30 Jun 2024

இனிய வாழ்வுக்கு இரு வேளை உணவு போதும்!

உலகம் எவ்வளவு மாறி விட்டது.

ஒவ்வொரு நாளும் இந்த உலகில் ஏதேதோ புதிது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

புதிய புதிய கருவிகள், தொழில்நுட்பங்கள் மட்டுமா? நோய்களும் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

இந்த நோய்களுக்கெல்லாம் எவை காரணங்கள்?

ஒவ்வொரு நோய்க்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கும் போது அனைத்து நோய்களுக்குமான காரணங்களை ஒற்றைப் புள்ளியில் கொண்டு வருவது என்பது எவ்வளவு சிரமமானது.

ஆனால், பொதுவாக ஒரு சில காரணங்களுக்குள் அடக்கி எல்லா நோய்களுக்கும் தீர்வு சொன்னால் எப்படி இருக்கும்? அதுவும் ஒரே ஒரு காரணத்திற்குள் அடக்கி அதுதான் அனைத்து நோய்களுக்கான சர்வரோக நிவாரணி என்று சொன்னால் எவ்வளவு இனிதாக இருக்கும்?

அப்படி ஒற்றைத் தீர்வு இருக்கிறதா என்ன?

நோய்கள் வந்தால்தானே மருந்து? நோய்களே வராவிட்டால் மருந்துகள் எதற்கு?

திருவள்ளுவர் அப்படித்தான் சிந்திக்கிறார்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.”             (குறள், 942)

என்கிறார் வள்ளுவர். மருந்து என்ற தலைப்பிலான அதிகாரத்தில் இடம் பெற்ற மருந்தே வேண்டாம் என்று சொல்லும் குறள் இது. அட! இது என்ன ஒரு முரண்?

மருந்தே வேண்டாம் என்றால் மருந்து என்ற அதிகாரம் எதற்கு? அதானே! மருந்தே வேண்டாம் என்றால் அங்கு மருந்துக்கு என்ன அதிகாரம் (Order or Power)? அதுதான் வள்ளுவர் இதன் மூலம் சொல்ல வருகின்ற கருத்து.

வள்ளுவர் அருந்தியது என்கிறார். உண்டது என்று சொல்லவில்லை. எதை அருந்த முடியும்? இதுதான் நுட்பமான இடம். திரவ உணவுகளைத்தான் அருந்த முடியும். திட உணவை உண்ணத்தானே முடியும்? இது ஒரு நுட்பமான கருத்து. திரவ உணவுகள் எப்போதும் சிறந்தது. நோயுற்றவருக்குத் திட உணவையா கொடுக்கிறோம்? கஞ்சி, பழச்சாறு போன்ற திரவ உணவுகளைத்தானே கொடுக்கிறோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போருக்கு உணவானது திரவ வடிவில்தானே வழங்கப்படுகிறது.

உணவானது அருந்தும் பதத்தில் திரவ நிலையில் இருப்பது செரிமானத்திற்கு உகந்தது. சோற்றோடு குழம்பு, சாறு (ரசம்), மோர் என்று திரவ நிலை உணவுகளைச்  சேர்ப்பது இதற்காகத்தான். அதிலும் பாருங்கள், நிறைய சாற்றோடு (ரசத்தோடு) சோற்றைப் பிசைந்து சாப்பிடுவது எப்போதும் செரிமானத்திற்கு எவ்வளவு உகந்ததாக இருக்கிறது. நம் முன்னோர்களும் சாறோ (ரசமோ), மோரோ இல்லாமல் உணவை நிறைவு செய்ய மாட்டார்கள்.

கிராமத்து வாழ்க்கையில் காலை உணவே நீராகாரம்தானே?

அப்படி அருந்தும் உணவும் செரித்திருந்தால் மறுவேளை உணவை உண்ணலாம் என்பது வள்ளுவர் சொல்லும் கருத்து. அப்படி உண்டால் அதாவது அருந்தினால் அவருக்கு மருந்துதான் தேவைப்படுமோ என்கிறார்.

நாம் தற்போது உண்ணும் உணவுகளும், நமக்கான உணவு முறைகளும்தான் எவ்வளவு மாறி விட்டன. பலவித வண்ணங்களில், பலவித சுவைகளில் எத்தனை எத்தனை உணவுகள்? இவற்றை உண்ணாமல், ரசிக்காமல், ருசிக்காமல், அனுபவிக்காமல் அதென்ன வாழ்வு? இதுவும் நியாயமான கேள்விதானே?

நம்மிடம் எவ்வளவு உணவு இருந்தால் என்ன? ஒவ்வொருவரும் அவரவருடைய ஒரு வயிற்றுக்குத்தானே உண்ண முடியும்? வயிறு எவ்வளவுதான் விரிந்து கொடுக்கும் தன்மை உடையது என்றாலும் எவ்வளவு உண்ண முடியும் சொல்லுங்கள்?

வழக்கமான கணக்கு என்பது ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்பது.

அந்தக் கணக்கைக் கொஞ்சம் குறைத்தால், விருப்பப்பட்ட உணவை உண்டு கொண்டு இன்பமாக இருக்கலாம்.

எவ்வளவு குறைப்பது? மூவேளை உணவை இரு வேளையாக ஆக்கிக் கொள்ளலாம். அதாவது ஒரு வேளை உணவைக் குறைத்துக் கொள்ளலாம்.

அப்படியென்றால், இரு வேளை உணவு உங்கள் வாழ்க்கையை இனிய வாழ்வாக ஆக்கி விடும். உண்மையில் இப்போதைய கால கட்டத்தில் இரு வேளை என்பது போதுமானது. உடல் உழைப்பு என்பது மிகவும் குறைந்து விட்ட கால கட்டத்தில் மூவேளை உணவு என்பது அளவுக்கு மிஞ்சுகின்ற நஞ்சாகும் அமுதுதான். அப்படியென்றால் இடையே உண்ணுகின்ற சிற்றுண்டிகள், அவை அறவே வேண்டாம்.

இருவேளை உணவே அதிகம் என்றால் இடையில் உண்ணுகின்ற சிற்றுண்டிகளைச் சேர்த்தால் இன்றைய மனிதர்களின் உணவு என்பது ஐந்து வேளை அல்லது ஆறு வேளை உணவாகக் கூட இருக்கும்.

இவ்வளவு உணவும் உள்ளே சென்றால் என்னவாகும்? அவ்வளவும் சேர்ந்து நோய்களுக்கு நன்றாகத் தீனி போடும். தீனி போட போட, நோய்கள் பெருகிக் கொண்டே இருக்கும். நோய்களைத் தீனி போட்டு பெருக்கிக் கொண்டு, அதைக் குறைக்க வேண்டும் என்று மருந்துகளை நாடுவது என்பது ஒழுகும் பானையில் ஓட்டையை அடைக்காமல் மேலும் மேலும் தண்ணீரை ஊற்றிக் கொண்டிருப்பதைப் போன்றது.

