31 Jul 2023

தக்காளி பாட்டு

தக்காளி பாட்டு

கடவுள் வந்தால் என்ன கேட்பேன்

தக்காளி விலையைக் குறைக்கக் கேட்பேன்

உறவினர் வீடுகளுக்குச் சென்றால் என்ன கேட்பேன்

தேநீர் வேண்டாம் தக்காளி சூப் கேட்பேன்

விருந்திற்குச் சென்றால் என்ன கேட்பேன்

பிரியாணி வேண்டாம் தக்காளி சாதம் கேட்பேன்

என்ன சமைக்க என்றால் என்ன கேட்பேன்

தக்காளி தொக்கு சமைக்கக் கேட்பேன்

ஞானப்பழம் கிடைத்தால் என்ன கேட்பேன்

அந்தப் பழம் எனக்கெதற்கு

தக்காளிப் பழம் தரக் கேட்பேன்

லாரியில் வேண்டுமானால் என்ன கேட்பேன்

மணல் லாரி வேண்டாம் தக்காளி லாரி கேட்பேன்

காளி வந்து நின்றாலும் என்ன கேட்பேன்

தக்காளியைக் கையில் தரக் கேட்பேன்

என்ன வாங்கி வர என்பவரிடம் என்ன கேட்பேன்

தக்காளி மட்டும் வாங்கி வரக் கேட்பேன்

பத்து பவுன் நகையா பத்து கிலோ தக்காளியா என்றால்

பத்து கிலோ தக்காளியே கேட்பேன்

பந்தோபஸ்து பாதுகாப்பு என்றால் என்ன கேட்பேன்

வீட்டிலிருக்கும் பத்து கிலோ தக்காளிக்கு

போலீஸ் பாதுகாப்பு கேட்பேன்

தேவைப்பட்டால் ராணுவ பாதுகாப்பும் கேட்பேன்

சீர் சனத்தி நகை நட்டு சாமான்களா என்றால்

தக்காளி மட்டும் போதும் என்று கேட்பேன்

பங்குகள் பிட்காய்ன்கள் வணிகத்தை நிறுத்தி

தக்காளியைப் பட்டியலிடக் கேட்பேன்

ஓட்டுக்குத் துட்டு வேண்டுமா என்றால்

தக்காளி கால் கிலோ தரக் கேட்பேன்

ஐநூறு ரூபாய் நோட்டு கூட வேண்டாம்

ஐந்து தக்காளி போதும் என்பேன்

நான் ஆட்சிக்கு வந்தால்

குடும்பத்திற்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாய்க் கொடுப்பேன்

வெக்காளி அம்மா கடைசியாக உன்னிடம் ஒன்று கேட்பேன்

தக்காளி பாட்டு இதற்கு சாகாவரம் தரக் கேட்பேன்

*****

30 Jul 2023

படிப்பதற்கு எது அவசியம்?

படிப்பதற்கு எது அவசியம்?

படிப்பதற்கு இரண்டு அம்சங்கள் முக்கியம் என்று நினைக்கிறேன்.

ஒன்று பயிற்சி.

மற்றொன்று ஒழுக்கம்.

இந்த இரண்டும் இருந்தால் நீங்கள் எதையும் படிக்க முடியும். எப்பேர்ப்பட்ட கடினமான பாடத்தையும் படித்து முடிக்க முடியும். மிகப் பெரிய தடிமனான புத்தகத்தையும் வாசித்து முடித்து விட முடியும்.

மருத்துவம் படிப்பதோ, பொறியியல் படிப்பதோ முடியாது என்று நீங்கள் நினைத்தாலும் பயிற்சியும் ஒழுக்கமும் இருந்தால் நீங்கள் அதையும் படித்து முடிக்க முடியும்.

முதலில் பயிற்சி என்றால் என்னவென்று பார்த்து விடுவோம்.

எதில் நீங்கள் நிபுணத்துவம் பெற நினைக்கிறீர்களோ, அதில் நிபுணத்துவம் பெறுவதற்கு எத்தனை முறை செய்து பழக வேண்டுமோ அத்தனை எண்ணிக்கையிலான செய்முறைகள்தான் பயிற்சி என்பது.

ஒரு பத்தியை ஐந்து முறை படித்தால்தான் உங்களால் மனதில் கொள்ள முடியும் என்றால் நீங்கள் ஐந்து முறை படிப்பதுதான் உங்களுக்கான பயிற்சி. அதுவே அதே பத்தியை ஒருவருக்கு பத்து முறை படித்தால்தான் மனதில் கொள்ள முடியும் என்றால் பத்து முறை படிப்பதுதான் அவருக்கான பயிற்சி. வேறொருவருக்கு நூறு முறை படித்தால்தான் அந்தப் பத்தியை மனதில் கொள்ள முடியும் என்றால் நூறு முறை படிப்பதுதான் அவருக்கான பயிற்சி.

பயிற்சி ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முடிவில் அடையும் நிபுணத்துவம் என்பது ஒன்றாகத்தான் இருக்கும். பயிற்சியில் செய்ய வேண்டிய எண்ணிக்கை முறைகளைக் கணக்கில் கொள்ளக் கூடாது. முடிவில் அடைய வேண்டிய நிபுணத்துவத்திற்கு முன் எண்ணிக்கை ஒரு விசயமே அல்ல.

நீங்கள் நிபுணத்துவத்தை அடைய எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். அதற்குக் கணக்கும் கிடையாது, எல்லையும் கிடையாது. நிபுணத்துவத்தை அடையும் வரை சளைக்காமல் திரும்ப திரும்ப செய்வதற்குப் பெயர்தான் பயிற்சி என்பது.

அடுத்ததாக ஒழுக்கம் என்றால் என்ன என்பதையும் பார்த்து விடுவோம். நீங்கள் நிபுணத்துவம் அடைவதற்காக அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பயிற்சியைத் துவக்கி விட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தினந்தோறும் பயிற்சியைத் துவக்கி விடுவதுதான் ஒழுக்கம்.

ஏதோ ஒரு நாள் சரியாக ஐந்து மணிக்குப் பயிற்சியைத் துவங்கி விட்டு அடுத்த நாளே ஆறு மணிக்குப் பயிற்சியைத் துவங்கினால் அது ஒழுக்கமாகாது. ஒரு வாரம் முழுவதும் சரியாக ஐந்து மணிக்கெல்லாம் பயிற்சியைத் துவங்கி விட்டு அடுத்த வாரத்திலிருந்து விருப்பப்பட்ட நேரத்திற்கெல்லாம் பயிற்சியைத் துவங்குவதும் ஒழுக்கம் ஆகாது. ஒரு மாதம் வரை சரியாக இருந்து விட்டு அடுத்து வரும் மாதங்களில் பிசகினாலும் ஒழுக்கம் தவறுவதாகவே அர்த்தமாகும்.

ஒழுக்கம்தான் பயிற்சியின் நோக்கத்தை சரியாக அடைவதற்கு வழிகாட்டும் நிர்வாகி எனலாம். ஒழுக்கமில்லாத பயிற்சி விழலுக்கு இறைந்த நீரைப் போலாகி விடும். நிபுணத்துவம் எனும் இலக்கை அடையும் வரை பயிற்சிக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் காலத்தில் சரியாகத் துவங்கிச் சரியாக முடிப்பதுதான் சரியான ஒழுக்க நியதியாகும்.

