30 Oct 2023

ஆறு நாள் அபேஸ் திருநாள்

ஊர்வன

கணினியைக் கொண்டு வந்து வைத்தேன்

எறும்புகள் வந்தன

கணினியை எடுத்து விட்டேன்

எறும்புகளைக் காணவில்லை

*****

 

ஆறு நாள் அபேஸ் திருநாள்

திங்கள் கிழமை பரவாயில்லை

செவ்வாயும் சுமார் என்றாலும் பரவாயில்லை

பொன் கிடைத்தாதும் புதன் கிடைக்காது என்பார்கள்

குருவுக்கு உகந்த வியாழனும் இருக்கட்டும்

வெள்ளிக்கு விஷேசங்கள்

அதுவும் இருந்து விட்டுப் போகட்டும்

சனி பெருக்கு என்பதால் அதுவும்தானே வேண்டும்

ஞாயிற்றுக் கிழமை வேண்டாம்

ஆறு நாள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்தை

ஒரே நாளில் அபேஸ் பண்ணி விடும்

ஞாயிறு மட்டும் வேண்டாம்

ஒரு நாள் ஓய்வு போனால் போகிறது

யாருக்கு வேண்டும் ஞாயிறு

*****

 

மலை உச்சியிலிருந்து விழும் உற்சாகம்

என்னவோ அந்த நேரத்தில் தோன்றுகிற பரவசம்

எப்படியோ செத்து விடுகிறது

சாகடித்தது யார்

நீங்களாக இருக்கலாம்

அவர்களாக இருக்கலாம்

அவையாக இருக்கலாம்

நானாகவும் இருக்கலாம்

எல்லாருமாகவும் இருக்கலாம்

ஆளுக்குக் கொஞ்சம் பங்கும் இருக்கலாம்

அப்படி இல்லாமலும் இருக்கலாம்

*****

26 Oct 2023

தி.ஜானகிராமனின் ‘உயிர்த்தேன்’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

தி.ஜானகிராமனின் ‘உயிர்த்தேன்’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

1966 ஆம் காலக்கட்டத்தில் ஆனந்த விகடனில் தொடராக வந்த தி. ஜானகிராமனின் நாவல் ‘உயிர்த்தேன்’.

1967 இல் நூலாக இந்த நாவல் முதல் பதிப்பு கண்டிருக்கிறது.

சென்னைப் பட்டணத்தில் இருக்கும் ஒருவர் கிராமத்திற்கு வந்து அமைதியாக வாழ நினைத்து அப்படியே கிராமத்தையும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு போனால் எப்படியிருக்கும் என்பதுதான் நாவலின் மையம்.

கிராம மேம்பாடு, கோயில் மறுநிர்மாணம், கிராம மக்களின் ஒற்றுமை, விவசாய முன்னேற்றம் என்று ஓர் லட்சியவாத நாவலாக தி.ஜா. உயிர்த்தேனைப் படைத்துள்ளார். இத்தகைய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பெண்கள் தலைமையாகவும் துணையாகவும் நின்றால் எப்படி இருக்கும் என்று தி.ஜா. புனைவாக்கிப் பார்க்கிறார். அந்த அளவுக்குப் பெண்களை ஆண்களின் மனம் ஏற்றுக் கொள்ளுமா? அப்படியே மனதளவில் ஏற்றுக் கொண்டாலும் செயல் அளவில் துணை நிற்குமா? அதுவும் 1960களில் என்பன போன்ற கேள்விகள் எழுந்தாலும் அவற்றைக் கழித்து விட்டுப் பார்த்தால் தி.ஜா. காட்டும் கிராமம் ரம்மியமானது, ரசனைக்குள் இழுத்துச் செல்லக் கூடியது.

இந்த நாவல் நா. பார்த்தசாரதியின் நாவலா அல்லது தி. ஜானகிராமனின் நாவலா என்று தோற்ற மயக்கம் தரும் இடத்தை மாற்றி அமைப்பது பெண்களின் மனதை விளக்கிக் காட்டும் தி.ஜா.வின் இடம்தான்.

பெரும்பாலான தி.ஜா.வின் நாவல்கள் கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி இடம் மாறுபவை. இந்த நாவல்தான் நகரத்திலிருந்து கிராமத்தை நோக்கி இடம் மாறுகிறது. கட்டுசெட்டாக நகர்ந்து ஓர் லட்சியவாத முடிவை அடைவதும் இந்த நாவலில் தி.ஜா. செய்திருக்கும் மாற்றங்கள் எனலாம். இருந்தாலும் பெண் மனதின் ஆழத்தைத் தேடி அவர் எழுத்து இந்த நாவலிலும் பயணித்துக் கொண்டே இருக்கிறது.

பெண்களின் அழகும் அன்பும் ஆண்களை எந்தத் தளத்திற்கும் கொண்டு செல்லும் என்பதுதான் நாவலின் அடிநாதம். அந்த அடிநாதத்தைச் செங்கம்மா, அனுசூயா ஆகிய இரண்டு பெண்களின் வழியே நின்று ஒலிக்கிறார் தி.ஜா.

இந்த இரண்டு பெண்களையும் ஒரு தெய்வீகத் தன்மையுடன் படைக்கிறார். சாதாரண மனுஷிகளாக இருக்கும் இந்தப் பெண்களை உள்வாங்கிக் கொண்டு தெய்வீகத் தன்மை கொண்டவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ளும் ஆண்கள் மற்றும் இந்தப் பெண்களின் அழகையும் அன்பையும் எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்கள் என இரண்டு விதமான ஆண்களையும் இந்த நாவலில் தி.ஜா. காட்டுகிறார்.

சென்னையிலிருந்து தனது தந்தை வாழ விரும்பிய கிராமத்து வாழ்க்கையின் ஏக்கத்தால் ஆறுகட்டி கிராமத்திற்கு வருகிறார் பூவராகன். மாயவரம், ஆடுதுறை, கடலங்குடி ஆகிய ஊர்களுக்கு அருகாமையில் உள்ள ஊராக ஆறுகட்டியைக் காட்டுகிறார் தி.ஜா.

ஆறுகட்டியில் சிதைந்து கொண்டிருக்கும் கிராம மக்களின் ஒற்றுமையையும் சிதிலமடைந்து கொண்டிருக்கிற பெருமாள் கோயிலையும் பூவராகன் மறுநிர்மாணம் செய்கிறார். இதற்கெல்லாம் கர்த்தாவாகச் செங்கம்மாவைப் படைக்கிறார்.

தெற்கு ஜில்லாவிலிருந்து தஞ்சை ஜில்லாவுக்கு வருகின்ற பாத்திரமாகச் செங்கம்மா அமைந்தாலும் அப்பாத்திரத்தின் பாஷைகளைத் தஞ்சை ஜில்லாவுக்குரியதாகவே தி.ஜா. கட்டமைத்திருக்கிறார். பார்ப்போரையெல்லாம் அன்பெனும் பாஷையால் தழுவிக் கொள்ளும் அப்பாத்திரம் தஞ்சை ஜில்லாவுக்கு வந்தப் பிறகு தன்னுடைய தெற்கத்திப் பாஷையையும் தஞ்சை ஜில்லாவுக்கு உரியதாக மாற்றிக் கொண்டிருக்கலாம்.

செங்கம்மாவின் மீது மையல் கொண்டு திரியும் பழனிவேலு நாவலின் எதிர்மறைப் பாத்திரம். செங்கம்மாவின் தெய்வீக அழகும் அறிவும் பூவராகனைக் கிராம வளர்ச்சிக்கு முன்னெடுத்துக் கொண்டு போகிறது என்றால் பழனிவேலுவை அதற்கு எதிர்திசையில் கொண்டு போய் நிறுத்துகிறது. முடிவில் பழனிவேலு செங்கம்மாவின் ஆதுரத்தை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக நாவல் முடிகிறது.

பூவராகனுக்குக் கிராமத்துத் தேவதை போல செங்கம்மா என்றால் நகரத்துத் தேவதை போல வாய்ப்பவர் அனுசூயா. அனுசூயாவின் உயிர் நேயம் பூவராகனுக்கு ஆதர்ஷமாகி அதுவே செங்கம்மாவின் வழியாக நிறைந்து வழிவதாகவும் தி.ஜா. காட்டுகிறார்.

அனுசூயாவின் அழகையும் அன்பையும் எதிர்கொள்ள முடியாமல் அவளது இள வயதில் நிகழும் பக்கத்து வீட்டு ஆணின் தற்கொலை அவளை மணம் செய்யாத தனித்த வாழ்க்கையை வாழத் தூண்டுகிறது.