இப்போது என்ன செய்யலாம்? எந்த வேளை உணவைக் குறைக்கலாம்?

சிற்றுண்டிகளை அறவே தவிர்த்து விட்டு இரவு உணவை இல்லாமல் செய்து கொள்ளலாம்.

அப்படிச் செய்தால்…

செய்து பாருங்கள்.

எந்த சிகிச்சையும் தேவைப்படாமல் உடல் இளைப்பீர்கள்.

சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு என்ற அனைத்தும் கட்டுக்குள் வருவதைக் காண்பீர்கள்.

உடல் கரவு செரவாக மாறுவதைக் காண்பீர்கள்.

உடற்பயிற்சி செய்யாமல், யோகா செய்யாமல் உடல் இப்படி வடிவாக மாறுமா என்று ஆச்சரியப்படுவீர்கள்.

பல நாட்கள் உண்ட மருந்துகளுக்கு வேலை இல்லாமல் போவதைக் கண் முன்னே காண்பீர்கள்.

இதெல்லாம் இரு வேளை உணவை எடுத்த உடனே நிகழ்ந்து விடுமா?

நிச்சயம் நீங்கள் இதற்காக 15 நாட்களிலிருந்து மூன்று மாதங்கள் வரை உங்கள் உடல் நிலையைப் பொருத்துக் காத்திருக்க வேண்டும். அதற்குள் நீங்கள் இந்த மாற்றங்களைக் காண்பீர்கள்.

இரவு உணவை விட்ட பிறகு,

நீங்கள் அதிகாலையில் எழுவீர்கள்.

வேலைகளில் சுறுசுறுப்பாகச் செயல்படுவதை அவதானிப்பீர்கள்.

உங்களிடம் இருந்த மருந்துகள் காணாமல் போவதைக் காண்பீர்கள்.

நூறு கிலோ எடையில் இருந்த நீங்கள் ஐம்பதிலோ அறுபதிலோ வந்து நிற்பதை அதிசயமாக உணர்வீர்கள்.

ஏதோ உங்களுக்கு மாயா ஜாலம் நடந்தது போல இருக்கும்.

ஒரு கட்டத்தில் நீங்கள் காற்றில் பறப்பது போல உடல் இலகுவாகி இருப்பதையும் உணர்வீர்கள்.

உங்கள் மூவேளை உணவை இருவேளை உணவாக மாற்றி விட்டு பாருங்கள். அதற்குப் பின்பு நிகழும் மாற்றங்களை நீங்களே அனுபவித்து இங்கே பதிவிடுவீர்கள்.

ஆக எல்லா நோய்களுக்குமான ஒற்றைத் தீர்வு என்றால் அது இரு வேளை உணவுதான். இருவேளை உணவே உடலுக்கு போதும் எனும் போது மூவேளை உணவு என்பது நிச்சயம் நோய்களுக்கான சாளரம்தான். நோய்க்கான சாளரத்தைத் திறப்பதும், திறக்காமல் இருப்பதும் இப்போது உங்கள் கையில்தான் இருக்கிறது.

வள்ளுவர் சொல்கிறார்,

“இழிவறிந்து உண்பான்கண் இன்பம் போல் நிற்கும்” (குறள், 946)

என்று.

இன்பம் என்றும் உங்களிடம் நிற்க இருவேளை உணவு போதும்.

இதன் மூலம் நீங்கள் உங்கள் உடல் நலத்தை மட்டுமா? கூடுதலாக மூன்றாவது வேளை உணவு தயாரிக்க ஆகும் எரிபொருள், நேரம், பாத்திரத் தூய்மை செய்வதற்கான பணி என்ற எவ்வளவோ கூறுகளை மிச்சம் செய்ய முடியும். உங்கள் உடல் நலத்தையும் பத்திரமாகப் பாதுகாப்பு செய்ய முடியும்.

இருவேளை உணவை இன்றே முயன்று பார்க்கலாமா?

இது கொஞ்சம் கொடுமையாக, ஏன் கடுமையாகக் கூடத் தெரியலாம். அதற்குப் பின்பு நிகழப் போகும் இனிமையைக் காண இந்தக் கடுமையை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கிறதா என்ன?

ஓர் இன்பத்தை எதிர்கொள்ள சில நேரங்களில் சில துன்பங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது யார் சொன்னது என்கிறீர்களா? இதுவும் வள்ளுவர் சொன்னதுதான்,

“துன்பம் உளவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை.”            (குறள், 669)

*****

29 Jun 2024

ஏன் ஒழுக்கம் முக்கியம் தெரியுமா?

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.”               (குறள், 131)

என்கிறார் திருவள்ளுவர்.

இந்த உலகில் உயிரை விட பெரிதாக எது இருக்க முடியும்?

உயிர்தான் பெரிது.

போனால் பெற முடியாதது அது.

அந்த உயிரைக் காக்கத்தானே இந்த உலகில் எல்லாமே போராடிக் கொண்டிருக்கின்றன.

இவ்வளவு மருத்துவ வளர்ச்சியும் எதற்காக? உயிரைக் காக்கத்தானே.

இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளும் எதற்காக? உயிரைக் காக்கத்தானே.

இவ்வளவு சட்டங்கள், வழிமுறைகள் எல்லாம் எதற்காக? உயிர்களைப் பாதுகாக்கத்தானே.

அப்படிப்பட்ட உயிரை விட மேலானதாக எப்படி ஒழுக்கம் இருக்க முடியும்?

உயிரை விட ஒரு படி மேலானதாக ஒழுக்கத்தைக் கருதுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

உயிருக்குச் சிறந்ததை இந்த உலகில் எது தர முடியும்? ஒழுக்கம்தான் தர முடியும்.

இந்த உலகில் எத்தனையோ உயிர்கள் பிறக்கின்றன, இறக்கின்றன. நிலைபெறும் உயிர்களுக்கான பெயரையும் புகழையும் மதிப்பையும் தருவது ஒழுக்கம்தானே.

காந்தியடிகள் உயிர் பிரிந்தாலும் அவர் புகழ் பிரியாமல் இருப்பதற்குக் காரணம் அவரது ஒழுக்கம்தானே.

விவேகானந்தரின் உயிர் மறைந்தாலும் அவர் பெருமை மறையாமல் இருப்பதற்குக் காரணம் ஒழுக்கம்தானே.

உயிர்களின் பெருமைக்கும் மதிப்புக்கும் மட்டுமல்லாது உயிர்கள் நிலைபெறுவதற்கும் ஒழுக்கமே காரணமாக அமைகிறது.

இந்த மனித குலம் என்று ஒழுக்கம் கெடுகிறதோ அன்று அழிந்து போய் விடும்.

இந்த ஒழுக்கத்தைக் கடைபிடிக்காதவர் கற்றவராயினும் கல்லாதவரே.

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.”                (குறள், 140)

என்கிறார் வள்ளுவர்.

