18 Oct 2023

தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

தி.ஜானகிராமனின் பிரசித்திப் பெற்ற நாவல்களில் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய இரு நாவல்களும் முதலிரண்டு இடங்களில் இருப்பவை.

தி.ஜா.வின் நாவல்களில் நான் முதன் முதலாகப் படித்தது ‘அம்மா வந்தாள்’ நாவலைத்தான். அந்த வாசிப்பு என்னுடைய பத்தொன்பது அல்லது இருபது வயது கால கட்டத்திற்குள் நான் ஆசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நிகழ்ந்தது. என்னுடைய தமிழாசிரியர் தி.செல்லையா இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் வாசிக்க வேண்டிய நூல்களின் கட்டாயப் பட்டியலில் தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலை முக்கிய இடத்தில் வைத்திருந்தார். அவர் தந்த பட்டியலில் இருந்தது என்பதற்காக வாசிக்கத் துவங்கி தி.ஜா. என்னை முழுமையாக ஆக்கிரமித்த நாவல் என்று இந்த நாவலைக் குறிப்பிட விழைகிறேன்.

சமீபமாக தி.ஜா.வின் எழுத்துகளை மீண்டும் வாசித்த போது ‘அம்மா வந்தாள்’ நாவலையும் வாசித்தேன். எந்த இடத்திலும் சலிப்போ, அலுப்போ ஏற்படவில்லை. அன்று வாசித்த போது எத்தனை புதுமையாக இருந்ததோ அதே அளவுக்கு புதுமையில் எவ்வித குழைவும் இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போது புதுப்புது வாசிப்பனுவத்தைத் தரும் நாவலாக எனக்கு ‘அம்மா வந்தாள்’ இன்றும் இருந்து கொண்டு இருக்கிறது.

நாவலின் மையம் என்று பார்த்தால் குடும்ப வாழ்க்கையின் ஒழுக்கம் தவறும் ஒரு தாய் மகன் மூலமாகப் பிராயச்சித்தம் அடைய நினைத்தால் எப்படி இருக்கும் என்பதுதான்.

அலங்காரத்தம்மாள் ஒழுக்கம் தவறுவதை யாரும் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இல்லை. ஒரு கட்டத்தில் அது தவறு எனப் புலப்படும் போது அதைப் பாவமாகக் கருதி மகன் அப்புவின் மூலமாகப் பிராயச்சித்தம் தேட நினைக்கிறாள். அப்புவை வேத சாஸ்திரத்தில் ரிஷியைப் போலாக்கி அந்த ரிஷியின் காலில் விழுந்து பாவத்தைக் கழுவுவது அலங்காரத்தம்மாளின் மனதில் தோன்றும் பிராயச்சித்தம். அந்தப் பிராயச்சித்தம் நிறைவேறியதா, இல்லையா என்பதைச் சொல்வதே ‘அம்மா வந்தாள்’ என்ற நாவல்.

தி.ஜா.வின் நாவல்களில் ஒரு சிறுகதையைப் போல விரியும் நாவல் இது. ஒரு சிறுகதைக்கு உண்டான அத்தனை முகாந்திரத்தோடும் அடுத்தடுத்த திருப்பங்களோடு விரியும் ஆகப் பெரிய சிறுகதையைப் போலத் தோற்றம் தரும் தன்மையும் இந்த நாவலுக்கு உண்டு.

பெண்ணையும் பெண் மனதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் தன்மை தி.ஜா.வின் அனைத்து நாவல்களுக்கும் உண்டு. அந்த மிகையான தன்மை இந்த நாவலுக்கு அதிகமாகவே உண்டு. இந்த நாவலை எழுதியதால் பிரதிஷ்டம் செய்யப்பட்ட துர்பாக்கிய நிலைக்கு ஆளான அனுபவமும் தி.ஜா.வுக்கு உண்டு. இந்த அனுபவத்திற்குப் பிறகு கலையின் மூலமாக வெளிப்படும் உண்மை தன்மையைக் காண வேண்டும் என்றும் அதில் காட்டப்படும் சம்பவங்கள் அனுபவங்களின் புனைவு கலந்த கூட்டுச்சேர்க்கை என்பதை வாசிப்பவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் முன் வைத்தார்.

அலங்காரத்தம்மாளை அவரது கணவர் தண்டபாணி எப்படி உண்மை தெரிந்த பின்னும் விலக்காமலோ, ஓடிப் போகாமலோ அப்படியே ஏற்றுக் கொள்கிறார் என்பதை அவரது குணாதிசயமாக முன் வைக்கிறார் தி.ஜா. விவரம் தெரிந்த பின்னர் அலங்காரத்தம்மாளின் மூத்தச் சம்பந்தி குடும்பத்தைத் தவிர அவரை யாரும் தள்ளி வைப்பதில்லை. இரண்டாவது மகனும் மருமகளும் மௌனமாக ஏற்றுக் கொள்வதாகவே தி.ஜா. நாவலைக் கொண்டு செல்கிறார். இந்த விஷயம் மூன்றாவது மகனான அப்புவுக்குத் தெரிய வரும் போது அப்பு எடுக்கும் முடிவால் அலங்காரத்தம்மாள் தன் மகன் குறித்து முடிவு செய்து வைத்திருந்த வேத ரிஷி என்ற பிராயச்சித்தம் கலைந்து கடைசியில் காசிக்குச் செல்வதாக முடிவெடுக்கிறாள்.