ஓர் இலக்கை அடைவதோ  அல்லது நிபுணத்தைப் பெறுவதோ ஒழுக்கமும் பயிற்சியும் இணைந்த கரங்களாய் இருக்கும் போதே சாத்தியமாகிறது. இரண்டு கால்களும் ஓர் இலக்கை நோக்கி நடப்பதைப் போலத்தான் ஒழுக்கமும் பயிற்சியும் ஒத்திசைந்து செல்ல வேண்டும். இரண்டு கண்களும் ஒற்றைப் பார்வை பார்ப்பது போலத்தான் பயிற்சியும் ஒழுக்கமும் இணைந்து நிற்பது.

இப்போது படிப்பு எனும் இலக்கை அடைவதற்கான பயிற்சி என்றால் என்ன என்பதும் ஒழுக்கம் என்றால் என்ன என்பதும் உங்களுக்குப் பிடிபட்டிருக்கும். இப்படிப்பட்ட பயிற்சியும் ஒழுக்கமும் இருந்தால் உங்களால் எதையும் படிக்க முடியும். படிப்பிற்கு மட்டுமல்ல நீங்கள் சாதிக்க விரும்பும் அத்தனைக்கும் இந்தப் பயிற்சியும் ஒழுக்கமும் பெரிதும் துணை நிற்கும்.

*****

29 Jul 2023

உங்கள் ஆசை உண்மையானதா?

உங்கள் ஆசை உண்மையானதா?

நீங்கள் எதற்கு ஆசைப்பட்டாலும் அதை அடைந்தே தீருவீர்கள். மனதின் சுபாவம் அப்படி. உங்கள் ஆசை நிறைவேறும் வரை மனம் சும்மா இருக்காது. ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும்.

படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அந்த ஆசையை உங்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அந்த ஆசை உண்மையானதாக இருக்க வேண்டும். போலித்தனமானதாக இருக்கக் கூடாது. மற்றவர்கள் ஆசைப்படுகிறார்களே என்பதற்காக ஆசைப்படுவதாக இருக்கக் கூடாது. பெற்றோர்கள் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்களே என்பதற்காக ஆசைப்படுவதாகவும் இருக்கக் கூடாது. ஆசிரியர்கள் நெருக்கடி கொடுக்கிறார்களே என்பதற்காக ஆசைப்படுவதாகவும் இருக்கக் கூடாது.

நீங்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்படலாம். பொறியியல் படிக்க வேண்டும் என்று ஆசைப்படலாம். போட்டித் தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படலாம். அதற்கெல்லாம் நம்மால் படிக்க முடியுமா என்ற தயக்கமும் உங்களுக்கு இருக்கலாம்.

உங்கள் ஆசை உண்மையானதாக இருந்தால் உங்களால் உங்கள் ஆசையில் வெற்றி பெற முடியும். மருத்துவம் படிக்கச் சொல்கிறார்களே என்பதற்காகப் படிக்க நினைத்தால் அது உங்களுடைய ஆசை அன்று. உங்களை மருத்துவத்திற்குப் படிக்கச் சொல்பவரின் ஆசை அது. அதில் உங்களால் வெற்றி பெற முடியாது. உங்களால் உங்களுடைய ஆசையை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்ள முடியுமே தவிர மற்றவர்களின் ஆசையை அன்று. ஆகவே உங்கள் ஆசை என்னவோ அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு வணிகம் படிக்கத்தான் ஆசை என்றால் நீங்கள் வணிகத்தைத்தான் படிக்க வேண்டும். வணிகத்தை விட தகவல் தொழில்நுட்பத்தில் வாய்ப்புகள் அதிகம் என்று மற்றவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக ஆசைப்பட்டெல்லாம் அதில் உங்களால் வெற்றி பெற முடியாது. உங்களுடைய உள்ளார்ந்த ஆர்வம் எதுவோ அந்த ஆர்வத்தை அடைய ஆசைப்பட்டீர்கள் என்றால் உங்களால் அந்த ஆசையை அடைய முடியும். இதுதான் ஆசை நிறைவேறுவதில் உள்ள சூட்சமம்.

குழந்தைகள் பொதுவாகப் பொம்மைகள் மீது ஆசைப்படுவார்கள். அந்த ஆசையை எப்படியும் அடைந்தே தீருவார்கள். தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முதலில் அப்பாவிடம் பொம்மை வாங்கித் தரச் சொல்வார்கள். அப்பா முடியாதென்றால் அம்மாவிடம் செல்வார்கள். அம்மாவும் மாட்டேன் என்று விட்டால் மாமாவிடம் காரியம் நடக்குமா என்று பார்ப்பார்கள். மாமாவிடமும் ஆகாது என்றால் சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டி என்று ஒவ்வொரு உறவாகச் சாத்தியமாகும் அத்தனை வழிகளிலும் முயன்று பார்ப்பார்கள். எந்த வழியிலும் முடியவில்லை என்றால் முடிவில் தாமே காசு சேர்த்து வாங்கிப் பார்ப்போம் என்றும் முயல்வார்கள். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் வரை குழந்தைகள் ஓய மாட்டார்கள். ஆசை என்பது இதுதான். அதை நிறைவேற்றிக் கொள்ளும் வரை ஓயாது இருப்பது. அப்படி இருப்பதுதான் ஆசை.

குழந்தைகள் நிஜமாகப் பொம்மைகள் மீது ஆசைப்படுகிறார்கள். அதனால் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் வழிமுறைகளை அவர்கள் யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வழியில் அவர்களின் ஆசை சாத்தியம் ஆகா விட்டாலும் வேறு சாத்தியமாகக் கூடிய வழிகளை நோக்கிப் போகிறார்கள். ஒன்றை அடைய வேண்டும் என்று ஆசை உண்டாகும் போது இப்படித்தான் நடக்கும். அவ்வளவு எளிதில் ஆசை நிறைவேறாது. தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அங்கு தோல்விகள் ஒரு பொருட்டே அல்ல.

உண்மையான ஆசையின் தன்மை என்னவென்றால் எத்தனை முறை தோற்றாலும் ஆசைப்பட்டதை அடையாமல் இருக்க முடியாது. அந்த நிஜமான ஆசை என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மற்றவை எல்லாம் போலித்தனமான ஆசைகள்தான். மற்றவர்களுக்காக அடுத்தவர்களுக்காக நாம் ஏற்படுத்திக் கொள்ளும் ஆசைகள்தான். அது போன்ற ஆசைகளில் ஒருவர் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. போலித்தனமான ஆசைகளில் வெற்றி பெறுவது ஒருவரைத் திருப்தி கொள்ளவும் செய்யாது.

இப்போது மீண்டும் படிப்பை எடுத்துக் கொள்வோம். ஆசை என்பது உண்மையாக இருந்தால் அதை அடைவதைத் தவிர வேறு வழியில்லை. படிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டால் படிப்பதைத் தவிர வேறு வழியில்லை. புரியவில்லை என்பதற்காக அந்தப் படிப்பு நிற்காது. புரிவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மனம் செய்யும். முடியவில்லை என்பதற்காகவும் அந்தப் படிப்பு நிற்காது. அதை முடிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மனம் செய்யும். சிரமம் என்பதற்காகவும் மனம் அந்த ஆசையை விட்டு விடாது. அதை அடைந்தே தீரும். அதுதான் உண்மையான ஆழ்மனதின் ஆசை.

