9 Oct 2023

தி.ஜானகிராமனின் ‘ஆன்பே ஆரமுதே’ – ஓர் எளிய அறிமுகம்

தி.ஜானகிராமனின் ‘ஆன்பே ஆரமுதே’ – ஓர் எளிய அறிமுகம்

பாலியல் உறவுச் சிக்கலுக்குள் நின்று பேசும் தி.ஜானகிராமன் அதற்கு அப்பால் நின்று பெண் மனதைப் பேசிய நாவல் ‘அன்பே ஆரமுதே’

கல்கி இதழில் 1961 – 1962 இல் தொடராக வந்தத் தி.ஜா.வின் தொடர்கதையான ‘அன்பே ஆரமுதே’ பிற்பாடு நூல் வடிவில் நாவல் வடிவம் பெற்றிருக்கிறது.  அதன் முதல் பதிப்பு 1965 இல் வெளியாகியிருக்கிறது.

மண முடிக்கும் நாளன்று ஓடிப் போகிறார் அனந்தசாமி. ஓடிப் போனவர் சன்னியாசியாகி விடுகிறார். சன்னியாசத்தில் கற்ற வைத்தியத்தோடு சென்னைப் பட்டணத்தில் நிலைகொள்ளும் போது மக்களுக்கு உதவும் வைத்தியராகவும் இருக்கிறார். கடைசிக் காலத்தில் தாயைப் பரிவாகப் பார்த்துக் கொள்கிறார். இல்லறத்தில் நுழையாத பட்டினத்தாராக அவர் வாழ்க்கைப் போய்க் கொண்டிருக்கிறது.

அவர் எந்தப் பெண்ணை மணம் முடிக்காமல் ஓடிப் போனாரோ அந்தப் பெண்ணான ருக்குமணி முப்பது ஆண்டுகள் கழித்து அவரைப் பார்க்க நேரிடுகையில் அவரோடு வாழ நினைத்தால் எப்படியிருக்கும் என்று யோசிக்கிறார் தி.ஜா. அந்த யோசனையை விஸ்தாரப்படுத்தும் போது ‘அன்பே ஆரமுதே’ நாவல் உண்டாகிறது.

ருக்குமணி எப்படி அனந்தசாமியிடம் வந்து சேர்கிறார், அதற்குக் காரணமாகும் சுப்புசாமி குடும்பத்தின் பின்னணி என்ன என்பதிலிருந்து நாவலின் ஓட்டம் துவங்குகிறது. நாவலின் ஓட்டத்தில் அனந்தசாமி சென்னையின் மூலை முடுக்கெல்லாம் ஓடி வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார்.

அனந்தசாமியின் வைத்தியத்தில் பிரபல திரை நடிகரான அருண்குமாரும் அவரது குடும்பமும் வந்து சேர்கிறது. இந்தக் கூட்டுச் சேர்க்கையோடு சுப்புசாமி குடும்பத்தின் சந்திரா – சினிமா ஆசையில் சென்னை வரும் குசுமா என்ற டொக்கி – சந்திரா மற்றும் டொக்கியை நேசிக்கும் ரங்கன் என்ற முக்கோணக் காதல் கதை நாவலின் ஓட்டத்தை இழுத்துச் செல்கிறது.

சந்திராவின் தெய்வீக அழகு ரங்கனைத் தடுமாறச் செய்வதாக தி.ஜா. காட்டுகிறார். குசுமா என்ற டொக்கி பிரபல நடிகர் அருண்குமாரிடம் தன்னை இழந்த போதும் வெகுளித்தனமான அவளது அழகே ரங்கனுக்குப் பிடித்தமாக இருப்பதாகவும் சொல்கிறார்.

