிட்டு பிடிக்காமல் செய்து கொள்கிறார்கள். அப்போதுதான் விவாகரத்தில் இறங்க முடியும். மறுமணம் செய்து கொள்ள முடியும்.
            பிடித்த ஒன்றை மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கிச் சாப்பிடுவது இல்லையா? அது அஜீரணம் ஆகும். ஆகட்டும். அதற்கான மாத்திரைகள் போட்டுக் கொண்டு சாப்பிடலாம் இல்லையா!
            சுமாராகப் பத்து திருமணங்கள் செய்து கொண்டாலும், பதினொன்றாவதாக ஒன்று செய்து கொள்வதில் ஒரு பிடித்தம் இருக்கிறது. பதினொன்றாவது விவாகரத்தில் முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அப்போதுதான் பனிரெண்டை நோக்கிப் போக முடியும்.
            சுவைத்துச் சுவைத்துப் பிடிக்காமல் போகிறது. அதற்காகச் சுவைப்பதை விட்டு விட முடியுமா? மீண்டும் பிடிக்காமல் போகும் வரை சுவைத்துப் பார்க்கத் தயாராகிறார்கள்.
            ஒருவர் எத்தனை முறை திருமணங்கள், விவாகரத்துகள் செய்யலாம் என்பதை ஜனநாயக நாட்டில் தீர்மானிப்பது கடினம்தான். ஜனநாயகத்துக்கு ஜனங்கள் பெருகுவதற்கு அதுதான் வழி.
            ஒவ்வொரு விவாகரத்தும் ஒரு பெருத்த ஜீவனாம்சத்துடன்தான் முடிவுக்கு வருகிறது. கடனில் மூழ்கி திவாலில் இருப்பவர் அதை எப்படிச் செய்வார்? விவாகரத்தில் முடியாது என்ற நம்பிக்கையில் திருமணம் நடைபெறலாம். விவாகரத்தில் முடியும் போது இனி திருமணம் கூடாது என்ற நினைக்கலாம். பிரசவ வைராக்கியம் போன்றவைகள் இவைகள்.
            ஒரு திருமணம் நடைபெறும் போது நீதிமன்றத்துக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.
            நீதிமன்றத்துக்கு நிறைய வேலை கொடுத்தவர்கள், நீதிமன்றத்துக்கு மேலும் ஒரு வேலை கூடுதலாகக் கொடுப்பதில் என்னவாகி விடப் போகிறது என்பதற்காகவும் அப்படிச் செய்யலாம்.
            சட்டப்படி திருமணமானவர் சட்டப்படி விவாகரத்துச் செய்யலாம். சட்டப்படி விவாகரத்து ஆனவர் சட்டப்படி திருமணம் செய்யலாம்.
            தாத்தா வயது ஹீரோக்கள், பேத்தி வயது ஹீரோயின்கள். நிஜப்படம் நிழல் படம் போல இருக்கும். நிழல் படம் நிஜப்படம் போலிருக்கும். நம் சமூகம் அப்படி. நமக்குத் திரைப்படங்கள் தேவையாக இருக்கிறது. அவர்கள் நடிக்கிறார்கள். நாம் வாய் பிளந்துப் பார்க்கிறோம். நடிப்பை மதிப்பவர்கள் நாமெல்லாம்.
*****

29 Mar 2018

ஈதலை வெல்லும் இன்சொல்!


குறளதிகாரம் - 10.2 - விகடபாரதி
ஈதலை வெல்லும் இன்சொல்!
            உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும் என்பார்கள்.
            அகத்தைக் காட்டுவது முகம். அக மாற்றம் முக மாற்றமாக வெளிப்படும். சில நேரங்களில் அக மாற்றத்தின் மூலம் முக மாற்றத்தை நோக்கிச் செல்ல முடியாத நிலையில், முக மாற்றத்தின் மூலமாகவும் அக மாற்றத்தை நோக்கிச் சொல்ல முடியும்.
            எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் அகத்தை, எதற்கெடுத்தாலும் சிரிக்கச் செய்யும் முகத்தின் மூலம் மாற்ற முடியும்.
            எப்போதும் சோர்வாக இருக்கும் அகத்தை, எப்போதும் புன்னகையோடு இருக்கச் செய்யும் முகத்தின் மூலம் மாற்ற முடியும்.
            கண்டதற்கும் கோபம் கொள்ளும் அகத்தை, கண்டவுடன் கருணையோடு இருக்கச் செய்யும் முகத்தின் மூலம் மாற்ற முடியும்.