திருமணம் செய்து கொண்ட அனுசூயாதான் செங்கம்மாவா, திருமணம் செய்து கொள்ளாத செங்கம்மாதான் அனுசூயாவா என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு அவ்விரு பாத்திரங்களையும் ஒன்றில் இன்னொன்று திளைத்து நிறைவுறுவதைப் போல நாவலை முடித்திருக்கிறார் தி.ஜா.

நாவலில் வரும் நரசிம்மன், கார்வார் கணேசம் பிள்ளை, சிற்பி ஆமருவி, பூவராகனின் மனைவி ரங்கநாயகி, பாசுர ஓதுவார் வரது என்று ஒவ்வொரு பாத்திரமும் வெவ்வேறு விதமாக மனதில் நிறைபவர்கள்.

கிராம விவசாயத்தை மேம்பாடு செய்ய பூவராகன் அழைத்து வரும் ஓய்வு பெற்ற அதிகாரி பொன்னுச்சாமியும் முக்கியமானவர். இந்தியாவின் பசுமைப் புரட்சி எனும் விவசாயப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தை நாவல் சித்தரிக்கிறது. நாவலில் குறிப்பிடும் சம்பவங்களைச் சற்றேறக்குறைய ஒப்பிட்டுப் பார்த்தால் விவசாயிகளிடமிருந்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் கறாராகக் கணக்கெடுத்ததும், விவசாய உற்பத்தியை அதிகரிக்க ரசாயன உரங்களைத் திணித்ததுமான அந்தக் கால கட்டத்துக் கிராமத்தைத்தான் தி.ஜா. நாவலில் கொண்டு வருகிறார். கிராமங்களில் நிலைபெற்றிருந்த கோயில் மானியம், குருக்கள் மான்யம், தலையாரி மான்யம், பட்டா மான்யம் போன்றவற்றையும் சுட்டுகிறார்.

நிறைவாக மனித மனங்களின் சிக்கல்களையும் முடிச்சுகளையும் விளக்கியும் அவிழ்த்தும் ஓர் ஆன்மிக தளத்தில் நாவலை நிறைவு செய்கிறார்.

எப்படி இருந்த கிராமம் இப்படி மாறி விட்டதே என்று நினைக்கும்படி ஒரு கிராமம் உங்கள் கற்பனையில் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு கிராமத்தையும் கிராமத்து மனிதர்களையும்தான் ‘உயிர்த்தேன்’ நாவலில் படம் பிடித்துக் காட்டுகிறார் தி.ஜானகிராமன்.

இந்த நாவல் தி.ஜா.வின் கிராமம் குறித்த ஒரு கனவாகவும் இருக்கலாம். அந்தக் கனவில் ஆங்காங்கே கொஞ்சம் எதார்த்தமும் கலந்து இருக்கிறது எனலாம். வாசிப்பின் அனுபவத்திலிருந்து கூறுமிடத்து, பெண்களின் அகத்திலிருந்து பெருகிவரும் பேரன்பை உயிர்த்தேனாக உருவகித்து நாவலை வாசிப்போரின் மனதுகளில் வழிய விடுகிறார் தி.ஜா.

*****

23 Oct 2023

எதற்கும் ஒரு வயது இருக்கிறது & 1/4

எதற்கும் ஒரு வயது இருக்கிறது

+2 தேர்வு எத்தனை வகையான மனிதர்களை உருவாக்கி விடுகிறது.

தேர்வு முடிவைப் பார்த்து தற்கொலை செய்து கொண்ட தலைமுறை மாறியிருக்கிறது. அதை நீட் தேர்வு இப்போது பிடுங்கி வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை பனிரெண்டாம் முறையாக எங்கள் மாமா ஒருவர் எழுதிக் கொண்டிருக்கிறார்.

தேர்வை எழுதி முடித்த ஒவ்வொரு முறையும் அவ்வளவு நம்பிக்கை அவர் முகத்தில் பளிச்சிடும். இதற்கென +2 டால்கம் மற்றும் சான்டல் கலந்த பவுடரைப் பூசிக் கொள்வாரோ என்னவோ?

இன்னும் பனிரெண்டு முறை எழுதச் சொன்னாலும் எழுதுவார் போலிருக்கிறது.

எப்படி மாமா இப்படி ஒரு தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்றால், எல்லாம் அனுபவம்தான் மாப்ளே என்கிறார்.

இந்த அனுபவம்தான் எனக்குப் பிடித்திருக்கிறது.

அதனால்தான் சொல்கிறேன், சின்ன வயதில், 17 அல்லது 18 வயதுகளில் எல்லாம் +2 தேர்வை எழுத அனுமதிக்கக் கூடாது. அனுபவமில்லாத வயது. எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக் கூடாது? என்பது குறித்த புரிதல் இல்லாத வயது.

ஓர் ஓட்டைப் போட முடிவு செய்வதற்கு 18 வயது ஆக வேண்டும் எனும் போது அதற்குக் கம்மியான வயதில் +2வையோ நீட்டையோ எழுத வைத்தால் என்னாவது? முடிவை எப்படி முடிவு செய்துகொள்ள வேண்டும் என்ற புரியாத வயதில் என்ன முடிவை வேண்டுமானாலும் பண்ணிக் கொள்ளலாம் இல்லையா?

எந்தத் தேர்வாக இருந்தால் என்ன? 18க்கு மேல் எழுதிக் கொள்ளட்டும்.

மாமா 17, 18 வயதுகளில் சந்தோஷமாக +2க்கு மட்டம் போட்டு விட்டு மகிழ்ச்சி மகா சமுத்திரத்திலும் குஷால் பெருங்கடலிலும் துள்ளி விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறந்து 27 வயதில்தான் அவருக்கு +2 குறித்த பிரக்ஞை வந்திருக்கிறது. இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார். இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் எழுதுவார். முடிவு எப்படி இருந்தால் என்ன? முயற்சிக்கேது முடிவு?

*****

 

நான்கில் ஒன்று

எங்கே பார்த்தாலும் குப்பைப் போல நான்கு விசயங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. அதை அகற்றுவதா வேண்டாமா என்ற குழப்பம். கடைசியில் அது அங்கேயே இருந்து கொண்டிருக்கிறது.

ஒரு மனிதருக்கு நேர்மறைப் பார்வை வேண்டாமா? உலகில் எவ்வளவோ இருக்கிறது. போயும் போய் பார்வை ஏன் குப்பை மீது பட வேண்டும்? அதுவும் அந்த நான்கு விசயங்கள் மீது? நான் நான்கு என்று சொல்லி விட்டாலும் குப்பைகள் நாலாயிரம், நாற்பதினாயிரம், நான்கு லட்சம், நான்கு கோடிக்கு மேல் இருக்கும். என் எதிர்மறைப் பார்வையில் படும் குப்பைகள் நான்கோடு நின்று விடுவது நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியமாகவோ பாவமாகவோ இருக்கக் கூடும்.

யூனியன் ஜாக் கொடி ஓர் உதாரணம். அது எவ்வளவோ நாட்கள் நிறுவனத்தின் நிலைப்பேழையில் இருந்தது. அதை அகற்றுவது என்றால் மேலதிகாரிக்குக் கடிதம் போட்டு கடிதம் கிடைத்து அதற்கு ஒரு பதிவேட்டைப் பராமரித்து அப்புறப்படுத்த வேண்டும். இந்தச் சங்கதிகள் நடந்தேற இருநூறு முந்நூறு ஆண்டுகள் கூட ஆகலாம். இந்த அப்புறப்படுத்தலை நினைத்த போது ஆங்கிலேய அந்நியர்களை இந்தியாவை விட்டு அப்புறப்படுத்தியது எவ்வளவு பெரிய காரியம்? அதற்குப் பேசாமல் இருந்து விட்டால் அந்தக் கொடி நைந்து புத்தகப் பூச்சிகள் தின்று ஒரு நாள் தானாகவே காணாமல் போய் விடும். அது நடப்பதற்கு சில பல பத்தாண்டுகள் போதும். நூறு இருநூறு ஆண்டுகள் தேவை இருக்காது.

எப்போதுதான் இந்தக் குப்பைப் போல இருக்கும் யூனியன் ஜோக் அகலும் என்று நான் தினம் பார்த்துக் கொண்டும் யோசித்துக் கொண்டும் இருந்தேன்.

