7 Dec 2023

ரிக்கார்ட் டான்ஸ் (சிறுகதை)

ரிக்கார்ட் டான்ஸ் (சிறுகதை)

-         விகடபாரதி

இந்தக் காலத்தில் யார் பார்ப்பார்கள் என்று ரிக்கார்ட் டான்ஸ் போடுகிறார்கள்?

முச்சந்தியில் அந்த மூன்று சக்கர வண்டி நின்றிருந்ததைப் பார்த்ததும் இந்தக் கேள்விதான் எனக்கு எழுந்தது.

முச்சந்தி என்று சொன்னாலும் அது தற்போது நாற்சந்தி. ஒரு காலத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன்பாக அது முச்சந்தியாகத்தான் இருந்தது. வடக்கே அதிகப் புழக்கம் கிடையாது. அந்தப் பக்கம்தான் பிள்ளையார் கோயிலும் அதற்கு எதிரே பெருமாள் கோயிலும் இருந்தது.

நான் ஊருக்கு வராத காலத்தில் அந்தப் பகுதியில் புழக்கம் இருந்திருக்கலாம். மக்கள் பிள்ளையாரையும் பெருமாளையும் வழிபட அந்தப் பக்கம் போயிருக்கலாம். கோயிலைச் சுற்றிக் குடியிருப்புகள் இல்லை. அந்தப் பகுதியில் குறவர்கள் வந்து தங்குவதும் போவதுமாக இருந்தனர். கோயில்கள் சிதிலமைடையத் தொடங்கிய பிறகு பிள்ளையார் முச்சந்திக்கு மேற்குப் பக்கமாகக் கோயில் கொண்டார். பெருமாளுக்கு அந்தப் பாக்கியம் இல்லாமல் வடக்குப் பகுதியிலேயே ஒரு கீற்றுக் கொட்டகையில் வாசம் கொண்டிருந்தார். வடக்கே அதிகம் புழக்கம் இல்லாமல் முச்சந்தி என்ற பெயர் அப்போது பொருத்தமாக இருந்தது.

மேற்கே விவசாய காலத்தை ஒட்டிப் புழக்கம் அதிகமாவது உண்டு. முச்சந்தியின் மேற்கைத் தாண்டித்தான் வயல் வாய்க்கால்களுக்குப் போய் வர வேண்டும். அதிகப்படியான புழக்கமும் போக்குவரத்தும் என்றால் கிழக்கிலும் தெற்கிலும்தான். முச்சந்தியிலிருந்து தெற்காகப் போனால் மெயின்ரோட்டைப் பிடித்துவிடலாம். கிழக்கில்தான் ஊரின் பல குடியிருப்புகள் இருந்தன. அதனால் கிழக்கிலிருந்து முச்சந்திக்கு வந்து அங்கிருந்து தெற்கே திரும்பி மெயின்ரோட்டிற்குப் போக வேண்டியிருந்ததால் கிழக்கும் தெற்கும்தான் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி. அதுவுமில்லாமல் கிழக்கிலும் தெற்கிலும்தான் தார் சாலை இருந்தது. வடக்கும் மேற்கும் ரொம்ப காலத்திற்கு மண் சாலைகளாகத்தான் இருந்தன. மழை பெய்து விட்டால் களிமண் சகதி நிறைந்த உலையாக அந்தச் சாலையில் போய் திரும்பி வருவது பெரும்பாடாக இருக்கும்.

பிரதம மந்திரியின் கிராம சாலை வந்ததால் இப்போது மேற்கிலும் வடக்கிலும் தார் சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. இப்போது அங்கு குடியிருப்புகள் உண்டாகிக் கொண்டிருக்கின்றன. அங்கிருந்த புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா போட்டுக் கொடுத்ததாலும் குடியிருப்புகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. அந்தக் குடியிருப்புகளைத் தாண்டிப் போனால் ஊராரின் வயல்கள் இருக்கின்றன.