            அக மாற்றத்துக்கு ஏற்ப எப்படி முகம் மாற்றம் அடைகிறதோ, அது போல முக மாற்றத்துக்கு ஏற்ப அக மாற்றத்தையும் கொண்டு வர முடியும்.
            எப்போதும், எங்கும், ‍எந்நேரமும் முகம் முக்கியம். மேக்கப் எனும் அழகு சாதன அலங்காரப் பூச்சுகள் கொண்டு அழகு செய்யவா என்றால், மகிழ்ச்சி, நிறைவு, புன்னகை, கருணை எனும் அன்பு சாதன அவசியப் பூச்சுகள் கொண்டு அழகு செய்ய.
            முகம் கோணிப் பொருள் கொடுப்பதைப் பிச்சை எடுப்பவரும் விரும்ப மாட்டார்.
            முகம் திரிந்து செய்யும் விருந்தை ஏழை விருந்தினரும் ஏற்க மாட்டார்.
            முகம் கடுகடுக்க செய்யும் உதவியை ஆபத்தில் இருப்பவரும் ஏற்க மாட்டார்.
            முகத்தில் தெரியும் இணக்கம் முக்கியம். முகத்தில் தெரியும் நிறைவு முக்கியம். முகத்தில் தெரியும் சாந்தம் முக்கியம். முகத்தில் தெரியும் புன்னகை முக்கியம்.
            சாந்தத்தோடு இயைந்த புன்னகை தரும் அழகை எது தரும்? காந்தியின் புன்னகை இப்படித்தான் பேரழகின் புன்னகையை விட அழகாகிறது.
            இப்படி முகம் மலர்ந்த புன்னகையோடு, அம்முகத்தில் இருக்கும் வாய் இன்சொற்கள் மட்டுமே சொல்லுமேயானால் அதற்கு ஈடு ஏது? அதற்கு இணையான பண்பாடு ஏது?
            முகம் மலர்ந்து சொல்லும் இனிய சொற்கள் சொல்வது பண்பின் உச்சம். கலாச்சார விருட்சம். நாகரிக அம்சம்.
            மலர்கள் மட்டும்தான் மலருமா?
            நினைவுகள் மட்டும்தான் மலருமா?
            மாலை மட்டும்தான் மலருமா? என்றால் முகமும் மலரும்.
            மலர்ந்த மலர்கள் மணம் பரப்பினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கும் மலர்ந்த முகம் சொல்லும் இன்சொல்.
            மலர்ந்த மலருக்கு நறுமணம் போல்,
            மலர்ந்த முகத்துக்கு இன்சொல்.
            மலரும் மணமும் போல, மலர்ந்த முகமும் இன்சொல்லும்.
            இரண்டும் ஒன்றை விட்டுப் பிரியாமல் இல்லறம் நடத்தும் போது வாழ்க்கை நல்லறமாய்ச் சிறக்கிறது.
            முகம் மலர்ந்த இன்சொல் ஆற்றல் மிக்கது. சக்தி தருவது மற்றும் அமைதி தருவது.
            அதன் மகத்துவம் அது மட்டுமோ?
            உள்ளம் உவந்து ஒரு பொருளைக் கொடுப்பதினும் உயர்ந்தது.
            மிகவும் உயர்ந்தது மனம் உவந்து ஈதலா? முகம் மலர்ந்து இன்சொல் பேசுதலா? என்றால் இரண்டாவதே முதலவாதாக வரும் அளவுக்கு உயர்ந்தது. ஆம்! முகம் மலர்ந்து பேசும் இன்சொல்லே, மனம் உவந்து கொடுக்கும் கொடையை விஞ்சுகிறது.
            அகம் உவந்த கொடையா? முகம் மலர்ந்த பேச்சு நடையா? என்றால் முகம் மலர்ந்த பேச்சு நடையே உயர்ந்த கொடை.
            அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.
            அகத்தின் உவப்பை முகத்தின் சிறப்பு வெல்லும் இடம் இது. முகத்தால் அகத்தை வெல்ல முடியும். முகத்தால் அகத்தை மாற்ற முடியும்.
            அகம் உவந்த ஈதல் சிறப்பானதுதான். அதை விடச் சிறப்பானது முகம் மலர்ந்த இன்சொல்.
            இச்சகமாய் ஏதேனும் தருமாறு கேட்ட பிச்சைகாரருக்கு அவர் கேட்டதை விடவும் அவருக்கு மேன்மையானதை டால்ஸ்டாய் தந்தது இப்படித்தான்.
