படிப்பதற்கு எது அவசியம்?
படிப்பதற்கு இரண்டு அம்சங்கள்
முக்கியம் என்று நினைக்கிறேன்.
ஒன்று பயிற்சி.
மற்றொன்று ஒழுக்கம்.
இந்த இரண்டும் இருந்தால்
நீங்கள் எதையும் படிக்க முடியும். எப்பேர்ப்பட்ட கடினமான பாடத்தையும் படித்து முடிக்க
முடியும். மிகப் பெரிய தடிமனான புத்தகத்தையும் வாசித்து முடித்து விட முடியும்.
மருத்துவம் படிப்பதோ, பொறியியல்
படிப்பதோ முடியாது என்று நீங்கள் நினைத்தாலும் பயிற்சியும் ஒழுக்கமும் இருந்தால் நீங்கள்
அதையும் படித்து முடிக்க முடியும்.
முதலில் பயிற்சி என்றால்
என்னவென்று பார்த்து விடுவோம்.
எதில் நீங்கள் நிபுணத்துவம்
பெற நினைக்கிறீர்களோ, அதில் நிபுணத்துவம் பெறுவதற்கு எத்தனை முறை செய்து பழக வேண்டுமோ
அத்தனை எண்ணிக்கையிலான செய்முறைகள்தான் பயிற்சி என்பது.
ஒரு பத்தியை ஐந்து முறை படித்தால்தான்
உங்களால் மனதில் கொள்ள முடியும் என்றால் நீங்கள் ஐந்து முறை படிப்பதுதான் உங்களுக்கான
பயிற்சி. அதுவே அதே பத்தியை ஒருவருக்கு பத்து முறை படித்தால்தான் மனதில் கொள்ள முடியும்
என்றால் பத்து முறை படிப்பதுதான் அவருக்கான பயிற்சி. வேறொருவருக்கு நூறு முறை படித்தால்தான்
அந்தப் பத்தியை மனதில் கொள்ள முடியும் என்றால் நூறு முறை படிப்பதுதான் அவருக்கான பயிற்சி.
பயிற்சி ஒவ்வொருவருக்கும்
வேறுபடும். முடிவில் அடையும் நிபுணத்துவம் என்பது ஒன்றாகத்தான் இருக்கும். பயிற்சியில்
செய்ய வேண்டிய எண்ணிக்கை முறைகளைக் கணக்கில் கொள்ளக் கூடாது. முடிவில் அடைய வேண்டிய
நிபுணத்துவத்திற்கு முன் எண்ணிக்கை ஒரு விசயமே அல்ல.
நீங்கள் நிபுணத்துவத்தை அடைய
எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். அதற்குக் கணக்கும் கிடையாது, எல்லையும்
கிடையாது. நிபுணத்துவத்தை அடையும் வரை சளைக்காமல் திரும்ப திரும்ப செய்வதற்குப் பெயர்தான்
பயிற்சி என்பது.
அடுத்ததாக ஒழுக்கம் என்றால்
என்ன என்பதையும் பார்த்து விடுவோம். நீங்கள் நிபுணத்துவம் அடைவதற்காக அதிகாலை ஐந்து
மணிக்கெல்லாம் பயிற்சியைத் துவக்கி விட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் அதிகாலை
ஐந்து மணிக்கெல்லாம் தினந்தோறும் பயிற்சியைத் துவக்கி விடுவதுதான் ஒழுக்கம்.
ஏதோ ஒரு நாள் சரியாக ஐந்து
மணிக்குப் பயிற்சியைத் துவங்கி விட்டு அடுத்த நாளே ஆறு மணிக்குப் பயிற்சியைத் துவங்கினால்
அது ஒழுக்கமாகாது. ஒரு வாரம் முழுவதும் சரியாக ஐந்து மணிக்கெல்லாம் பயிற்சியைத் துவங்கி
விட்டு அடுத்த வாரத்திலிருந்து விருப்பப்பட்ட நேரத்திற்கெல்லாம் பயிற்சியைத் துவங்குவதும்
ஒழுக்கம் ஆகாது. ஒரு மாதம் வரை சரியாக இருந்து விட்டு அடுத்து வரும் மாதங்களில் பிசகினாலும்
ஒழுக்கம் தவறுவதாகவே அர்த்தமாகும்.
ஒழுக்கம்தான் பயிற்சியின்
நோக்கத்தை சரியாக அடைவதற்கு வழிகாட்டும் நிர்வாகி எனலாம். ஒழுக்கமில்லாத பயிற்சி விழலுக்கு
இறைந்த நீரைப் போலாகி விடும். நிபுணத்துவம் எனும் இலக்கை அடையும் வரை பயிற்சிக்காக
நிர்ணயிக்கப்பட்டிருக்கும் காலத்தில் சரியாகத் துவங்கிச் சரியாக முடிப்பதுதான் சரியான
ஒழுக்க நியதியாகும்.
ஓர் இலக்கை அடைவதோ அல்லது நிபுணத்தைப் பெறுவதோ ஒழுக்கமும் பயிற்சியும்
இணைந்த கரங்களாய் இருக்கும் போதே சாத்தியமாகிறது. இரண்டு கால்களும் ஓர் இலக்கை நோக்கி
நடப்பதைப் போலத்தான் ஒழுக்கமும் பயிற்சியும் ஒத்திசைந்து செல்ல வேண்டும். இரண்டு கண்களும்
ஒற்றைப் பார்வை பார்ப்பது போலத்தான் பயிற்சியும் ஒழுக்கமும் இணைந்து நிற்பது.
இப்போது படிப்பு எனும் இலக்கை
அடைவதற்கான பயிற்சி என்றால் என்ன என்பதும் ஒழுக்கம் என்றால் என்ன என்பதும் உங்களுக்குப்
பிடிபட்டிருக்கும். இப்படிப்பட்ட பயிற்சியும் ஒழுக்கமும் இருந்தால் உங்களால் எதையும்
படிக்க முடியும். படிப்பிற்கு மட்டுமல்ல நீங்கள் சாதிக்க விரும்பும் அத்தனைக்கும் இந்தப்
பயிற்சியும் ஒழுக்கமும் பெரிதும் துணை நிற்கும்.
*****
No comments:
Post a Comment