புதிதாக ஒரு மேலதிகாரி பதவியேற்றுக் கொண்டு வந்தார். நிறுவனத்தை நவீனப்படுத்துகிறேன் என்று எல்லாவற்றையும் டொக்டொக்கென்று கை விரல்களையும் டக்டக்கென்று கைகளையும் அலைய விடும் கணினி, தட்டச்சுப் பலகை, சுண்டெலி (மௌஸ்) என்று தாள்களைக் கண்ணிலிருந்து காணடித்து விட்டார். அவரும் அலைபேசி வைத்து நோண்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டார். நோண்டிய நோண்டலில் குழிப்புண் காணாதது மிச்சம்.

ஒரு நாள் எதேச்சையாக நிலைப்பேழையைத் திறந்தவர் கண்ணில் யூனியன் ஜாக் கொடி பட்டிருக்கிறது. இதென்ன கருமம் பிடித்த கந்தைத்துணி என்று குப்பைத் தொட்டியில் கடாசி விட்டார்.

குப்பைத்தொட்டியைச் சுத்தம் செய்ய வரும் பாவாயிக் கிழவி இதென்ன இப்படி இருக்கிறது என்று யோசித்துப் பேரனிடமோ பேத்தியிடமோ கொடுத்தால் விளையாடும் என்று எடுத்துக் கொண்டு போயிருக்கிறது.

அந்தப் பிள்ளைகள் இழுத்த இழுப்பிற்கு இரண்டே நிமிஷத்தில் டர் டர், சர் சர், பர் பர். அவ்வளவுதான் அது போன இடம் தெரியாமல் போய் விட்டது.

குப்பைப் போல இருந்த நான்கில் ஒன்று குறைந்திருக்கிறது. இன்னும் மூன்று இருக்கிறதே! அதென்ன என்கிறீர்களா? வேண்டாம் விடுங்கள். இதென்ன எப்போதும் குப்பைப் பற்றிய பேச்சு என்று யாராவது நினைத்துக் கொண்டு விடப் போகிறார்கள். எப்போதாவது நேரம் கிடைத்தால் சொல்கிறேன். இல்லையென்றால் அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். எல்லா குப்பைகள் பற்றியும் சொல்வதற்கு அந்தக் குப்பைகளுக்கு ஓர் அதிர்ஷ்டமும் வேண்டியிருக்கிறது. பார்ப்போம் மற்ற மூன்று குப்பைகளுக்கும் அந்த அதிர்ஷடம் இருக்கிறதா என்று?

*****

18 Oct 2023

தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

தி.ஜானகிராமனின் பிரசித்திப் பெற்ற நாவல்களில் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய இரு நாவல்களும் முதலிரண்டு இடங்களில் இருப்பவை.

தி.ஜா.வின் நாவல்களில் நான் முதன் முதலாகப் படித்தது ‘அம்மா வந்தாள்’ நாவலைத்தான். அந்த வாசிப்பு என்னுடைய பத்தொன்பது அல்லது இருபது வயது கால கட்டத்திற்குள் நான் ஆசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நிகழ்ந்தது. என்னுடைய தமிழாசிரியர் தி.செல்லையா இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் வாசிக்க வேண்டிய நூல்களின் கட்டாயப் பட்டியலில் தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலை முக்கிய இடத்தில் வைத்திருந்தார். அவர் தந்த பட்டியலில் இருந்தது என்பதற்காக வாசிக்கத் துவங்கி தி.ஜா. என்னை முழுமையாக ஆக்கிரமித்த நாவல் என்று இந்த நாவலைக் குறிப்பிட விழைகிறேன்.

சமீபமாக தி.ஜா.வின் எழுத்துகளை மீண்டும் வாசித்த போது ‘அம்மா வந்தாள்’ நாவலையும் வாசித்தேன். எந்த இடத்திலும் சலிப்போ, அலுப்போ ஏற்படவில்லை. அன்று வாசித்த போது எத்தனை புதுமையாக இருந்ததோ அதே அளவுக்கு புதுமையில் எவ்வித குழைவும் இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போது புதுப்புது வாசிப்பனுவத்தைத் தரும் நாவலாக எனக்கு ‘அம்மா வந்தாள்’ இன்றும் இருந்து கொண்டு இருக்கிறது.

நாவலின் மையம் என்று பார்த்தால் குடும்ப வாழ்க்கையின் ஒழுக்கம் தவறும் ஒரு தாய் மகன் மூலமாகப் பிராயச்சித்தம் அடைய நினைத்தால் எப்படி இருக்கும் என்பதுதான்.

அலங்காரத்தம்மாள் ஒழுக்கம் தவறுவதை யாரும் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இல்லை. ஒரு கட்டத்தில் அது தவறு எனப் புலப்படும் போது அதைப் பாவமாகக் கருதி மகன் அப்புவின் மூலமாகப் பிராயச்சித்தம் தேட நினைக்கிறாள். அப்புவை வேத சாஸ்திரத்தில் ரிஷியைப் போலாக்கி அந்த ரிஷியின் காலில் விழுந்து பாவத்தைக் கழுவுவது அலங்காரத்தம்மாளின் மனதில் தோன்றும் பிராயச்சித்தம். அந்தப் பிராயச்சித்தம் நிறைவேறியதா, இல்லையா என்பதைச் சொல்வதே ‘அம்மா வந்தாள்’ என்ற நாவல்.

தி.ஜா.வின் நாவல்களில் ஒரு சிறுகதையைப் போல விரியும் நாவல் இது. ஒரு சிறுகதைக்கு உண்டான அத்தனை முகாந்திரத்தோடும் அடுத்தடுத்த திருப்பங்களோடு விரியும் ஆகப் பெரிய சிறுகதையைப் போலத் தோற்றம் தரும் தன்மையும் இந்த நாவலுக்கு உண்டு.

பெண்ணையும் பெண் மனதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் தன்மை தி.ஜா.வின் அனைத்து நாவல்களுக்கும் உண்டு. அந்த மிகையான தன்மை இந்த நாவலுக்கு அதிகமாகவே உண்டு. இந்த நாவலை எழுதியதால் பிரதிஷ்டம் செய்யப்பட்ட துர்பாக்கிய நிலைக்கு ஆளான அனுபவமும் தி.ஜா.வுக்கு உண்டு. இந்த அனுபவத்திற்குப் பிறகு கலையின் மூலமாக வெளிப்படும் உண்மை தன்மையைக் காண வேண்டும் என்றும் அதில் காட்டப்படும் சம்பவங்கள் அனுபவங்களின் புனைவு கலந்த கூட்டுச்சேர்க்கை என்பதை வாசிப்பவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் முன் வைத்தார்.

அலங்காரத்தம்மாளை அவரது கணவர் தண்டபாணி எப்படி உண்மை தெரிந்த பின்னும் விலக்காமலோ, ஓடிப் போகாமலோ அப்படியே ஏற்றுக் கொள்கிறார் என்பதை அவரது குணாதிசயமாக முன் வைக்கிறார் தி.ஜா. விவரம் தெரிந்த பின்னர் அலங்காரத்தம்மாளின் மூத்தச் சம்பந்தி குடும்பத்தைத் தவிர அவரை யாரும் தள்ளி வைப்பதில்லை. இரண்டாவது மகனும் மருமகளும் மௌனமாக ஏற்றுக் கொள்வதாகவே தி.ஜா. நாவலைக் கொண்டு செல்கிறார். இந்த விஷயம் மூன்றாவது மகனான அப்புவுக்குத் தெரிய வரும் போது அப்பு எடுக்கும் முடிவால் அலங்காரத்தம்மாள் தன் மகன் குறித்து முடிவு செய்து வைத்திருந்த வேத ரிஷி என்ற பிராயச்சித்தம் கலைந்து கடைசியில் காசிக்குச் செல்வதாக முடிவெடுக்கிறாள்.

நாவலில் வரும் அலங்காரத்தம்மாள் மற்றும் இந்து ஆகிய இருவரும் முக்கியமான பெண் கதா பாத்திரங்கள். இந்துவின் கணவன் பரசு இறந்து போகாமல் இருந்திருந்தால் அவளும் அலங்காரத்தம்மாள் போலத்தான் இருந்திருப்பாளோ அல்லது அலங்காரத்தம்மாளின் கணவர் தண்டபாணி இறந்து போயிருந்தால் அலங்காரத்தம்மாள் இந்துவைப் போல இருந்திருப்பாளோ என நினைக்கும்படி செய்திருப்பார் தி.ஜா. இந்த இரு பெண்களுமே வலுவாக இருந்து இந்த நாவலை நகர்த்துபவர்கள். மற்ற ஆண் பாத்திரங்கள் அப்பு உட்பட இந்த இரு பெண்களின் முடிவுகளுக்கு ஏற்ப அலைக்கழிபவர்களாகவே நாவலில் இடம் பெறுகிறார்கள்.

