28 Dec 2023

சொல்லில் அலையும் விஷம்

சொல்லில் அலையும் விஷம்

சொல்வதற்கு

உன்னிடம் வெறுப்பின் கதைகள் இருக்கின்றன

என் அன்பின் செவிகள்

கேட்டுக் கொண்டே இருக்கும்

எவ்வளவு வெறுப்பைக் கக்கினாலும்

கக்குவதில் கொஞ்சமேனும் குறையுமானால்

கேட்பதால் உண்டாகும் நஞ்சு

என்னை என்ன செய்து விடும்

*****

 

கால ரயிலின் வாசிப்புப் பயணம்

ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரம்

நின்று விடுவது போல

நின்று விட்ட கடிகாரம்

ஓடுவது போல

காலத்தை ஏற்றிக் கொண்டு

தொடர்வண்டி ஓடிக்கொண்டும்

நின்று கொண்டிருப்பதுமாகத் தோன்றுகிறது

ஒரு காலத்தில் படிக்க முடியாத வாழ்க்கையின் புத்தகத்தை

இந்த ரயில் பயணத்தில்

படிக்க முடிகிறது

ஒரு விஷேஷ மனநிலை பூத்திருக்கிறது

இப்படியே கால ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தால்

வாழ்க்கையின் பக்கங்கள்

வாசிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் போல

*****

25 Dec 2023

சோபகிருது காலத்து வேதம்

சோபகிருது காலத்து வேதம்

இந்த மண்ணிலிருந்து ஒரு செடி கிளம்பும்.

அது எங்கெங்கும் எளிதாக வளரும்.

அதன் காய்கள் பசுமையாகவும் கனிகள் சிவப்பாகவும் இருக்கும்.

அக்கனிகளின் புளிப்பும் வாசமும் சமையலைக் கட்டிப் போடும்.

தொக்கெனக் கருதி அது மலிவாகக் கருதப்படும்.

ஒரு நாள் ஐந்தும் பத்துக்கும் விற்ற அதன் விலை நூறுக்கும் இருநூறுக்கும் உயரும்.

அந்த ஆபூர்வ செடியை விளைவித்தவர்கள் பணம் படைத்தவர்கள் ஆவார்கள்.

சிவப்பான அந்தக் கனிகளை விற்பவர்கள் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.

தங்கத்தையும் வைரத்தையும் கடத்தியவர்கள்

அந்தக் கனிகளடங்கிய வாகனத்தைக் கடத்தத் தொடங்குவார்கள்.

அது என்ன செடி?

அது என்ன கனி?

என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அது என்ன தக்காளிச் செடியா என்றால் அது தக்காளிச் செடிதான்.

கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அந்தக் கனி என்ன தக்காளியா என்றால் அது தக்காளியேதான்.

சக்தி படைத்த காளியைக் கும்பிடுவதும்

தக்காளியை விளைவிப்பதும் ஒன்றுதான்.

ஓம் காளியே நமஹ!

ஓம் தக்காளியே நமஹ!

*****

யுகங்கள் எப்போதும் அதற்கான கனிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டே இருக்கின்றன.

அப்போதையத் தேர்வு ஆப்பிளோ, ஸ்ட்ராபெர்ரியோ

இப்போதையத் தேர்வு தக்காளி

அன்று இரண்டு ரூபாய்க்கு விற்ற தக்காளியைப் பார்த்து

ஜகஜ்ஜால புன்னகை புரிந்தது இருநூறு ரூபாய்க்கு விற்ற ஆப்பிள்

இப்போது ஆப்பிளின் முகம் சுளுக்கிக் கொண்டது

தக்காளியின் உயரம் பழக்கடைகளின் செம்மாந்த உயரத்தில் இருக்கிறது

கலியுகத்தில் நடக்கக் கூடாததெல்லாம் நடக்கும் என்பது அசரீரியின் வாக்கு

அசரீரியின் வாக்கு பலித்துக் கொண்டு இருக்கிறது

தக்காளி வண்டிக்குப் பின் பாதுகாப்பு வண்டிகள் வரலாம்

கள்ளிப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட அவை

கோத்ரேஜ்ஜின் வலுவான பெட்டகங்களில் அடைக்கப்படலாம்

குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து எளிதாக எடுத்துத் தின்ற

ஒரு தக்காளிக் கனியை எட்டிப் பார்த்தால்

பெற்றெடுத்த தாய் முறைக்கிறாள்

வாழ்க்கைத் துணைவர் எரிந்து விழுகிறார்

தக்காளிக் கனியை எலிப்பொறியில் வைத்த தாத்தா

ஆப்பிள்கனியை வைக்கிறார்

அரசியல்வாதியின் மீது அழுகிய தக்காளியை வீச எடுத்துச் சென்றவர்

சட்டினிக்கு ஆகுமே என்று தக்காளியோடு மீள்கிறார்

கணவரின் சமயோசிதம் எண்ணி பத்தினிப் பெண்டிர்

கடிமனை வாயிலில் நின்று மங்கலம் பாடிப் புகழ்கிறார்.

*****

பி.டி.உஷாவை விட வேகமாய் ஓடியிருக்கிறாய்

உசேன் போல்டைப் பின் தொடர வைத்திருக்கிறாய்

சச்சின் டிராவிட் கோலிகள் திணறும்

இரட்டைச் சதத்தை அநாயமாக அடித்துத் துவைத்திருக்கிறாய்

மாரடோனா மெர்சி போடாத கோல்களை

சாம்ராஸ் பெடரர் நடால் ஜோக்கோவிச் பெறாத பட்டங்களை

அப்பல்லோ சந்திராயன் பயணிக்காத தூரங்களை

சூப்பர் சானிக் போகாத வேகங்களை

ரஜினி கமல் அமிதாப் ஜாக்சிசான் ஸ்பீல்பெர்க் கொடுக்காத வசூல்களை

எல்லாம் சாதித்திருக்கிறாய்

உன்னை வணங்குவதால் நான் உயர்ந்தவராகிறேன்

விலை உயர்ந்த பொருளாகிறேன்

என்றும் எம்முடன் இருப்பாயாக

எம் புகழையும் மதிப்பையும் செல்வத்தையும் உயர்த்துவாயாக

தக்காளி நீயிருக்க பயமேது

அந்நியச் செலவாணியாக நீயாகும் காலம் அருகிலிருக்கையில்

*****

21 Dec 2023

கூடித் திட்டமிட்டால் கோடி லாபம்!

கூடித் திட்டமிட்டால் கோடி லாபம்!

கடைகளில் பொருட்களை வாங்கி வந்தப் பிறகு வாங்கிய பொருட்கள் பற்றி ஒரு சில நாட்கள் கழித்து விவாதியுங்கள். ஒரு பின்னூட்ட சந்திப்பை எல்லாரையும் வைத்து நிகழ்த்துங்கள். மிகவும் வெளிப்படையாகக் கருத்தைப் பகிருங்கள். இதனை அடுத்த முறை பொருட்களை வாங்கப் போவதற்கு முன்பு கட்டாயமாக மற்றும் அவசியமாகச் செய்து முடியுங்கள்.

விடுமுறை நாட்களில் வெளியே செல்வதற்கும் இதே முறையைப் பின்பற்றுங்கள். வெளியே சென்று வந்து அடுத்த முறை வெளியே செல்வதற்கு முன்பு அது குறித்த ஒரு விவாதம், பின்னூட்டம், கருத்துப் பகிர்தல் எல்லாவற்றையும் செய்யுங்கள்.

இம்முறை உங்களுக்குப் பலவிதத்தில் உதவும். ஒரு பொருளை வாங்க வேண்டுமா, வேண்டாமா? சென்ற வந்த இடத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கலாம்? என்பது போன்ற ஆரோக்கியமான திட்டமிடலுக்கு உறுதுணை செய்யும்.

பொருட்களை வாங்குவதிலும் வெளியிடங்கள் செல்லும் போதிலும் நாம் பணத்தைப் பெருமளவில் செலவிடுகிறோம். நாம் சரியாகத்தான் செலவிடுகிறோமா என்பதை அறிவதற்கும் தரமாகத்தான் செலவிடுகிறோமா என்பதை தெரிந்து கொள்வதற்கும் விவாதம் – பின்னூட்டம் – கருத்து வெளிப்பாட்டு முறை ஒரு மிகச் சிறந்த முறையாகும்.

