கூடித் திட்டமிட்டால் கோடி லாபம்!
கடைகளில் பொருட்களை வாங்கி
வந்தப் பிறகு வாங்கிய பொருட்கள் பற்றி ஒரு சில நாட்கள் கழித்து விவாதியுங்கள். ஒரு
பின்னூட்ட சந்திப்பை எல்லாரையும் வைத்து நிகழ்த்துங்கள். மிகவும் வெளிப்படையாகக் கருத்தைப்
பகிருங்கள். இதனை அடுத்த முறை பொருட்களை வாங்கப் போவதற்கு முன்பு கட்டாயமாக மற்றும்
அவசியமாகச் செய்து முடியுங்கள்.
விடுமுறை நாட்களில் வெளியே
செல்வதற்கும் இதே முறையைப் பின்பற்றுங்கள். வெளியே சென்று வந்து அடுத்த முறை வெளியே
செல்வதற்கு முன்பு அது குறித்த ஒரு விவாதம், பின்னூட்டம், கருத்துப் பகிர்தல் எல்லாவற்றையும்
செய்யுங்கள்.
இம்முறை உங்களுக்குப் பலவிதத்தில்
உதவும். ஒரு பொருளை வாங்க வேண்டுமா, வேண்டாமா? சென்ற வந்த இடத்தில் எப்படியெல்லாம்
நடந்து கொண்டிருக்கலாம்? என்பது போன்ற ஆரோக்கியமான திட்டமிடலுக்கு உறுதுணை செய்யும்.
பொருட்களை வாங்குவதிலும்
வெளியிடங்கள் செல்லும் போதிலும் நாம் பணத்தைப் பெருமளவில் செலவிடுகிறோம். நாம் சரியாகத்தான்
செலவிடுகிறோமா என்பதை அறிவதற்கும் தரமாகத்தான் செலவிடுகிறோமா என்பதை தெரிந்து கொள்வதற்கும்
விவாதம் – பின்னூட்டம் – கருத்து வெளிப்பாட்டு முறை ஒரு மிகச் சிறந்த முறையாகும்.
இதைச் செய்து முடித்த பிறகு,
நிச்சயமாக ஒரு சில முறை பொருட்களை வாங்கி முடிந்த பிறகு, வெளியே சென்று வந்த பிறகு
கீழே உள்ள இரண்டு வினாக்களுக்கும் உங்கள் விடை என்னவாக இருக்கிறது என்று பாருங்கள்.
பொருட்களை வாங்குவதற்கு (ஷாப்பிங்
என்ற பெயரில்) நீங்கள் மாத ஊதியத்தில் எத்தனைச் சதவீதம் செலவிடுகிறீர்கள்?
வெளியிடங்களுக்குச் சென்று
வருவதற்கு நீங்கள் மாத ஊதியத்தில் எத்தனைச் சதவீதம் செலவிடுகிறீர்கள்?
மாத ஊதியத்தில் இந்த இரண்டிற்கும்
எத்தனை சதவீதம் செலவிடலாம் என்ற கணக்கு இருக்கிறது அல்லவா!
பொதுவாக நீங்கள் சேமிப்பிற்காக
மாத ஊதியதில் 30 சதவீதத்தை ஒதுக்க வேண்டும். உணவு, வீட்டு வாடகை, கல்விச் செலவு, மருத்துவச்
செலவு என்று மாத ஊதியத்தில் 40 சதவீதத்தை ஒதுக்கினால் எஞ்சிய 30 சதவீதத்திற்குள்தான்
இதற்கான செலவினத்தைச் செய்ய வேண்டும். சரியாகச் சொல்லப் போனால் எதிர்பாராத செலவினங்களுக்காக
10 சதவீதத்தை ஒதுக்கி வைத்து விட்டால் 20 சதவீதத்திற்குள் பொருட்கள் வாங்குவது, வெளியிடங்களுக்குச்
செல்வதற்கான செலவினத்தை முடிக்க வேண்டும். அதுதான் சரியான அளவு.
மாத ஊதியத்தின் 20 சதவீதத்திற்குள்
பொருட்கள் வாங்கும் செலவினத்தை முடிப்பதா? அது கிட்டதட்ட எண்பது சதவீத அளவிற்கு வருகிறது
என்று சொன்னால், நீங்கள் நான்கு மடங்கு தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம். இந்தத்
தவறைக் குறைக்க முடியுமா? கட்டுக்குள் கொண்டு வர முடியுமா?
கீழ்காணும் வழிமுறைகள் உங்களுக்கு
உதவக் கூடும். இந்த வழிமுறைகள் உங்களுக்கு உதவத்தான் முடியும். நீங்கள் முனைப்புடன்
செயல்படுத்தினால்தான் இந்த வழிமுறைகள் உங்களுக்கு உதவ முடியும்.
முதலில் பொருட்களை வாங்குவதை
எடுத்துக் கொள்வோம். வாங்கும் பொருள் அவசியமா? அத்தியாவசியமா? என்ற கேள்வியை முதலில்
எழுப்புங்கள். இந்தப் பொருள் இல்லாமல் இருக்க முடியுமா? என்ற கேள்வியை அடுத்து எழுப்புங்கள்.
இந்தக் கேள்விகளுக்கு விடை கண்ட பிறகு அடுத்து சில வினாக்களை எழுப்ப வேண்டியிருக்கிறது.
அந்தப் பொருளைப் பிரபலமான
நிறுவனத்தின் (Branded) ஆக வாங்குவதா? அதே தரத்தில் இருக்கும் விலை குறைவான நிறுவனத்தின்
பொருளாக வாங்குவதா?