ரங்கன் சந்திராவுக்காகவா, குசுமா எனும் டொக்கிக்காகவா என்ற முடிச்சு நாவலில் விழும் இடத்தில் ரங்கன் தற்கொலை செய்து கொள்கிறான். ஏன் இந்த தற்கொலை நேரிடுகிறது என்பதை யோசிக்கும் போது பெண்மையை எதிர்கொள்ளும் பயம் அனந்தசாமியைத் துறவியாக ஓடச் செய்கிறது என்றால் ரங்கனைத் தற்கொலைச் செய்யத் தூண்டி விடுவதாகக் கருதவும் இடம் இருக்கிறது. ஒருவேளை அனந்தசாமியைப் போல ரங்கனும் துறவியாக ஓடியிருந்தால் அவன் விரும்பியபடி டொக்கி பின்னொரு காலத்தில் ரங்கனை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடுமோ என்னவோ! அல்லது ரங்கனின் மனமே மாறிப் போய் சந்திராவை நாடியிருக்குமோ என்னவோ! அதற்குள் சம்பவங்கள் எதிர்பாராத விதமாக நடந்து முடிந்து நாவலை முடிவுக்குக் கொண்டு வந்து விடுகின்றன.

ரங்கனின் மறைவுக்குப் பின் துறவிகளைப் போலச் சேர்ந்து வாழும் அனந்தசாமிக்கும் ருக்குமணிக்கும் பெறாத குழந்தையைப் போல நாவலின் இறுதியில் டொக்கி வந்துச் சேர்கிறாள், சந்திரா சுப்புசாமியின் மகன் குடும்பத்தாரோடு வெளிநாடு செல்கிறாள் என்பதாக நாவலை முடிவுக்குக் கொண்டு வருகிறார் தி.ஜா.

நாவலில் அனந்தசாமி குடும்பத்தைத் துறந்து விட்ட இல்லறத் துறவியாக வாழ்கிறார் என்றால் ருக்குமணி குடும்பத்தோடு இணைந்து வாழும் இல்லறத் துறவியாக வாழ்கிறார். தனித்து வாழ்வதே அனந்தசாமிக்கு உவப்பாகவும் அந்தத் தனிமை வாழ்வே அவருக்கு மனப் பாதுகாப்பையும் தருகிறது. ஆனால் ருக்குமணிக்கு அவ்வபோது எழும் அனந்தசாமி குறித்த நினைப்போடு என்றாவது ஒரு நாள் அனந்தசாமியை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் போது அவர் ஓடிப் போனது குறித்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மன ஏக்கத்தோடு  முப்பதாண்டுகள் கழிந்தோடி விடுகின்றன.

தனக்காகவே முப்பதாண்டுகள் காத்திருந்த ருக்குமணி அழைக்கும் போது அதைத் தட்டாமல் இருக்கும் அனந்தசாமி அந்த இடத்திலும் தடுமாறுகிறார். இந்த முறை ருக்குமணி அவரை ஆற்றுப்படுத்துகிறார். ஒருவேளை திருமண நாளன்று ருக்குமணி அனந்தசாமியைப் பார்த்துச் சில நிமிடங்கள் பேசும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தாலும் நாவலின் முடிவு வேறாகி இருக்கக் கூடும்.

தி.ஜா.வின் நாவல்கள் அனைத்திலும் பெண் பாத்திரங்கள் ஏதோ ஓர் அபூர்வத்தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ‘மோகமுள்’ யமுனாவிடமும், ‘அம்மா வந்தாள்’ அலங்காரத்தம்மாளிடம் இந்த ஆபூர்வத்தைத் தரிசிக்காமல் வாசிக்க முடியாது. அந்த அபூர்வத்தை இந்த நாவலிலும் ருக்மணியிடம் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த அபூர்வத்தன்மை வேறு மாதிரியானது. எந்த விதமான பாலியல் நோக்கமும் துளியும் இல்லாதது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற கட்டுப்பெட்டித் தன்மையைத் தன்னையறியாமல் ஏற்றுக் கொள்ளும் பாரம்பரிய இந்திய பெண் தன்மையானது கல்வி கற்ற நிலையிலும் தன்னையறியாமல் பிரதிபலிக்கும் அபூர்வ தன்மை வாய்ந்தது. இதன் பின்னணியில் சில கேள்விகள் எழுகின்றன.

