ஓ மை கடவுளே!
கி.மு. 2023இல் இப்படி ஒரு
வரலாற்றுக் குறிப்பு துர்க்கா பங்கேஷ் என்பவரின் பயணக்குறிப்பேட்டில் காணப்படுகிறது.
அநேகமாக இப்படி ஒரு சம்பவம்
வேறு ஒரு மாகாணத்தில் நடந்திருந்தால் அந்த மகாணத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்திருக்கலாம்.
முடியரசு அதிபரின் ஆட்சி அமல்படுத்தப்ப ட்டிருக்கலாம். என்னவோ கம்பளிப்பூருக்கு அந்தக்
கதி நேரவில்லை. கம்பளிப்பூரில் நடக்கும் ஆட்சி மாமன்னருக்கு கட்டுப்பட்ட ஆட்சியாக இருக்கலாம்.
*****
சண்டையில் சட்டை கிழியும்
என்றால் ஏன் சட்டைப் போட்டுக் கொண்டு சண்டை போட வேண்டும்.
*****
பழைய தபால் தலைகள், பழைய
நாணயங்கள், பழைய புராதனப் பொருட்கள் என்று பார்த்து பார்த்து வாங்கிப் பாதுகாக்கும்
நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பார்த்துப் பார்த்து வாங்கியது அனைத்தும் இணையதளத்தில்
(Online Purchase). அண்மையில் அவர் பாதுகாத்து வரும் அத்தனையையும் வைத்து ஒரு கண்காட்சி
நடத்தினார். அந்தக் கண்காட்சியில்தான் தெரிந்தது அவர் வாங்கி வைத்திருந்தது அத்தனையும்
போலிகள் என்று. இணையதளமே போலியா என்று அவருக்கு மயக்கமே வந்துவிட்டது.
*****
இரண்டு மூன்று கடைகளில் விசாரித்து
வாங்கிய பிறகு தெரிந்தது, நான்காவது கடையில் அதை விட விலை குறைவாக இருந்தது. எத்தனை
கடைகளில் விசாரிப்பது என்பதற்குக் கணக்கிருக்கிறதா? பெரும்பாலும் விசாரிக்காத கடைகளில்
விலை குறைவாக இருக்கிறது. விசாரித்த அத்தனை கடைகளிலும் விலை கூடுதலாகத்தான் இருக்கிறது.
இதை இந்தக் காலத்தில் டிசைன் என்கிறார்கள். எங்கள் காலத்தில் தலையெழுத்து என்றார்கள்.
முந்தைய காலத்தில் விதி என்றார்கள்.
*****
பரிதாபப்பட்டால் பணத்தை இழப்பீர்கள்
என்ற அறிவுரை வாசகத்தைப் பார்த்ததிலிருந்து பணம் இல்லாத போது மட்டுமே பரிதாப்படுகிறேன்.
பணம் இருக்கும் போது பரிதாபப்படுவதில்லை.
*****
கோயிலில் பல பிச்சைக்காரர்கள்.
கடவுள் அவர்களுக்கு ஏன் இப்படிப் பணக்கஷ்டத்தைக் கொடுக்கிறாரோ? சில்லரை இல்லாததால்
நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்துப் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று என்னைத் தொடர்ந்து
வந்து கொண்டிருந்த நான்கு பிச்சைக்காரர்களிடம் கொடுத்தேன். அதை வாங்கிய பிச்சைக்காரர்
ஒருவர் மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லாமல் பணத்தை வாங்கியதும் ஓட
ஆரம்பித்து விட்டார். நான் இன்னொரு நூறு ரூபாய் நோட்டை எடுப்பதா, கண்டு கொள்ளாமல் கழன்று
விடுவதா என்பது புரியாமல் குழம்பி நின்றேன். ஓ மை கடவுளே! ஏன் இப்படி உன் வாயிலில்
என்னை அடிக்கடிக் குழப்பி விடுகிறாய்?
*****
பெரும்பாலான ஊர்களில் காளி
கோயில் இருக்கிறது. அந்த ஊரில் இல்லாவிட்டாலும் பக்கத்து ஊர்களில் இருக்கும். அல்லது
பத்து ஊர்கள் தள்ளியாவது இருக்கும். ஆனால் குறிப்பிட்ட காளிகள்தான் புகழ் பெறுகின்றன.
கல்கத்தா காளிக்கு இருக்கும் பெருமை மற்ற காளிகளுக்கு இருக்காது.
கதைகளில் விக்கிரமாதியனின்
உஜ்ஜயினி காளிக்குப் பெருமைகள் அதிகம்.
டெல்டா மாவட்டதில் வளைகாப்பு
போடுபவர்கள் கும்பகோணத்துக்குக் கோவிந்தகுடிக்கு அருகில் இருக்கும் நல்லூரில் இருக்கும்
அஷ்ட புஜ காளிக்கு வளையலை வைத்து அர்ச்சனை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நல்லூரின்
நல்ல காலம் என்னவென்றால் இதற்கென ஒரு கூட்டமே கிளம்பி நல்லூரை நோக்கி வருகிறது.
இப்படி ஒரு கூட்டத்தைக் கிளப்பி
விட்டு நல்லூரைப் பிரபலமாக்கிய பெருமை சோதிடர்களையே சாரும். இந்தச் சோதிடர்கள் இல்லையென்றால்
மக்கள் இவ்வளவு கோயில்களை நோக்கி படையெடுப்பார்களா? கோயிலை நோக்கி ஒரு கூட்டத்தை உருவாக்குவதில்
இந்தச் சோதிடர்களுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.
*****
பொறுமையை இழக்கா விட்டால்
நீங்கள் எதையும் இழக்க மாட்டீர்கள். பொறுமை இருந்தால்தானே இழப்பதற்கு? இவ்வளவு அவசரம்,
இவ்வளவு பரபரப்பு, இவ்வளவு பதற்றம், இவ்வளவு டிராபிக், இவ்வளவு மெகா தொடர்கள், யாருக்கு
இருக்கும் பொறுமை?
*****
இப்படி ஓர் இடம்தான் தேவை
என்றெல்லாம் சொல்ல முடியாது. உங்களுக்கு நிகழ்த்துவதற்கான ஒரு மனநிலை தேவை. இடத்தை
உருவாக்குபவர் தனக்கான வருமானத்தை உருவாக்கிக் கொள்கிறார். அவருடைய இடத்திற்குச் செல்லாதீர்கள்.
அங்கே நீங்கள் எதையேனும் உருவாக்கலாம். அது இயற்கையாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும்
இல்லை. உருவாக்குவதற்கான மனநிலை தானாகவே உருவாகும். அதை உருவாக்கிக் கொள்ள வேண்டிய
அவசியமில்லை.
*****
வாக்களிக்க பணம் வாங்காதீர்கள்
என்று ஒரு நடிகர் பிள்ளைகளுக்குப் பரிசளித்துப் பெற்றோர்களிடம் சொல்லச் சொல்கிறார்.
தன்னுடைய படத்தைக் கூடுதல் கட்டணம் கொடுத்தெல்லாம் பார்க்காதீர்கள் என்றும் சொல்ல வேண்டும்.
வாக்களிக்க ஆயிரம் வாங்குவதற்கும், முதல் நாள் திரைப்படத்தை ஆயிரத்து ஐநூறு ரூபாய்
கொடுத்துப் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
*****
No comments:
Post a Comment