16 Oct 2023

பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்புக் குறிப்புகள்

பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்புக் குறிப்புகள்

பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கான குறிப்புகளுக்கு அளவில்லை. பட்டியலிட்டால் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். என்றாலும் ஒரு சில அத்தியாவசியமான காலத்திற்கேற்ற சில குறிப்புகளை இங்கே தர வேண்டும் போலிருக்கிறது.

பெரும்பாலான குறிப்புகள் பொதுப்படையான குறிப்புகள்தான். கவனத்திலும் நினைவிலும் இருந்தாலும் செயல்பாட்டில் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை காண வேண்டியிருக்கிறது.

இனி அந்தக் குறிப்புகளைப் பார்த்து விடுவோம்.

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுங்கள். பழக்க வழக்கங்கள் பலவாயினும் இந்த மூன்றையும் முக்கியமாகப் பழக்கி விடுங்கள்.

ü அதிகாலையில் எழுதல்

ü தன்னுடைய கடமைகளைத் தானே செய்தல்.

ü மற்றவர்களிடம் மதித்துப் பேசுதல் மற்றும் பழகுதல்.

குழந்தைகளைச் சரியான வயதில் பள்ளியில் சேருங்கள். பெற்றோர் மற்றும் உற்றாரின் அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் மூன்று மற்றும் நான்கு வயதுகளில் பள்ளியில் சேர்ப்பதைத் தவிருங்கள்.

குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள். அவர்களோடு மனம் திறந்து பேசுங்கள். அவர்கள் சொல்வதற்குக் காது கொடுங்கள். ஒரு வேளை உணவையாது அவர்களோடு அமர்ந்து சாப்பிடுங்கள்.

குழந்தைகளின் ஆர்வத்தையும் கற்கும் திறனையும் புரிந்து கொள்ளுங்கள். ஓவியத்தில் ஆர்வமாக இருக்கும் ஒரு குழந்தையிடம் கணக்கில் ஏன் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கவில்லை என்று கோபப்படாதீர்கள்.

குழந்தைகளோடு விளையாடுங்கள். குழந்தைகளோடு பெற்றோர்கள் விளையாடுவது தவறே கிடையாது. அவர்களைச் சக குழந்தைகளோடு ஓடி ஆடி விளையாட அனுமதியுங்கள். சில நேரங்களில் அப்படி விளையாடும் போது சிறு சிறு காயங்கள் ஏற்பட்டால் அதற்காக விளையாட அனுப்புவதை நிறுத்தாதீர்கள்.

தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் போது அனுசரணையாகப் பேசுங்கள். இரவில் தூங்குவதைக் கவனியுங்கள். கண் விழித்துப் படிப்பதை ஊக்குவிக்காதீர்கள். அதே நேரத்தில் அதிகாலையில் எழுந்து படிப்பதைப் பழக்கப்படுத்துங்கள்.

அளவாகத் தொலைக்காட்சி மற்றும் அலைபேசி பார்ப்பதை அனுமதியுங்கள். அவற்றின் பயன்பாடு அளவுக்கதிமாகப் போகுமானால் வெளிப்பயணங்களுக்குத் திட்டமிட்டு அவர்களை அழைத்துச் செல்லுங்கள். நண்பர்கள் மற்றும் உறவினர் இல்லங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். மாலை நேர நடைபயிற்சி, நூலகம் சென்று வாசித்தல், தினசரி நாளிதழ் வாசித்தல் என்று அவர்களை மடை மாற்றுங்கள்.

குழந்தைகளைத் தனிமைப்படுத்தி விடாமலும் அவர்கள் தனிமையாகி விடாமலும் சமூகத் தொடர்பில் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். சிறுசிறு தவறுகள் செய்யும் போது கண்டிப்பதை விட அத்தவறை எப்படி வேறு மாதிரியாகச் செய்து எப்படி சரி பண்ணியிருக்கலாம் என்று அவர்களின் கருத்துகளைக் கேட்பதைப் போலக் கேட்டு அவர்களைப் பொறுப்புள்ளவர்களாகச் சிந்திக்கக் கூடியவர்களாக மாற்றுங்கள்.

சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். நுகர்வு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ஊதாரித்தனத்தை மாற்றிச் சிக்கனமாக இருப்பது குறித்து அடிக்கடி அவர்களிடம் பேசுங்கள், விவாதம் செய்யுங்கள். எளிமையாகவும் இயல்பாகவும் இருப்பதன் முக்கியத்துவத்தை எப்போதும் எடுத்துச் சொல்லுங்கள்.

அனுபவங்களையும் கதைகளையும் குழந்தைகளிடம் அதிகம் சொல்லுங்கள். அவர்களின் அனுபவங்களையும் அவர்கள் சொல்லும் கதைகளையும் கேளுங்கள். குழந்தைகளின் படைப்பாற்றலும் மகிழ்ச்சியும் அதிகரிக்க இதை விட வேறு வழிகள் இல்லை.

சரியான உணவுப் பழக்கத்தையும் உடலோம்பல் முறைகளையும் கற்றுக் கொடுங்கள். பெற்றோர்களாகிய நீங்களும் அப்படியே ஒழுகுங்கள்.

ஒவ்வோரு நாளும் அவர்களுக்கு நிகழ்ந்தவைப் பற்றி அவர்களிடம் அவர்களின் சொற்களில் கேட்டறியுங்கள். உங்களுக்கு நிகழ்ந்தவைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவற்றைத் திறந்த மனதோடும் நகைச்சுவையான பேச்சோடும் மதிப்பாய்வு செய்யுங்கள். குழந்தைகளையும் மதிப்பாய்வு செய்ய அனுமதியுங்கள்.

வீட்டு வேலைகள் செய்யும் போது அவசியம் குழந்தைகளையும் அவ்வேலைகளின் ஒரு பகுதியாக்குங்கள். நீங்கள் ஒரு பெரிய தட்டை அலம்பினால் அவர்களிடம் ஒரு சிறிய தட்டைக் கொடுத்து அலம்பச் சொல்லுங்கள். நீங்கள் வீட்டைச் சுத்தம் செய்தால் அவர்களுக்கும் அதில் சிறிய ஒரு வேலையைக் கொடுங்கள். கடைத்தெருக்களுக்குச் சென்று வருவது, சிறு சிறு பொருட்கள் வாங்கி வருவது போன்றவற்றைச் செய்யச் சொல்லுங்கள்.

குடும்ப கஷ்டத்தை எடுத்தச் சொல்வதை விட குடும்ப வரவு – செலவு திட்டமிடலை அவர்களோடு இணைந்து செய்யுங்கள். தினசரி வரவு – செலவு கணக்குகளை அவர்களையே எழுதி வைக்க சொல்லுங்கள்.

அனைவரும் அமர்ந்து அரை மணி நேரம் தினந்தோறும் படிப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். பிள்ளைகள் பாடப்புத்தகங்களைப் படிக்கும் போது நீங்கள் குறைந்தபட்சம் தினசரிகளையாவது படியுங்கள். அல்லது அவர்களுக்குச் சொல்வதற்கு ஏற்றாற் போல ஒரு கதைப் புத்தகத்தையாவது படியுங்கள்.

இதென்ன ஓர் அறிவுரைக்கொத்து போல இருக்கிறது என்று சொன்னால் அதுவும் சரிதான். இதில் பெற்றோர்களுக்கான அறிவுரைகள் அதிகம். குழந்தைகளுக்கான அறிவுரைகள் கம்மி, ஆனால் வழிநடத்துதல்கள் குறித்த கருத்துகள் அதிகம். எப்படி வழிநடத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளாகவும் இவற்றையும் கொள்ளலாம். உங்கள் கருத்துகளையும் சொன்னால் இன்னும் ஆலோசிக்கலாம்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...