30 Apr 2017

செம ஹாட் மச்சி!


செம ஹாட் மச்சி!
            கோடை வெப்பம் அதிகரித்து விட்டது என அங்கலாய்ப்பவர்கள் ப்ரிட்ஜிலிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்துக் கொள்கிறார்கள்.
            "அப்பப்பா! என்ன வெயில்?" என்று வாகனங்களில் விரைவோர்கள் சாலையோரக் கடைகளைப் பார்த்தால் கோல்டா கூல் டிரிங்ஸ் கேட்கிறார்கள். கூல் டிரிங்ஸ் கூலிங் கொஞ்சம் குறைந்தாலும் வேறு கடையைப் பார்த்துப் புறப்படுகிறார்கள்.
            "இப்படி வெயில் அடிச்சா என்ன பண்றதாம்!" என்று எதுவும் பண்ண முடியாதது போல அலுத்துக் கொள்பவர்கள், ஏ.சி.யைப் போட்டு விட்டுக் கொண்டு ரூம் கதவை அடைத்துக் கொள்கிறார்கள்.
            இதில் கொஞ்சம் வசதி குறைந்தவர்கள் மின்விசிறியை 24 மணி நேரமும் சுழல விடுகிறார்கள்.
            "வெயில் பத்து மாவட்டங்களில் சதம் அடித்து விட்டதாம்!" என ரிமோட்டும் கையுமாக செய்திச் சேனல்களைக் கட்டிப் பிடித்து அழுபவர்கள் கரண்ட் கட் ஆனால் மின்சார வாரியத்தைத் திட்டித் தீர்த்து விடுகிறார்கள்.
            வாட்ஸ் அப், பேஸ்புக் என்று செய்திகளைப் பரப்பி காற்றலை மண்டலத்தைச்  சூடாக்குபவர்கள் தனி வகையில் பீதியைக் கிளப்பி அடிப்பார்கள். நாசாவே சொல்லி விட்டது என்று புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்து நாராசமாக்கி நாசம் செய்வார்கள்.
            இப்படி பிரிட்ஜ்,
                        ஏ.சி.,
                        மின் விசிறி,
                        டி.வி.,
                        கைபேசி என்று
            இவைகளே ஏறிக் கொண்டிருக்கும் கோடை வெப்பத்தை இன்னும் எகிற அடிக்கும்.
            இருக்கிறவர்கள் இவைகளையெல்லாம் வாங்கி வைத்துக் கொள்வார்கள். இல்லாதவர்கள்?
            கூல் டிரிங்ஸிற்குப் பதில் நுங்கு,
            மின் விசிறிக்குப் பதில் கை விசிறி,
            டி.வி.க்குப் பதில் எப்.எம். ரேடியோ,
            ஏ.சி.க்குப் பதில் வேப்ப மரமோ, புங்கை மரமோ, கட்டி தொங்க விடப்பட்ட ஈரச் சாக்கோ
            இவைகளோடு கோடை குறித்த எந்த வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் கொஞ்சம் தண்ணீர் கிடைத்தாலும் தலையிலும், சட்டையிலும் ஊற்றிக் கொண்டு அனுபவிக்கிறார்கள் இல்லாதப் பட்டவர்கள். இவர்களால் பூமி எந்த விதத்திலும் சூடாகவில்லை. அதனால் பூமியும் இவர்களை எந்த விதத்திலும் சூடாக்கவில்லை போலும்.
*****

என் தலைக் கடனே!


என் தலைக் கடனே!
பெரும் எண்ணிக்கையில்
கோழி வளர்த்த அப்பத்தா
பிள்ளைமார்கள் கைவிட்டதைப் பொருட்படுத்தாமல்
பெரும்பண்ணையூர் கே.வி.கே. பிராய்லர் பண்ணையுல்
குஞ்சுக் கோழிகளுக்கு இரை ஈந்து கொண்டு இருப்பாளே.
*****

நினைவொதுங்கல்
இவர்களுக்குப் பத்மினியைப் பிடிக்காது
செளகார்  ஜானகியை ரசிக்க மாட்டார்கள்
ரங்காராவின் நடிப்புத் தெரியுமா?
பாகப் பிரிவினைப் போல் படமுண்டா?
ஒரு படம்னா அதில்
ஒரு கருத்து இருக்க வேண்டாமா?
தாத்தா இப்படித்தான்
அந்தக் கால நினைவுகளோடு
வாழ்கிறார்
இந்தக் கால
‍மெகா தொடர்களில் ஒதுங்கியபடி.
*****

யாங்காகியர் எனின்...