இதனை உலகத்திற்குத் தகுந்தாற் போல நெளிவு சுளிவுகளோடு வாழாதவர் யார்யாரோ அவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்கள் என்று சொல்வாருமுண்டு. அதாவது பிழைக்கத் தெரியாதவர்கள் இந்த உலகில் வாழ முடியாது என்று அர்த்தம் கொள்வதுமுண்டு. ஆனால் அப்படியா என்றால், அப்படி விளக்கம் கொள்ள முடியாது.

உலகமும் உலகில் உள்ள மக்களும் நிலைபெறுவதற்கான ஒழுக்கம் எதுவோ அந்த ஒழுக்கத்தைக் கடைபிடிக்காதவர் கற்றறிந்தவராயினும் கல்லாதவர்தானே? அந்தப் பொருளில்தானே வள்ளுவரும் சொல்லியிருக்க முடியும்.

பிழைக்கத் தெரிகின்ற பிழைப்புவாதம் மட்டுமே உலகோடு வாழ்வதற்குரிய ஒழுக்கம் என்றால் இந்த உலகம் என்றோ அழிந்திருக்கும். அதையும் திருவள்ளுவர்தான் சொல்கிறார்,

“பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்.”              (குறள், 996)

என்று.

ஏன் இந்த ஒழுக்கத்திற்குத் திருவள்ளுவர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

ஒரு நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

எத்தனை நல்ல காரியங்களை நினைத்த உடன் செய்திருக்கிறீர்கள்?

பலவற்றைப் பலவாறாக யோசித்திருப்பீர்கள். தள்ளிப் போட்டிருப்பீர்கள். இதைச் செய்ய வேண்டுமா என்று தயங்கியிருப்பீர்கள்.

அவசியம் இதைச் செய்ய வேண்டுமா என்று யோசித்து யோசித்தே கைவிட்டிருப்பீர்கள்.

இது போன்ற காரியங்களைச் செய்வதற்கான மனநிலை வர வேண்டும் என்று காத்திருந்திருப்பீர்கள்.

சூழ்நிலைகள் சரியாக ஒத்து வந்தால்தான் இது போன்ற காரியங்களைச் செய்ய முடியும் என்று ஒத்திப் போட்டிருப்பீர்கள்.

இதெல்லாம் நடந்திருக்கும்தானே?

எனக்கு மட்டுமா? எல்லாருக்கும் இப்படித்தானே என்கிறீர்களா?

அதுதான் இல்லை.

ஒழுக்கத்தை உறுதியாகப் பின்பற்றுபவர்கள் அப்படி இல்லை. அவர்கள் நினைத்ததை நினைத்த வண்ணம் முடிப்பார்கள். அவர்கள் ஒழுக்கத்தைப் பழகியிருக்கிறார்கள். அந்த ஒழுக்கம் அவர்களைத் தூண்டும். அரிப்பெடுத்தவர் சொரிந்து கொள்ளாமல் இருக்க முடியாததைப் போல, வேலை செய்து பழகியவர்கள் அந்த ஒழுக்கத்தைப் பின்பற்றாமல் இருக்க முடியாது. இதுதான் இதன் பின்னுள்ள சூட்சமம்.

ஆகவேதான் ஒழுக்கத்தை உயிராகக் கொள்வதும், உயிரை விட அதை மேலாகக் கொள்வதும் திருவள்ளுவருக்கு முக்கியமாகக் படுகிறது.

சான்றுக்குக் காலையில் எழுந்து பல் துலக்கி விட்டு உண்ணுவதை ஒழுக்கமாகக் கொண்ட ஒருவர் பல் துலக்காமல் உண்ணுவதை ஒரு போதும் செய்து விட முடியாது. அவருடைய மனநிலை அந்த அளவுக்கு அந்த ஒழுக்கத்தின் பின்னணியில் இயங்கும். இது ஒருவர் வளர்த்துக் கொள்ளும் ஒழுக்கத்தில்தான் இருக்கிறது.

நல்ல காரியங்களை அவசியம் செய்தாக வேண்டும் என்ற பழக்கத்தை வளர்த்து அதை ஓர் ஒழுக்கமாக உருவாக்கி விட்டால் அதற்குப் பின்பு உங்களால் அதைத் தள்ளிப் போடவும் முடியாது, செய்யாமல் இருக்கவும் முடியாது.

தினந்தோறும் காலையில் எழுந்து படித்துப் பழகி அது உங்களுக்கு ஒழுக்கமாகி விட்டால் அந்தக் காரியத்தை ஒரு நாள் செய்யாமல் இருந்தாலும் உங்களுக்கு வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்தது போலத்தானே இருக்கும்? அதுதான் ஒழுக்கம் ஒரு காரியத்தை உங்களுக்குள் உள் நின்று இயக்கும் சூக்கும நிலை. அதனால்தான் ஒழுக்கம் இந்த உலகில் உயிரை விடவும் முக்கியமானதாக ஆகிறது.

