23 Jul 2023

ஆணி அடித்தலும் ஆணி பிடுங்குதலும்

ஆணி அடித்தலும் ஆணி பிடுங்குதலும்

ஒரு வங்கிக் கணக்கைத் துவங்குவது ஆயாசம் தருவதாக இருக்கிறது. விவரங்கள் சரியாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆதாரில் ஒரு விதமாகவும் பான் அட்டையில் வேறு விதமாகவும் பெயர் இருந்தால் அவற்றைச் சரி செய்து கொண்டுதான் கணக்கைத் தொடங்க முடியும். ஆதாரையும் பானையும் சமப்படுத்துவது சாதாரணமான காரியமாக இருக்காது. நாங்கள் எல்லாம் பான் அட்டை எடுத்துக் கொண்ட பிறகு ஆதார் அட்டை எடுத்துக் கொண்ட காலத்தைச் சார்ந்தவர்கள்.

எப்படியும் எழுத்துப் பிழை இந்த அட்டைகளில் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கும். அதைப் பார்த்துச் சரியாகக் கொடுத்திருக்க வேண்டிய அறிவு சில நேரங்களில் மங்கிப் போய் விடுகிறது. லட்சத்தில் ஒருவருக்கேனும் இது போன்ற சிக்கல்கள் இருக்கக் கூடும்.

என் மனைவிக்கு ஒரு பொதுத்துறை வங்கியில் கணக்கு இருந்தது. இன்னொரு வங்கியில் கணக்குத் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் பெயரில் கடன் வாங்கும் போது சலுகைகள் நிறைய இருப்பதாகத் தெரிந்து மனைவி பெயரில் வங்கிக்கடன் வாங்க வேண்டும் என்பதற்காகவே ஐவிஐவிஐ வங்கியில் கணக்குத் தொடங்க முடிவு செய்தோம். அதுதான் பொதுத்துறை வங்கியில் கணக்கு இருக்கிறதே, அங்கு கடன் வாங்கினால் என்ன குறைந்தா போய் விடுவாய் என்றால், அது சாமானியர்களுக்குச் சாமானியப்பட்ட காரியமில்லை. ஆனானப் பட்ட ஆட்களே அல்லோகலப்பட்டுத்தான் வாங்க வேண்டியிருக்கும்.

இப்போது அடுத்தக் கேள்விக்கு வந்து விடுவோம். ஏன் கடன்? கடன் வாங்க வேண்டியதற்கான எந்த நெருக்கடியும் எங்களுக்கு இல்லை. அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சந்திப்போர்கள் என அனைவரும் கடன் வாங்கிக் கொண்டிருந்தனர். கடன் வாங்குவது ஒரு தொற்றுவியாதியைப் போல எல்லாரையும் பீடித்திருந்தது. எங்களையும் பீடிக்கத் தொடங்கி விட்டது.

நீங்கள் ஏன் இன்னும் கடன் வாங்காமல் இருக்கிறீர்கள் என்று ஒவ்வொருவரும் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தனர். கடனை வாங்கி ஒரு மனையை வாங்கிப் போடுங்கள் அல்லது வீட்டைக் கட்டுங்கள் அல்லது நகையையாவது வாங்கிப் போடுங்கள் என்று ஆளாளுக்குச் சொன்ன அறிவுரைகள் எங்களை ஏதோ செய்திருக்க வேண்டும். ஒரு நேரத்தில் நாங்கள் மட்டும் இந்த வியாதி பீடிக்காமல் இருப்பது எங்களுக்கே அசூயையாக இருந்தது.

இந்த அலைபேசி யுகத்தில் முகமறியாத நபர்களிடமிருந்து நாள்தோறும் நான்கைந்து முறைகள் வரும் அழைப்புகளும் கடன் வாங்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தன. ஆட்களைப் பார்த்து வியாபாரம் பண்ணிய காலம் போய் அலைபேசி எண்ணில் அழைத்து கடன் வாங்கச் சொல்லும் அளவுக்கு நிலைமை முற்றிப் போய் விட்டிருந்தது.

நிஜமாகச் சொல்வதென்றால், நாங்கள் மட்டும் கடன் வாங்காமல் இருப்பது எங்களைக் குற்ற உணர்வு கொள்ள செய்தது. நாளை பின்னே ஒரு சொத்து இருப்பது நல்லதுதானே என்ற எண்ணம் தோன்றி விட்டது. கடனை வாங்குவது என முடிவு செய்தோம்.

