சோபகிருது காலத்து வேதம்
இந்த மண்ணிலிருந்து ஒரு செடி
கிளம்பும்.
அது எங்கெங்கும் எளிதாக வளரும்.
அதன் காய்கள் பசுமையாகவும்
கனிகள் சிவப்பாகவும் இருக்கும்.
அக்கனிகளின் புளிப்பும் வாசமும்
சமையலைக் கட்டிப் போடும்.
தொக்கெனக் கருதி அது மலிவாகக்
கருதப்படும்.
ஒரு நாள் ஐந்தும் பத்துக்கும்
விற்ற அதன் விலை நூறுக்கும் இருநூறுக்கும் உயரும்.
அந்த ஆபூர்வ செடியை விளைவித்தவர்கள்
பணம் படைத்தவர்கள் ஆவார்கள்.
சிவப்பான அந்தக் கனிகளை விற்பவர்கள்
கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.
தங்கத்தையும் வைரத்தையும்
கடத்தியவர்கள்
அந்தக் கனிகளடங்கிய வாகனத்தைக்
கடத்தத் தொடங்குவார்கள்.
அது என்ன செடி?
அது என்ன கனி?
என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு
அது என்ன தக்காளிச் செடியா என்றால் அது தக்காளிச் செடிதான்.
கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு
அந்தக் கனி என்ன தக்காளியா என்றால் அது தக்காளியேதான்.
சக்தி படைத்த காளியைக் கும்பிடுவதும்
தக்காளியை விளைவிப்பதும்
ஒன்றுதான்.
ஓம் காளியே நமஹ!
ஓம் தக்காளியே நமஹ!
*****
யுகங்கள் எப்போதும் அதற்கான
கனிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டே இருக்கின்றன.
அப்போதையத் தேர்வு ஆப்பிளோ,
ஸ்ட்ராபெர்ரியோ
இப்போதையத் தேர்வு தக்காளி
அன்று இரண்டு ரூபாய்க்கு
விற்ற தக்காளியைப் பார்த்து
ஜகஜ்ஜால புன்னகை புரிந்தது
இருநூறு ரூபாய்க்கு விற்ற ஆப்பிள்
இப்போது ஆப்பிளின் முகம்
சுளுக்கிக் கொண்டது
தக்காளியின் உயரம் பழக்கடைகளின்
செம்மாந்த உயரத்தில் இருக்கிறது
கலியுகத்தில் நடக்கக் கூடாததெல்லாம்
நடக்கும் என்பது அசரீரியின் வாக்கு
அசரீரியின் வாக்கு பலித்துக்
கொண்டு இருக்கிறது
தக்காளி வண்டிக்குப் பின்
பாதுகாப்பு வண்டிகள் வரலாம்
கள்ளிப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட
அவை
கோத்ரேஜ்ஜின் வலுவான பெட்டகங்களில்
அடைக்கப்படலாம்
குளிர்சாதனப் பெட்டியைத்
திறந்து எளிதாக எடுத்துத் தின்ற
ஒரு தக்காளிக் கனியை எட்டிப்
பார்த்தால்
பெற்றெடுத்த தாய் முறைக்கிறாள்
வாழ்க்கைத் துணைவர் எரிந்து
விழுகிறார்
தக்காளிக் கனியை எலிப்பொறியில்
வைத்த தாத்தா
ஆப்பிள்கனியை வைக்கிறார்
அரசியல்வாதியின் மீது அழுகிய
தக்காளியை வீச எடுத்துச் சென்றவர்
சட்டினிக்கு ஆகுமே என்று
தக்காளியோடு மீள்கிறார்
கணவரின் சமயோசிதம் எண்ணி
பத்தினிப் பெண்டிர்
கடிமனை வாயிலில் நின்று மங்கலம்
பாடிப் புகழ்கிறார்.
*****
பி.டி.உஷாவை விட வேகமாய்
ஓடியிருக்கிறாய்
உசேன் போல்டைப் பின் தொடர
வைத்திருக்கிறாய்
சச்சின் டிராவிட் கோலிகள்
திணறும்
இரட்டைச் சதத்தை அநாயமாக
அடித்துத் துவைத்திருக்கிறாய்
மாரடோனா மெர்சி போடாத கோல்களை
சாம்ராஸ் பெடரர் நடால் ஜோக்கோவிச்
பெறாத பட்டங்களை
அப்பல்லோ சந்திராயன் பயணிக்காத
தூரங்களை
சூப்பர் சானிக் போகாத வேகங்களை
ரஜினி கமல் அமிதாப் ஜாக்சிசான்
ஸ்பீல்பெர்க் கொடுக்காத வசூல்களை
எல்லாம் சாதித்திருக்கிறாய்
உன்னை வணங்குவதால் நான் உயர்ந்தவராகிறேன்
விலை உயர்ந்த பொருளாகிறேன்
என்றும் எம்முடன் இருப்பாயாக
எம் புகழையும் மதிப்பையும்
செல்வத்தையும் உயர்த்துவாயாக
தக்காளி நீயிருக்க பயமேது
அந்நியச் செலவாணியாக நீயாகும்
காலம் அருகிலிருக்கையில்
*****
No comments:
Post a Comment