இதைச் செய்து முடித்த பிறகு, நிச்சயமாக ஒரு சில முறை பொருட்களை வாங்கி முடிந்த பிறகு, வெளியே சென்று வந்த பிறகு கீழே உள்ள இரண்டு வினாக்களுக்கும் உங்கள் விடை என்னவாக இருக்கிறது என்று பாருங்கள்.

பொருட்களை வாங்குவதற்கு (ஷாப்பிங் என்ற பெயரில்) நீங்கள் மாத ஊதியத்தில் எத்தனைச் சதவீதம் செலவிடுகிறீர்கள்?

வெளியிடங்களுக்குச் சென்று வருவதற்கு நீங்கள் மாத ஊதியத்தில் எத்தனைச் சதவீதம் செலவிடுகிறீர்கள்?

மாத ஊதியத்தில் இந்த இரண்டிற்கும் எத்தனை சதவீதம் செலவிடலாம் என்ற கணக்கு இருக்கிறது அல்லவா!

பொதுவாக நீங்கள் சேமிப்பிற்காக மாத ஊதியதில் 30 சதவீதத்தை ஒதுக்க வேண்டும். உணவு, வீட்டு வாடகை, கல்விச் செலவு, மருத்துவச் செலவு என்று மாத ஊதியத்தில் 40 சதவீதத்தை ஒதுக்கினால் எஞ்சிய 30 சதவீதத்திற்குள்தான் இதற்கான செலவினத்தைச் செய்ய வேண்டும். சரியாகச் சொல்லப் போனால் எதிர்பாராத செலவினங்களுக்காக 10 சதவீதத்தை ஒதுக்கி வைத்து விட்டால் 20 சதவீதத்திற்குள் பொருட்கள் வாங்குவது, வெளியிடங்களுக்குச் செல்வதற்கான செலவினத்தை முடிக்க வேண்டும். அதுதான் சரியான அளவு.

மாத ஊதியத்தின் 20 சதவீதத்திற்குள் பொருட்கள் வாங்கும் செலவினத்தை முடிப்பதா? அது கிட்டதட்ட எண்பது சதவீத அளவிற்கு வருகிறது என்று சொன்னால், நீங்கள் நான்கு மடங்கு தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம். இந்தத் தவறைக் குறைக்க முடியுமா? கட்டுக்குள் கொண்டு வர முடியுமா?

கீழ்காணும் வழிமுறைகள் உங்களுக்கு உதவக் கூடும். இந்த வழிமுறைகள் உங்களுக்கு உதவத்தான் முடியும். நீங்கள் முனைப்புடன் செயல்படுத்தினால்தான் இந்த வழிமுறைகள் உங்களுக்கு உதவ முடியும்.

முதலில் பொருட்களை வாங்குவதை எடுத்துக் கொள்வோம். வாங்கும் பொருள் அவசியமா? அத்தியாவசியமா? என்ற கேள்வியை முதலில் எழுப்புங்கள். இந்தப் பொருள் இல்லாமல் இருக்க முடியுமா? என்ற கேள்வியை அடுத்து எழுப்புங்கள். இந்தக் கேள்விகளுக்கு விடை கண்ட பிறகு அடுத்து சில வினாக்களை எழுப்ப வேண்டியிருக்கிறது.

அந்தப் பொருளைப் பிரபலமான நிறுவனத்தின் (Branded) ஆக வாங்குவதா? அதே தரத்தில் இருக்கும் விலை குறைவான நிறுவனத்தின் பொருளாக வாங்குவதா?

இந்தக் கேள்விகளுக்கு விடை கண்ட பிறகு எந்தப் பொருள் வாங்க வேண்டும் என்றால் அதை எழுத்தில் பட்டியலிட்டு எழுதிக் கொள்ளுங்கள். அந்தப் பட்டியலை இரண்டு மூன்று முறைப் பார்த்து அடித்துத் திருத்தி உடனடியாக வாங்க வேண்டுமா? தள்ளிப் போட்டு வாங்கலாமா? என்பன போன்ற வினாக்களுக்கு விடை கண்டு மீண்டும் மீண்டும் மாற்றி அமையுங்கள்.

பொருட்களை வாங்கச் செல்லும் போது பணத்தை ரொக்கமாக எடுத்துச் செல்லப் பாருங்கள். பணத்தைக் கையால் எண்ணிக் கொடுங்கள். முடிந்த வரை பணம் செலுத்தும் அட்டைகளைத் தவிர்க்கப் பாருங்கள். அவசியம் அட்டைகளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் காசோலைகளைப் பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள். அதுவும் முடியாது எனும் நிலையில் நீங்கள் அட்டைகளில் எவ்வளவு செலவினம் செய்யப் போகிறீர்கள் என்பதை எழுத்து வடிவில் தாளில் எழுதிய பின்பு அட்டைகளைத் தேய்த்து பணத்தை வழங்குங்கள். இதே முறைதான் பணம் செலுத்தும்செயலிகள் (Pay Apps) மூலம் பணம் செலுத்துவதற்கும்.

வாரம் ஒரு முறை வெளியிடங்களுக்குச் செல்லாவிட்டாலும் மாதம் ஒரு முறை வெளியிடங்களுக்குச் சென்று வரத்தான் வேண்டும். செலவினங்களை அதிகரித்து விடும் ஒன்றாக வெளியிடங்களுக்குச் செல்வதும் சில நேரங்களில் அமைந்து விடக் கூடும்.

வெளியிடங்கள் என்றால் பணத்தைச் செலவழித்துச் செல்லும் மால்கள், திரையரங்கங்கள், கடைத்தெருக்கள் என்பது மட்டும்தானா?

செலவே இல்லாமல் சென்று வரக் கூடிய உங்கள் பகுதிகளுக்கு அருகில் உள்ள கடற்கரை, கோயில்கள், பூங்காக்கள், உறவினர்களின் இல்லங்கள் போன்றவையும் உண்டுதானே. இது போன்ற வெளியிடங்களை அதிகம் பரிசீலியுங்கள்.

மாதத்தின் நான்கு வாரங்களும் வெளியிடங்களுக்குச் சென்று வர வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு வாரத்தை மேற்படி செலவில்லாத இடங்களுக்குச் சென்று வர ஒரு வாரத்தை ஒதுக்கலாம். மற்றொரு வாரத்தை வெளியிடங்களுக்குச் செல்லாத செலவில்லாத வாரமாக அமைத்துக் கொள்ளலாம். மீதி இரண்டு வாரங்களை மிதமாகச் செலவு வைக்கும் வெளியிடங்களுக்குச் சென்று வரும் வாரமாக அமைக்கலாம்.

ஒரு சில மாதங்கள் இவ்வண்ணம் செய்து முடித்த பின்பு உங்களுக்கே அற்புதமான திட்டங்கள் மனதுக்குள் தோன்ற ஆரம்பித்து விடும். இதுதானே நமது எதிர்பார்ப்பு. ஆக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் பொருட்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கும் போதும் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போதும் திட்டமிட வேண்டும்.

திட்டமிட வேண்டும் என்றால் நீங்கள் மட்டுமல்ல. குடும்பமாக அமர்ந்து திட்டமிட வேண்டும். எல்லாருடைய கருத்துகளையும் சுதந்திரமாக வெளிப்படச் செய்து விவாதித்து சாதக பாதகங்களை அலசித் திட்டமிட வேண்டும். இந்தத் திட்டமிடும் வழக்கத்தைக் கொண்டு வந்து விட்டீர்கள் என்றால் எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்பதற்கு நான் மேலே கூறிய செயல்முறைகள் என்ன, அதை விட அற்புதமான செயல்முறைகளை நீங்கள் உருவாக்குவீர்கள்.

எடுத்த உடனே இந்த ஆரோக்கியமான கூட்டுத் திட்டமிடல் வந்து விடும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அது சாத்தியமே இல்லை. அனைவரும் இணைந்து திட்டமிடும் போது கருத்து மோதல்கள், கருத்துச் சண்டைகள் நிகழும். அது சில பல சந்திப்புகள் வரை தொடரும். இந்தக் கருத்து மோதல்களுக்கோ, சண்டைகளுக்கோ அசராமல் நீங்கள் மீண்டும் மீண்டும் அனைவரையும் கூட்டித் திட்டமிடும் முறையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். சில பல கூட்டங்களுக்குப் பின்பாகத்தான் இது ஒரு நல்ல நிலைக்கு வரும். அதற்குப் பின்புதான் இந்தக் கூட்டுத் திட்டமிடலின் அற்புதங்களையும் பலன்களையும் நீங்கள் அறுவடை செய்ய முடியும்.