ஊரின் மேற்கிலும் வடக்கிலும் மட்டுமே குடியிருப்புகளைத் தாண்டி இப்போது வயல்கள் இருக்கின்றன. கிழக்கும் தெற்கும் பத்தாண்டுகளுக்கு முன்பே முழுவதுமாக குடியிருப்புகளைத் தாண்டியிருந்த கொஞ்ச நஞ்ச வயல்களையும் இழந்து காணும் இடமெங்கும் வீடுகளாகவும் கடைப்பகுதிகளாகவும் மாறி விட்டன.

இப்போது நான்கு திசைகளிலும் உள்ள சாலைகளிலும் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் அதிகமாகி விட்டன. முச்சந்தி நாற்சந்தியாகி விட்டது என்றாலும் இன்னும் பழமையை மறக்கக் கூடாது என்ற நினைப்பினாலோ என்னவோ முச்சந்தி என்ற பெயரே நிலைத்திருக்கிறது.

முச்சந்தியில் ரிக்கார்ட் டான்ஸ்காரர்கள் கொண்டு வந்து நிறுத்தியிருந்த மூன்று சக்கர வண்டி பார்ப்பதற்கு மீன்பாடி வண்டி போல இருந்தது. அந்த வண்டிக்குக் கூண்டு கட்டப்பட்டிருந்தது. அதற்குள் ஏகப்பட்ட சாமான்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. சாமான்களோடு சாமான்களாக ஒரு குடும்பமும் அடைந்து கொண்டு பிரயாணிக்கும் வகையில் அந்த வண்டி இருந்தது.

நான் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த போது வண்டியிலிருந்து ஒவ்வொரு சாமானாக இறக்கிக் கொண்டிருந்தனர். ஒரு புனல் வடிவிலான ஒலிப்பெருக்கியையும் ஆறு கட்டங்கள் இருக்கும் பெட்டி வடிவிலான ஒலிபெருக்கி இரண்டையும் இறக்கிய பிறகு வண்டியில் நிறைய இடம் இருப்பது தெரிந்தது. இந்தச் சூட்கேஸ் காலத்தில் சில டிரங்க் பெட்டிகள் உள்ளே இருந்தன.

இரண்டு ஆண்கள், ஒரு பெண், ஒரு குழந்தை ஆகியோர் அந்த வண்டியோடு வந்திருந்த மனித ஜீவன்கள். ஆண்களில் ஒருவருக்கு முப்பது சொச்சம் வயதிருக்கலாம். மற்றொருவருக்கு இருபதுக்குள் இருக்கும். பெண்ணுக்கு இருபத்தைந்து இருக்கலாம். குழந்தைக்கு வயது நான்கோ ஐந்தோ இருக்கலாம். அந்தக் குழந்தைக்கென்று ஒரு மூன்று சக்கர வண்டி அந்த மூன்று சக்கர வண்டியிலிருந்து இறங்கியது. குழந்தை உற்சாகமாக அந்த வண்டியில் உட்கார்ந்து மிதித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓட்டிக் கொண்டு விளையாட ஆரம்பித்தது. குழந்தையின் வடிவுக்கும் வண்டியின் அளவுக்கும் ஒத்துப் போகவில்லை. பெரிய குழந்தைக்கான சிறிய வண்டியைப் போல அது இருந்தது. குழந்தை சந்தோஷமாக அந்த வண்டியை வைத்துக் கொண்டு உலகமே மறந்தாற் போல ஓட்டிக் கொண்டிருந்தது.

சாயுங்காலம் ஐந்து மணிக்கு வந்தவர்கள் சாமான் செட்டுகளை இறக்கி ஏற்பாடுகளை செய்து முடித்த போது ஆறு மணியாகியிருந்து. வண்டியை ஒட்டி மினு மினுவென்ற சிகினாக்கள் ஒளிர்கின்ற ஒரு திரையைக் கட்டியிருந்தார்கள். கிழக்கே பார்த்தாற் போல கட்டம் கட்டமாக இருந்த பாக்ஸ் ஒலிப்பெருக்கியை வைத்திருந்தார்கள். மேற்கே நோக்கி கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியைக் கட்டியிருந்தார்கள். தெற்கே வண்டிக்குச் சற்றே தள்ளி ஒரு மூங்கிலை நட்டு அதில் ரெட்டைப்படி அளவுள்ள பெரிய எல்.இ.டி. பல்பைத் தொங்க விட்டிருந்தார்கள்.