*****

27 Jun 2024

தடை உத்தரவுகளின் சுதந்திரங்கள்

தடை உத்தரவுகளின் சுதந்திரங்கள்

நம் அன்பெனும் கூண்டுகளே

குழந்தைகளுக்குச் சிறைகளாக இருக்கின்றன

அவர்கள் ஆகாயத்தைத் தேடுகிறார்கள்

நாம் இன்னும் பெரிய கூண்டுகளைத் தருகிறோம்

அவர்கள் சிறகுகளை விரிக்கிறார்கள்

நாம் கூண்டுக்குள் குறுகி நடப்பதைக் கற்பிக்கிறோம்

அவர்கள் காடுகளைத் தேடுகிறார்கள்

நாம் தொட்டிச் செடிகளைக் காட்டுகிறோம்

அவர்கள் மலைகளை நாடுகிறார்கள்

நாம் ஏணிப் படிகளின் உச்சிகளே போதுமென்கிறோம்

அவர்கள் கடலை நோக்குகிறார்கள்

நாம் தொட்டியைக் கொண்டு வந்து வைக்கிறோம்

அவர்கள் கனவுகள் பெரிது

நம் கனவுகள் சிறிது என்பதை

நாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்

பிரியங்களின் காப்புகள் என்று சொல்லி

கைவிலங்களை மாட்டுகிறோம்

144 தடை உத்தரவுக்குள் வழங்கப்படுகின்றன

நாம் தரும் சுதந்திரங்கள்

மின்விசிறியின் இறக்கைகளுக்குள் வந்தமர்ந்து கொள்ள

காற்று என்ன கைக்குள் அடங்கும் கோழிக்குஞ்சா

எங்கெங்கோ சுற்றி வர விரும்பும் காற்று

அடைபட்டுக் கிடப்பதை எப்போது விரும்பியது

தென்றலோ புயலோ சூறாவளியோ

மாறிக் கொள்வதைப் பற்றி எப்போது யோசித்தது

தென்றலுக்கு வருடிக் கொடுக்கவும்

புயலுக்கு ஈடு கொடுக்கவும்

காற்றாக மாறிக் கொள்ளவும்

பறவையாக இருந்து கொள்ளவும்

எல்லாருக்கும் எப்போதும் தெரியும்

*****

24 Jun 2024

வரலாற்றின் பாதையிலொரு காணொளிக் காட்சி

வரலாற்றின் பாதையிலொரு காணொளிக் காட்சி

அந்தக் காணொளி இல்லையென்றால்

நடந்ததை நிரூபிப்பதற்கு வழியேது

ஆதாரங்களும் அத்தாட்சிகளும் இருந்தால்தானே

வரலாறு ஏற்றுக் கொள்ளும்

காற்றில் கரைந்த அழுகுரலுக்கு

வரலாற்றில் பதிவேது

பிரதேசங்கள் மட்டும் அறிந்த ரத்தக்கறைக்கு

வரலாற்றில் இடமேது

அழிக்கப்பட்ட ஆதாரங்களும் அத்தாட்சிகளும்

வரலாற்றால் கைவிடப்பட்ட அனாதைகள்

அழியாத ஆதாரமும் அத்தாட்சியும் இல்லாமல் போனால்

நடந்த ஒன்று நடக்காமல் போனதாக வரலாற்றில் பதிவாகலாம்

வன்கொடுமை சாதாரண வன்முறையெனச் சித்தரிக்கப்படலாம்

நடந்ததற்கு அத்தாட்சி இருந்தும் நடப்பதென்ன

எப்படி அத்தாட்சி கசிந்ததென்ற ஆராய்ச்சிதானே

ஒரு சில பகிர்தலோடு முடிந்து போனால்

வரலாற்றில் அதற்கு மதிப்பேது

பகிர்தலின் பலமே வரலாற்றில் பதிவாகிறது

பலமுறை பகிரப்பட்டும் என்ன

பலமுறை போராடியன்றோ நீதியை அழைத்து வர வேண்டியிருக்கிறது

வரலாற்றின் பாதையில் காணொளிகள்

அழியாத காட்சிகளாக இருக்கும்

வழங்கப்படாத நீதிகளுக்காக

வரலாற்றின் வருங்காலப் பாதையில் வருபவர்கள்

கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டிருப்பார்கள்

கண்டனங்களை மன்னிப்பு கேட்பதால் மட்டுமே

மன்னித்து விட முடியாது என்பதற்கு

வரலாறு ஒரு பாடத்தை நடத்தக் கூடும்

*****

20 Jun 2024

ஓ மை கடவுளே!

ஓ மை கடவுளே!

கி.மு. 2023இல் இப்படி ஒரு வரலாற்றுக் குறிப்பு துர்க்கா பங்கேஷ் என்பவரின் பயணக்குறிப்பேட்டில் காணப்படுகிறது.

அநேகமாக இப்படி ஒரு சம்பவம் வேறு ஒரு மாகாணத்தில் நடந்திருந்தால் அந்த மகாணத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்திருக்கலாம். முடியரசு அதிபரின் ஆட்சி அமல்படுத்தப்ப ட்டிருக்கலாம். என்னவோ கம்பளிப்பூருக்கு அந்தக் கதி நேரவில்லை. கம்பளிப்பூரில் நடக்கும் ஆட்சி மாமன்னருக்கு கட்டுப்பட்ட ஆட்சியாக இருக்கலாம்.

*****

சண்டையில் சட்டை கிழியும் என்றால் ஏன் சட்டைப் போட்டுக் கொண்டு சண்டை போட வேண்டும்.

*****

பழைய தபால் தலைகள், பழைய நாணயங்கள், பழைய புராதனப் பொருட்கள் என்று பார்த்து பார்த்து வாங்கிப் பாதுகாக்கும் நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பார்த்துப் பார்த்து வாங்கியது அனைத்தும் இணையதளத்தில் (Online Purchase). அண்மையில் அவர் பாதுகாத்து வரும் அத்தனையையும் வைத்து ஒரு கண்காட்சி நடத்தினார். அந்தக் கண்காட்சியில்தான் தெரிந்தது அவர் வாங்கி வைத்திருந்தது அத்தனையும் போலிகள் என்று. இணையதளமே போலியா என்று அவருக்கு மயக்கமே வந்துவிட்டது.

*****

இரண்டு மூன்று கடைகளில் விசாரித்து வாங்கிய பிறகு தெரிந்தது, நான்காவது கடையில் அதை விட விலை குறைவாக இருந்தது. எத்தனை கடைகளில் விசாரிப்பது என்பதற்குக் கணக்கிருக்கிறதா? பெரும்பாலும் விசாரிக்காத கடைகளில் விலை குறைவாக இருக்கிறது. விசாரித்த அத்தனை கடைகளிலும் விலை கூடுதலாகத்தான் இருக்கிறது. இதை இந்தக் காலத்தில் டிசைன் என்கிறார்கள். எங்கள் காலத்தில் தலையெழுத்து என்றார்கள். முந்தைய காலத்தில் விதி என்றார்கள்.

*****

பரிதாபப்பட்டால் பணத்தை இழப்பீர்கள் என்ற அறிவுரை வாசகத்தைப் பார்த்ததிலிருந்து பணம் இல்லாத போது மட்டுமே பரிதாப்படுகிறேன். பணம் இருக்கும் போது பரிதாபப்படுவதில்லை.

*****

கோயிலில் பல பிச்சைக்காரர்கள். கடவுள் அவர்களுக்கு ஏன் இப்படிப் பணக்கஷ்டத்தைக் கொடுக்கிறாரோ? சில்லரை இல்லாததால் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்துப் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நான்கு பிச்சைக்காரர்களிடம் கொடுத்தேன். அதை வாங்கிய பிச்சைக்காரர் ஒருவர் மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லாமல் பணத்தை வாங்கியதும் ஓட ஆரம்பித்து விட்டார். நான் இன்னொரு நூறு ரூபாய் நோட்டை எடுப்பதா, கண்டு கொள்ளாமல் கழன்று விடுவதா என்பது புரியாமல் குழம்பி நின்றேன். ஓ மை கடவுளே! ஏன் இப்படி உன் வாயிலில் என்னை அடிக்கடிக் குழப்பி விடுகிறாய்?

*****

பெரும்பாலான ஊர்களில் காளி கோயில் இருக்கிறது. அந்த ஊரில் இல்லாவிட்டாலும் பக்கத்து ஊர்களில் இருக்கும். அல்லது பத்து ஊர்கள் தள்ளியாவது இருக்கும். ஆனால் குறிப்பிட்ட காளிகள்தான் புகழ் பெறுகின்றன. கல்கத்தா காளிக்கு இருக்கும் பெருமை மற்ற காளிகளுக்கு இருக்காது.

கதைகளில் விக்கிரமாதியனின் உஜ்ஜயினி காளிக்குப் பெருமைகள் அதிகம்.