உங்கள் ஆசைகள் உண்மையாக இருக்கிறதா என்பதை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள். ஒன்றில் உங்கள் ஆசை உண்மையானதாக இல்லை என்றால் உங்களுக்கு உண்மையில் எதில் ஆசை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதிலே உங்கள் முழு கவனத்தையும் நேரத்தையும் உழைப்பையும் செலுத்துங்கள்.

ஆசைப்படுவது முக்கியமில்லை. எதற்காக ஆசைப்படுகிறோம்? ஏன் ஆசைப்படுகிறோம்? எப்படி ஆசைப்படுகிறோம்? என்ற வினாக்கள் முக்கியமானவை. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ள ஆசைப்படுவதைப் போல ஆசைப்படுவதும் ஆசைதான். அந்த ஆசை ஒருபோதும் உங்கள் மதிப்பை உயர்த்தாது. ஒரு போலித்தனமான ஆசை உங்கள் மதிப்பை இறக்கி விடும். உங்களை உள்ளீடற்றவராக ஆக்கி விடும்.

இந்த உலகம் உண்மையும் போலியும் கலந்ததாக இருக்கிறது. ஆசைகளும் அப்படித்தான். உங்கள் ஆசை நிஜமானதா? எந்த அளவுக்கு உண்மையானது? என்பதை எல்லாம் யோசித்து உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் காரியத்தில் இறங்குங்கள்.

ஒரு போலித்தனமான ஆசையை நிறைவேற்றுகிறேன் என்றோ, யாரோ ஒருவரின் ஆசையை நிறைவேற்றுகிறேன் என்றோ உங்கள் நேரத்தையும் உழைப்பையும் வீணாக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் உள்ளார்ந்த ஆசையை அறிந்து முயற்சிக்கும் எதிலும் நீங்கள் சோர்ந்து போக மாட்டீர்கள், சோடை போகவும் மாட்டீர்கள். தோல்விகளைக் கண்டு துவண்டு விடவும் மாட்டீர்கள். நீங்கள் ஆசைப்பட்டதை அடையும் வரை ஓயவும் மாட்டீர்கள்.

உங்களது உண்மையான உள்ளார்ந்த ஆசைகளைக் கண்டறிந்து நிறைவேற்றிக் கொள்ள வாழ்த்துகள்!

*****

28 Jul 2023

பல பெயரில் உலாவுதல் மற்றும் வார்த்தையின் பாதை

பல பெயரில் உலாவுதல்

எனக்கொரு பெயர் வைத்தார்கள்

செல்லப் பெயரென வேறொரு பெயர் வந்து சேர்ந்தது

பள்ளி வயதில் பட்டப்பெயர்கள் பல தொற்றிக் கொண்டன

எழுதத் தொடங்கிய போது புனைப்பெயர்கள் சேர்ந்து கொண்டன

பல பெயர்கள் புழங்கிய போதும்

குழறுபடியின்றிப் போய்க் கொண்டிருந்தது வாழ்க்கை

ஒரு முறை ஆதாரில் இருப்பதற்கேற்ப

வங்கியில் பெயர் மாற்றச் சொன்னார்கள்

சான்றிதழில் இருப்பதற்கேற்ப

பட்டாவில் பெயர் மாற்றச் சொன்னார்கள்

தவறாகத் தட்டச்சு செய்திருந்த

முன்பதிவு பயணச்சீட்டிலிருந்து பெயரை மாற்ற

பல மணி நேரங்கள் போராட வேண்டியிருந்தது

படிப்புச் சான்றிதழில் மாறிப் போயிருந்த

ஒற்றை எழுத்திற்காக ஒரு நூறு மனுக்கள் போட வேண்டியிருந்தது

பல தருணங்களில் ஒவ்வொரு முறையும்

திருத்த வேண்டியிருக்கும் பெயரை நினைக்கையில்

ஒவ்வொரு பெயரிலும் உலவினால்தான் என்ன

*****

வார்த்தையின் பாதை

ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்

உன் சொற்களுக்குள் சாத்தான்கள் நுழைந்தது எப்படி

இனியொரு முறை உன்னைப் பார்க்க மாட்டேன்

என்ற வாக்கியத்தை எப்படி உன்னால்

எளிதாக வீசியெறிய முடிகிறது

மென்மையான மனங்கள்

தடித்த வார்த்தைகளைக் கேட்கும் போது கனமாகின்றன

மென்மையையும் மேன்மையையும் சுமந்ததால்

சோர்ந்து போகும் மனங்களை அப்போது பார்த்திருக்கிறாயா

வாழ்க்கையின் கதை முக்கியம்

திரைக்கதை பின்னுவதோ புனைகதை எழுதுவதோ

உன் நியாயப் பக்கத்திற்காக நீ பின்னும் சாகசம்

கதை அதன் போக்கில் போகட்டும்

திருத்தியெழுதும் விருப்பமின்றி விடுபடட்டும்

நெடுந்தூரம் சென்ற பிறகு

என்றாவது ஒரு நாள் எதேச்சையாகச் சந்திக்கும் போது

உன் நினைவுகளோடு காத்திருக்கும்

என்னை உன் ஞாபகங்களுக்கு

ஒரு காலதேவனைப் போலக் கொணர்ந்து தருவேன்

மிக்க அன்போடும் கடைவிழி நனையும் கண்ணீரோடும்

*****

27 Jul 2023

சாளர வெளி மற்றும் பூஜ்யப் புத்தகம்

சாளர வெளி

ஜன்னலின் வழியே தெரியும் உலகம்

இந்தப் பிரபஞ்சத்தில்தான் இருக்கிறது

ஆனால் அப்படித்தானா என்ன

வேறு ஏதோ ஒரு பிரபஞ்சத்தில்

தப்பிப் போய்க் கிடப்பதான பிரேமையை

அடிக்கடி தட்டி விட்டுப் போய் விடுகிறது

பிரத்யேகமாக ஒரு குருவி வந்து போகிறது

வண்ணத்துப்பூச்சி சிறகடித்து விட்டுப் போகிறது

காதைத் துளைக்கும் ரீங்காரத்தோடு

வண்டொன்று அடிக்கடி வந்து விட்டுப் போகிறது

மரத்தின் இலையொன்று உதிர்ந்து விழுகிறது

சில மனிதர்கள் உள்ளே வருகிறார்கள்

கடந்து போகிறார்கள்

தன் சட்டகத்தை விட்டுப் போகின்றன என்ற

தவிப்பின்றி எல்லாவற்றையும்

காட்டிக் கொண்டிருக்கிறது ஜன்னல்

உள்ளே வருவதையும் வெளியே போவதையும்

தடுக்காத ஞானத்திற்குள் ஜன்னலைப் போல

இந்த மனசும் வாய்த்து விட்டால்

அதற்காகத்தான் அடிக்கடி இந்த ஜன்னல் வழியே

இந்த பிரபஞ்சத்தையே

இன்னொரு பிரபஞ்சமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது

ஞானத்தின் சாளரம் பொதிந்து கிடக்கிறது

சுவரை நிரகாரித்த கட்டக வெளிக்குள்

*****

பூஜ்யப் புத்தகம்

படித்த புத்தகங்கள் எல்லாவற்றையும்

வரிசையாகச் சொல் என்றனர்

இருபதாயிரம் பத்தாயிரம் ஐயாயிரம்

ஆயிரம் ஐநூறு ஒன்று என்று

வரிசையாகச் சொன்னேன்

கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல்

இன்னும் இன்னும் குறை எண்களிலும்

மைனஸ் ஒன்று மைனஸ் ஐநூறு மைனஸ் ஆயிரம்

மைனஸ் ஐயாயிரம் மைனஸ் பத்தாயிரம் மைனஸ் இருபதாயிரம் என்று

முடிவிலா வெளியில் எந்த இடத்திலும் நிற்காமல்

சொல்லிக் கொண்டே போகச் சொல்லினர்

கடைசியில் எந்தப் புத்தகத்தையும்

படிக்கவில்லை என்று ஒப்புக் கொண்டு

வெளியேறிய போது

நான் எப்போதும் படித்திராத

பூஜ்ய எண்ணுள்ள புத்தகம்

கண் முன் விரியத் தொடங்கியது

*****

26 Jul 2023

நீயும் ஒரு தமிழ்ப்பட இயக்குநர்தான்!