ஊரில் இருந்த அத்தனை சிறு பிள்ளைகளும் அவர்களைச் சுற்றி வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தார்கள். என்னைத் தவிர பெரியவர்கள் யாரும் நின்று வேடிக்கை பார்க்கவில்லையே தவிர போகும் போதும் வரும் போதும் ஒரு பார்வை பார்த்தபடி சென்று கொண்டிருந்தனர். ஒரு சிலர் மட்டும் நின்றிருந்த சிறுவர்களிடம் போகிற போக்கில் “என்னடா நடக்குது இங்கே?” என்று விசாரித்தபடி சென்று கொண்டிருந்தனர். “நம்ம ஊரில ரிக்கார்ட் டான்ஸாம். ராத்திரி ஏழு மணிக்காம்.” என்று பிள்ளைகள் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். “நீங்க வருவீங்களா?” என்றும் பதில் சொன்ன கையோடு பிள்ளைகள் கேள்வியையும் கேட்டு வைத்தனர். “அட போங்கடா வேலையத்த பசங்களா!” என்றபடி கேட்டவர்கள் நகரும் வேகத்திலேயே சொல்லிக் கொண்டு போய்க் கொண்டு இருந்தனர். ரொம்ப நேரம் நின்று வேடிக்கை பார்த்து விட்டது போலத் தோன்றியது. வீட்டுப் பக்கம் ஒரு எட்டுப் பார்த்துவிட்டு திரும்ப வருவோம் எனக் கிளம்பினேன்.

டீயைக் குடித்து விட்டு அரை மணி நேரம் கழித்துத் திரும்ப வந்து பார்த்த போது முச்சந்தி வெறிச்சோடி இருந்தது. இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் அந்தக் குழந்தை எங்கே போயினர்? நின்றிருந்த மூன்று சக்கர வண்டி, ஒலிப்பெருக்கிகள், விளக்குகள் எதையும் காணவில்லை. ஒரு மணி நேரமாக மெனக்கெட்டு அமைத்ததை அவ்வளவு சுருக்கமாகக் கட்டிக் கொண்டு வண்டி எங்கே போனது என்று தெரியவில்லை. வேடிக்கைப் பார்த்து நின்று கொண்டிருந்த குழந்தைகளும் கலைந்து போயிருந்தனர்.

கூட்டம் கூடவில்லை என்பதால் கிளம்பி இருப்பார்கள் என்று சிலர் பேசிக் கொண்டார்கள். ஆங்காங்கே ஒவ்வொருவரும் அவரவர் யூகங்களுக்கு ஏற்ப கேள்வி கேட்பதும் ஆச்சரியப்படுவதும் பதில் சொல்வதுமாக இருந்தனர். “அதாங் சின்ன பசங்கள்ல்லாம் நின்னாங்களேப்பா!” என்றார் ஒருவர். “சின்ன பசங்க வெள்ளாமை பண்ணி வெளைச்சல் வூடு வந்து சேருமாப்பா?” என்றார் அதற்கு மற்றொருவர். இதைக் கேட்டதும் இதற்கும் வெள்ளாமைக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றியது. “என்னடா இந்த ஊருக்கு வந்த சோதனெ. வந்த ரிக்கார்ட் டான்ஸ்காரனுவோ போடுறதுக்கு முன்னாடியே துண்டக் காணும் துணியக் காணும்ன்னு ஓடிட்டானுவோ. வெஷம் பிடிச்ச ஊருடா இது. இந்த ஊருக்கு வந்து எவம்டா ரிக்கார்ட் டான்ஸ் போடுவானுவோ?” என்று ஊர் தன்னுடைய சோபையை இழந்து விட்டது போல ஒருவர் பேசத் தொடங்கினார்.

ரிக்கார்ட் டான்ஸ்காரர்கள் ஏன் போனார்கள் என்பதற்கான உண்மையான காரணத்தை விசாரிக்க யாருக்கும் தோன்றவில்லை. அவரவர்கள் தங்கள் மனதில் தோன்றிய கற்பனைக்கேற்றபடி காரணங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்தடுத்த நாட்களிலும் இது பற்றிப் பேசுவதும் எதாவது விளக்கம் சொல்வதுமாக ரோட்டோரம் சிலரைப் பார்க்க முடிந்தது.