டெல்டா மாவட்டதில் வளைகாப்பு போடுபவர்கள் கும்பகோணத்துக்குக் கோவிந்தகுடிக்கு அருகில் இருக்கும் நல்லூரில் இருக்கும் அஷ்ட புஜ காளிக்கு வளையலை வைத்து அர்ச்சனை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நல்லூரின் நல்ல காலம் என்னவென்றால் இதற்கென ஒரு கூட்டமே கிளம்பி நல்லூரை நோக்கி வருகிறது.

இப்படி ஒரு கூட்டத்தைக் கிளப்பி விட்டு நல்லூரைப் பிரபலமாக்கிய பெருமை சோதிடர்களையே சாரும். இந்தச் சோதிடர்கள் இல்லையென்றால் மக்கள் இவ்வளவு கோயில்களை நோக்கி படையெடுப்பார்களா? கோயிலை நோக்கி ஒரு கூட்டத்தை உருவாக்குவதில் இந்தச் சோதிடர்களுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.

*****

பொறுமையை இழக்கா விட்டால் நீங்கள் எதையும் இழக்க மாட்டீர்கள். பொறுமை இருந்தால்தானே இழப்பதற்கு? இவ்வளவு அவசரம், இவ்வளவு பரபரப்பு, இவ்வளவு பதற்றம், இவ்வளவு டிராபிக், இவ்வளவு மெகா தொடர்கள், யாருக்கு இருக்கும் பொறுமை?

*****

இப்படி ஓர் இடம்தான் தேவை என்றெல்லாம் சொல்ல முடியாது. உங்களுக்கு நிகழ்த்துவதற்கான ஒரு மனநிலை தேவை. இடத்தை உருவாக்குபவர் தனக்கான வருமானத்தை உருவாக்கிக் கொள்கிறார். அவருடைய இடத்திற்குச் செல்லாதீர்கள். அங்கே நீங்கள் எதையேனும் உருவாக்கலாம். அது இயற்கையாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உருவாக்குவதற்கான மனநிலை தானாகவே உருவாகும். அதை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

*****

வாக்களிக்க பணம் வாங்காதீர்கள் என்று ஒரு நடிகர் பிள்ளைகளுக்குப் பரிசளித்துப் பெற்றோர்களிடம் சொல்லச் சொல்கிறார். தன்னுடைய படத்தைக் கூடுதல் கட்டணம் கொடுத்தெல்லாம் பார்க்காதீர்கள் என்றும் சொல்ல வேண்டும். வாக்களிக்க ஆயிரம் வாங்குவதற்கும், முதல் நாள் திரைப்படத்தை ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்துப் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.

*****

17 Jun 2024

தேவையற்றுப் போன ஒரு தேவையுள்ள தொழில்

தேவையற்றுப் போன ஒரு தேவையுள்ள தொழில்

எக்காலமும் தேவையுள்ள ஒரு தொழில் எது தெரியுமா?

பொறியியல்,

விண்வெளி,

செயற்கை நுண்ணறிவு,

சேவையில் வருமென்றாலும் கல்வியா? மருத்துவமா?

விவசாயம்தான். உங்களைக் கேள்வி கேட்டு நானே பதில் சொல்லி விட்டேன்.

எப்படி என்கிறீர்களா?

நீங்கள் அலைபேசி இல்லாமல் இருந்திடலாம். கணிப்பொறி இல்லாமல் இருந்திடலாம். வாகனங்கள் இல்லாமல் இருந்திடலாம். வங்கிகள் இல்லாமல் இருந்திடலாம். மாடி வீடுகள் இல்லாமல் வாழ்ந்திடலாம். ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் இல்லாமல் வாழ்ந்திடலாம். தொலைக்காட்சிகள், முகநூல், புலனம் இல்லாமல் வாழ்ந்திடலாம். கொரோனா காலத்தில் இருந்ததைப் போல மருந்து மாத்திரைகள் இல்லாமலும் இருந்திடலாம். உணவு உண்ணாமல் எப்படி இருக்க முடியும்? இதென்ன அரட்டை அரங்க வெட்டிப் பேச்சுப் போல இருக்கிறது என நினைக்கிறீர்களா? ஒரு விதத்தில் இது அப்படித்தான் இருக்கிறது. அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் சில நேரங்களில் சில சாயல்களைக் கடன் வாங்கித்தான் ஆக வேண்டியிருக்கிறது. கடன் பழக்கம் தவணை முறை இருக்கின்ற வரைக்கும் இருக்கும். என்ன செய்வது?

அலைபேசிகள் லட்சம் ரூபாய் விற்பதைப் பற்றிக் கவலைப்படுகிறோமா? ஆனால் தக்காளி விலை 200க்குப் போகும் போது கவலைப்படுகிறோம் இல்லையா? வெங்காயம் விலை சதம் அடிக்கும் போது சோர்ந்து போகிறோம் இல்லையா? இப்போது அரிசி விலை ஏறி வருவது நம்மை யோசிக்க வைக்கிறது இல்லையா? இதிலிருந்தே நீங்கள் விவசாயத்தின் அருமையைத் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்வது உங்களை உணர்ச்சிவசப்படுத்துவது போல, உசுப்பி விடுவது போலத் தோன்றலாம். அப்படித் தோன்றினால் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் எதார்த்தம் அப்படி ஆகி விடுமோ என்ற அச்சம் என்னை அப்படி உணர்ச்சிவசப்பட்டு உங்களையும் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட வைக்கிறதோ என்னவோ? அப்படியானால் மேலும் கொஞ்சம் நாம் இது குறித்துப் பேசத்தான் வேண்டும்.

வருமான ரீதியாகத் தற்காலத்தில் விவசாயம் லாபம் தரும் தொழிலாக இல்லாமல் இருக்கலாம். அது தற்காலத்தில்தான். உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் விவசாயம்தான் லாபகரமான தொழில். அப்போது நீங்கள் லட்சம் ரூபாய் கொடுத்து வாகனம் வாங்குவதையோ, கணிப்பொறி வாங்குவதையோ யோசிக்க மாட்டீர்கள். பசியைப் போக்கிக் கொள்ள, உயிர் வாழ உணவை எப்படிப் பெறுவது என்பதைத்தான் யோசிப்பீர்கள். இதுவும் உங்களை குடாப்பில் கொண்டு போய் விடுகிறதா? விடும்தான். நான் என்ன செய்ய சொல்லுங்கள்?

நாம் விவசாயம் சம்பந்தமான படிப்புகளைப் படிக்கிறோமா என்றால் படிக்கிறோம். விவசாயத்தைச் செய்கிறோமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. லாபம் குறைந்த தொழில்களுள் ஒன்றாக விவசாயம் மாறி வருகிறது. அதன் காரணமாக விவசாயத்தை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை குறைவதோடு விவசாயத்தில் இருப்போரின் எண்ணிக்கையும் குறைந்து போகிறது. இதெல்லாம் தெரிந்த சங்கதிகளைத் தெரியாதது போலச் சொல்வது என்கிறீர்களா? ஆமாம் அப்படித்தான். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இருந்தாலும் அது அப்படி ஆகாமல் இருக்க வேண்டும்.