நிச்சயமாக இந்த வழிமுறைகள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த வழிமுறைகள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்து நீங்கள் அற்புதமான வழிமுறைகளை உருவாக்கியிருந்தால் அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பகிர்தல்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்.

நன்றி!

வணக்கம்!

*****

18 Dec 2023

ஒன்று + இரண்டு = முடிவு

ஒன்று + இரண்டு = முடிவு

கோகிலவாணன் இரண்டு விதங்களால் பாதிக்கப்பட்டார். அவமானத்தால் பாதிக்கப்பட்டார். கேட்பவருக்கெல்லாம் பணத்தைக் கொடுத்து அதனால் பாதிக்கப்பட்டார். இந்த இரண்டு பாதிப்பும் அவரை அதிகமாகப் பேசச் செய்தது.

யாரைப் பார்த்தாலும் அவமானம் மற்றும் பணம் கொடுத்தல் பற்றி அதிகமாகப் பேச ஆரம்பித்தார். பெரும்பாலும் பேசியதையே திரும்பத் திரும்ப பேச ஆரம்பித்தார். இந்த இரண்டைத் தவிர அவருக்கு வாழ்க்கையில் வேறு எதுவும் தெரியாதோ என்று நினைக்கத் தோன்றும் அளவுக்குப் பேசிக் கொண்டிருந்தார். யாரைப் பார்த்தாலும் எவரைச் சந்தித்தாலும் இந்த இரண்டு குறித்து மட்டுமே பேசினார். இவ்விரண்டைத்  தவிர வேறு நினைப்புகள் அற்றவராகத்தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் பேசுவதன் சாரமும் உள்ளடக்கமும் சாதாரணமானதுதான். ஆனால் அவர் அனுபவப்பட்டு அதிலிருந்து பேசுகிறார். உங்களுக்காக அவர் பேசிய அந்த இரண்டு பேச்சுகளையும் இங்கே பதிவிடுகிறேன். உங்களுக்குப் பயன்பட்டால் சந்தோஷம். உங்களுக்கும் ஏதேனும் இது குறித்து அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்கள். அதை நான் கோகிலவாணனிடம் சொல்கிறேன்.

இனி அவரது பேச்சுக்குச் சென்று விடலாம்.

ஒன்று

நான் சொல்வதில் கோர்வை இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அது இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

நிறைய அவமானங்கள் நேரலாம். சோர்ந்து போகலாம். சோர்ந்து போய் அப்படியே முடங்கி விடலாம். அப்படி முடங்கி விடுவதற்காகவா இவ்வளவு வருடம் வளர்ந்தோம், பாடுபட்டோம், கஷ்டங்களைத் தாங்கி நின்றோம்?

அவமானத்தில் சோர்ந்து போக என்ன இருக்கிறது? அவமானத்தால் உண்டாகும் உணர்வெழுச்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது ஒரு பீறிட்டு எழும் அனுபவம். அவமானத்தை வெகுமானமாக மாற்ற வேண்டும். அது வாழ்வில் அற்புதங்கள் நிகழும் தருணம். இப்படிச் சொல்லி உங்களை நான் நாயகனாக்க முயல்வதாக நினைக்க வேண்டாம். நீங்கள் ஒன்றும் தாழ்ந்தவரில்லை எனும் போது உங்கள் தாழ்வை ஏன் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான உத்வேகமாக நீங்கள் இதை ஏன் கருதிக் கொள்ளக் கூடாது?

உயிருள்ள மனிதர் தண்ணீரில் மூழ்க மாட்டார் என்பது போல திறமையுள்ள எந்த மனிதரும் அவமானத்திற்குள் ஆழ்ந்து விட மாட்டார். அவர் அவமானத்தைத் துடைத்துத் தன்னை நிரூபிக்கப் பார்ப்பார்.

சில நேரங்களில் ஒருவர் அவமானப்படுத்தப்படா விட்டால், அவர் தான் யார் காட்டுகிறேன் பார் என்று முயற்சி எடுத்திருக்க மாட்டார். இது ஒருபக்க உண்மையாகத் தோன்றினாலும் ஒருவரை பல நேரங்களில் உசுப்பி விட அவமானம் தேவையாகவும் இருக்கிறது.

காரமும் கசப்பும் உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் உணவில் அவையும் ஒரு சுவையாக இருப்பது போலத்தான் அவமானங்களும் தோல்விகளும்.

அவமானங்கள் யாரையும் வீழ்த்தி விடுவதில்லை. உங்கள் நிரூபணத்திற்கான நேரம் வந்து விட்டது என்பதைக் காட்டுகிறது.

இரண்டு

நான் பணத்தைப் பற்றியும் பண உதவி பற்றியும் தவறாக அனுமானித்து விட்டதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். பண உதவி என்பது நல்லதுதான். அது உங்களைப் பாதித்துக் கொள்ளாத அளவுக்குப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறது. ஆகையால் இதைப் பற்றி உங்களிடம் பேச வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

உறவுகளைப் பணத்தால் அளவிடுபவர்களிடம் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள். அதே போல நட்பையும் பணத்தால் அளவிடுபவர்களிடமும் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள்.

ஓர் அவசரம் என்று ஓடி வந்து பணம் கேட்பார்கள். கொடுத்தால் நட்போடு அல்லது உறவோடு இருப்பார்கள். இல்லாவிட்டால் நட்பை அல்லது உறவை முறித்துக் கொள்வார்கள். அப்படி முறித்துக் கொள்பவர்களிடம் வலிய நட்போ உறவோ வைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் முறித்துக் கொண்டதைக் கொண்டாடுங்கள். அதற்காக ஆயிரம், இரண்டாயிரம் அழிந்தாலும் அது ஆக்கம்தான்.

தொழில் தொடங்க வேண்டும் என்றோ வியாபாரம் ஆரம்பிக்க வேண்டும் என்றோ பணம் கேட்பவர்கள் இருக்கிறார்கள். இது போன்றவர்கள் நட்பிலும் உறவிலும் காட்டும் உதார குணத்தைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். தொழில் தொடங்குவதற்கும் வியாபாரம் செய்வதற்கும் பணம் கொடுக்க வங்கிகள் இருக்கின்றன. நாம் வங்கிகள் இல்லை.

வங்கிகள் பணம் கொடுப்பதைக் கவனித்துப் பாருங்கள். கொடுக்கும் பணத்திற்கான உத்திரவாதம், பணத்தைத் திரும்ப செலுத்துவதற்கான வழிமுறைகள், பணத்தைச் செலுத்தாவிட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்று எல்லாவற்றிற்கும் விதிகள் வைத்திருப்பார்கள். அந்த விதிகளின்படி எல்லாவற்றையும் தீர ஆராய்ந்துதான் பணத்தைக் கொடுப்பார்கள்.

உங்களால் வங்கிகளைப் போல இவ்வளவையும் செய்ய முடியுமனால் நீங்கள் பணத்தைக் கொடுக்கலாம். இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள், வங்கிகள் அப்படிக் கொடுத்தும் பணத்தை வசூல் செய்ய முடியாத சூழ்நிலைகள் நிறைய இருக்கின்றன. வங்கிகளே மல்லையா, நீரவ் மோடி என்று பலரிடம் ஏமாந்துப் போயிருக்கின்றன.

நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கிறேன் என்றோ, பணத்தைக் கொடுக்காவிட்டால் நட்போ அல்லது உறவோ வாடிப் போகும் என்றோ பணத்தைக் கொடுக்காதீர்கள். அப்படிக் கொடுத்த பணத்தால் நீங்கள் உயிர் போகும் அளவுக்குத் துன்பப்படுவீர்கள். அது உங்களுக்கு நீங்களே ஹார்ட்அட்டாக்கையோ பக்கவாதத்தையோ தேடிக் கொண்டது போல ஆகி விடும்.

ஒரு தொழில் அல்லது வியாபரத்தைத் தொடங்க நினைப்பவருக்கு அதற்குத் தேவையான பணத்தை திரட்டுவதற்கான திறனும் இருக்க வேண்டும். அப்படி இல்லாத ஒருவர் பணத்தைத் திரட்டுவதற்காக உறவுகளையும் நட்புகளையும் சாதகமாகப் பயன்படுத்துகிறார், உணர்வுகளை வைத்து உணர்வு ரீதியான மிரட்டல் விடுக்கிறார் என்றால் கண்டிப்பாக அவரிடமிருந்து விலகி விடுவது நல்லது. அப்படிப்பட்டவர்களிடம் உங்களுக்குப் பணம் கொடுக்க எனக்கு விருப்பமில்லை என்று முகத்தில் அடித்தாற் போலச் சொல்லி விலகி விடுவது கூட எந்த விதத்திலும் தவறான அணுகுமுறையாகாது.

