வரலாற்றின் பாதையிலொரு காணொளிக் காட்சி
அந்தக் காணொளி இல்லையென்றால்
நடந்ததை நிரூபிப்பதற்கு வழியேது
ஆதாரங்களும் அத்தாட்சிகளும்
இருந்தால்தானே
வரலாறு ஏற்றுக் கொள்ளும்
காற்றில் கரைந்த அழுகுரலுக்கு
வரலாற்றில் பதிவேது
பிரதேசங்கள் மட்டும் அறிந்த
ரத்தக்கறைக்கு
வரலாற்றில் இடமேது
அழிக்கப்பட்ட ஆதாரங்களும்
அத்தாட்சிகளும்
வரலாற்றால் கைவிடப்பட்ட அனாதைகள்
அழியாத ஆதாரமும் அத்தாட்சியும்
இல்லாமல் போனால்
நடந்த ஒன்று நடக்காமல் போனதாக
வரலாற்றில் பதிவாகலாம்
வன்கொடுமை சாதாரண வன்முறையெனச்
சித்தரிக்கப்படலாம்
நடந்ததற்கு அத்தாட்சி இருந்தும்
நடப்பதென்ன
எப்படி அத்தாட்சி கசிந்ததென்ற
ஆராய்ச்சிதானே
ஒரு சில பகிர்தலோடு முடிந்து
போனால்
வரலாற்றில் அதற்கு மதிப்பேது
பகிர்தலின் பலமே வரலாற்றில்
பதிவாகிறது
பலமுறை பகிரப்பட்டும் என்ன
பலமுறை போராடியன்றோ நீதியை
அழைத்து வர வேண்டியிருக்கிறது
வரலாற்றின் பாதையில் காணொளிகள்
அழியாத காட்சிகளாக இருக்கும்
வழங்கப்படாத நீதிகளுக்காக
வரலாற்றின் வருங்காலப் பாதையில்
வருபவர்கள்
கண்டனங்களைத் தெரிவித்துக்
கொண்டிருப்பார்கள்
கண்டனங்களை மன்னிப்பு கேட்பதால்
மட்டுமே
மன்னித்து விட முடியாது என்பதற்கு
வரலாறு ஒரு பாடத்தை நடத்தக்
கூடும்
*****
No comments:
Post a Comment