வாஞ்சை
மாடுகளுக்காக
மாடு போல் உழைத்த
அம்மாவின் கைகள்
வாஞ்சையோடு
தடவிப் பார்க்கிறது
பாக்கெட் பால் உறையை.
*****

யாங்காகியர் எனின்...
எம்.ஜி.ஆர். படம் பிடிக்கும் பெரியப்பா
ரேஷன் அரிசி கடத்துவதில் கில்லாடி என்பார்.
சிவாஜி படம் பிடிக்கும் சித்தப்பா
பாரின் போவதாகச் சொல்லி
அத்தையின் மொத்த சொத்தையும்
ஆட்டையைப் போட்ட சூராதி சூரர்.
அப்பாவுக்குப் பிடித்ததெல்லாம்
ஜெமினி கணேசன் எனினும்
வேறு ஒருத்தியைக் கடைக்கண் கொண்டு கூட
நோக்காமல் வாழ்ந்து முடித்தார்.
நாங்களோ
ரஜினி, கமல் என்று அடித்துக் கொள்ளாமல்
கடைசி வரை ஜெயமாலினியின் ரசிகர்களாக
ஒற்றுமையோடு இருந்தவர்களானோம்.
எமக்குப் பிறந்த பிள்ளைமார்களோ
புதுயுகத்தின் பிரதிநிதிகளாய்
வடிவேலு, சந்தானத்தின்
பித்தர்களாய் ஜமாய்த்துக் கொண்டிருப்பர் என்பதை
தியாகராஜ பாகவதரும் அறிந்திலரே.
*****

கிரக தோஷம்


கிரக தோஷம்
            "கிரகம் சரியில்லை" என்று மருமகளைக் கோயில் கோயிலாக ஏறி இறங்க வைத்து வீட்டில் ஹாயாகப் படுத்துக் கொண்டிருந்த சரஸ்வதி ஹார்ட் அட்டாக்கில் காலமானார்.
*****
புதிய மாமனார்
            "கொடுக்கறதை வாங்கிட்டு மரியாதையா விவாகரத்துப் பத்தரத்துல கையெழுத்துப் போடல, உன் உயிரை எடுக்கிறதைத் தவிர வேற வழியில்ல!" மகனுக்கு ஆதரவாக மருமகளை மிரட்டினார் மாமனார் மாணிக்கம்.
*****
மேலும் அஞ்சு வருஷ கொடுமை
            "அஞ்சு வருஷம் இழுத்தடிப்பேன்டி. உன்னால என்ன பண்ண முடியும்?" கொடுமை தாளாமல் பிரிந்து வந்த மனைவியைக் கோர்ட் வளாகத்திலும் கண்ணீர் விட வைத்தான் பாலைய்யா.
*****

காலத்தைக் கடத்தல்


காலத்தைக் கடத்தல்
நினைவுகள்
கடந்த காலத்தோடும்
கனவுகள்
எதிர் காலத்தோடும்
இருப்பு
நிகழ் காலத்தோடும்
தொடர்புடையது என்ற போது
நினைவோ, கனவோ, இருப்போ
கடந்தால்
காலத்தைக் கடப்பது போலாகுமா?
என்று கேட்டவனிடம்,
அதைக் கடந்த பின்
இந்தக் கேள்வி என்பது
எந்தக் காலத்திலிருந்து
வருகிறதென்றேன்.
காலத்தைக் கடப்பது சுலபமில்லை
என்றான் அவன்.
*****

29 Apr 2017

சித்தப்பா விவசாயம் பார்த்த காதை


நிலைமாற்றம்
வெந்நீரைப் போல
முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த
குழந்தை
பனிக்கட்டிப் போல
அன்பாகி கசிந்து உருகுகிறது
ஒரு சாக்லேட்டைப் பெற்றுக் கொண்ட பின்.
*****