பணத்தைக் கொடுக்க வேண்டும் இரக்கப் பட்டீர்கள் என்றால் பின்விளைவுகளால் நீங்கள் அரக்கத் தனமாகத் தாக்கப்படுவீர்கள்.

அப்படியானால் நீங்கள் பண உதவி செய்யக் கூடாதா? தாராளமாகச் செய்யுங்கள். கடன், கைமாற்று என்று செய்யாதீர்கள். புண்ணியமாகச் செய்யுங்கள். உங்களுக்குத் தெரியும் என்றாலும் ஞாபகம் செய்கிறேன். புண்ணியமாகக்   கொடுத்த பணத்தை நீங்கள் திரும்ப எதிர்பார்க்க முடியாது.

முடிவு

ஆழமாகப் பாதிக்கப்படுபவர்கள் அதை பேசிப் பேசிப் பிறழ்ந்தவர்கள் போல நடந்து கொள்கிறார்கள். அல்லது பேசாமல் இருந்துப் பிறழ்ந்தவர்களாக மாறி விடுகிறார்கள். கோகிலவாணன் பேசியதில் சில பிறழ்வுகள் இருக்கலாம். அது தன்னைப் போல மற்றவர்கள் யாரும் பிறழ்ந்து விடக் கூடாது என்ற ஆழ்மன பாதிப்பின் அர்த்தம் தெரியாத வெளிப்பாடாகவும் இருக்கக் கூடும்.

நீங்கள் கோகிலவாணன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர் கூறுவது சரிதானா?

அவர் கூறுவதை அப்படியே எடுத்துக் கொள்ளலாமா? பகுதியளவு எடுத்துக் கொள்ளாலமா?

கோகிலவாணன் பேச்சைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாமா?

ஏனிந்த கேள்விகள்? முடிவு என்பதை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

*****

14 Dec 2023

பொருள் கொள்ளும் முறை!

பொருள் கொள்ளும் முறை!

பொருள் கொள்ளும் முறை என்றால் அர்த்தம் கொள்ளும் முறை என்றுதான் நீங்கள் நினைத்திருப்பீர்கள். இது பொருளை வாங்கும் முறை குறித்த ஒரு பத்தி. அதாவது ஒரு பொருளை எப்படி வாங்குவது? எப்படி வாங்குவது என்றால்…

பணம் சேர்த்துப் பொருள் வாங்குங்கள்!

இன்றைய நுகர்வு கலாச்சாரத்தின் பெரிய பிரச்சனை என்னவென்றால் பணம் இல்லாவிட்டாலும் நீங்கள் ஒரு பொருளை வாங்க முடியும். உங்களுக்குக் கடன் தருவதற்கு ஏகப்பட்ட நிதி அமைப்புகள் உண்டாகி விட்டன.

உங்களைக் கடன்காரர் ஆக்கி விட்டுக் கடனுக்காக உங்களைச் சம்பாதிப்பவர்களாக இன்றைய பொருளாதார அமைப்பு முறை மாற்றி வருகிறது. நீங்கள் ஏன் கடனுக்காகச் சம்பாதிக்க வேண்டும்? கடனுக்காக உழைக்க வேண்டும்?

இனிமேல் பொருளை வாங்கி விட்டு அந்தப் பொருளுக்காகப் பணத்தைக் கட்டாதீர்கள். பணத்தைச் சேர்த்து விட்டு அதற்குப் பின் பொருளை வாங்குங்கள். இதில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. அப்படியென்ன நன்மைகள் என்கிறீர்களா?

இதனால் நீங்கள் மாதா மாதம் தவணைத்தொகை கட்டிச் சிரமப்பட வேண்டியதில்லை. தவணைத்தொகையோடு வட்டிக் கட்டி மாள வேண்டியதில்லை.

பொருளை வாங்கி விட்டு பணத்தைக் கட்டலாம் என்றால் நீங்கள் முதலில் பொருளைத்தான் பார்ப்பீர்கள். பொருளின் விலையைப் பார்க்க மாட்டீர்கள். இதுவே பணத்தைச் சேர்த்து விட்டுப் பொருளை வாங்க வேண்டும் எனும் போது பொருளின் விலையைப் பார்ப்பீர்கள். இவ்வளவு விலை கொடுத்து ஒரு பொருளை வாங்க வேண்டுமா என்றும் யோசிப்பீர்கள்.

இருபதாயிரம் பணம் கையில் இல்லாத போது இருபதாயிரத்துக்கு ஓர் அலைபேசியை நீங்கள் வாங்கி விடுவீர்கள். இதுவே இருபதாயிரத்தைச் சேர்த்த பிறகு ஓர் அலைபேசியை வாங்குவதாக இருந்தால் இவ்வளவு தொகை கொடுத்து ஓர் அலைபேசியை வாங்க வேண்டுமா என்று ஒரு கணம் நினைப்பீர்கள்.

அந்த நினைப்பு உங்களை எப்படி மாற்றும் தெரியுமா?

பத்தாயிரத்துக்கு ஓர் அலைபேசியை வாங்கி, விட்டு மீதி பத்தாயிரத்தைப் பயனுள்ள வகையில் வேறு செலவோ அல்லது முதலீடாக மாற்றிச் செய்ய வைக்கும்.

பணத்தைச் சிறுக சிறுகச் சேமிப்பது ஒரு நல்ல பழக்கம். சிறுக சிறுகச் சேமித்த பணத்தை அப்படியே செலவு பண்ண தோன்றாது. பணத்தைச் சேர்க்க ஆகும் காலத்தில் உங்கள் மனம் வாங்கப் போகும் பொருள் குறித்து மீண்டும் மீண்டும் யோசிக்கும். யோசித்து பல்வேறு பயனுள்ள யோசனைகளைக் கண்டறியும். அந்த யோசனைகள் உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதாகவும் வாங்கும் பொருளைப் பயனுள்ள பொருளாக வாங்கவும் உதவும்.

பணத்தைப் பல காலம் சேமித்து வாங்கும் போது ஆடம்பர பொருட்களை வாங்கத் தோன்றாது. அத்திவாசியமான பொருள்களையே வாங்கத் தோன்றும். அது மட்டுமல்லாது மலிவான விலையில் கிடைக்கும் தரமான பொருட்களை வாங்குவதற்கான மனநிலையையும் அது உருவாக்கும். தரமான பொருட்கள் என்றால் விலை அதிகமான பொருட்கள்தான் என்ற மனநிலையையும் அது மாற்றும். காலத்திற்கும் பயன்படுத்தும் தரமான பொருளுக்காகக் கொஞ்சம் பணம் கூடுதலாகக் கொடுப்பதையும் அது அனுமதிக்கும். எங்கே பணத்தைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டும், எங்கே பணத்தைக் கறாராகக் கொடுக்க வேண்டும் என்ற அனுபவத்தையும் நீங்கள் சிறுக சிறுக பணம் சேர்த்துப் பொருட்களை வாங்கும் போதே பெற முடியும்.

பணத்தைச் சேமித்து விட்டுப் பொருளை வாங்கும்  போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் இலக்கை நிர்ணயித்து விட்டு ஓடத் தொடங்குகிறீர்கள். பணமில்லாமல் பொருளை வாங்கும் போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் உங்கள் இலக்கு என்னவென்றே தெரியாமல் நீங்கள் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த இரண்டில் எது நல்லது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ள வேண்டிய தருணம் நெருங்கி விட்டது. இத்தருணத்தைத் தவற விடாதீர்கள்.

உங்கள் முடிவு இப்போது எப்படி இருக்கிறது என்பதைக் கூறுங்கள். நாம் மேற்கொண்டு உரையாடுவோம்!