ஒரு நிலத்தை விளைநிலமாக வைத்திருப்பதை விட மனை போட்டு வியாபார நிலமாக மாற்றுவது லாபகரமாக இருக்கிறது. இந்த லாப நோக்கம் விளைநிலங்களை அழித்துக் கொண்டு வருகிறது. இதுவும் உங்களுக்குத் தெரிந்த உண்மையாக இருக்கலாம். உண்மைகளை வைத்துக் கொண்டு சொல்லாமல் அல்லது உளறாமல் இருக்க முடியுமா?

அபரிமிதமான உணவுப் பெருக்கம் விளைநிலங்களின் வீழ்ச்சி குறித்து நம்மை யோசிக்க வைக்க விடாமல் செய்கிறது. இந்த உணவுப் பெருக்கம் எப்போதும் இப்படியே இருக்கும் என்று சொல்லி விட முடியாது. உலக மக்கள் தொகையும் சுருங்கி விடும் என்று சொல்லி விட முடியாது. உணவு உற்பத்தி வீழ்ச்சி அடைவதும் மக்கள் பெருக்கம் எழுச்சி அடைவதும் உணவுப் பகிர்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்போது நான் உங்களை அபாயகரமான அச்ச நிலையில் தள்ளுகிறேனா?

தேவைக்குச் சற்றுக் கூடுதலாக இருக்கும் வரையில்தான் பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படும். தேவைக்குச் சற்றுக் குறைந்தால் கூட நியாயமற்ற விலைக்குப் பொருட்களின் விலை ஏறி விடும். கள்ளச் சந்தைகளும் பதுக்கல்களும் அப்போது தாமாகவே உருவாகி விடும். இந்நிலை விபரீதமான விலைப் பெருக்கத்தை ஏற்படுத்தி விடும். இப்போது உங்களை விபரீதத்தின் மடியில் விழ வைத்துவிட்டேன். ஆக இந்தப் பிரச்சனையை அரசாங்கத்தை நோக்கி திசை திருப்புவதுதான் நல்லது.

விவசாயத்தில் லாபம் இருக்கிறதோ, இல்லையோ என்பதை விட விவசாயத்தைக் குறைந்தபட்ச லாபத்தோடு இயங்க வைக்க வேண்டிய கடமை ஒவ்வொரு நாட்டின் அரசாங்கத்திற்கும் இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் அரசாங்கத்தின் முதன்மையான கடமை குடிமக்களுக்கு நியாயமான விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதுதான். பேரிடரான காலங்களில் இலவசமாகவும் உணவுப் பொருட்களை வழங்க வேண்டியிருக்கும். அதற்கேற்ப விவசாய விளைபொருட்களின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனிப்பதும் தேவைக்கேற்ப விவசாயத்தை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும் அரசாங்கங்கள் முன்னின்று செய்ய வேண்டிய பணிகளாகும். முடிவில் எல்லாம் அறிவுரையாகவோ அறவுரையாகவோ மாறி விட்டது பாருங்கள்.

மக்களும் சரி, அரசாங்கங்களும் சரி விண்வெளி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என்று பல்வேறு வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு உணவு உற்பத்தி வளர்ச்சியைச் சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது. உணவே நம்மை உய்விக்கிறது, வாழ்விக்கிறது. இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. இல்லாத போது அது உலக வராற்றையே மாற்றிப் போடும் அளவுக்கு உக்கிரமானது என்பதை நாம் மறந்து விடல் ஆகாது. ஒரு முடிவுரை என்பது எப்போதும் இப்படித்தான் இருக்க வேண்டுமா? ஆனால் இது எப்போதோ சொல்லப்பட்ட விசயம்தான். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே. நீங்களே படித்துப் பாருங்கள்.

“உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.”   (குறள், 1036)

*****

13 Jun 2024

வயிற்றைக் குப்பைத் தொட்டியாக்காதீர்கள்!

வயிற்றைக் குப்பைத் தொட்டியாக்காதீர்கள்!

லங்கணம் பரம ஓளஷதம் என்பார்கள்.

பட்டினியைப் போன்ற பக்குவமான மருந்தில்லை.

இதன் பொருள்தான் என்ன? பட்டினி கிடப்பதைப் போன்ற மருந்து இந்த உலகில் வேறு இல்லை என்பதுதான் இதன் பொருள்.

பட்டினி எப்படி மருந்தாகும்?

ஒன்றும் இல்லாமல் இருப்பது மருந்தாகுமா?

இங்கு எதுவும் செய்யாமல் இருப்பது மருந்தாகிறது, பூஜ்யம் எண்களுடன் சேர்ந்து மதிப்பைப் பெறுவதைப் போல. எப்போது உண்பதுடன் சேர்ந்து உண்ணாமல் இருப்பது மருந்தாகும் மதிப்பைப் பெறுகிறது.

எல்லா நோய்களுக்கும் பட்டினி கிடப்பது தீர்வாகுமா என்றால் பெரும்பான்மையான நோய்களுக்கு அது நல்ல ஒரு தீர்வாக இருப்பதை நீங்களே அனுபவத்தில் உணர முடியும்.

வாரத்தில் ஒரு நாள் பட்டினி கிடந்து பார்க்கும் போது அதனால் உடலுக்குக் கிடைக்கும் கலகலப்பை நீங்கள் உணர முடியும்.

நாளுக்கு ஒரு வேளை பட்டினி கிடந்தால் நீங்கள் எந்த நோய் நொடியும் இல்லாமல் இருக்க முடியும். அதாவது மூன்று வேளைக்கு ஒரு வேளை பட்டினி என்றால் ஒரு நாளைக்கு இரு வேளை உணவை உட்கொண்டால் உடலுக்கும் மனதுக்குமான சுறுசுறுப்பு தனித்த அளவில் இருக்கும்.

இது உண்மையா என்றால், இந்த உண்மையைச் சோதித்துப் பார்ப்பதில் உங்களுக்கு எந்த விதமான சிரமும் இல்லை. பட்டினி கிடந்தே அனுபவத்தில் சோதித்துப் பார்த்து விடலாம்.

பாரதியார் இப்படிப் பாடுகிறார்.

“நோயிலே படுப்பது என்ன கண்ணபிரானே?

நோன்பிலே உயிர்ப்பது என்ன கண்ணபிரானே?”

மத நம்பிக்கை உடையவர்கள் விரதம் இருப்பது, நோன்பு இருப்பது என்று பட்டினியை ஓர் ஆன்மீகச் செயல்பாடாகச் செய்கிறார்கள்.

பட்டினி உடலுக்கு ஓய்வைத் தருகிறது. அந்த ஓய்வில் உடல் உள்ளுறுப்புகள் தங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றன.

இருக்கும் போது இல்லாமலிருக்கும் ஒரு தத்துவத்தையும் இந்தப் பட்டினியானது சொல்கிறது. அதாவது உண்பதற்கான உணவு இருந்தும் ஒரு வேளை பட்டினி கிடப்பது உடலுக்கு நன்மையைத் தருகிறது. அதாவது, இருந்தும் இல்லாமலிருப்பது அவ்வளவு நன்மைகளைத் தருகிறது.