சித்தப்பா விவசாயம் பார்த்த காதை
"நம்ம வயல் வழியாதாம்
ஹைவேஸ் போகப் போகுதாம்ல!" என்பார்
இருந்த நிலங்களையெல்லாம் குடித்தழித்து,
மிச்ச மீதியிருந்த நிலங்களையும்
கட்டிய கோவணத்தோடு
குளித்துக் கொண்டிருந்த போது
ஓ.என்.ஜி.சி.யில் கேட்டார்கள் என்று
அவிழ்த்துக் கொடுத்த சித்தப்பா.
*****

ஆ(ண்)ணவ மிரட்டல்


சமாளிபிகேஷன்
            நிஜமாகவே திக்கித் திக்கிப் பேசும் நண்பன் வசந்த் மாலதியிடம் மணிரத்னத்தின் பட சான்ஸ்க்காக பிராக்டிஸ் செய்து கொண்டிருப்பதாக சமாளித்துக் கொண்டான்.
*****
ஆ(ண்)ணவ மிரட்டல்
            "என்னை எதிர்த்து கோர்ட் படியேறுனே வெட்டி பொலி போட்டுருவேன்!" மனைவியை எச்சரித்தார் கிரிமினல் லாயர் கிருபாகரன்.
*****
வேத மருத்துவர்
            "சுப்ரீம் கோர்ட்லேயே கீதையில கை வெச்சு இல்லன்னு சத்தியம் பண்ணுவேன்!" வன்கொடுமை வழக்குத் தொடுத்த மனைவியை மீண்டும் வார்த்தையால் பெண்கொடுமை செய்து கொண்டிருந்தார் ஆயுர்வேத மருத்துவர் பல்வேல்முருகன்.
*****

ஆநிரை அற்றுப் போதல்


ஆநிரை அற்றுப் போதல்
வடக்குத் தெரு, எடத்தெரு,
கீழத்தெரு, மேட்டுத்தெரு என
நான்கு தெருவுக்கும்
லோட்டாவிலும், சொம்பிலும் பால் அளந்து
மோரும், வெண்ணெயும்
வீடு வந்து கேட்போர்க்கெல்லாம்
வள்ளல் போல ஈந்து
இன்று பாலுக்கு ஒரு பசுவுமின்றி
நைந்த வாயில் புடவையும்
வெளுத்துக் கிழந்த ஜாக்கெட்டும் அணிந்து
தெருவில் எங்கேணும்
மாடு ஈந்த சாணி கண்டால்
சிறகிழந்த பறவை போல்
வீழ்ந்து வேலியில் சிக்கிக் கிடக்கும்
பாலிதீன் பையால்
விரைந்தோடி எடுத்துச் செல்வாள்
வாசல் தெளிக்க ஆகும் என்று
எடத்தெரு பேச்சியம்மாள்.
*****

ஸ்மார்ட் டீச்சர்


ஆரம்பம்
            "நான் நீங்க நினைக்கிற மாதிரி ஏஜென்ட் இல்ல!" என்று ஆரம்பித்தார் அந்த ப்ளட் பேங்க் ஏஜென்ட்.
*****
முன்ஜாக்கிரதை
            கணேஷ் ஒரு இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட் என்று தெரிந்ததும் முன்ஜாக்கிரதையாக தன்னுடைய பத்து பாலிசி எண்களையும் வரிசையாக ஒப்பித்தார் அந்தப் புதியவர்.
*****
ஸ்மார்ட் டீச்சர்
            ஸ்மார்ட் போன் கையுமாகத் திரியும் குழந்தைகளைப் பார்த்ததும் ஹோம் ஒர்க் தொடர்பான ஒரு ஆப்பை உருவாக்குவதென முடிவெடுத்தார் ஸ்ட்ரிக்ட் டீச்சர் என பெயரெடுத்த அனிதா.
*****

விலக்கப்பட்ட கனி


விலக்கப்பட்ட கனி
திரும்பத் திரும்ப
சொல்லிக் கொடுத்தார்கள்
நான்
திரும்பத் திரும்ப
மறந்து போனேன்.
பொறுத்துப் பொறுத்துப்
பார்த்து
இறுதியாக என்னை
வெளியேறச் சொன்னார்கள்.
நான் வெளியேறிய பின்
அவர்கள்
திரும்பத் திரும்ப
சொல்லிக் கொடுத்த
ஒவ்வொன்றும்
அட்சரம் பிசகாமல்
அப்படியே நினைவுக்கு வர,
அங்கே
ஒவ்வொரு முறையும்
என்னை
திரும்பத் திரும்ப
மறைத்தது எது என்பதை
மீண்டும் மீண்டும்
அவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அவர்களோ என்னை
விலக்கப்பட்ட கனியாய்த்
திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
*****