அனைத்துப் பாத்திரங்களும் நாவலில் அந்தரங்கமாக விழும் முடிச்சுகளை அவிழ்ப்பவர்கள். ஏதோ ஒரு வகையில் நாவலில் பின்னர் நிகழும் நிகழ்வுகளுக்குக் காரணமாகுபவர்கள்.

இந்த நாவலை மூன்று அத்தியாயங்களாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு அத்தியாயத்திலும் அந்த நிலப் பின்னணியோடு காட்சிகளை விரிக்கும் போது புதுப்புது சித்திரங்களை தி.ஜா. உண்டு பண்ணி விடுகிறார். சித்தன்குளத்தின் வேத பாடசாலையில் தொடங்கும் நாவல் சென்னைப் பட்டணத்துக்குப் போய் மீண்டும் சித்தன்குளத்து வேதபாடசாலைக்கே திரும்பி அந்த வேத பாடசாலைக்கு அலங்காரத்தம்மாள் வந்தாள், வந்து பார்த்த பின்பு காசிக்கு செல்கிற முடிவை எடுக்கிறாள் என்பதாக நாவலை முடிக்கிறார் தி.ஜா.

ஆணாதிக்கம் மிகுந்த காலக் கட்டத்தில் இவ்வளவு வலுவாகப் பெண் மனதை அழுத்தமாகவும் ஆழமாகவும் புனைந்த வகையில் தி.ஜா. முக்கியத்துவம் பெறும் எழுத்தாளராகிறார். வெறுமனே பெண்களின் காமம் சார்ந்த படைப்புகளாக தி.ஜா.வின் பெண் பாத்திரங்களைப் பாத்து விட முடியாது. அவர்களுக்குப் பிடித்தமான ஆண்களை அவர்கள் தழுவ விரும்புகிறார்கள். அதற்குச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் சமூகக் கட்டுபாடுகளும் எதிராக இருந்தாலும் அதை மீற அவர்கள் தயங்குவதில்லை. அவர்களின் மனதில் பிரவகிக்கும் அன்பு வழிந்தோடும் தடத்திலேயே அவர்களும் வழிந்தோட நினைக்கிறார்கள்.

தி.ஜா.வின் நாவல்களில் பெண் பாத்திரங்களின் ஆகர்ஷத்திற்கு முன்னால் ஆண் பாத்திரங்கள் அவ்வளவாக எடுபடுவதில்லை என்றும் சொல்லலாம். பெண் பாத்திரங்களே வலிமையான பாத்திரங்களாக இடம் பெற்று ஆண் பாத்திரங்களை வழிநடத்துகிறார்கள். ‘அம்மா வந்தாள்’ நாவலிலும் அத்தகைய வழிநடத்தலையே தி.ஜா. செய்கிறார்.

பெண்கள் எடுக்கும் முடிவின் படியே இந்த உலகம் சுழல வேண்டும் என்கிற அவருடைய எதிர்பார்ப்பை இந்த நாவலிலும் கனக்கச்சிதமாக தி.ஜா. நிறைவேற்றி விடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படித்தான் அலங்காரத்தாம்மாள் முடிவு எடுக்கிறாள், இந்து முடிவு எடுக்கிறாள், மூன்றாவது முக்கியமான பெண்மணியான பவானியம்மாளின் முடிவும் கூட அப்படிப்பட்டதுதான். இம்மூவரின் முடிவுகளுக்குக் கட்டுபட்டதாக நாவலின் போக்கு அமைகிறது.

தி.ஜா.வின் ‘அம்மா வந்தாள்’ நாவல் மன விழைவின் மற்றும் சமூக மீறலின் செவ்வியலான ஒரு காலத்தின் வெளிப்பாடு எனலாம்.

*****

16 Oct 2023

பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்புக் குறிப்புகள்

பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்புக் குறிப்புகள்

பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கான குறிப்புகளுக்கு அளவில்லை. பட்டியலிட்டால் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். என்றாலும் ஒரு சில அத்தியாவசியமான காலத்திற்கேற்ற சில குறிப்புகளை இங்கே தர வேண்டும் போலிருக்கிறது.

பெரும்பாலான குறிப்புகள் பொதுப்படையான குறிப்புகள்தான். கவனத்திலும் நினைவிலும் இருந்தாலும் செயல்பாட்டில் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை காண வேண்டியிருக்கிறது.

இனி அந்தக் குறிப்புகளைப் பார்த்து விடுவோம்.

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுங்கள். பழக்க வழக்கங்கள் பலவாயினும் இந்த மூன்றையும் முக்கியமாகப் பழக்கி விடுங்கள்.

ü அதிகாலையில் எழுதல்

ü தன்னுடைய கடமைகளைத் தானே செய்தல்.

ü மற்றவர்களிடம் மதித்துப் பேசுதல் மற்றும் பழகுதல்.

குழந்தைகளைச் சரியான வயதில் பள்ளியில் சேருங்கள். பெற்றோர் மற்றும் உற்றாரின் அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் மூன்று மற்றும் நான்கு வயதுகளில் பள்ளியில் சேர்ப்பதைத் தவிருங்கள்.

குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள். அவர்களோடு மனம் திறந்து பேசுங்கள். அவர்கள் சொல்வதற்குக் காது கொடுங்கள். ஒரு வேளை உணவையாது அவர்களோடு அமர்ந்து சாப்பிடுங்கள்.

குழந்தைகளின் ஆர்வத்தையும் கற்கும் திறனையும் புரிந்து கொள்ளுங்கள். ஓவியத்தில் ஆர்வமாக இருக்கும் ஒரு குழந்தையிடம் கணக்கில் ஏன் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கவில்லை என்று கோபப்படாதீர்கள்.

குழந்தைகளோடு விளையாடுங்கள். குழந்தைகளோடு பெற்றோர்கள் விளையாடுவது தவறே கிடையாது. அவர்களைச் சக குழந்தைகளோடு ஓடி ஆடி விளையாட அனுமதியுங்கள். சில நேரங்களில் அப்படி விளையாடும் போது சிறு சிறு காயங்கள் ஏற்பட்டால் அதற்காக விளையாட அனுப்புவதை நிறுத்தாதீர்கள்.

தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் போது அனுசரணையாகப் பேசுங்கள். இரவில் தூங்குவதைக் கவனியுங்கள். கண் விழித்துப் படிப்பதை ஊக்குவிக்காதீர்கள். அதே நேரத்தில் அதிகாலையில் எழுந்து படிப்பதைப் பழக்கப்படுத்துங்கள்.

அளவாகத் தொலைக்காட்சி மற்றும் அலைபேசி பார்ப்பதை அனுமதியுங்கள். அவற்றின் பயன்பாடு அளவுக்கதிமாகப் போகுமானால் வெளிப்பயணங்களுக்குத் திட்டமிட்டு அவர்களை அழைத்துச் செல்லுங்கள். நண்பர்கள் மற்றும் உறவினர் இல்லங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். மாலை நேர நடைபயிற்சி, நூலகம் சென்று வாசித்தல், தினசரி நாளிதழ் வாசித்தல் என்று அவர்களை மடை மாற்றுங்கள்.

குழந்தைகளைத் தனிமைப்படுத்தி விடாமலும் அவர்கள் தனிமையாகி விடாமலும் சமூகத் தொடர்பில் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். சிறுசிறு தவறுகள் செய்யும் போது கண்டிப்பதை விட அத்தவறை எப்படி வேறு மாதிரியாகச் செய்து எப்படி சரி பண்ணியிருக்கலாம் என்று அவர்களின் கருத்துகளைக் கேட்பதைப் போலக் கேட்டு அவர்களைப் பொறுப்புள்ளவர்களாகச் சிந்திக்கக் கூடியவர்களாக மாற்றுங்கள்.

சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். நுகர்வு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ஊதாரித்தனத்தை மாற்றிச் சிக்கனமாக இருப்பது குறித்து அடிக்கடி அவர்களிடம் பேசுங்கள், விவாதம் செய்யுங்கள். எளிமையாகவும் இயல்பாகவும் இருப்பதன் முக்கியத்துவத்தை எப்போதும் எடுத்துச் சொல்லுங்கள்.

அனுபவங்களையும் கதைகளையும் குழந்தைகளிடம் அதிகம் சொல்லுங்கள். அவர்களின் அனுபவங்களையும் அவர்கள் சொல்லும் கதைகளையும் கேளுங்கள். குழந்தைகளின் படைப்பாற்றலும் மகிழ்ச்சியும் அதிகரிக்க இதை விட வேறு வழிகள் இல்லை.