நீயும் ஒரு தமிழ்ப்பட இயக்குநர்தான்!

ஒரு தாதா கதை வைத்திருந்தால் நீயும் தமிழ்ப்பட இயக்குநர்தான்.

****

அண்மையில் ஒரு காதல் கதை படித்த யெஸ்கே ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு போனார். படித்த உடன் உணர்ச்சிவசம் குறையாமல் கதை ஆசிரியருக்கு அவர் எழுதிய மின்னஞ்சல் இது.

உங்கள் காதல் கதை படித்தேன். நிகழ்கால காதலை அப்பட்டமாக உணர்த்தியது. நீங்கள் காதலித்திருக்கிறீர்களா என்று அறிய அவா. நான் உங்களைக் காதலிக்கலாமா என்பதற்கு தங்களின் மேலான கருத்தை அறிய விரும்புகிறேன்.

இதை ஒரு விண்ணப்பமாக எடுத்துக் கொண்டாலும் சரிதான், வாசகர் கடிதமாக எடுத்துக் கொண்டாலும் சரிதான்.

நலம்.

சுபம்.

நலம் சுபமாகட்டும்.

சுபம் நலமாகட்டும்.

தயவுசெய்து என்னை ப்ளாக் செய்து விடாதீர்கள். என் மீது ரிப்போர்ட் செய்து விடாதீர்கள்.

மற்றவை அடுத்த மின்னஞ்சலில்.

*****

சென்ற வாரம் சுப்பராயன் – நீலாம்பரி தம்பதியினரின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். கவனிப்பு அருமை. காபி ரொம்ப விஷேசம். மிக்சர் சுமார். மைசூர் பாகு பரவாயில்லை. அவர்கள் நீடுழி வாழ்க. அடுத்த முறை செல்லும் போது டிபன் காபியோடு நிறுத்தி விடாமல் லஞ்ச், டின்னர் என்று கவனித்தால் மகிழ்ச்சி. பார்ப்போம் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று.

*****

ஓடிடியில் படம் பார்க்கிறீர்களா?

எங்கே சார் அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது?

ஏதோ வாட்ஸ்ஆப், டெலிகிராமில் பார்த்துக் கொள்வதோடு சரி.

*****

கழிவுகளை என்ன செய்வது என்றார் சந்தேகராமன்.

டாய்லெட் எதற்கு இருக்கிறது என்றேன்.

எல்லாவற்றையும் டாய்லெட்டில் போட முடியுமா என்றார்.

அப்படியானால் பிரிட்ஜில் போடுவதற்கென்ன என்றேன்.

சந்தேகராமன் முகத்தில் ஒரு தெளிவைப் பார்க்க முடிந்தது.

*****

மதுரை மீனாட்சியம்மனைப் பார்க்க விண்ணப்பம் போட்டதோடு நிறுத்தியிருக்க வேண்டும். அப்படியே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையும் பார்க்க வேண்டும் என்றும் கூடுதல் விண்ணப்பம் போட்டு விட்டேன்.

இப்போது வர வேண்டாம் என மதுரை மீனாட்சியம்மனிடமிருந்து பதில் கடிதம் உடனடியாக வந்து விட்டது.

*****

25 Jul 2023

எதிர்மறை சிந்தனைகள் வந்தால் என்ன செய்வது?

எதிர்மறை சிந்தனைகள் வந்தால் என்ன செய்வது?

எதிர்மறை சிந்தனைகள் வந்தால் என்ன செய்வது? என்னிடம் பலர் கேட்கும் கேள்வி இது. அதற்கு என்ன செய்ய முடியும்? வந்தால் வந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான். அதைத் தடுக்கவெல்லாம் முடியாது. தடுத்தும் ஆகப் போவதில்லை. தடுக்கிறேன் என்ற பெயரில் மடையைத் திறந்து விட்டுக் கூடாது.

ஒரு மனிதன் எப்படியும் எதிர்மறையாகத்தான் சிந்திக்க வேண்டியிருக்கும். அது அறிந்து நடப்பதல்ல. அறியாமல் நடப்பது. மனதின் அமைப்பு அப்படி.

நான் எதிர்மறையாகவே சிந்திப்பதில்லை என்பவர்கள் கூட எதிர்மறையாக் கனவு கண்டிருப்பார்கள். எதிர்மறையாகக் கனவு காண்பது என்பது தன்னுடைய கட்டுபாடு இல்லாமல் மனமே எதிர்மறையாகச் சிந்தித்துப் பார்ப்பதன் விளைவுதான். அதுதான் மனதின் இயல்பு.

ஏன் எதிர்மறையாகச் சிந்திக்க வேண்டும் என்று நீங்கள் கேள்வி கேட்டுப் பார்க்கலாம். ஆசை முதல் காரணம்.

இப்படி நடந்தால் என்ன … அப்படி நடந்திருந்தால் என்ன … என்று மனம் யோசிக்கும். இப்படி நடந்தது அப்படி நடந்திருந்தால் என்று நீங்கள் யோசிக்க வேண்டுமானால் இப்படி நடந்ததற்கு எதிர்மறையாக யோசித்துப் பார்த்தால்தான் முடியும்.

அப்படியும் இப்படியும் என்று அலைபாயும் மனம் இப்படி என்று நேர்மறையாகவும் அப்படி என்று எதிர்மறையாகவும் இரண்டு விதத்திலும் சிந்தித்துப் பார்த்து விடும்.

முதல் காரணத்தைப் பார்த்து விட்டோமா? இரண்டாவது காரணத்தையும் பார்த்து விடுவோம்.

எதிர்பார்ப்புகள் இரண்டாவது காரணம். எதிர்பார்ப்பது நடக்க வேண்டும் என்று நினைப்பு வந்ததுமே நடக்காமல் போனால் என்னவாகும் என்ற நினைப்பும் வந்து விடும். பிறகென்ன நீங்கள் நடக்காமல் போனால் என்னவென்று எதிர்மறையாகவும் யோசித்துப் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள். இதுவும் இயல்பாகவே உங்களை அறியாமல் நிகழ்ந்து விடும்.