            "ஐயா! தங்களுக்குத் தர என்னிடம் எதுவுமில்லையே!" என்கிறார் டால்ஸ்டாய்.
            "ஒரு பிச்சைக்காரரை மரியாதையாக ஐயா என்று அழைத்தீரே இதை விட தாங்கள் எனக்குத் தர என்ன இருக்கிறது?" என்கிறார் பிச்சைக்காரர்.
            அகனமர்ந்து ஈதலை, முகனமர்ந்த இன்சொல் வென்று விட்டதுதானே!
*****

முதல் அனுபவம் – சிறுகதை - விகடபாரதி


முதல் அனுபவம் – சிறுகதை - விகடபாரதி
            டவுன் பஸ்ஸில் கூட்டத்தோடு கூட்டமாக ஏறி விழி பிதுங்கி, சென்னைச் செல்லும் பேருந்தில் கூட்டமில்லாமல் ஏறிய போது ஆசுவாசமாக இருந்தது ஆனந்தனுக்கு.
            கசகசப்பு, வியர்வை நாற்றம் எதுவுமில்லை. சுகந்தமான வாசனை வீசியது. பக்கத்து பக்கத்து இருக்கைகளில் அழகழகானப் பெண்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் அள்ளித் தெளித்து வந்த அத்தர்களின் வாசனையாகவும் இருக்கலாம்.
            அரசுப் பேருந்துகளில் யார் வாசனை திரவியங்கள் தெளிக்கிறார்கள். பெரும்பாலும் சிறுநீர்க் கழிப்பிடத்திற்கு அருகேதான் பேருந்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். ஓட்டுநரும், நடத்துநரும் சரியாகப் பேருந்து கிளம்பும் நேரத்தில் ஏறிக் கொள்கிறார்கள். பேருந்து கிளம்பும் அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ உட்கார்ந்திருப்பவர்கள் பாடு கொடுமையானது.
            ஆனந்தனுக்கு அந்த அழகானப் பெண்களோடு பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அவர்கள் செல்பேசியில் எதையோ நோண்டிக் கொண்டு இருந்தார்கள். இவன் தன் கீபேடு செல்பேசியை எடுத்து ஒருமுறை பார்த்துக் கொண்டான். தன் செல்பேசியில் எப்போதாவது விளையாடும் பாம்பு கேம்ஸை விளையாடலமா என்று யோசித்தான். வேண்டாம் என்று தோன்றியது.
            தன் கனத்தப் பையை சீட்டில் வைத்து விட்டு சற்று நேரம் வெளியில் நிற்கலாம் என்று தோன்றவே இறங்க ஆரம்பித்தான்.
            "எக்ஸ்கியூஸ் மீ! கடைப்பக்கம் போறீங்களா?" அழகானப் பெண்கள் கூட்டத்திலிருந்து ஒருத்திப் பேசினாள்.
            "ம்" என்றான் ஆனந்தன்.
            "ஒன் லிட்டர் கோக் வாங்கிட்டு வர முடியுமா? ப்ளீஸ்!" என்றாள் அவள்.
            "ம்!" என்றான் ஆனந்தன் மறுபடியும். அவள் இவனிடம் ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினாள்.
            ஆனந்தன் அந்த நோட்டை பத்திரப்படுத்திக் கொண்டு கீழே இறங்கினான். கடைப்பக்கம் வந்தவன் அந்த நோட்டை எடுத்து வெளிச்சத்தில் பார்த்தான். ப்ரியா என்று எழுதப்பட்டு இருந்தது.
            அந்த நோட்டை பையில் வைத்துக் கொண்டு, தன்னுடைய ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்து ஒரு லிட்டர் கோக் வாங்கிக் கொண்டான். கொஞ்சம் யோசித்தவன், "அஞ்சு கப்" என்று மறுபடியும் அஞ்சு கப்புகளையும் சேர்த்து வாங்கிக் கொண்டான்.
            சில்லரையைச் சரிபார்த்துக் கொண்டவன், பேருந்தேறி கோக் பாட்டில் மற்றும் கப்புகளோடு சில்லரையையும் கொடுத்தான்.
            அந்தப் பெண்கள் "வாவ்! கப்போடேயே வந்திட்டீங்களா!" என்று வாயைப் பிளந்தனர். ஆனந்தனுக்குள் ஆனந்த மின்னல் வாய்ந்தது.
            முக்கால் மணி நேரம் கடந்த பிறகு ஒரு வழியாகப் பேருந்து புறப்படத் தொடங்கியது. அந்தப் பெண்கள் கோக்கைக் குடிக்கத் தொடங்கினர். இவனுக்கு ஒரு கப்பில் ஊற்றி நீட்டினர்.
