18 Dec 2023

ஒன்று + இரண்டு = முடிவு

ஒன்று + இரண்டு = முடிவு

கோகிலவாணன் இரண்டு விதங்களால் பாதிக்கப்பட்டார். அவமானத்தால் பாதிக்கப்பட்டார். கேட்பவருக்கெல்லாம் பணத்தைக் கொடுத்து அதனால் பாதிக்கப்பட்டார். இந்த இரண்டு பாதிப்பும் அவரை அதிகமாகப் பேசச் செய்தது.

யாரைப் பார்த்தாலும் அவமானம் மற்றும் பணம் கொடுத்தல் பற்றி அதிகமாகப் பேச ஆரம்பித்தார். பெரும்பாலும் பேசியதையே திரும்பத் திரும்ப பேச ஆரம்பித்தார். இந்த இரண்டைத் தவிர அவருக்கு வாழ்க்கையில் வேறு எதுவும் தெரியாதோ என்று நினைக்கத் தோன்றும் அளவுக்குப் பேசிக் கொண்டிருந்தார். யாரைப் பார்த்தாலும் எவரைச் சந்தித்தாலும் இந்த இரண்டு குறித்து மட்டுமே பேசினார். இவ்விரண்டைத்  தவிர வேறு நினைப்புகள் அற்றவராகத்தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் பேசுவதன் சாரமும் உள்ளடக்கமும் சாதாரணமானதுதான். ஆனால் அவர் அனுபவப்பட்டு அதிலிருந்து பேசுகிறார். உங்களுக்காக அவர் பேசிய அந்த இரண்டு பேச்சுகளையும் இங்கே பதிவிடுகிறேன். உங்களுக்குப் பயன்பட்டால் சந்தோஷம். உங்களுக்கும் ஏதேனும் இது குறித்து அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்கள். அதை நான் கோகிலவாணனிடம் சொல்கிறேன்.

இனி அவரது பேச்சுக்குச் சென்று விடலாம்.

ஒன்று

நான் சொல்வதில் கோர்வை இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அது இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

நிறைய அவமானங்கள் நேரலாம். சோர்ந்து போகலாம். சோர்ந்து போய் அப்படியே முடங்கி விடலாம். அப்படி முடங்கி விடுவதற்காகவா இவ்வளவு வருடம் வளர்ந்தோம், பாடுபட்டோம், கஷ்டங்களைத் தாங்கி நின்றோம்?

அவமானத்தில் சோர்ந்து போக என்ன இருக்கிறது? அவமானத்தால் உண்டாகும் உணர்வெழுச்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது ஒரு பீறிட்டு எழும் அனுபவம். அவமானத்தை வெகுமானமாக மாற்ற வேண்டும். அது வாழ்வில் அற்புதங்கள் நிகழும் தருணம். இப்படிச் சொல்லி உங்களை நான் நாயகனாக்க முயல்வதாக நினைக்க வேண்டாம். நீங்கள் ஒன்றும் தாழ்ந்தவரில்லை எனும் போது உங்கள் தாழ்வை ஏன் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான உத்வேகமாக நீங்கள் இதை ஏன் கருதிக் கொள்ளக் கூடாது?

உயிருள்ள மனிதர் தண்ணீரில் மூழ்க மாட்டார் என்பது போல திறமையுள்ள எந்த மனிதரும் அவமானத்திற்குள் ஆழ்ந்து விட மாட்டார். அவர் அவமானத்தைத் துடைத்துத் தன்னை நிரூபிக்கப் பார்ப்பார்.

சில நேரங்களில் ஒருவர் அவமானப்படுத்தப்படா விட்டால், அவர் தான் யார் காட்டுகிறேன் பார் என்று முயற்சி எடுத்திருக்க மாட்டார். இது ஒருபக்க உண்மையாகத் தோன்றினாலும் ஒருவரை பல நேரங்களில் உசுப்பி விட அவமானம் தேவையாகவும் இருக்கிறது.

காரமும் கசப்பும் உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் உணவில் அவையும் ஒரு சுவையாக இருப்பது போலத்தான் அவமானங்களும் தோல்விகளும்.

அவமானங்கள் யாரையும் வீழ்த்தி விடுவதில்லை. உங்கள் நிரூபணத்திற்கான நேரம் வந்து விட்டது என்பதைக் காட்டுகிறது.

இரண்டு

நான் பணத்தைப் பற்றியும் பண உதவி பற்றியும் தவறாக அனுமானித்து விட்டதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். பண உதவி என்பது நல்லதுதான். அது உங்களைப் பாதித்துக் கொள்ளாத அளவுக்குப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறது. ஆகையால் இதைப் பற்றி உங்களிடம் பேச வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

உறவுகளைப் பணத்தால் அளவிடுபவர்களிடம் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள். அதே போல நட்பையும் பணத்தால் அளவிடுபவர்களிடமும் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள்.

ஓர் அவசரம் என்று ஓடி வந்து பணம் கேட்பார்கள். கொடுத்தால் நட்போடு அல்லது உறவோடு இருப்பார்கள். இல்லாவிட்டால் நட்பை அல்லது உறவை முறித்துக் கொள்வார்கள். அப்படி முறித்துக் கொள்பவர்களிடம் வலிய நட்போ உறவோ வைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் முறித்துக் கொண்டதைக் கொண்டாடுங்கள். அதற்காக ஆயிரம், இரண்டாயிரம் அழிந்தாலும் அது ஆக்கம்தான்.