உண்பதற்கு இடையே உண்ணாமல் பட்டினி கிடப்பது மனிதனின் வாழ்நாளை உயர்த்துகிறது. உண்பதற்கு இடையே தின்று கொண்டே இருப்பது மனிதனின் வாழ்நாளை அழித்து விடுகிறது.

பசித்தாலும் அளவோடு உண்ண வேண்டும்.

பசிக்காவிட்டால் சாப்பிட வேண்டுமே என்று சாப்பிட வேண்டாம். பட்டினி யோடு இருங்கள். அது இயற்கையாகவே உடல் வேண்டும் பட்டினி. வாரம் முழுவதும் நன்றாகப் பசித்து நீங்கள் உண்டு கொண்டிருந்தாலும் ஒரு வேளையாவது பட்டினி இருக்கப் பழகுங்கள். ஆரம்பத்தில் பட்டினி இருப்பது கஷ்டமாக இருந்தாலும் பழகி விட்டால் இது மிக இயல்பாகி விடும், எளிதாகி விடும்.

நமது விருந்தோம்பலிலும் விருந்துகளிலும் நாம் வழக்கமாகச் செய்யும் தவிர்க்க முடியாத ஒரு தவறு இருக்கிறது.

அன்புக்காகப் பாசத்திற்காகப் பரிமாறுவதையோ, கொடுப்பதையோ வேண்டாம் என்று சொன்னால் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று நினைத்து அதை அப்படியோ ஏற்றுக் கொள்வதுதான் அந்தக் குறைபாடு. இன்னும் கொஞ்சம் என்று பண்டங்களையோ பலகாரங்களையோ யார் பரிமாறினாலும் அதை மறுக்க முடியாமல் வயிற்றுக்குள் தள்ளுவதுதான் நம் பிரச்சனை. இந்தத் தவறாலும், பிரச்சனையாலும் நம் வயிறு குப்பைத் தொட்டியாகி விடுகிறது. குப்பைத் தொட்டியாகும் வயிறு நாற்றம் எடுப்பதுதான் நோய்களின் வடிவங்கள்.

இன்னும் கொஞ்சம் என்று யார் எவ்வளவு அன்பாகச் சொல்லி எதைச் சாப்பிட சொன்னாலும் அதை அதே அன்போடு மறுத்து விடுங்கள்.

அன்பின் மிகுதியால் கூடுதலாக ஒன்றை வழங்கும் நிலையில் அதை வேண்டாம் என்று ஒருவர் மறுத்தால் அந்த மறுப்பையும் ஏற்றுக் கொள்வதே சரியான அன்பாகும் என்பதை உறவுகளும் நட்புகளும் புரிந்து கொள்ள வேண்டும். நம் அன்பின் மிகுதியால் யார் வயிற்றையும் குப்பைத் தொட்டியாக்கும் உரிமை யாருக்கும் இல்லைதானே!

நிறைவாக வாழ்வதற்குக் குறைவாக உண்பது நல்ல வழிமுறை. வளமாக வாழ்வதற்கு அளவாக தின்பது நல்ல நெறிமுறை. குறைவும் அளவும் நல்ல வாழ்க்கைக்கான விதிமுறை.

*****

10 Jun 2024

சௌகரியத்தின் பாதை

சௌகரியத்தின் பாதை

சௌகரியமான விசயங்களைத் தொடர்கிறோம். கடினமான விசயங்களை மன உளைச்சல் தருமோ என்ற அச்சத்தில் விலக்குகிறோம். ஆனால் சௌகரியமான விசயங்கள் ஒரு காலத்தில் கடினமானவையாக இருந்தவை. அவை எப்படி சௌகரியமான விசயங்களாக மாறிப் போயின?

கடினத்தைப் பொருட்படுத்தாத மனம் அப்போது இருந்தது. இந்தக் கடினத்தை எதிர்கொண்டு எதையாவது சாதிக்க வேண்டும் என்ற மனமும் அப்போது இருந்தது. கடினத்தை விட சாதிக்க வேண்டும் என்ற உணர்வும் நினைப்புமே அப்போது முதன்மையாக இருந்தன. அந்த உணர்வும் நினைப்பும் கடினத்தால் உண்டாகப் போகும் மனதையோ, மன உளைச்சலையோ அப்போது பொருட்படுத்தத் தயாரில்லை. உண்மையில் அப்போது மன உளைச்சல் பிரச்சனையே இல்லை. சாதிப்பது மட்டும்தான் பிரச்சனையாக இருந்தது. மன உளைச்சலை அந்த நிலையில் மனம் கவனிக்கவும் தயாராக இல்லை.

இப்போது என்னவாகி விட்டது? இப்போது மனம் ஒரு சௌரியமான நிலையைத் தேடுகிறது. இது ஏதேனும் ஒன்றைச் சாதித்தப் பின் நிகழும் மாற்றம். இந்தச் சௌகரியமான நிலைதான் மன உளைச்சல் என்ற ஒன்று இருப்பதைப் பொருப்படுத்துகிறது. மன உளைச்சலைக் கண்களுக்குக் காட்டுகிறது. மன உளைச்சலை உணரச் செய்கிறது. மன உளைச்சல் என்ற ஒன்று இருக்கிறது எனக் சொல்கிறது.

மன உளைச்சல் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்றால் அது உங்களது விருப்பத்தையும் ஆர்வத்தையும் பொருத்த ஒன்று. உங்களுக்கு விருப்பமோ ஆர்வமோ இல்லாத எதனைச் செய்தாலும் அத்தனையும் மன உளைச்சலில்தான் போய் முடியும். விருப்பமும் ஆர்வமும் உள்ள எதையும் மன உளைச்சல் இல்லாமல் செய்து கொண்டிருக்க முடியும். அப்படிச் செய்யும் போது நீங்கள் மன உளைச்சலை உணர்ந்தாலும் நீங்கள் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள்.

ஆர்வமும் இல்லை, விருப்பமும் இல்லை. ஆனால் செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறேன் என்றால் நீங்கள் மன உளைச்சலிலிருந்து தப்பிக்க முடியாது. இங்கே மன உளைச்சலைத் தணித்துக் காரியத்தை முடிக்க முடியாதா? வாழ்க்கையில் இது போன்ற நிலையில்தான் பல சூழ்நிலைகள் அமையும். காரியத்தையும் முடிக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் மன உளைச்சலையும் தவிர்க்க முடியாது.