நாவலில் வரும் அலங்காரத்தம்மாள் மற்றும் இந்து ஆகிய இருவரும் முக்கியமான பெண் கதா பாத்திரங்கள். இந்துவின் கணவன் பரசு இறந்து போகாமல் இருந்திருந்தால் அவளும் அலங்காரத்தம்மாள் போலத்தான் இருந்திருப்பாளோ அல்லது அலங்காரத்தம்மாளின் கணவர் தண்டபாணி இறந்து போயிருந்தால் அலங்காரத்தம்மாள் இந்துவைப் போல இருந்திருப்பாளோ என நினைக்கும்படி செய்திருப்பார் தி.ஜா. இந்த இரு பெண்களுமே வலுவாக இருந்து இந்த நாவலை நகர்த்துபவர்கள். மற்ற ஆண் பாத்திரங்கள் அப்பு உட்பட இந்த இரு பெண்களின் முடிவுகளுக்கு ஏற்ப அலைக்கழிபவர்களாகவே நாவலில் இடம் பெறுகிறார்கள்.

அனைத்துப் பாத்திரங்களும் நாவலில் அந்தரங்கமாக விழும் முடிச்சுகளை அவிழ்ப்பவர்கள். ஏதோ ஒரு வகையில் நாவலில் பின்னர் நிகழும் நிகழ்வுகளுக்குக் காரணமாகுபவர்கள்.

இந்த நாவலை மூன்று அத்தியாயங்களாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு அத்தியாயத்திலும் அந்த நிலப் பின்னணியோடு காட்சிகளை விரிக்கும் போது புதுப்புது சித்திரங்களை தி.ஜா. உண்டு பண்ணி விடுகிறார். சித்தன்குளத்தின் வேத பாடசாலையில் தொடங்கும் நாவல் சென்னைப் பட்டணத்துக்குப் போய் மீண்டும் சித்தன்குளத்து வேதபாடசாலைக்கே திரும்பி அந்த வேத பாடசாலைக்கு அலங்காரத்தம்மாள் வந்தாள், வந்து பார்த்த பின்பு காசிக்கு செல்கிற முடிவை எடுக்கிறாள் என்பதாக நாவலை முடிக்கிறார் தி.ஜா.

ஆணாதிக்கம் மிகுந்த காலக் கட்டத்தில் இவ்வளவு வலுவாகப் பெண் மனதை அழுத்தமாகவும் ஆழமாகவும் புனைந்த வகையில் தி.ஜா. முக்கியத்துவம் பெறும் எழுத்தாளராகிறார். வெறுமனே பெண்களின் காமம் சார்ந்த படைப்புகளாக தி.ஜா.வின் பெண் பாத்திரங்களைப் பாத்து விட முடியாது. அவர்களுக்குப் பிடித்தமான ஆண்களை அவர்கள் தழுவ விரும்புகிறார்கள். அதற்குச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் சமூகக் கட்டுபாடுகளும் எதிராக இருந்தாலும் அதை மீற அவர்கள் தயங்குவதில்லை. அவர்களின் மனதில் பிரவகிக்கும் அன்பு வழிந்தோடும் தடத்திலேயே அவர்களும் வழிந்தோட நினைக்கிறார்கள்.

தி.ஜா.வின் நாவல்களில் பெண் பாத்திரங்களின் ஆகர்ஷத்திற்கு முன்னால் ஆண் பாத்திரங்கள் அவ்வளவாக எடுபடுவதில்லை என்றும் சொல்லலாம். பெண் பாத்திரங்களே வலிமையான பாத்திரங்களாக இடம் பெற்று ஆண் பாத்திரங்களை வழிநடத்துகிறார்கள். ‘அம்மா வந்தாள்’ நாவலிலும் அத்தகைய வழிநடத்தலையே தி.ஜா. செய்கிறார்.

பெண்கள் எடுக்கும் முடிவின் படியே இந்த உலகம் சுழல வேண்டும் என்கிற அவருடைய எதிர்பார்ப்பை இந்த நாவலிலும் கனக்கச்சிதமாக தி.ஜா. நிறைவேற்றி விடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படித்தான் அலங்காரத்தாம்மாள் முடிவு எடுக்கிறாள், இந்து முடிவு எடுக்கிறாள், மூன்றாவது முக்கியமான பெண்மணியான பவானியம்மாளின் முடிவும் கூட அப்படிப்பட்டதுதான். இம்மூவரின் முடிவுகளுக்குக் கட்டுபட்டதாக நாவலின் போக்கு அமைகிறது.

தி.ஜா.வின் ‘அம்மா வந்தாள்’ நாவல் மன விழைவின் மற்றும் சமூக மீறலின் செவ்வியலான ஒரு காலத்தின் வெளிப்பாடு எனலாம்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...