சௌகரியத்தின் பாதை
சௌகரியமான விசயங்களைத் தொடர்கிறோம்.
கடினமான விசயங்களை மன உளைச்சல் தருமோ என்ற அச்சத்தில் விலக்குகிறோம். ஆனால் சௌகரியமான
விசயங்கள் ஒரு காலத்தில் கடினமானவையாக இருந்தவை. அவை எப்படி சௌகரியமான விசயங்களாக மாறிப்
போயின?
கடினத்தைப் பொருட்படுத்தாத
மனம் அப்போது இருந்தது. இந்தக் கடினத்தை எதிர்கொண்டு எதையாவது சாதிக்க வேண்டும் என்ற
மனமும் அப்போது இருந்தது. கடினத்தை விட சாதிக்க வேண்டும் என்ற உணர்வும் நினைப்புமே
அப்போது முதன்மையாக இருந்தன. அந்த உணர்வும் நினைப்பும் கடினத்தால் உண்டாகப் போகும்
மனதையோ, மன உளைச்சலையோ அப்போது பொருட்படுத்தத் தயாரில்லை. உண்மையில் அப்போது மன உளைச்சல்
பிரச்சனையே இல்லை. சாதிப்பது மட்டும்தான் பிரச்சனையாக இருந்தது. மன உளைச்சலை அந்த நிலையில்
மனம் கவனிக்கவும் தயாராக இல்லை.
இப்போது என்னவாகி விட்டது?
இப்போது மனம் ஒரு சௌரியமான நிலையைத் தேடுகிறது. இது ஏதேனும் ஒன்றைச் சாதித்தப் பின்
நிகழும் மாற்றம். இந்தச் சௌகரியமான நிலைதான் மன உளைச்சல் என்ற ஒன்று இருப்பதைப் பொருப்படுத்துகிறது.
மன உளைச்சலைக் கண்களுக்குக் காட்டுகிறது. மன உளைச்சலை உணரச் செய்கிறது. மன உளைச்சல்
என்ற ஒன்று இருக்கிறது எனக் சொல்கிறது.
மன உளைச்சல் என்ற ஒன்று இருக்கிறதா
இல்லையா என்றால் அது உங்களது விருப்பத்தையும் ஆர்வத்தையும் பொருத்த ஒன்று. உங்களுக்கு
விருப்பமோ ஆர்வமோ இல்லாத எதனைச் செய்தாலும் அத்தனையும் மன உளைச்சலில்தான் போய் முடியும்.
விருப்பமும் ஆர்வமும் உள்ள எதையும் மன உளைச்சல் இல்லாமல் செய்து கொண்டிருக்க முடியும்.
அப்படிச் செய்யும் போது நீங்கள் மன உளைச்சலை உணர்ந்தாலும் நீங்கள் அதைப் பொருட்படுத்த
மாட்டீர்கள்.
ஆர்வமும் இல்லை, விருப்பமும்
இல்லை. ஆனால் செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறேன் என்றால் நீங்கள் மன உளைச்சலிலிருந்து
தப்பிக்க முடியாது. இங்கே மன உளைச்சலைத் தணித்துக் காரியத்தை முடிக்க முடியாதா? வாழ்க்கையில்
இது போன்ற நிலையில்தான் பல சூழ்நிலைகள் அமையும். காரியத்தையும் முடிக்க வேண்டியிருக்கும்.
அதே நேரத்தில் மன உளைச்சலையும் தவிர்க்க முடியாது.
இந்த இடத்தில்தான் நமக்குப்
பயிற்சியும் பழக்கப்படுத்திக் கொள்ளுதலும் உதவுகின்றன. ஒரு காரியத்தை ஆற்றுவதால் மன
உளைச்சல் உண்டாகிறது என்றால் அந்தக் காரியத்தில் இருக்கும் கடினம் அதற்கு ஒரு காரணம்.
இந்தக் கடினத்தன்மை விருப்பமின்மையையும் ஆர்வமின்மையையும் உருவாக்கி மன உளைச்சலைத்
தரலாம். விருப்பமின்மை மற்றும் ஆர்வமின்மையால் மன உளைச்சல் உருவாவதும் மன உளைச்சலால்
விருப்பமின்மையும் ஆர்வமின்மையும் உருவாவதும் மாறி மாறி நிகழும் சங்கிலித் தொடர் நிகழ்வுகள்.
கடினத்தைப் போக்கிக் கொள்ள
பயிற்சி பெறுதல் நல்ல வழியாகும். உங்களுக்கு நீங்களே பன்முறைப் பயிற்சி அளித்துக் கொள்ள
முடியாத நிலையில் நீங்கள் ஒரு பயிற்சியளிப்பவரை அமர்த்திக் கொள்ளலாம். ஒரு வழிகாட்டியிடம்
பயிற்சிக்காகவும் சேரலாம். இம்முறைகளை விட பயிற்சியை எளிமையாக்கும் ஒரு முறை என்னவென்றால்
கூட்டுப்பயிற்சி முறை. கூட்டாகச் சிலரைச் சேர்த்துக் கொண்டும் பயிற்சியைக் கூட்டுப்
பயிற்சியாகத் தொடரலாம்.
அடுத்த முக்கியமான விசயம்
என்னவென்றால் எதைப் பயிற்சி செய்கிறீர்களோ அதை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக்கிக் கொள்வது.