சரியான உணவுப் பழக்கத்தையும் உடலோம்பல் முறைகளையும் கற்றுக் கொடுங்கள். பெற்றோர்களாகிய நீங்களும் அப்படியே ஒழுகுங்கள்.

ஒவ்வோரு நாளும் அவர்களுக்கு நிகழ்ந்தவைப் பற்றி அவர்களிடம் அவர்களின் சொற்களில் கேட்டறியுங்கள். உங்களுக்கு நிகழ்ந்தவைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவற்றைத் திறந்த மனதோடும் நகைச்சுவையான பேச்சோடும் மதிப்பாய்வு செய்யுங்கள். குழந்தைகளையும் மதிப்பாய்வு செய்ய அனுமதியுங்கள்.

வீட்டு வேலைகள் செய்யும் போது அவசியம் குழந்தைகளையும் அவ்வேலைகளின் ஒரு பகுதியாக்குங்கள். நீங்கள் ஒரு பெரிய தட்டை அலம்பினால் அவர்களிடம் ஒரு சிறிய தட்டைக் கொடுத்து அலம்பச் சொல்லுங்கள். நீங்கள் வீட்டைச் சுத்தம் செய்தால் அவர்களுக்கும் அதில் சிறிய ஒரு வேலையைக் கொடுங்கள். கடைத்தெருக்களுக்குச் சென்று வருவது, சிறு சிறு பொருட்கள் வாங்கி வருவது போன்றவற்றைச் செய்யச் சொல்லுங்கள்.

குடும்ப கஷ்டத்தை எடுத்தச் சொல்வதை விட குடும்ப வரவு – செலவு திட்டமிடலை அவர்களோடு இணைந்து செய்யுங்கள். தினசரி வரவு – செலவு கணக்குகளை அவர்களையே எழுதி வைக்க சொல்லுங்கள்.

அனைவரும் அமர்ந்து அரை மணி நேரம் தினந்தோறும் படிப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். பிள்ளைகள் பாடப்புத்தகங்களைப் படிக்கும் போது நீங்கள் குறைந்தபட்சம் தினசரிகளையாவது படியுங்கள். அல்லது அவர்களுக்குச் சொல்வதற்கு ஏற்றாற் போல ஒரு கதைப் புத்தகத்தையாவது படியுங்கள்.

இதென்ன ஓர் அறிவுரைக்கொத்து போல இருக்கிறது என்று சொன்னால் அதுவும் சரிதான். இதில் பெற்றோர்களுக்கான அறிவுரைகள் அதிகம். குழந்தைகளுக்கான அறிவுரைகள் கம்மி, ஆனால் வழிநடத்துதல்கள் குறித்த கருத்துகள் அதிகம். எப்படி வழிநடத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளாகவும் இவற்றையும் கொள்ளலாம். உங்கள் கருத்துகளையும் சொன்னால் இன்னும் ஆலோசிக்கலாம்.

*****

12 Oct 2023

வெற்றிக்கான ஒருங்கிணைந்த மூன்று வழிகள்

வெற்றிக்கான ஒருங்கிணைந்த மூன்று வழிகள்

வெற்றிக்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். இப்போது நாம் பார்க்கப் போகும் இந்த மூன்று வழிகளும் ஆயிரம் வழிகளிலும் முக்கியமானது. வெற்றிக்கான ஆயிரம் வழிகளும் உங்களுக்கு முதல் வெற்றியை எப்படியோ பெற்றுத் தந்து விடும். வெற்றி என்பது ஒரு முறை வெற்றி பெறுவதில் மட்டுமில்லை, தொடர்ந்து வெற்றிகளைப் பெறுவதில் இருக்கிறது. தொடர் வெற்றியைப் பெறுவதற்கு இந்த மூன்று வழிமுறைகள் மட்டுமே உங்களுக்குத் தொடர்ந்து உதவக் கூடும்.

ஒரு காலத்தில் வெற்றி பெற்றோர் பின்னொரு காலத்தில் வெற்றி பெற முடியாமல் போகலாம். முதல் வெற்றிக்குப் பின் வெற்றியை ருசிக்க முடியாமல் சோர்ந்து போய்க் கிடப்பவர்கள் ஏராளம். வெற்றிக்கான இந்த மூன்று வழிகள் தெரியாதவர்கள் பெற்ற வெற்றியே போதுமானது என்று அமர்ந்து கொள்ள வேண்டியதுதான்.

இந்த மூன்று வழிகளில் ஒன்றைப் பயன்படுத்தி மற்ற இரண்டைப் புறக்கணித்து விட்டால் கூட உங்களது தொடர் வெற்றிக்கு எந்த விதமான உத்திரவாத்தையும் கொடுக்க முடியாது. இரண்டைப் பயன்படுத்தி ஒன்றைப் புறக்கணித்தாலும் அதே நிலைதான் ஏற்படும். மூன்றையும் ஒருங்கிணைந்து பயன்படுத்த வேண்டும். ஆகவேதான் வெற்றிக்கான ஒருங்கிணைந்த மூன்று வழிகள் என்று இவற்றைக் குறிப்பிடுகிறேன்.

அந்த மூன்று வழிகளையும் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதைத் தொடர்ந்து இந்த மூன்று வழிகளும் ஒருங்கிணைந்து எப்படி வெற்றியை உறுதி செய்கின்றன, தோல்வியை இல்லாமல் செய்கின்றன என்பதை விளக்குகிறேன்.

1)      தேவைக்கு அதிகமாக உழையுங்கள்.

2)      புத்திசாலித்தனமாக யோசியுங்கள்.

3)      வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்.

தேவைக்கதிமாக உழைப்பதை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் உழைப்பைப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பார்த்து உங்களுக்கு கோபம் ஏற்படும். அது கோபம் ஏற்பட வேண்டிய இடம்தான் என்றாலும் அந்தக் கோபம் உங்களுக்கு உபயோகமாக எதையும் செய்து விடாது.

நீங்கள் புத்திசாலித்தனமாக யோசித்து உங்கள் கோபத்தை உங்களுக்குப் பாதகமில்லாத அளவுக்குத் தடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் உங்கள் கோபத்தை உங்களுக்கு எதிராக எதிரிகளை உருவாக்கி விடாமலும் கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் அதிகப்படியான உழைப்பானது உங்களுக்குப் பயன்தரும்படி மாற்றிக் கொள்ள உங்களது புத்திசாலிதனமான யோசனைகள் உங்களுக்கு உதவ வேண்டும்.

முதலில் நீங்கள் ஏன் தேவைக்கு அதிகமாக உழைக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாகத் தேவைக்கதிகமாக உழைக்கும் நீங்கள் ஏன் புத்திசாலித்தனமாக யோசிப்பவராகவும் இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிகப்படியாக உழைக்காமல் நீங்கள் கவனம் பெற முடியாது, அடுத்தடுத்த படிகளில் காலடி எடுத்து வைக்க முடியாது. அதிக உழைப்பு உங்களைக் கவனம் பெற்றுத் தருவதை உருவாக்குவதைப் போல உங்கள் உழைப்பை உறிஞ்சுபவர்களையும் உருவாக்கும். இவர்களே உங்கள் கோபத்தை உண்டாக்குபவர்களும், உங்களுக்கு எதிரிகளாக மாறப் போகிறவர்களும் ஆவார்கள். இவர்களிடம் கோபப்பட்டாலோ, இவர்களை எதிரிகளாக மாற்றிக் கொண்டாலோ இவர்களைச் சமாளிப்பதிலே உங்கள் ஆயுட்காலம் கரைந்து விடும். இவர்களைச் சாமர்த்தியமாக எதிர்கொள்ள வேண்டும். அதற்குப் புத்திசாலித்தனமான யோசனைகள் உதவும். இந்த இடத்தில்தான் புத்திசாலித்தனமான யோசனைகள் உங்களுக்கு உதவுகிறது.

மூன்றாவதாக உங்களுக்கு வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் நீங்கள் ஏன் பின்வாங்கி விடக் கூடாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்த நீங்கள் தயங்கவே கூடாது. வாய்ப்புகள் எப்போதோ வருபவை. எப்போதும் வருபவை இல்லை. எப்போதோ வருவதைத் தயக்கத்தாலோ, அச்சத்தாலோ, தன்னம்பிக்கையின்மையாலோ, முடியாமல் போய் விடுமோ என்ற எண்ணத்தாலே தவிர்த்தால் அடுத்த வாய்ப்பு வருவதற்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க நேரிடலாம். ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் போது இன்னொரு வாய்ப்பு தானாக வந்து சேரும். பயன்படுத்தாத போது வருங்காலத்தில் வரப் போகின்ற வாய்ப்பும் வராமல் போகும்.