அடுத்து மூன்றாவது காரணத்தையும் பார்த்து விடுவோம். ஏற்றுக் கொள்ளுதலும் ஏற்றுக் கொள்ள முடியாமையும்தான் மூன்றாவது காரணம். உங்களுக்குப் பிடித்தமானவற்றை உங்களையறியாமல் ஏற்றுக் கொள்வீர்கள். பிடிக்காதவற்றை உங்களை அறியாமல் வெறுத்துத் தள்ளுவீர்கள். அதிலிருந்து விலகிப் போக விரும்புவீர்கள். வாழ்க்கையில் அமையும் அனைத்தும் நீங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாகவா இருக்கும்? உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றையும் ஏற்றுக் கொண்டு வாழ வேண்டியிருக்கும். அது போன்ற நிலைகளில் சொல்லவே வேண்டியதில்லை.

நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றைப் பற்றி வெறுப்பும் சலிப்பும் எரிச்சலாக யோசித்துக் கொண்டிருப்பீர்கள். சந்தேகமே இல்லாமல் இவ்வகை எண்ணங்கள் சிந்தனைகள் அனைத்தும் எதிர்மறைத் தன்மை கொண்டவையாக இருக்கும். இந்த விசயத்தில் உங்கள் விருப்பு வெறுப்புகள் உங்களுக்கான நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களையும் சிந்தனைகளையும் உருவாக்கி விடும்.

நான்காவதாகவும் ஒரு காரணம் இருக்கிறது. திருப்தி குறித்த நோக்குதான் அது. நீங்கள் திருப்தி அடையும் அளவைப் பொருத்து உங்களது நேர்மறை எண்ணங்களோ அல்லது எதிர்மறை எண்ணங்களோ தூக்கலாக இருக்கும். எளிதில் திருப்தியை உணர முடியாத ஒருவர் எதிர்மறை எண்ணங்கள் மிகுந்தவராகத்தான் இருப்பது தவிர்க்க முடியாதது. திருப்தியை உணர முடியாத போது திருப்தி காண முடியாமைக்கான காரணங்களை யோசித்தால் ஒவ்வொன்றும் எதிர்மறையாகத் தோன்றி கொண்டே இருக்கும். இப்போது எதிர்மறையான சிந்தனைகளுக்கான வழியை நீங்களே ஏற்படுத்திக் கொண்டிருப்பீர்கள்.

ஐந்தாவதாகவும் ஒரு காரணம் இருக்கிறது. இது நான்காவதன் துணைக்காரணம்தான் என்றாலும் ஐந்தாவதாக வைத்துச் சொல்வதற்குக் காரணம் இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அந்த ஐந்தாவது காரணம் ஒப்பீடு. திருப்தியின்மையின் உப காரணம் ஒப்பீடுதான். ஒப்பிடுவதன் மூலமாக ஒருவர் தனக்குள்ளிருக்கும் திருப்தியைத் தன்னையறியாமல் கொலை செய்து விடுகிறார். ஒப்பிட்டு ஒப்பிட்டு தன்னுடைய திருப்தியை அடைய முடியுமா என்று அவர் பார்க்கிறார். அதாவது செத்துப் போய் விட்ட திருப்திக்கு உயிர் கொடுக்க முடியுமா என்று யோசிக்கிறார். இதை அவர் திருப்தியைக் கொல்வதற்கு முன் யோசிக்க வேண்டும். ஆனால் திருப்தியைக் கொன்று விட்டார். திருப்தியைக் கொன்ற பின் மிச்சம் இருக்கப் போவது திருப்தியற்ற எண்ணங்களும் உணர்வுகளும்தான். அவை எதிர்மறை உணர்வுகளும் எண்ணங்களும்தான்.

இது போன்ற எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து விட வழியில்லையா என்றால் அவை இயற்கையானவை என ஏற்றுக்கொண்டு அவை பற்றி அதிக ஆராய்ச்சி செய்து கொண்டிராமல் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதுதான் எதிர்மறைகளைத் தவிர்ப்பதற்கான சுலபமான வழி.

மற்றபடி எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் எல்லாம் ஒரு மனிதரால் இருக்க முடியாது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஓர் அளவு இருப்பது போல, எதிர்மறையாக நினைப்பதற்கும் ஓர் அளவு இருக்கிறது. அளவு கடந்து ஒருவர் எதிர்மறையாகச் சிந்திக்கிறார் என்றால் அவர் ஏதேனும் செய்துதான் ஆக வேண்டும்.

மூக்கு என்றால் சளி இருக்கும் என்பது போல மனம் என்று இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் சளிக்கென்று ஓர் அளவு இருக்கிறது. அளவைத் தாண்டினால் நோய். அதற்கு வைத்தியம் செய்துதான் ஆக வேண்டும். எதிர்மறை எண்ணங்களுக்கும் இது அப்படியே பொருந்தும்.

ஓர் அளவைத் தாண்டி உங்களுக்குள் எதிர்மறை எண்ணங்களாக எழுந்து கொண்டிருந்தால் நீங்கள் மனச்சோர்வு உடையவராகவும் மன அழுத்தம் கொண்டவராகவும் மாறி விடுவீர்கள். உங்களுடைய கவனச்சிதறல் ரொம்ப அதிகமாகவே இருக்கும். மறதி குறித்துச் சொல்லவே வேண்டியதில்லை. சாதாரண விசயங்களைக் கூட மறந்து விடுவீர்கள்.

மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட நீங்கள் குறுகிய அல்லது தற்காலிக தீர்வுகளைத் தேடத் தொடங்கி விடுவீர்கள்.

எதற்கெடுத்தாலும் நீங்கள் எரிந்து விழலாம். சிடுமூஞ்சியாக மாறலாம். தவிர்க்க முடியாது என்ற நிலை தோன்றும் போது நீங்கள் புகை பிடிப்பதையோ, மது அருந்துவதையோ செய்யலாம். இன்னும் இந்த எல்லை தாண்டிப் போய் போதை வஸ்துகளைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இவை எல்லாவற்றிற்கும் காரணம் கட்டுக்கடங்காமல் போகும் எதிர்மறை எண்ணங்களும் அதனால் உண்டாகும் மனச்சோர்வும் மனச்சோர்வால் உண்டாகும் மனஅழுத்தமும்தான்.

நீங்கள் மனதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அது அலைபாயும் தன்மையுடையது. நீங்கள் ஒரு நிகழ்வின் அல்லது ஒரு பொருளின் இரண்டு பக்கங்களையும் உணர அந்த அலைபாயும் தன்மை எப்போதும் உதவும். நீங்கள் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்தால் போதும் என்று அடம் பிடிக்காதீர்கள்.

உங்களின் எல்லைகளை நீங்கள் எப்போதும் புரிந்து வைத்திருக்க வேண்டும். ஓர் அளவுக்கு மேல் செய்வதற்கோ, சாதிப்பதற்கோ இயலாது. உடலின் தாங்கும் திறனை, செயலாற்றும் அதிகபட்ச எல்லையை நாம் எப்போதும் மறந்து விடல் ஆகாது.

எல்லா எண்ணங்களையும் காரியங்களையும் நினைத்தபடி நிறைவேற்றி விட முடியாது. சூழ்நிலைத் தடைகள் நிறையவே இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நிறைவேறக்கூடிய காரியங்களும் இருக்கின்றன, நிறைவேற்ற முடியாத காரியங்களும் இருக்கின்றன என்ற எதார்த்தத்தை எப்போதும் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நிறைவேற்ற முடியாத காரியங்களை நிறைவேற்ற முயற்சிக்கும் போது அவற்றை நிறைவேற்றுவது சாதாரணமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். படிப்படியாகச் சிறிது சிறிதாக மிக நீண்ட காலத்திற்குப் பொறுமையை இழக்காமல் அது போன்ற காரியங்களைச் சலிப்பின்றித் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும் என்பதை நாம் அடிக்கடி நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.