*****

11 Dec 2023

நவீனத்தில் சுழலும் வாழ்க்கை

நவீனத்தில் சுழலும் வாழ்க்கை

பொண்டாட்டி உண்டு

வைப்பாட்டிகளும் உண்டு

காசு கொடுத்துப் போவதுமுண்டு

அதையும் தாண்டி

பாலியல் குற்றச்சாட்டுகளும் உண்டு

*

கூந்தலைப் பின்னிப்

போட்டுக் கொள்கிறவன்

நவீன இளைஞன்

*

மெசேஜ் எல்லாம்

Read More(மோர்)… இல் முடிகிறதே

காப்பி டீயில் முடியாதோ

*

வாங்குகிற சம்பளத்துக்குத்

தகுந்தாற் போல விலை வையுங்கள் என்று

சொல்ல முடியுமா

வாங்குவோர்தான் வாங்காமல்

சட்ட மறுப்போ

சத்தியாகிரகமோ பண்ணிக் கொள்ள வேண்டும்

*

பணத்தைக் கொடுத்து ஓட்டை வாங்கு

முடியாவிட்டால்

எம்.எல்.ஏ.வை வாங்கு

அதுவும் முடியாவிட்டால்

கான்ட்ராக்டை வாங்கு

அதுவும் முடியாவிட்டால்

மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம்

*

கேலரி முழுவதும்

சீரணமாகாத

போட்டோக்கள் வீடியோக்கள்

இன்டர்னெல் ஸ்டோரோஜ் முழுக்க

வெந்தும் வேகாத

பி.டி.எப்.கள் இபப்கள்

வாய்ஸ்நோட்கள்

ஸ்டிக்கர்கள்

புல் டேட்டா பிளானிங்

அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விடுகிறது

வயிறு புடைக்க ஏப்பம் விட முடியாமல் தவிக்கிறது

*

நாய்களுக்கு

வாயில் நுழைகிற பெயர்கள்

குழந்தைகளுக்கு

வாயில் நுழையாத பெயர்கள்

*****

7 Dec 2023

ரிக்கார்ட் டான்ஸ் (சிறுகதை)

ரிக்கார்ட் டான்ஸ் (சிறுகதை)

-         விகடபாரதி

இந்தக் காலத்தில் யார் பார்ப்பார்கள் என்று ரிக்கார்ட் டான்ஸ் போடுகிறார்கள்?

முச்சந்தியில் அந்த மூன்று சக்கர வண்டி நின்றிருந்ததைப் பார்த்ததும் இந்தக் கேள்விதான் எனக்கு எழுந்தது.

முச்சந்தி என்று சொன்னாலும் அது தற்போது நாற்சந்தி. ஒரு காலத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன்பாக அது முச்சந்தியாகத்தான் இருந்தது. வடக்கே அதிகப் புழக்கம் கிடையாது. அந்தப் பக்கம்தான் பிள்ளையார் கோயிலும் அதற்கு எதிரே பெருமாள் கோயிலும் இருந்தது.

நான் ஊருக்கு வராத காலத்தில் அந்தப் பகுதியில் புழக்கம் இருந்திருக்கலாம். மக்கள் பிள்ளையாரையும் பெருமாளையும் வழிபட அந்தப் பக்கம் போயிருக்கலாம். கோயிலைச் சுற்றிக் குடியிருப்புகள் இல்லை. அந்தப் பகுதியில் குறவர்கள் வந்து தங்குவதும் போவதுமாக இருந்தனர். கோயில்கள் சிதிலமைடையத் தொடங்கிய பிறகு பிள்ளையார் முச்சந்திக்கு மேற்குப் பக்கமாகக் கோயில் கொண்டார். பெருமாளுக்கு அந்தப் பாக்கியம் இல்லாமல் வடக்குப் பகுதியிலேயே ஒரு கீற்றுக் கொட்டகையில் வாசம் கொண்டிருந்தார். வடக்கே அதிகம் புழக்கம் இல்லாமல் முச்சந்தி என்ற பெயர் அப்போது பொருத்தமாக இருந்தது.

மேற்கே விவசாய காலத்தை ஒட்டிப் புழக்கம் அதிகமாவது உண்டு. முச்சந்தியின் மேற்கைத் தாண்டித்தான் வயல் வாய்க்கால்களுக்குப் போய் வர வேண்டும். அதிகப்படியான புழக்கமும் போக்குவரத்தும் என்றால் கிழக்கிலும் தெற்கிலும்தான். முச்சந்தியிலிருந்து தெற்காகப் போனால் மெயின்ரோட்டைப் பிடித்துவிடலாம். கிழக்கில்தான் ஊரின் பல குடியிருப்புகள் இருந்தன. அதனால் கிழக்கிலிருந்து முச்சந்திக்கு வந்து அங்கிருந்து தெற்கே திரும்பி மெயின்ரோட்டிற்குப் போக வேண்டியிருந்ததால் கிழக்கும் தெற்கும்தான் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி. அதுவுமில்லாமல் கிழக்கிலும் தெற்கிலும்தான் தார் சாலை இருந்தது. வடக்கும் மேற்கும் ரொம்ப காலத்திற்கு மண் சாலைகளாகத்தான் இருந்தன. மழை பெய்து விட்டால் களிமண் சகதி நிறைந்த உலையாக அந்தச் சாலையில் போய் திரும்பி வருவது பெரும்பாடாக இருக்கும்.

பிரதம மந்திரியின் கிராம சாலை வந்ததால் இப்போது மேற்கிலும் வடக்கிலும் தார் சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. இப்போது அங்கு குடியிருப்புகள் உண்டாகிக் கொண்டிருக்கின்றன. அங்கிருந்த புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா போட்டுக் கொடுத்ததாலும் குடியிருப்புகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. அந்தக் குடியிருப்புகளைத் தாண்டிப் போனால் ஊராரின் வயல்கள் இருக்கின்றன.

ஊரின் மேற்கிலும் வடக்கிலும் மட்டுமே குடியிருப்புகளைத் தாண்டி இப்போது வயல்கள் இருக்கின்றன. கிழக்கும் தெற்கும் பத்தாண்டுகளுக்கு முன்பே முழுவதுமாக குடியிருப்புகளைத் தாண்டியிருந்த கொஞ்ச நஞ்ச வயல்களையும் இழந்து காணும் இடமெங்கும் வீடுகளாகவும் கடைப்பகுதிகளாகவும் மாறி விட்டன.

இப்போது நான்கு திசைகளிலும் உள்ள சாலைகளிலும் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் அதிகமாகி விட்டன. முச்சந்தி நாற்சந்தியாகி விட்டது என்றாலும் இன்னும் பழமையை மறக்கக் கூடாது என்ற நினைப்பினாலோ என்னவோ முச்சந்தி என்ற பெயரே நிலைத்திருக்கிறது.

முச்சந்தியில் ரிக்கார்ட் டான்ஸ்காரர்கள் கொண்டு வந்து நிறுத்தியிருந்த மூன்று சக்கர வண்டி பார்ப்பதற்கு மீன்பாடி வண்டி போல இருந்தது. அந்த வண்டிக்குக் கூண்டு கட்டப்பட்டிருந்தது. அதற்குள் ஏகப்பட்ட சாமான்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. சாமான்களோடு சாமான்களாக ஒரு குடும்பமும் அடைந்து கொண்டு பிரயாணிக்கும் வகையில் அந்த வண்டி இருந்தது.

நான் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த போது வண்டியிலிருந்து ஒவ்வொரு சாமானாக இறக்கிக் கொண்டிருந்தனர். ஒரு புனல் வடிவிலான ஒலிப்பெருக்கியையும் ஆறு கட்டங்கள் இருக்கும் பெட்டி வடிவிலான ஒலிபெருக்கி இரண்டையும் இறக்கிய பிறகு வண்டியில் நிறைய இடம் இருப்பது தெரிந்தது. இந்தச் சூட்கேஸ் காலத்தில் சில டிரங்க் பெட்டிகள் உள்ளே இருந்தன.

இரண்டு ஆண்கள், ஒரு பெண், ஒரு குழந்தை ஆகியோர் அந்த வண்டியோடு வந்திருந்த மனித ஜீவன்கள். ஆண்களில் ஒருவருக்கு முப்பது சொச்சம் வயதிருக்கலாம். மற்றொருவருக்கு இருபதுக்குள் இருக்கும். பெண்ணுக்கு இருபத்தைந்து இருக்கலாம். குழந்தைக்கு வயது நான்கோ ஐந்தோ இருக்கலாம். அந்தக் குழந்தைக்கென்று ஒரு மூன்று சக்கர வண்டி அந்த மூன்று சக்கர வண்டியிலிருந்து இறங்கியது. குழந்தை உற்சாகமாக அந்த வண்டியில் உட்கார்ந்து மிதித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓட்டிக் கொண்டு விளையாட ஆரம்பித்தது. குழந்தையின் வடிவுக்கும் வண்டியின் அளவுக்கும் ஒத்துப் போகவில்லை. பெரிய குழந்தைக்கான சிறிய வண்டியைப் போல அது இருந்தது. குழந்தை சந்தோஷமாக அந்த வண்டியை வைத்துக் கொண்டு உலகமே மறந்தாற் போல ஓட்டிக் கொண்டிருந்தது.