28 Apr 2017

சில அடிப்படைப் புரிதல்கள்


சில அடிப்படைப் புரிதல்கள்
            எது உங்களை ஆட்சி மாற்றம் வேண்டும் என்று சொல்கிறது? தீமையை நோக்கிய பயம்தான். தீமையை வைத்துக் கொண்டு யாரும் ஆட்சி செய்ய முடியாது. நல்லவர்கள் வேடத்தைப் போட்டுத்தான் ஆட்சி செய்ய முடியும். அதுதான் நல்லதின் நிலை.
            ஆகவே, நீங்கள் வெகு நுட்பமாகப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்? யார் நல்லவர்களாக இருக்கிறார்கள்? யார் நல்லவர்கள் போல் வேடம் போடுகிறார்கள்?
            இந்த அடிப்படை நுட்பங்களையெல்லாம் பார்க்க முடியாத நிலையில், அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து நீங்கள் மெலெழ முடியாதபடி உங்களை அவர்கள் வைத்து இருக்கிறார்கள்.
            ஆக, நமது அடிப்படைப் பிரச்சனைகளுக்குக் காரணம் அவர்கள் நல்லதை வலுவுடன் செய்யும் திறன் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதல்ல. தங்கள் சுயநலத்தில் அவர்கள் முழுத் திறன் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.
            அவர்கள் தங்கள் சுயநலங்களை, நம்முடைய சுயநலங்கள் போல் காட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த சுயநலத்தில் இருக்கும் மயக்கத்திலேயே, நமது அடிப்படைப் பிரச்சனைகளை அழகாக மறைத்து விடுகிறார்கள்.
            உதாரணமாக சாதியத்தைக் கையெலெடுத்தே நமது அடுத்த வேளைப் பசியைச் சாதாரணமாக்கி, பசியோடு நம்மை உழைக்க வைத்து விடுவார்கள் அவர்கள். பாதுகாப்பு என்பதைக் கையில் எடுத்து, அவர்களின் பாதுகாப்புக்கான ரெளடிகளாக நம்மையே மாற்றி விடுவார்கள் அவர்கள்.
            நம்முடைய புரிதலைக் கோணலாக வைத்திருப்பதில்தான் அவர்களின் வெற்றி அடங்கியிருக்கிறது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
            நமது புரிதல்களை நேராக்கிக் கொள்ள முடியாததற்கான அத்தனை முழக்கங்களும் அவர்களிடம் உண்டு.
*****

மேக பயணம்


மேக பயணம்
கருமேகத்தை வெளுத்தது போன்ற
வெள்ளை வானமாய்
வேட்டியும் சட்டையும் அணிந்து
முறுக்கோடு செல்லுமவன்
டாஸ்மாக் பாரில்
யார்யார்க்கோ வள்ளல் போல்
வாரி வழங்குகிறான்
முற்றும் பையிலிருந்த கடைசிச் சொட்டுக் காசும்
இலையிலிருந்து விழுந்த மழைத்துளி போல
காலியான பின்
அங்கும் இங்கும் கெஞ்சி
ஒரு குவார்ட்டரைப் போட்டு விட்டு
வெள்ளை வானைச் சூழ்ந்து கொண்ட
கருமேகமாய்
தெருவெல்லாம் புரண்டு
அழுக்குப் பீடித்த வேட்டியோடும் சட்டையோடும்
அலங்கோலமாக வீடு திரும்புகிறான்
குடித்த சரக்கையெல்லாம்
அக்கருமேகம் போல்
கண்ட இடமெல்லாம் வாந்தியெடுக்க.
*****

லட்டு


லட்டு
உருண்டையென
சாணிவண்டு
உருட்டிக் கொண்டு போகும்
உருண்டையைப்
பார்க்கும் போதெல்லாம்
கண்ணில் வந்து போகிறது
லாலா கடையில்
பிடித்து வைத்துள்ள
லட்டு.
*****

ஏன்?
மாடு மேய்த்தல்
இழிவு என்பவர்களே
ஏன் உங்களுக்கு
அடிமாடாய்ப் போகிறதென்ற
இழிவு?
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...