உங்களைப் பற்றி நல்ல விதமாகவே நினையுங்கள். உங்களைப் பற்றி நீங்களே நல்லவிதமாக நினைக்காவிட்டால் எல்லாரும் அப்படித்தான் உங்களைப் பற்றி நினைப்பதாக உங்களுக்குத் தோன்றும். யாரும் உங்களை நல்லவிதமாக நினைக்கவில்லை என்று நினைப்பதே மோசமான எதிர்மறை எண்ணமாகும்.

தொடர்ந்து எதிர்மறை உணர்வுகளையும் எண்ணங்களையும் மனதில் தேக்கிக் கொண்டே போவது ஆபத்தான நிலைமையில் கொண்டு போய் விடும். உங்கள் நம்பிக்கைக்கு உரிய உங்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய நபர்களிடம் நண்பர்களிடம் உறவினர்களிடம் உங்கள் மனநிலையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது நேர்மறையாக இருந்தாலும் சரிதான், எதிர்மறையாக இருந்தாலும் சரிதான், பகிர்வதற்கு உங்களுக்குக் கட்டாயம் ஒருவர் தேவைதான். அது உங்களது செல்லப்பிராணியாக இருந்தாலும் கூட பரவாயில்லைதான்.

தொடர்ந்து எதிர்மறையாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றினால் ஓரளவுக்கு மேல் சிந்திப்பதை விட்டு விட்டுச் சுற்றுப்பயணம் செய்ய, இயற்கையை ரசிக்க, நண்பர்களிடம் பேச என்று வெளியில் கிளம்பி விடுங்கள்.

நன்றாக உண்ணுங்கள். நன்றாக ஆடை உடுத்திக் கொள்ளுங்கள். நன்றாகத் தூங்குங்கள். நன்றாகப் பழகுங்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. நீங்கள் நன்றாக இருப்பதை வெளிப்படுத்தவும் செய்யுங்கள், நீங்கள் நன்றாக இல்லாவிட்டாலும் கூட. எப்போதும் உங்களை விட இறங்குமுக நிலையில் இருப்போர் கூட தாங்கள் நன்றாக இருப்பதாக உணர்கிறார்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்.

உங்களைப் பற்றிய ஒரு பெருமிதம் எப்போதும் இருக்கட்டும். பெருமிதமாக இருப்பதற்கேற்ப நீங்கள் எதையும் செய்யவில்லை என்று நினைக்க வேண்டாம். நீங்கள் மனிதராகப் பிறந்திருப்பது ஒன்று போதும் நீங்கள் பெருமிதமாக இருக்கவும் பெருமிதமாக உணர்வற்கும். பிறகென்ன உங்களுக்கு எப்படி எதிர்மறை எண்ணங்களோ உணர்வுகளோ ஏற்படும் சொல்லுங்கள்?

*****

24 Jul 2023

படுத்தால் தூக்கம் வராதவர்கள் என்ன செய்வது?

படுத்தால் தூக்கம் வராதவர்கள் என்ன செய்வது?

படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது எனப் புலம்பிக் கொண்டிருந்த தங்கராசு தாத்தா நைட் வாட்ச்மேன் வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்.

***

ஒரு ஸ்டர்ட் அப் நிறுவனம் துவங்குவதான் தனது லட்சியம் என்று பேய் பிடித்தவன் போல சொல்லிக் கொண்டிருந்த ஜனார்த்தனன் பேய் விரட்டும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கியிருந்தான்.

***

பேசிக்கிட்டே வேலை பார்த்தா எதுவும் தெரியாது சார் என்ற பெட்ரோல் பங் வேலைக்காரர் சொன்னது எவ்வளவு உண்மை. இருநூறு ரூபாய்க்குப் போட்ட பெட்ரோலில் நூறு ரூபாய் பெட்ரோல் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

***

ரேட்டைக் கேக்குறதுல என்ன சார் வெட்கம் என்றவள் கொடுக்குறதைக் கொடுங்க என்றாள் வெட்கத்தைத் துடைத்து விட்டாற் போல.

***

இடையிடையே பீப் சத்தம் கொடுக்க வேண்டும் என்றார்கள். எடுத்த படத்தை மௌனப்படமாக மாற்றிக் கொண்டார் இயக்குனர்.

***

ரொம்ப கேவலமாகப் பேசிக் கொண்ட இருவரை விசாரித்தேன். அண்ணன் – தங்கை என்றார்கள். மிகுந்த அன்பாக பேசிக் கொண்ட இருவரை விசாரித்தேன். பரம எதிரிகள் என்றார்கள்.

***

23 Jul 2023

ஆணி அடித்தலும் ஆணி பிடுங்குதலும்

ஆணி அடித்தலும் ஆணி பிடுங்குதலும்

ஒரு வங்கிக் கணக்கைத் துவங்குவது ஆயாசம் தருவதாக இருக்கிறது. விவரங்கள் சரியாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆதாரில் ஒரு விதமாகவும் பான் அட்டையில் வேறு விதமாகவும் பெயர் இருந்தால் அவற்றைச் சரி செய்து கொண்டுதான் கணக்கைத் தொடங்க முடியும். ஆதாரையும் பானையும் சமப்படுத்துவது சாதாரணமான காரியமாக இருக்காது. நாங்கள் எல்லாம் பான் அட்டை எடுத்துக் கொண்ட பிறகு ஆதார் அட்டை எடுத்துக் கொண்ட காலத்தைச் சார்ந்தவர்கள்.

எப்படியும் எழுத்துப் பிழை இந்த அட்டைகளில் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கும். அதைப் பார்த்துச் சரியாகக் கொடுத்திருக்க வேண்டிய அறிவு சில நேரங்களில் மங்கிப் போய் விடுகிறது. லட்சத்தில் ஒருவருக்கேனும் இது போன்ற சிக்கல்கள் இருக்கக் கூடும்.

என் மனைவிக்கு ஒரு பொதுத்துறை வங்கியில் கணக்கு இருந்தது. இன்னொரு வங்கியில் கணக்குத் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் பெயரில் கடன் வாங்கும் போது சலுகைகள் நிறைய இருப்பதாகத் தெரிந்து மனைவி பெயரில் வங்கிக்கடன் வாங்க வேண்டும் என்பதற்காகவே ஐவிஐவிஐ வங்கியில் கணக்குத் தொடங்க முடிவு செய்தோம். அதுதான் பொதுத்துறை வங்கியில் கணக்கு இருக்கிறதே, அங்கு கடன் வாங்கினால் என்ன குறைந்தா போய் விடுவாய் என்றால், அது சாமானியர்களுக்குச் சாமானியப்பட்ட காரியமில்லை. ஆனானப் பட்ட ஆட்களே அல்லோகலப்பட்டுத்தான் வாங்க வேண்டியிருக்கும்.

இப்போது அடுத்தக் கேள்விக்கு வந்து விடுவோம். ஏன் கடன்? கடன் வாங்க வேண்டியதற்கான எந்த நெருக்கடியும் எங்களுக்கு இல்லை. அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சந்திப்போர்கள் என அனைவரும் கடன் வாங்கிக் கொண்டிருந்தனர். கடன் வாங்குவது ஒரு தொற்றுவியாதியைப் போல எல்லாரையும் பீடித்திருந்தது. எங்களையும் பீடிக்கத் தொடங்கி விட்டது.

