26 Oct 2023

தி.ஜானகிராமனின் ‘உயிர்த்தேன்’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

தி.ஜானகிராமனின் ‘உயிர்த்தேன்’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

1966 ஆம் காலக்கட்டத்தில் ஆனந்த விகடனில் தொடராக வந்த தி. ஜானகிராமனின் நாவல் ‘உயிர்த்தேன்’.

1967 இல் நூலாக இந்த நாவல் முதல் பதிப்பு கண்டிருக்கிறது.

சென்னைப் பட்டணத்தில் இருக்கும் ஒருவர் கிராமத்திற்கு வந்து அமைதியாக வாழ நினைத்து அப்படியே கிராமத்தையும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு போனால் எப்படியிருக்கும் என்பதுதான் நாவலின் மையம்.

கிராம மேம்பாடு, கோயில் மறுநிர்மாணம், கிராம மக்களின் ஒற்றுமை, விவசாய முன்னேற்றம் என்று ஓர் லட்சியவாத நாவலாக தி.ஜா. உயிர்த்தேனைப் படைத்துள்ளார். இத்தகைய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பெண்கள் தலைமையாகவும் துணையாகவும் நின்றால் எப்படி இருக்கும் என்று தி.ஜா. புனைவாக்கிப் பார்க்கிறார். அந்த அளவுக்குப் பெண்களை ஆண்களின் மனம் ஏற்றுக் கொள்ளுமா? அப்படியே மனதளவில் ஏற்றுக் கொண்டாலும் செயல் அளவில் துணை நிற்குமா? அதுவும் 1960களில் என்பன போன்ற கேள்விகள் எழுந்தாலும் அவற்றைக் கழித்து விட்டுப் பார்த்தால் தி.ஜா. காட்டும் கிராமம் ரம்மியமானது, ரசனைக்குள் இழுத்துச் செல்லக் கூடியது.

இந்த நாவல் நா. பார்த்தசாரதியின் நாவலா அல்லது தி. ஜானகிராமனின் நாவலா என்று தோற்ற மயக்கம் தரும் இடத்தை மாற்றி அமைப்பது பெண்களின் மனதை விளக்கிக் காட்டும் தி.ஜா.வின் இடம்தான்.

பெரும்பாலான தி.ஜா.வின் நாவல்கள் கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி இடம் மாறுபவை. இந்த நாவல்தான் நகரத்திலிருந்து கிராமத்தை நோக்கி இடம் மாறுகிறது. கட்டுசெட்டாக நகர்ந்து ஓர் லட்சியவாத முடிவை அடைவதும் இந்த நாவலில் தி.ஜா. செய்திருக்கும் மாற்றங்கள் எனலாம். இருந்தாலும் பெண் மனதின் ஆழத்தைத் தேடி அவர் எழுத்து இந்த நாவலிலும் பயணித்துக் கொண்டே இருக்கிறது.

பெண்களின் அழகும் அன்பும் ஆண்களை எந்தத் தளத்திற்கும் கொண்டு செல்லும் என்பதுதான் நாவலின் அடிநாதம். அந்த அடிநாதத்தைச் செங்கம்மா, அனுசூயா ஆகிய இரண்டு பெண்களின் வழியே நின்று ஒலிக்கிறார் தி.ஜா.

இந்த இரண்டு பெண்களையும் ஒரு தெய்வீகத் தன்மையுடன் படைக்கிறார். சாதாரண மனுஷிகளாக இருக்கும் இந்தப் பெண்களை உள்வாங்கிக் கொண்டு தெய்வீகத் தன்மை கொண்டவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ளும் ஆண்கள் மற்றும் இந்தப் பெண்களின் அழகையும் அன்பையும் எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்கள் என இரண்டு விதமான ஆண்களையும் இந்த நாவலில் தி.ஜா. காட்டுகிறார்.

சென்னையிலிருந்து தனது தந்தை வாழ விரும்பிய கிராமத்து வாழ்க்கையின் ஏக்கத்தால் ஆறுகட்டி கிராமத்திற்கு வருகிறார் பூவராகன். மாயவரம், ஆடுதுறை, கடலங்குடி ஆகிய ஊர்களுக்கு அருகாமையில் உள்ள ஊராக ஆறுகட்டியைக் காட்டுகிறார் தி.ஜா.

ஆறுகட்டியில் சிதைந்து கொண்டிருக்கும் கிராம மக்களின் ஒற்றுமையையும் சிதிலமடைந்து கொண்டிருக்கிற பெருமாள் கோயிலையும் பூவராகன் மறுநிர்மாணம் செய்கிறார். இதற்கெல்லாம் கர்த்தாவாகச் செங்கம்மாவைப் படைக்கிறார்.