            "குடிக்கிறதில்லீங்க! சளி பிடிச்சுக்கும்!" என்றான் ஆனந்தன்.
            அதைக் கேட்டதும் ஒருத்தி புருவத்தை உயர்த்தினாள்.
            "அப்போ உங்களைப் பார்க்க வெச்சுட்டுதான் குடிக்கணும்!" என்று ஒருத்திச் சொல்ல, கோரஸாக அந்தப் பெண்கள் எல்லாரும் சிரித்தார்கள். ஆனந்தனுக்கும் சிரிக்க வேண்டும் என்பது போலத் தோன்றியது. ஆனால், சிரிக்கத் தோன்றாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான்.
            பேருந்து வேகமெடுக்கத் தொடங்கியது. பேருந்தின் ஷட்டரை ஒவ்வொருவராக இறக்கி விடத் தொடங்கினர். ஆனந்தனும் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தவரிடம் ஷட்டரை இறக்கி விடச் சொன்னான். அவர் இவனை ஒரு முறை முறைத்து விட்டு, வேண்டா வெறுப்பாக இறக்கி விட்டார்.
            "ஊதக் காத்தா அடிக்குதுங்க!" என்று அவன் சொன்னதை அவர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
            உம் என்று வருவதற்கு ஆனந்தனுக்கு என்னமோ மாதிரி இருந்தது. தயங்கித் தயங்கி அந்தப் பெண்களிடம், "எங்கே இருந்து வர்றீங்க?" என்றான். பக்கத்தில் இருந்த சன்னலோர ஆசாமி முகத்தைச் சுளித்துக் கொண்டு திரும்பிக் கொண்டார்.
            "தாகுடி" என்றனர் அந்தப் பெண்கள்.
            "அது எங்க இருக்கு?"
            "கொஞ்சம் தாரண்யம் பக்கத்துல!"
            "இப்ப எங்கப் போறீங்க?"
            "சென்னையில இண்டர்வியூ வந்திருக்கு! அதுவும் எங்க அஞ்சுப் பேருக்கும் ஒண்ணா! எப்படியும் வேலையில சேர்ந்திடுவோம்!"
            அந்த ஐந்து பெண்களும் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் பதில் சொல்லிக் கொண்டு இருந்தனர்.
            "உங்க கூட யாரும் வர்றலியா?"
            "ஏன், உங்க கூட யாரும் வர்றலியா?" என்று அந்தப் பெண்கள் பதிலுக்குக் கேட்ட போது, ஆனந்தனுக்கு கூச்சமாக இருந்தது.
            "இல்ல, பொதுவா பொம்பளைப் பிள்ளைங்கள துணையில்லாம அனுப்ப மாட்டாங்களேன்னு கேட்டேன்!" என்றான் ஆனந்தன்.
            "அதான் நீங்க துணையிருக்கீங்களே பாஸ்" என்றனர் அந்தப் பெண்கள்.
            ஆனந்தனுக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை. சிரித்துக் கொண்டே தூக்கம் வந்தவனைப் போல் கொட்டாவி விட்டான்.
            "ரொம்ப போரடிக்கிறோமா?" என்றனர் அந்தப் பெண்களில் ஒருத்தி.
            ஆனந்தன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டான்.
            அதன் பின் அந்தப் பெண்கள் தங்களைப் பற்றி பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். ஆனந்தனுக்கு தூக்கம் கண்ணைக் சுழற்றிக் கொண்டு வந்தது.
            அவன் மீண்டும் கண் விழித்த போது பேருந்து ஒரு மோட்டலில் நின்றது.
            "என்ன பாஸ்! இப்படி அழகானப் பொண்ணுங்களைப் பக்கத்துல வெச்சுகிட்டு இப்படி தூங்கி வழியுறீங்க?" என்றனர் அந்தப் பெண்கள்.
            "ஒரு வாரமா சரியா தூக்கம் இல்லீங்க!" என்றான் ஆனந்தன்.
            "ஓரு வாரமாவா?"
            "ஆமாங்க! ரா பகலா வேலை!"
            "பஸ் அரை மணி நேரம் நிற்கும். சாப்புடுறதுன்னா சாப்பிடுங்க!"
            "ஆமாங்க! பசி வயித்தைக் கிள்ளுது! நீங்க?" என்றான் ஆனந்தன்.
            "எங்களுக்கு கோக் போதும்! அதை வெச்சுகிட்டே சமாளிச்சிடுவோம்!" என்றனர் அந்தப் பெண்கள்.