தொழில் தொடங்க வேண்டும் என்றோ வியாபாரம் ஆரம்பிக்க வேண்டும் என்றோ பணம் கேட்பவர்கள் இருக்கிறார்கள். இது போன்றவர்கள் நட்பிலும் உறவிலும் காட்டும் உதார குணத்தைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். தொழில் தொடங்குவதற்கும் வியாபாரம் செய்வதற்கும் பணம் கொடுக்க வங்கிகள் இருக்கின்றன. நாம் வங்கிகள் இல்லை.

வங்கிகள் பணம் கொடுப்பதைக் கவனித்துப் பாருங்கள். கொடுக்கும் பணத்திற்கான உத்திரவாதம், பணத்தைத் திரும்ப செலுத்துவதற்கான வழிமுறைகள், பணத்தைச் செலுத்தாவிட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்று எல்லாவற்றிற்கும் விதிகள் வைத்திருப்பார்கள். அந்த விதிகளின்படி எல்லாவற்றையும் தீர ஆராய்ந்துதான் பணத்தைக் கொடுப்பார்கள்.

உங்களால் வங்கிகளைப் போல இவ்வளவையும் செய்ய முடியுமனால் நீங்கள் பணத்தைக் கொடுக்கலாம். இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள், வங்கிகள் அப்படிக் கொடுத்தும் பணத்தை வசூல் செய்ய முடியாத சூழ்நிலைகள் நிறைய இருக்கின்றன. வங்கிகளே மல்லையா, நீரவ் மோடி என்று பலரிடம் ஏமாந்துப் போயிருக்கின்றன.

நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கிறேன் என்றோ, பணத்தைக் கொடுக்காவிட்டால் நட்போ அல்லது உறவோ வாடிப் போகும் என்றோ பணத்தைக் கொடுக்காதீர்கள். அப்படிக் கொடுத்த பணத்தால் நீங்கள் உயிர் போகும் அளவுக்குத் துன்பப்படுவீர்கள். அது உங்களுக்கு நீங்களே ஹார்ட்அட்டாக்கையோ பக்கவாதத்தையோ தேடிக் கொண்டது போல ஆகி விடும்.

ஒரு தொழில் அல்லது வியாபரத்தைத் தொடங்க நினைப்பவருக்கு அதற்குத் தேவையான பணத்தை திரட்டுவதற்கான திறனும் இருக்க வேண்டும். அப்படி இல்லாத ஒருவர் பணத்தைத் திரட்டுவதற்காக உறவுகளையும் நட்புகளையும் சாதகமாகப் பயன்படுத்துகிறார், உணர்வுகளை வைத்து உணர்வு ரீதியான மிரட்டல் விடுக்கிறார் என்றால் கண்டிப்பாக அவரிடமிருந்து விலகி விடுவது நல்லது. அப்படிப்பட்டவர்களிடம் உங்களுக்குப் பணம் கொடுக்க எனக்கு விருப்பமில்லை என்று முகத்தில் அடித்தாற் போலச் சொல்லி விலகி விடுவது கூட எந்த விதத்திலும் தவறான அணுகுமுறையாகாது.

பணத்தைக் கொடுக்க வேண்டும் இரக்கப் பட்டீர்கள் என்றால் பின்விளைவுகளால் நீங்கள் அரக்கத் தனமாகத் தாக்கப்படுவீர்கள்.

அப்படியானால் நீங்கள் பண உதவி செய்யக் கூடாதா? தாராளமாகச் செய்யுங்கள். கடன், கைமாற்று என்று செய்யாதீர்கள். புண்ணியமாகச் செய்யுங்கள். உங்களுக்குத் தெரியும் என்றாலும் ஞாபகம் செய்கிறேன். புண்ணியமாகக்   கொடுத்த பணத்தை நீங்கள் திரும்ப எதிர்பார்க்க முடியாது.

முடிவு

ஆழமாகப் பாதிக்கப்படுபவர்கள் அதை பேசிப் பேசிப் பிறழ்ந்தவர்கள் போல நடந்து கொள்கிறார்கள். அல்லது பேசாமல் இருந்துப் பிறழ்ந்தவர்களாக மாறி விடுகிறார்கள். கோகிலவாணன் பேசியதில் சில பிறழ்வுகள் இருக்கலாம். அது தன்னைப் போல மற்றவர்கள் யாரும் பிறழ்ந்து விடக் கூடாது என்ற ஆழ்மன பாதிப்பின் அர்த்தம் தெரியாத வெளிப்பாடாகவும் இருக்கக் கூடும்.

நீங்கள் கோகிலவாணன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர் கூறுவது சரிதானா?

அவர் கூறுவதை அப்படியே எடுத்துக் கொள்ளலாமா? பகுதியளவு எடுத்துக் கொள்ளாலமா?

கோகிலவாணன் பேச்சைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாமா?

ஏனிந்த கேள்விகள்? முடிவு என்பதை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...