எதிர்மறை சிந்தனைகள் வந்தால் என்ன செய்வது?
எதிர்மறை சிந்தனைகள் வந்தால்
என்ன செய்வது? என்னிடம் பலர் கேட்கும் கேள்வி இது. அதற்கு என்ன செய்ய முடியும்? வந்தால்
வந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான். அதைத் தடுக்கவெல்லாம் முடியாது.
தடுத்தும் ஆகப் போவதில்லை. தடுக்கிறேன் என்ற பெயரில் மடையைத் திறந்து விட்டுக் கூடாது.
ஒரு மனிதன் எப்படியும் எதிர்மறையாகத்தான்
சிந்திக்க வேண்டியிருக்கும். அது அறிந்து நடப்பதல்ல. அறியாமல் நடப்பது. மனதின் அமைப்பு
அப்படி.
நான் எதிர்மறையாகவே சிந்திப்பதில்லை
என்பவர்கள் கூட எதிர்மறையாக் கனவு கண்டிருப்பார்கள். எதிர்மறையாகக் கனவு காண்பது என்பது
தன்னுடைய கட்டுபாடு இல்லாமல் மனமே எதிர்மறையாகச் சிந்தித்துப் பார்ப்பதன் விளைவுதான்.
அதுதான் மனதின் இயல்பு.
ஏன் எதிர்மறையாகச் சிந்திக்க
வேண்டும் என்று நீங்கள் கேள்வி கேட்டுப் பார்க்கலாம். ஆசை முதல் காரணம்.
இப்படி நடந்தால் என்ன … அப்படி
நடந்திருந்தால் என்ன … என்று மனம் யோசிக்கும். இப்படி நடந்தது அப்படி நடந்திருந்தால்
என்று நீங்கள் யோசிக்க வேண்டுமானால் இப்படி நடந்ததற்கு எதிர்மறையாக யோசித்துப் பார்த்தால்தான்
முடியும்.
அப்படியும் இப்படியும் என்று
அலைபாயும் மனம் இப்படி என்று நேர்மறையாகவும் அப்படி என்று எதிர்மறையாகவும் இரண்டு விதத்திலும்
சிந்தித்துப் பார்த்து விடும்.
முதல் காரணத்தைப் பார்த்து
விட்டோமா? இரண்டாவது காரணத்தையும் பார்த்து விடுவோம்.
எதிர்பார்ப்புகள் இரண்டாவது
காரணம். எதிர்பார்ப்பது நடக்க வேண்டும் என்று நினைப்பு வந்ததுமே நடக்காமல் போனால் என்னவாகும்
என்ற நினைப்பும் வந்து விடும். பிறகென்ன நீங்கள் நடக்காமல் போனால் என்னவென்று எதிர்மறையாகவும்
யோசித்துப் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள். இதுவும் இயல்பாகவே உங்களை அறியாமல் நிகழ்ந்து
விடும்.
அடுத்து மூன்றாவது காரணத்தையும்
பார்த்து விடுவோம். ஏற்றுக் கொள்ளுதலும் ஏற்றுக் கொள்ள முடியாமையும்தான் மூன்றாவது
காரணம். உங்களுக்குப் பிடித்தமானவற்றை உங்களையறியாமல் ஏற்றுக் கொள்வீர்கள். பிடிக்காதவற்றை
உங்களை அறியாமல் வெறுத்துத் தள்ளுவீர்கள். அதிலிருந்து விலகிப் போக விரும்புவீர்கள்.
வாழ்க்கையில் அமையும் அனைத்தும் நீங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாகவா இருக்கும்? உங்களால்
ஏற்றுக்கொள்ள முடியாதவற்றையும் ஏற்றுக் கொண்டு வாழ வேண்டியிருக்கும். அது போன்ற நிலைகளில்
சொல்லவே வேண்டியதில்லை.
நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றைப்
பற்றி வெறுப்பும் சலிப்பும் எரிச்சலாக யோசித்துக் கொண்டிருப்பீர்கள். சந்தேகமே இல்லாமல்
இவ்வகை எண்ணங்கள் சிந்தனைகள் அனைத்தும் எதிர்மறைத் தன்மை கொண்டவையாக இருக்கும். இந்த
விசயத்தில் உங்கள் விருப்பு வெறுப்புகள் உங்களுக்கான நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களையும்
சிந்தனைகளையும் உருவாக்கி விடும்.