இரண்டு நாட்கள் கழித்து சாயுங்காலம் ஐந்து மணி சுமாருக்கு ரிக்கார்ட் டான்ஸ் வண்டி திரும்பி வந்தது. வண்டியைப் பார்த்ததும் பிள்ளைகள் அருகாமையிலும், ஊரில் இருந்த கிழவர்கள் சற்று தள்ளி நின்றபடியும்  வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தனர். அன்று செய்தது போன்ற ஏற்பாடுகளை மீண்டும் செய்தனர்.  அன்று அவர்கள் ஏன் போனார்கள் என்பதற்கான காரணம் தெரிய வந்தது. ஒலிப்பெருக்கிக்கும் பல்புக்கும் அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளில் கரண்ட் கேட்டிருக்கிறார்கள். யாருக்கும் தர மனமில்லை. கரண்ட் இல்லாமல் எப்படி ஆட்டம் போடுவது? தற்போதைய காலத்தில் மின்சாரமும் ஆட்டத்தின் ஒரு பங்கில்லையா? வேறு வழியில்லாமல் அவர்கள் சட்டென்று அவ்வளவு ஏற்பாடுகளையும் அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்.

இப்போது மட்டும் இந்த ஊரில் யாருக்குக் கரண்ட் கொடுக்கும் அளவுக்கு அவ்வளவு உபகார மனது வந்திருக்கிறது என்ற கேள்வி எழும்பி அடங்குவதற்குள் ஹேமா அக்கா கரண்ட் கொடுக்க ஒத்துக் கொண்டதாகப் பதிலும் வந்து விட்டிருந்தது. அன்றைக்கு அவர்கள் வந்திருந்த போது ஹேமா அக்கா பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு ஒரு கல்யாணத்திற்காக வெளியூருக்குப் போயிருந்தது. அன்றைய அவர்களின் துரதிர்ஷ்டத்திற்கு அதுதான் காரணம். இன்றைய அவர்களின் அதிர்ஷ்டத்திற்கு அது பிள்ளைகளோடு திரும்பி வந்திருக்கிறது.

ஹேமா அக்காவின் புருஷன் செத்து நான்கு வருஷங்களாகி விட்டன. இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு அது போராடிக் கொண்டிருக்கிறது. ஹேமா அக்காவுக்குப் புருஷன் இல்லாததால் துணிந்து முடிவெடுத்துக் கரண்டு கொடுக்க சம்மதித்திருக்கிறது. மற்ற வீடுகளில் பெண்டுகள் சட்டென முடிவு எடுத்து விட முடியாது. வேலை முடிந்தோ அல்லது குடித்து விட்டோ வரும் புருஷனிடம் அனுமதி கேட்க வேண்டும். ஒருவேளை அருகில் இருந்த வீடுகளில் வேலைக்கோ குடிக்கவோ போகாமல் இருந்த புருஷர்கள் கரண்ட் கொடுப்பதை விரும்பாமலும் இருந்திருக்கலாம்.

“அதானே ஏற்கனவே போட்டு முடியாமப் போயி மறுபடியும் திரும்பி வந்திருக்கானே. ரொம்ப தெகிரியம்தான் போ. இங்க அப்படி என்ன வசூலாகிடப் போவுது? ஏதோ அந்தக் காலத்துல சனங்கப் பாத்துச்சு. காசு போட்டுச்சு. ஏதோ கொஞ்சம் அப்போ வசூலானுச்சு. இந்தக் காலத்துச் சனங்க இதெல்லாம் பாக்குமா? எல்லாம் டிவிப் பொட்டியில மானாட மயிலாட போட்டா உக்காந்து கொட்டக் கொட்டப் பாக்குமுங்க. இதுங்களுக்குப் புடிக்குமோ? புடிக்காதோ? சனங்க போவுமோ? போவாதோ? போனவன் அப்படியே வேற நல்ல ஊருக்குப் போயிருக்கப்படாதா? இங்க வந்துதான் ஒண்ணுமில்லாமப் போவணுமா?” என்று ஒரு கிழவர் பேச மற்ற கிழவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்று போல ஆறு மணிக்குள் ரிக்கார்ட் டான்ஸ்காரர்கள் ஏற்பாடுகளைப் பக்காவாக அமைத்து விட்டனர். ஏழரைக்கு நிகழ்ச்சித் தொடங்கி விடும் என்று மைக்கில் அறிவித்து விட்டு சினிமா பாட்டுகளை ஒலிக்க விட்டனர்.