            ஆனந்தன் வேக வேகமாக பேருந்தை விட்டு இறங்கினான். மோட்டலில் ஒரு சிலரே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கையை அலம்பி விட்டு உட்கார்ந்தான்.
            சர்வரிடம் நான்கு இட்டிலிகள் கேட்டான். நான்கு இட்டிலிகளைச் சாப்பிட்டு முடித்தப் பிறகு, "வேற என்ன வேணும்?" என்ற கேட்ட சர்வரிடம், "போதும்" என்றபடி தலையசைத்தான்.
            சர்வர் பில்லைக் கொண்டு வந்து நீட்டிய போது அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. நான்கு இட்டிலிக்கு 72 ரூபாய் பில் போட்டிருந்தார்கள். ஊரில் பத்து ரூபாய்க்கு ஐந்து இட்லிகள் சாப்பிட்டவனுக்கு நான்கு இட்டிலிகள் 72 ரூபாய் என்பது அநியாயமாகப்பட்டது.
            கையைக் கூட அலம்பாமல் அவன் சர்வரிடம் சத்தம் போட்டான். "எழுத்து ரெண்டு ரூபாயெல்லாம் கொடுக்க முடியாது" என்றான்.
            அதற்குள் பேருந்தில் அவன் சீட்டருகே அமர்ந்திருந்த பெண்கள் இறங்கி வர ஆனந்தன் தன் சத்தத்தைத் தணித்துக் கொண்டான்.
            "எனி பிராப்ளம்?" என்றனர் அந்தப் பெண்கள்.
            "ஒண்ணுமில்லீங்க! நாலு இட்டிலி 72 ரூபாய்ங்களாம்!" என்றான் ஆனந்தன்.
            அந்தப் பெண்கள் கொல்லென்று சிரித்தனர்.
            ஒரு நொடி யோசித்தவன், ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து சர்வரிடம் நீட்டினான்.
            சர்வர் அந்த நோட்டை வாங்கிக் கொண்டு சென்று, சென்ற நொடியில் திரும்பி வந்தான். "72 ரூபாய்க்லாம் ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை கொடுக்க முடியாது!" என்றான்.
            "எங்கிட்ட வேற பணம் இல்லே!" என்றான் ஆனந்தன்.
            "அப்படின்னா இன்னும் நூறு ரூபாய்க்கு எதாவது வாங்கிக்க சில்லரை தர்றோம்!" என்றான் சர்வர்.
            "இன்னும் நூறு ரூபாய்க்கா? என்னத்த வாங்குறது?" யோசித்த ஆனந்தன் "ஒரு லிட்டர் கோக் பாட்டில் என்ன விலை?" என்றான்.
            "நூறு ரூபாய்" என்றான் சர்வர்.
            "ஐம்பத்து அஞ்சு ரூவா கோக் பாட்டில் நூறு ரூவாயா?" என்றபடியே சர்வர் எடுத்துக் கொடுத்த கோக் பாட்டிலை அந்தப் பெண்களிடம் நீட்டினான். அவர்கள் சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்கள்.
            "தேங்க்ஸ்!" என்றனர் கோரஸாக.
            கையை அலம்பிக் கொண்டு வந்த ஆனந்தன் சர்வர் கொடுத்த மீதியை வாங்கி எண்ணிப் பார்த்துக் கொண்டான். அந்தச் சர்வரின் கையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்தான். அவன் இளித்துக் கொணடே அதை வாங்கிக் கொண்டு சென்றான்.
            "பஸ்ஸை எடுத்தாலும் எடுத்துடுவாங்க! வாங்கப் போகலாம்!" என்றான் ஆனந்தன். அந்த ஐந்துப் பெண்களும் வேகமாக ஓடிச் சென்று பேருந்துக்குள் ஏறிக் கொண்டனர்.
            ஆனந்தன் நிதானமாக நடந்து சென்று பேருந்தில் படிக்கட்டில் ஏறினான். அவனுக்குள் முதல் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை மாற்றி விட்ட திருப்தி மனதுக்குள் இருந்தது.
            "நெக்ஸ்ட் ஸ்டாப்பிங்லேயும் ஒரு கோக் பாட்டில்!" என்றனர் அந்தப் பெண்கள்.
            "கண்டிப்பா!" என்று சொல்லியபடியே தன் பையில் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஒரு முறை எடுத்துப் பார்த்துக் கொண்டான் ஆனந்தன்.
*****
விகடபாரதி

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...