நீங்கள் ஏன் இன்னும் கடன் வாங்காமல் இருக்கிறீர்கள் என்று ஒவ்வொருவரும் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தனர். கடனை வாங்கி ஒரு மனையை வாங்கிப் போடுங்கள் அல்லது வீட்டைக் கட்டுங்கள் அல்லது நகையையாவது வாங்கிப் போடுங்கள் என்று ஆளாளுக்குச் சொன்ன அறிவுரைகள் எங்களை ஏதோ செய்திருக்க வேண்டும். ஒரு நேரத்தில் நாங்கள் மட்டும் இந்த வியாதி பீடிக்காமல் இருப்பது எங்களுக்கே அசூயையாக இருந்தது.

இந்த அலைபேசி யுகத்தில் முகமறியாத நபர்களிடமிருந்து நாள்தோறும் நான்கைந்து முறைகள் வரும் அழைப்புகளும் கடன் வாங்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தன. ஆட்களைப் பார்த்து வியாபாரம் பண்ணிய காலம் போய் அலைபேசி எண்ணில் அழைத்து கடன் வாங்கச் சொல்லும் அளவுக்கு நிலைமை முற்றிப் போய் விட்டிருந்தது.

நிஜமாகச் சொல்வதென்றால், நாங்கள் மட்டும் கடன் வாங்காமல் இருப்பது எங்களைக் குற்ற உணர்வு கொள்ள செய்தது. நாளை பின்னே ஒரு சொத்து இருப்பது நல்லதுதானே என்ற எண்ணம் தோன்றி விட்டது. கடனை வாங்குவது என முடிவு செய்தோம்.

ஒரு பொதுத்துறை வங்கியில் கடன் வாங்குவதை விட தனியார் துறை வங்கியில் கடன் வாங்குவது எளிமையாக இருக்கும் என்றுதான் நாங்கள் ஐவிஐவிஐ வங்கியைத் தேர்வு செய்தோம் என்பதை நான் முன்பே சொல்லி விட்டேன். மறுபடியும் சொல்வதற்கு வங்கிகளை வகைபடுத்திக் குத்திக் காட்டும் எந்த நோக்கமும் இல்லை. அந்தத் தனியார் வங்கியும் கடன் வழங்குவதில் இணையற்ற வேகம் காட்டிய வங்கியாக இருந்தது. அந்த உண்மையையும் மறுப்பதற்கில்லை. உண்மை என்பது விளம்பப்பட வேண்டியது.

கடன் வாங்குவதற்கு முதலில் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டியிருந்தது. அந்தச் சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் போதுதான் ஆதார் அட்டையிலும் பான் அட்டையிலும் இருந்த பெயர் ஒன்றுக்கொன்று ஒத்து வராமல் முரண்டு பிடித்துப் பிரச்சனையை உண்டு பண்ணின. அதை இத்தனை நாட்கள் நாங்களும் கவனிக்காமல் இருந்திருந்தோம். எந்த அட்டை வந்தாலும், ஆகா அட்டை வந்து விட்டது என்ற சந்தோசத்தில் அட்டையை முழுமையாகப் பார்க்காமல் கூட இருந்திருக்கிறோம்.

பான் அட்டையில் இருக்கும் பெயரைத் திருத்துவதை விட ஆதார் அட்டையில் இருக்கும் பெயரைக் கணினி மையங்களில் சுலபமாகத் திருத்தலாம் என்று வங்கியில் பணிபுரிந்த நபர் சொன்ன அறிவுரையின் பெயரில் கணினி மையத்திற்கும் வங்கிக்கும் இடையில் சில மணி நேரங்கள் அலைந்தோம். பத்து நிமிடத்தில் முடிந்து விடும் என்று சொன்ன வங்கிக் கணக்குத் துவங்கும் வைபவம் எங்களுக்கு ஒரு நாளை முழுங்கிக் கொண்டது.

சேமிப்புக் கணக்கைத் துவங்கிய பிறகு வங்கிக்கடன் வாங்குவதற்கு அவர்கள் கேட்ட ஆவணங்களைச் சேகரிப்பது அடுத்த ஆயாசத்தைத் தொடங்கி வைத்தது. என் மனைவியின் அலுவலகத்தில் மாதாந்திர சம்பள விவரத்தைத் தர முடியாது என்று அடித்துச் சொல்லி விட்டார்கள். அப்படி அவசியம் வேண்டுமானால் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று விதிமுறைகளை நீட்டினார்கள்.

என் மனைவியும் விடா முயற்சியாகத் தலைமை அலுவலகத்துக்கு மாதாந்திர சம்பள விவரத்தைக் கேட்டுக் கடிதம் எழுதிப் போட்டு அலுத்துப் போனாள். சள்ளையாக இருந்தது. இப்படி ஒரு கடனை வாங்கத்தான் வேண்டுமா என்று வெறுத்துப் போய் மனைவி ஒரு நாள் சொன்னாள். கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல் எந்தக் காரியத்தைத்தான் செய்ய முடியும் என்று நான் கேட்டதில் மேலும் சில முறைகள் தலைமை அலுவலகத்திற்குப் பேசுவதும் கடிதம் எழுதுவதுமாக இருந்தாள். தலைமை அலுவலகத்துக்கு நேரில் போய் அலைந்து விட்டும் வந்தாள். பல நாட்கள் முயற்சி செய்து முடியாமல் போனதில் நாங்கள் வங்கிக்கடன் வாங்குவதை மறந்து போயிருந்தோம்.

ஆயாசத்தோடு ஆயாசமாக வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்க முடிந்த எங்களால் வங்கிக்கடனுக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் அலுத்துப் போன மனநிலையை அடைந்தோம். இந்தச் சேமிப்புக் கணக்கை முடித்துக் கொள்வதா, தொடர்வதா என்ற கேள்வி எங்கள் இருவர் மனதிலும் இருந்தது. ஏதோ தொடங்கியாயிற்று, ஏதோ ஒரு காலத்தில் எதற்காகவாவது உதவாமலா போய் விடும் என்று மனைவி சொன்னதன் பெயரில் சேமிப்புக் கணக்கில் பராமரிக்க வேண்டிய ஐயாயிரம் தொகையை மட்டும் தொடர்ந்து அந்தக் கணக்கில் பராமரித்து வந்தோம். பரிவர்த்தனை இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வபோது ஆயிரம் ரூபாயைக் கணக்கில் போடுவதும் சில நாட்கள் கழித்து எடுத்துக் கொள்வதும் என்று தேவையில்லாத வேலையை தேவையோடு செய்வதாக நினைத்துக் கொண்டு செய்து கொண்டிருந்தோம்.

அப்போது என் மனைவிக்கு என்று தனியாக அலைபேசி வாங்காத நேரம். அதனால் அவளது பெயரில் தொடங்கிய சேமிப்புக் கணக்கிற்கான தொடர்பு எண்ணாக எனது எண்ணையே கொடுத்திருந்தேன்

தொழில்நுட்பங்களும் அதன் வளர்ச்சியும் வேகமாகச் சுழலத் தொடங்கியதில் வங்கிக்கே செல்லாமல் வங்கிப் பரிவர்த்தனைகளை அலைபேசியில் செய்ய முடிகின்ற காலமும் வந்தது. ஒவ்வொரு வங்கியும் ஒரு செயலியின் மூலமாக வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை வழங்கிக் கொண்டிருந்தன. வங்கி சாராமல் கூகுள் பே எனும் செயலி மூலமாக எந்த வங்கியின் கணக்கையும் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பு இருந்தது.