சாயுங்காலம் ஐந்து மணிக்கு வந்தவர்கள் சாமான் செட்டுகளை இறக்கி ஏற்பாடுகளை செய்து முடித்த போது ஆறு மணியாகியிருந்து. வண்டியை ஒட்டி மினு மினுவென்ற சிகினாக்கள் ஒளிர்கின்ற ஒரு திரையைக் கட்டியிருந்தார்கள். கிழக்கே பார்த்தாற் போல கட்டம் கட்டமாக இருந்த பாக்ஸ் ஒலிப்பெருக்கியை வைத்திருந்தார்கள். மேற்கே நோக்கி கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியைக் கட்டியிருந்தார்கள். தெற்கே வண்டிக்குச் சற்றே தள்ளி ஒரு மூங்கிலை நட்டு அதில் ரெட்டைப்படி அளவுள்ள பெரிய எல்.இ.டி. பல்பைத் தொங்க விட்டிருந்தார்கள்.

ஊரில் இருந்த அத்தனை சிறு பிள்ளைகளும் அவர்களைச் சுற்றி வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தார்கள். என்னைத் தவிர பெரியவர்கள் யாரும் நின்று வேடிக்கை பார்க்கவில்லையே தவிர போகும் போதும் வரும் போதும் ஒரு பார்வை பார்த்தபடி சென்று கொண்டிருந்தனர். ஒரு சிலர் மட்டும் நின்றிருந்த சிறுவர்களிடம் போகிற போக்கில் “என்னடா நடக்குது இங்கே?” என்று விசாரித்தபடி சென்று கொண்டிருந்தனர். “நம்ம ஊரில ரிக்கார்ட் டான்ஸாம். ராத்திரி ஏழு மணிக்காம்.” என்று பிள்ளைகள் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். “நீங்க வருவீங்களா?” என்றும் பதில் சொன்ன கையோடு பிள்ளைகள் கேள்வியையும் கேட்டு வைத்தனர். “அட போங்கடா வேலையத்த பசங்களா!” என்றபடி கேட்டவர்கள் நகரும் வேகத்திலேயே சொல்லிக் கொண்டு போய்க் கொண்டு இருந்தனர். ரொம்ப நேரம் நின்று வேடிக்கை பார்த்து விட்டது போலத் தோன்றியது. வீட்டுப் பக்கம் ஒரு எட்டுப் பார்த்துவிட்டு திரும்ப வருவோம் எனக் கிளம்பினேன்.

டீயைக் குடித்து விட்டு அரை மணி நேரம் கழித்துத் திரும்ப வந்து பார்த்த போது முச்சந்தி வெறிச்சோடி இருந்தது. இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் அந்தக் குழந்தை எங்கே போயினர்? நின்றிருந்த மூன்று சக்கர வண்டி, ஒலிப்பெருக்கிகள், விளக்குகள் எதையும் காணவில்லை. ஒரு மணி நேரமாக மெனக்கெட்டு அமைத்ததை அவ்வளவு சுருக்கமாகக் கட்டிக் கொண்டு வண்டி எங்கே போனது என்று தெரியவில்லை. வேடிக்கைப் பார்த்து நின்று கொண்டிருந்த குழந்தைகளும் கலைந்து போயிருந்தனர்.

கூட்டம் கூடவில்லை என்பதால் கிளம்பி இருப்பார்கள் என்று சிலர் பேசிக் கொண்டார்கள். ஆங்காங்கே ஒவ்வொருவரும் அவரவர் யூகங்களுக்கு ஏற்ப கேள்வி கேட்பதும் ஆச்சரியப்படுவதும் பதில் சொல்வதுமாக இருந்தனர். “அதாங் சின்ன பசங்கள்ல்லாம் நின்னாங்களேப்பா!” என்றார் ஒருவர். “சின்ன பசங்க வெள்ளாமை பண்ணி வெளைச்சல் வூடு வந்து சேருமாப்பா?” என்றார் அதற்கு மற்றொருவர். இதைக் கேட்டதும் இதற்கும் வெள்ளாமைக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றியது. “என்னடா இந்த ஊருக்கு வந்த சோதனெ. வந்த ரிக்கார்ட் டான்ஸ்காரனுவோ போடுறதுக்கு முன்னாடியே துண்டக் காணும் துணியக் காணும்ன்னு ஓடிட்டானுவோ. வெஷம் பிடிச்ச ஊருடா இது. இந்த ஊருக்கு வந்து எவம்டா ரிக்கார்ட் டான்ஸ் போடுவானுவோ?” என்று ஊர் தன்னுடைய சோபையை இழந்து விட்டது போல ஒருவர் பேசத் தொடங்கினார்.

ரிக்கார்ட் டான்ஸ்காரர்கள் ஏன் போனார்கள் என்பதற்கான உண்மையான காரணத்தை விசாரிக்க யாருக்கும் தோன்றவில்லை. அவரவர்கள் தங்கள் மனதில் தோன்றிய கற்பனைக்கேற்றபடி காரணங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்தடுத்த நாட்களிலும் இது பற்றிப் பேசுவதும் எதாவது விளக்கம் சொல்வதுமாக ரோட்டோரம் சிலரைப் பார்க்க முடிந்தது.

இரண்டு நாட்கள் கழித்து சாயுங்காலம் ஐந்து மணி சுமாருக்கு ரிக்கார்ட் டான்ஸ் வண்டி திரும்பி வந்தது. வண்டியைப் பார்த்ததும் பிள்ளைகள் அருகாமையிலும், ஊரில் இருந்த கிழவர்கள் சற்று தள்ளி நின்றபடியும்  வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தனர். அன்று செய்தது போன்ற ஏற்பாடுகளை மீண்டும் செய்தனர்.  அன்று அவர்கள் ஏன் போனார்கள் என்பதற்கான காரணம் தெரிய வந்தது. ஒலிப்பெருக்கிக்கும் பல்புக்கும் அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளில் கரண்ட் கேட்டிருக்கிறார்கள். யாருக்கும் தர மனமில்லை. கரண்ட் இல்லாமல் எப்படி ஆட்டம் போடுவது? தற்போதைய காலத்தில் மின்சாரமும் ஆட்டத்தின் ஒரு பங்கில்லையா? வேறு வழியில்லாமல் அவர்கள் சட்டென்று அவ்வளவு ஏற்பாடுகளையும் அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்.

இப்போது மட்டும் இந்த ஊரில் யாருக்குக் கரண்ட் கொடுக்கும் அளவுக்கு அவ்வளவு உபகார மனது வந்திருக்கிறது என்ற கேள்வி எழும்பி அடங்குவதற்குள் ஹேமா அக்கா கரண்ட் கொடுக்க ஒத்துக் கொண்டதாகப் பதிலும் வந்து விட்டிருந்தது. அன்றைக்கு அவர்கள் வந்திருந்த போது ஹேமா அக்கா பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு ஒரு கல்யாணத்திற்காக வெளியூருக்குப் போயிருந்தது. அன்றைய அவர்களின் துரதிர்ஷ்டத்திற்கு அதுதான் காரணம். இன்றைய அவர்களின் அதிர்ஷ்டத்திற்கு அது பிள்ளைகளோடு திரும்பி வந்திருக்கிறது.

ஹேமா அக்காவின் புருஷன் செத்து நான்கு வருஷங்களாகி விட்டன. இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு அது போராடிக் கொண்டிருக்கிறது. ஹேமா அக்காவுக்குப் புருஷன் இல்லாததால் துணிந்து முடிவெடுத்துக் கரண்டு கொடுக்க சம்மதித்திருக்கிறது. மற்ற வீடுகளில் பெண்டுகள் சட்டென முடிவு எடுத்து விட முடியாது. வேலை முடிந்தோ அல்லது குடித்து விட்டோ வரும் புருஷனிடம் அனுமதி கேட்க வேண்டும். ஒருவேளை அருகில் இருந்த வீடுகளில் வேலைக்கோ குடிக்கவோ போகாமல் இருந்த புருஷர்கள் கரண்ட் கொடுப்பதை விரும்பாமலும் இருந்திருக்கலாம்.