இந்த இடத்தில்தான் நமக்குப் பயிற்சியும் பழக்கப்படுத்திக் கொள்ளுதலும் உதவுகின்றன. ஒரு காரியத்தை ஆற்றுவதால் மன உளைச்சல் உண்டாகிறது என்றால் அந்தக் காரியத்தில் இருக்கும் கடினம் அதற்கு ஒரு காரணம். இந்தக் கடினத்தன்மை விருப்பமின்மையையும் ஆர்வமின்மையையும் உருவாக்கி மன உளைச்சலைத் தரலாம். விருப்பமின்மை மற்றும் ஆர்வமின்மையால் மன உளைச்சல் உருவாவதும் மன உளைச்சலால் விருப்பமின்மையும் ஆர்வமின்மையும் உருவாவதும் மாறி மாறி நிகழும் சங்கிலித் தொடர் நிகழ்வுகள்.

கடினத்தைப் போக்கிக் கொள்ள பயிற்சி பெறுதல் நல்ல வழியாகும். உங்களுக்கு நீங்களே பன்முறைப் பயிற்சி அளித்துக் கொள்ள முடியாத நிலையில் நீங்கள் ஒரு பயிற்சியளிப்பவரை அமர்த்திக் கொள்ளலாம். ஒரு வழிகாட்டியிடம் பயிற்சிக்காகவும் சேரலாம். இம்முறைகளை விட பயிற்சியை எளிமையாக்கும் ஒரு முறை என்னவென்றால் கூட்டுப்பயிற்சி முறை. கூட்டாகச் சிலரைச் சேர்த்துக் கொண்டும் பயிற்சியைக் கூட்டுப் பயிற்சியாகத் தொடரலாம்.

அடுத்த முக்கியமான விசயம் என்னவென்றால் எதைப் பயிற்சி செய்கிறீர்களோ அதை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக்கிக் கொள்வது. இதைத்தான் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் என்கிறோம். ஆரம்பத்தில் பல் துலக்க, குளிக்க எல்லாம் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இப்போது அவை உங்களுக்குப் பழக்கமாகி விட்டன. நீங்கள் உங்களை அறியாமல் அந்த வேலைகளைச் செய்து கொண்டிருப்பீர்கள். இதுதான் பழக்கப்படுத்திக் கொள்வதன் பலன். பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலமாகக் கடினமான வேலையைச் சுலபமாகச் செய்யும் திறனை நீங்கள் பெறுவீர்கள்.

அசௌகரியமான காரியமாற்றும் நிலைமைகளைக் கண்டு பயந்து விடாதீர்கள். சோர்ந்து போய் விடாதீர்கள். கலங்கி நின்று விடாதீர்கள். பயிற்சியின் மூலமாகவும் பழக்கப்படுத்துவதன் மூலமாகவும் அவற்றை மாற்ற முடியும்.

சட்டென்று நீங்கள் துவங்கும் பயிற்சி உங்கள் மனதுக்கு ஒத்து வந்து விடாது. இன்னும் சொல்லப் போனால் அந்தப் பயிற்சி முறைகளை உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம். துவக்கத்தில் இது நேரவே செய்யும். இந்த மனச்சங்கடமான நிலையை மட்டும் பல்லைக் கடித்துக் கொண்டு நீங்கள் பயிற்சியைத் தொடரத்தான் வேண்டியிருக்கும். பயிற்சி பெறும் போது ஏற்படும் கடினமான நிலை என்று இதைத்தான் சொல்ல வேண்டும். இது போன்ற நிலையில் உங்கள் மனதில் தோன்றும் கடினமான நிலைகளை உங்களுக்குப் பயிற்சியளிப்பவரிடம், உங்கள் வழிகாட்டியிடம், உங்களைப் போன்று பயிற்சி பெறும் சக பயிற்சியாளர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள், சிறு சிறு நுட்பங்கள் பயிற்சியில் இருக்கும் கடினத்தைக் கடக்க உங்களுக்கு உதவும். சில நேரங்களில் மனதில் இருக்கும் பாரத்தைக் கொட்டி விடுவது கூட கடினத்தைக் கடப்பதற்கு பேருதவியாக இருக்கும்.

பயிற்சியைப் பழக்கமாக ஆக்கிக் கொள்வதில் உறுதியாக இருங்கள். இதை வைராக்கியம் என்றும் சொல்வார்கள். வைராக்கியம் பிறழ்வதற்கான சூழ்நிலைகள் அதிகம் ஏற்படக் கூடும். அதை நீங்கள் அமைதியாகப் புரிந்து கொள்ள முயல வேண்டும். உங்கள் வைராக்கியத்தை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும், அதிலிருந்து ஏன் பிறழ வேண்டும் என்பதற்கான மன காரணங்களை நீங்கள் கவனமாக அலசிப் பார்க்க வேண்டும். அந்தக் காரணங்களிலிருந்து நீங்கள் ஏன் விட்டுக் கொடுக்கக் கூடாது, ஏன் உங்கள் முடிவிலிருந்து பிறழக் கூடாது என்பதை நோக்கி நகர வேண்டும்.

உங்களுக்கு மட்டும் மன உளைச்சல் தரும் வேலைகள் அமைந்து விட்டதாக நீங்கள் கருதிக் கொள்ளக் கூடாது. பலருடைய வாழ்க்கை ஏன் எல்லாருடைய வாழ்க்கையும் சில பல நேரங்களில் அப்படித்தான் அமைகிறது. அவர்கள் மட்டும் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்றால் அங்குதான் இந்தப் பயிற்சி மற்றும் பழக்கப்படுத்துதலின் சூட்சமம் அடங்கி இருக்கிறது.

அசௌகரியம் அல்லது கடினம் என்று கருதும் காரியங்களை அவை தங்களுக்கு நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து அந்தக் காரியங்களை ஆற்றும் பயிற்சி வளையத்திற்குள் வருபவர்கள் சாதித்து விடுகிறார்கள். அவர்கள் அசௌகரியங்களையும் கடினங்களையும் எதிர்கொள்ளும் தன்மையைத் தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டு அவற்றைச் சௌகரியமாகவும் எளிமையாகவும் மாற்றிக் கொள்கிறார்கள்.

இதில் ஆரம்பமும் சிறிது காலம் தொடர்தலும் வேண்டுமானால் சிரமம் தருவதாக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட தூரம் கடந்து விட்ட பிறகு எதை நீங்கள் சுமையாகக் கருதி முனகியபடி நடக்கவே தடுமாறிக் கொண்டிருந்தீர்களோ அதையே சுகமாகக் கருதித் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்து விடுவீர்கள். பறக்க ஆரம்பித்து விடுவீர்கள் என்று சொன்னாலும் அது நிஜம்தான்.

சௌகரியத்தை நோக்கியப் பாதையில் எளிமையை நோக்கிய வழியில் எல்லாரும் அசௌகரியத்தையும் கடினத்தையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அதை எதிர்கொண்டுதான் சௌகரியத்தையும் எளிமையையும் அடைந்திருக்கிறார்கள். இப்போது எதிர்கொள்ளும் கடினமும் அசௌரிகயமும் தொடர்ந்து எதிர்கொள்வதன் மூலமாக எளிமையாகவும் சௌகரியமாகவும் மாறப் போகின்றவைதான் என்பதை மறக்காதீர்கள்.

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...