ஒரு பொதுத்துறை வங்கியில் கடன் வாங்குவதை விட தனியார் துறை வங்கியில் கடன் வாங்குவது எளிமையாக இருக்கும் என்றுதான் நாங்கள் ஐவிஐவிஐ வங்கியைத் தேர்வு செய்தோம் என்பதை நான் முன்பே சொல்லி விட்டேன். மறுபடியும் சொல்வதற்கு வங்கிகளை வகைபடுத்திக் குத்திக் காட்டும் எந்த நோக்கமும் இல்லை. அந்தத் தனியார் வங்கியும் கடன் வழங்குவதில் இணையற்ற வேகம் காட்டிய வங்கியாக இருந்தது. அந்த உண்மையையும் மறுப்பதற்கில்லை. உண்மை என்பது விளம்பப்பட வேண்டியது.

கடன் வாங்குவதற்கு முதலில் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டியிருந்தது. அந்தச் சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் போதுதான் ஆதார் அட்டையிலும் பான் அட்டையிலும் இருந்த பெயர் ஒன்றுக்கொன்று ஒத்து வராமல் முரண்டு பிடித்துப் பிரச்சனையை உண்டு பண்ணின. அதை இத்தனை நாட்கள் நாங்களும் கவனிக்காமல் இருந்திருந்தோம். எந்த அட்டை வந்தாலும், ஆகா அட்டை வந்து விட்டது என்ற சந்தோசத்தில் அட்டையை முழுமையாகப் பார்க்காமல் கூட இருந்திருக்கிறோம்.

பான் அட்டையில் இருக்கும் பெயரைத் திருத்துவதை விட ஆதார் அட்டையில் இருக்கும் பெயரைக் கணினி மையங்களில் சுலபமாகத் திருத்தலாம் என்று வங்கியில் பணிபுரிந்த நபர் சொன்ன அறிவுரையின் பெயரில் கணினி மையத்திற்கும் வங்கிக்கும் இடையில் சில மணி நேரங்கள் அலைந்தோம். பத்து நிமிடத்தில் முடிந்து விடும் என்று சொன்ன வங்கிக் கணக்குத் துவங்கும் வைபவம் எங்களுக்கு ஒரு நாளை முழுங்கிக் கொண்டது.

சேமிப்புக் கணக்கைத் துவங்கிய பிறகு வங்கிக்கடன் வாங்குவதற்கு அவர்கள் கேட்ட ஆவணங்களைச் சேகரிப்பது அடுத்த ஆயாசத்தைத் தொடங்கி வைத்தது. என் மனைவியின் அலுவலகத்தில் மாதாந்திர சம்பள விவரத்தைத் தர முடியாது என்று அடித்துச் சொல்லி விட்டார்கள். அப்படி அவசியம் வேண்டுமானால் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று விதிமுறைகளை நீட்டினார்கள்.

என் மனைவியும் விடா முயற்சியாகத் தலைமை அலுவலகத்துக்கு மாதாந்திர சம்பள விவரத்தைக் கேட்டுக் கடிதம் எழுதிப் போட்டு அலுத்துப் போனாள். சள்ளையாக இருந்தது. இப்படி ஒரு கடனை வாங்கத்தான் வேண்டுமா என்று வெறுத்துப் போய் மனைவி ஒரு நாள் சொன்னாள். கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல் எந்தக் காரியத்தைத்தான் செய்ய முடியும் என்று நான் கேட்டதில் மேலும் சில முறைகள் தலைமை அலுவலகத்திற்குப் பேசுவதும் கடிதம் எழுதுவதுமாக இருந்தாள். தலைமை அலுவலகத்துக்கு நேரில் போய் அலைந்து விட்டும் வந்தாள். பல நாட்கள் முயற்சி செய்து முடியாமல் போனதில் நாங்கள் வங்கிக்கடன் வாங்குவதை மறந்து போயிருந்தோம்.