இந்தக் கேள்விகளுக்கு விடை
கண்ட பிறகு எந்தப் பொருள் வாங்க வேண்டும் என்றால் அதை எழுத்தில் பட்டியலிட்டு எழுதிக்
கொள்ளுங்கள். அந்தப் பட்டியலை இரண்டு மூன்று முறைப் பார்த்து அடித்துத் திருத்தி உடனடியாக
வாங்க வேண்டுமா? தள்ளிப் போட்டு வாங்கலாமா? என்பன போன்ற வினாக்களுக்கு விடை கண்டு மீண்டும்
மீண்டும் மாற்றி அமையுங்கள்.
பொருட்களை வாங்கச் செல்லும்
போது பணத்தை ரொக்கமாக எடுத்துச் செல்லப் பாருங்கள். பணத்தைக் கையால் எண்ணிக் கொடுங்கள்.
முடிந்த வரை பணம் செலுத்தும் அட்டைகளைத் தவிர்க்கப் பாருங்கள். அவசியம் அட்டைகளைப்
பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் காசோலைகளைப் பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள்.
அதுவும் முடியாது எனும் நிலையில் நீங்கள் அட்டைகளில் எவ்வளவு செலவினம் செய்யப் போகிறீர்கள்
என்பதை எழுத்து வடிவில் தாளில் எழுதிய பின்பு அட்டைகளைத் தேய்த்து பணத்தை வழங்குங்கள்.
இதே முறைதான் பணம் செலுத்தும்செயலிகள் (Pay Apps) மூலம் பணம் செலுத்துவதற்கும்.
வாரம் ஒரு முறை வெளியிடங்களுக்குச்
செல்லாவிட்டாலும் மாதம் ஒரு முறை வெளியிடங்களுக்குச் சென்று வரத்தான் வேண்டும். செலவினங்களை
அதிகரித்து விடும் ஒன்றாக வெளியிடங்களுக்குச் செல்வதும் சில நேரங்களில் அமைந்து விடக்
கூடும்.
வெளியிடங்கள் என்றால் பணத்தைச்
செலவழித்துச் செல்லும் மால்கள், திரையரங்கங்கள், கடைத்தெருக்கள் என்பது மட்டும்தானா?
செலவே இல்லாமல் சென்று வரக்
கூடிய உங்கள் பகுதிகளுக்கு அருகில் உள்ள கடற்கரை, கோயில்கள், பூங்காக்கள், உறவினர்களின்
இல்லங்கள் போன்றவையும் உண்டுதானே. இது போன்ற வெளியிடங்களை அதிகம் பரிசீலியுங்கள்.
மாதத்தின் நான்கு வாரங்களும்
வெளியிடங்களுக்குச் சென்று வர வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு வாரத்தை மேற்படி செலவில்லாத
இடங்களுக்குச் சென்று வர ஒரு வாரத்தை ஒதுக்கலாம். மற்றொரு வாரத்தை வெளியிடங்களுக்குச்
செல்லாத செலவில்லாத வாரமாக அமைத்துக் கொள்ளலாம். மீதி இரண்டு வாரங்களை மிதமாகச் செலவு
வைக்கும் வெளியிடங்களுக்குச் சென்று வரும் வாரமாக அமைக்கலாம்.
ஒரு சில மாதங்கள் இவ்வண்ணம்
செய்து முடித்த பின்பு உங்களுக்கே அற்புதமான திட்டங்கள் மனதுக்குள் தோன்ற ஆரம்பித்து
விடும். இதுதானே நமது எதிர்பார்ப்பு. ஆக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் பொருட்கள்
வாங்க வேண்டும் என்று நினைக்கும் போதும் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கும்
போதும் திட்டமிட வேண்டும்.
திட்டமிட வேண்டும் என்றால்
நீங்கள் மட்டுமல்ல. குடும்பமாக அமர்ந்து திட்டமிட வேண்டும். எல்லாருடைய கருத்துகளையும்
சுதந்திரமாக வெளிப்படச் செய்து விவாதித்து சாதக பாதகங்களை அலசித் திட்டமிட வேண்டும்.
இந்தத் திட்டமிடும் வழக்கத்தைக் கொண்டு வந்து விட்டீர்கள் என்றால் எப்படிச் செலவு செய்ய
வேண்டும் என்பதற்கு நான் மேலே கூறிய செயல்முறைகள் என்ன, அதை விட அற்புதமான செயல்முறைகளை
நீங்கள் உருவாக்குவீர்கள்.
எடுத்த உடனே இந்த ஆரோக்கியமான
கூட்டுத் திட்டமிடல் வந்து விடும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அது சாத்தியமே இல்லை.
அனைவரும் இணைந்து திட்டமிடும் போது கருத்து மோதல்கள், கருத்துச் சண்டைகள் நிகழும்.
அது சில பல சந்திப்புகள் வரை தொடரும். இந்தக் கருத்து மோதல்களுக்கோ, சண்டைகளுக்கோ அசராமல்
நீங்கள் மீண்டும் மீண்டும் அனைவரையும் கூட்டித் திட்டமிடும் முறையைச் செய்து கொண்டே
இருக்க வேண்டும். சில பல கூட்டங்களுக்குப் பின்பாகத்தான் இது ஒரு நல்ல நிலைக்கு வரும்.
அதற்குப் பின்புதான் இந்தக் கூட்டுத் திட்டமிடலின் அற்புதங்களையும் பலன்களையும் நீங்கள்
அறுவடை செய்ய முடியும்.
நிச்சயமாக இந்த வழிமுறைகள்
உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த வழிமுறைகள் உங்களுக்குப்
பயனுள்ளதாக அமைந்து நீங்கள் அற்புதமான வழிமுறைகளை உருவாக்கியிருந்தால் அதை எங்களோடு
பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பகிர்தல்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று
கருதுகிறேன்.
நன்றி!
வணக்கம்!
*****
No comments:
Post a Comment