தெற்கு ஜில்லாவிலிருந்து தஞ்சை ஜில்லாவுக்கு வருகின்ற பாத்திரமாகச் செங்கம்மா அமைந்தாலும் அப்பாத்திரத்தின் பாஷைகளைத் தஞ்சை ஜில்லாவுக்குரியதாகவே தி.ஜா. கட்டமைத்திருக்கிறார். பார்ப்போரையெல்லாம் அன்பெனும் பாஷையால் தழுவிக் கொள்ளும் அப்பாத்திரம் தஞ்சை ஜில்லாவுக்கு வந்தப் பிறகு தன்னுடைய தெற்கத்திப் பாஷையையும் தஞ்சை ஜில்லாவுக்கு உரியதாக மாற்றிக் கொண்டிருக்கலாம்.

செங்கம்மாவின் மீது மையல் கொண்டு திரியும் பழனிவேலு நாவலின் எதிர்மறைப் பாத்திரம். செங்கம்மாவின் தெய்வீக அழகும் அறிவும் பூவராகனைக் கிராம வளர்ச்சிக்கு முன்னெடுத்துக் கொண்டு போகிறது என்றால் பழனிவேலுவை அதற்கு எதிர்திசையில் கொண்டு போய் நிறுத்துகிறது. முடிவில் பழனிவேலு செங்கம்மாவின் ஆதுரத்தை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக நாவல் முடிகிறது.

பூவராகனுக்குக் கிராமத்துத் தேவதை போல செங்கம்மா என்றால் நகரத்துத் தேவதை போல வாய்ப்பவர் அனுசூயா. அனுசூயாவின் உயிர் நேயம் பூவராகனுக்கு ஆதர்ஷமாகி அதுவே செங்கம்மாவின் வழியாக நிறைந்து வழிவதாகவும் தி.ஜா. காட்டுகிறார்.

அனுசூயாவின் அழகையும் அன்பையும் எதிர்கொள்ள முடியாமல் அவளது இள வயதில் நிகழும் பக்கத்து வீட்டு ஆணின் தற்கொலை அவளை மணம் செய்யாத தனித்த வாழ்க்கையை வாழத் தூண்டுகிறது.

திருமணம் செய்து கொண்ட அனுசூயாதான் செங்கம்மாவா, திருமணம் செய்து கொள்ளாத செங்கம்மாதான் அனுசூயாவா என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு அவ்விரு பாத்திரங்களையும் ஒன்றில் இன்னொன்று திளைத்து நிறைவுறுவதைப் போல நாவலை முடித்திருக்கிறார் தி.ஜா.

நாவலில் வரும் நரசிம்மன், கார்வார் கணேசம் பிள்ளை, சிற்பி ஆமருவி, பூவராகனின் மனைவி ரங்கநாயகி, பாசுர ஓதுவார் வரது என்று ஒவ்வொரு பாத்திரமும் வெவ்வேறு விதமாக மனதில் நிறைபவர்கள்.

கிராம விவசாயத்தை மேம்பாடு செய்ய பூவராகன் அழைத்து வரும் ஓய்வு பெற்ற அதிகாரி பொன்னுச்சாமியும் முக்கியமானவர். இந்தியாவின் பசுமைப் புரட்சி எனும் விவசாயப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தை நாவல் சித்தரிக்கிறது. நாவலில் குறிப்பிடும் சம்பவங்களைச் சற்றேறக்குறைய ஒப்பிட்டுப் பார்த்தால் விவசாயிகளிடமிருந்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் கறாராகக் கணக்கெடுத்ததும், விவசாய உற்பத்தியை அதிகரிக்க ரசாயன உரங்களைத் திணித்ததுமான அந்தக் கால கட்டத்துக் கிராமத்தைத்தான் தி.ஜா. நாவலில் கொண்டு வருகிறார். கிராமங்களில் நிலைபெற்றிருந்த கோயில் மானியம், குருக்கள் மான்யம், தலையாரி மான்யம், பட்டா மான்யம் போன்றவற்றையும் சுட்டுகிறார்.

நிறைவாக மனித மனங்களின் சிக்கல்களையும் முடிச்சுகளையும் விளக்கியும் அவிழ்த்தும் ஓர் ஆன்மிக தளத்தில் நாவலை நிறைவு செய்கிறார்.

எப்படி இருந்த கிராமம் இப்படி மாறி விட்டதே என்று நினைக்கும்படி ஒரு கிராமம் உங்கள் கற்பனையில் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு கிராமத்தையும் கிராமத்து மனிதர்களையும்தான் ‘உயிர்த்தேன்’ நாவலில் படம் பிடித்துக் காட்டுகிறார் தி.ஜானகிராமன்.

இந்த நாவல் தி.ஜா.வின் கிராமம் குறித்த ஒரு கனவாகவும் இருக்கலாம். அந்தக் கனவில் ஆங்காங்கே கொஞ்சம் எதார்த்தமும் கலந்து இருக்கிறது எனலாம். வாசிப்பின் அனுபவத்திலிருந்து கூறுமிடத்து, பெண்களின் அகத்திலிருந்து பெருகிவரும் பேரன்பை உயிர்த்தேனாக உருவகித்து நாவலை வாசிப்போரின் மனதுகளில் வழிய விடுகிறார் தி.ஜா.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...