மணக்கோலத்தில் தன்னை விட்டு ஓடிப் போன அனந்தசாமிக்காக ருக்மணி ஏன் முப்பதாண்டுகள் காத்திருக்க வேண்டும்? இதற்கான பதிலைத் தி.ஜா. இந்தியப் பாரம்பரியத்தில் உண்டாகும் பெண் மனதின் காவியத்தன்மையாகத் தருகிறார் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

ருக்குமணி என்ற பெண் மனதில் எந்த விதமான கலாச்சார மீறல்களையும் அவர் உருவாக்கவில்லை. இதே போன்ற தன்மையை அவர் குசுமா என்ற டொக்கியிடம் உருவாக்குகிறார் என்றாலும் அவள் திரைநடிகரிடம் தன்னை இழப்பதற்கு ஏதோ சில வகைகளில் சினிமா வாய்ப்புகளும் பணம் குறித்த எதிர்பார்ப்புகளும் பின்னணியாக இருக்கின்றன.

வேறெந்த பாலியல் உறவுச்சிக்கலையும் தி.ஜா. இந்த நாவலின் எந்த இடத்திலும் கொண்டு வந்து விடவில்லை. தன்னை இன்னொருவரிடம் இழந்த பின்பு வேறொருவருக்கு மணமாக விரும்பாத மனநிலையையும், இன்னொருத்தி விரும்பிய ஒருவரை தன்னுடையவனாக ஆக்கிக் கொள்ள மறுக்கும் உறுதிநிலையையும் டொக்கியிடம் வழக்கமான இந்தியப் பெண் தன்மையைச் சார்ந்தே வெளிப்படுத்துகிறார்.

நாவலில் அனந்தசாமி திருமண வாழ்க்கையைப் பயந்து விலக்குகிறார் என்றால் டொக்கி தைரியமாக விலக்குகிறாள். நாவலில் யாரும் யாருடைய முடிவிலும் குறுக்கிடாமல் கடந்து போகிறார்கள்.

விதிக்கப்பட்ட வாழ்க்கையை விதியின் போக்கில் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் போல வாழ்க்கையைப் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் வாழ்க்கை குறித்த ஆழ்ந்த விவாதத்தை நிகழ்த்துகிறார்கள். விதியின் போக்கில் ஏற்றுக் கொள்ளும் வாழ்க்கையைத் தங்களின் விவாதத்தின் மூலம் கண்டடைகிறார்கள்.

துறவிக்கேது குடும்பம் என்ற வினாவிற்குத் துறவிக்கு ஒரு குடும்பம் உண்டானால் எப்படியிருக்கும் என்ற பதிலைக் கண்டடைவதைப் போலத் தி.ஜா. ‘அன்பே ஆரமுதே’ என்ற இந்த நாவலைப் படைத்திருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் கட்டுப்பெட்டித்தனமாக இயங்கும் பெண்களின் மனதைத்தான் இந்த நாவலில் தி.ஜா. காட்டுகிறார். புத்தர் யசோதரையை மணக்க இருக்கும் இடத்தில் ஓடியிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற கேள்வியின் நீட்சியாகவும் இந்த நாவலைப் பார்க்கலாம். நாவலிலும் அனந்தசாமி புத்தராகவும், ருக்குமணி யசோரையாகவும் பொருந்திப் போகும் ஏகப்பட்ட கூறுகள் ஆங்காங்கே இருக்கின்றன.

தி.ஜா.வின் சூழல் சித்தரிப்புகள் எப்போதும் ஒரு மயக்கத்தைத் தரும். மோகமுள்ளில் கும்பகோணத்துக் காவிரியைக் காட்டும் போது உண்டாகும் மயக்கத்தைப் போன்று இந்த நாவலில் டில்லியின் யமுனையைப் பற்றிச் சொல்லும் போது ஒரு மயக்கம் உண்டாகத்தான் செய்கிறது. அந்த மயக்கத்தைத் தாண்டி டில்லியைப் பெயர்த்தெடுத்து சென்னையில் கொண்டு வைப்பதுதான் இந்த நாவல். அவ்வகையில் அந்தக் காலத்துச் சென்னையைத் தரிசிக்க தி.ஜா.வின் ‘அன்பே ஆரமுதே’ வில் ஒரு வாசிப்புப் பயணத்தைச் செய்து பார்க்கலாம்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...