இதைத்தான் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் என்கிறோம். ஆரம்பத்தில் பல் துலக்க, குளிக்க
எல்லாம் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இப்போது அவை உங்களுக்குப் பழக்கமாகி
விட்டன. நீங்கள் உங்களை அறியாமல் அந்த வேலைகளைச் செய்து கொண்டிருப்பீர்கள். இதுதான்
பழக்கப்படுத்திக் கொள்வதன் பலன். பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலமாகக் கடினமான வேலையைச்
சுலபமாகச் செய்யும் திறனை நீங்கள் பெறுவீர்கள்.
அசௌகரியமான காரியமாற்றும்
நிலைமைகளைக் கண்டு பயந்து விடாதீர்கள். சோர்ந்து போய் விடாதீர்கள். கலங்கி நின்று விடாதீர்கள்.
பயிற்சியின் மூலமாகவும் பழக்கப்படுத்துவதன் மூலமாகவும் அவற்றை மாற்ற முடியும்.
சட்டென்று நீங்கள் துவங்கும்
பயிற்சி உங்கள் மனதுக்கு ஒத்து வந்து விடாது. இன்னும் சொல்லப் போனால் அந்தப் பயிற்சி
முறைகளை உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம். துவக்கத்தில் இது நேரவே செய்யும்.
இந்த மனச்சங்கடமான நிலையை மட்டும் பல்லைக் கடித்துக் கொண்டு நீங்கள் பயிற்சியைத் தொடரத்தான்
வேண்டியிருக்கும். பயிற்சி பெறும் போது ஏற்படும் கடினமான நிலை என்று இதைத்தான் சொல்ல
வேண்டும். இது போன்ற நிலையில் உங்கள் மனதில் தோன்றும் கடினமான நிலைகளை உங்களுக்குப்
பயிற்சியளிப்பவரிடம், உங்கள் வழிகாட்டியிடம், உங்களைப் போன்று பயிற்சி பெறும் சக பயிற்சியாளர்களிடம்
பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள், சிறு சிறு நுட்பங்கள் பயிற்சியில்
இருக்கும் கடினத்தைக் கடக்க உங்களுக்கு உதவும். சில நேரங்களில் மனதில் இருக்கும் பாரத்தைக்
கொட்டி விடுவது கூட கடினத்தைக் கடப்பதற்கு பேருதவியாக இருக்கும்.
பயிற்சியைப் பழக்கமாக ஆக்கிக்
கொள்வதில் உறுதியாக இருங்கள். இதை வைராக்கியம் என்றும் சொல்வார்கள். வைராக்கியம் பிறழ்வதற்கான
சூழ்நிலைகள் அதிகம் ஏற்படக் கூடும். அதை நீங்கள் அமைதியாகப் புரிந்து கொள்ள முயல வேண்டும்.
உங்கள் வைராக்கியத்தை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும், அதிலிருந்து ஏன் பிறழ வேண்டும்
என்பதற்கான மன காரணங்களை நீங்கள் கவனமாக அலசிப் பார்க்க வேண்டும். அந்தக் காரணங்களிலிருந்து
நீங்கள் ஏன் விட்டுக் கொடுக்கக் கூடாது, ஏன் உங்கள் முடிவிலிருந்து பிறழக் கூடாது என்பதை
நோக்கி நகர வேண்டும்.
உங்களுக்கு மட்டும் மன உளைச்சல்
தரும் வேலைகள் அமைந்து விட்டதாக நீங்கள் கருதிக் கொள்ளக் கூடாது. பலருடைய வாழ்க்கை
ஏன் எல்லாருடைய வாழ்க்கையும் சில பல நேரங்களில் அப்படித்தான் அமைகிறது. அவர்கள் மட்டும்
இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்றால் அங்குதான் இந்தப் பயிற்சி மற்றும் பழக்கப்படுத்துதலின்
சூட்சமம் அடங்கி இருக்கிறது.
அசௌகரியம் அல்லது கடினம்
என்று கருதும் காரியங்களை அவை தங்களுக்கு நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து அந்தக் காரியங்களை
ஆற்றும் பயிற்சி வளையத்திற்குள் வருபவர்கள் சாதித்து விடுகிறார்கள். அவர்கள் அசௌகரியங்களையும்
கடினங்களையும் எதிர்கொள்ளும் தன்மையைத் தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டு அவற்றைச்
சௌகரியமாகவும் எளிமையாகவும் மாற்றிக் கொள்கிறார்கள்.
இதில் ஆரம்பமும் சிறிது காலம்
தொடர்தலும் வேண்டுமானால் சிரமம் தருவதாக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட தூரம் கடந்து
விட்ட பிறகு எதை நீங்கள் சுமையாகக் கருதி முனகியபடி நடக்கவே தடுமாறிக் கொண்டிருந்தீர்களோ
அதையே சுகமாகக் கருதித் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்து விடுவீர்கள். பறக்க ஆரம்பித்து
விடுவீர்கள் என்று சொன்னாலும் அது நிஜம்தான்.
சௌகரியத்தை நோக்கியப் பாதையில்
எளிமையை நோக்கிய வழியில் எல்லாரும் அசௌகரியத்தையும் கடினத்தையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
அதை எதிர்கொண்டுதான் சௌகரியத்தையும் எளிமையையும் அடைந்திருக்கிறார்கள். இப்போது எதிர்கொள்ளும்
கடினமும் அசௌரிகயமும் தொடர்ந்து எதிர்கொள்வதன் மூலமாக எளிமையாகவும் சௌகரியமாகவும் மாறப்
போகின்றவைதான் என்பதை மறக்காதீர்கள்.
*****
No comments:
Post a Comment