தக்காளி பாட்டு
கடவுள் வந்தால் என்ன கேட்பேன்
தக்காளி விலையைக் குறைக்கக்
கேட்பேன்
உறவினர் வீடுகளுக்குச் சென்றால்
என்ன கேட்பேன்
தேநீர் வேண்டாம் தக்காளி
சூப் கேட்பேன்
விருந்திற்குச் சென்றால்
என்ன கேட்பேன்
பிரியாணி வேண்டாம் தக்காளி
சாதம் கேட்பேன்
என்ன சமைக்க என்றால் என்ன
கேட்பேன்
தக்காளி தொக்கு சமைக்கக்
கேட்பேன்
ஞானப்பழம் கிடைத்தால் என்ன
கேட்பேன்
அந்தப் பழம் எனக்கெதற்கு
தக்காளிப் பழம் தரக் கேட்பேன்
லாரியில் வேண்டுமானால் என்ன
கேட்பேன்
மணல் லாரி வேண்டாம் தக்காளி
லாரி கேட்பேன்
காளி வந்து நின்றாலும் என்ன
கேட்பேன்
தக்காளியைக் கையில் தரக்
கேட்பேன்
என்ன வாங்கி வர என்பவரிடம்
என்ன கேட்பேன்
தக்காளி மட்டும் வாங்கி வரக்
கேட்பேன்
பத்து பவுன் நகையா பத்து
கிலோ தக்காளியா என்றால்
பத்து கிலோ தக்காளியே கேட்பேன்
பந்தோபஸ்து பாதுகாப்பு என்றால்
என்ன கேட்பேன்
வீட்டிலிருக்கும் பத்து கிலோ
தக்காளிக்கு
போலீஸ் பாதுகாப்பு கேட்பேன்
தேவைப்பட்டால் ராணுவ பாதுகாப்பும்
கேட்பேன்
சீர் சனத்தி நகை நட்டு சாமான்களா
என்றால்
தக்காளி மட்டும் போதும் என்று
கேட்பேன்
பங்குகள் பிட்காய்ன்கள் வணிகத்தை
நிறுத்தி
தக்காளியைப் பட்டியலிடக்
கேட்பேன்
ஓட்டுக்குத் துட்டு வேண்டுமா
என்றால்
தக்காளி கால் கிலோ தரக் கேட்பேன்
ஐநூறு ரூபாய் நோட்டு கூட
வேண்டாம்
ஐந்து தக்காளி போதும் என்பேன்
நான் ஆட்சிக்கு வந்தால்
குடும்பத்திற்கு ஒரு கிலோ
தக்காளி இலவசமாய்க் கொடுப்பேன்
வெக்காளி அம்மா கடைசியாக
உன்னிடம் ஒன்று கேட்பேன்
தக்காளி பாட்டு இதற்கு சாகாவரம்
தரக் கேட்பேன்
*****
No comments:
Post a Comment