ஒவ்வொரு பாட்டுக்கும் இடையிலும் “நேரங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆதரவுகள் தர வேண்டும். சனங்கள் கூட வேண்டும். கும்பல்கள் கும்பல்களாய்த் தாய்மார்கள், பெரியோர்கள், குழந்தைகள் வர வேண்டும். உங்களால் முடிந்த பத்து ரூபாய்கள், இருபது ரூபாய்கள், ஐம்பது ரூபாய்கள், நூறு ரூபாய்கள் வழங்கி எங்கள் வயிற்றுப் பசிக்களைப் போக்க வேண்டும். சரியாக ஏழரை மணிகளுக்கு டான்ஸ்கள் துவங்கி விடும். சனங்கள் தங்கள் சாப்பாடுகளை முடித்து விட்டு வர வேண்டும். ஆதரவுகள்  தர வேண்டும்.” என்ற அறிவிப்பு பன்மை விகுதிகள் மிகுந்ததாய் வந்து கொண்டிருந்தது. அறிவிப்பைப் புரிந்து கொண்டாற் போல குழந்தைகள் ஆங்காங்கே சிதறிப் போய் அவர்களுக்குப் பிடித்தவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தனர். முச்சந்தி அவ்வபோது வெறித்தாற் போல இருந்தது. திடீரென சிறு பிள்ளைகள் கூடி வந்து ஹோ என்று சத்தம் போடுவதும் அவர்கள் போடும் பாட்டுகளுக்கு அவர்களுக்கு முன்பே அங்கே டான்ஸ் வைப்பதுமாகவும் முச்சந்தியின் தோற்றம் ஜாலங்களைக் காட்டுவதாக இருந்தது. மணி ஏழைக் கடக்கத் தொடங்கியதும வெளியூருக்கும் அக்கம் பக்கப் பகுதிகளுக்கும் வேலைக்குச் சென்றவர்கள் இரு சக்கர வண்டிகளில் வந்து கொண்டிருந்தார்கள். வெளியூர் பயணம் போயிருந்தவர்கள் பேருந்திலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார்கள்.

“இதைப் போய் பாக்குறதா? வாணாமா? வூட்டுல இருக்குற ஆம்பளெ வுடுமா? பேசாம அடங்கிக் கெடன்னு சொல்லுமா தெரியலையே. அந்த ஹேமா போண்ணப் பாரு தெகிரியமா கரண்ட் கொடுத்திருக்கே, அந்தத் தெகிரியம் நமக்குல்லாம் வருமா?” என்று வீடுகளுக்கு முன்பாகப் பெண்டுகள் பேசத் தொடங்கினார்கள்.

“இன்னும் இரண்டு பாடல்கள் முடிவுகள் பெற்றதும் டான்ஸ்கள் தொடங்கும். மக்கள்கள் வர வேண்டும். ஆதரவுகள் தர வேண்டும். இதோ ஒலிக்கப் போகும் பாடல்களுக்கு அடுத்ததாக சாமிப் பாடல்கள் ஒன்று ஒலித்து அதன் பின் டான்ஸ்கள் தொடங்கும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.” என்ற அறிவிப்பிற்குப் பின் ஒரு குத்துப்பாடல் ஒலித்தது. அதைத் தொடர்ந்து ‘விநாயகனே வினைகளைத் தீர்ப்பவனே’ என்ற பாடல் ஒலிக்கத் துவங்கியது.