நான்காவதாகவும் ஒரு காரணம்
இருக்கிறது. திருப்தி குறித்த நோக்குதான் அது. நீங்கள் திருப்தி அடையும் அளவைப் பொருத்து
உங்களது நேர்மறை எண்ணங்களோ அல்லது எதிர்மறை எண்ணங்களோ தூக்கலாக இருக்கும். எளிதில்
திருப்தியை உணர முடியாத ஒருவர் எதிர்மறை எண்ணங்கள் மிகுந்தவராகத்தான் இருப்பது தவிர்க்க
முடியாதது. திருப்தியை உணர முடியாத போது திருப்தி காண முடியாமைக்கான காரணங்களை யோசித்தால்
ஒவ்வொன்றும் எதிர்மறையாகத் தோன்றி கொண்டே இருக்கும். இப்போது எதிர்மறையான சிந்தனைகளுக்கான
வழியை நீங்களே ஏற்படுத்திக் கொண்டிருப்பீர்கள்.
ஐந்தாவதாகவும் ஒரு காரணம்
இருக்கிறது. இது நான்காவதன் துணைக்காரணம்தான் என்றாலும் ஐந்தாவதாக வைத்துச் சொல்வதற்குக்
காரணம் இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அந்த ஐந்தாவது
காரணம் ஒப்பீடு. திருப்தியின்மையின் உப காரணம் ஒப்பீடுதான். ஒப்பிடுவதன் மூலமாக ஒருவர்
தனக்குள்ளிருக்கும் திருப்தியைத் தன்னையறியாமல் கொலை செய்து விடுகிறார். ஒப்பிட்டு
ஒப்பிட்டு தன்னுடைய திருப்தியை அடைய முடியுமா என்று அவர் பார்க்கிறார். அதாவது செத்துப்
போய் விட்ட திருப்திக்கு உயிர் கொடுக்க முடியுமா என்று யோசிக்கிறார். இதை அவர் திருப்தியைக்
கொல்வதற்கு முன் யோசிக்க வேண்டும். ஆனால் திருப்தியைக் கொன்று விட்டார். திருப்தியைக்
கொன்ற பின் மிச்சம் இருக்கப் போவது திருப்தியற்ற எண்ணங்களும் உணர்வுகளும்தான். அவை
எதிர்மறை உணர்வுகளும் எண்ணங்களும்தான்.
இது போன்ற எதிர்மறை எண்ணங்களைத்
தவிர்த்து விட வழியில்லையா என்றால் அவை இயற்கையானவை என ஏற்றுக்கொண்டு அவை பற்றி அதிக
ஆராய்ச்சி செய்து கொண்டிராமல் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதுதான் எதிர்மறைகளைத் தவிர்ப்பதற்கான
சுலபமான வழி.
மற்றபடி எதிர்மறை எண்ணங்கள்
இல்லாமல் எல்லாம் ஒரு மனிதரால் இருக்க முடியாது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஓர் அளவு இருப்பது
போல, எதிர்மறையாக நினைப்பதற்கும் ஓர் அளவு இருக்கிறது. அளவு கடந்து ஒருவர் எதிர்மறையாகச்
சிந்திக்கிறார் என்றால் அவர் ஏதேனும் செய்துதான் ஆக வேண்டும்.
மூக்கு என்றால் சளி இருக்கும்
என்பது போல மனம் என்று இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும்
சளிக்கென்று ஓர் அளவு இருக்கிறது. அளவைத் தாண்டினால் நோய். அதற்கு வைத்தியம் செய்துதான்
ஆக வேண்டும். எதிர்மறை எண்ணங்களுக்கும் இது அப்படியே பொருந்தும்.
ஓர் அளவைத் தாண்டி உங்களுக்குள்
எதிர்மறை எண்ணங்களாக எழுந்து கொண்டிருந்தால் நீங்கள் மனச்சோர்வு உடையவராகவும் மன அழுத்தம்
கொண்டவராகவும் மாறி விடுவீர்கள். உங்களுடைய கவனச்சிதறல் ரொம்ப அதிகமாகவே இருக்கும்.
மறதி குறித்துச் சொல்லவே வேண்டியதில்லை. சாதாரண விசயங்களைக் கூட மறந்து விடுவீர்கள்.
மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து
விடுபட நீங்கள் குறுகிய அல்லது தற்காலிக தீர்வுகளைத் தேடத் தொடங்கி விடுவீர்கள்.
எதற்கெடுத்தாலும் நீங்கள்
எரிந்து விழலாம். சிடுமூஞ்சியாக மாறலாம். தவிர்க்க முடியாது என்ற நிலை தோன்றும் போது
நீங்கள் புகை பிடிப்பதையோ, மது அருந்துவதையோ செய்யலாம். இன்னும் இந்த எல்லை தாண்டிப்
போய் போதை வஸ்துகளைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இவை எல்லாவற்றிற்கும் காரணம் கட்டுக்கடங்காமல்
போகும் எதிர்மறை எண்ணங்களும் அதனால் உண்டாகும் மனச்சோர்வும் மனச்சோர்வால் உண்டாகும்
மனஅழுத்தமும்தான்.
