17 Jun 2024

தேவையற்றுப் போன ஒரு தேவையுள்ள தொழில்

தேவையற்றுப் போன ஒரு தேவையுள்ள தொழில்

எக்காலமும் தேவையுள்ள ஒரு தொழில் எது தெரியுமா?

பொறியியல்,

விண்வெளி,

செயற்கை நுண்ணறிவு,

சேவையில் வருமென்றாலும் கல்வியா? மருத்துவமா?

விவசாயம்தான். உங்களைக் கேள்வி கேட்டு நானே பதில் சொல்லி விட்டேன்.

எப்படி என்கிறீர்களா?

நீங்கள் அலைபேசி இல்லாமல் இருந்திடலாம். கணிப்பொறி இல்லாமல் இருந்திடலாம். வாகனங்கள் இல்லாமல் இருந்திடலாம். வங்கிகள் இல்லாமல் இருந்திடலாம். மாடி வீடுகள் இல்லாமல் வாழ்ந்திடலாம். ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் இல்லாமல் வாழ்ந்திடலாம். தொலைக்காட்சிகள், முகநூல், புலனம் இல்லாமல் வாழ்ந்திடலாம். கொரோனா காலத்தில் இருந்ததைப் போல மருந்து மாத்திரைகள் இல்லாமலும் இருந்திடலாம். உணவு உண்ணாமல் எப்படி இருக்க முடியும்? இதென்ன அரட்டை அரங்க வெட்டிப் பேச்சுப் போல இருக்கிறது என நினைக்கிறீர்களா? ஒரு விதத்தில் இது அப்படித்தான் இருக்கிறது. அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் சில நேரங்களில் சில சாயல்களைக் கடன் வாங்கித்தான் ஆக வேண்டியிருக்கிறது. கடன் பழக்கம் தவணை முறை இருக்கின்ற வரைக்கும் இருக்கும். என்ன செய்வது?

அலைபேசிகள் லட்சம் ரூபாய் விற்பதைப் பற்றிக் கவலைப்படுகிறோமா? ஆனால் தக்காளி விலை 200க்குப் போகும் போது கவலைப்படுகிறோம் இல்லையா? வெங்காயம் விலை சதம் அடிக்கும் போது சோர்ந்து போகிறோம் இல்லையா? இப்போது அரிசி விலை ஏறி வருவது நம்மை யோசிக்க வைக்கிறது இல்லையா? இதிலிருந்தே நீங்கள் விவசாயத்தின் அருமையைத் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்வது உங்களை உணர்ச்சிவசப்படுத்துவது போல, உசுப்பி விடுவது போலத் தோன்றலாம். அப்படித் தோன்றினால் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் எதார்த்தம் அப்படி ஆகி விடுமோ என்ற அச்சம் என்னை அப்படி உணர்ச்சிவசப்பட்டு உங்களையும் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட வைக்கிறதோ என்னவோ? அப்படியானால் மேலும் கொஞ்சம் நாம் இது குறித்துப் பேசத்தான் வேண்டும்.

வருமான ரீதியாகத் தற்காலத்தில் விவசாயம் லாபம் தரும் தொழிலாக இல்லாமல் இருக்கலாம். அது தற்காலத்தில்தான். உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் விவசாயம்தான் லாபகரமான தொழில். அப்போது நீங்கள் லட்சம் ரூபாய் கொடுத்து வாகனம் வாங்குவதையோ, கணிப்பொறி வாங்குவதையோ யோசிக்க மாட்டீர்கள். பசியைப் போக்கிக் கொள்ள, உயிர் வாழ உணவை எப்படிப் பெறுவது என்பதைத்தான் யோசிப்பீர்கள். இதுவும் உங்களை குடாப்பில் கொண்டு போய் விடுகிறதா? விடும்தான். நான் என்ன செய்ய சொல்லுங்கள்?

நாம் விவசாயம் சம்பந்தமான படிப்புகளைப் படிக்கிறோமா என்றால் படிக்கிறோம். விவசாயத்தைச் செய்கிறோமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. லாபம் குறைந்த தொழில்களுள் ஒன்றாக விவசாயம் மாறி வருகிறது. அதன் காரணமாக விவசாயத்தை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை குறைவதோடு விவசாயத்தில் இருப்போரின் எண்ணிக்கையும் குறைந்து போகிறது. இதெல்லாம் தெரிந்த சங்கதிகளைத் தெரியாதது போலச் சொல்வது என்கிறீர்களா? ஆமாம் அப்படித்தான். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இருந்தாலும் அது அப்படி ஆகாமல் இருக்க வேண்டும்.