திடீரென தீப்பிடித்தாற் போல பெரியவர்கள் சிலர் போய் சிறுவர்களை வரிசையாகக் கீழே அமர வைத்துக் கொண்டிருந்தார்கள். முச்சந்தி வெளிச்சத்தால் நிறைந்திருந்தது. அவர்களது முச்சக்கர வண்டியை மறைத்தாற் போல திரை மினுமினுப்போடு விரிந்திருந்து.

பெண்கள் தரையில் உட்கார்ந்து கொள்வதற்கேற்ப பழைய பாயோடும், கல்யாணத்திற்கோ காது குத்தலுக்கோ வைத்து நைந்து போன பழைய பிளக்ஸ்களோடும் முச்சந்தியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். வீட்டிலிருந்த ஆண்களிடம் அனுமதி கேட்டுப் போகிறார்களா, கேட்காமல் போகிறார்களா என்று யூகிக்க முடியவில்லை. ஆண்கள் சிலர் கையோடு ப்ளாஸ்டிக் நாற்காலியோடு போய்க் கொண்டிருந்தார்கள்.

“இந்தப் பெண்டு புள்ளைக எதுக்குப் போகுதுங்க? எப்போ பார்த்தாலும் வூடு, டிவிப் போட்டின்னுதானே கெடக்குதுங்க. போயிப் பாத்துட்டு வரட்டும்.” என்ற ஓர் ஆண் குரல் கேட்டது. “ஏன் நீங்க போவலியா?” என்ற எதிர்குரலுக்கு, “இனுமே இந்த வயசுக்கு மேல அதெப் பாத்து ஆவப் போறது என்ன? இந்த விஷக் குளிரு நமக்கு ஒத்துக்காது. ஆசைக்குப் போயி ஒரு நாளைக்குப் பாத்துட்டு வந்துப்புட்டு ஏழு நாளைக்கு மூக்கெ உறிஞ்சிக்கிட்டுக் கிடக்க முடியாது.” என்ற பதில்குரலும் உடனடியாக வந்தது.

பிள்ளையார் கோயில் பக்கம் முப்பது பேருக்கு மேல் குழந்தைகள், பெரியவர்கள் என்று தரையிலும் நாற்காலியிலும் கலந்து கட்டி உட்கார்ந்திருந்தார்கள். வடமேற்கு மூலையில் பத்து பதினைந்து இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள். தென்கிழக்காகப் பழைய பாயும் பழைய பிளக்சும் எடுத்துப் போயிருந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். கிழக்குப் பக்கமாக நாற்காலி போட்டு ஆண்கள் சிலர் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு சிலர் அவர்களின் பின்னால் நின்றிருந்தார்கள். சிலர் வந்து கொண்டிருந்தார்கள். என்னவோ அந்த இடமே மாயமந்திரம் போட்டது போலாகி விட்டது. சனக்கூட்டம் நூறு சொச்சத்தை நெருங்கி விட்டது.

“இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரிக்கார்ட் டான்ஸ்கள் ஆரம்பமாகிறது.” என்ற அறிவிப்புடன் சமீபத்தில் வந்திருந்த ஒரு சினிமா குத்துப்பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. சனங்கள் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள்.  முப்பது வயது மதிக்கத்தக்க அந்த ஆணும் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணும் ஆடத் தொடங்கினார்கள். ஆண் டீசர்ட்டும், ஜீன்ஸ் பேண்டும் போட்டிருந்தார். பெண் டாப்சும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். ரிக்கார்ட் டான்ஸ் ஆடுபவரின் பெண் பிள்ளை மூன்று சக்கர வண்டியில் இங்கும் அங்குமாக ஓட்டிக் கொண்டிருந்தது. சனங்கள் ஆட்டத்தையும் அந்தக் குழந்தையின் ஓட்டத்தையும் சேர்த்தே ரசித்தார்கள். “அட என்னமா ஆடுறாம்ப்பா அந்தப் பயெ. அந்தப் பொம்பளயும் பிரமாதமா ஆடுதேப்பா. அந்தக் குழந்தையத்தான் பாரேம். என்ன அழகா இருக்கு.” என்றார் ஆண்கள் கூட்டத்திலிருந்து ஒருவர்.