நீங்கள் மனதை முதலில் புரிந்து
கொள்ள வேண்டும். அது அலைபாயும் தன்மையுடையது. நீங்கள் ஒரு நிகழ்வின் அல்லது ஒரு பொருளின்
இரண்டு பக்கங்களையும் உணர அந்த அலைபாயும் தன்மை எப்போதும் உதவும். நீங்கள் ஒரு பக்கத்தை
மட்டும் பார்த்தால் போதும் என்று அடம் பிடிக்காதீர்கள்.
உங்களின் எல்லைகளை நீங்கள்
எப்போதும் புரிந்து வைத்திருக்க வேண்டும். ஓர் அளவுக்கு மேல் செய்வதற்கோ, சாதிப்பதற்கோ
இயலாது. உடலின் தாங்கும் திறனை, செயலாற்றும் அதிகபட்ச எல்லையை நாம் எப்போதும் மறந்து
விடல் ஆகாது.
எல்லா எண்ணங்களையும் காரியங்களையும்
நினைத்தபடி நிறைவேற்றி விட முடியாது. சூழ்நிலைத் தடைகள் நிறையவே இருக்கும் என்பதைப்
புரிந்து கொள்ள வேண்டும். நிறைவேறக்கூடிய காரியங்களும் இருக்கின்றன, நிறைவேற்ற முடியாத
காரியங்களும் இருக்கின்றன என்ற எதார்த்தத்தை எப்போதும் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நிறைவேற்ற முடியாத காரியங்களை
நிறைவேற்ற முயற்சிக்கும் போது அவற்றை நிறைவேற்றுவது சாதாரணமல்ல என்பதைப் புரிந்து கொள்ள
வேண்டும். படிப்படியாகச் சிறிது சிறிதாக மிக நீண்ட காலத்திற்குப் பொறுமையை இழக்காமல்
அது போன்ற காரியங்களைச் சலிப்பின்றித் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும் என்பதை நாம்
அடிக்கடி நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.
உங்களைப் பற்றி நல்ல விதமாகவே
நினையுங்கள். உங்களைப் பற்றி நீங்களே நல்லவிதமாக நினைக்காவிட்டால் எல்லாரும் அப்படித்தான்
உங்களைப் பற்றி நினைப்பதாக உங்களுக்குத் தோன்றும். யாரும் உங்களை நல்லவிதமாக நினைக்கவில்லை
என்று நினைப்பதே மோசமான எதிர்மறை எண்ணமாகும்.
தொடர்ந்து எதிர்மறை உணர்வுகளையும்
எண்ணங்களையும் மனதில் தேக்கிக் கொண்டே போவது ஆபத்தான நிலைமையில் கொண்டு போய் விடும்.
உங்கள் நம்பிக்கைக்கு உரிய உங்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய நபர்களிடம் நண்பர்களிடம்
உறவினர்களிடம் உங்கள் மனநிலையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது நேர்மறையாக இருந்தாலும்
சரிதான், எதிர்மறையாக இருந்தாலும் சரிதான், பகிர்வதற்கு உங்களுக்குக் கட்டாயம் ஒருவர்
தேவைதான். அது உங்களது செல்லப்பிராணியாக இருந்தாலும் கூட பரவாயில்லைதான்.
தொடர்ந்து எதிர்மறையாகச்
சிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றினால் ஓரளவுக்கு மேல் சிந்திப்பதை விட்டு விட்டுச்
சுற்றுப்பயணம் செய்ய, இயற்கையை ரசிக்க, நண்பர்களிடம் பேச என்று வெளியில் கிளம்பி விடுங்கள்.
நன்றாக உண்ணுங்கள். நன்றாக
ஆடை உடுத்திக் கொள்ளுங்கள். நன்றாகத் தூங்குங்கள். நன்றாகப் பழகுங்கள். இதில் எந்தத்
தவறும் இல்லை. நீங்கள் நன்றாக இருப்பதை வெளிப்படுத்தவும் செய்யுங்கள், நீங்கள் நன்றாக
இல்லாவிட்டாலும் கூட. எப்போதும் உங்களை விட இறங்குமுக நிலையில் இருப்போர் கூட தாங்கள்
நன்றாக இருப்பதாக உணர்கிறார்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்.
உங்களைப் பற்றிய ஒரு பெருமிதம்
எப்போதும் இருக்கட்டும். பெருமிதமாக இருப்பதற்கேற்ப நீங்கள் எதையும் செய்யவில்லை என்று
நினைக்க வேண்டாம். நீங்கள் மனிதராகப் பிறந்திருப்பது ஒன்று போதும் நீங்கள் பெருமிதமாக
இருக்கவும் பெருமிதமாக உணர்வற்கும். பிறகென்ன உங்களுக்கு எப்படி எதிர்மறை எண்ணங்களோ
உணர்வுகளோ ஏற்படும் சொல்லுங்கள்?
*****
No comments:
Post a Comment