நீங்கள் ஒரு வாய்ப்பைப் புறக்கணிப்பதால் வர வேண்டிய இன்னொரு வாய்ப்பின் வாயிலை அடைத்து விடுகிறீர்கள். ஒட்டுமொத்தமாக நீங்கள் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தாத போது உங்களுக்கு ஒரு மடங்கு, இரு மடங்கு இழப்பு மட்டுமில்லை, அது பல மடங்கு இழப்பாகி விடுகிறது. ஒரு வாய்ப்பினால் இன்னொரு வாய்ப்பு, அந்த இன்னொரு வாய்ப்பினால் இன்னொரு வாய்ப்பு என்று போய்க் கொண்டிருந்தால் அவை பல மடங்கு வாய்ப்புகள்தானே.

இந்தக் காலத்தில் கடவுளர்கள் வந்து வரங்களைத் தருவதில்லை. வருகின்ற ஒரு வாய்ப்பே அடுத்தடுத்த வாய்ப்புகளை வரப்பிரசாதங்களாகத் தருகின்றன.

ஒரு வாய்ப்பு என்பது நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறிய வாய்ப்பாகவும் இருக்கலாம். அதற்காக அதைப் புறக்கணித்து விட வேண்டாம் அல்லது அலட்சியப்படுத்தி விட வேண்டாம். எந்தச் சிறிய வாய்ப்பில் எவ்வளவு பெரிய வாய்ப்பு இருக்கிறது என்பது எதிர்காலத்திற்கு மட்டுமே தெரியும் என்பதால் எந்தச் சிறிய வாய்ப்பையும் எக்காரணம் கொண்டும் புறக்கணித்து விட வேண்டாம். ஒரு பெரிய வெற்றி எனும் பூட்டைத் திறக்கும் சிறிய சாவியாக அந்தச் சிறிய வாய்ப்பு இருக்கக் கூடும்.

இப்போது இந்த மூன்று வழிமுறைகளையும் உங்கள் மனதிற்குள் திரும்ப திரும்ப சொல்லிப் பாருங்கள். நீங்கள் இதுவரை அடைந்துள்ள வெற்றிகள் மற்றும் தோல்விகளில் இந்த மூன்று வழிமுறைகளையும் எந்த அளவுக்குப் பின்பற்றியிருக்கிறீர்கள், பின்பற்றாமல் போயிருக்கிறீர்கள் என்பதைக் கொண்டு ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த ஒப்பீடு உங்கள் வெற்றிக்கும் தோல்விக்குமான காரணத்தைப் படிகம் போலக் கண்ணில் காட்டும்.

நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறீர்கள் என்றால் இந்த மூன்று வழிமுறைகளையும் உங்களையறியாமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதே போல தொடர்ந்து தோல்விகளையே சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த மூன்றையுமோ அல்லது இரண்டையோ அல்லது ஏதேனும் ஒன்றையோ பின்பற்றாமல் இருக்கிறீர்கள் என்று பொருள்.

இந்த மூன்று வழிமுறைகளையும் தன்னையறியாமல் பின்பற்றி வெற்றி காண்பவர்களும் இந்த மூன்று வழிமுறைகளையும் அறிந்து கொண்ட பின் வெற்றி பெறுவதைச் சாசுவதமாக ஆக்கி கொள்ளலாம். சொல்லியடித்து வெற்றியை நிலைநாட்டலாம். வெற்றி பெறுவதற்கெனவே பிறந்தவர் நீங்கள் என்று இந்த உலகிற்கு உரக்கச் சொல்லலாம். வெற்றி என்ற மூன்றெழுத்துக்கு இந்த மூன்று வழிமுறைகளும் அதன் மூன்று எழுத்துகளைப் போல.

ஆகவேதான் உங்கள் வெற்றியை உருவாக்குவதற்கு இந்த மூன்று வழிமுறைகளும் எப்போதும் உதவுபவையாக இருக்கின்றன. இதில் ஒன்று குறைந்தாலும் உங்கள் வெற்றிக்கான காலம் தாமதமாகும். இந்தமூன்றும் இல்லாமல் நீங்கள் வெற்றி பெற முடியாது என்பதால் இந்த மூன்று வழிமுறைகளையும் எப்போதும் மனதில் வையுங்கள். இந்த மூன்று வழிமுறைகளையும் பின்பற்றி எந்தக் குறைவும் இல்லாமல் எல்லாவற்றிலும் வெற்றி அடையுங்கள்.

இந்த மூன்று வழிகளையும் ஒருங்கிணைந்து பயன்படுத்தும் போது உங்களால் வெற்றியடையாமல் போக முடியாது. தோல்வியை அடைய வாய்ப்பே கிடையாது.

*****

9 Oct 2023

தி.ஜானகிராமனின் ‘ஆன்பே ஆரமுதே’ – ஓர் எளிய அறிமுகம்

தி.ஜானகிராமனின் ‘ஆன்பே ஆரமுதே’ – ஓர் எளிய அறிமுகம்

பாலியல் உறவுச் சிக்கலுக்குள் நின்று பேசும் தி.ஜானகிராமன் அதற்கு அப்பால் நின்று பெண் மனதைப் பேசிய நாவல் ‘அன்பே ஆரமுதே’

கல்கி இதழில் 1961 – 1962 இல் தொடராக வந்தத் தி.ஜா.வின் தொடர்கதையான ‘அன்பே ஆரமுதே’ பிற்பாடு நூல் வடிவில் நாவல் வடிவம் பெற்றிருக்கிறது.  அதன் முதல் பதிப்பு 1965 இல் வெளியாகியிருக்கிறது.

மண முடிக்கும் நாளன்று ஓடிப் போகிறார் அனந்தசாமி. ஓடிப் போனவர் சன்னியாசியாகி விடுகிறார். சன்னியாசத்தில் கற்ற வைத்தியத்தோடு சென்னைப் பட்டணத்தில் நிலைகொள்ளும் போது மக்களுக்கு உதவும் வைத்தியராகவும் இருக்கிறார். கடைசிக் காலத்தில் தாயைப் பரிவாகப் பார்த்துக் கொள்கிறார். இல்லறத்தில் நுழையாத பட்டினத்தாராக அவர் வாழ்க்கைப் போய்க் கொண்டிருக்கிறது.

அவர் எந்தப் பெண்ணை மணம் முடிக்காமல் ஓடிப் போனாரோ அந்தப் பெண்ணான ருக்குமணி முப்பது ஆண்டுகள் கழித்து அவரைப் பார்க்க நேரிடுகையில் அவரோடு வாழ நினைத்தால் எப்படியிருக்கும் என்று யோசிக்கிறார் தி.ஜா. அந்த யோசனையை விஸ்தாரப்படுத்தும் போது ‘அன்பே ஆரமுதே’ நாவல் உண்டாகிறது.

ருக்குமணி எப்படி அனந்தசாமியிடம் வந்து சேர்கிறார், அதற்குக் காரணமாகும் சுப்புசாமி குடும்பத்தின் பின்னணி என்ன என்பதிலிருந்து நாவலின் ஓட்டம் துவங்குகிறது. நாவலின் ஓட்டத்தில் அனந்தசாமி சென்னையின் மூலை முடுக்கெல்லாம் ஓடி வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார்.

அனந்தசாமியின் வைத்தியத்தில் பிரபல திரை நடிகரான அருண்குமாரும் அவரது குடும்பமும் வந்து சேர்கிறது. இந்தக் கூட்டுச் சேர்க்கையோடு சுப்புசாமி குடும்பத்தின் சந்திரா – சினிமா ஆசையில் சென்னை வரும் குசுமா என்ற டொக்கி – சந்திரா மற்றும் டொக்கியை நேசிக்கும் ரங்கன் என்ற முக்கோணக் காதல் கதை நாவலின் ஓட்டத்தை இழுத்துச் செல்கிறது.

சந்திராவின் தெய்வீக அழகு ரங்கனைத் தடுமாறச் செய்வதாக தி.ஜா. காட்டுகிறார். குசுமா என்ற டொக்கி பிரபல நடிகர் அருண்குமாரிடம் தன்னை இழந்த போதும் வெகுளித்தனமான அவளது அழகே ரங்கனுக்குப் பிடித்தமாக இருப்பதாகவும் சொல்கிறார்.