முதல் டான்ஸ் முடிந்ததும் “உங்கள் ஆதரவுக்கரங்களை நீட்டி எங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். எங்கள் இரவு உணவுக்குத் தேவையான பணங்களை உங்களை நம்பித்தான் நாங்கள் வந்துள்ளோம்.” என்று டான்ஸ் ஆடிய அந்த ஆண் மைக்கில் பேசினார். ஒருவர் எழுந்து போய் ஐம்பது ரூபாய் கொடுத்தார். அவரின் பெயரைக் கேட்டுக் கொண்ட ரிக்கார்ட் டான்ஸ்காரர், “நமது கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் அண்ணா ரூபாய் ஐம்பத்து ஒன்று கொடுத்து ஆதரித்திருக்கிறார். அவருக்கு குழுவினர்கள் சார்பாக நன்றிகள். நன்றிகள் கலந்த வணக்கங்கள். அவருக்கு ஜோராகக் கைத்தட்டுங்கள்.” என்று அவர் தந்த ஐம்பதை ஐம்பத்தொன்றாக்கிக் கூறினார். கூட்டம் ஜோராக ஆர்ப்பரித்துக் கைதட்டியது. அடுத்தடுத்து சிலர் ஐம்பது, இருபது எனக் கொடுக்க ஆரம்பித்தார்கள். பணம் கொடுக்கின்ற ஒவ்வொருவரின் பெயரையும் அறிவிப்பு செய்து கைதட்ட செய்தார் ரிக்கார்ட் டான்ஸ்காரர். பணம் கொடுப்பது குறையத் தொடங்கியதும் அடுத்த பாட்டுக்கு ஆடைகளை மாற்றி தயார் ஆனார்கள் அந்த டான்ஸ்கார ஆணும் பெண்ணும்.

அடுத்ததாக ஒரு கிராமிய பாடல் ஒலிக்க ஆட ஆரம்பித்தார்கள். ஆண் வேட்டிச் சட்டையிலும் அந்தப் பெண் கெண்டைக்காலுக்குக் மேலே கட்டிய சேலையோடும் ஆட சனங்களுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. பாடல் முடியும் வரை கைதட்டிக் கொண்டே இருந்தார்கள். கிராமிய நடனம் முடிவதற்குள் பணத்தைக் கொடுக்க மக்கள் வரிசையில் நின்றார்கள். முதன்முறையாக ஒருவர் நூறு ரூபாய் கொடுத்ததைப் பார்த்ததும், “நமது கிராமத்தின் உயர்ந்த உள்ளம், கலைகளின் காவல் தெய்வம் தியாகராமன் நமது டான்ஸ் பாட்டைப் பாராட்டி நூற்று ஒன்றுகள் ஆம் சனங்களே நூற்று ஒன்றுகள் வழங்கியிருக்கிறார். அவருக்கு நன்றிகள். பாராட்டி ஜோராகக் கைதட்டுங்கள். அவருக்கு குழுவினர்கள் சார்பாக நன்றிகள். நன்றிகள் கலந்த வணக்கங்கள்.” என்றார். வரிசையில் நின்றோர் அடுத்தடுத்துப் பெயரைச் சொல்லிப் பணம் கொடுப்பதும், பணம் கொடுத்தவருக்கு அறிவிப்பு செய்வதும் தொடர்ந்தது. பணம் கொடுப்பது நின்றதும் ஆடைகளை மாற்றிக் கொண்டு அடுத்தப் பாடலுக்குத் தயாரானார்கள்.

அடுத்து எம்.ஜி.ஆர். பாடல் ஒலித்து அதற்கான ஆட்டம் ஆரம்பமானது. ஆண் எம்.ஜி.ஆர். வேஷத்தோடும் பெண் சரோஜாதேவி வேஷத்தோடும் ஆடிக் கொண்டிருந்தனர். சனங்களின் சந்தோஷம் கரை புரண்டோடியது என்று சொல்ல வேண்டும். ஒருவர் பாடல் முடிந்து பணம் கொடுக்க காத்திராமல் எம்.ஜி.ஆராக ஆடிய டான்ஸ்காரரின் சட்டைப் பையில் நூறு ரூபாய் பணத்தை ஓர் ஊக்கைக் கொண்டு குத்தினார். அதைப் பார்த்ததும் மேலும் சிலர் ஊக்கோடு ஊக்கமாக ஓடிப் போய் பணத்தைக் குத்த ஆரம்பித்தனர். ஆடிக் கொண்டிருந்தவருக்குத் தாங்க முடியாத குசி. பாடல் முடிந்ததும் யார்யாரெல்லாம் பணத்தைக் குத்தினார்கள் என்பதைக் கேட்டு அவர்களுக்கு எல்லாமல் மறவாமல் நன்றி அறிவிப்பைச் செய்தார்.