“அதானே ஏற்கனவே போட்டு முடியாமப் போயி மறுபடியும் திரும்பி வந்திருக்கானே. ரொம்ப தெகிரியம்தான் போ. இங்க அப்படி என்ன வசூலாகிடப் போவுது? ஏதோ அந்தக் காலத்துல சனங்கப் பாத்துச்சு. காசு போட்டுச்சு. ஏதோ கொஞ்சம் அப்போ வசூலானுச்சு. இந்தக் காலத்துச் சனங்க இதெல்லாம் பாக்குமா? எல்லாம் டிவிப் பொட்டியில மானாட மயிலாட போட்டா உக்காந்து கொட்டக் கொட்டப் பாக்குமுங்க. இதுங்களுக்குப் புடிக்குமோ? புடிக்காதோ? சனங்க போவுமோ? போவாதோ? போனவன் அப்படியே வேற நல்ல ஊருக்குப் போயிருக்கப்படாதா? இங்க வந்துதான் ஒண்ணுமில்லாமப் போவணுமா?” என்று ஒரு கிழவர் பேச மற்ற கிழவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்று போல ஆறு மணிக்குள் ரிக்கார்ட் டான்ஸ்காரர்கள் ஏற்பாடுகளைப் பக்காவாக அமைத்து விட்டனர். ஏழரைக்கு நிகழ்ச்சித் தொடங்கி விடும் என்று மைக்கில் அறிவித்து விட்டு சினிமா பாட்டுகளை ஒலிக்க விட்டனர்.

ஒவ்வொரு பாட்டுக்கும் இடையிலும் “நேரங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆதரவுகள் தர வேண்டும். சனங்கள் கூட வேண்டும். கும்பல்கள் கும்பல்களாய்த் தாய்மார்கள், பெரியோர்கள், குழந்தைகள் வர வேண்டும். உங்களால் முடிந்த பத்து ரூபாய்கள், இருபது ரூபாய்கள், ஐம்பது ரூபாய்கள், நூறு ரூபாய்கள் வழங்கி எங்கள் வயிற்றுப் பசிக்களைப் போக்க வேண்டும். சரியாக ஏழரை மணிகளுக்கு டான்ஸ்கள் துவங்கி விடும். சனங்கள் தங்கள் சாப்பாடுகளை முடித்து விட்டு வர வேண்டும். ஆதரவுகள்  தர வேண்டும்.” என்ற அறிவிப்பு பன்மை விகுதிகள் மிகுந்ததாய் வந்து கொண்டிருந்தது. அறிவிப்பைப் புரிந்து கொண்டாற் போல குழந்தைகள் ஆங்காங்கே சிதறிப் போய் அவர்களுக்குப் பிடித்தவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தனர். முச்சந்தி அவ்வபோது வெறித்தாற் போல இருந்தது. திடீரென சிறு பிள்ளைகள் கூடி வந்து ஹோ என்று சத்தம் போடுவதும் அவர்கள் போடும் பாட்டுகளுக்கு அவர்களுக்கு முன்பே அங்கே டான்ஸ் வைப்பதுமாகவும் முச்சந்தியின் தோற்றம் ஜாலங்களைக் காட்டுவதாக இருந்தது. மணி ஏழைக் கடக்கத் தொடங்கியதும வெளியூருக்கும் அக்கம் பக்கப் பகுதிகளுக்கும் வேலைக்குச் சென்றவர்கள் இரு சக்கர வண்டிகளில் வந்து கொண்டிருந்தார்கள். வெளியூர் பயணம் போயிருந்தவர்கள் பேருந்திலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார்கள்.

“இதைப் போய் பாக்குறதா? வாணாமா? வூட்டுல இருக்குற ஆம்பளெ வுடுமா? பேசாம அடங்கிக் கெடன்னு சொல்லுமா தெரியலையே. அந்த ஹேமா போண்ணப் பாரு தெகிரியமா கரண்ட் கொடுத்திருக்கே, அந்தத் தெகிரியம் நமக்குல்லாம் வருமா?” என்று வீடுகளுக்கு முன்பாகப் பெண்டுகள் பேசத் தொடங்கினார்கள்.

“இன்னும் இரண்டு பாடல்கள் முடிவுகள் பெற்றதும் டான்ஸ்கள் தொடங்கும். மக்கள்கள் வர வேண்டும். ஆதரவுகள் தர வேண்டும். இதோ ஒலிக்கப் போகும் பாடல்களுக்கு அடுத்ததாக சாமிப் பாடல்கள் ஒன்று ஒலித்து அதன் பின் டான்ஸ்கள் தொடங்கும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.” என்ற அறிவிப்பிற்குப் பின் ஒரு குத்துப்பாடல் ஒலித்தது. அதைத் தொடர்ந்து ‘விநாயகனே வினைகளைத் தீர்ப்பவனே’ என்ற பாடல் ஒலிக்கத் துவங்கியது.

திடீரென தீப்பிடித்தாற் போல பெரியவர்கள் சிலர் போய் சிறுவர்களை வரிசையாகக் கீழே அமர வைத்துக் கொண்டிருந்தார்கள். முச்சந்தி வெளிச்சத்தால் நிறைந்திருந்தது. அவர்களது முச்சக்கர வண்டியை மறைத்தாற் போல திரை மினுமினுப்போடு விரிந்திருந்து.

பெண்கள் தரையில் உட்கார்ந்து கொள்வதற்கேற்ப பழைய பாயோடும், கல்யாணத்திற்கோ காது குத்தலுக்கோ வைத்து நைந்து போன பழைய பிளக்ஸ்களோடும் முச்சந்தியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். வீட்டிலிருந்த ஆண்களிடம் அனுமதி கேட்டுப் போகிறார்களா, கேட்காமல் போகிறார்களா என்று யூகிக்க முடியவில்லை. ஆண்கள் சிலர் கையோடு ப்ளாஸ்டிக் நாற்காலியோடு போய்க் கொண்டிருந்தார்கள்.

“இந்தப் பெண்டு புள்ளைக எதுக்குப் போகுதுங்க? எப்போ பார்த்தாலும் வூடு, டிவிப் போட்டின்னுதானே கெடக்குதுங்க. போயிப் பாத்துட்டு வரட்டும்.” என்ற ஓர் ஆண் குரல் கேட்டது. “ஏன் நீங்க போவலியா?” என்ற எதிர்குரலுக்கு, “இனுமே இந்த வயசுக்கு மேல அதெப் பாத்து ஆவப் போறது என்ன? இந்த விஷக் குளிரு நமக்கு ஒத்துக்காது. ஆசைக்குப் போயி ஒரு நாளைக்குப் பாத்துட்டு வந்துப்புட்டு ஏழு நாளைக்கு மூக்கெ உறிஞ்சிக்கிட்டுக் கிடக்க முடியாது.” என்ற பதில்குரலும் உடனடியாக வந்தது.

பிள்ளையார் கோயில் பக்கம் முப்பது பேருக்கு மேல் குழந்தைகள், பெரியவர்கள் என்று தரையிலும் நாற்காலியிலும் கலந்து கட்டி உட்கார்ந்திருந்தார்கள். வடமேற்கு மூலையில் பத்து பதினைந்து இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள். தென்கிழக்காகப் பழைய பாயும் பழைய பிளக்சும் எடுத்துப் போயிருந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். கிழக்குப் பக்கமாக நாற்காலி போட்டு ஆண்கள் சிலர் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு சிலர் அவர்களின் பின்னால் நின்றிருந்தார்கள். சிலர் வந்து கொண்டிருந்தார்கள். என்னவோ அந்த இடமே மாயமந்திரம் போட்டது போலாகி விட்டது. சனக்கூட்டம் நூறு சொச்சத்தை நெருங்கி விட்டது.

“இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரிக்கார்ட் டான்ஸ்கள் ஆரம்பமாகிறது.” என்ற அறிவிப்புடன் சமீபத்தில் வந்திருந்த ஒரு சினிமா குத்துப்பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. சனங்கள் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள்.  முப்பது வயது மதிக்கத்தக்க அந்த ஆணும் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணும் ஆடத் தொடங்கினார்கள். ஆண் டீசர்ட்டும், ஜீன்ஸ் பேண்டும் போட்டிருந்தார். பெண் டாப்சும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். ரிக்கார்ட் டான்ஸ் ஆடுபவரின் பெண் பிள்ளை மூன்று சக்கர வண்டியில் இங்கும் அங்குமாக ஓட்டிக் கொண்டிருந்தது. சனங்கள் ஆட்டத்தையும் அந்தக் குழந்தையின் ஓட்டத்தையும் சேர்த்தே ரசித்தார்கள். “அட என்னமா ஆடுறாம்ப்பா அந்தப் பயெ. அந்தப் பொம்பளயும் பிரமாதமா ஆடுதேப்பா. அந்தக் குழந்தையத்தான் பாரேம். என்ன அழகா இருக்கு.” என்றார் ஆண்கள் கூட்டத்திலிருந்து ஒருவர்.