ஒரு நிலத்தை விளைநிலமாக வைத்திருப்பதை விட மனை போட்டு வியாபார நிலமாக மாற்றுவது லாபகரமாக இருக்கிறது. இந்த லாப நோக்கம் விளைநிலங்களை அழித்துக் கொண்டு வருகிறது. இதுவும் உங்களுக்குத் தெரிந்த உண்மையாக இருக்கலாம். உண்மைகளை வைத்துக் கொண்டு சொல்லாமல் அல்லது உளறாமல் இருக்க முடியுமா?

அபரிமிதமான உணவுப் பெருக்கம் விளைநிலங்களின் வீழ்ச்சி குறித்து நம்மை யோசிக்க வைக்க விடாமல் செய்கிறது. இந்த உணவுப் பெருக்கம் எப்போதும் இப்படியே இருக்கும் என்று சொல்லி விட முடியாது. உலக மக்கள் தொகையும் சுருங்கி விடும் என்று சொல்லி விட முடியாது. உணவு உற்பத்தி வீழ்ச்சி அடைவதும் மக்கள் பெருக்கம் எழுச்சி அடைவதும் உணவுப் பகிர்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்போது நான் உங்களை அபாயகரமான அச்ச நிலையில் தள்ளுகிறேனா?

தேவைக்குச் சற்றுக் கூடுதலாக இருக்கும் வரையில்தான் பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படும். தேவைக்குச் சற்றுக் குறைந்தால் கூட நியாயமற்ற விலைக்குப் பொருட்களின் விலை ஏறி விடும். கள்ளச் சந்தைகளும் பதுக்கல்களும் அப்போது தாமாகவே உருவாகி விடும். இந்நிலை விபரீதமான விலைப் பெருக்கத்தை ஏற்படுத்தி விடும். இப்போது உங்களை விபரீதத்தின் மடியில் விழ வைத்துவிட்டேன். ஆக இந்தப் பிரச்சனையை அரசாங்கத்தை நோக்கி திசை திருப்புவதுதான் நல்லது.

விவசாயத்தில் லாபம் இருக்கிறதோ, இல்லையோ என்பதை விட விவசாயத்தைக் குறைந்தபட்ச லாபத்தோடு இயங்க வைக்க வேண்டிய கடமை ஒவ்வொரு நாட்டின் அரசாங்கத்திற்கும் இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் அரசாங்கத்தின் முதன்மையான கடமை குடிமக்களுக்கு நியாயமான விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதுதான். பேரிடரான காலங்களில் இலவசமாகவும் உணவுப் பொருட்களை வழங்க வேண்டியிருக்கும். அதற்கேற்ப விவசாய விளைபொருட்களின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனிப்பதும் தேவைக்கேற்ப விவசாயத்தை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும் அரசாங்கங்கள் முன்னின்று செய்ய வேண்டிய பணிகளாகும். முடிவில் எல்லாம் அறிவுரையாகவோ அறவுரையாகவோ மாறி விட்டது பாருங்கள்.

மக்களும் சரி, அரசாங்கங்களும் சரி விண்வெளி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என்று பல்வேறு வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு உணவு உற்பத்தி வளர்ச்சியைச் சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது. உணவே நம்மை உய்விக்கிறது, வாழ்விக்கிறது. இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. இல்லாத போது அது உலக வராற்றையே மாற்றிப் போடும் அளவுக்கு உக்கிரமானது என்பதை நாம் மறந்து விடல் ஆகாது. ஒரு முடிவுரை என்பது எப்போதும் இப்படித்தான் இருக்க வேண்டுமா? ஆனால் இது எப்போதோ சொல்லப்பட்ட விசயம்தான். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே. நீங்களே படித்துப் பாருங்கள்.

“உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.”   (குறள், 1036)

*****

No comments:

Post a Comment

இப்படித்தான் எல்லாம்!

இப்படித்தான் எல்லாம்! இப்படித்தான் வழங்கப்படுகின்றன இலவசங்கள் ஒரு தோடு வாங்கினால் இன்னொரு தோடு இலவசம் அதிர்ஷ்ட நாட்கள் இப்படித்தான் கண...