ரங்கன் சந்திராவுக்காகவா, குசுமா எனும் டொக்கிக்காகவா என்ற முடிச்சு நாவலில் விழும் இடத்தில் ரங்கன் தற்கொலை செய்து கொள்கிறான். ஏன் இந்த தற்கொலை நேரிடுகிறது என்பதை யோசிக்கும் போது பெண்மையை எதிர்கொள்ளும் பயம் அனந்தசாமியைத் துறவியாக ஓடச் செய்கிறது என்றால் ரங்கனைத் தற்கொலைச் செய்யத் தூண்டி விடுவதாகக் கருதவும் இடம் இருக்கிறது. ஒருவேளை அனந்தசாமியைப் போல ரங்கனும் துறவியாக ஓடியிருந்தால் அவன் விரும்பியபடி டொக்கி பின்னொரு காலத்தில் ரங்கனை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடுமோ என்னவோ! அல்லது ரங்கனின் மனமே மாறிப் போய் சந்திராவை நாடியிருக்குமோ என்னவோ! அதற்குள் சம்பவங்கள் எதிர்பாராத விதமாக நடந்து முடிந்து நாவலை முடிவுக்குக் கொண்டு வந்து விடுகின்றன.

ரங்கனின் மறைவுக்குப் பின் துறவிகளைப் போலச் சேர்ந்து வாழும் அனந்தசாமிக்கும் ருக்குமணிக்கும் பெறாத குழந்தையைப் போல நாவலின் இறுதியில் டொக்கி வந்துச் சேர்கிறாள், சந்திரா சுப்புசாமியின் மகன் குடும்பத்தாரோடு வெளிநாடு செல்கிறாள் என்பதாக நாவலை முடிவுக்குக் கொண்டு வருகிறார் தி.ஜா.

நாவலில் அனந்தசாமி குடும்பத்தைத் துறந்து விட்ட இல்லறத் துறவியாக வாழ்கிறார் என்றால் ருக்குமணி குடும்பத்தோடு இணைந்து வாழும் இல்லறத் துறவியாக வாழ்கிறார். தனித்து வாழ்வதே அனந்தசாமிக்கு உவப்பாகவும் அந்தத் தனிமை வாழ்வே அவருக்கு மனப் பாதுகாப்பையும் தருகிறது. ஆனால் ருக்குமணிக்கு அவ்வபோது எழும் அனந்தசாமி குறித்த நினைப்போடு என்றாவது ஒரு நாள் அனந்தசாமியை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் போது அவர் ஓடிப் போனது குறித்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மன ஏக்கத்தோடு  முப்பதாண்டுகள் கழிந்தோடி விடுகின்றன.

தனக்காகவே முப்பதாண்டுகள் காத்திருந்த ருக்குமணி அழைக்கும் போது அதைத் தட்டாமல் இருக்கும் அனந்தசாமி அந்த இடத்திலும் தடுமாறுகிறார். இந்த முறை ருக்குமணி அவரை ஆற்றுப்படுத்துகிறார். ஒருவேளை திருமண நாளன்று ருக்குமணி அனந்தசாமியைப் பார்த்துச் சில நிமிடங்கள் பேசும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தாலும் நாவலின் முடிவு வேறாகி இருக்கக் கூடும்.

தி.ஜா.வின் நாவல்கள் அனைத்திலும் பெண் பாத்திரங்கள் ஏதோ ஓர் அபூர்வத்தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ‘மோகமுள்’ யமுனாவிடமும், ‘அம்மா வந்தாள்’ அலங்காரத்தம்மாளிடம் இந்த ஆபூர்வத்தைத் தரிசிக்காமல் வாசிக்க முடியாது. அந்த அபூர்வத்தை இந்த நாவலிலும் ருக்மணியிடம் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த அபூர்வத்தன்மை வேறு மாதிரியானது. எந்த விதமான பாலியல் நோக்கமும் துளியும் இல்லாதது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற கட்டுப்பெட்டித் தன்மையைத் தன்னையறியாமல் ஏற்றுக் கொள்ளும் பாரம்பரிய இந்திய பெண் தன்மையானது கல்வி கற்ற நிலையிலும் தன்னையறியாமல் பிரதிபலிக்கும் அபூர்வ தன்மை வாய்ந்தது. இதன் பின்னணியில் சில கேள்விகள் எழுகின்றன.

மணக்கோலத்தில் தன்னை விட்டு ஓடிப் போன அனந்தசாமிக்காக ருக்மணி ஏன் முப்பதாண்டுகள் காத்திருக்க வேண்டும்? இதற்கான பதிலைத் தி.ஜா. இந்தியப் பாரம்பரியத்தில் உண்டாகும் பெண் மனதின் காவியத்தன்மையாகத் தருகிறார் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

ருக்குமணி என்ற பெண் மனதில் எந்த விதமான கலாச்சார மீறல்களையும் அவர் உருவாக்கவில்லை. இதே போன்ற தன்மையை அவர் குசுமா என்ற டொக்கியிடம் உருவாக்குகிறார் என்றாலும் அவள் திரைநடிகரிடம் தன்னை இழப்பதற்கு ஏதோ சில வகைகளில் சினிமா வாய்ப்புகளும் பணம் குறித்த எதிர்பார்ப்புகளும் பின்னணியாக இருக்கின்றன.

வேறெந்த பாலியல் உறவுச்சிக்கலையும் தி.ஜா. இந்த நாவலின் எந்த இடத்திலும் கொண்டு வந்து விடவில்லை. தன்னை இன்னொருவரிடம் இழந்த பின்பு வேறொருவருக்கு மணமாக விரும்பாத மனநிலையையும், இன்னொருத்தி விரும்பிய ஒருவரை தன்னுடையவனாக ஆக்கிக் கொள்ள மறுக்கும் உறுதிநிலையையும் டொக்கியிடம் வழக்கமான இந்தியப் பெண் தன்மையைச் சார்ந்தே வெளிப்படுத்துகிறார்.

நாவலில் அனந்தசாமி திருமண வாழ்க்கையைப் பயந்து விலக்குகிறார் என்றால் டொக்கி தைரியமாக விலக்குகிறாள். நாவலில் யாரும் யாருடைய முடிவிலும் குறுக்கிடாமல் கடந்து போகிறார்கள்.

விதிக்கப்பட்ட வாழ்க்கையை விதியின் போக்கில் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் போல வாழ்க்கையைப் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் வாழ்க்கை குறித்த ஆழ்ந்த விவாதத்தை நிகழ்த்துகிறார்கள். விதியின் போக்கில் ஏற்றுக் கொள்ளும் வாழ்க்கையைத் தங்களின் விவாதத்தின் மூலம் கண்டடைகிறார்கள்.

துறவிக்கேது குடும்பம் என்ற வினாவிற்குத் துறவிக்கு ஒரு குடும்பம் உண்டானால் எப்படியிருக்கும் என்ற பதிலைக் கண்டடைவதைப் போலத் தி.ஜா. ‘அன்பே ஆரமுதே’ என்ற இந்த நாவலைப் படைத்திருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் கட்டுப்பெட்டித்தனமாக இயங்கும் பெண்களின் மனதைத்தான் இந்த நாவலில் தி.ஜா. காட்டுகிறார். புத்தர் யசோதரையை மணக்க இருக்கும் இடத்தில் ஓடியிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற கேள்வியின் நீட்சியாகவும் இந்த நாவலைப் பார்க்கலாம். நாவலிலும் அனந்தசாமி புத்தராகவும், ருக்குமணி யசோரையாகவும் பொருந்திப் போகும் ஏகப்பட்ட கூறுகள் ஆங்காங்கே இருக்கின்றன.

தி.ஜா.வின் சூழல் சித்தரிப்புகள் எப்போதும் ஒரு மயக்கத்தைத் தரும். மோகமுள்ளில் கும்பகோணத்துக் காவிரியைக் காட்டும் போது உண்டாகும் மயக்கத்தைப் போன்று இந்த நாவலில் டில்லியின் யமுனையைப் பற்றிச் சொல்லும் போது ஒரு மயக்கம் உண்டாகத்தான் செய்கிறது. அந்த மயக்கத்தைத் தாண்டி டில்லியைப் பெயர்த்தெடுத்து சென்னையில் கொண்டு வைப்பதுதான் இந்த நாவல். அவ்வகையில் அந்தக் காலத்துச் சென்னையைத் தரிசிக்க தி.ஜா.வின் ‘அன்பே ஆரமுதே’ வில் ஒரு வாசிப்புப் பயணத்தைச் செய்து பார்க்கலாம்.

*****

1 Oct 2023

திருவாரூர் ‘CA ஹோண்டா’வின் தரமற்ற வாடிக்கையாளர் சேவை!