அடுத்தடுத்தும் மக்கள் எம்.ஜி.ஆர். பாடலாகக் கேட்டதால் தொடர்ச்சியாக நான்கு பாடல்கள் எம்.ஜி.ஆர். பாடல்களாக ஒலித்தன. சனங்கள் ஓடிப் போய் பணத்தைக் குத்தி விடுவதில் அதிக ஆர்வம் காட்டினர். பணம்கொடுத்தோருக்கெல்லாம் அவர் மறவாமல் நன்றி சொன்னது மக்களை ஆர்வமாகப் பணம் கொடுக்கத் தூண்டியது. ஐம்பதும் நூறுமாகப் பணம் சேர்ந்து கொண்டே இருந்தது. கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு ரூபாய் என்பதில் அவர் அழுத்தம் கொடுத்து சொன்ன விதமும் ஜோராக என்பதைச் சொல்லும் போது அழுத்தம் கொடுத்த விதமும் தனிக்கவர்ச்சியைத் தந்திருந்தது.

பழங்காலத்துப் பாட்டு, தற்காலத்துப் பாட்டு என்று ஆட்டம் கலந்து கட்டி நடந்து கொண்டே இருந்தது. சனங்கள் ரொம்ப ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்று சக்கர வண்டியில் சுற்றிக் கொண்டிருந்த குழந்தைக்கு ஒரு கட்டத்தில் அலுத்துப் போயிருந்தது. அது மூன்று சக்கர வண்டியிலிருந்து தடுமாறி கவிழ்ந்தது. பார்த்துக் கொண்டிருந்த சனங்களில் ஒரு பெண் ஓடிப் போய்த் தூக்கிக் கொண்டார். “அப்பா போதும்ப்பா. நிறுத்துப்பா. கௌம்புவோம்ப்பா.” என்றது அந்தக் குழந்தை.

“பாரேன் அந்தக் கொழந்தெ சொல்றது எவ்வளவு அழகா இருக்கு.” என்று ஒருவர் சொல்ல அதையும் ரசித்தது கூட்டம்.

இன்னும் இரண்டு பாட்டுதான் என்பது போல ஆடிக் கொண்டே விரலைக் காட்டினார் ரிக்கார்ட் டான்ஸ்காரர்.

“ம்ம்… வேண்டாம்ப்பா… வாப்பா…” என்று அடம் பிடிப்பது போல அழ ஆரம்பித்தது குழந்தை.

“ரெண்டே பாட்டுதான்” என்று அமுங்கிய குரலில் சொன்னார் டான்ஸ்காரர் ஆடியபடியே. பெண்ணும் ஆடியபடியே கெஞ்சும் முகபாவத்தோடு குழந்தையைச் சமாதானப்படுத்துவது போல சைகைகளைச் செய்து பார்த்தார்.

“உக்காந்து பாக்குற இவுங்க ஆடட்டும். நீ எங்கூட வாப்பா.” என்றது குழந்தை கண்களைத் துடைத்துக் கொண்டே கீச்சுக் குரலில் சத்தமாக.

குழந்தையின் குரலைக் கேட்டவர்கள் ஒரு கனம் அதிர்ச்சியில் உறைந்து போனது போலக் காணப்பட்டார்கள். அதற்கு மேல் என்ன செய்வதென்று புரியாமல் குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது.

*****

No comments:

Post a Comment

மனக்கண்ணாடியில் பார்த்தல்

மனக்கண்ணாடியில் பார்த்தல் நீ மிகுந்த மனக்கவலையை உருவாக்குகிறாய் எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரியவில்லை இருந்தாலும் எப்படி எதிர்கொண்...