ஆயாசத்தோடு ஆயாசமாக வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்க முடிந்த எங்களால் வங்கிக்கடனுக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் அலுத்துப் போன மனநிலையை அடைந்தோம். இந்தச் சேமிப்புக் கணக்கை முடித்துக் கொள்வதா, தொடர்வதா என்ற கேள்வி எங்கள் இருவர் மனதிலும் இருந்தது. ஏதோ தொடங்கியாயிற்று, ஏதோ ஒரு காலத்தில் எதற்காகவாவது உதவாமலா போய் விடும் என்று மனைவி சொன்னதன் பெயரில் சேமிப்புக் கணக்கில் பராமரிக்க வேண்டிய ஐயாயிரம் தொகையை மட்டும் தொடர்ந்து அந்தக் கணக்கில் பராமரித்து வந்தோம். பரிவர்த்தனை இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வபோது ஆயிரம் ரூபாயைக் கணக்கில் போடுவதும் சில நாட்கள் கழித்து எடுத்துக் கொள்வதும் என்று தேவையில்லாத வேலையை தேவையோடு செய்வதாக நினைத்துக் கொண்டு செய்து கொண்டிருந்தோம்.

அப்போது என் மனைவிக்கு என்று தனியாக அலைபேசி வாங்காத நேரம். அதனால் அவளது பெயரில் தொடங்கிய சேமிப்புக் கணக்கிற்கான தொடர்பு எண்ணாக எனது எண்ணையே கொடுத்திருந்தேன்

தொழில்நுட்பங்களும் அதன் வளர்ச்சியும் வேகமாகச் சுழலத் தொடங்கியதில் வங்கிக்கே செல்லாமல் வங்கிப் பரிவர்த்தனைகளை அலைபேசியில் செய்ய முடிகின்ற காலமும் வந்தது. ஒவ்வொரு வங்கியும் ஒரு செயலியின் மூலமாக வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை வழங்கிக் கொண்டிருந்தன. வங்கி சாராமல் கூகுள் பே எனும் செயலி மூலமாக எந்த வங்கியின் கணக்கையும் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பு இருந்தது.

இதுவரை வங்கிக் கடன் வாங்க நினைத்து அதற்கும் வாய்ப்பில்லாமல் வேறு எதற்கும் பயன்படாமல் இருந்த மனைவியின் வங்கிக் கணக்கை கூகுள் பே மூலமாகப் பயன்படுத்த முடிவு செய்தோம். மனைவியின் வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டு மளிகை சாமான்கள் வாங்குவதிலிருந்து கீரைக்கட்டு வாங்குவது வரை கூகுள் பேயில் பணத்தைச் செலுத்த ஆரம்பித்தோம். சில்லரைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இந்த முறை ரொம்ப வசதியாக இருந்தது. பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது ரொம்ப வசதியாக இருந்தது. பணம் எடுக்கும் எந்திரத்திலும் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. அந்த இயந்திரத்தில் மாதத் தொடக்கத்தில் பணம் எடுப்பது ஓர் அவஸ்தை. கூட்டத்தில் நின்று பணம் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இப்படி பல சிரமங்கள் மற்றும் காத்திருப்புகள் என எல்லாவற்றுக்கும் கூகுள் பே செய்த வசதியை மறக்க முடியாது. நகலெடுக்கும் கடையில் ஒரு ரூபாய் செலுத்துவது என்றாலும் இப்போது கூகுள் பேதான் என்றானது.

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளில் நொந்து போயிருந்த நான் ஆயாசத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எனக்கும் ஒரு வங்கிக் கணக்கை ஐவிஐவிஐ வங்கியில் துவங்கியிருந்தேன். இந்த வங்கிக் கணக்குக்கும் என்னுடைய அலைபேசி எண்ணைத்தான் கொடுத்திருந்தேன்.

பிரச்சனை இப்போதுதான் ஆரம்பமாகியிருந்தது. என்னுடைய அலைபேசி எண்ணுக்கு என்னால் கூகுள் பேயைச் செயல்படுத்த முடியவில்லை. என்னுடைய மனைவியின் வங்கிக் கணக்கு எண்ணுக்குத்தான் செயல்படுத்த முடிந்தது.