திருவாரூர் ‘CA ஹோண்டா’வின் தரமற்ற வாடிக்கையாளர் சேவை!

திருவாருர் சுற்றுவட்டாரப் பகுதியில் நீங்கள் இருந்தால் நிச்சயம் ‘CA ஹோண்டா’ என்ற முகவரிடமிருந்துதான் ஹோண்டா இரு சக்கர வாகனத்தை வாங்கியிருப்பீர்கள்.

ஒரு இரு சக்கர வாகனம் என்பது வாங்குதலோடு அதற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தரமான பழுது மேலாண்மைச் சேவையைக் கொண்டும் விளங்குகிறது. பழுது நீக்க மேலாண்மைக்கு நாம் வண்டிய வாங்கிய முகவரைச் சார்ந்துதான் இயங்க வேண்டியிருக்கிறது. இதற்காக ஆண்டு மேலாண்மை ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு அந்த நிறுவனங்கள் அச்சேவையை வழங்குகின்றன.

நான் ஹோண்டா ஆக்டிவா என்ற இரு சக்கர வாகனத்தை வாங்கி ஆறு வருடங்களுக்கு மேலாகிறது. இந்த ஆறு ஆண்டுகளிலும் அவர்கள் வாடிக்கையாளருக்கான திருப்தியான சேவையை ஒரு முறை கூட வழங்கியதில்லை. சரியான நேரத்திற்கு பழுது நீக்க மேலாண்மையை மேற்கொண்டு வண்டியை ஒப்படைத்ததில்லை. சில முறை ஒரு வாரம் வரை கூட பழுது நீக்கப் பணிகளைச் செய்வதாக வண்டியை ஒப்படைக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பார்கள்.

திருவாரூரில் இருக்கும் CA ஹோண்டா முகவர்தான் இப்படிச் செய்கிறாரா அல்லது தமிழகமெங்கும் ஹோண்டா முகவர்கள் இப்படித்தான் செய்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படிச் செய்தாலும் திருவாரூரில் இருக்கும் CA ஹோண்டா முகவர் செய்யும் திருப்தியற்ற வாடிக்கையாளர் சேவைதான் தமிழக அளவில் முதலிடத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

என் அனுபவத்தில் எப்போதும் அவர்கள் தரமற்ற வாடிக்கையாளர் சேவையைத்தான் தருகிறார்கள். ஹோண்டாவின் தரமான இயந்திர தயாரிப்பிற்காக அவர்களது தரமற்ற வாடிக்கையாளர் சேவையைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

எனக்குத் தெரிந்தவரையில் வாடிக்கையாளர் சேவையில் டிவிஎஸ், பஜாஜ், ஹீரோ போன்ற நிறுவனங்கள் காட்டும் அக்கறை அலாதியானது. முன்கூட்டியே அவர்களிடம் ஒப்படைக்கும் நேரத்தைக் கேட்டுக் கொண்டு ஒப்படைத்து விட்டு உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். அதற்கான முன்பதிவுகளை அவர்கள் சரியாகச் செய்கிறார்கள். உரிய நேரத்தில் ஒப்படைக்கவும் செய்கிறார்கள். வாடிக்கைளயார்களின் பின்னூட்டங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். இந்த விசயத்தில் திருவாருரின் CA ஹோண்டா சுத்த பூஜ்யம்.

எனக்கு மட்டும்தான் அவர்கள் இப்படி திருப்தியற்ற சேவை செய்கிறார்களா? அல்லது எல்லாருக்கும் இப்படித்தானா என்றால் நான் விசாரித்த வகையில் அறுபது சதவீத வாடிக்கையாளர்கள் வரை அவர்கள் இப்படித்தான் சேவை செய்கிறார்கள். இதை எப்படிச் சேவை என்று சொல்ல முடியும்? அவர்கள் கஸ்டமர்களைக் கஷ்டமர்களாகப் பார்க்கிறார்கள். இருந்தும் ஹோண்டாவின் தரமான தயாரிப்பிற்காக அவர்களது திருப்தியற்ற அணுகுமுறையைப் பொருத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

அவர்களின் திருப்தியற்ற வாடிக்கையாளர் அணுகுமுறை பல நேரங்களில் மன உளைச்சலைத் தருகிறது. தலைவலியைக் கூட உண்டு பண்ணி விடுகிறது. இருந்தும் ஹோண்டா மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்காக அவர்களது விற்பனை ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போகிறது. அப்படிக் கூடிக் கொண்டே போகும் விற்பனை அவர்களின் அகம்பாவத்தையும் ஆணவத்தையும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்று நினைக்கிறேன்.

வாடிக்கையாளர்களாகிய என்னைப் போன்ற சராசரிகள் எத்தனை முறை அவர்களிடம் தரமற்ற சேவை பற்றி எடுத்துக் கூறினாலும் அவர்கள் கண்டு கொள்வதில்லை. எத்தனை நாள்தான் இந்தத் தரமற்ற சேவையைப் பொறுத்துக் கொள்வது? இவர்களின் தரமற்ற சேவைக்காகவே நான் வண்டியை மாற்றுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

ஹோண்டாவின் இரு சக்கர வாகனத்தை வாங்குவதாக இருந்தால் நீங்கள் அவசியம் முகவர்களின் வாடிக்கையாளர் சேவை குறித்துக் கவனமாக இருங்கள். உங்களுக்குத் தரமான பழுது நீக்கம் செய்யும் கடை வைத்திருப்பவரை யாரேனும் தெரிந்திருந்தால் நீங்கள் ஹோண்டாவை வாங்குங்கள். அப்படி யாரும் உங்களுக்குக் கிடைக்காது போனால் நீங்கள் ஹோண்டாவின் தயாரிப்புகளைத் தவிர்ப்பதே நல்லது. ஹோண்டாவின் முகவர்களை நம்பி நீங்கள் ஆண்டுதோறும் பழுது நீக்க மேலாண்மையைச் சிறப்பாகச் செய்து விட முடியாது. அப்படிச் செய்ய நினைத்தால் நீங்கள் மன உளைச்சலுக்கும் அநாவசிய தலைவலிக்கும் ஆளாக நேரிடும்.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஹோண்டாவை விட ஹீரோவின் தயாரிப்புகள் மலிவாக இருக்கின்றன. ஹீரோவின் வாடிக்கையாளர் சேவையும் சிறப்பாக உள்ளது. டிவிஎஸ்ஸின் தயாரிப்புகள் ஹீரோவின் தயாரிப்புகளை விட விலை சற்றுக் கூடுதல் என்றாலும் அவர்களின் வாடிக்கையாளர் சேவையும் அற்புதமாக உள்ளது. பஜாஜின் சேவையும் சிறப்பாக உள்ளது.

ஹோண்டா இன்னும் எத்தனை நாள் தனது தரமான தயாரிப்புக்காக மட்டும் நிலைத்து நிற்க போகிறது என்பது புரியவில்லை. அவர்கள் தரமான வாடிக்கையாளர் சேவையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஹோண்டாவின் தரமற்ற வாடிக்கையாளர் சேவையை ஆண்டாண்டு அனுபவித்துக் கொண்டிருப்பவன் என்ற அடிப்படையில் ஹோண்டாவின் வாடிக்கையாளராக நான் இருப்பதை இத்துடன் ஒரு முடிவுக்குக் கொணடு வர விரும்புகிறேன். அத்துடன் ஹோண்டாவின் தயாரிப்புகளை நாட விரும்புபவர்களுக்கு என்னுடைய பரிந்துரையாகவும் இதைச் சொல்லிக் கொள்கிறேன்.

ஒரு தரமான தயாரிப்பை விலக்குவதை நினைத்து வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் எத்தனை நாள்தான தரமற்ற வாடிக்கையாளர் சேவையைப் பொறுத்துக் கொள்ள முடியும்?

ஹோண்டா இதை கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்களின் விற்பனை அப்படிப் போய்க் கொண்டு இருக்கிறது. ஒருவேளை அவர்களின் விற்பனை அதல பாதாளத்திற்கு வீழ்ந்தால் அதற்கு இந்தத் தரமற்ற வாடிக்கையாளர் சேவைதான் முதன்மையான காரணமாக இருக்கக் கூடும்.

ஆம்! நாம் தொடர்ந்தும் குறைகளைக் கவனத்திற்குக் கொண்டு சென்று கொண்டு இருக்க முடியாது. திருப்தியற்ற அணுகுமுறைகளைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் போது அந்தத் தயாரிப்பிலிருந்து விலகிக் கொள்வதுதான் நல்லது.

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...