இதுவரை வங்கிக் கடன் வாங்க நினைத்து அதற்கும் வாய்ப்பில்லாமல் வேறு எதற்கும் பயன்படாமல் இருந்த மனைவியின் வங்கிக் கணக்கை கூகுள் பே மூலமாகப் பயன்படுத்த முடிவு செய்தோம். மனைவியின் வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டு மளிகை சாமான்கள் வாங்குவதிலிருந்து கீரைக்கட்டு வாங்குவது வரை கூகுள் பேயில் பணத்தைச் செலுத்த ஆரம்பித்தோம். சில்லரைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இந்த முறை ரொம்ப வசதியாக இருந்தது. பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது ரொம்ப வசதியாக இருந்தது. பணம் எடுக்கும் எந்திரத்திலும் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. அந்த இயந்திரத்தில் மாதத் தொடக்கத்தில் பணம் எடுப்பது ஓர் அவஸ்தை. கூட்டத்தில் நின்று பணம் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இப்படி பல சிரமங்கள் மற்றும் காத்திருப்புகள் என எல்லாவற்றுக்கும் கூகுள் பே செய்த வசதியை மறக்க முடியாது. நகலெடுக்கும் கடையில் ஒரு ரூபாய் செலுத்துவது என்றாலும் இப்போது கூகுள் பேதான் என்றானது.

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளில் நொந்து போயிருந்த நான் ஆயாசத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எனக்கும் ஒரு வங்கிக் கணக்கை ஐவிஐவிஐ வங்கியில் துவங்கியிருந்தேன். இந்த வங்கிக் கணக்குக்கும் என்னுடைய அலைபேசி எண்ணைத்தான் கொடுத்திருந்தேன்.

பிரச்சனை இப்போதுதான் ஆரம்பமாகியிருந்தது. என்னுடைய அலைபேசி எண்ணுக்கு என்னால் கூகுள் பேயைச் செயல்படுத்த முடியவில்லை. என்னுடைய மனைவியின் வங்கிக் கணக்கு எண்ணுக்குத்தான் செயல்படுத்த முடிந்தது.

ஒருவரே இரண்டு மூன்று அலைபேசிகளை வைத்துக் கொள்ளும் புரட்சி யுகம் வந்த பின்னர் என் மனைவிக்கு ஒரு அலைபேசியை வாங்கினோம். இப்போது அவளுக்கும் ஓர் அலைபேசி எண் இருந்ததால் அந்த எண்ணை அவளுடைய வங்கிக் கணக்குக்கான எண்ணாக மாற்ற வங்கிக் கிளைக்குப் போனோம். பணம் எடுக்கும் இயந்திரச் சேவையின் வழியாக அலைபேசி எண்ணை மாற்றிக் கொள்ளுமாறு சொன்னார்கள். இது போன்ற சில்லரை காரியங்களை இயந்திரங்கள்தான் செய்ய வேண்டும் என்றார்கள் அவர்கள். இயந்திரங்களாகி விட்ட மனிதர்கள் சொன்ன அந்த யோசனையின் பெயரில் இயந்திரத்திடமே எங்கள் தேவையை நிறைவேற்றிக் கொண்டோம். ஆனால் வங்கிப் பரிவர்த்தனை செய்வதற்கு ஏற்ப அலைபேசி எண் மாறாமல் போக சில நாட்களில் மீண்டும் வங்கிக் கிளைக்கே போய் முறையிட்டோம். அவர்களும் முயற்சித்துப் பார்த்தார்கள். முடியாமல் போக வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்பு கொண்டு சொல்லச் சொன்னார்கள். வாடிக்கையாளர் சேவைக்கும் படாதபாடு பட்டு தொடர்பு கொண்டு எங்கள் சிக்கலைச் சொல்லிப் பார்த்தோம். எதற்கும் எந்தப் பலனும் இல்லை.

என் அலைபேசி வழியாக என் மனைவியின் கணக்கைத்தான் பரிவர்த்தனை செய்ய முடிகிறது. என்னுடைய கணக்கு என்னுடைய அலைபேசி எண்ணுக்கு மாறவே இல்லை. மீண்டும் வங்கிக் கிளைக்கே போனோம். வங்கிக் கிளையில் பணியாற்றும் நபர்களே வாடிக்கையாளர் சேவைக்கு அழைத்துக் கடுமையாகப் பேசுங்கள் என்றார்கள். இதென்ன புதுமையான யோசனையாக இருக்கிறதே என்று அதைச் செயல்படுத்த எங்களுக்கு தயக்கமாக இருந்தது.

என்னுடைய அலைபேசி எண்ணுக்கு என்னுடைய வங்கிக் கணக்கையும், என் மனைவியினுடைய அலைபேசி எண்ணுக்கு என் மனைவியின் வங்கிக் கணக்கையும் மாற்ற வேண்டும். அவ்வளவுதானே விசயம். இதற்கு எதற்காகக் கடுமையாகப் பேச வேண்டும்? அப்படிப் பேசுவதானால் வங்கிக் கிளையிலேயே கடுமையாகப் பேசியிருக்கலாமே. மீண்டும் சில முறை வாடிக்கையாளர் சேவைக்குக் கடுமையாக முயன்று மென்மையாகப் பேசிப் பார்த்தோம். காரியம் ஆவதாகத் தெரியவில்லை.

மனிதருக்குத் தலையெழுத்துப் போல இதுதான் இந்த வங்கிக் கணக்குகளுக்கான தலையெழுத்து என்றால் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்று இப்போது அப்படியே விட்டு விட்டோம். இப்படி எதற்காகத் துவங்கினோம், எதற்காகப் பயன்படுத்தினோம் என்று தெரியாமல் இரண்டு வங்கிக் கணக்குகள் எங்களிடம் இருக்கின்றன. அலைபேசியில் பேச ஒரு தொடர்வு வில்லையே (சிம்) போதும் எனும் போது இரட்டை தொடர்பு வில்லை (சிம்) போட்டுக் கொள்வதைப் போலத்தான் இந்த எங்களுடைய செயலும் அமைந்து விட்டது. இப்போதும் என் மனைவியின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கைத்தான் என்னுடைய அலைபேசியில் செய்து கொண்டிருக்கிறோம். என்னுடைய வங்கிக் கணக்கு ஏதோ பெயருக்கு இருக்கிறது. அதில் அவ்வபோது ஆயிரம் ரூபாயைப் போடுவதும் எடுப்பதுமாக ஓர் ஆணியைத் தேவையின்றி அடித்துத் தேவையின்றிப் பிடுங்கிக் கொண்டிருக்கும் வேலையை இப்போதும் செய்து கொண்டிருக்கிறோம்.

ஒருவருக்கு ஒரு வங்கிக் கணக்கே போதுமானது. இன்னோன்று வேண்டுமானால் இது போன்று தேவையில்லாமல் ஆணி அடித்து ஆணி பிடுங்குகின்ற வேலையைச் செய்துதான் ஆக வேண்டும்.

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...