ஒருவரே இரண்டு மூன்று அலைபேசிகளை வைத்துக் கொள்ளும் புரட்சி யுகம் வந்த பின்னர் என் மனைவிக்கு ஒரு அலைபேசியை வாங்கினோம். இப்போது அவளுக்கும் ஓர் அலைபேசி எண் இருந்ததால் அந்த எண்ணை அவளுடைய வங்கிக் கணக்குக்கான எண்ணாக மாற்ற வங்கிக் கிளைக்குப் போனோம். பணம் எடுக்கும் இயந்திரச் சேவையின் வழியாக அலைபேசி எண்ணை மாற்றிக் கொள்ளுமாறு சொன்னார்கள். இது போன்ற சில்லரை காரியங்களை இயந்திரங்கள்தான் செய்ய வேண்டும் என்றார்கள் அவர்கள். இயந்திரங்களாகி விட்ட மனிதர்கள் சொன்ன அந்த யோசனையின் பெயரில் இயந்திரத்திடமே எங்கள் தேவையை நிறைவேற்றிக் கொண்டோம். ஆனால் வங்கிப் பரிவர்த்தனை செய்வதற்கு ஏற்ப அலைபேசி எண் மாறாமல் போக சில நாட்களில் மீண்டும் வங்கிக் கிளைக்கே போய் முறையிட்டோம். அவர்களும் முயற்சித்துப் பார்த்தார்கள். முடியாமல் போக வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்பு கொண்டு சொல்லச் சொன்னார்கள். வாடிக்கையாளர் சேவைக்கும் படாதபாடு பட்டு தொடர்பு கொண்டு எங்கள் சிக்கலைச் சொல்லிப் பார்த்தோம். எதற்கும் எந்தப் பலனும் இல்லை.

என் அலைபேசி வழியாக என் மனைவியின் கணக்கைத்தான் பரிவர்த்தனை செய்ய முடிகிறது. என்னுடைய கணக்கு என்னுடைய அலைபேசி எண்ணுக்கு மாறவே இல்லை. மீண்டும் வங்கிக் கிளைக்கே போனோம். வங்கிக் கிளையில் பணியாற்றும் நபர்களே வாடிக்கையாளர் சேவைக்கு அழைத்துக் கடுமையாகப் பேசுங்கள் என்றார்கள். இதென்ன புதுமையான யோசனையாக இருக்கிறதே என்று அதைச் செயல்படுத்த எங்களுக்கு தயக்கமாக இருந்தது.

என்னுடைய அலைபேசி எண்ணுக்கு என்னுடைய வங்கிக் கணக்கையும், என் மனைவியினுடைய அலைபேசி எண்ணுக்கு என் மனைவியின் வங்கிக் கணக்கையும் மாற்ற வேண்டும். அவ்வளவுதானே விசயம். இதற்கு எதற்காகக் கடுமையாகப் பேச வேண்டும்? அப்படிப் பேசுவதானால் வங்கிக் கிளையிலேயே கடுமையாகப் பேசியிருக்கலாமே. மீண்டும் சில முறை வாடிக்கையாளர் சேவைக்குக் கடுமையாக முயன்று மென்மையாகப் பேசிப் பார்த்தோம். காரியம் ஆவதாகத் தெரியவில்லை.

மனிதருக்குத் தலையெழுத்துப் போல இதுதான் இந்த வங்கிக் கணக்குகளுக்கான தலையெழுத்து என்றால் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்று இப்போது அப்படியே விட்டு விட்டோம். இப்படி எதற்காகத் துவங்கினோம், எதற்காகப் பயன்படுத்தினோம் என்று தெரியாமல் இரண்டு வங்கிக் கணக்குகள் எங்களிடம் இருக்கின்றன. அலைபேசியில் பேச ஒரு தொடர்வு வில்லையே (சிம்) போதும் எனும் போது இரட்டை தொடர்பு வில்லை (சிம்) போட்டுக் கொள்வதைப் போலத்தான் இந்த எங்களுடைய செயலும் அமைந்து விட்டது. இப்போதும் என் மனைவியின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கைத்தான் என்னுடைய அலைபேசியில் செய்து கொண்டிருக்கிறோம். என்னுடைய வங்கிக் கணக்கு ஏதோ பெயருக்கு இருக்கிறது. அதில் அவ்வபோது ஆயிரம் ரூபாயைப் போடுவதும் எடுப்பதுமாக ஓர் ஆணியைத் தேவையின்றி அடித்துத் தேவையின்றிப் பிடுங்கிக் கொண்டிருக்கும் வேலையை இப்போதும் செய்து கொண்டிருக்கிறோம்.

ஒருவருக்கு ஒரு வங்கிக் கணக்கே போதுமானது. இன்னோன்று வேண்டுமானால் இது போன்று தேவையில்லாமல் ஆணி அடித்து ஆணி பிடுங்குகின்ற வேலையைச் செய்துதான் ஆக வேண்டும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...