முதல் டான்ஸ் முடிந்ததும் “உங்கள் ஆதரவுக்கரங்களை நீட்டி எங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். எங்கள் இரவு உணவுக்குத் தேவையான பணங்களை உங்களை நம்பித்தான் நாங்கள் வந்துள்ளோம்.” என்று டான்ஸ் ஆடிய அந்த ஆண் மைக்கில் பேசினார். ஒருவர் எழுந்து போய் ஐம்பது ரூபாய் கொடுத்தார். அவரின் பெயரைக் கேட்டுக் கொண்ட ரிக்கார்ட் டான்ஸ்காரர், “நமது கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் அண்ணா ரூபாய் ஐம்பத்து ஒன்று கொடுத்து ஆதரித்திருக்கிறார். அவருக்கு குழுவினர்கள் சார்பாக நன்றிகள். நன்றிகள் கலந்த வணக்கங்கள். அவருக்கு ஜோராகக் கைத்தட்டுங்கள்.” என்று அவர் தந்த ஐம்பதை ஐம்பத்தொன்றாக்கிக் கூறினார். கூட்டம் ஜோராக ஆர்ப்பரித்துக் கைதட்டியது. அடுத்தடுத்து சிலர் ஐம்பது, இருபது எனக் கொடுக்க ஆரம்பித்தார்கள். பணம் கொடுக்கின்ற ஒவ்வொருவரின் பெயரையும் அறிவிப்பு செய்து கைதட்ட செய்தார் ரிக்கார்ட் டான்ஸ்காரர். பணம் கொடுப்பது குறையத் தொடங்கியதும் அடுத்த பாட்டுக்கு ஆடைகளை மாற்றி தயார் ஆனார்கள் அந்த டான்ஸ்கார ஆணும் பெண்ணும்.

அடுத்ததாக ஒரு கிராமிய பாடல் ஒலிக்க ஆட ஆரம்பித்தார்கள். ஆண் வேட்டிச் சட்டையிலும் அந்தப் பெண் கெண்டைக்காலுக்குக் மேலே கட்டிய சேலையோடும் ஆட சனங்களுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. பாடல் முடியும் வரை கைதட்டிக் கொண்டே இருந்தார்கள். கிராமிய நடனம் முடிவதற்குள் பணத்தைக் கொடுக்க மக்கள் வரிசையில் நின்றார்கள். முதன்முறையாக ஒருவர் நூறு ரூபாய் கொடுத்ததைப் பார்த்ததும், “நமது கிராமத்தின் உயர்ந்த உள்ளம், கலைகளின் காவல் தெய்வம் தியாகராமன் நமது டான்ஸ் பாட்டைப் பாராட்டி நூற்று ஒன்றுகள் ஆம் சனங்களே நூற்று ஒன்றுகள் வழங்கியிருக்கிறார். அவருக்கு நன்றிகள். பாராட்டி ஜோராகக் கைதட்டுங்கள். அவருக்கு குழுவினர்கள் சார்பாக நன்றிகள். நன்றிகள் கலந்த வணக்கங்கள்.” என்றார். வரிசையில் நின்றோர் அடுத்தடுத்துப் பெயரைச் சொல்லிப் பணம் கொடுப்பதும், பணம் கொடுத்தவருக்கு அறிவிப்பு செய்வதும் தொடர்ந்தது. பணம் கொடுப்பது நின்றதும் ஆடைகளை மாற்றிக் கொண்டு அடுத்தப் பாடலுக்குத் தயாரானார்கள்.

அடுத்து எம்.ஜி.ஆர். பாடல் ஒலித்து அதற்கான ஆட்டம் ஆரம்பமானது. ஆண் எம்.ஜி.ஆர். வேஷத்தோடும் பெண் சரோஜாதேவி வேஷத்தோடும் ஆடிக் கொண்டிருந்தனர். சனங்களின் சந்தோஷம் கரை புரண்டோடியது என்று சொல்ல வேண்டும். ஒருவர் பாடல் முடிந்து பணம் கொடுக்க காத்திராமல் எம்.ஜி.ஆராக ஆடிய டான்ஸ்காரரின் சட்டைப் பையில் நூறு ரூபாய் பணத்தை ஓர் ஊக்கைக் கொண்டு குத்தினார். அதைப் பார்த்ததும் மேலும் சிலர் ஊக்கோடு ஊக்கமாக ஓடிப் போய் பணத்தைக் குத்த ஆரம்பித்தனர். ஆடிக் கொண்டிருந்தவருக்குத் தாங்க முடியாத குசி. பாடல் முடிந்ததும் யார்யாரெல்லாம் பணத்தைக் குத்தினார்கள் என்பதைக் கேட்டு அவர்களுக்கு எல்லாமல் மறவாமல் நன்றி அறிவிப்பைச் செய்தார்.

அடுத்தடுத்தும் மக்கள் எம்.ஜி.ஆர். பாடலாகக் கேட்டதால் தொடர்ச்சியாக நான்கு பாடல்கள் எம்.ஜி.ஆர். பாடல்களாக ஒலித்தன. சனங்கள் ஓடிப் போய் பணத்தைக் குத்தி விடுவதில் அதிக ஆர்வம் காட்டினர். பணம்கொடுத்தோருக்கெல்லாம் அவர் மறவாமல் நன்றி சொன்னது மக்களை ஆர்வமாகப் பணம் கொடுக்கத் தூண்டியது. ஐம்பதும் நூறுமாகப் பணம் சேர்ந்து கொண்டே இருந்தது. கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு ரூபாய் என்பதில் அவர் அழுத்தம் கொடுத்து சொன்ன விதமும் ஜோராக என்பதைச் சொல்லும் போது அழுத்தம் கொடுத்த விதமும் தனிக்கவர்ச்சியைத் தந்திருந்தது.

பழங்காலத்துப் பாட்டு, தற்காலத்துப் பாட்டு என்று ஆட்டம் கலந்து கட்டி நடந்து கொண்டே இருந்தது. சனங்கள் ரொம்ப ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்று சக்கர வண்டியில் சுற்றிக் கொண்டிருந்த குழந்தைக்கு ஒரு கட்டத்தில் அலுத்துப் போயிருந்தது. அது மூன்று சக்கர வண்டியிலிருந்து தடுமாறி கவிழ்ந்தது. பார்த்துக் கொண்டிருந்த சனங்களில் ஒரு பெண் ஓடிப் போய்த் தூக்கிக் கொண்டார். “அப்பா போதும்ப்பா. நிறுத்துப்பா. கௌம்புவோம்ப்பா.” என்றது அந்தக் குழந்தை.

“பாரேன் அந்தக் கொழந்தெ சொல்றது எவ்வளவு அழகா இருக்கு.” என்று ஒருவர் சொல்ல அதையும் ரசித்தது கூட்டம்.

இன்னும் இரண்டு பாட்டுதான் என்பது போல ஆடிக் கொண்டே விரலைக் காட்டினார் ரிக்கார்ட் டான்ஸ்காரர்.

“ம்ம்… வேண்டாம்ப்பா… வாப்பா…” என்று அடம் பிடிப்பது போல அழ ஆரம்பித்தது குழந்தை.

“ரெண்டே பாட்டுதான்” என்று அமுங்கிய குரலில் சொன்னார் டான்ஸ்காரர் ஆடியபடியே. பெண்ணும் ஆடியபடியே கெஞ்சும் முகபாவத்தோடு குழந்தையைச் சமாதானப்படுத்துவது போல சைகைகளைச் செய்து பார்த்தார்.

“உக்காந்து பாக்குற இவுங்க ஆடட்டும். நீ எங்கூட வாப்பா.” என்றது குழந்தை கண்களைத் துடைத்துக் கொண்டே கீச்சுக் குரலில் சத்தமாக.

குழந்தையின் குரலைக் கேட்டவர்கள் ஒரு கனம் அதிர்ச்சியில் உறைந்து போனது போலக் காணப்பட்டார்கள். அதற்கு மேல் என்ன செய்வதென்று புரியாமல் குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது.

*****

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...